மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு
இரண்டாம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணி 34அ,37-43 |கொலோசையர் 3:1-4 | யோவான் 20:1-9

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
நம்‌ ஆண்டவர்‌ இயேசு உயிர்த்தார்‌ அல்லேலூயா!

ஆம்‌! சாகக்‌ கூடாதவர்‌ செத்தார்‌. எனவே உயிர்த்தார்‌. சாகக்‌ . கூடியவன்‌ செத்தான்‌. இன்னும்‌ உயிர்க்கவில்லை. சாவுக்கு ஓர்‌ அர்த்தம்‌ கொடுக்கவே இயேசு மரணத்தை ஏற்றுக்‌ கொண்டார்‌. சாவு ஒரு முடிவல்ல. அது வாழ்வின்‌ தொடக்கம்‌, முழுமை என்பதை அறிந்த இயேசு மரணத்தை ஏற்றுக்கொண்டார்‌. இன்பத்தைக்‌ கண்டு இறுமாந்து போன சீடர்கள்‌ துன்பத்தைக்‌ கண்டு ஓடினார்கள்‌ (மத்‌. 26:66-75). பயந்து கதவுகளை அடைத்துக்‌ கொண்ட சீடர்கள்‌ மத்தியில்‌ புத்துயிர்‌ பெற்றவராக இயேசு தோன்றினார்‌. அதன்‌ பின்புதான்‌ கோழைகளாக இருந்தவர்கள்‌ தைரியசாலிகளாக மாறினார்கள்‌. பயந்து நடுங்கியவர்கள்‌ அறையை விட்டு வெளியே வந்தார்கள்‌. உயிர்த்த இயேசுவைப்‌ பார்த்தபோது தங்களது பழைய பாவ வாழ்வை புதைத்துவிட்டு புதிய இதயம்‌ பெற்றவர்களாக வாழப்‌ புறப்பட்டார்கள்‌!

எனவேதான்‌ துணிவோடு புனித பேதுரு சொன்னார்‌, வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள்‌ கொன்றுவிட்டீர்கள்‌. ஆனால்‌ கடவுள்‌, இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்‌. இதற்கு நாங்களே சாட்சிகள்‌ (திப. 3:15-16). அடுத்து என்ன ஆனாலும்‌ நாங்கள்‌ கண்டதையும்‌, கேட்டதையும்‌ எடுத்துரைக்காமல்‌ இருக்க எங்களால்‌ முடியாது (திப. 4:20) என்றும்‌ வீரத்தோடு சவால்‌ விட்டவர்தான்‌ இந்த பேதுரு.

ஆம்‌! இயேசுவின்‌ சிலுவைச்சாவு அவருக்கு இழப்பே அல்ல! மாறாக புதிய விடியலுக்காக அடித்தளமானது. சாவின்‌ கொடுக்கையே முறித்துவிட்டார்‌ இயேசு. எனவேதான்‌ பவுல்‌ அடிகளார்‌, “சாவே உன்‌ வெற்றி எங்கே! சாவே உன்‌ கொடுக்கு எங்கே? சாவு முற்றிலும்‌ வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது” (1 கொரி. 15:55) என்று வீர முழக்கமிடுகிறார்‌.

நிகழ்ச்சி குமுதத்தில்‌ ஒரு கவிதை, என்‌ மகன்‌ சாகவில்லை என்று தாய்‌ மரகதம்மாள்‌ கூறுவதாக இருந்தது. ஒரு பேருந்து பள்ளத்திலே ' விழுந்து 34 பேரைக்‌ கொன்றது. அதில்‌ மரகதம்‌ என்பவளின்‌ ஒரே மகன்‌ குமரனும்‌ ஒருவன்‌. இறந்த குடும்பத்திற்கு தலா ரூபாய்‌ 50,000/- நஷ்ட ஈடு வழங்கும்‌ விழா நடந்தது. ஆட்சியர்‌ காசோலையைக்‌ கொடுக்க மரகதம்மாளைப்‌ பெயர்‌ சொல்லி அழைத்தபோது, எனக்குப்‌ பணம்‌ வேண்டாம்‌. என்‌ மகன்‌ குமரன்‌ சாகவில்லை என்றாள்‌. எல்லோருக்கும்‌ புரியவில்லை! ஒருவேளை மகனை இழந்த மனக்கலக்கத்தில்‌ அறிவிழந்து உளறுகிறாளோ என்று எல்லோரும்‌ நினைத்தனர்‌. என்னம்மா! இறந்த இவன்தான்‌ என்‌ மகன்‌ என்று அடையாளம்‌ காட்டினீர்களே என்று சொன்ன போது, மரகதம்மாள்‌ பின்வருமாறு விவரிக்கிறாள்‌. “என்‌ மகன்‌ குமரன்‌ பலருக்குப்‌ பல தடவை இரத்ததானம்‌ செய்திருக்கிறான்‌. அது பலருடைய உடலில்‌ ஓடிக்‌ கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு எந்த பிரதி உபகாரமும்‌ எதிர்பாராமல்‌ தன்‌ ஒரு சிறுநீரகத்தை தானம்‌ செய்து உயிரைக்‌ காப்பாற்றினான்‌. விபத்தில்‌ இறந்த என்‌ மகனின்‌ கண்களை எடுத்து ஒரு பெண்ணுக்கும்‌, ஒரு சிறுவனுக்கும்‌ பொருத்தியுள்ளார்கள்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ உயிரோடு இந்தக்‌ கூட்டத்தில்‌ உட்கார்ந்திருக்கிறார்கள்‌. இவர்களில்‌ என்‌ மகன்‌ வாழ்கிறான்‌!” என்றார்‌ அந்த அம்மையார்‌. மரகதம்‌ மேடையை விட்டு கீழே இறங்கியதும்‌ அனைவரும்‌ கண்ணீர்‌ வடித்து அந்த அம்மாவின்‌ பாதத்தைத்‌ தொட்டு வணங்கினார்கள்‌. ஆம்‌! வரலாற்றில்‌ பிறருக்காக உயிர்‌ கொடுத்தவர்கள்‌ உயிர்த்துக்‌ கொண்டும்‌, உயிர்‌ கொடுத்துக்‌ கொண்டும்‌ இருக்கிறார்கள்‌ என்பதற்குத்‌ தகுந்த சான்று இது!++ தனக்காக வாழ்பவன்‌ இறப்பான்‌. அவன்‌ கல்லறையிலே அடங்கி ஒடுங்கிவிடுவான்‌. ஆனால்‌ பிறருக்காக இறப்பவன்‌ வாழ்வான்‌. மனிதர்களின்‌ உள்ளறைகளிலே வாழ்வாக உயிர்ப்பான்‌.

பகுதி - 2
சாவைச்‌ சாகடித்தார்‌ இயேசு! அதன்‌ விளைவுதான்‌ வெறுமை யான கல்லறை. கல்லறை வெறுமையாகி சாவுக்கு முற்றுப்‌ புள்ளி வைத்துவிட்டது. அதிகாலையில்‌ இயேசுவின்‌ உடலைக்‌ காணச்‌ சென்ற பெண்கள்‌, வெறுமையான கல்லறையைத்தான்‌ கண்டார்கள்‌. கலக்கமும்‌, குழப்பமும்‌ அடைந்த அந்தப்‌ பெண்களை நோக்கி, உயிரோடு இருப்பவரைக்‌ கல்லறையில்‌ தேடுவானேன்‌. அவர்‌ இங்கு இல்லை. அவர்‌ உயிருடன்‌ எழுப்பப்பட்டார்‌ (லூக்‌. 24:5) என்று வானதூதர்கள்‌ அறிவித்தார்கள்‌.

வெறுமையான இயேசுவின்‌ கல்லறை நமக்கு மூன்று சிந்தனைகளைத்‌ தருகிறது:

முதலாவதாக, இயேசு நம்முடன்‌ உயிரோடு இருக்கிறார்‌. இயேசுவின்‌ உயிர்ப்பு நமக்கும்‌ உயிர்ப்பூ உண்டு என்ற நம்பிக்கையைத்‌ தருகிறது. ஏழ்மை, அநீதி, தீவிரவாதம்‌ போன்ற தீய சக்திகளை அழித்து, நீதி, உண்மை, அன்பு, அமைதியில்‌ வாழ, வளர, வழிகாட்ட அழைப்பு விடுக்கிறது.

இரண்டாவதாக, நாமும்‌ நம்மை வெறுமையாக்க வேண்டும்‌ என்ற உண்மையை உணர்த்துகிறது. இதனால்‌ உலகம்‌, அதில்‌ உள்ள அனைத்தும்‌ நிலையற்றவை, அழிவுக்குரியவை என்பதையும்‌ பணம்‌, பதவி, பொறாமை, தற்பெருமை, ஆசை இவைகளுக்குச்‌ சாவு மணி அடிக்க வேண்டும்‌ என்பதையும்‌ உணர்த்துகிறது.

மூன்றாவதாக, வெறுமையான கல்லறை நாம்‌ உறுதியுடன்‌,

தைரியமாக உயிர்த்த இயேசுவுக்குச்‌ சாட்சிகளாக வாழ வேண்டும்‌ என்பதை உணர்த்துகிறது. உயிர்த்த ஆண்டவர்‌ இயேசு சீடர்களை நோக்கி, உங்களுக்குச்‌ சமாதானம்‌. அஞ்ச வேண்டாம்‌ என்றுதான்‌ உரைத்தார்‌. கோழைகளாக அல்ல. மாறாக புனித பேதுருவுடன்‌ நாமும்‌ இணைந்து இயேசு உயிர்த்துவிட்டார்‌, அவருக்கு நாங்களே சாட்சிகள்‌ (தி.ப. 5:32) என்று சாட்சிய வாழ்வு வாழ இந்த வெறுமையான கல்லறை அழைப்பு விடுக்கிறது.

இயேசு எங்கே உயிர்‌ வாழ்கிறார்‌?

மனித உறவுகளில்‌, மன்னித்து சகோதர வாஞ்சையோடு வாழும்போது அங்கே இயேசு உயிர்‌ வாழ்கிறார்‌.

ஆதிக்‌ கிறிஸ்தவர்களைப்போல, பகிர்ந்து வாழும்‌ இடங்களில்‌ இயேசு உயிர்‌ வாழ்கிறார்‌. சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு நம்மால்‌ இயன்ற உதவியைச்‌ செய்யும்போது இயேசு அங்கே உயிர்‌ வாழ்கிறார்‌.

விசுவாசம்‌ கொண்ட திருத்தூதர்களைப்போல நாமும்‌ “விசுவாச வாழ்வு வாழும்போது அங்கே இயேசு உயிர்‌ வாழ்கிறார்‌.

அநீதியை ஒழித்து, நீதியை நிலைநாட்டும்போது அங்கே இயேசு உயிர்‌ வாழ்கிறார்‌. இறக்காத வரை உயிர்ப்பு இல்லை. இன்னல்களைச்‌ சந்திக்காத வரை இம௰ங்களைத்‌ தொட முடியாது. சறுக்கி விழாமல்‌ சாதிக்க முடியாது. ஏனெனில்‌ மடியும்‌ விதைதான்‌ மரமாகும்‌, உடையும்‌ கற்கள்தான்‌ சிற்பமாக முடியும்‌. உதிரும்‌ இலைதான்‌ உரமாகும்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உயிர்க்க வேண்டிய உணர்வுகள்

இது ஒரு போர் வீரனின் வாழ்க்கையிலே நடந்த உருக்கமான நிகழ்வு! அவன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன். போர்க்களத்திலே காயப்பட்டான். அவன் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் எழுதப்படப் போகும் நேரம். மரணம் அவனை அழைத்தது. பயங்கரக் காயம். ஊர்ந்து, ஊர்ந்து அவனுடைய கூடாரத்தை அடைந்துவிட்டான். முகம் குப்புறக் கிடந்தவன், தட்டுத்தடுமாறி அவன் பொன்னென போற்றிய விவிலியத்தை எடுத்தான். இரத்தக்கறைப் படிந்த விரல்களால் விவிலியத்தின் பக்கங்களைப் புரட்டினான். அவனுடைய கண்கள் யோவான் எழுதிய நற்செய்தியிலுள்ள பதினோராம் இயலைத் தேடின. அவன் கண்கள் அந்த இயலைக் கண்டுகொண்டன. அவனுடைய இரத்தம் தோய்ந்த விரல் அந்த இயலின் இருபத்தைந்தாவது இறைவாக்கியத்தின்மீது பட்டது. இதோ அந்த அற்புத இறைவாக்கியம்: "'இயேசு அவரிடம், உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்' என்றார்.” இயேசுவின் இணையில்லா வாக்குறுதியை இதயத்தில் ஏந்தியவனாய் அந்தப் போர்வீரன் கல்லறைக்குள் சென்றான்.

நிச்சயமாக அமைதி நிறைந்த மனத்தோடு அவன் இறந்திருப்பான். மரண நேரத்தில் அவன் அழுது புலம்பவில்லை . ஆண்டவனைச் சபிக்கவில்லை. மாறாக இயேசு என்னை உயிர்ப்பிப்பார் என்ற ஆழமான, அழியாத, மாறாத, மங்காத நம்பிக்கை நிறைந்த கடைசி மூச்சோடு அவன் இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்திருப்பான்.

நாம் உயிர்ப்போமா? உயிர்க்க மாட்டோமா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லவே இன்று இயேசு நம்முன் உயிர்த்து நிற்கின்றார். செங்கடலை இரண்டாகப் பிளந்து மரணத்திலிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றிய இறைவன் (விப 14:15-15:1) இன்று கல்லறையைப் பிளந்து உயிர்த்த இயேசு கிறிஸ்துவாய் நம்முன்னே காட்சி அளிக்கின்றார்.
இன்று இவர்மீது நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் வாழ்வு உண்டு, உயிர் உண்டு, உயிர்ப்பு உண்டு (உரோ 6:3,7).

இன்று நம்மைச் சுற்றி எத்தனையோ கல்லறைகள்! நாம் உயிரோடு இருக்கும்போதே நமக்குக் கல்லறை கட்டப்படுகின்றது ! கல்லறையை உடைக்க நமக்குச் சக்தியும் இல்லை; நமக்காகக் கல்லறையை உடைக்க நம் அருகில் ஆள்களுமில்லை!

இதோ நம் கண்முன்னேயுள்ள புதிய சிந்தனைகள் நமக்குப் புத்துயிர் ஊட்டட்டும்.
மரணம் வந்தாலும் நாம் மரிக்க மாட்டோம்! எப்போது?

நம்பிக்கை என்னும் நங்கூரத்தோடு நம் வாழ்க்கைக் கப்பல் கட்டப்பட்டிருக்கும்போது! இன்று நாம் நமது உயிருக்குள் நம்பிக்கையை ஊற்றிவைப்போம்! நம்பிக்கையில் உயிரை ஊற வைப்போம்! சாவை, சாவு தீர்மானித்துக்கொள்ளட்டும்! வாழ்வை - மறுவாழ்வை - உயிர்ப்பை நாம் தீர்மானித்துக்கொள்வோம்! சுடும்வரை நெருப்பு ! சுற்றும் வரை பூமி! நம்பும் வரை வாழ்வு!

மேலும் அறிவோம் :

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார் (குறள் : 989).

பொருள் : சால்பு ஆகிய நிறை பண்புக்குக் கடல் போன்று திகழும் சான்றோர் இறுதிக் காலத்தில் இயற்கையே நிலை குலைந்தாலும் தாங்கள் தங்கள் நிலையிலிருந்து மாறாதிருப்பர்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞர் ஒரு புதிய சமயத்தை நிறுவ விரும்பி, அதைக்குறித்து ஒரு பெரியவரிடம் ஆலோசனை கேட்டபோது, அப்பெரியவர் அந்த இளைஞரிடம், "நீ நிறுவவிருக்கும் புதிய சமயம் நீ இறந்த பிறகும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், நீ ஒரு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்டுச் சாக வேண்டும்; மறுநாள் சனிக்கிழமை கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டு, மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழ வேண்டும்" என்றார், அப்பெரியவர் சொன்னதில் பொதிந்திருந்த உண்மையை உணர்ந்த அந்த இளைஞர் தனது என்னத்தைக் கைவிட்டு விட்டார்.

கிறிஸ்துவ சமயம் கடந்த இருபது நூற்றாண்டுகள் எத்தனையோ சவால்களையும் வேதகலாபனைகளையும் கடந்து வந்து, இன்றும் உயிர்த் துடிப்புடன் இருப்பதற்குக் காரணம் அது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடித்தளமாகக் கொண்டுள்ளது. நற்செய்தியானது கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிட, கிறிஸ்துவின் உயிர்ப்புத் தான் நற்செய்திக்கே விளக்கமளிக்கிறது. ஏனெனில் புனித பவுல் சுட்டிக் காட்டியுள்ளது போல், கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால் நற்செய்தியும் பயனற்றது, நமது நம்பிக்கையும் பயனற்றது (1கொரி 15:14).

கிறிஸ்து தமது அதிகாரத்திற்கும் போதனைக்கும் தமது உயிர்த்தெழுதலைத்தான் சான்றாக முன்வைத்தார். “இக்கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் இதைக்கட்டி எழுப்புவேன் (யோவா 2:19). அவர் குறிப்பிட்ட கோவில் அவர் உடல் என்பதை அவரின் சீடர்கள். அவர் உயிர்த்தபின் நினைவு கூர்ந்து, அவரில் நம்பிக்கை கொண்டனர் (யோவா 2:21-22).

திருத்தூதர்களுடைய போதனையின் மையக்கருவாக விளங்கியது கிறிஸ்துவின் உயிர்ப்பாகும், வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார், இதற்கு நாங்கள் சாட்சிகள்" (திப 3:15-16).

கடைக்குச் சென்ற ஒருவர், அக்கடையிலிருந்த காலியான டின்னிலிருந்து 1/2 கிலோ கொடுக்கும்படி கடைக்காரரிடம் கேட்டபோது, கடைக்காரர் அவரது அறியாமையை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தார். காலியான டின்னிலிருந்து எதையாவது எடுக்க முடியுமா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

ஆனால், காலியாகக் கிடந்த இயேசுவின் கல்லறை இயேசுவின் உயிர்ப்பை எடுத்துரைத்தது. அதிகாலையில் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற பெண்கள் காலியாகக் கிடந்த கல்லறையைக் கண்டனர். வானதூதர் அவர்களுக்குக் கொடுத்த விளக்கம்: "சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் இங்கே இல்லை " (மாற் 18:6).

பேதுருவுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற அன்புச் சிடர் யோவான், கல்லறைக்குள் சென்றார், கண்டார், நம்பினார்" (யோவா 20:8), அவர் கண்டதோ காலியான கல்லறை: ஆனால் அவர் நம்பியதோ உயிர்த்த இயேசுவை. எனவே, காலியான கல்லறையே இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியம் பகர்ந்தது.

இயேசுவின் உயிர்ப்பு நமது உயிர்ப்புக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இறந்தவர்கள் உயிர்க்கவில்லை என்றால் இயேசுவும் உயிர்க்கவில்லை (1கொரி 15:13). கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோம் இறப்பினும் வாழ்வர் (யோவா 11:25). கிறிஸ்துவின் திருவுடலை உண்டு அவரது இரத்தத்தைப் பருகுவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா 6:54), அவர்கள் ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள் (யோவா 5:24).

ஒருவர் குளவியால் கொட்டப்பட்டு இறந்து விட்டார். அவரைக் கொட்டிய அதே குளவி அவரது மகனை ஒரு வாரம் கழித்து கொட்ட வந்தபோது, அவன் அலறிக் கொண்டு அவன் அம்மாவைக் கட்டிப் பிடித்தான். அவன் அம்மா அவளிடம், "நீ பயப்படாதே! இக்குளலி உன் அப்பாவைக் கொட்டிய போது அது தன் கொடுக்கை இழந்து விட்டது. இனிமேல் அதனால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

ஆம், இயேசு இறந்தபோது அவர் தமது சாவினால் சாவின் கொடுக்கை முறித்து விட்டார், சாவு தனது கொடுக்கை இழந்து விட்டது. "சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" (1கொரி 15:54-55).

நாம் திருமுழுக்குப் பெற்றபோது இயேசுவின் சாவிலும் உயிர்ப்பிலும் பங்கு பெற்றுள்ளோம். அவரோடு நாம் இறந்து விட்டோம் என்றால், அவரோடு உயிர்ப்பது நிச்சயமாகி விட்டது (உரோ 6:3-11).

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது வாழ்வுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. கிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்ற பெண்கள் கல்லறை வாயிலை மூடியிருந்த பெரிய கல்லை (எவ்வாறு அகற்றுவது என்ற கவலையுடன் சென்றனர், ஆனால் அக்கல்லானது ஏற்கெனவே, புரட்டப்பட்டிருந்தது (மாற் 16:3 4), அவ்வாறே நமது வாழ்வில் வரும் பெரிய இடர்களையும் உயிர்த்த இயேசு அகற்றி விடுவார். நாம் அஞ்சத் தேவையில்லை. மலைகள் போலத் தடைகள் வந்தாலும் நாம் மலைத்திடாது நமது வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம். ஏனெனில் உயிர்த்த ஆண்டவர் உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20). நாம் உயிர்ப்பின் மக்கள்; தம் கீதம் அல்லேலூயா!

பெரிய கொடிமரத்தில் ஏறிய ஒருவர் கீழே இறங்கியபோது மிகவும் பயந்தார். கீழே இருந்தவர்கள் அவரிடம், கீழே பார்க்காமல் மேலே வானத்தைப் பார்த்துக் கொண்டே இறங்கும்படி கேட்டனர். அவரும் மண்ணைப் பார்க்காமல் விண்ணைப் பார்த்த வண்ணம் கீழே இறங்கினார். நாமும் நம்மையும் நமது பிரச்சினைகளையும் மட்டும் பார்த்தால் நமது தலை சுற்றும்; மயக்கமும் தயக்கமும் வரும். எனவே, நாம் மேலுலகைப் பார்த்த வண்ணம் வாழ வேண்டும். ஏனெனில், அங்குதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார் (கொலோ 3:1-3).

பாஸ்காத் திருவிழிப்பில் நாம் காண்பது புதிய நெருப்பு, புதிய ஒளி. புதிய தண்ணீர், புதுப்படைப்பு, புதுவாழ்வு. பழையன கழிந்து, புதியன புகுந்தன. இவை யாவும் கடவுளின் செயலே (2 கொரி 5:17-18).

“ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்" (திபா 118:24).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சாவின் கொடுக்கு முறிந்தது

"வார்த்தை மீது வாசல்கள்" (Windows on the Word) என்ற ஆங்கில நூலில் காணும் நிகழ்ச்சி இது.

டாக்டர் தேஹான் என்பவர் தனது இரு மகன்களுடன் பசுமையான வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வேகமாகப் பறந்து வந்த தேனீ ஒன்று மூத்தமகன் ரிச்சர்டின் கண்களுக்குமேல் - கண்ணிமையில் கொட்டி விட்டது. அந்தத் தேனீயைக் கீழே உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்த புல்தரையில் ரிச்சர்ட் விழுந்து கதறினான், அலறினான் வலி தாங்க இயலாமல்.

அதையெல்லாம் கண்டு அதிர்ந்து நின்றான் சின்னவன் மெர்வின். சிறிதுநேரத்தில் அதே தேனி அவனைச் சுற்றி வட்டமிட்டது. தன் அண்ணன் துடித்த துடிப்பை நினைத்தான். அழத் தொடங்கினான். அது தன்னைக் கொட்டிவிடுமோ என்று மிரண்டான். அதே புல்தரையில் உருண்டான், புரண்டான். அப்போது அவனுடைய தந்தை ஓடிவந்து மெர் வினைக் கைகளில் அணைத்துக் கொண்டு “மெர்வின், பயப்படாதே. தைரியமாயிரு. அந்தத் தேனீ உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அது ஏற்கனவே தன் கொடுக்கை இழந்து விட்டது. அந்தத் தேனீ உன்னை வளைய வளைய வட்டமிடலாம். அச்சுறுத்தலாம். உன் அண்ணனைக் கொட்டியபோதே அதன் கொடுக்கு முறிந்து விட்டது" என்றார்.

நம்மைப் பொறுத்தவரை இயேசு சாவின் கொடுக்கை முறித்து விட்டார். ''சாவு, வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? (1 கொரி. 15:55) என்ற திருத்தூதர் பவுலின் ஆவேச வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை! அர்த்தமுள்ளவை!

கிறிஸ்துவின் உயிர்ப்பில் திருத்தூதர் வைத்துள்ள நம்பிக்கை, உறுதிப்பாடு வியப்புக்குரியவை. “பாவமே சாவின் கொடுக்கும். ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி" என்று திருத்தூதர் பவுலோடு கிறிஸ்தவ உலகமே ஆர்ப்பரிக்கும் பாஸ்கா இரவு இது!

சாவின் மீது வெற்றி, சாவுக்குக் காரணமான பாவத்தின் மீது வெற்றி, பாவத்துக்குக் காரணனான சாத்தானின் மீது வெற்றி, இம்முப்பெரும் வெற்றிக்காக உயிர்த்த ஆண்டவரைக் கைகுலுக்கிப் பாராட்டுவோம். இயேசு பெற்ற அம்முப்பெரும் வெற்றியில் நமக்கும் பங்களிப்பதற்காக அவருக்கு நன்றி கூருவோம்.

1. இயேசு பாவத்தை வென்றார். அவரது உயிர்ப்பு பாவத்தின் மயக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. கல்வாரிப் பலியே பாவப் பரிகாரப் பலிதான். கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே இருந்த உறவுக்கான தடைச் சுவர்களை உடைத்தெறிந்த பலி, "கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்'' (எபி.9:28)

2. இயேசு சாவை வென்றார். அவரது உயிர்ப்பு சாவின் தூக்கத்திலிருந்து நம்மை எழுப்புகிறது. "பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு. மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு” (உரோமை 6:23). "எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் அவரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப் படும்” (1 கொரி.15:25, 26) திருத்தூதர் உரத்துச் சொன்ன வார்த்தைகள் இவை. இயேசு வந்ததே, வாழ்வு சாவை விட வலிமையானது என்பதை உணர்த்தவே!

3. இயேசு அலகையை வென்றார். அவரது உயிர்ப்பு அலகையின் மாயையிலிருந்து நம்மைத் தெளிவிக்கிறது. ''கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது... ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப் பட்டிருந்தவர்களை விடுவித்தார்” (எபி.2:9, 14, 15). ஏற்கனவே பாலை வனத்திலும் தொழுகைக் கூடத்திலும் சாத்தானை விரட்டியடித்தவர் தானே இயேசு!

"உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். முடிவில்லா வாழ்வை நம்புகிறேன்"- இது நமது நம்பிக்கைக் கோட்பாட்டின் தெளிவு. உயிர்ப்பு என்பது கிறிஸ்தவக் கோட்பாட்டின் மையம். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் வாழ்வுக்கும் ஓர் உந்துசக்தி.

சிறந்த கிறிஸ்தவரும் அறிவியல் அறிஞருமான மைக்கேல் பாரடே மரணப்படுக்கையில் இருந்தார். "சாவுக்குப் பிறகு கிடைக்கும் வாழ்வு எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்: "எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிலையானவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளேன். காரணம், நான் நம்பும் மீட்பர் உயிர்த்து இன்றும் வாழ்கின்றார். எனவே நான் வாழ்வேன் என்பது உறுதி ". உயிர்ப்பு என்பது மேலோட்டமாகப் பார்த்தால் புரியாத புதிராக, அறிவுக்குப் புலப்படாததாகத் தோன்றும். ஆழமான நம்பிக்கை கொண்டு பார்த்தால் இம்மறைபொருள் காட்டும் மேன்மையை உணர முடியும்.

திருத்தூதர் தெளிவுபடுத்துவது இதுதான்: “இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகி விடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1கொரி. 15:13,14)

ஆம், இயேசு உயிர்த்து விட்டார். நமது உயிர்ப்பு வாழ்வுக்கும் உறுதி தந்துவிட்டார். அவரோடு நாமும் உயிர்க்கின்றோம்.
- பொய்யைவிட உண்மை மேலானது என்பதை இயேசுவின் உயிர்ப்புஎண்பிக்கிறது.
- தீமையைவிட நன்மை உறுதியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு எடுத்து இயம்புகிறது.
- பகைமையை விட அன்பு, மன்னிப்பு உயர்ந்தது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உணர்த்துகின்றது.
- சாவை விட வாழ்வு சக்தியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உறுதிசெய்கின்றது.
உயிர்ப்பு நமக்கு அனுபவமாகட்டும். அல்லேலூயா!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்”
பாஸ்கா திருவிழிப்பு

நிகழ்வு
பிரேசிலில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பழங்குடியினர் சிலர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றிப் பெரிய ஆறு ஒன்று ஓடுகின்றது. இந்த ஆற்றில் சாத்தான் இருப்பதாகவும், ஒருவேளை யாராவது இந்த ஆற்றைக் கடக்க நேர்ந்தால், அவரைச் சாத்தான் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இவர்களிடையே இருப்பதால், யாரும் ஆற்றைக் கடக்கத் துணிவதில்லை இப்படியிருக்கும்பொழுது இவர்கள் நடுவில் நற்செய்தி அறிவிக்க அருள்பணியாளர் ஒருவர் வந்தார். அவர், ஆற்றில் சாத்தான் இருப்பதாகவும், அந்தச் சாத்தான் ஆற்றைக் கடக்கிறவர்களைக் கொன்றுவிடும் என்றும் மக்கள் சொன்ன செய்தியைக் கேட்டுச் சிரித்தார். ஏனெனில், அவர் அந்த ஆற்றின் வழியாகத்தான் அங்கு வந்திருந்தார். பிறகு அவர் அவர்களிடம் “ஆற்றில் சாத்தான் இல்லவே இல்லை... ஒருவேளை ஆற்றில் சாத்தான் இருந்தால், அது என்னைக் கொன்றுபோட்டிருக்குமே!” என்றார். அவர்கள் அவர் சொன்னதை நம்பவே இல்லை. இதனால் அவர், ‘தக்க சமயம் வரும்பொழுது, இவர்களிடம் இந்த ஆற்றில் சாத்தான் இல்லை என்பதை நிரூபித்துக்கொள்வோம். அதுவரைக்கும் பொறுமையாக இருப்போம்’ என்று இருந்தார்.

ஒரு சமயம் இவர்கள் இருந்த பகுதியில் கொள்ளைநோய் வந்து, பலருடைய உயிரையும் எடுத்துக்கொண்டது. .அப்பொழுது அருள்பணியாளர் அவர்களிடம், “இந்த ஆற்றுக்கு அந்தப் பக்கம்தான் பெரிய மருத்துவனை இருக்கின்றதே! கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அங்குக் கொண்டுசென்றால், அவர்களுடைய உயிரைக் காப்பாற்றிவிடலாமே!” என்று சொன்னதற்கு, “ஆற்றில்தான்தான் சாத்தான் இருக்கின்றது!” என்று பழைய கதையையே சொல்லிக்கொண்டிருந்தார். ‘இதுதான்! இந்த ஆற்றில் சாத்தான் இல்லை என்று இவர்களிடம் நிரூபிப்பதற்குச் சரியான வாய்ப்பு’ என்று மனத்தில் நினைத்துக்கொண்டு, அருள்பணியாளர் ஆற்றின் அருகில் சென்று, அதிலிருந்து தண்ணீரை எடுத்து, தன் முகத்தில் தெளித்து, “இதோ பாருங்கள்! எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இதிலிருந்தே தெரியவில்லை, இதில் சாத்தான் இல்லை என்று” என்றார். அவர்கள் அவர் சொன்னதை நம்பவில்லை.

இதனால் அவர் ஆற்றுக்குள் சிறிதுதூரம் சென்று, முன்பு சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னார். அப்பொழுதும் அவர் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. கடைசியில் அவர் ஆற்றுக்குள் மூழ்கிச்சென்று, மறுகரையில் போய் எழுந்து, முன்பு சொன்ன அதே வார்த்தைகளை அவர்களிடம் மீண்டுமாகச் சொன்னார். இப்பொழுது அவர்கள் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஆற்றில் சாத்தான் இல்லை என்று நம்பத் தொடங்கி, கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டவர்களை மறுகரையில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றினார்கள்.

ஆம், ஆற்றுக்குள் இறங்கினால் சாத்தான் கொன்றுவிடும் என்று எப்படி அந்தப் பழங்குடி நினைத்தார்களோ, அப்படிப் பலரும் சாவோடு மனித வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளரைப் போன்று, ஆண்டவர் இயேசு சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். அதையே இன்று நாம் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம்

ஒருவேளை கிறிஸ்து மட்டும் உயிர்த்தெழுந்திருக்காவிட்டால், அவருடைய சீடர்கள் முன்பு தாங்கள் செய்த வேலைகளைப் பார்க்கக் கிளம்பிப் போயிருப்பார்கள்! அப்பொழுது கிறிஸ்தவ மறை என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை. மாறாக ஆண்டவர் இயேசு தாம் சொன்னது போன்றே மூன்றாம் நாள் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். இவ்வாறு இயேசுவின் உயிர்ப்பு திருத்தூதர்கள் அறிவித்த நற்செய்திக்கும், நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது (1 கொரி 15: 14).

இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை நமக்குத் தரக்கூடியதாக இருக்கின்றது. இது குறித்துத் திருத்தூதர் புனித பவுல் கூறும்பொழுது, “அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்” என்பார். எனவே, இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கைச் செய்தியைச் தருவதால், அவர் இறந்துபோன்று நாமும் அவரோடு இறக்க முயற்சி செய்வோம்.

ஆண்டவரைத் தேடுவோர் கண்டுகொள்வர்

இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற இரண்டாவது செய்தி, அவரைத் தேடுவோர் கண்டுகொள்வர் என்பதாகும்.
இறந்த உடலில் நறுமணப் பொருளைப் பூசுவது என்பது இறந்தவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் செயல். அது இன்றைய காலக்கட்டத்தில் இறந்தவர்களின் கல்லறைகளில் மலர்களை வைப்பதற்கு இணையானது. நற்செய்தியில் வருகின்ற மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகிய மூவரும் இயேசுவின் உடலில் நறுமணப் பொருள்களைப் பூசுவதற்காக அவற்றை ஓய்வுநாள் முடிந்ததும் வாங்கிக்கொண்டு, வாரத்தின் முதன்நாள் விடியற்காலையில் செல்கிறார்கள். இயேசுவின் இறந்த உடலை யோசேப்பு எங்கே வைத்தார் என்று மகதலா மரியாவிற்கும் யோசேப்பின் தாய் மரியாவிற்கும் நன்றாக தெரிந்திருந்தது (மாற் 15: 47). அதனாலேயே அவர்கள் அந்த இடம் நோக்கி விரைந்து செல்கின்றார்கள்; ஆனால் அவர்கள், “கல்லறை வாயிலிருந்த கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்பது தொடர்பாகப் பேசிக்கொண்டே போகிறார்கள்; அவர்கள் அங்குச் சென்றதும், கல் புரட்டப்பட்டிருப்பதையும், வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் வலப்புறம் அமர்ந்திருப்பதையும் கண்டு திகிலுறுகின்றார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றார்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசுவை முழுமனத்தோடு தேடிய இயேசுவின் பெண் சீடர்கள், அதிலும் குறிப்பாக (யோவா நற்செய்தியின் 20: 11-18 ன்படி), மகதலா மரியா உயிர்த்த ஆண்டவர் இயேசுவை முதன்முறையாகக் கண்டுகொண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவை உள்ளார்ந்த அன்போடும், முழு மனத்தோடும் தேடினால், அவரை நிச்சயம் கண்டுகொள்ள முடியும்.

நற்செய்தியை அறிவிக்க வேண்டும்:

உயிர்ப்புப் பெருவிழா நமக்குத் தரும் மூன்றாவது செய்தி நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கவேண்டும் என்பதாகும். ஆண்டவர் இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என்ற செய்தியை வானதூதர்கள் வழியாக அறிந்துகொள்ளும் மூன்று பெண்களும், இயேசு கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றார் என்ற செய்தியைச் சீடர்களிடம் சொல்லப் பணிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கப் பணிக்கப்படுகின்றார்கள். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நாம் கேட்கின்றோம் எனில், அதை நாம் மட்டும் வைத்திருக்கக்கூடாது; எல்லாருக்கும் பயன்படும் வகையில் அறிவிக்கவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய தலையான பணி.

“நாம் வாழும் வாழ்க்கை மிகச்சிறந்த நற்செய்தி அறிவிப்பாக இல்லாதபோது, நற்செய்தி அறிவிப்பிற்காக எவ்வளவு தூரம் நாம் பயணம் செய்தாலும், அதனால் எந்தவொரு பயனும் இல்லை” என்பார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். எனவே, நாம் நம் வாழ்வை வாழ்வே மிகச் சிறந்த அறிவிப்பாக மாற்றி, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை பொருள்ளதாக்குவோம்.

சிந்தனை:

‘நமது பழைய வரலாறு சிலுவையோடு முடிந்துவிட்டது; நமது புதிய வரலாறு இயேசுவின் உயிர்ப்போடு தொடங்கியிருக்கின்றது’ என்பார் வாட்ச்மேன் நீ (Watchman Nee) என்ற சீன அறிஞர். எனவே, இயேசுவின் உயிர்ப்பினால் புதிய வரலாற்றைத் தொடங்கியிருக்கும் நாம் ,இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)
கல்லை நமக்கு யார் புரட்டுவார்?

I. தொநூ 1:1-2:2 II. விப 14:15-15:1 III. எசே 36:16-17,18-28 IV. உரோ 6:3-11 V. மாற் 16:1-7

யாராவது ஒருவர் இறந்த செய்தி கேட்டால், நாம் உடனடியாக, அவர் இறந்தது நல்ல சாவா? அல்லது கெட்ட சாவா? எனக் கேள்வியெழுப்பி வரையறுக்க முயல்கிறோம். ஒரு மனிதரின் நல்ல சாவு என்பதை யூத சமயம் பின்வருமாறு வரையறுத்தது: இறக்கின்ற மனிதர் நீண்ட நாள் வாழ்ந்தவராக இருக்க வேண்டும். அவருக்கென நிறைய வழிமரபை விட்டுச் செல்ல வேண்டும். அவருக்கென சொந்தமான கல்லறை இருக்க வேண்டும். மேற்காணும் மூன்று வரையறைகளின்படி பார்த்தால் இயேசுவின் சாவு கெட்ட சாவே. தன் சக சமயத்தவர்களின் பார்வையில் கெட்ட சாவையும், ஆள்வோரின் பார்வையில் பெருந்தண்டனையையும், சாமானியர்களின் பார்வையில் ஓர் அரசியல் மற்றும் சமூகப் படுகொலையையும் கண்ட இயேசு இன்று உயிர்த்துவிட்டார்.

'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்' (காண். 1 கொரி 15:14) என்ற புனித பவுலின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் உயிர்ப்பே நம் நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த உயிர்ப்பை 'வெறும் வதந்தி' என்று இயேசுவின் எதிரிகள் பரப்பி விட்டதாகவும், அது இந்நாள் வரை யூதரிடையே பரவி இருப்பதாகவும் பதிவு செய்கின்றார் மத்தேயு (மத் 28:15).

இயேசுவின் உயிர்ப்பு நம் நம்பிக்கையின் அடித்தளமா? அல்லது ஒரு வதந்தியா?

இன்று நாம் எங்கு பார்த்தாலும் வைத்திருக்கும் கண்காணிக்கும் சிசிடிவி காமராக்கள் அன்று இயேசுவின் கல்லறைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்தால் இயேசுவின் உயிர்ப்பை நாம் எளிதாக அறிந்திருக்கலாமே என்று சொல்கிறது நம் மூளை.

ஆனால், மூளையையும் தாண்டிய விடயங்களை இதயம் நம்புகிறது என்ற கூற்றுக்கிணங்க உயிர்ப்பு என்னும் உண்மையை நம் இதயம் மூன்று நிலைகளில் நம்புகிறது:

ஒன்று, உயிர்ப்பு கதையாடல்கள். இயேசுவின் உயிர்ப்பை ஒட்டி நிகழ்ந்த கதையாடல்கள் - மகதலா மரியா, தோமா, சீடர்கள், பேதுரு, எம்மாவு போன்ற கதையாடல்கள் - இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாக அமைகின்றன. அவை இயேசு உயிர்த்தார் என்பதைச் சொல்வதோடல்லாமல், இயேசு உயிர்த்தபோது அவர் எத்தகைய உடலைக் கொண்டிருந்தார், அந்த உடல் எப்படி பூட்டிய கதவுகளை ஊடுருவியது, அந்த உடல் எப்படி வழி நடந்தது, மீன் சாப்பிட்டது, தழுவிக்கொள்ளும் நிலையிலும் விரலை இடும் நிலையிலும் இருந்தது என்று பதிவு செய்கின்றன.

இரண்டு, அறிக்கை கதையாடல்கள். தொடக்கத் திருஅவையில், திருமுழுக்கு பெறுகின்ற ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையை அறிக்கை செய்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கை அறிக்கையை புனித பவுல் எழுதுகின்றார்: 'நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக்கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறு மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்' (1 கொரி 15:3-4). இயேசுவின் உயிர்ப்பு என்பது ஓர் அறிக்கைக் கோட்பாடாகத் தொடக்கத் திருஅவையில் இருந்தது இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக அமைகின்றது.

மூன்று, மாற்றக் கதையாடல்கள். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை அடைத்துக்கொண்டிருந்தவர்கள், தலைமைச்சங்கத்தையும் எதிர்த்து நிற்கும் அளவுக்குத் துணிவு பெறுகின்றனர். பெரிய மக்கள் கூட்டத்திற்கு கற்பிக்கின்ற அவர்கள், 'நீங்கள் நாசரேத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள்' என சான்று பகர்கின்றனர். 'உயிர்ப்புக்குப் பின் தோன்றிய இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள் புதிய மனிதர்களாக மாறுகின்றர். பயம், தயக்கம், கோபம் மறைந்து, நம்பிக்கை, துணிச்சல், மற்றும் மன்னிப்பு அவர்கள் உள்ளங்களில் பிறப்பதால் கிறிஸ்து திருத்தூதர்களின் உள்ளங்களில் உயிர்க்கிறார்' என்று கூறுகின்றார் இறையியலாளர் ஷில்லிபெக்ஸ். திருத்தூதர்களின் வாழ்வியல் மாற்றமே இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாக அமைகின்றது.

ஈஸ்டர் திருநாளுக்கு அறிவியல் மற்றும் வரலாற்றுப் பூர்வமான பின்புலமும் உண்டு:

உங்கர் விவிலிய அகராதி, 'ஈஸ்டர்' என்ற சொல் ஒரு ஆங்கிலோ-சாக்ஸன் சொல்லாடல் என்றும், இதன் மூலச் சொல் 'ஈஸ்த்ரா' என்ற வசந்தகாலத் தேவதையின் பெயர் என்றும், இந்த தேவதைக்கு ஒவ்வொரு ஆண்டின் பாஸ்கா காலத்திலும் பலிகள் செலுத்தப்பட்டன என்றும், ஏறக்குறைய எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பெயர் கிறிஸ்துவின் உயிர்ப்பை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது என்றும் வரையறுக்கிறது. குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில் 'மறுபிறப்பு' எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும் திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து எழுவதால், கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று அழைப்பவர்கள், இயேசுவின் இறப்பை 'குளிர்காலத்திற்கும்,' இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்' ஒப்பிடுகின்றனர்.

வசந்தகாலத் தேவதையான 'ஈஸ்த்ரா' ('எயோஸ்தர்,' 'ஒஸ்தாரா,' 'அவ்ஸ்த்ரா') திருநாள் மார்ச் மாதத்தின் 21ஆம் நாள், வசந்தகாலத்தின் உத்தராயணம் (இரவும் பகலும் சமமான நாள், சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்துசெல்லும் நாள்) அன்று கொண்டாடப்பட்டது. நீண்ட இருள்சூழ் பனிக்காலத்திற்குப் பின் வெளிச்சத்தைக் கொண்டுவரும் இத்தேவதையை முயல் அடையாளப்படுத்தியது. ஏனெனில், முயல் என்பது வசந்தகாலத்தையும் வளமையையும் குறித்தது. க்ரிம் என்ற ஜெர்மானிய புராண ஆய்வாளரின் கூற்றுப்படி, 'உயிர்ப்பு என்னும் கருதுகோள் ஈஸ்த்ரா திருநாளில் மையம் கொண்டுள்ளது. ஏனெனில், வைகறையின் கடவுளாம், வசந்தத்தையும் வளமையையும் அறிவித்து, மகிழ்ச்சியையும் ஆசீரையும் கொண்டுவரும் ஈஸ்த்ராரை தங்களுடைய கடவுளில் கிறிஸ்தவர்கள் கண்டார்கள்.' சில ஐரோப்பிய மொழிகளில் 'ஈஸ்டர்' என்பது 'பாஸ்கா' (யூதர்களின் பெருவிழா) என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலோ-சாக்ஸன் குடும்ப மொழிகளில் 'ஈஸ்டர்' என்ற சொல்லே வழங்கப்படுகிறது.

அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச் மாத உத்தராயணத்தைத் தொடர்ந்து வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும் திருவிழா' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்' கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள் 325ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள் வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே – கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப 14-15) - அடையாளப்படுத்துகின்றன.

இத்திருவிழிப்புத் திருப்பலியில் நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகங்கள், குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கு பூவுலகும் மானுடமும் கடந்து வந்த பாதையை நம் கண்முன் கொண்டு வந்தன. முதல் வாசகத்தில் (தொநூ), 'இல்லாமையிலிருந்து இருத்தலுக்கும், குழப்பத்திலிருந்து தெளிவுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும்' உலகம் கடந்து வருகிறது. இரண்டாம் வாசகத்தில் (விப) 'எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கும், பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து யாவேயை அரசராகக் கொள்வதற்கும், வாக்குறுதிக்கான காத்திருத்தலிலிருந்து வாக்குறுதி நிறைவேறியதற்கும்' இஸ்ரயேல் மக்கள் கடந்து வருகின்றனர். மூன்றாம் வாசகத்தில் (எசே) 'உலர்ந்த நிலையிலிருந்து உயிர்பெற்ற நிலைக்கும், பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து சொந்த நாட்டிற்கும்' திரும்புகின்றனர் இஸ்ரயேல் மக்கள். இது அவர்களுடைய இரண்டாம் மீட்பு. முந்தைய நிலை மறைந்து புதிய நிலை மலர்கிறது. இதுவே பிரிஹதாரண்யக உபநிடதத்தில் நாம் காணும் இறைவேண்டலாகவும் இருக்கிறது: 'பொய்மையிலிருந்து மெய்மைக்கு, இருளிலிருந்து ஒளிக்கு, சாவிலிருந்து வாழ்வுக்கு இறைவா என்னை அழைத்துச் செல்!'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பெண்கள் சிலர் இயேசுவின் கல்லறைக்கு வருகின்றனர். இறந்த உடலுக்கு மூன்று நாள்கள் நறுமணத் தைலம் பூசுவது அவர்களுடைய அடக்கச் சடங்கின் ஒரு பகுதியாக இருந்தது. 'வாரத்தின் முதல் நாள் கதிரவன் எழும் வேளையில்' என்னும் சொல்லாடல் வழியாக இருண்டு நேர்முகமான காரணிகளைச் சுட்டுகிறார் மாற்கு: 'புதிய வாரம் தொடங்குகிறது, புதிய ஒளி எழுகின்றது.' பழைய வாரத்தின் நிகழ்வுகள் மறைந்துவிட்டன, பழைய இருள் மறைந்துவிட்டது. இருந்தாலும் அந்தப் பெண்களின் உள்ளத்தில் ஒரு கலக்கம்: 'கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?'

நம் வாழ்விலும் ஏதோ ஒரு கல் நம்மை அடைத்திருப்பதாக நாம் அடிக்கடி உணர்ந்து, அந்தக் கல்லை அகற்றுபவர் யார் எனப் புலம்புகின்றோம். முதல் வாசகத்தில், இருள் ஒரு கல் போல இருக்கிறது. இரண்டாம் வாசகத்தில், எகிப்தின் அடிமைத்தனம் கல் போல இருக்கிறது. மூன்றாம் வாசகத்தில், பாபிலோனிய நாடுகடத்துதல் கல் போல இருக்கின்றது. ஆனால், 'கல்லை நமக்காக யார் புரட்டுவார்?' என்று கலங்கத் தேவையில்லை. கற்கள் புரட்டப்படும் நாள்தான் ஈஸ்டர். மிகவும் கடினமான கற்கள் என நினைக்கும் இறப்பு, பாவம், பயம், மற்றும் உலகியல் பேரார்வம் அனைத்தையும் கடவுள் மிக எளிதாகப் புரட்டிவிடுகின்றார். மானுட வரலாறு ஒரு கல் முன் பயந்து நிற்பதில்லை. ஏனெனில், அது வாழ்வின் கல்லான (காண். 1 பேது 2:4) கிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் இன்று இரவு உயிர்த்த ஆண்டவரைக் காண வேண்டும் - தனித்தனியாக. முதலில், நான் அகற்ற விரும்பும் அல்லது அகற்ற வேண்டிய கல் எது என்று அந்தக் கல்லுக்குப் பெயரிடுவோம்.

நம் நம்பிக்கையைத் தடுக்கின்ற கல் ஊக்கமின்மைதான். வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளை மீறிச் செல்லும்போது, எல்லாம் நம்மை விட்டுப் போய்விட்டது போலவும், இறப்பு சூழ்ந்துவிட்டது போலவும் உணர்கின்றோம். நம்மேல் நாமே கற்களை அடுக்கிக்கொண்டு நம்பிக்கையைப் புதைத்துவிடுகிறோம். அந்த நேரத்தில் நம்மை எதிர்கொள்கின்ற தூதர், 'வாழ்பவரை இறந்தோரிடம் தேடுவதேன்?' எனக் கேள்வி கேட்கின்றார். நம் இதயத்தை மூடிவிடும் இன்னொரு கல் பாவம். பாவம் நம்மை மயக்குகிறது. எளிதான மற்றும் வேகமான வழியில் நமக்கு இன்பத்தையும், வெற்றியையும், வளமையையும் வழங்குகிறது. ஆனால், சற்று நேரத்தில் தனிமையையும் சாவையும் விட்டுச் செல்கின்றது. பாவம் இறப்பின் நடுவே வாழ்வைத் தேடுகிறது. தேடிச் சோர்ந்து போய், நம்மைச் சோர்வுக்கு ஆளாக்குகிறது. இன்று ஏன் பாவத்தை நாம் விடக் கூடாது? பாவம் என்னும் கல்லை இன்னும் நாம் ஏன் நம் இதயக் கதவுக்கு முன் வைக்க வேண்டும்?

கல்லறைக்குச் செல்கின்ற பெண்கள் திகிலுறுகிறார்கள். அச்சத்தின் பெரிய நிலைதான் திகில்.

'உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்' என்று சொல்கின்றார் வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர்.

கல்லறைக்குள் குனிந்து பார்க்கும் நம்மிடமும் இன்று தூதர் பேசுகின்றார். சில நேரங்களில் நாமும் இத்தூதர் போல மற்றவர்களுக்கு நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றோம்.

'கலிலேயாவுக்குப் போங்கள்!' என அனுப்புகின்றார் தூதர்.

கலிலேயா என்பது எருசலேமின் எதிர்ப்பதம். கலிலேயா இயேசுவின் பணித் தொடக்கம். அங்கேதான் திருத்தூதர்களை இயேசு அழைத்தார். தங்கள் தலைவரின் இறுதியைக் கண்டு பயந்து போய்க் கிடந்த திருத்தூதர்களை மீண்டும் தொடக்கத்துக்கு அழைத்துச் செல்கின்றார் இயேசு.

உடனடியாக வெளியேறுகின்ற பெண்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். நடுக்கமும் அச்சமும் கொள்கின்றனர். திருத்தூதர்களுக்குச் செய்தியை அறிவிக்கவில்லை.

இயேசுவின் அருகிலிருந்தவர்கள் அவரை இறுதிவரை புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுவே மாற்கு எதிர்மறையான உணர்வோடு நற்செய்தியை முடிக்கின்றார்.

ஆனால், யோவான் நற்செய்தியாளர் வேறொரு நிலையில் இதைப் பதிவு செய்கின்றார். மகதலா மரியா இயேசுவைத் தோட்டக்காரர் என நினைத்து அவரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றார். 'மரியா!' என்று இயேசு அழைத்தவுடன், 'இரபூணி' எனத் திரும்புகின்றார். அவர் ஏற்கெனவே இயேசுவைப் பார்த்துக்கொண்டே தானே இருக்கின்றார். பின் ஏன் அவர் திரும்ப வேண்டும்? 'தன் திசையை அல்ல, தன் இதயத்தை அவரை நோக்கித் திருப்பினாள்' என இதற்கு விளக்கம் தருகின்றார் புனித அகுஸ்தினார். நம் இதயத்தை நாம் அவரை நோக்கித் திருப்பினால், நாம் வாழ்க்கையை கலிலேயா நோக்கித் திருப்ப முடியும்.

நாம் பல நேரங்களில் நம் கல்லறையின் திசை நோக்கியே செல்கின்றோம். வாழ்பவரை இறந்தோரிடம் தேடுகிறோம். அல்லது இயேசுவைக் கண்டாலும் நாம் இறந்தவற்றின் பக்கமே நம் இதயத்தைத் திருப்பிக் கொள்கின்றோம். ஏனெனில், பழைய பாதை நமக்கு இனிக்கிறது, இன்பம் தருகிறது. அல்லது நம் குற்றவுணர்வு, காயம், அதிருப்தி ஆகியவற்றைத் தழுவிக்கொள்கிறோம். அவை நமக்கு பாதுகாப்பு வளையும் என உணர்கின்றோம்.

தனிப்பட்ட மனிதர்களும், ஒட்டுமொத்த மனுக்குலமும் தங்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்த கதையாடல்களைத்தான் விவிலியம் தாங்கி நிற்கிறது. எல்லாம் முடிந்தது என்ற கல்லறையிலிருந்து இனிதான் எல்லாம் தொடக்கம் என்ற வாழ்வுக்கு நகர்கின்றனர் நம் முதற்பெற்றோர். நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு நகர்கின்றார் ஆபிரகாம். ஏமாற்றுகின்ற நிலையிலிருந்து பிளவுபடாத வாழ்வுக்கு மாறுகின்றார் யாக்கோபு. பெலிஸ்தியச் சிறையில் தள்ளப்பட்ட சிம்சோனின் தலைமுடி முளைக்க ஆரம்பிக்கின்றது. தாவீது தன் பிரமாணிக்கமின்மையிலிருந்து உடன்படிக்கை அன்புக்கு கடவுளால் நகர்த்தப்படுகின்றார். திருத்தூதர்கள், சக்கேயு, பவுல் போன்றோர் தங்கள் வாழ்வுப் பாதையை மாற்றுகின்றனர்.

உயிர்ப்பு என்பது நம் வாழ்வியல் அனுபவமாக மாறாத வரை அது ஒரு வதந்தியே. உயிர்ப்பின் ஆற்றல் நம்மைப் புதிய மனிதர்களாக்கும். துன்பங்களை எதிர்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கும். ஆகையால்தான் புனித பவுல், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் விரும்புகிறேன்' (பிலி 3:10) என்கிறார்.

'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (காண். திபா 23:4) என்கிறார் தாவீது. அவரின் உடனிருப்பில் நமக்கு எல்லா நாளும் உயிர்ப்பு நாளே.

உயிர்ப்புப் பெருநாள் வாழ்த்துகள்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"இயேசுவின் உயிர்ப்பு -கிறிஸ்தவ நம்பிக்கையின் பிறப்பிடமா! "

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு என்ற தனிமனிதருக்கு நடந்த நிகழ்வாக உயிர்ப்பைக் குறுக்கிவிட முடியாது. இயேசுவின் உயிர்ப்பு சாவின் சக்திகளுக்கு முடிவு. இறையாட்சி என்னும் சகோதரத்துவ, சமத்துவ வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையின் அடையாளம். நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கை முழுமை பெறுவதற்கு இயேசுவின் உயிர்ப்பு தான் அடிப்படையாக இருக்கின்றது. எனவேதான் திருத்தூதர் பவுல் தன்னுடைய திருமடலில் "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பொருளற்றதாகி விடும் " (1கொரி: 15:14) என்று கூறியுள்ளார். இன்றைய நாளில் இயேசுவின் உயிர்ப்பு நமக்குச் சுட்டிக்காட்டும் வாழ்வியல் பாடங்களைப் பின்வருமாறு தியானிப்போம்.

முதலாவதாக இயேசுவின் உயிர்ப்பைத் தந்தையுடன் ஒன்றுபட்ட நிலையாகக் காண வேண்டும். இயேசு தன் உயிரை தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக முழுவதுமாகக் கையளித்தார். தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ' என்று கூறி தன் உயிரைத் தந்தையாம் கடவுளிடம் ஒப்படைத்தார். இது அவருடைய அர்ப்பணத்தைச் சுட்டிக்காட்டுகிறது. தந்தையாம் கடவுளும் தன்னை முற்றிலும் நம்பி அர்ப்பணம் செய்த தன் மகனை கல்லறையில் அழிய விடவில்லை. மாறாக, உயிர்ப்பின் வழியாக தன் மகன் இயேசுவை தந்தையாம் கடவுள் மாட்சிப் படுத்தினார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளை முழுமையாக நம்பி நம்மை முழுமையாக அர்ப்பணம் செய்யும் பொழுது, கடவுள் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார். நமக்கு துன்பம் வருகின்ற பொழுது அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல், கடவுள் தன்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இரண்டாவதாக உயிர்த்த ஆண்டவர் இயேசு சிதறுண்ட சீடர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கிறார். இயேசு கைது செய்யப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்ட பிறகு சீடர்கள் உயிருக்குப் பயந்து சிதறி ஓடினார்கள். அழைப்புக்கு முன் செய்த மீன் பிடிக்கும் பணியினைச் செய்யத் தொடங்கினர். அவர்களின் பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். இப்படிப்பட்ட சூழலில் இயேசு உயிர்ப்பின் வழியாக அவர்களின் நம்பிக்கையை மீண்டுமாக உறுதிப்படுத்தினார். உயிர்த்த ஆண்டவர் இயேசுவைக் கண்டு நம்பிய பொழுது, சீடர்கள் வல்லமையோடு இறையாட்சி மதிப்பீடுகளை நற்செய்தியாக அறிவித்தார்கள். அதன் வழியாக இயேசுவின் விழுமியங்களை மக்களுக்கு அறிவித்து, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ நம்பிக்கையில் இணைய வழிகாட்டினார்கள். அவர்கள் திடப்படுத்திய நம்பிக்கையாளர்களின் கூட்டமே இன்றளவும் இருக்கும் திருஅவையாகும்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் உயிர்த்த ஆண்டவர் இயேசு நம்முடைய நம்பிக்கை வாழ்வைத் தூண்டி எழுப்புகிறார். ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகிறோம். அந்த விழாவை கொண்டாடும் பொழுது இயேசுவோடு கூடிய நம்பிக்கையில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு நம்மையே இயேசுவிடம் முழுமையாக ஒப்படைத்து நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக இயேசுவின் உயிர்ப்பு அன்புக்காய், நீதிக்காய், உண்மைக்காய் உழைக்கின்றவர்களை கடவுள் ஒருபோதும் மறக்க மாட்டார் என்ற ஆழமானச் சிந்தனையை வழங்குகின்றது. இயேசுவின் இறையாட்சி பணியானது இம்மண்ணுலகத்தில் அன்பு, நீதி, உண்மை போன்ற மதிப்பீடுகள் உயிர் பெற்று எழ அடிப்படையாக இருந்தது. இப்படிப்பட்ட மதிப்பீடுகள் சுயநலவாதிகளாக வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள்,மற்றும் ஆளும் ஆட்சியாளர்கள் போன்றவர்களால் முடக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் வெளிப்பாடு தான் அவர்கள் இயேசுவைக் கொலை செய்தது. ஆனால் இறையாட்சி மதிப்பீட்டிற்காகத் தன் உயிரையே கொடுப்பவர்களை ஒருபோதும் கடவுள் கைவிடமாட்டார் என்ற ஆழமான உண்மையை இயேசுவின் உயிர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இறையாட்சியின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளுக்கு சான்று பகரும் பொழுது, நாம் பல்வேறு துன்பங்களைச் சந்திக்க நேரிடும் ;உயிரைக் கூட இழக்க நேரிடும். ஆனால் கடவுள் நம்மை கைவிடமாட்டார். இந்த உலகம் சார்ந்த மக்கள் நம் உடலை மட்டும் தான் கொல்ல முடியும். ஆனால் நாம் விதைக்கின்ற இறையாட்சி மதிப்பீடுகளை ஒருபோதும் அழிக்க முடியாது. எனவே இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் உண்மைக்கான தேடலாகும்.அவை நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றது.

இயேசு உண்மையிலேயே உயிர்த்தாரா? என்ற கேள்வியானது பலரால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இயேசு உண்மையிலேயே உயிர்த்தார் என்பதற்கு நான்கு நற்செய்தியாளர்களுமே சான்று பகர்ந்து உள்ளனர். காலியான கல்லறை, இயேசுவின் தோற்றம், சீடர்களின் அனுபவம் போன்றவை இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும்.

இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தரும் முக்கியமான செய்தி இறப்பு என்பது ஒரு முடிவல்ல. இலட்சிய போராளிகள் ஒவ்வொருநாளும் மக்கள் மத்தியில் உயிர்த்து கொண்டிருக்கிறார்கள். இறந்து கொண்டிருக்கும் மதிப்பீடுகளும் கொள்கைகளும் ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழ நாம் உழைக்க வேண்டும் என்ற ஆழமானச் சிந்தனையை உயிர்ப்பு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அன்பு, உண்மை, நீதிக்கு என்றுமே சாவு இல்லை என்ற ஆழமான சிந்தனையை கொடுப்பதாக இருக்கின்றது. உயிர்ப்பால் இன்றும் இயேசு நம்மோடு இருந்து உறவாடுகின்றார். எனவே நாமும் இந்த உயிர்ப்பு பெருவிழாவில் இயேசு கண்ட இறையாட்சி மதிப்பீடுகளை ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழச் செய்வோம். அப்பொழுது நம்முடைய கிறிஸ்தவ வாழ்வானது இயேசுவுக்குச் சான்று பகரும் நம்பிக்கை வாழ்வாக மாறும். நாம் இயேசுவை முழுமையாக நம்பி அனுபவித்து அதைப் பிறருக்கு அறிவிக்கும் கருவிகளாக மாற இந்த உயிர்ப்பு பெருவிழா நம்மை சிறப்பான விதத்தில் அழைக்கின்றது. எனவே நம்மையே முழுமையாக உயிர்த்த ஆண்டவரிடம் ஒப்படைத்து நம்பிக்கையோடு சான்று பகரக் கூடிய கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
உயிர்த்த இயேசுவே! எங்களுடைய அன்றாட வாழ்வில் உம்முடைய இறையாட்சி மதிப்பீடுகளுக்குச் சான்று பகர்ந்து நம்பிக்கையுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“உங்களுக்கு அமைதி உரித்தாகுக” லூக் 24:36

நம் ஆண்டவர் இயேசு பிறக்கும் போது எது சொல்லப்பட்டதோ அவர் உயிரோடு இருக்கும்போதும் அதைத் சொன்னார். அவர் சிலுவையில் அறைப்பட்டுஇ உயிர்விட்டு அடக்கம் செய்யப்பட்டு உயிருடன் வந்த பின்னும் அவர் கூறியது “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” அமைதியை நோக்கி நாம் ஓடும் வேளையில் நம் ஆண்டவர் அமைதியைத் தருகிறார். இவர் தரும் அமைதி நாம் தேடுவது போன்றது அல்ல. நாம் தேடுவது கற்பூரம் போல இருக்கும் ஆனால் மறைந்து விடும்.

 1. நாம் எப்படிப்பட்ட அமைதியை எதிர்நோக்கியிருந்தோம்? நாம் எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்றும் அமைதியான நதியினிலே ஓடம், அளவில்லாத வெள்ளம் அவந்தால் ஆடும் என்கிற விதத்தில் நம் துன்பங்களில் அமைதியை நோக்கி ஓடுகிறோம்.
 2. பணம் இருந்தால் பிரச்சினை இல்லை. பிறரை ஏய்த்து பிழைத்தோம்.
 3. சொத்து இருந்தால் போதும். பிறர் நிலத்தையும் நமது நிலமாகப் பட்டா போட்டோம். நிலத்துக்காக வயதுமுதிர்ந்த பெற்றோரையும் கவனியாமல் விட்டோம்.
 4. வீண் பெருமையும்இ பெயரும் கிடைத்தால் அமைதி கிடைக்கும் என்று எண்ணினோம்.
 5. மது அருந்தினால் அமைதி கிடைக்கும்.
 6. பிறரை மனம் நோகச் செய்வதால் பிறரை வாழவிடாமல் ஆக்கினால் அமைதி என்றெல்லாம் அலைந்தோம். அமைதி கிடைத்ததா? இல்லை. இவை கல்லறை தரும் அமைதிக்கு பொருத்தம்.
ஆனால் இன்று எப்படிபட்ட அமைதி தேவைப்படுகிறது?

நாம் எதிர்பார்த்திருப்பது நமது அமைதியை மட்டுமல்ல உலகின் அமைதி. உலகின் அமைதிக்காக மன்றாடுவோம் எனும் போதெல்லாம் நமக்கு அது விளையாட்டானது ஆனால் இன்று அனைவரும் உலக அமைதிக்காக மன்றாடுவது.

இயேசு விரும்பியதும் அதுவே பலி செலுத்த வரும்போதுஇ உங்கள் சகோதரஇ சகோதரிகளுடன் மனத் தாங்கல் கொண்டிருந்தால் பலி பொருட்களை அங்கேயே வைத்து விட்டு மனத் தாங்கலை சரி செய்து கொள்ளுகள்.

இயேசு விரும்பியது என்ன?

தந்தையே நாம் ஒன்றாயிருப்பது போல இவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக? –அமைதி இந்த அமைதியைத்தான் எதிர்பார்க்கிறோம். கொரானா நுண்ணுயிரி தாக்கத்திலிருந்து நமது நாடுமட்டும் அல்லஇ இந்த உலகமே விடுதலை பெற்று அமைதியடைய வேண்டுவது இன்று நாம் எதிர் நோக்கியிருக்கும் அமைதி. இதுவே இயேசு விரும்பியது.

இந்தப் பின்னனியில் விவிலியமும்இ இயேசுவின் உயிர்ப்பும் தரும் அமைதி விவிலியத்தில் அமைதிஇ அன்பு இந்தப் பின்னனியில் சொல்லப்பட்ட எழுத்தப்பட்டவையே எல்லாம் இந்த அமைதியை விதைப்பதற்கேஇ செயல்படுத்துவதற்கே இயேசு உலகிற்கு வந்தார் என்பதை விவிலியத்தில் பார்க்கிறோம். இதைத் தான் இயேசுவின் பிறப்பு நிகழ்வின் போது வானதூதர்களால் சொல்லப்பட்டது

.

(லூக்கா 2:13) “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. ஊலகினில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக.”

நாம் அமைதியில் இருப்பதே கடவுளுக்கு மாட்சி. அப்படியெனில் பிளவுகள்இ பிணக்குள் இன்றி இருப்பதே கடவுளின் பிறப்பு விரும்பியது.

யோவான் 14:27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். என் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல் நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். மருள வேண்டாம். இயேசு தந்த அமைதியைஇ செயல்படுத்தி உணர்தல் மருள வேண்டாம். இயேசு உயிர்ந்தபின் தன் சீடர்களை முதலில் சந்தித்த போதும் அவர் கூறியதுஇ உங்களுக்கு அமைதி உரித்தாகுக. இந்த அமைதி நமக்குச் சொல்வதென்னஇ இன்றைய நற்செய்தியில் 2 இடங்களில் வருவது போலஇ “அஞ்சாதீர்கள்” இன்று உங்களைச் சூழ்ந்து இருக்கும் அவல நிலைக் கண்டு அஞ்ச வேண்டாம். உள்ளம் மருள வேண்டாம். என் அமைதியை உங்கள் குடும்பங்களில் ஆறுபோல பாய்ந்தோடச் செய்வேன் என்றவர். நம் பயத்தை போக்கிஇ நம் உலகம் முழுவதிலும் அமைதியை ஏற்படுத்துவார். கோராணா கொள்ளை நோய் அகன்று போடும்.

இந்த அமைதியை நாம் பெற என்ன செய்ய?

1. விழித்திரு
2. விலகியிரு
3. தனித்திரு
4. செபித்திரு
5. வீட்டிலிரு
6. தவித்திரு

இவற்றை நாம் செய்கையில் இன்று நாம் எதிர்பார்க்கும் உயிர்ந்த இயேசு தரும் அருளும் அமைதியும் நம்மிடம் தங்கும்.

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு