மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருப்பாடுகளின் பெரிய வெள்ளி
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 52:13-53:12 | எபிரேயர் 4: 14-16; 5: 7-9 | யோவான்18:1-19:42

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இன்று ஏதோ ஒரு சோகம், கவலை நம் உள்ளத்திலே, நம் முகங்களிலே. யாரையோ நம் குடும்பத்தில் இழந்துவிட்டது போன்ற துக்கம், மனதிலே கலக்கம், சென்ற இடம் எல்லாம் நன்மையே செய்து கொண்டிருந்த நன்மை(தி.ப. 10:38)யின் நாயகன், இரக்கத்தின் ஊற்று, ஏழைகளின், ஒடுக்கப்பட்டோரின் தோழன், ஏய்த்துப் பிழைப்போரின் எதிராளி, பாவமே செய்யாதவர், வாழவேண்டிய வயதில் கொல்லப்பட்டதால் நம் உள்ளங்கள் இன்று கரைந்து கொண்டிருக்கின்றன.

இறைவாக்கினர் எசாயா கூறுவதுபோல, நம் குற்றங்களுக்காக அவர் காயப்பட்டார். நம் தீய செயலுக்காக அவர் நொறுக்கப்பட்டார். அவரது காயங்களால் நாம் குணம் அடைகின்றோம் (எசா, 53:5). தலைமகனை இழந்து துயரத்தில் தாயாகிய திருச்சபை அலங்கோலமாக, ஆடம்பரமின்றி, வெறுமையாக இன்று காட்சி தருகின்றாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த நம் அன்பரின் அகோர மரணம் இன்று நம்மை எவ்வாறு பாதிக்கிறது? ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பெரிய வெள்ளியை நாம் கொண்டாடுவதின் நோக்கம் என்ன? இப்படி பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழலாம்! இத்தகைய கேள்விகளுக்கு விடை காண நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு கெத்செமனி தோட்டத்திற்கு வந்தார். ஏன்? துன்பத்தைத் தானாக முன் வந்து ஏற்க! ஏனெனில் அன்று சிங்காரத் தோட்டத்தில் ஆதாம் பாவத்தை ஆரம்பித்து வைத்தான். கெத்செமனி தோட்டத்தில் அந்தப் பாவத்தை வெற்றி கொள்ளும் பணி இரத்த வியர்வையில் ஆரம்பமாகிறது.

தொடக்க நூலில் சிறுவன் ஈசாக் பலிக்குத் தேவையான விறகுக் கட்டையைத் தானே சுமந்து சென்றான் (ஆதி. 22:6) அவனே பலிப் பொருளாக அமைய. அவ்வாறே இயேசுவும் தான் பலியாகப் போகும் கழுமரத்தைத் தானே சுமந்து செல்கிறார். பாலைவனத்தில் கொள்ளி வாய்ப் பாம்புகளினால் கடியுண்ட இஸ்ரயேல் மக்கள் மோயீசன் உயர்த்திய வெண்கலப் பாம்பை நோக்கினர் நலம் பெற (எண். 21:9). அவ்வாறே நாம் மீட்படைய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டார். இவரது பாடுகளும், மரணமும் வரலாற்றில் நடந்து முடிந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, இன்று நம் வாழ்வைப் பாதிக்கும் ஒரு நிகழ்ச்சி.

சாவு என்பது நம் அன்றாட வாழ்வில் காணும் நிகழ்ச்சி, இன்றைய செய்திதாள்கள், ரேடியோ, தொலைக்காட்சி போன்றவற்றின் மூலமாகக் கேள்விப்படுகிறோம். ஆபத்துகளால், கொடுமைகளால், போராட்டத்தால் நடக்கும் கொலைகள், மரணங்கள் அன்றாட செய்திகளாக மாறிவிட்டன. சில நேரங்களில் இவைகளை வாசிக்கும் போதும் சரி, கேட்கும்போதும் சரி, பாக்கும்போதும் சரி உணர்வற்றவர்களாக மாறிவிடுகின்றோம். ஆனால் நம் குடும்பத்தில் ஒருவருக்கு திடீர் மரணம், ஆபத்து, படுகொலை, விபத்தில் உயிர் இழப்பு என்றால் நம் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் அல்லவா? நம் இரத்தம் கொதித்து எழுமே!

ஆம். நம் மூத்த சகோதரர், நமக்குச் சொந்தமானவர், நமக்கு உரிய நண்பர் என்றெல்லாம் அழைக்கும் நம் வாழ்வின் நாயகன் இயேசு இறந்த நாள் அல்லவா இன்று. இவரது துன்பம், இவரது சாவு நம்மைப் பாதிக்கிறது. ஏனெனில் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டே சென்றார் (திப 10:38). கடவுளின் உயிருள்ள வார்த்தையைப் போதித்துக் கொண்டே சென்றார். எசாயா கூறுவதுபோல, நம் குற்றங்களுக்காக அவர் காயப்பட்டார். நம் தீயச் செயலுக்காக அவர் நொறுக்கப்பட்டார் (எசா. 53:5). அன்பு செய்யுங்கள். அன்பைப் பெறுவீர்கள் (யோவா. 15:11-17). மன்னியுங்கள் மன்னிக்கப்படுவீர்கள் (லூக். 6:37) என்று போதித்தார். இந்த உன்னத ஒப்பற்ற நல்ல மனிதரைத்தான் இந்த உலகம் அநியாயமாகத் தீர்ப்பிட்டுக் கொன்றது. இவரது இரத்தத்தில் நாம் பங்காளியாக உள்ளோம்.

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! நான் மட்டும் அன்று வாழ்ந்திருந்தால் இத்தகைய குற்றமற்ற புனிதரை இத்தகைய கொலைக்கு ஆளாக்கிய கூட்டத்தில் இருந்திருக்க மாட்டேன் என்று சொல்ல உங்கள் உள்ளம் துடிக்கிறதா?

இந்த இயேசுவின் பாடுகள், மரணம் போன்றவை, இன்று ஏழைகள், ஓடுக்கப்பட்டோர், பாவிகள், நலிந்தோர், குழந்தைகள், பெண்ணினம் இவர்களின் சாயலில் நடைபெறுவதை அறியாதவனாக நீ இருக்கின்றாயா? எத்தனை ஆயிரம் பெண்களின் கற்பு இன்று சூறையாடப்படுகின்றது என்பது உனக்குத் தெரியுமா? நமது பாராமுகத்தால், நமது சுய சுகபோக வாழ்க்கையால், நாம் வீணாக்கும் செல்வத்தால் நாம் இவர்களைச் சிலுவையில் அறைவதில்லையா (மத். 25:45)? ஆண்டவர் கூறுவதுபோல நீ இந்தச் சின்னஞ்சிறிய ஒருவருக்குச் செய்யாத போதெல்லாம் அவருக்கே செய்யவில்லை.

சடங்கு முறையால் சஞ்சலம் அடையாமல் நமது பாவத்தால் நாம் ஏற்படுத்திய காயங்களை நினைத்து அழ வேண்டிய நாள் இது. புனித பேதுரு சொல்வதுபோல அவரது காயங்களால் நாம் குணமாக்கப் பெற்றோம் (1 பேதுரு 2:24).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புனிதம் மலரட்டும்

அன்று மோசேயால் செய்யப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்தவர்கள் பாம்புக் கடியிலிருந்து தப்பித்தார்கள் (எண் 21:4-9). இன்று சிலுவை மரத்தில் தொங்குகின்ற இயேசுவை நம்பிக்கையோடு உற்றுப்பார்ப்பவர்கள் பாவத்திலிருந்து தப்பிப்பார்கள். பாம்பைவிட கொடியது பாவம்! ஆனால் பாவத்தின் பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு.

இதோ நற்செய்தியிலிருந்து சில உதாரணங்கள் !

யோவா 4:1-44 முடிய உள்ள பகுதி. சிக்கார் என்னும் ஊரிலிருந்த ஒரு கிணற்றருகே இயேசு அமர்ந்திருந்தார். அந்தக் கிணற்றுக்குத் தண்ணீர் மொள்ள பெண்ணொருத்தி வந்தார். அவர் ஒரு சமாரியப் பெண். அவரைப் பார்த்து இயேசு, தாகமாக இருக்கின்றது. கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அவரோ, நீரோ யூதர். நானோ சமாரியப் பெண்! நீர் உயர்ந்தவர். நீர் எப்படி என்னிடம் தண்ணீர் கொடு என்று கேட்கலாம்? என்று கேட்கின்றார். இயேசுவோ, ஆணென்ன பெண்ணென்ன? நீயென்ன? நானென்ன? எல்லாரும் கடவுளின் குழந்தைகள்தான் பெண்ணே! ஆகவே தண்ணீர் கொடு என்கின்றார். இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே இயேசு பெண்ணைப் பார்த்து, குடித்த பிறகு தாகமே எடுக்காத தண்ணீரை என்னால் உனக்குக் கொடுக்க முடியும் என்கின்றார். தொடர்ந்து அவர், நீ போய் உன் கணவரை அழைத்து வா என்கின்றார். அந்தப் பெண்ணோ, எனக்குக் கணவர் இல்லையே என்கின்றார். இயேசுவோ, உண்மையைச் சொன்னாய். நீ இதற்கு முன் ஐந்து பேரோடு வாழ்ந்திருக்கின்றாய். அந்த ஐந்து பேரும் உன் கணவர்கள் இல்லை! இப்போது ஒருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்! அவரும் உன் கணவர் இல்லை என்கின்றார்.

இதைக் கேட்டதும் அந்தப்பெண் அதிர்ந்து போனார். அந்தப் பூவுக்குள்ளே ஒரு பூகம்பம்; மனம் மாறுகின்றார். அவர், நீர் உண்மையிலேயே ஓர் இறைவாக்கினர்தான் என்பதைக் கண்டுகொண்டேன் என்று சொல்லி, அவர் கண்டதையும் கேட்டதையும் போய் அவருடைய ஊர்மக்களுக்குச் சொல்லி ஒரு பெரிய நற்செய்தியாளராக மாறுகின்றார்.

ஒரு மாபெரும் பாவியை இயேசு மன்னித்து, அவரைப் பாவத்திலிருந்து விடுவித்ததை நாமிங்கே பார்க்கின்றோம்.

இதோ அன்று அந்தப் பாவியை மன்னித்த இயேசு இன்று நம் நடுவே சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

இதோ மற்றோர் எடுத்துக்காட்டும்

லூக் 19:1-10: அவர் பெயர் சக்கேயு! அவர் பெரிய திருடர்! மற்றவர்களின் பணத்தைத் திருடி பணக்காரராக மாறியவர். எல்லாருக்கும் ஆசை வரும். அவருக்கும் ஓர் ஆசை. அது என்ன ஆசை? இயேசுவைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை.

இயேசு நோயாளிகளுக்கு உடல்நலம் அளித்ததனால் அவரைப் பார்க்க ஆசை.

இயேசு பாவிகளுக்குப் பாவமன்னிப்பு அளித்ததனால் அவரைப் பார்க்க ஆசை.

இயேசு இறந்தவர்களுக்கு உயிரை அளித்ததனால் அவரைப் பார்க்க ஆசை.

ஆசை! ஆசை! ஆசை மேல் ஆசை! ஆசைப்பட்ட அவரால் கூட்டத்தின் நடுவே நடந்து வந்த இயேசுவைப் பூமியில் நின்று பார்க்க முடியவில்லை. ஆகவே மரத்திற்குச் சென்றார்; அதில் ஏறினார்; அதன் மீது அமர்ந்திருந்தார்!

சரியாக இயேசு சக்கேயு அமர்ந்திருக்கின்ற மரத்தடியிலே வந்து நின்று, சக்கேயுவே கீழே இறங்கி வா! உன் வீட்டில் நான் மிருந்தாட வேண்டும் என்றார். அந்தப் பாவியோ, இந்தப் பாவிக்கு இப்படியொரு பாக்கியமா எனச் சொல்லி மரத்தை விட்டு, பாவத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தார். இயேசுவைப் பார்த்து, என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; நான் யாரையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், திருடியிருந்தால், அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்றார். உடனே இயேசு அவர் பாவங்களை மன்னித்து, இவரும் ஆபிரகாமின் மகன்தானே! இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்றார்.

இப்படி அன்று பெரிய பாவியான சக்கேயுவிற்கு பாவத்திலிருந்து விடுதலை அளித்த இயேசு இன்று சிலுவையிலே தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

எந்தக் குற்றத்திற்காக இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள்?

நான்கு நாள்கள் கல்லறையிலிருந்த இலாசரை உயிர்ப்பித்தவர் இயேசு. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் உணவாகக் கொடுத்தவர் இயேசு. ஆறு கல்தொட்டிகளிலிருந்த தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியவர் இயேசு. முப்பத்தெட்டு ஆண்டுகளாய் படுத்தப்படுக்கையிலிருந்தவரை எழுந்து நடக்கச்செய்தவர் இயேசு. ஏழு பேய்களை மகதலா நகர் மரியாவிடமிருந்து ஓட்டியவர் இயேசு.

திப 10:38 கூறுவது போல இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார்.

தீய சூழ்நிலைகளையெல்லாம் அடியோடு மாற்றி இயேசு பாலைவனங்களைச் சோலைவனங்களாக்கினார். மனிதர்களைப் புனிதர்களாக்கினார். அப்படிப்பட்ட நல்லவரை சில யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் இயேசு அவர்களை மன்னித்தார் (லூக் 23 : 34).

தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்றார். பாவிகளுக்குப் பாவமன்னிப்புப் பெற்றுத் தந்தார்.

அன்று கல்வாரியில் சிலுவையில் தொங்கிய இயேசு இன்று நம் நடுவே சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

பாவத்திலிருந்து விடுதலை அளிக்கக்கூடிய இயேசு இன்று இதோ நம் நடுவே சிலுவையிலே தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரிடமிருந்து பாவமன்னிப்புப் பெற்று புனிதர்களாவோம். புனித வெள்ளி நம் அனைவரையும் புனிதர்களாக்க வேண்டும்.

புனித பவுலடிகளார் உரோமையருக்கு எழுதியிருக்கும் திருமடலில் 3:9-18-இல் நாமெல்லாருமே பாவிகள்தான் என்கின்றார்.

நாம் பார்க்கக் கூடாததைப் பார்த்திருக்கின்றோம்.
மறு கேட்கக் கூடாததைக் கேட்டிருக்கின்றோம்.
குடிக்கக் கூடாததைக் குடித்திருக்கின்றோம்.
எண்ணக் கூடாததை எண்ணியிருக்கின்றோம்.
பேசக் கூடாததை பேசியிருக்கின்றோம்.
எப்படி எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படி அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கின்றவர்கள் நாம். நாம் அத்தனை பேரும் பாம்மைவிட மோசமான பாவத்தால் தீண்டப்பட்டவர்கள்! நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் நஞ்சு உண்டு.

இந்த நஞ்சு, பாவம் நமக்குள்ளிருந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலை, மனத்தை, உள்ளத்தைக் கொன்றுவிடும்.

நாம் சாகப் பிறந்தவர்கள் அல்ல, மாறாக நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி வாழப் பிறந்தவர்கள். ஆகவே மன்னிப்பின் மறு உருவமான இயேசுவை உற்றுப் பார்ப்போம்.

காலிலே முள் குத்திவிட்டால் அதை நமது கையால் எடுத்துவிடலாம். நம் உள்ளத்திலே பாவ முள் குத்திவிட்டால் அதை இயேசுவால் மட்டும்தான் எடுக்க முடியும்.

இந்த 21-ஆம் நூற்றாண்டில் புற்றீசல்களைப் போல, சோதோம் கொமோரா, நினிவே நகர்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் சிலுவையிலே தொங்கும் இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்போம். இயேசு இதோ சிலுவையிலிருந்து நம்மோடு பேசுகின்றார்:

பாவத்திற்கு உன் உடலுக்குள்ளோ, உள்ளத்திற்குள்ளோ, மனத்திற்குள்ளோ இடம் கொடுக்காதே! பாம்மைப் பாலூட்டி வளர்க்காதே! அது ஒரு நாள் உன்னைக் கொத்திக் கொன்றுவிடும். பாவம் பாம்பு போன்றது.

தீய எண்ணங்களிலிருந்தும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. உன் நம்பிக்கை நிறைந்த கண்களை என் பக்கம் திருப்பு. அப்போது உன் வாழ்வில் எல்லாம் வசந்தமாகும்.

நமக்காகத் தம்மையே சாவுக்குக் கையளித்தவர் இயேசு (முதல் வாசகம்). இரக்கமே உருவானவர் இயேசு (இரண்டாம் வாசகம்). ஆகவே இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து மன்னிப்புப் பெறுவோம். நமது மனிதம் என்னும் தோட்டத்திலே புனிதம் என்னும் மலர் மலரட்டும்.

மேலும் அறிவோம்:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை (குறள் : 434).

பொருள் : குற்றம் செய்வது பேரழிவைத் தரும் பகையாகும். எனவே குற்றம் எதுவும் தோன்றாமல், பொருளைப் பேணிக்காப்பது போன்று, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருப்பாடுகளின் பெரிய வெள்ளி

இன்று பெரிய வெள்ளி. மன்னுயிரை மீட்கத் தம் இன்னுயிரை ஈந்த கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் நாள், "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள் " (யோவா 19:37) என்ற மறைநூல் வாக்கிற்கேற்ப, இன்று சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவை உற்று நோக்குவோம். விண்ணையும் மண்ணையும் படைத்தவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவே தொங்குகிறார். ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு ஆதரவளித்த ஆண்டவர் அனாதையாகத் தொங்குகிறார். தலையிலே முள்முடி; உடலிலே கசை அடி; அங்கமெல்லாம் - காயங்கள்: குருதி படிந்த நெற்றி; குளமாய் நிற்கும் கண்கள்; குத்தித் திறக்கப்பட்ட விலா.

கல்வாரிக் காட்சியைக் கண்டால் கல்லும் கரைந்திடுமே; 
 கண்ணும் கலங்கிடுமே; 
 உள்ளம் உருகிடுமே; 
 இதயம் இளகிடுமே: 
 நெஞ்சம் நெகிழ்ந்திடுமே!

பெரிய வெள்ளி நமக்கு உணர்த்தும் உண்மை: ஒன்று, கிறிஸ்து நமக்காக, நமது பதில் - ஆளாகச் சிலுவைச் சாவை ஏற்றார். இரண்டு, கிறிஸ்து தமது சாவின் மூலம் கடவுள் மனிதருடைய துன்பத்தில் நேரடியாக, முழுமையாக, உள்ளிருந்து பங்கேற்கிறார்.

கிறிஸ்துவின் சாவு ஒரு பதில் - ஆளின் சாவு, நாம் சாகாமல் இருக்க அவர் நமக்காக, நமது இடத்தில் சாவை ஏற்றார். பாவத்திற்குக் கூலி சாவு (உரோ 6:23). தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன் (இச 21:23), கிறிஸ்து பாவமே அறியாதவர், பாவத்தின் விளைவை ஏற்று, சபிக்கப்பட்டவராக, நகர வாயிலுக்கு வெளியே (எபி 13:12) இறந்தார். அனைவருக்காகவும் ஒருவர் இறந்தார் எனபதை எண்ணும் போது, கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொள்கிறது (1 கொரி 5:14).

ஒரு சிறுவன் தன் அம்மாவின் முகத்தில் இருந்த பெரிய தழும்பைப் பார்த்து அவரை வெறுத்தான், ஆனால் அந்தத் தழும்பு எப்படி வந்தது? அவன் சிறு குழந்தையாகத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீடு தீப்பற்றிக் கொண்டது. அவன் அம்மா துணிச்சலுடன் தீ நடுவில் சென்று தூங்கிக்கொண்டிருந்த அவனை வெளியில் தூக்கிக்கொண்டு ஓடிய போது, அவரது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது; காயம் ஆறியபின்னும், முகத்தில் தழும்பு மாறவில்லை. இதை அம்மா அவனிடம் எடுத்துச் சொன்னபோது, அவன் அம்மாவை அதிகமாக அன்பு செய்ய ஆரம்பித்தான்.

துன்புறும் இறை ஊழியனாகிய கிறிஸ்துவைப்பற்றி இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "நாம் பார்ப்பதற்கேற்ப அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்கத் தோற்றமும் அவருக்கில்லை" (எசா 53:2), ஏன்? ஏனென்றால், "அவர் நம் குற்றங்களுக்காக காயப்பட்டார் ... அவர்தம் காயங்களால் குணமடைந்தோம்" (எசா 53:5).

மேலே கூறப்பட்ட நிகழ்வில், எவ்வாறு தன் குழந்தையைத் தீயிலிருந்து காப்பாற்ற அந்த அம்மா தீக்காயங்களுக்கு இரையாகி, தம் முகத்தில் மாறாத் தழும்பைச் சுமந்தாரோ, அவ்வாறே கிறிஸ்துவும் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கக் காயப்பட்டார்; அழகை இழந்தார்; அருவருப்பான தோற்றத்தை அடைந்தார். அவர் உயிர்த்த பின்பும் அவருடைய கைகளிலும் கால்களிலும் விலாவிலும் தழும்புகள் இருந்ததை நாம் மறக்க முடியாது. எனவே நமக்காக காயப்பட்ட கிறிஸ்துவை நாம் எவ்வளவோ அதிகமாக அன்பு செய்ய வேண்டும்.

திருத்தூதர் பவுலுடன் இணைந்து நாமும், "கிறிஸ்து என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காகத் தம்மை ஒப்புவித்தார்" (கலா 2:20) என்று நன்றிப் பெருக்குடன் கூறுவேண்டும். “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணரவேண்டும்" (எபே 3:18-19) "கிறிஸ்துவினுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?" (உரோ 8:35) என்று சூளுரைக்க வேண்டும்.

இரண்டாவது, கிறிஸ்துவின் சாவு கடவுளின் சாவு, கடவுள் கிறிஸ்துவில் இறந்ததன் மூலம், அவர் மனிதருடைய துன்பத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கெண்டார்; கடவுள் மனிதருடைய துன்பத்தில் உள்ளிருந்து பங்கேற்கிறார் என்பதையும் பெரிய வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது ஒரு சித்திரவதை முகாமில் மூன்று யூதர்களைத் தூக்கிலிட்டனர். அவர்களில் இருவர் வயதானவர்கள் : உடனே இறந்துவிட்டனர். ஆனால் மூன்றாவது நபர் ஓர் இளைஞர்; அவர் அரைமணி நேரத்திற்கு மேல் வேதனையால் புழுவாகத் துடித்துக் கொண்டிருந்தார். இந்தப் பரிதாபமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் தம் அருகில் இருந்தவரைப் பார்த்து, "எங்கே கடவுள்? கடவுள் எங்கே?" என்று கேட்டார். அதற்கு மற்றவர், "அவர் தான் அந்தத் தூக்குக் கயிற்றில் தொங்குகிறார்" என்றார். துன்பம் என்ற புரியாத புதிருக்கு இப்பதில் ஒன்றுதான் சரியான பதில், வேறு எந்தப் பதிலும் கடவுளை இரக்கமற்ற கொடுங்கோலனாகவே காட்டும்.

கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, "தொலைவிலிருந்து" பார்த்துக் கொண்டிருந்தார்கள் (லூக் 23:49). கடவுள் மனிதருடைய துன்பத்தை விண்ணிலிருந்து வேடிக்கை பார்ப்பவர் அல்ல. மாறாக, அவரே மனிதருடைய துன்பத்தில் தன்னை ஒரு சிலர் பெரிய வெள்ளி இணைத்துக் கொண்டு துன்புறுகிறார். மனிதர் சிந்தும் கண்ணீர் கடவுளுடைய கண்ணீர் மனிதரின் சாவு கடவுளின் சாவு, கிறிஸ்துவே வறியவர்களில், பிணியாளர்களில், நசுக்கப் பட்டவர்களில் துன்புறுகிறார். இது உண்மை. இல்லையென்றால், “நான் பசியாய் இருந்தேன் உணவு கொடுத்தீர்கள்: தாகமாய் இருந்தேன். என் தாகத்தைத் தணித்தீர்கள் (மத் 25:35-36) என்று கிறிஸ்து கூறியதற்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.

எனவே மனிதரின் துன்பங்கள் அனைத்தும் கடவுளின் துன்பங்களே. ஏழைகளை நிந்திப்பது மனித நேயமற்ற செயல் மட்டுமல்ல, அது தெய்வ நிந்தனையாகும். கிறிஸ்துவே நம்முடன் துன்புறுகிறார். நமது சிலுவையை நம்மோடு இணைந்து சுமக்கிறார் என்பதை அறிந்து மன உறுதி கொள்வோம். அதே நேரத்தில் துன்புறுவோரிடம் கிறிஸ்துவை இனம் கண்டு அவர் துயர் துடைக்க ஆவன செய்வோம். இவ்வுலகில் ஒரே ஒரு மனிதர் உயிரோடு இருக்கும்வரை, அவர் வழியாகவே கிறிஸ்துவின் சிலுவைப்பாதை தொடரும்!

கீழ்ப்படியாமையால் நாம் இழந்ததைவிட, கிறிஸ்துவின் கீழ்ப்படிதலால் நாம் பெற்றுக்கொண்டது அதிகம். “பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது" (உரோ 5:20). எனவே நாம் மனமுடைந்து போகாமல் மனமகிழ்வோம்.

"ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக் கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது. இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறு பெற்றதால் பாக்கியமான குற்றமே" - பாஸ்கா புகழுரை.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பாவத்துக்கான கூலி மரணம்

மனித சமத்துவத்தை நிலைநாட்டத் துடித்தவர் ஆபிரகாம் லிங்கன். அடிமை வணிகத்தை ஒழிக்க அரும்பாடுபட்டவர் அவர். இனவெறியன் ஒருவனின் துப்பாக்கிக் குண்டு அவரது உடலைத் துளைத்தது, குருதி கொட்டத் தரையில் சரித்தது.

1865 ஏப்ரலில் ஒருநாள். ஆபிரகாம் லிங்கனின் அந்தச் சிதைந்த சடலம் மக்கள் அஞ்சலிக்காக ஓஹையோ மாநிலத்தில் கிளிவ்லாந்து என்ற நகரில் வைக்கப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் மக்கள் திரள். அவர்களுக்கிடையில் இடுப்பில் தன் மகனோடு எழைக் கருப்பினப் பெண் ஒருத்தியும் நின்று கொண்டிருந்தாள். சடலத்துக்கு அருகில் வந்ததும், அவள் தன் மகனைத் தோளுக்குமேல் தூக்கிப்பிடித்து "மகனே, பார், நன்றாக உற்றுப்பார். இந்த மனிதர் உனக்காகவும் எனக்காகவும் இறந்தார். நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இறந்தார்".

சிலுவையில் தொங்கும் இயேசுவைச் சுட்டிக்காட்டி இதே வார்த்தைகளை நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடியும். இன்று
- நம் குற்றங்களுக்காக இயேசு காயப்பட்ட நாள்.
- நம் தீச்செயல்களுக்காக அவர் நொறுக்கப்பட்ட நாள்.
- அவர்தம் காயங்களால் நாம் குணமடைந்த நாள்.

ஒருவகையில் மனித வரலாற்றில் பெரிய வெள்ளி ஒரு கருப்பு நாள்தான். ஆனால் இயேசுவின் தியாகப்பலி சிலுவையை பெருமைக்கு உரிய சின்னமாக்கிவிட்டது. எனவே இன்றைய விழா வீழ்ச்சிக்கு அல்ல, வெற்றிக்கு! சாவுக்கு அல்ல வாழ்வுக்கு! துயரத்துக்கல்ல, மகிமைக்கு! இயேசு சிலுவையில் இறக்கவில்லை உயர்த்தப்பட்டார் என்பதுதானே யோவானின் பார்வை! அதனால்தான் “நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன்" (கலா.6:14) என்றார் திருத்தூதர் பவுல்.

ஒரு தாய் தன் மகனைப் புற்றுநோயிலிருந்து குணமாக்க இலட்சக் கணக்கில் செலவழித்தும் மகன் இறந்துவிட்டான். அந்தத்தாய் "கடவுளே என் மகன் இறந்தபோது நீர் எங்கே இருந்தீர்?" என்று முறையிட்டாள். அதற்குக் கடவுள் “என் மகன் சிலுவையில் இறக்கும் போது எங்கே இருந்தேனோ, அங்கேதான் உன் மகன் இறக்கும் போதும் இருந்தேன்" என்றார்.

தன் மகனையே துன்பத்துக்குக் கையளித்த கடவுள் நம்மையும் துன்புற அனுமதிப்பார்; ஆனால் தன் மகனை மாட்சிப்படுத்தியது போல் நம்மையும் மாட்சிப்புடுத்துவார்!

இயேசுவின் சிலுவை மரணம், தந்தையான கடவுளின் நித்திய திட்டத்தால் நிகழ்ந்தது. தந்தையே அந்தச் சிலுவையைத் தன் மகனுக்கு ஏற்பாடு செய்திருந்தார். எப்பொழுதாவது இயேசு தனக்காக, தன் நலனுக்காகத் தந்தையைப் பார்த்து மன்றாடியிருப்பாரா? ஒருமுறை - ஒரேயொருமுறைதான் தனக்காக வேண்டினார். “தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்" (மார்க்.14;36), அந்த ஒரே மன்றாட்டும் மறுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலையில் இயேசு வலுப்படுத்தப்பட்டார். (லூக்.22:43)

“பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு" (ரோமை 6:23) அப்படி யென்றால் மரணத்தை விலையாகக் கொடுத்துத்தான் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். “எதிலிருந்து சாவு தோன்றியதோ அதிலிருந்தே புத்துயிர் எழவும், மரத்தினால் வெற்றி கண்டவன் மரத்தினாலேயே தோல்வி காணவும் வேண்டுமென்று இருந்தது”. விலக்கப்பட்ட மரத்தின் மூலம் சாவு இவ்வுலகில் நுழைந்தது. அச்சாவினைக் கடவுள் சிலுவை மரத்தின் மூலமே அழித்தார். எனவே நன்றியோடும் மகிழ்ச்சியோடும் பாடுகிறோம்: “திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கினார் உலகின் மீட்பர். வாருங்கள் ஆராதிப்போம்”

இயேசுவைக் கொன்றது யார்? இந்தக் கேள்விக்கு வயது இரண்டாயிரத்துக்கும் மேலே. சூழ்ச்சியால் பரிசேயரா? துரோகத்தால் யூதாசா? கோழைத்தனத்தால் பிலாத்துவா? செயல்பட்டால் படை வீரரா? நாம் அனைவருமே கிறிஸ்துவின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். வேறு வார்த்தைகளில் உலகில் வாழ்ந்த, வாழுகின்ற, வாழப் போகின்ற ஒவ்வொரு மனிதனின் பாவத்திற்காகவும் இயேசு பலியாக இறந்தார். அவனது மீட்புக்காக இரத்தத்தை, உயிரை விலையாகக் கொடுத்தார்.

அதனால்தான் எனக்காக இரக்கப்படவோ, வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அழுதுபுலம்பவோ வேண்டாம் என்கிறார் இயேசு.

இயேசுவின் பாடுகளும் மரணமும் பரிதாபப்படுவதற்கல்ல, மாறாக நம்மைப் பக்குவப்படுத்துவதற்கே. எத்தனை பேரை அப்படிப் பக்குவப்படுத்திப் புனிதர்களாக்கி இருக்கிறது! எடுத்துக்காட்டு : புனித மாக்சிமில்லியன் மரிய கோல்பே, நெல்சன் மன்டேலா. இயேசுவின் பாடுகளில் வெளிப்படும் பண்புகள் நம்மைப் பக்குவப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு மன்னிப்பு, “தந்தையே இவர்களை மன்னியும்...' (லூக்.23:34)

இன்றைய வழிபாட்டின் மையம் திருச்சிலுவை ஆராதனை. இன்று நாம் கடவுளுக்கு அளிக்க வேண்டிய காணிக்கை மனத்துயருடன் கூடிய கண்ணீர். நொறுங்கிய உள்ளம். (தி.பா.51:17)

ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன். பாவத்தால் உம்மைக் கொன்றேனே, ஆயனே என்னை மன்னியும். திருச்சிலுவையை நோக்கி தூய அகுசுதீனோடு சேர்ந்து செபிப்போம். “ஆண்டவரே, உம் திருக்காயங்களை என் நெஞ்சில் பதியச் செய்யும். துன்பம் நம்மைப் பாதிக்கிறது. அன்பும் நம்மைப் பாதிக்கிறது, இரண்டையும் இயேசுவிடம் கற்றுக் கொள்ளும் போது வாழ்வு அர்த்தம் பெறுகிறது."

இயேசு இறந்தார் என்று ஏற்றுக் கொள்வது வரலாறு இயேசு எனக்காக இறந்தார் என்று உணர்ந்து ஏற்பது மீட்பு அந்த மீட்பும் விடுதலையும் புனித வெள்ளி தரும் பரிசு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சாவுக்குக் கையளித்த இயேசு!

தன்னையே தந்த மாணவன்:

2001, ஜனவரி மாதத்தில் நடந்த நிகழ்வு இது.

டோக்கியோவில் உள்ள இரயில் நிலையத்தில், கொரியாவிலிருந்து ஜப்பானில் தங்கி, கல்லூரிப் படிப்பு படித்துக்கொண்டிருந்த லீ சு ஹியூன் (Lee Su Hyun) என்ற கல்லூரி மாணவன் இரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அப்போது இரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்த செய்கோ சகமோட்டோ (Seiko Sakamoto என்ற பெரியவர் தவறித் தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். எதிரில் இரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது.

அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் தண்டவாளத்தில் தவறிவிழுந்த பெரியவரைக் காப்பாற்றும் பொருட்டுக் கீழே இறங்கினான். ஆனால், வேகமாக வந்த இரயில் இருவர்மீதும் மோத, அவர்கள் இருவரும் உடல் சிதறி, அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள்.

இரண்டாம் உலகப் போரிலிருந்தே ஜப்பானுக்கும் கொரியாவிற்கும் நல்லதோர் உறவு கிடையாது. காரணம், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் கொரியாவின்மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையில் கொரியா நாட்டு மாணவன் தன்னுடைய நாட்டின்மீது தாக்குதல் நடத்தியிருந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெரியவரைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னுயிரையே தந்தது, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படக் காரணமாக அமைந்தது.

இயேசுவும் சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்கினார். ஆம், இன்று நாம் ஆண்டவருடைய திருப்பாடுகளை நினைவுகூர்கின்றோம். சிலுவையில் இயேசு தன்னையே பலியாகத் தந்தது நமக்கு என்ன செய்தியை உணர்த்துகின்றது என்று சிந்திப்போம்.

நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்:

இவ்வுலகில் பிறந்த மனிதர் அனைவரும் பொய்யர், பாவிகள் (உரோ 3:4), பாவிகள் தண்டிக்கப்படுவதும் தண்டனை பெறுவதும் முறை. ஆனால், இயேசு இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிப்பதுபோல், பாவம் செய்யாதவர். பாவம் செய்யாத இயேசு துரோகிகளுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் மிகக் கொடிய தண்டனையான சிலுவைச் சாவைப் பெற்றார் எனில், அது நமக்காகவும், நம்மீது கொண்ட பேரன்பிற்காகவும்தான்.

இயேசு அடைந்த துன்பத்தைப் போல் வேறு யாரும் அடைந்திருக்க முடியாது. அவர் காறி உமிழப்பட்டார்; கன்னத்தில் அறையப்பட்டார்; அவமானப்படுத்தப்பட்டார்; ஆடையில்லாமல் விடப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், பார்ப்பதற்கேற்ற அமைப்போ, விரும்பத்தக்க தோற்றமோ இயேசுவுக்கு இல்லை. இவ்வாறு பாவமே செய்யாத இயேசு, நமது தீச்செயல்களைத் தாமே சுமந்து கொண்டார். ஆகவே, சிலுவையை நாம் உற்றுப் பார்க்கின்றபோதெல்லாம் இயேசுவின் பேரன்பு நமது நினைவுக்கு வந்து போகவேண்டும்.

துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்:

இயேசு நினைத்திருந்தால், கெத்சமனித் தோட்டத்தில் அவர் வேண்டிக் கொண்டதுபோல், சிலுவைச் சாவு என்ற துன்பக் கிண்ணம் வேண்டாம் என்று விலகி இருந்திருக்கலாம்; ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, அவர் சிலுவைச் சாவு என்ற துன்பக் கிண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.

இயேசு துன்பக் கிண்ணத்தைத் துணிவோடு ஏற்றுக்கொண்டதன் மூலம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுத் தருகின்றார். அதுதான் கீழ்ப்படிதல் ஆகும். இயேசு இறைமகன்; அவர் கடவுள் வடிவில் விளங்கியவர். அப்படியிருந்தும் பாவத்திற்கு அடிமையாய் இருந்த இவ்வுலகை மீட்க வேண்டும் என்ற தந்தையின் திருவுலத்திற்கு அவர் கீழ்ப்படிந்தார். இதன்மூலம் கடவுளின் திருவுளம் அவர் கையில் சிறப்புற்றது.

திருப்பாடல் 40:8 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “என் கடவுளே உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் அடைந்தார். இதன்மூலம் அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார். இயேசு கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் எனில், அவர் வழியில் நடக்கின்ற நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்படி நாம் கடவுளுக்கும் – இயேசுவுக்கும் – கீழ்ப்படிந்து நடக்கின்றபோது மீட்படைவோம். இதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இறுதியில் மிக அழகாக வாசிக்கின்றோம். ஆகவே, இயேசு தந்தைக் கடவுளின் திருவுலத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தது போன்று நாம் ஒவ்வொருவரும் கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.

நமக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்வோம்:

இவ்வுலகில் தன்னுடைய குடும்பம், தன்னுடைய உறவுகள் என்று தன்னலச் சேற்றில் சிக்கித் தவிப்போர் பலர் உண்டு. இவர்களால் இந்த மானுடத்திற்கு எந்தவொரு பெருமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் கவிக்கோ அப்துல் இரகுமான் சொல்வது போல் பிச்சைக்காரர்கள்! ஏனெனில், பிச்சைக்காரர்கள்தான் மற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு, பதிலுக்கு எதையும் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். கடவுளிடமிருந்து அவரது ஒரே மகன் இயேசுவின் பாடுகளின் வழியாக எல்லா ஆசிகளையும் பெற்றுக்கொண்டு, அதை நாம் மற்றவர்களுக்குத் திருப்பித் தராவிட்டால் ஒவ்வொருவரும் பிச்சைக்காரர்கள்தான்.

அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். இது குறிப்புப் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில், “வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்த்தெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்” (2 கொரி 5:15) என்று கூறுகின்றார். ஆதலால், கிறிஸ்துவின் பாடுகளினாலும், அவரது உயிர்ப்பினாலும் ஆசிகளைப் பெற்றுக்கொண்ட நாம் அவற்றை மற்றவருக்கு வழங்கவேண்டும்.

தன்னலத்தோடு வாழாமல், இயேசுவைப் போன்று பிறர் நலத்தோடு வாழும்போது நமக்குத் துன்பங்கள் வருமே! அப்போது நாம் என்ன செய்வது என நாம் நினைக்கலாம். பிறர் நலத்தோடு நாம் வாழும்போது துன்பங்கள் வரலாம்; அவை நிரந்தரமல்ல. இதையே பவுல், “இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை” (உரோ 8:31) என்று கூறுகின்றார்.

எனவே, இயேசுவின் பாடுகளையும், அவரது சிலுவைச் சாவையும் நினைவுகூரும் நாம் அவரது பேரன்பை எண்ணிப் பார்த்து, அவரது அன்பிற்குச் சாட்சிகளாக வாழ, கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து நடப்போம். கடவுளின் திருவுளம் என்பது தன்னலத்தைத் துறந்து, பிறர் நலத்தை நாடுவது. இத்தகையதொரு வாழ்க்கை வாழ்ந்து, கடவுளின் திருவுளம் நம் கையில் சிறப்புறச் செய்வோம்.

சிந்தனைக்கு:

‘நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை’ (எபி 13:16) என்பார் எபிரேயர் திருமுகத்த்தின் ஆசிரியர். எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்வால் பிறருக்கு நன்மைகள் செய்து, இறையன்புக்குச் சாட்சிகளாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு