மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
விடுதலை பயணம் 12:1-8,11-14| 1 கொருந்தியர் 11:23-26| யோவான் 13: 1-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம் கொள்கை என்ன?

இன்று பெரிய வியாழக்கிழமை. இன்றுதான் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார். இன்றுதான் இயேசு நற்கருணையைக் கொடுத்தார். இன்றுதான் இயேசு புதிய கட்டளையைத் தந்தார்.

குருத்துவம் என்பது பற்றற்றான் பற்றினைப் பற்றுவதற்காக, இயேசுவைப் போல இறுதிவரை உலகை அன்பு செய்வதில் அடங்கியுள்ளது. நற்கருணை என்பது இயேசு உலகின் மீது பொழிந்த அன்பின் இமயமாக விளங்குகின்றது. புதிய கட்டளை என்பது எதையும் எதிர்பாராது மற்றவர்மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிவதில் அடங்கியுள்ளது.

இயேசு பெரிய வியாழக்கிழமையன்று நமக்களித்த மூன்று பரிசுகளின் மையமாக விளங்குவது அன்பு. இந்த நாள் நமது வாழ்க்கையில் ஓர் அர்த்தமுள்ள நாளாக அமைய வேண்டுமானால் அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல் : அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல் என்று பாடி. இனி நமது வாழ்வின் அச்சாணி அன்பே (மத் 22:34-39) என்று வாழ முன்வர வேண்டும். ஒரு சாலையின் வழியாக ஒரு குருவும். சீடனும் சென்று கொண்டிருந்தார்கள். திடீரென முரடன் ஒருவன் அவர்கள் முன்னால் தோன்றி அந்தக் குருவின்மீது வசைமாரி பொழிந்தான். துறவற மடத்தை அடைந்ததும் சீடன் குருவிடம், குருவே ஒரு சந்தேகம் என்றான். குரு. என்ன சந்தேகம்? என்றார். நாம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது. முரடன் ஒருவன் உங்களைச் சபித்தான். நீங்கள் எதிர்த்து எதுவுமே சொல்லவில்லையே! ஏன்? என்று கேட்டான். அதற்குக் குரு. பேசிவிட்டுத்தானே சென்றான். என்னை அடிக்கவில்லையே! என்றார். அடித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அடித்துவிட்டுத்தானே செல்கின்றான். என்னைக் கொலை செய்யவில்லையே என நினைத்திருப்பேன். கொலை செய்ய நினைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என் உயிரைத்தானே எடுத்துச் செல்கின்றான். என் கொள்கையை எடுத்துச் செல்லவில்லையே என்று எண்ணி அமைதியாக உயிர் துறந்திருப்பேன் என்றார் குரு. அதற்குச் சீடன், உங்கள் கொள்கைதான் என்ன? என்று கேட்க, அதற்குக் குரு. பிறர்மீது நிபந்தனையில்லா அன்பைப் பொழிவதே என் கொள்கை என்றார்.

நிபந்தனையில்லா அன்பு என்றால் எதையுமே எதிர்பாராமல் நம்மிடம் உள்ள பொருளையும், அருளையும் தேவைப்பட்டால் உயிரையும் பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வருதல். இப்படி வாழ்வது அவ்வளவு எளிய செயலல்ல.

மற்றவர்களைப் பார்த்து, அதிகாலைப் பொழுதில் எழுந்து பாடும் பறவைகள் நாங்கள்! நாங்கள் எதையும் உங்களிடமிருந்து எதிர்பார்த்துப் பாடவில்லை! எங்கள் கடமையைத்தான் செய்கின்றோம். எதிர்பார்த்து எங்கள் வீட்டிற்கு வரும் எறும்புகளுக்கு நாங்கள் வரைந்து வைத்திருப்பது கலர்க்கோலம் அல்ல மாக்கோலம்! என்று சொல்லி வாழ்வது அவ்வளவு எளிதல்ல!

இதை உணர்ந்துதான் அன்பு வாழ்வில் ஏற்படும் தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்ற, இயேசு உலகம் முடிவுவரை என்றும் நம்மோடு வாழச் சித்தமானார்.

சுயநலம் என்பது ஒரு வியாதி! அதை அழிக்கும் மருந்துதான் நற்கருணை! பிறர்நலம் என்பது ஒரு விளக்கு! அதை எரிய விடும் தீக்குச்சிதான் நற்கருணை!

பழைய ஏற்பாட்டில் ஆட்டின் இரத்தம் பூசப்பட்டிருந்த வீடுகள் கடவுளின் ஆசி பெற்றன (முதல் வாசகம்). புதிய ஏற்பாட்டிலே மனித நேயம் பூசப்பட்டிருக்கும் இதயங்கள் இயேசுவின் ஆசி பெறும்.

பெரிய வியாழனன்று ஆண்டவராம் இயேசு தந்த பரிசுகளின் நோக்கத்தை அறிந்து அவர் ஆசையை நிறைவேற்றி அவர் ஆசிபெற்று வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள்:

அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணைக் காதலித்தான். திடீரென்று அவளை விட்டுவிட்டு அவள் தங்கையைக் காதலிக்க ஆரம்பித்தான், அவள் அவனுடைய திடீர் மாற்றத்திற்குக் காரணம் கேட்டபோது, அவன், "உன்னைப் பார்த்தபோது என்னை மறந்தேன். உன் தங்கையைப் பார்த்தபோது உன்னை மறந்தேன்" என்று கூறி கைகழுவினான்.

மனிதக் காதல் மாறக்கூடியது. ஆனால் கடவுளுடைய அன்பு என்றும் நிலையானது. இன்றைய நற்செய்தியில் யோவான் கூறுகிறார்: *உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்" (யோவா 13:1). கிறிஸ்து தம் சீடர்களை மட்டுமன்று நம் அனைவரையுமே இறுதிவரை அன்பு செய்கிறார். கிறிஸ்து எவ்வாறு நம்மை இறுதிவரை அன்பு செய்கிறார் என்பதை இன்றைய திருவழிபாடு வெளிப்படுத்துகிறது.

பெரிய வியாழன் திருவழிபாடு மகிழ்ச்சியில் தோய்ந்துள்ளது. அதற்கான காரணம்: 1.இன்றுதான் கிறிஸ்து அன்பின் அருளடையாளமாகிய நற்கருணையைத் திருச்சபைக்கு அளித்தார். 2.இன்றுதான் கிறிஸ்து தமது கல்வாசிப் பலியைக் காலமெல்லாம் நீடிக்கும் வண்ணம் பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தினார். 3.இன்றுதான் கிறிஸ்து தமது சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, அன்புக் கட்டளையைக் கொடுத்தார். இம்மூன்று நிகழ்வுகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன. எனினும், இன்று நற்கருணை மறை பொருளைப்பற்றி நமது கவனத்தைச் செலுத்துவோம்.

நற்கருணை மறைபொருளைப்பற்றி புனித அக்வினாஸ் தோமையார் பின்வருமாறு பாடியுள்ளார். ஓ புனித திருவிருந்தே! இவ்விருந்தில் கிறிஸ்து உண்ணப்படுகிறார்; அவருடைய பாடுகள் நினைவுகூரப்படுகிறது; வரவிருக்கும் மாட்சிமையின் உறுதிமொழி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நற்கருணை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தையும் உள்ளடக்கியுள்ளது.

நற்கருணை இறந்தகாலத்தில் நிகழ்ந்தேறிய கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூருகிறது. திருத்தூதர் பவுல் கூறுகிறார்; "நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்" (1 கொரி 11:26), எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற பாஸ்கா இரவை இஸ்ரயேல் மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டிய நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கூறுகிறது இன்றைய முதல் வாசகம். (இச 12:1-8, 11-14). அவ்வாறே கிறிஸ்து பெரிய வியாழனன்று தமது இறுதிப் பாஸ்காவைக் கொண்டாடி, நற்கருணையை ஏற்படுத்தி "எனது நினைவாகச் செய்யுங்கள்" (லூக் 22:19) என்று சீடர்களுக்குக் கூறினார். நற்கருணை கல்வாரிப் பலியை நினைவுகூருகிறது. கிறிஸ்து தமது ஒரே பலியால் முற்காலப் பலிகளை நிறைவு செய்தார். அவரே பாஸ்கா செம்மறி (1 கொரி 5:7).

நற்கருணை மறைபொருள் நிகழ்காலப் பரிமாணத்தைக் கொண்டுள்ளது. அதை நாம் உட்கொள்ளும்போது நமது அகம் அருளால் நிரப்பப்படுகிறது. நற்கருணை மூலம் நாம் கிறிஸ்துவால் வாழுகிறோம். அவர் நம்மிலும் நாம் அவரிலும் இணைகிறோம் (யோவா 6:54).

நற்கருணை மறைபொருள் நம்மை எதிர்கால விண்ணக மகிமைக்கு இட்டுச் செல்கிறது. "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்" (யோவா 6:54). எனவே நற்கருணை விண்ணக வாழ்வின் பிணையாக, அச்சாரமாக உள்ளது.

இவ்வாறு, நற்ருணை 'நினைவுகூர்தல்' (memorial), 'பிரசன்னப் படுத்தல்' (actualisation), 'முன்னறிவித்தல்' (Prophecy) ஆகிய முப்பரிமாணங்களையும் கொண்டுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நற்கருணையானது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சியுமாக உள்ளது என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம் (திருச்சபை, எண் 11).

நற்கருணைதான் திருச்சபையைக் கட்டி எழுப்புகிறது; திருச்சபைதான் நற்கருணையைக் கொண்டாடுகிறது. நற்கருணையால் திருச்சபை வாழ்கிறது: வளர்கிறது. தொடக்கக்காலத் திருச்சபையில் ‘அப்பம் பிடுதல்’ ஓர் இன்றியமையாதக் கூறாகத் திகழ்ந்தது (திப 2:42). கிறிஸ்து அப்பத்தைப் பிட்டபோதுதான் எம்மாவு சென்ற இரண்டு சீடர்களின் கண்கள் திறக்கப்பட்டன (லூக் 24:31). கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை, அவரை அப்பம் பிடுவதில் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

நற்கருணை அன்பின் அருள் அடையாளம்; ஒற்றுமையின் அடையாளம், நற்கருணையின் பண்பும் பயனும் அன்பும் ஒற்றுமையுமாகும். போட்டி பொறாமை, சண்டைச் சச்சரவுடன் நாம் நற்கருணையை உட்கொண்டால், அது நமக்கு நலம் தரும் மருந்தாக அமையாமல், தண்டனைக்குரிய குற்றமாக மாறிவிடும் என்று எச்சரிக்கின்றார் திருத்தூதர் பவுல் ( 1 கொரி 11:27-30).

இன்றைய வழிபாட்டில், "அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்" என்ற தொன்மையானப் பாடல் பாடப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து அன்பிள் கட்டளையை நமக்குக் கொடுக்கிறார் (யோவா 13:34). "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவா 3:18). பெரிய வியாழன் பசிப்பிணிக்காகக் காணிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காகத் தாராளமாக நமது காணிக்கையை அளிப்போம்.

'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில், செகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கினார் பாரதி. இவ்வுலகில் ஒருவர் பட்டினி கிடக்கும்போது, மற்றவர்கள் நல்ல மனச்சாட்சியுடன் சாப்பிட முடியுமா? "பசியால் மடியும் மனிதருக்கு உணவளி; ஏனென்றால் அவர்களுக்கு உணவு அளிக்காவிட்டால் நீ அவர்களைக் கொன்றவனாவாய்" என்று கூற வத்திக்கான் சங்கம் தயங்கவில்லை (இன்றைய உலகில் திருச்சபை, எண் 69). நமக்குள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து, பல உயிர்களைக் காப்பதே தலையான அறம்.

"பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"(குறள் 322)

நற்கருணை நமது வாழ்வின் மையமாக அமைந்துள்ளதா? நற்கருணை உட்கொள்வதால் நாம் கிறிஸ்துவின் அன்புக் கட்டளையை நிறைவேற்றுகின்றோமா? நற்கருணையைப் பிடுவதால், நமது உணவை மட்டுமல்ல, நம்மையே பிறருக்குப் பிட்டுக் கொடுக்கத் தயாரா? இக்கேள்விகளுக்கு நம்முடைய பதில் என்ன?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறுதி வரை அன்பு

பெரிய வியாழன் - அன்புக்கு இலக்கணம் வகுத்த நாள்! இயேசு -"உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார்" (யோ.13:1)

இறுதிவரை அன்பு செலுத்தினார். இறுதி என்ற சொல் கால அளவை மட்டுமன்று, அன்பின் அளவற்ற தன்மையையும் குறிப்பிடும் அதாவது தமது வாழ்வின் இறுதி மூச்சு வரை என்ற கருத்தினை மட்டுமல்ல, எவ்வளவுக்கு அன்பு செய்யக் கூடுமோ அவ்வளவுக்குத் தன்னையே பலியாக்கும் அளவுக்கு, தன் இரத்தத்தை, ஏன் தன் உயிரையே விலையாக்கும் அளவுக்கு - அன்பு செய்தார் என்ற கருத்தும் அழுத்தம் பெறுகிறது.

நம்மீது கொண்ட பேரன்பினால் தான் பாடுபடுவதற்கு முந்திய நாள் இறுதி இரவு உணவு வேளையில் இயேசு அப்பத்தையும் இரசத்தையும் எடுத்துத் தன் உடலாக, இரத்தமாக மாற்றி தன் சீடருக்கு அளித்து “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். எதை நாம் அவர் நினைவாகச் செய்கிறோம்?

இன்றைய சமுதாயத்தில் வாழும் மனிதனுக்கு நற்கருணை அருள்சாதனம் வழங்கும் செய்தி என்ன? இந்தக் கேள்விக்கான பதில் நம் வாழ்க்கையில் இருக்கிறதே தவிர நற்கருணைப் பேழையிலோ, கதிர்ப் பாத்திரத்திலோ, அலங்காரப் பவனிகளிலோ, ஆடம்பர ஆராதனை களிலோ அல்ல.

இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று இயேசு எதனைக் குறிப்பிடுகிறார்? அன்றாடம் நாம் நடத்தும் அரைமணி நேர வழிபாட்டை மட்டுமா? கடைசி இரவு உணவு வேளையில் தந்த புதிய கட்டளை, காலடி கழுவிய முன் மாதிரி என்ன ஆயிற்று? வாழப்பட வேண்டிய ஒன்று, சாட்சி பகரப்பட வேண்டிய ஒன்று இன்று சடங்காகப் பக்தி முயற்சியாகி யிருக்கிறது. நற்கருணையைச் சடங்காக்கிய பெருமையைத்தான் பீற்றிக் கொள்ள முடியுமே தவிர அதனை எங்கே வாழ்வாக்கி இருக்கிறோம்? வளமான உறவின் வெளிப்பாடாக்கியிருக்கிறோம்? நற்கருணையை வைத்துச் சண்டை போடாமல் இருந்தாலே - சப்பாத்தியா, இட்லியா? இந்தியமயமா மேலைநாட்டு மரபா? போதும் என்று சொல்லத் தோன்றுகிறது.

எதையோ நினைத்து இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார் இயேசு. எதையோ நினைத்து எதையோ அவர் நினைவாகச் செய்து திருப்தி அடைகிறோம்.

இலத்தீன் அமெரிக்கா எல்சால்வதோர் மாநிலத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் கொள்ளையர்கள் புகுந்து நற்கருணைப் பேழையை உடைத்து நற்கருணையைத் தெருப்புழுதியில் வீசி எறிந்தனர். இதை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், ஆயர் ஹெல்டர் கமராவைச் சந்திதது மாபெரும் கண்டனப் பேரணியும் பரிகார வழிபாடும் நடத்த வேண்டும் என்றனர். ஆயரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.

பரிகார வழிபாட்டில் “தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று நற்கருணை அவமதிப்புச் செய்தவர்களுக்காகச் செபித்து விட்டு மறையுரையில் சொன்னார்: "மக்களே, உணர்வுப் பூர்வமான உங்கள் எதிர்ப்பை உரத்த குரலில் எழுப்பி இன்றைய நிகழ்வை உயிரோட்ட மிக்கதாக மாற்றியிருக்கிறீர்கள். 'நற்கருணைமீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பெருமதிப்பு பாராட்டுக்குரியது. நற்கருணை ஆண்டவரைப் புழுதியில் வீசியதற்காக துடிதுடிக்கும் நாம் இதே எல்சால்வதோர் சாலையோரத்தில் எத்தனை ஏழைகள் உணவின்றி, உடையின்றி, உறைவிடமின்றி மடிந்து கொண்டிருக்கிறார்களே. அவர்களில் இயேசுவைக் காண்கிறோமா? இவர்கள் பக்கம் நம் கவனம் திரும்பும்போதுதான் நாம் நற்கருணை ஆண்டவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை செயலுள்ளதாகவும் பொருள் உள்ளதாகவும் அமையும்”.

நற்கருணைக் கொண்டாட்டம் -அன்பின் புதிய கட்டளை இரண்டும் ஒன்றுக்கொன்று ஈடானவை, நிறைவு தருபவை சமஅளவில் முக்கியம் பெறுபவை. ஏன், தெரியுமா?

1. கட்டளைகள் இரண்டும் ஒரே மாதிரி.

  • -"இதைப் பெற்று உண்ணுங்கள்" (மத்.26:26)
  • -"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோ.13:34)

2. கட்டளைகள் இரண்டையும் கடைப்பிடிக்கக் காரணம் ஒரே மாதிரி.

  • -ஏனெனில் “இது என் உடல்" (மத்.26:26)
  • ஏனெனில் “இச்சிறியோருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத்.25:40)

3. கட்டளைகள் இரண்டையும் மீறினால் கிடைக்கும் தண்டனையும் ஒரே மாதிரி.

  • மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்” (யோ.6:53)
  • இச்சிறியோரை அன்பு செய்யாதவர்கள் "முடிவில்லாத் தண்டனை அடைவார்கள்"
  • (மத்.25:46)

நம்மோடு வாழவிரும்பிய இறைமகன், நம்மில் ஒருவராக வாழ்ந்த இயேசு நமக்காகத் தன்னையே தந்த அன்பின் சின்னம் நற்கருணை. இயேசுவின் திரு உடல் நம் உடலோடு உடலாகவும் இயேசுவின் திரு இரத்தம் நம் இரத்தத்தோடு இரத்தமாகவும் ஆகிவிட்டால் வேறு எதையும் நாம் தேட மாட்டோம் அப்போது “நானல்ல வாழ்வது, இயேசு என்னில் வாழ்கிறார்" என்ற நிலை பிறக்கும். இயேசு நம்மை அன்பு செய்ததுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தன்னையே உணவாகத் தரும் இயேசு

முன்பொரு காலத்தில் சிபிச் சக்ரவர்த்தி என்றொரு சோழ மன்னன் இருந்தான். அவன் மக்களிடத்தில் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் மாலைநேரம் சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவதுபோல் சத்தம் வந்தது. திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே ஒரு வல்லூறு ஒரு புறாவைத் துரத்திக் கொண்டு செல்வதையும் உயிருக்குப் பயந்து புறா கத்தியபடி பறப்பதையும் கண்டார். இன்னது செய்வது என அறியாது திகைத்தபடி நின்றிருந்த சிபியின் முன் வந்து விழுந்தது அந்தப் புறா. அதைக்கையில் எடுத்து அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார் சிபிச் சக்ரவர்த்தி. சற்றுநேரத்தில் அதைத் துரத்திவந்த வல்லூறும் அங்கு வந்து அரசர் முன் அமர்ந்தது. அதைக் கண்டு திகைத்த சிபி தன் கையில் இருந்த புறாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வல்லூறு வாய் திறந்து பேசியது.

"அரசே! இந்தப் புறா எனக்குச் சொந்தம். இதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்". மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான். மீண்டும் வல்லூறு அரசனிடம் பேசியது, "இந்தப் புறா இன்று எனக்கு உணவாக வேண்டும். நான் பசியால் தவிக்கிறேன்". அதை சிபி அன்புடன் பார்த்தான். "ஏ! பறவையே உன் பசிக்காக இந்த சாதுவான பறவையை உனக்கு உணவாகத் தரமாட்டேன்” என்றான். "அப்படியானால் என் பசிக்கு என்ன வழி அரசே?" என்றது வல்லூறு. சக்ரவர்த்தி சற்று நேரம் சிந்தித்தான். ஊனுக்கு ஊனைத்தான் தரவேண்டும். வேறு உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. என்ன வழி என் சிந்தித்தான். சற்று நேரத்தில் முகம் மலர்ந்தான். "உனக்கு உணவாக என் மாமிசத்தையே தருவேன் உண்டு பசியாறுவாய்" என்று சொன்னவன் காவலரை அழைத்து ஒரு தராசு கொண்டு வரச் சொன்னான். ஒரு தட்டில் புறாவை வைத்தான். அடுத்த தட்டில் தன் உடலிலிருந்து மாமிசத்தை அரிந்து வைத்தான். ஆச்சரியம் என்னவென்றால் எவ்வளவு தசையை அரிந்து வைத்தாலும் புறாவின் எடைக்கு சமமாகவில்லை. எனவே சிபிச் சக்ரவர்த்தி தானே அந்தத் தராசில் ஏறி அமர்ந்தான். தட்டு சமமாகியதும் மன்னன் மகிழ்ந்தான். “ஏ பறவையே இப்போது நீ என் தசையை உனக்கு உணவாக்கிக் கொள்" என்றவுடன் அங்கிருந்த வல்லூறும் புறாவும் மறைந்தன.

மறுகணம் அங்கே இறைத்தூதர்கள் இருவர் தோன்றினர். அவர்கள் மன்னனிடம், "சிபிச் சக்ரவர்த்தியே! உமது நேர்மையையும் கருணை உள்ளத்தையும் பரிசோதிக்கவே நாங்கள் பறவையாக வந்தோம். உமது உள்ளம் புரிந்தது. உலகம் உள்ளளவும் உமது புகழ் நிலைப்பதாக. நீர் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தி மறைந்தனர். அழகிய உடலை மீண்டும் பெற்ற மன்னன் பல்லாண்டு புகழுடன் வாழ்ந்தான்.

சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான புறநானுற்றில் இடம்பெறக்கூடிய இந்த நிகழ்வு ஒரு சாதாரண புறாவிற்காக தன்னையே தந்த சிபிச்சக்கரவர்த்தி என்ற சோழ மண்ணின் கருணை உள்ளத்தை நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. ஆண்டவர் இயேசுவும் நம்மீது கொண்ட பேரன்பினால் தன்னையே உணவாக, நற்கருணை வடிவில் தருகின்றார். அதைத்தான் இன்று ‘பெரிய வியாழனாக’ வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றோம்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் - இன்றைய இரண்டாம் வாசகத்தில் – கூறுவதுபோல, ஆண்டவர் இயேசு தான் காட்டிக்கொடுப்பதற்கு முந்தின இரவு, அப்பத்தைக் கையில் எடுத்து, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். பின்னர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைநிறுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்கின்றார். ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் பானமாகவும் தருகின்றபோது, இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்கின்றார். அப்படியானால், இயேசுவைப் போன்று நாமும் நம்முடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் மானுட மீட்புக்காகத் தரவேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற செய்தியாக இருக்கின்றது. ஆகவே, ஆண்டவர் இயேசுவின் நற்கருணை விருந்தில் பங்குகொள்ளக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று நம்மையும் பிறருக்காகக் கையளிக்கத் தயாராக இருக்கவேண்டும். அதுவே சரியான செயல்.

“தன்னலம் மறுத்துப் பொதுநலத்துக்காகத் தன்னையே கையளிப்பவர்கள்தான் ஒப்பற்ற தலைவர்கள்” என்பார் சேகுவேரா. அந்த வகையில் பார்க்கும்போது இந்த மானுட சமூகம் வாழ்வுபெற என்பதற்காக தன்னையே உணவாகத் தந்த இயேசுவும் ஒப்பற்ற தலைவர்தான்.

எனவே நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ நம்மைக் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

இறுதிவரையும் அன்பு செலுத்தினார்!

இன்று நாம் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாள் பெரிய வியாழன் என்றும், கட்டளை வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. என் உடல், இது என் இரத்தம்' என்று சொல்லி, இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை, 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தியதை, "நீங்களும் ஒருவர் மற்றவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும்' என்று பணிவிடை செய்வதை முதன்மைப்படுத்தியதை, ‘நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்று. அன்புக் கட்டளை கொடுத்ததை இன்று நாம் நினைவுகூர்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:1-15) வரும் ஓர் அருள்வாக்கியத்தை நம்முடைய சிந்தனையின் மையப்பொருளாக எடுத்துக்கொள்வோம்: ‘உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்’ (யோவா 13:1).

'தமக்குரியோர்' என்றால் யார்?

இயேசு 'தமக்குரியோர்மேல்' மட்டும்தான் அன்பு செலுத்தினாரா? எல்லாரையும் அன்பு செலுத்தவில்லையா? ‘பகைவருக்கும் அன்பு காட்டுங்கள் (காண். மத் 5:44) என்று சொன்ன எப்படி 'தமக்குரியோரை மட்டும் அன்பு செய்ய முடியும்? என்று கேட்கத் தோன்றலாம். யோவான் நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் 'தமக்குரியோர்' என்பவர்கள் உலகில் உள்ள அனைவரையும் குறிக்கிறது. ஏனெனில், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ (காண். யோவா 1:11) என்று முன்னுரைப் பாடலில் எழுதுகிறார் யோவான். இங்கே, 'தமக்குரியோர்’ என்பது இயேசுவால் தெரிவு செய்யப்பட்டு, அன்பு செய்யப்பட்டவர்களை அல்ல; மாறாக, எல்லாரையும் குறிக்கிறது.

‘இறுதிவரை’ என்னும் சொல்லாடலின் பொருள் என்ன?

இரண்டு நிலைகளில் பொருள் கொள்ளலாம்: ஒன்று, நேரம்-இடம் அடிப்படையில். அதாவது, ஒரு மாணவர் இறுதிவரை தேர்வு எழுதினார் என்றால், தேர்வு முடிகின்ற ஒரு மணி வரை எழுதினார் என்று பொருள் அல்லது இந்த நீள அறையை முதலிலிருந்து இறுதிவரை அளந்து கொடுங்கள் என்று வண்ணம் பூசுபவர் கேட்டால், அது வெளி அல்லது இடம்சார் அளவில் கடைசி என்று பொருள்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக, பகுதி-முழுமை அடிப்படையில். இறுதிச் சொட்டு இரத்தம் வரை அவர் நமக்காகச் சிந்தினார் என்று சொல்லும் வாக்கியத்தில், இறுதி என்பது முழுமையைக் குறிக்கிறது.

நம் பாடத்தில், 'இறுதிவரை' என்பதை மேற்காணும் இரண்டு நிலைகளிலும் புரிந்துகொள்ள முடியும்: (அ) நேர அடிப்படையில் இயேசு, தொடக்கமுதல் இறுதிவரை தமக்குரியவர்களை அன்பு செய்கின்றார். (ஆ) பகுதி-முழுமை அடிப்படையில், இயேசு தன்னையே முழுமையாகக் கொடுத்து இறுதிவரை அன்பு செய்கின்றார்.

‘இறுதிவரை’ என்ற சொல்லாடல் நேர அடிப்படையில் பயன்படுத்தப்படும் இன்னொரு நிகழ்வு, 'கானாவூர் திருமணம். அங்கே, பந்தி மேற்பார்வையாளர் மணமகனிடம், “நீர் நல்ல இரசத்தை இதுவரை (இறுதிவரை) பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” எனக் கேட்கின்றார்.

இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வையும், கானாவூர் திருமணத்தில் அவர் நிகழ்த்திய முதல் அறிகுறியையும் சற்றே ஒப்பீடு செய்வோம்: (அ) இங்கே (பாதம் கழுவுவதில்) தன் நேரம் வந்துவிட்டது என இயேசு உணர்கிறார். அங்கே (கானாவில்) தன் நேரம் இன்னும் வரவில்லை என்கிறார். (ஆ) இங்கே தானே எழுகின்றார், களைகின்றார், கழுவுகின்றார். அங்கே மரியா அழைக்கின்றார், அறிவுறுத்துகின்றார். பணியாளர்கள் நிரப்புகின்றனர், பரிமாறுகின்றனர். (இ) இங்கே தண்ணீர் பாதங்களைத் தூய்மையாக்குகிறது. அங்கே தூய்மைச் சடங்கிற்கான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. (ஈ) இங்கே தானே நீர் எடுத்துக் கழுவுகின்றார். அங்கே, 'மொண்டு போங்கள்' எனக் கட்டளையிடுகிறார் இயேசு. (உ) இங்கே சீடர்கள் (பேதுரு தவிர) அமைதி காக்கிறார்கள். அங்கே இயேசுவிடம் நம்பிக்கை கொள்கிறார்கள். (ஊ) இங்கே இறுதிவரை அன்பு செய்யும் இயேசு பாதம் கழுவுகிறார். அங்கே இறுதிவரை நல்ல இரசம் பரிமாறாமல் வைக்கப்படுகிறது. (எ) இங்கே பாதம் கழுவும் ஆண்டவரும் போதகராகவும் இருக்கிறார் இயேசு. அங்கே அறிகுறி நிகழ்த்தும் ஆண்டவராக இருக்கிறார். (ஏ) இங்கே தம் சீடர்களை மையமாக்குகின்றார். அங்கே இயேசு மையமாக இருக்கின்றார்.

இந்த ஒப்பீட்டில் ஒன்று தெளிவாகிறது. ‘இறுதிவரை அன்பு 'செய்தல்' என்பது அறிகுறிகள் நிகழ்த்துவதில் அல்ல: போதனையில் அல்ல; மற்றவர்களுக்குக் கொாடுக்கும் அறிவுரையில் அல்ல: மாறாக, பாதம் கழுவுதலில்தான் இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 12:1- 8,11-14) ஆண்டவராகிய கடவுள், மோசே வழியாக, இஸ்ரயேல் மக்களுக்கு முதல் பாஸ்கா விழாவுக்கான அறிவுரை வழங்குவதை வாசிக்கின்றோம். ஆண்டவர் தான் எகிப்து நாட்டில் நிகழ்த்தவிருக்கும் ‘இறுதி’ வல்லசெயலுக்கு முன், அவர்களுக்குத் தன் உடனிருப்பைக் காட்டுகின்றார். முதல் பாஸ்கா பூட்டிய அறைக்குள், இருளில் நடந்தேறுகிறது. அவர்கள் உண்ணும் ஆட்டின் இரத்தம் மட்டும் அவர்களுடைய கதவுநிலைகளில் பூசப்பட்டிருக்க, அவர்களைக் கடந்து செல்கிறார் கடவுள். மேலும், இப்போது அவர்களைக் கடந்து சென்று அவர்களை அழிக்காமல் விடுபவர், இறுதிவரை அவர்களோடு நடந்து செல்கிறார். இறுதிவரை அவர்களோடு ஆண்டவர் 'நடக்க வேண்டுமெனில், அவர்கள் இறுதிவரை ஆண்டவருக்குப் பணிபுரிய வேண்டும். மற்ற தெய்வங்களுக்கோ, சிலைகளுக்கோ பணிபுரிதல் கூடாது. ஆக, இறைவனின் இறுதிவரை உடனிருப்பை உறுதி செய்வது, இறுதிவரை பணிசெய்தலே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), கொரிந்து நகர திரு அவையில் விளங்கிய பிரிவினைகளையும், நற்கருணைக் கொண்டாட்டத்தில் விளங்கிய பிறழ்வுகளையும் கண்டிக்கின்ற பவுல், இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, கூடிவருதலில் மையமாக இருக்க வேண்டியவர் இயேசுவே அலாறி, ஒருவர் மற்றவர் அல்லர் என எடுத்துரைக்கின்றார். ஏனெனில், இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்ட்_வருடைய சாவை அவர்கள் 'இறுதிவரை’ அறிவிக்கிறார்கள். ஆக, அவர்களுடைய நற்கருணை பங்கேற்பு இயேசுவைப் பற்றிய அறிவிப்பாக 'இறுத்திவரை’ இருத்தல் வேண்டும்.

இறுதிவரை அன்பு செலுத்துதல் என்றால் என்ன?

இறுதிவரை அன்பு செலுத்துதலின் பொருளை, இயேசு, வெறும் வார்த்தைகளில் சொல்லாமல், ஒரே ஒரு செயலால் செய்து காட்டுகின்றார். அச்செயல் நான்கு நிலைகளில் நடந்தேறுகிறது.

1.அறிதல்

(அ) தந்தை அனைத்தையும் தன்னிடம் ஒப்படைத்துள்ளார். (ஆ) தான் கடவுளிடமிருந்து வந்தவர், (இ) தான் கட வுளிடம் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த மூன்றையும் அறிகின்றார் இயேசு. அறிதல் இல்லாமல் அன்பு செலுத்த இயலாது. இங்கே அறிதல் என்பது நாம் அன்பு செய்யும் அடுத்தவரை அறிதல் அல்ல; மாறாக, தன்னை அறிதல். இதையே திருத்தந்தை பிரான்சிஸ், 'கிறிஸ்து வாழ்ழ்கிறார்' என்னும் தன் திருத்தூது ஊக்கவுரையில், 'நான் யார்?' என்ற கேள்வியைவிட, 'நான் யாருக்காக?' என்ற கேள்வியை இளைஞர்கள் கேட்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். 'நான் யார்?' என்னும் அறிதல் என்னைத் தன்மையமாக்கி விடும். ஆனால், 'நான் யாருக்காக?' என்ற கேள்விதான் தன்னை பிறர்மையத்திற்கு ந கர்த்தும். இயேசு தான் யாருக்காக என்பதை அறிக்கின்றார்.

இன்று, நாம் மற்றவர்களை அன்பு செய்வதில், என்னை நான் அறிந்து 'கொள்வதற்குப் பதிலாக அடுத்தவரை அறிந்துகொள்ளவே முயல்கிறேன். அதுவே பல நேரங்களில் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உறவில் வரும் பிரச்சனைக்கு அடுத்தவர் காரணமல்ல. என் உள்ளம்தான் காரணம். என் உள்ளத்தில் எழும் குறுகிய மனப்பான்மை, கோபம், ஒப்பீடு, பொறாமை, தாழ்வு மனப்பான்மை போல் ஏறவற்றை நான் அறிந்துகொண்டால், நான் அடுத்தவரை அன்பு செய்வது எளிதாகும். அவ்வாறே, என்னுடைய பணிக்குருத்துவத்தில், 'நான் யார்?' என்ற அறிதலை நான் முழுமையாக விடுத்து, 'நான் யாருக்காக?" என்ற அடையாளத்திற்கு நகர வேண்டும். ஏனெனில், 'நான் யார்?' என்ற அடையாளம் என்னை சாதி, 'கொள்கை, படிப்பு, பதவி, பணம், உறவு நெருக்கம் அடிப்படையில் என்னை சக அருள்பணியாளரிடமிருந்தும், நான் பணிசெய்யும் மக்களிடமிருந்தும் என்னை அந்நியப்படுத்திவிடும். ஆனால் 'நான் யாருக்காக?' என்ற நிலையில் என்னை அறியும்போது என் இலக்கும், வாழ்வின் நோக்கும் போக்கும் தெளிவாகும்.

இறுதிவரை அன்பு செய்ய முதல் படி 'அறிதலே.'

2.பந்தியிலிருந்து எழுதல்

இயேசுவின் பாஸ்கா நிகழ்வுப் பதிவில் லூக்கா இயேசுவின் வார்த்தைகளை இவ்வாறு பதிவு செய்கிறார்: 'யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்' (காண். லூக் 22:27). ஆக, 'பெரியவர்' என்ற நிலையிலிருந்து இயேசு எழுந்து, பந்தியில் அமர்ந்த எல்லாரையும் பெரியவராக்குகிறார்.

இதுதான் அன்பின் இரண்டாம் படி. இன்று நான் என்னுடைய நிலையிலிருந்து எழுந்து அடுத்தவர் நிலைக்கு இறங்கலாம் எளிதாக. ஆனால், அடுத்தவரைப் பெரியவர் நிலையில் வைத்துப் பார்ப்பது கடினமான இருக்கும். ஏனெனில், நான் அடுத்தவரைப் பெரியவராக்கி அவருக்குக் கீழ் நான் அமரும்போது நான் வலுவற்றவன் ஆகிவிடுகிறேன். அவர் என்னை எட்டி உதைக்கலாம். மிதிக்கலாம். தலையில் குட்டலாம், கன்னத்தில் அறையலாம், என்மேல் எச்சில் உமிழலாம். என் கழுத்தைப் பிடிக்கலாம். ஆக, இத்தகைய வலுவற்ற நிலைக்கு நான் என்னை உட்படுத்தினால்தான் என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியும். நான் பந்தியிலிருந்து எழுந்தாலும், அடுத்தவரைப் பந்தியில் அமர வைத்துப் பார்க்கும் தாராள 'உள்ளம் வேண்டும் நமக்கு.

3. மேலுடையைக் கழற்றிவிட்டு துண்டை இடுப்பில் கட்டி

பராக்டிக்கல் காரணத்திற்காக இயேசு மேலுடையை கழற்றியிருக்கலாம். துண்டை இடுப்பில் கட்டியிருக்கலாம். உருவகமாகப் பார்த்தால் இங்கே இயேசு தன்னையே நொறுங்குநிலைக்கு உட்படுத்துகின்றார். நிர்வாணம் அல்லது அரைநிர்வாணம் என்பது நம்முடைய நொறுங்குநிலையைக் காட்டுகிறது. ஏனெனில், நம்முடைய ஆடைகள் நம்மை நொறுங்காவண்ணம் காத்துக்கொள்கின்றன. மேலும், துண்டை இடுப்பில் கட்டுவது அடிமையின் ஆடையை இயேசு அணிவதையும் குறிக்கிறது எனச் சொல்ல முடியும்.

அன்பில், நான் என் நொறுங்குநிலையை ஏற்க வேண்டும். நான் என் அடையாளங்களைக் களைய வேண்டும். என்னைக் காத்துக்கொண்டிருக்கும் என் அடையாளங்களை நான் கழற்ற வேண்டும். என்னுடைய பணிவாழ்வில் என் நொறுங்குநிலை என்பது என்னுடைய எரிய அல்லது வறிய குடும்பப் பின்புலமாகவோ அல்லது என்னுடைய பாவம் அல்லது தவறாகவோ இருக்கலாம். நான் துண்டை இடுப்பில் கட்டி வந்த நிலையில் இருந்துகொண்டு, திருவுடை என்னும் மேலாடைதான் என்னுடைய ஆடை என்று வலிந்து பற்றிக்கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய நொறுங்குநிலையை மறைப்பவனாகவும் அல்லது அதோடு போராடுபவனாகவும் இருப்பேன். ‘இதுதான் நான்' என என்னை அடுத்தவருக்கு காட்டுவதில் நிறைய கட்டின்மை இருக்கவே செய்கிறது. ஏனெனில், அப்படிக் காட்டிவிட்டால், நான் ஒவ்வொரு முறையும் என்னை மற்றவருக்கு 'ப்ரூவ்' பண்ணத் தேவையில்லை.

4. தண்ணீர் எடுத்து, காலடிகளைக் கழுவி, துண்டால் துடைத்தார்

கானாவூரில் பணியாளர்கள் தண்ணீர் நிரப்பி, பணியாளர்களே மீண்டும்முகந்து சென்றனர்.சமாரியப் பெண்ணின் குடத்திலிருந்து தண்ணீரையும் இயேசு பருகவில்லை, இலாசரின் இறப்பில் தன்னுடைய கண்ணீர் என்னும் தண்ணீரைத் தொட்டவர், இப்போது தானே தண்ணீரை எடுத்து சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். தண்ணீர் நலம் தரும், தூய்மை தரும். காலடி என்பது நம் ஒவ்வொருவரின் ஆதாரம். நம்மை நிலத்தோடு இணைக்கும் இணைப்புக் கோடு நம் பாதம். நாம் இம்மண்ணில் வேரூன்றி நிற்க உதவுவது பாதம். மருத்துவத்திலும் நம்முடைய பாதங்களில்தான் நரம்பு மற்றும் இரத்த நாளங்களின் இணைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். காலடிகள் ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையைக் குறிக்கின்றன. ஆகையால்தான், நாம் அடுத்தவரின் காலடிகளில் விழுகின்றோம். கடவுளின் காலடியைத் தொட்டு வணங்குகின்றோம். ஆக, தம் சீடர்களின் முழு ஆளுமையைத் தூய்மைப்படுத்தி, துண்டால் துடைக்கின்றார் இயேசு.

இன்று நான் என் அன்பிலும், அருள்பணியிலும் என் கண்ணீரை முதலில் தொட வேண்டும். என் கண்ணீரை நான் தொட்.டாலன்றி, அடுத்தவரின் காலடிகளில் தண்ணீர் ஊற்ற முடியாது. மேலும், என்னுடைய நற்குணம் என்னும் தண்ணீரால் நான் அடுத்தவரின் முழு ஆளுமையையும் கழுவ வேண்டும்.

இறுதிவரை அன்பு செய்ய நம்மிடம் உள்ள தடைகள் எவை?
  • 1. யூதாசு போல கடின உள்ளம் கொண்டிருத்தல். யூதாசு முதலிலேயே அன்பு செய்யவில்லை. அவர் எப்படி இறுதிவரை செய்வார்?
  • 2. பேதுரு போல சூழல் கைதியாக இருத்தல். அன்பு செய்தார். அன்பு செய்யும் ஆர்வம் இருந்தது. ஆனால் சூழல்கைதியாக அன்பிலிருந்து பின்வாங்கினார். ஆனால், மீண்டும் தண்டவாளத்தில் ஏறியது இவருடைய இரயில்.
  • 3. சீடர்கள் போல கண்டுகொள்ளாமல் இருத்தல். சீடர்களுக்கு இன்னும் எதுவும் புரியவில்லை. 'உங்களுக்கு இப்போது புரியாது' என்கிறார். வாழ்க்கையில் கடைசி வரை தாங்கள் யார், யாருக்காக, மற்றவர்கள் யார் என்று புரியாமலேயே இருந்து மறைபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளையும் தாண்டி, இயேசு போல இருந்தால் அன்புக் கட்டளை. பணிக்குருத்துவம், நற்கருணை நமக்கு இன்றும் என்றும் பொருள்தரும்.

பணியால் இறுதிவரை நம் திராட்சை இரசத்தை காத்துக்கொள்வோம். அவர் நமக்கு முன்மாதிரி காட்டினார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தொண்டு ஆற்றிட தயாரா?

நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு தொண்டு செய்து அதன் வழியாக இறைவனை மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம். தொண்டு செய்வதில் தான் உண்மையான நிறைவு இருக்கிறது. நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களின் பார்வையில் நாம் கடவுளாக மாறுகிறோம். இந்தப் பெரிய வியாழன் நாளில் ஆண்டவர் எந்த நோக்கத்திற்காக இறுதி உணவு விருந்தை ஏற்பாடு செய்தார் என்று தியானிக்கலாம்.

இறுதி இராவுணவு நாளாகிய இன்று தான் ஆண்டவன் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார். குருத்துவம் என்பது இறைவனின் ஒப்பற்ற கொடை. இறைவனின் பணியை ஆழமாக செய்து இயேசுவின் பிரதிநிதியாக பணி செய்திட ஒரு அழைப்பு. இயேசுவைப்போல இந்த உலக மக்களின் மீட்புக்காக பாவம் போக்கும் பலிசெலுத்தும் குருவாக வாழ ஒரு குருவானர் ஒப்புக்கொள்கிறார். குருத்துவ வாழ்வு இயேசுவின் வழியாக தன்னுடைய திருத்தூதர்களுக்கு சென்றது. திருத்தூதர் வழியாக திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் போன்றவர்களுக்கு இயேசுவின் குருத்துவம் சென்றது. இயேசு குருவாக தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும், குருத்துவத்தின் மேன்மை உணர்ந்து சிறப்பான பணிகளைச் செய்தார். இதைத்தான் ஒவ்வொரு குருவானவரும் செய்ய அழைக்கப்படுகிறார். நாம் வாழும் இந்த நவீன காலகட்டத்தில் குருக்கள் மீதான மதிப்பு மரியாதையும் குறைந்து கொண்டே இருக்கிறது. அவர்களை இயேசுவின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளாமல் தனிப்பட்ட மனிதராக பார்க்கக்கூடிய நிலை இருக்கிறது. அவற்றையெல்லாம் கடந்து ஒவ்வொரு குருவும் இயேசுவின் மறுபிம்பம் என்பதை உணர்ந்து திருப்பலியில் பங்கெடுக்க வேண்டும். ஒவ்வொரு குருவும் இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவித்து பேய்களை ஓட்டி நோய்களை குணமாக்குகிறார் என்பதை ஏற்று நம்ப வேண்டும். எனவே இயேசு குருத்துவத்தை ஏற்படுத்திய இந்த நாளில் நாம் சிறப்பான விதத்தில் அனைத்து குருக்களுக்காக செபிப்போம். குருக்கள் செய்கின்ற போதிக்கும் பணி, புனிதப்படுத்தும் பணி மற்றும் வழிநடத்தும் பணி போன்றவற்றை சிறப்பாக செய்ய ஒவ்வொரு மனிதரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதில் தான் கடவுள் இயேசு மகிமையும் நிறைவும் அடைவார். தன்னுடைய குருத்துவத்தை இயேசு பிறரோடு பகிர்ந்தது போல திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் பொது குருத்துவத்திலோ பங்கு பெற அழைக்கப்படுகிறோம். எனவே குருத்துவத்தை மதித்து இயேசுவினுடைய அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்.

இயேசுவின் இந்த இறுதி இராவுணவு உறவு பரிமாற்றமாக இருக்கிறது. ஆண்டவர் இயேசு இந்த உலகை விட்டு செல்வதற்கு முன்பாக தன்னோடு பயணித்த சீடர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து அவர்களுக்கு பிரியா விடை உணவு வழங்குகிறார். இது எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் நம் உறவை உணவை பகிர்வதன் வழியாக வலுப்படுத்த அழைக்கப்படுகிறோம். எனவே புனித வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் நம்மால் முடிந்த வரை நம்மிடம் இருப்பவற்றை பிறரோடு பகிர்ந்து நல்லுறவை வலுப்படுத்த முயற்சி செய்வோம். அதிலும் குறிப்பாக உணவு உறவின் அடையாளம் என்பதை உணர்ந்து இயேசுவைப் போல விருந்தோம்பல் பண்பில் சிறந்து ஆண்டவன் அன்பு பிள்ளைகளாக மாற இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்.

இராவுணவு நாளாகிய இன்று தொண்டு செய்பவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.நம்முடைய படிப்பு, பணம், வசதி போன்றவற்றை கடந்து தாழ்ச்சியோடு இறைவனுக்கு நன்றி செலுத்தி தொண்டு செய்யக்கூடிய மனநிலையில் வளர வேண்டும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் ஆண்டவர் இயேசு. தன்னுடைய சீடருடைய கால்களை கழுவுவதைக் கொண்டு இயேசுவின் தொண்டு செய்யக்கூடிய மனநிலையை அறிய முடிகிறது. யூத சமூகத்தில் இயேசு வாழ்ந்த கால கட்டத்தில் கால்களை கழுபவர்கள் அடிமைகள். ஆனால் ஆண்டவர் இயேசு தாழ்ச்சியான மனநிலையில் தொண்டு செய்வதின் மேன்மையை நம் முன்னால் வாழ்ந்து தொண்டு செய்ய இந்த நாளில் அழைப்பு விடுத்துள்ளார். எனவே நம்முடைய மனித வாழ்வில் முடிந்தவரை மனித சேவைல் புனிதம் கண்டு ஏழையின் சிரிப்பில் இறைவனை காண முயற்சி செய்வோம்.

இந்த இறுதி இரா உணவில் இயேசு நற்கருணை ஏற்படுத்தினார். இந்த உலகத்தில் முதல் திருப்பலி இயேசுவால் ஒப்பு கொடுக்கப்பட்டது. இயேசு இந்த உலகம் மீட்பு பெற தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாக அளித்து இன்றளவும் நம்மைத் தூய்மையின் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். திருப்பலி வெற்றுச் சடங்கு என நம்மில் பல நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் திருப்பலியில் இயேசு தன்னையே முழுமையாக பலியாக ஒப்புக்கொடுத்து புது படைப்பாக நம்மை மாற்றுகிறார் . எனவே இயேசுவின் பிரதிநிதியாக திகழக்கூடிய குருக்கள் வழியாக நற்கருணை கொண்டாட்டத்தில் முழுமையாக இணைந்து இறைவனின் பேரன்பை உணர்வோம்.

இவ்வாறாக பெரிய வியாழன் நாளாகிய இன்று நம் கத்தோலிக்க குருக்கள் அனைவருக்காகவும் சிறப்பான விதத்தில் செபிப்போம். இயேசு தன்னோடு பயணித்தவர்களுக்கு வயிறார உணவளித்து தன் உறவை வலுப்படுத்தியதை போல, நாமும் பசியில் உள்ளவர்களுக்கு முடிந்தவரை உணவளிப்போம்.அதுதான் சிறந்த கொண்டாட்டமாக இருக்க முடியும். நாம் தாழ்ச்சியோடு பிறருக்கு தொண்டு செய்யக் கூடியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். தொண்டு செய்யக்கூடிய நல்ல மனநிலையை இந்த நாளில் இயேசுவிடம் கேட்போம். இயேசு ஏற்படுத்திய நற்கருணை கொண்டாட்டத்தில் முழுமையாக பங்கெடுத்து திராட்சை கொடிகள் செடியோடு இணையும் பொழுதுதான் மிகுந்த பலன் கொடுக்கும் என்பது நாம் அறிந்ததே. எனவே ஒவ்வொரு நற்கருணை கொண்டாட்டத்திலும் இயேசுவோடு இணைந்திருப்போம்.அப்பொழுது நிச்சயமாக நாம் பொருள் நிறைந்த விதத்தில் பெரிய வியாழனை கொண்டாட முடியும்.

இறைவேண்டல்

அன்பான இறைவா! இறுதி இராவுணவின் வழியாக குருத்துவத்தை ஏற்படுத்தி இன்றளவும் இந்த உலகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறீர். அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். சீடர்களின் பாதங்களை கழுவியதன் வழியாக தொண்டு செய்வதின் மேன்மையை எங்களுக்கு காண்பித்து இருக்கிறீர் அதற்காக நன்றி செலுத்துகிறோம். சீடர்களுக்கு உணவு கொடுத்து உறவின் மேன்மையை உயர்த்தியதைப் போல நாங்களும் உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கக்கூடிய நல்ல மனநிலையை கொடுத்துக் கொண்டிருப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். நற்கருணையை ஏற்படுத்தி உம்முடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாக கொடுத்து எம்மை உமது பாதையில் வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். அன்பு ஆண்டவரே! நாங்கள் தொடர்ந்து உமது பாதையில் சாட்சியமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser