இயேசு என்ற முடிவில்லாத ஒளியை இந்த உலக இருளின் சக்திகள் விழுங்கிட முயற்சித்தன. உலகின் ஒளி நானே என்று உரைத்தவரைக் கொலை செய்தது இந்த உலகம். ஆனால் அவர் உயிர்த்துவிட்டார்! சாவை வென்றவராய், சாத்தானை முறியடித்தவராய், பாவத்தை ஒழித்தவராய் இயேசு உயிர்த்து விட்டார். அல்லேலூயா! கோதுமை மணியாக மண்ணில் மடிந்தவர் (யோவா. 12:24) மிகுந்த பலனளிக்க உயிர்த்துவிட்டார். சாவையும், சாத்தானையும், பாவத்தையும் மட்டுமல்ல, உரோமை ஏகாதிபத்தியத்தையும், பரிசேயர், சதுசேயர் ஆணவத்தையும் தகர்த்து எரிந்துவிட்டார். இயேசு மரணத்தால் புதைக்கப்பட்டவர் அல்ல. மாறாக விதைக்கப்பட்டவர். எனவேதான் திருத்தூதர் பவுல் அடிகளார் சாவு வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? என்று வீர முழக்கமிடுகிறார்.
கல்லறை தேடி வந்த பெண்களை நோக்கி: உயிருள்ளவரை இங்கே தேடுவானேன்! அவர் இங்கே இல்லை. உயிர்த்துவிட்டார்! (லூக். 24:7) என வானதூதர்கள் அறிவித்தார்கள் அல்லவா! கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாக இருக்கும் (1 கொரி. 15:14-15) என்று அறிவிக்கிறார் பவுல் அடிகளார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்களே சாட்சிகள் (தி.ப. 2:32) என்றார் புனித பேதுரு.
ஆம்! அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இயேசுவின் உயிர்ப்பு உலக வரலாற்றை ஊடுருவிய நிகழ்ச்சி. திருச்சபையின் உயிர்நாடியாகும். விசுவாசத்தின் கருவாகும். உலக வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வாகும். மூன்று முறை தன் இறப்பு, உயிர்ப்பு பற்றி அறிவித்த நேரங்களில் சீடர்களின் மந்தப் புத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஆவியானவரைப் பெற்றுத் தெளிவுப் பெற்றபின், நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எங்களால் எடுத்துரைக்காமல் இருக்க முடியாது (தி.ப. 4:20) என்றார் புனித பேதுரு.
ஆம்! இன்று இயேசு உயிர்த்தார் என்ற வரலாற்று உண்மையைக் கொண்டாடுகிறோம். ஈஸ்டர் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்ளக் காத்திருக்கிறோம்.
- இயேசுவின் உயிர்ப்பில் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
- புனித பவுல் அடிகளார் (உரோ. 6:23) உரோமையருக்கு எழுதும் மடலிலே, பாவம் கொடுக்கும் கூலி சாவு என்று அறிவிக்கிறார். நாம் பாவத்தில் இருக்கும்வரை அடிமைப்பட்டுச் செத்துக் கிடக்கிறோம். ஆனால் நாம் இயேசுவோடு பாவத்திற்காக மரித்தோமென்றால் இயேசுவோடு உயிர்ப்போம். விடுதலை பெறுவோம்.
- மந்த புத்தியுள்ளவர்களே! மெசியா தாம் மாட்சிமை அடைவதற்கு முன் இத்துன்பங்களைப்பட வேண்டுமல்லவா ? (லூக். 24:26). கர்ப்பிணிப் பெண், குழந்தை பிறந்தவுடன் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறாள். குடிகாரக் கணவன் திருந்தி வாழும்போது மனைவி மகிழ்ச்சி அடைகிறாள். இவர்கள் மகிழ்ச்சிக்கு காரணம் இவர்கள் அனுபவித்த வேதனை. நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பும் இந்த உண்மையைத்தான் இன்று எடுத்துரைக்கிறது.
வாரத்தின் முதல் நாளில் விடியற்காலையிலே, புதிய வாழ்வைத் தேடி மதலேன் மரியாளும், மற்ற பெண்களும் சென்றார்கள். தேடலில் ஆர்வமுள்ள மாணவன் நல்ல ஆசானைக் கண்டடைந்ததுபோல தேடியவர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்டார்கள்.
ஒரு நாள் மாலை கல்லறைத் தோட்டத்தைக் கடந்து சென்றாள் ஒரு சிறுமி. கல்லறைத் தோட்டத்தில் நின்ற வயதான மனிதர் சிறுமியைப் பார்த்து, பொழுது சாய்ந்துவிட்டது. இந்த இருளில் உனக்குக் கல்லறைத் தோட்டத்தில் நடந்து செல்ல பயமில்லையா என்று கேட்டார். சிறுமியோ, எனக்குப் பயமே இல்லை. அதோ தெரிகிறது என் வீடு என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்ந்தாள். சிறுமியின் கண்களுக்கு அவளது வீடு கண் முன் காட்சி தந்ததால், கல்லறைத் தோட்டம் அவள் நினைவுக்கு வரவில்லை. ஆம்! அன்பார்ந்தவர்களே! இந்த மண்ணுலக வாழ்வுக்கு அப்பால் தெரியும் உயிர்ப்பு, அதனால் கிடைக்கும் வான் வீட்டைப் பாருங்கள். அந்த வான் வீட்டுக்கு இயேசு தன் உயிர்ப்பால் நமக்குப் பட்டா வழங்கிவிட்டார்கள். இயேசுவின் உயிர்ப்பு புது வாழ்வு தருகிறது.
1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றிய எல் சால்வடோர் நாட்டுப் பேராயர் ஆஸ்கார் ரோமேரோ, தான் கொலை செய்யப்படுமுன் சொன்னார்: "இறப்புக்கு நான் அஞ்சவில்லை. இறப்பது நானாக இருக்க, உயிர்ப்பது சரித்திரமாகவும், சமுதாய மாற்றமாகவும் இருக்கப் போகிறது என்று மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அவரது இறப்பு, தென் அமெரிக்க மக்களுக்கு உயிர்ப்பின் சரித்திரமாக, சமுதாய மாற்றமாக மாறியுள்ளது. ஆனால் இயேசுவின் உயிர்ப்பு எல்லா மக்களுக்கும் உயிர்ப்பும், வாழ்வும் ஆகும். காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும் தன் வயலுக்குத் தண்ணீர் வரும் வாய்க்காலைச் சரி செய்து திறந்துவிட்டால்தான் விளைச்சல் கிடைக்கும். குடம் ஓட்டையாக இருந்தால் குழாயில் இருந்து விழும் தண்ணீர் குடத்தை நிறைக்காதே!
அதேபோல சாவின் தீய சக்திகளான வன்முறை, பழி வாங்கல், சுய நலம், பொறாமை, ஏழைகளை வஞ்சித்தல், சாதியம் போன்ற சாக்கடைகளிலிருந்து நாம் கழுவப்பட வேண்டும். அப்போது உயிர்த்த ஆண்டவரின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி நம்மில் உயிர் பெறும்.
நினைவுதான் வாழ்வு
மனிதனைக் கடவுள் தமது சாயலில் படைத்து (தொநூ 1:27). அவன் கையில் அழகான உலகத்தைக் கொடுத்து, அவன் வாழ்வாங்கு வாழ அவனுக்கு ஆசியளித்தார் (தொநூ 1:28). மக்களுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து ஏற்பட்டதோ அப்பொழுதெல்லாம் அவர்களது கூக்குரலுக்கு அவர் செவிசாய்த்து, அவர்களை அரவணைத்துக் காத்தார் (விப 14:15-15:1). அவர்கள் மனம் சோர்ந்து போனபோதெல்லாம் ஆறுதல் நிறைந்த வாக்குறுதிகளால் அவர்கள் வாழ்வை நிரப்பி அவர்களை உற்சாகப்படுத்தினார் (எசே 36:26-27).
இயேசுவின் உயிர்ப்பு என்பது மனிதர்கள் மீது இறைவன் கொண்டிருந்த அன்பின் உச்சக்கட்டம். மனிதர்களின் கேள்விகள் அனைத்திற்கும் மீட்பின் வரலாற்றில் பதில் சொல்லி வந்த இறைவன் எல்லாருடைய மனத்தையும் ஆட்டிப்படைத்த மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு இயேசுவின் உயிர்ப்பின் வழியாகப் பதில் சொல்லச் சித்தமானார்.
மரணத்திற்குப் பின் ஒரு புத்தம் புதிய வாழ்வு நமக்காகக் காத்திருக்கின்றது. அங்கே துன்பமிருக்காது. துயரமிருக்காது. சோதனை இருக்காது. வேதனையிருக்காது! அங்கே எல்லாரும் சந்திரனைப் போல் அழகுள்ளவர்களாக, சூரியனைப் போல் ஒளிவீசுபவர்களாக இருப்பார்கள் என்பதை உயிர்த்த இயேசு இன்று உணர்த்தியிருக்கின்றார்.
ஒரு கல்லறைத்தோட்டம். அந்தத் தோட்டத்தின் வாசலிலே அமர்ந்திருந்த வயதான மனிதர் ஒருவர். அந்தக் கல்லறைத் தோட்டத்தைக் கடந்து செல்ல நினைத்த ஒரு சிறுமியைப் பார்த்து. பொழுது சாய்ந்துவிட்டது. இந்த இருளில் இந்த கல்லறைத் தோட்டத்தில் நடந்து செல்ல உனக்குப் பயமாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுமியோ, எனக்கென்ன பயம்? அதோ தெரிகின்றதே அதுதான் எங்கள் வீடு என்று சொல்லிவிட்டு அவளது பயணத்தைத் தொடர்ந்தாள். அந்தச் சிறுமியின் வீடு அவள் கண்முன் தெரிந்ததால் அந்தக் கல்லறைத் தோட்டத்திலிருந்த கல்லறைகள் அவள் மனதில் தோன்றவில்லை! நினைவுதான் வாழ்வு என்பதை நாமறிவோம். கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அவரைப் போல் உயிர்த்தெழுவோம் என்கின்றார். புனித பவுலடிகளார் (உரோ 6:4).
இந்த 21-ஆம் நூற்றாண்டில் சிலர், எங்கள் கண்களை இமைகள் மூடுகின்றன. ஆனால் கண்ணுக்குள்ளிருக்கும் கலக்கம் மறையவில்லை. என்கின்றார்கள். சிலர், எங்கள்மீது கடற்கரை காற்று வீசுகின்றது. ஆனால் எங்கள் உடல்மீது பட்ட காயத்தால் ஏற்பட்ட எரிச்சல் இன்னும் தீரவில்லை என்கின்றார்கள். சிலர். எங்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தொட்டியிலிட்டுத் தாலாட்டுகின்றோம். ஆனால் அவர்கள் பயத்தால் உறங்க மறுக்கின்றார்கள் என்கின்றார்கள். சிலர். தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி. போனது போக எது மீதி? என்கின்றார்கள். பலர் உயிரோடு கல்லறைக்கு நடந்து சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
இவர்களோடு இதோ உயிர்த்த கிறிஸ்து பேசுகின்றார் : இந்த மண்ணுலக வாழ்வுக்கு அப்பால் தெரியும் உயிர்ப்பு என்னும் வான் வீட்டைப் பாருங்கள். முடிவில்லா வாழ்வு உண்டு. உங்களுக்கு என் உயிர்ப்பைப் பற்றிய, வான் வீட்டைப் பற்றிய சந்தேகமிருந்தால் இன்றைய நற்செய்தியிலே வரும் மகதலா மரியாவைக் கேளுங்கள்; புரட்டப்பட்டிருந்த கல்லறை கல்மீது அமர்ந்திருந்த வானதூதரைக் கேளுங்கள் : என் சீடர்களைக் கேளுங்கள். உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி ஏற்றப்படும்போது உங்கள் வாழ்வைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கும் அச்சம், அதிர்ச்சி, கலக்கம். மயக்கம் அனைத்தும் உங்களைவிட்டு அகன்று போக. உங்கள் உள்ளத்தில் இந்த உலகத்தால் உங்களுக்குக் கொடுக்க முடியாத அமைதியும், மகிழ்ச்சியும், ஒளியும் குடிகொள்ளும். மேலும் அறிவோம் :
உறங்கு வதுபோலும் சாக்கா(டு) :உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (குறள் : 339).
பொருள்:
நிலையில்லாத இவ்வுலக வாழ்வில் சாவு என்பது உறக்கம் கொள்வது போன்றது. பிறப்பு என்பது உறக்கம் கலைந்து விழிப்பது போன்றது!
ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிக்க விரும்பிய இளைஞன் அதைப்பற்றி ஒரு பெரியவரிடம் ஆலேசானை கேட்டபோது, அவர் இளைஞனிடம், "நீ தோற்றுவிக்கும் புதிய மதம் உன் காலத்திற்குப் பின்னும் நீடிக்க வேண்டுமென்றால், ஒரு வெள்ளிக்கிழமை அன்று நீ சிலுவையில் அறையப்பட்டு சாகவேண்டும்; அடுத்து வரும் ஞாயிறு அன்று நீ உன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ வேண்டும்" என்றார். அப்பெரியவர் கூறியதன் உட்பொருளை அறிந்த அந்த இளைஞன் தனது எண்ணத்தைக் கைவிட்டு விட்டான்.
கிறிஸ்தவ சமயம் இரண்டாயிரம்ஆண்டுகளுக்குப் பிறகும் பசுமையாக இருப்பதற்குக் காரணம், அது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடித்தளமாசுக் கொண்டுள்ளது. கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்த அதிலிருந்து வியாபாரிகளைச் சாட்டையால் அடித்து வெளியேற்றினார். அப்போது யூதர்கள் அவரிடம், "இவ்வாறு செய்ய உமக்கு என்ன அதிகாரம் உண்டு?" என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். அவர் குறிப்பிட்டது தமது உடலாகிய கோவிலைப்பற்றி என்பதை அவர் உயிர்த்தெழுந்தபோது அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து இயேசுவை நம்பினர் (யோவா 2:18-21).
கிறிஸ்து அவர் முன்னறிவித்தபடி இறந்த மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். ஞாயிறு காலை கிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்ற பெண்களிடம் இரு வானதூதர்கள், "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ” என்று கூறினர் (லூக் 24:5). இன்றைய நற்செய்தியில், யோவான் காலியான கல்லறைக்குள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார் (யோவா 20:9). காலியாள கல்லறை அவருக்கு வழங்கிய செய்தி: "கிறிஸ்து உயிர்த்துவிட்டார்."
நற்செய்தி நூல்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகின்றன என்பதைவிட, கிறிஸ்துவின் உயிர்ப்புத்தான் நற்செய்தி நூல்களுக்கு விளக்கம் தருகிறது. ஏனெனில், திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை யென்றால், நாங்கள் பறைசாற்றும் நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்" (1 கொரி 15:14).
திருத்தூதர்களுடைய போதனையின் மையக்கரு கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்புமாகும். இன்றைய முதல் வாசகத்தில் இதைத்தான் பேதுகு யூத மக்களுக்கு அறிவிக்கின்றார். பிறவியிலேயே ஊனமுற்றிருந்தவரை எழுந்து நடக்கச் செய்துவிட்டு, பேதுரு யூத மக்களிடம் கூறியது: "வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்” (திப 3:15), "திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்தனர்" (திப 4:33).
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது உயிர்ப்பிற்கு முன்னடையாளம். இதைப்பற்றித் திருத்தூதர் பவுல் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார், இறந்தோர் உயிர்த்தெழமாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை" (1 கொரி 15:13), "நாம் அனைவரும் சாசு மாட்டோம். ஆனால்அனைவரும் மாற்றுருபெறுவோம்... சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்து கொள்ளும் (1 கொரி 15:54). கிறிஸ்து சாவின் கொடுக்கை முறித்துவிட்டார்" (1 கொரி 15:55).
ஒவ்வொரு சாவுமணி அடிக்கும்போதும் கிறிஸ்து கூறுவது: உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா 11:25). நாம் இம்மையிலேயே கிறிஸ்துவோடு சாவைக் கடந்து சென்றுவிட்டோம் (யோவா 5:24). இது யோவானின் நிறைவுகால இறையியல் கருத்து.
ஒருநாள் நான் வீதியிலே சென்றபோது ஒருவர் என்னைப் பார்த்து, "இயேசு ஜீவிக்கிறார். அல்லேலூயா" என்றார், ஆம், இயேசு இன்றும் நம்முடன் இருக்கிறார். அவருடைய இறுதி வாக்குறுதி: "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத் 28:20).
கிறிஸ்து எந்நாளும் நம்முடன் இருக்கிறார்; பயணிக்கிறார்; உரையாடுகிறார்; பேய்களை ஓட்டி. நோய்களைக் குணமாக்கி, ஆவியால் நிரப்புகிறார். மறைநூலைப் புரிந்துகொள்ளும் வண்ணம் நமது மனக்கண்களைத் திறந்து விடுகிறார். அப்பம் பிடுகையில் அவரை அடையாளம் கண்டுகொள்ளச் செய்கிறார், ஒருவர் ஒருவரை அன்பு செய்து, மண்ணுலகின் இறுதி எல்லைவரை அவருடைய சாட்சிகளாக மாற்றுகிறார். சின்னஞ் சிறியவர்களிடமும் அவர் தம்மை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவி புரியும் நல்லுள்ளத்தை நமக்கு நல்குகிறார்; எனவே துணிவு கொள்வோம்; மகிழ்வுடன் இருப்போம். நாம் உயிர்ப்பின் மக்கள்; நமது கீதம்,அல்லேலூயா!
ஒருவர் ஓர் உயர்ந்த கொடிமரத்தில் ஏறி, கீழே இறங்கியபோது அவரது தலை சுற்றியது. "ஐயோ! நான் செத்தேனே" என்று கதற, கொடிமரத்தின் அடியில் இருந்தவர்கள்: "தம்பி, கீழே பார்க்காமல், மேலே பார்த்துக்கொண்டே இறங்கு" என்றனர். அவரும் அவ்வாறே செய்து கீழே இறங்கினார். நாம் நம்மையும் நம் பிரச்சினைகளையும் பார்க்கும்போது நமது தலை சுற்றுகிறது; இரத்த அழுத்தம் உயர்கிறது; வாந்தி வருகிறது; வயிறு வலிக்கிறது. இருப்பதைவிட இறப்பது மேல் என்று தோன்றுகிறது. ஆனால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர் களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் அமச்ந்திருக்கிறார்" (கொலோ 3:1), எனவே, நாம் மேலே பார்ப்போம்: இதயங்களை மேலே எழுப்புவோம். உதவி நமக்குக் கடவுளிடமிருந்து வரும். அவரே விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர். அவர் நம் கால் இடறவிடமாட்டார். அவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை. அவர் நாம் போகும்போதும் வரும்போதும், இப்போதும் எப்போதும் நமது உடலையும் ஆன்மாவையும் காப்பார் (காண். திபா 21).
இவ்வுலகில் கடைசி நாள்வரை உண்மைக்கும் பொய்க்கும், சாவுக்கும் வாழ்வுக்கும், இருளுக்கும் ஒளிக்கும் இடையே தொடர் போராட்டம் நடந்துகொண்டே இருக்கும். ஆனால் இறுதியில் பொய்மை புதைக்கப்பட்டு உண்மை உயிர்த்தெழும். சாவுக்கு சாவுமணி அடிக்கப்படும்; வாழ்வு மலரும். இருள் மறைந்து, ஒளி உதயமாகும்.
"ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே!
இன்று அகமகிழ்வோம்! அக்களிப்போம்!
அல்லேலூயா!" (தியா118:24).
இந்தப் புழுதியும் புத்துயிர் பெறும்
நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் புனித உணர்வுமாக
ஒரு தவப்பயணத்தைத் தொடங்கினோம் திருநீற்றுப் புதன் சொல்லும் செய்தி என்ன?
மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் என்பது.
உயிர்ப்புப் பெருவிழா உரைக்கும் செய்தியோ... இந்தப் புழுதியும்
புத்துயிர் பெறும், புதுவாழ்வுக்கு உயிர்க்கும் என்பதுதானே!
அஸ்தமனம் சூரியனுக்கு வீழ்ச்சி அல்ல. கல்வாரி மரணம் இயேசுவுக்குத் தோல்வி அல்ல. தோல்விக்குப் பிறகு வெற்றி என்பார்கள். இயேசுவைப் பொருத்தவரை தோல்வியே வெற்றி!
வாழப் பிறந்தவர்கள் மனிதர்கள் நாம். சாவதற்கென்றே பிறந்தவர் அன்றோ இயேசு! மரணம்தான் இயேசுவின் மனிதப் பிறப்பின் நோக்கம் என்றால், இலட்சியத்தின் நிறைவேற்றம் எப்படித் தோல்வியாக இருக்க முடியும்? அந்த வெற்றிக்கு இறைவன் கொடுத்த வடிவம்தான் இயேசுவின் உயிர்ப்பு.
அந்த வெற்றி உயிர்ப்பில் வேரூன்றியதுதானே நமது நம்பிக்கை! "இயேசு ஆண்டவர் என அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" (உரோமை 10:9)
இருட்டத் தொடங்கிய நேரம் ஒருவர் தன் நண்பரைச் சந்திக்கச் சென்றார். ஒரு காலத்தில் நிலக்கரிச் சுரங்கம் இருந்த பகுதி. இப்போது பாழடைந்து கிடந்தது. இங்குமங்குமாக ஆழக்குழிகள். அந்த வழியே சென்ற மனிதர் தவறி ஒரு சுரங்க வாயிலில் சருக்கி உருண்டு உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது கையில் தட்டுப்பட்ட ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு அபயக்குரல் எழுப்பினார். கையில் விளக்கோடு அந்தப்பக்கம் வந்த ஒருவர் குரல் வந்த பள்ளம் நோக்கி விளக்கைத் திருப்பினார். அவருக்கே ஆச்சரியம்! தொங்கிக் கொண்டிருந்தவரின் காலுக்குடியில் கால்அடி கீழே பாறை போல் உறுதியான மண்பகுதி இருப்பதைப் பார்க்கிறார். "உன் காலுக்கடியில் உறுதியான நிலம் இருக்கிறபோது, நீ ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்கிறார். ஆம் காலுக்கடியில் நிலமிருந்தும், அதைக் காணாமல் உணராமல் ஏதோ படுபாதாளம். இருப்பது போல, உடல்நோக எத்தனை நேரம் வீணாகத் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்!
இயேசுவின் உயிர்ப்பு மறைக்க முடியாதபடி முகத்தில் இருக்கும் மூக்குப் போல வெளிப்படையாக இருந்தும், கல்வாரி மரணத்தையே நினைத்துக் கலங்கிக் கொண்டிருப்பதா?
இயேசுவின் உயிர்ப்பு அலகையின் மீதும் பாவத்தின் மீதும் அதன் விளைவான நோவு, சாவின் மீதும் கொண்ட வெற்றி. ஆனால் இது இயேசுவோடு மட்டும் முடிந்து விட்ட ஒன்று எனில் அதுவெறும் வரலாற்று நிகழ்வாகவே இருக்கும். மாறாக இறைத்தந்தை இயேசுவில் பெற்ற வெற்றியை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் காண வேண்டுமென்று விரும்புகிறார். இல்லையென்றால்...
"பசுமை பாலைவனமாவது, வாழ்வு சவக்காடாவது
வளமை வயிற்றெரிச்சலாவது, கண்ணியம் கண்ணீராவது
அன்றாட வாழ்க்கையெனில் அந்தக் கடவுள்
இருந்தால் என்ன, இறந்தால் என்ன
உயிர்த்தால் என்ன, ஒழிந்தால் என்ன?!"
என்ற யாரோ ஒருவரின் உள்ளக் குமுறல் வேதனையிலும் விரக்தியிலும் வெடித்துச் சிதறும்.
மரணம் என்பது புதிய வாழ்வுக்கான நுழைவாயில். சாகா வரம் வேண்டித்தான் மனித இனமே, கடவுளின் படைப்புக்களே துடிக்கின்றன. திருத்தூதர் பவுல் சொல்வார் "இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு. காத்திருக்கிறது" (உரோமை.8:18,19). இந்தப் படைப்புகளின் வேட்கையை இயேசுவின் உயிர்ப்பு நிறைவு செய்கிறது.
நமது வாழ்விலும் நாம் சார்ந்த சமுதாயத்திலும் இயேசுவின் உயிர்ப்பு வெளிப்பட வேண்டும். சான்றாக 1980 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த எல்சால்வதோர் நாட்டுப் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, தான் கொலை செய்யப்படு முன் சொன்னார்: "இறப்பதற்கு நான் அஞ்சவில்லை. இறப்பது நானாக இருக்க, உயிர்ப்பது சரித்திரமாகவும் சமுதாயமாகவும் இருக்கப் போகிறது என்று மகிழ்ச்சி அடைகிறேன்”.
இயேசுவின் உயிர்ப்பு எல்லா மக்களுக்கும் உயிரும் உயிர்ப்பும் ஆகும். “அவர்கள் என் உடலைக் கொல்ல முடியுமே தவிர என் குரலை அடக்கிவிட முடியாது. நான் இறந்தால், மீண்டும் எல்சால்வதோர் மக்களில் உயிர்த்தெழுவேன்”. இது எல்சால்வதோர் மக்களுக்காவே உழைத்து இரத்த சாட்சியாக இறந்த பேராயர் ஆஸ்கர் ரொமோரோவின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வெகுசில ஆண்டுகளுக்குள்ளேயே எத்தகைய செழித்த விளைச்சலை அறுவடை செய்தது என்பதை இந்த உலகம் அறியும்!
கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை திருச்சபை கொண்டாடிய ஒரே விழா உயிர்ப்பு விழா, இன்றும் நாம் நினைவு கூரும் விழாக்களில் முதன்மையானது, முக்கியமானது. இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இயேசு உயிர்ப்பதில்லை.
சண்டையும் சச்சரவும் மறைந்து சமாதானம் பிறக்கின்ற போதெல்லாம் அங்கே இயேசு உயிர்க்கிறார்! பகைமை மடிந்து அன்பும் அமைதியும் தளிர்க்கின்ற போதெல்லாம் அங்கே இயேசு உயிர்க்கிறார்! அழுத ஏழையின் கவலை தீர்ந்து கண்ணீர் உலரும் போதெல்லாம் அங்கே இயேசு உயிர்க்கிறார்! துன்புற்ற மக்கள் ஒன்று திரண்டு நம்பிக்கையோடு உரிமைக்குரல் உயர்த்தும் போதெல்லாம் வெற்றி வீரராய் அங்கே இயேசு உயிர்க்கிறார்! உயிர்த்த இயேசுவை மீண்டும் நம் பாவங்களால் இறக்கச் செய்யாமல் பார்த்துக் கொள்வோம். இயேசு உயிர்த்தார்! இயேசுவில் நாமும் உயிர்ப்போம்! உயிர்க்க வாழ்த்துக்கள். அல்லேலூயா!
சின்னச்சின்னதாய் உயிர்ப்பைக் காண...
இயற்கையில் ஏற்படும் ஒருசில அற்புத நிகழ்வுகள், இறைவனின் சக்திமிக்க செயல்களாகப் பதிவாகியுள்ளன. இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பயணத்தைத் துவங்கியபோது, செங்கடலின் நீர்த்திரளை இறைவன் சக்திமிகுந்த காற்றினால் பிரித்து, அதில், அவர்கள், பாதம் நனையாமல் கடந்து சென்றதை அறிவோம். இந்நிகழ்வை, உயிர்ப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு திருவழிபாட்டில் வாசிக்கக் கேட்டோம் (விடுதலைப் பயணம் 14:15 - 15:1). இயேசு பிறந்த வேளையில், ஓர் அற்புத விண்மீன் வானில் தோன்றி, மூன்று அறிஞர்களை வழிநடத்தியது. பெந்தக்கோஸ்து நாளன்று, சக்திமிகுந்த காற்று மற்றும் நெருப்பு நாவுகள் வழியே அன்னை மரியாவின் மீதும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவியார் இறங்கிவந்தார். கல்வாரியில் இயேசு உயிர் துறந்தபோது, நண்பகல் வேளையில் பூமியை இருள் சூழ்ந்தது. உயிர்ப்பு ஞாயிறு காலையில், நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை, திருவிழிப்பின்போது நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம்: ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். (மத்தேயு 28:1-2)
நிலநடுக்கம், சுனாமி, பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, அவற்றை, நாம், மரணத்தைக் கொணரும் அழிவின் சின்னங்களாகவே பெரும்பாலும் கருதுகிறோம். உயிர்ப்பு ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கமோ, நம் எண்ணங்களைப் புரட்டிப்போடும் வண்ணம், கல்லறைக் கல்லைப் புரட்டி, வாழ்வை பறைசாற்றியது. மரணத்தை வெல்லும் சக்திபெற்றது வாழ்வு என்பதே, உயிர்ப்பு விழாவின் மையக்கருத்து.
நாம் வாழும் இன்றையச் சூழலிலும், நிலநடுக்கத்தின் விளைவாக உருவாகும் அழிவுகளின் நடுவே, வாழ்வு வெளிப்படும் நிகழ்வுகளை நாம் செய்திகளாக வாசிக்கிறோம். துருக்கி மற்றும் சிரியா நாடுகளில், இவ்வாண்டு பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றிய வேதனை செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டுவந்தோம். ஆயிரமாயிரம் மக்களைப் பலிகொண்ட அந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் பல்லாயிரம் உயிர்கள் இறந்த செய்திகள் வெளிவந்தபோது, அதே இடிபாடுகளிலிருந்து உயிர்கள் மீட்கப்பட்ட செய்திகளையும் அறிந்தோம். நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த வேளையில் தாய் ஒருவர், பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின் உயிர் துறந்தார். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இறந்துபோன தாயின் தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டு, உயிரோடு இருந்த குழந்தையைக் காப்பாற்றிய செய்தியைக் கேள்விப்பட்டோம். அதையடுத்து, பல நூறு உயிர்கள் அந்த இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதையும், ஒருவர், நிலநடுக்கம் ஏற்பட்டு, 13 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்டதையும் கேள்விப்பட்டோம். கல்லறைகளிலிருந்து நம்மை உயிருடன் கொணரும் சக்தி இறைவனுக்கு உண்டு என்பதற்கு, துருக்கி, மற்றும் சிரியாவில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் சாட்சிகளாக வாழ்வர் என்று நம்பலாம்.
2011ம் ஆண்டு, அக்டோபர் 23, ஞாயிறன்று, துருக்கி நாட்டின் Van என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் (7.2 ரிக்டர் அளவு) பல நூறு கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. அன்றைய நிலவரப்படி, 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; 2000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றனர். ஒரு வாரத்தில், இறந்தோரின் எண்ணிக்கை 604 என்றும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 4,100 என்றும் கூறப்பட்டது. மரணங்களின் எண்ணிக்கை குறித்த செய்திகள் வெளிவந்த அதே நாள்களில், வாழ்வைப்பற்றிய ஒரு செய்தியும் வெளியானது. பிறந்து, 2 வாரங்களே ஆகியிருந்த, Azra Karaduman என்ற குழந்தை, நிலநடுக்கம் ஏற்பட்டு 48 மணி நேரங்கள் சென்று, இடிபாடுகளின் நடுவிலிருந்து காப்பாற்றப்பட்டது. அதுமட்டுமல்ல, அக்குழந்தை காப்பற்றப்பட்ட அதே இடத்தில், குழந்தையின் தாயும் (Semiha), பாட்டியும் (Gulsaadet) மீட்கப்பட்டனர்.
இக்குழந்தையை, "நம்பிக்கையின் முகம்" என்று ஊடகங்கள் அழைத்தன. Azra என்ற அக்குழந்தையின் பெயருக்கு, "பாலைநிலத்து மலர்" என்பது பொருள் என்றும், 2 வாரக் குழந்தை, இரு தலைமுறைகளைக் காப்பாற்றியது என்றும், இந்நிகழ்வை, ஊடகங்கள் விவரித்தன.
அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் (CBS) இச்செய்தியை ஒளிபரப்பியபோது, Mark Philips என்ற செய்தித் தொடர்பாளர், அழகான ஒரு கருத்தை பதிவுசெய்தார்: "பெரிய, பெரிய புள்ளிவிவரங்களைக் காட்டிலும், சின்னச் சின்ன மனிதாபிமானக் கதைகள் நம் கற்பனையைக் கவர்கின்றன" என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், துருக்கியில், ஜப்பானில் (2011), ஹெயிட்டியில் (2010), பல ஆசிய நாடுகளில் (2004), ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இறந்தோர், காயமுற்றோர் ஆகியோரின் புள்ளிவிவரங்கள் நம் மனதில் பதிந்ததைவிட, அந்த அழிவுகளின் நடுவிலிருந்து, உயிர்கள் மீட்கப்பட்டச் செய்திகள், நம்மை அதிகம் கவர்ந்தன என்பதையும், அவை, நம் உள்ளங்களில், நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன என்பதையும் மறுக்கமுடியாது.
2010ம் ஆண்டு, சனவரி மாதம், ஹெயிட்டியில் நிலநடுக்கத்தால் எற்பட்ட இடிபாடுகளிலிருந்து, பதினாறு நாட்களுக்குப் பின், Darline Etienne என்ற இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்டது, ஓர் உயிர்ப்பு என்று கூறப்பட்டது. அதே 2010ம் ஆண்டு, சிலே நாட்டு சுரங்க விபத்தில் அகப்பட்ட 33 தொழிலாளிகள், 69 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டது, உயிர்ப்பெனக் கொண்டாடப்பட்டது.
2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, சிலே நாட்டின் அட்டக்காமா (Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள, தாமிர, தங்கச் சுரங்கம் ஒன்றில் சிக்கிக்கொண்ட 33 தொழிலாளர்கள், அக்டோபர் 12ம் தேதி, அதாவது, 69 நாட்களுக்குப் பின், மீட்கப்பட்டனர். இந்தச் சாதனை முடிந்ததும், சிலே நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Alejandro Karmelic அவர்கள், "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது" என்று கூறினார்.
ஆயர் Karmelic அவர்கள், உயிர்ப்பைக் குறித்து, அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்டது பொருத்தமாகத் தெரிகிறது. உயிர்ப்புக்கும், வசந்தகாலத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதை அறிவோம். பூமியின் வட பாதி கோளத்தில் (Northern hemisphere), மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரும் வசந்தகாலத்தையொட்டி, திருஅவையில் தவக்காலமும், உயிர்ப்புத் திருநாளும் கொண்டாடப்படுகின்றன. பூமியின் தென் பாதி கோளத்தில் (Southern hemisphere), அமைந்துள்ள சிலே நாட்டில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வசந்தகாலம் வரும். எனவே, அந்த சுரங்கத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தில், அவர்கள் உயிர்ப்புத் திருநாளைக் கொண்டாடியிருந்தாலும், பொருத்தமாகவே இருந்திருக்கும்.
கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், சாத்தப்பட்ட அறையை, ஒரு கல்லறையாக மாற்றி, அதில், தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி, இயேசுவை உலகறியச் செய்தனர். அதேபோல், பாறைகளால் முற்றிலும் மூடப்பட்டு, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்தனர்.
இங்கு நாம் குறிப்பிட்ட 'உயிர்ப்பு நிகழ்வுகள்' ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்தவை. ஆனால், ஊடகங்களில் செய்திகளாக வராமல், நம் ஒவ்வொருநாள் வாழ்விலும், உயிர்ப்பு அனுபவம், சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியே நடந்தவண்ணம் உள்ளன. இவை எதுவும் நம் கவனத்தை ஈர்ப்பது கிடையாது. இயேசுவின் உயிர்ப்பு முதல்முறை நிகழ்ந்தபோதும், அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. இத்தகைய உயிர்ப்பு நிகழ்வுகளைக் காண்பதற்கு அன்பின் விழிகள் அவசியம். அன்பின் விழிகள் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து, இறையியலிலும், ஆன்மீகத்திலும் புலமைபெற்ற அருள்பணி Ronald Rolheiser அவர்கள், "உயிர்ப்பைக் காண" (‘Seeing the Resurrection’) என்ற தலைப்பில் பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துக்கள், நம்மை சிந்திக்க அழைக்கின்றன.
இறைவன் நம் சுதந்திரத்தைப் பறித்து, தன் வலிமையைத் திணித்து, நம்மை, வலுக்கட்டாயமாக ஒன்றைக் காணும்படி செய்வதில்லை. நம் சுதந்திரத்தை எப்போதும் மதிப்பவர் அவர். இறைவனின் இந்தப் பண்பு, இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உயிர்ப்பு நிகழ்வு, கண்ணையும், கருத்தையும் பறிக்கும் பிரம்மாண்டமான நிகழ்வாக, தலைப்புச் செய்தியாக நிகழவில்லை. இயேசுவின் பிறப்பைப் போலவே, அவரது உயிர்ப்பும் மிக அமைதியாக நிகழ்ந்தது.
இயேசுவின் உயிர்ப்பை ஒரு சிலர் கண்டனர். மற்றவர்களால், அவரைக் காண இயலவில்லை. உயிர்ப்பு என்ற பேருண்மை, ஒரு சிலரில், பெரும் மாற்றங்களை உருவாக்கியது. வேறு சிலரோ, அந்த பேருண்மையைப் புரிந்துகொள்ள மறுத்ததோடு, அதை அழிக்கவும் முயற்சிகள் செய்தனர். இந்த வேறுபாடு ஏன்? 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித விக்டரின் ஹுகோ என்பவர் கூறுவது இதுதான்: "அன்பின் கண்களால் காணும்போது, சரியான முறையில் காணமுடியும். பேருண்மைகளை சரியான முறையில் புரிந்துகொள்ள முடியும்."
அன்பின் கண்கள் கொண்டு பார்த்த மகதலாவின் மரியா, உயிர்ப்பு நாளன்று விடியற்காலையில் தன் அன்புத் தலைவனின் உடலுக்கு உரிய மாண்பை வழங்க நறுமணத் தைலத்துடன் கல்லறைக்குச் சென்றார் என்பதை உயிர்ப்பு ஞாயிறு காலைத் திருப்பலியின் நற்செய்தியாக வாசிக்கிறோம். மனமெங்கும் நிறைந்திருந்த அன்புடன் கல்லறைக்குச் சென்ற மரியா, உயிர்ப்பு என்ற பேருண்மையின் முதல் திருத்தூதராக மாறினார். ஏனைய சீடர்கள் தங்கள் கவலைகளாலும், அச்சத்தாலும் மூடிய கதவுகளுக்குப் பின் பதுங்கியிருந்த வேளையில், மகதலாவின் மரியா துணிவுடன் கல்லறைக்குச் சென்றார். உயிர்த்த இயேசுவை சந்தித்த முதல் சீடராக மாறினார்.
நம்மைச் சுற்றி ஒவ்வொருநாளும் நிகழ்ந்துவரும் அழிவுச் செய்திகளின் விளைவாக, உயிர்ப்பின் நம்பிக்கை நம்மைவிட்டு விலகிச் செல்கிறது. இத்தனை அழிவுகளின் நடுவிலும், அன்பின் கண்கள் கொண்டு பார்க்கப் பழகினால், நம்மைச் சுற்றி சின்னச்சின்னதாய் உயிர்ப்பு நிகழ்வதைக் காணமுடியும். இத்தகைய வரத்தை, உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
“அவர் இங்கே இல்லை”
நிகழ்வு
ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில், மறைக்கல்வி மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்த ஆசிரியர், இயேசு எல்லா இடத்திலும் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதற்காக, மறைக்கல்வி மாணவர்களிடம், “இயேசு எல்லா இடத்திலும் இருக்கின்றார்; அவர் இல்லாத ஏதும் இவ்வுலகில் உண்டோ?” என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும் “இல்லை” என்று ஒருமித்த குரலில் சொன்னபொழுது, அந்தக் கூட்டத்தில் இருந்த புனிதா என்ற சிறுமி மட்டும் “ஆம்” என்றாள். புனிதா மிகவும் புத்திசாலி என்பதாலும் அவள் சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கும் என்பதாலும், மறைக்கல்வி ஆசிரியர் அவளிடம், “இயேசு இல்லாத இடம் எது?” என்று கேட்டார். உடனே புனிதா ஆசிரியரிடம், “இயேசு இல்லாத இடம், அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை” என்றாள்.
இப்படிச் சொல்லிவிட்டு, அவள் தன்னுடைய கையில் இருந்த திருவிவிலியத்தைத் திறந்து, மத்தேயு நற்செய்தி 28: 6 இல் இருந்த, “அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்...” என்ற இறைவார்த்தையை வாசித்து முடித்தாள். இதைக் கேட்டு வியந்து போன மறைக்கல்வி ஆசிரியர் புனிதாவை வெகுவாகப் பாராட்டினார்.
ஆம். இயேசு அவர் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறையில் இல்லை. அவர், தான் சொன்னது போன்றே உயிர்த்தெழுந்தார். அதைத்தான் இன்றைய நாளில் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவில் இன்றைய இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உயிர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
இயேசு கிறிஸ்து சொல்வது ஒன்றும் செய்வதும் ஒன்றுமாய் இருந்தவர் அல்லர்; அவர் சொல்லிலும் செயலிலும் வல்லவராக இருந்தார் (லூக் 24:19). அப்படிப்பட்டவர், தான் இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று மூன்றுமுறை முன்னறிவித்தார் (மத் 16: 21, 17: 22-23, 20: 17-19) அவர் முன்னறித்தது போன்றே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். ஆகையால், இயேசுவின் உயிர்த்தெழுதலை அவர் சொல்லிலும் செயலிலும் வல்லவர் என்பதற்குச் சான்றாகச் சொல்லலாம்.
இப்படிச் சொல்லிலும் செயலிலும் வல்லவரான இயேசுவின் உயிர்ப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது. இயேசுவின் உயிர்ப்பு பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தததாக இருந்தாலும், மூன்று விதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
முதலாவதாக, இயேசுவின் உயிர்ப்பு, நம்முடைய நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அடிப்படையாக இருக்கின்றது (1கொரி 15: 14). தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவித்தபொழுது, அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தியே நற்செய்தி அறிவித்து வந்தார்கள். அந்த வகையில் இயேசுவின் உயிர்ப்பு நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அடிப்படையாக இருக்கின்றது.
இரண்டாவதாக, இயேசுவின் உயிர்ப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது எனில், அது, நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை அளிப்பதாக இருக்கின்றது. புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்” (2 திமொ 2:11) என்று குறிப்பிடுவார். ஆகையால், இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை அளிப்பதால், அதை முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம்.
மூன்றாவதாக, இயேசுவின் உயிர்ப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது எனில், அது, இயேசு இன்றும் நம் நடுவில் வாழ்கின்றார் என்பதை உறுதிபடச் சொல்கின்றது. எத்தனையோ மகான்கள் இப்புவியில் வாழ்ந்து இறந்தார்கள்; ஆனால், அவர் இன்றும் வாழ்கின்றார்கள் என்பதற்கு எந்தவொரு சான்று கிடையாது. இயேசு இன்றும் வாழ்கின்றார் என்பதற்கு அவருடைய உயிர்ப்பே சான்றாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 28: 20 இல் வருகின்ற, “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்” என்ற சொற்கள், மேலே உள்ள கூற்றுக்கு இன்னும் வலுச்சேர்ப்பனவாக இருக்கின்றன. இவ்வாறு இயேசு இன்றும் வாழ்கின்றார் என்பதற்கு அவருடைய உயிர்ப்பு ஆதாரமாக இருப்பதால், இயேசுவின் உயிர்ப்பு மிகவும் முக்கியத்துவம் என்று சொல்லலாம்.
இயேசுவினுடைய உயிர்ப்பின் முக்கியத்துவைத் தெரிந்துகொண்ட நாம், உயிர்த்த ஆண்டவர் இயேசு, தம் சீடர்களுக்கும் - நமக்கும் - சொல்லக்கூடிய செய்தியென்ன என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
நறுமணப் பொருள்கள் பூச வந்தவர்களை நற்செய்தி அறிவிக்கச் சொல்லும் இயேசு
இயேசு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நாள் ஓய்வுநாள் என்பதால், அவருடைய உடலை உரிய முறையில் அடக்க செய்ய முடியாமல் போனது. இதனால் அவருடைய உடலுக்கு நறுமணப் பொருள்களைப் பூசுவதற்காக (மாற் 16: 1) அவருடைய கல்லறை எங்கிருக்கின்றது என்று தெரிந்த (மத் 27: 56,61) மகதலா மரியாவும் வேறொறு மரியாவும் வருகின்றார்கள். அதே நேரத்தில், ‘இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்ட கல்லறையை ஒரு கல் மூடியிருக்குமே...! அதை எப்படித் திறப்பது...?’ என்ற எண்ணத்தோடும் அவர்கள் வந்திருக்கக்கூடும்!
அவர்கள் கல்லறைக்கு வந்தபொழுது, கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, அதன்மேல் ஆண்டவரின் தூதர் உட்கார்ந்திருக்கக் காண்கின்றார்கள். மேலும் ஆண்டவரின் தூதர் அவர்களிடம், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “... இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என சீடருக்குக் கூறுங்கள்” என்கின்றார். இதற்குப் பின்னர் இயேசு அவர்களுக்குத் தோன்றுகின்றபொழுதுகூட, “என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்” என்றே சொல்கின்றார். இயேசு தன் சீடர்களை இங்கு, “சகோதரர்கள்” என்று சொன்னது, அவர்கள் தன்னை மறுதலித்தாலும், தன்னை விட்டு ஓடினாலும், அவற்றை எல்லாம் அவர் மன்னித்துவிட்டதாகவும் நண்பர்கள் (யோவா 15: 15) என்று ஏற்றுக்கொண்டதாகவும் அறிக்கையிடுகின்றது.
இவ்வாறு நறுமணப் பொருள்கள் பூச வந்த பெண்கள் இருவரும், உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களான மாறுகின்றார்கள். அந்த இரண்டு பெண்களும் இயேசுவின் உயிர்ப்பை சீடர்களுக்கு எடுத்துச் சொல்லி, நற்செய்திப் பணியாளர்களாக மாறியது போன்று, நாமும் ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களான மாறவேண்டும். இது நம்முடைய பொறுப்பு (1 கொரி 9: 17) என்பதை மறந்துவிடக்கூடாது
“அஞ்சாதீர்கள்” என்று திடப்படுத்தும் இயேசு
உயிர்த்த ஆண்டவர் இயேசு, பெண் சீடர்களிடம், உயிர்ப்புச் செய்தியைச் சீடர்களிடம் அறிவிக்கவேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் இன்னொரு முக்கியமான வார்த்தையும் சொல்கின்றார். அதுதான், “அஞ்சாதீர்கள்!” என்பதாகும். இயேசு அவர்களிடம் சொன்ன இவ்வார்த்தை, சாதாரண வார்த்தை கிடையாது; அச்சத்தோடும் நம்பிக்கையின்றியும் இருந்தவர்களுக்கு, அச்சத்தைப் போக்கி நம்பிக்கை அளிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கின்றன.
அன்று சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி அறைக்குள்ளே இருந்தார்கள் (யோவான் 24: 36). அப்படிப்பட்டவரிடம் இயேசு “அஞ்சாதீர்கள்”, “அமைதி உரித்தாகுக” என்று சொல்லி அவர்களைத் திடப்படுத்தினார். இன்று கொரோனா போன்ற கொள்ளை நோயினாலும், பல்வேறு காரணங்களாலும் நாம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி இருக்கின்ற நம்மிடமும் இயேசு, “அஞ்சாதீர்கள்” என்று வார்த்தையை சொல்லி, இயேசு நமக்கு நம்பிக்கை அளித்து, திடப்படுத்துகின்றார்.
ஆகையால், நாம் இயேசு சொல்லக்கூடிய இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தையை நம்முடைய உள்ளத்தில் ஏற்று, திடம் கொள்வோம். சீடர்களைப் போன்று நாம் தவறு செய்திருந்தாலும், நம்மையும் உயிர்த்த ஆண்டவர் இயேசு மன்னிக்கத் தயாராக இருக்கின்றார் என்ற உறுதியோடு, சீடர்களைப் போன்று ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிப்போம். அதன்மூலம் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம்.
சிந்தனை
‘வாழ்க்கை மற்றவருக்காக வாழும்பொழுது பொருளுள்ளதாக இருக்கின்றது’ என்பார் கெலன் கெல்லர். இயேசு நமக்காக வாழ்ந்து, இறந்து, மூன்றாம் நாள் உயித்தெழுந்து தன் வாழ்வைப் பொருளுள்ளதாக மாற்றினார். நாமும் மற்றவருக்காக வாழ்ந்து, வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
உயிர்ப்பு – அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல்
'அவர் இங்கு இல்லை' என வந்து பாருங்கள்!
'அவரைக் கலிலேயாவில் காண்பீர்கள்' என சென்று அறிவியுங்கள்!
திருவிழிப்புகளின் தாய் என அழைக்கப்படுகின்ற பாஸ்கா திருவிழிப்பில், 'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்' (1 கொரி 15:14) என்று பவுல் மொழியும் சொற்களின் பின்புலத்தில் நம் நம்பிக்கையின் அடித்தளத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில் 'மறுபிறப்பு' எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும் திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து எழுவதால், கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று அழைப்பவர்கள், இயேசுவின் இறப்பை 'குளிர்காலத்திற்கும்,' இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்' ஒப்பிடுகின்றனர்.
அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச் மாத உத்தராயணத்தைத் (ஆங்கிலத்தில், எக்வினாக்ஸ்) தொடர்ந்து வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும் திருவிழா' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்' கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள் 325ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள் வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே – கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப 14-15) - அடையாளப்படுத்துகின்றன.
உலகெங்கும் இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்களில் முயலும் முட்டையும் இடம் பெறுகின்றன. 'முயல்' என்பது வளமையின் அடையாளமாக இருக்கிறது. மேலும், 'முட்டை' வசந்தகாலத்தையும், வளமையையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. ஜெர்மானிய புராணம் ஒன்றின்படி, அடிபட்ட பறவை ஒன்றை ஈஸ்த்ரா முயலாக மாற்றி நலம் தந்தார் என்றும், அதற்கு நன்றியாக அந்த முயல் முட்டையிட்டது என்றும் சொல்லப்படுகிறது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், 'பண்டைக்கால எகிப்தியர்களும் பாரசீகர்களும் வசந்தகாலத்தில் வளமையின் அடையாளமான முட்டையின்மேல் வண்ணம் தடவியும், உண்டும் கொண்டாடினர்' என்று குறிப்பிடுகிறது. மேலும், எகிப்திய இலக்கியங்களில் முட்டை சூரியனையும், பாபிலோனிய இலக்கியங்களில் யூப்பிரத்திசு நதியில் விழுந்த இஷ்தார் தேவதையின் எழுச்சியையும் குறிக்கிறது. இதன் பின்புலத்தில்தான் முட்டை இயேசுவின் கல்லறைக்கு ஒப்பிடப்பட்டு, முட்டையை உடைத்துக்கொண்டு வரும் குஞ்சுபோல கல்லறையைத் திறந்துகொண்டு இயேசு வருகிறார் என்று நாம் முட்டைகளை அலங்கரிக்கவும் பரிமாறவும் செய்கின்றோம்.
ஒழுங்கற்ற நிலையிலிருந்து புதிய படைப்பு உருவாகிறது என முதல் வாசகத்திலும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெற்றுச் செங்கடலைக் கடந்தனர் என இரண்டாம் வாசகத்திலும் கேட்டோம். இயேசுவை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை வெற்றுக்கல்லறையாக இருக்கிறது. இது எப்படி? என நாம் கேள்வி கேட்டால் நமக்கு விடை கிடைப்பதில்லை. படைப்பு, விடுதலை, மற்றும் உயிர்ப்பு அனுபவங்கள் சொற்களால் வரையறுக்கப்பட இயலாதவை. முன்பிருந்த வெறுமை, அடிமைத்தனம், இறப்பு இப்போது இல்லை. 'உயிர்ப்பு எப்படி?' என்ற கேள்வி அல்ல, 'உயிர்ப்பு ஏன்?' என்பதே நாம் கேட்க வேண்டிய கேள்வியாக இருக்க வேண்டும்.
இயேசுவின் உயிர்ப்புக்கு இரு மரபுகள் சான்று பகர்கின்றன. ஒன்று, அறிக்கை மரபு (ஆங்கிலத்தில், கன்ஃபெஷனல் டிரடிஷன்), இரண்டு, கதையாடல் மரபு (ஆங்கிலத்தில், நரடிவ் டிரடிஷன்). 'ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அவர் சீமோனுக்குத் தோன்றினார்' (காண். லூக் 24:34) என்னும் சிறிய வாக்கியமாக நின்றுகொள்கிறது அறிக்கை மரபு. வெற்றுக் கல்லறை, எம்மாவு நிகழ்வு, இயேசுவின் தோற்ற நிகழ்வுகள் என விரிந்துநிற்கிறது கதையாடல் மரபு. இவ்விரு மரபுகளையும் தாண்டி உயிர்ப்புக்குச் சான்றாக நிற்பது திருத்தூதர்களின் வாழ்வு. பயத்தால் தங்களைப் பூட்டிக்கொண்ட திருத்தூதர்கள் கதவுகளைத் திறந்து வெளியே வருகிறார்கள். பயம் என்னும் முட்டைக் கூட்டை உடைத்துக்கொண்டு இவர்களும் வெளியேறுகிறார்கள்.
'ஓய்வுநாளுக்குப் பின்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. முதல் வாசகத்தில், ஆறு நாள்கள் உலகைப் படைத்த பின்னர் ஏழாம் நாளில் ஆண்டவராகிய கடவுள் ஓய்வெடுத்தார் என வாசிக்கக் கேட்டோம். யூத மரபில் ஓய்வுநாள் என்பது இயக்கம் (மூவ்மென்ட்) இல்லாத நாள். பெரிய வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறு என நாம் வேகமாகக் கடக்கிறோம். ஆனால், இதற்கிடையில் புனித சனி – ஓய்வுநாள் - இருக்கிறது. இந்த ஓய்வுநாளில் நீண்ட அமைதி நிலவுகிறது. இயேசுவை அடக்கம் செய்த அரிமத்தியா நகர் யோசேப்பு, நிக்கதேம், உடன்நின்ற பெண்கள் அனைவரும் அனுபவத்த வலியை துன்பத்தை நம்மால் நினைத்துப்பார்க்க முடிகிறது. தங்கள் கண் முன்னால் நடந்தேறிய துன்ப நாடகம், திடீரென முடிந்துவிட்ட இயேசுவின் வாழ்வு, தங்கள் கண்களுக்கு முன்னே அரங்கேறிய கொடிய மரணம், தங்களால் ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலை என அனைத்தும் அவர்களுடைய இதயங்களின் வலியைக் கூட்டுகின்றன. போதகரும் ஆண்டவருமான தங்கள் தலைவர் கொடிய சிலுவை இறப்புக்கு உட்படுத்தப்பட்டதைக் கேள்வியுறுகின்ற திருத்தூதர்கள் தாங்களும் கொல்லப்படுவோமோ என்ற பயத்தில் கதவுகளைச் சாத்திக்கொள்கிறார்கள். உயிர்ப்பின் விந்தை என்னவென்றால் இயேசுவின் எதிரிகள் மட்டுமே அவர் உயிர்த்துவிடுவார் என நம்புகிறார்கள். கல்லறைக்குக் காவல் வைக்கிறார்கள்.
உயிர்ப்பு என்னும் செய்தியை மூன்று 'அ' எனப் புரிந்துகொள்வோம்: அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல்.
ஆக, முதலில் உயிர்ப்பு என்பது ஓர் அழைப்பு. 'வந்து பாருங்கள்' என்பதே அந்த அழைப்பு. 'வந்து பாருங்கள்' என்ற சொல்லாடல் நற்செய்தி நூல்களில் இறையனுபவம் பெறுவதற்கான அழைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவைப் பின்தொடர்கிற முதற்சீடர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' எனக் கேட்டபோது, 'வந்து பாருங்கள்' என அவர்களை அழைக்கிறார் இயேசு (யோவா 1). 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' எனக் கேட்ட நத்தனியேலிடம், 'வந்து பாரும்' என அழைக்கிறார் பிலிப்பு (யோவா 1). இயேசுவோடு உரையாடி முடிக்கின்ற சமாரியப் பெண் தன் குடத்தை இயேசுவின் அருகில் விட்டுவிட்டு ஊருக்குள் சென்று, 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!' என அறிவிக்கிறார் (யோவா 4). இலாசர் இறந்த நிலையில் பெத்தானியாவுக்கு வருகிற இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 'அவனை எங்கே வைத்தீர்கள்?' எனக் கேட்டபோது, மார்த்தாவும் மரியாவும், 'ஆண்டவரே, வந்து பாரும்!' என அழைக்கிறார்கள் (யோவா 11). இன்றைய நற்செய்தி வாசகத்தில், மகதலா மரியா மற்றும் மற்ற மரியாவை (யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாய், காண். மத் 27:56) நோக்கி, 'வந்து பாருங்கள்' என அழைக்கிறார் வானதூதர்.
இரண்டாவதாக, உயிர்ப்பு என்பது ஓர் அனுபவம். வெற்றுக் கல்லறைக்குள் நுழைந்து பார்க்கிற அனுபவம். 'அவர் இங்கே இல்லை. அவர் சொன்னபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்' என்னும் வானதூதரின் அழைப்பு கேட்டுப் பெண்கள் கல்லறைக்குள் செல்கிறார்கள். இந்நிகழ்வைப் பற்றி எழுதுகிற புனித அகுஸ்தினார், 'கல்லறையின் கல் புரட்டப்பட்டது இயேசுவை வெளியே கொண்டுவருவதற்கு அல்ல, மாறாக, சீடர்களை உள்ளே அனுமதிப்பதற்கே' என்கிறார். 'இயேசு இங்கே இல்லை' என்னும் அனுபவத்தை அவர்கள் பெறுகிறார்கள். இந்த அனுபவம் அவருடைய சொற்கள்மேல் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் தாபோர் மலையிலிருந்து இறங்கி வருகிற திருத்தூதர்கள், 'இறந்து உயிர்த்தெழுதல் என்றால் என்ன?' எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டே வருகிறார்கள். இறந்த உயிர்த்தெழுதல் என்றால் என்ன என்பதை வெற்றுக் கல்லறைக்குள் நுழைகிற பெண்கள் அறிந்துகொள்கிறார்கள். கல்லறையின் கட்டிலிருந்து விடுபடுவதே உயிர்ப்பு அனுபவம். இப்பெண்கள் கல்லறைக்கு வெளியே நிற்கிற இயேசு அனுபவத்தையும் பெறுகிறார்கள். அவர்களை எதிர்கொள்கிற இயேசு அவர்களை வாழ்த்துகிறார். இயேசுவின் காலடிகளைப் பற்றிக்கொள்கிறார்கள் பெண்கள். 'காலடிகளைப் பற்றிக்கொள்தல்' என்னும் சொல்லாடல் வழியாக, இயேசு ஓர் ஆவி அல்ல, மாறாக, அவர் உடலைப் பெற்றிருந்தார் எனவும், உயிர்ப்புக்குப் பின்னர் அவர் ஆண்டவராகிய கடவுள் என வணங்கப்படுகிறார் எனவும் மொழிகிறார் ஆசிரியர்.
மூன்றாவதாக, உயிர்ப்பு என்றால் அனுப்பப்படுதல். 'நீங்கள் விரைந்து சென்று, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்' எனப் பெண்களை அனுப்புகிறார் வானதூதர். கலிலேயா என்பது தொடக்கம். அங்கேதான் சீடர்கள் தங்களுடைய அழைப்பைப் பெறுகிறார்கள். மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை, சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்தவரை மனிதர்களைப் பிடிப்பவர்களாக இயேசு மாற்றியது அங்கேதான். தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியது, அப்பங்கள் பலுகச் செய்தது, தொழுகைக்கூடங்களில் போதித்தது, பேய்களை ஓட்டியது என இயேசுவின் வல்ல செயல்களும் போதனைகளும் நடந்தேறிய இடம் கலிலேயோ. மேலும், கலிலேயோ புறவினத்தார் வாழும் பகுதியாகவும், சாதாரண மக்கள் வாழும் பகுதியாகவும் இருந்தது. இயேசு அங்கேதான் தம் பொதுவாழ்வை, பணிவாழ்வைத் தொடங்குகிறார். பெண்களுக்குத் தோன்றுகிற இயேசுவும், 'கலிலேயாவுக்குப் போகுமாறு சகோதரர்களிடம் சொல்லுங்கள்' என அவர்களை அனுப்புகிறார். தம் திருத்தூதர்களை இப்போது சகோதரர்கள் என அழைக்கிறார் இயேசு. தாம் பெற்ற உயிர்ப்பு தம் சகோதரர்களுக்கும் சாத்தியம் எனச் சொல்வதோடு தங்கள் வாழ்வின் தொடக்கத்திற்கு அவர்களை மீண்டும் அனுப்புகிறார் இயேசு.
உயிர்ப்பு நிகழ்வை அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல் என நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
(ஆ) வெற்றுக் கல்லறை அனுபவம் பெறுதல். 'அவர் இங்கே இல்லை' என்று நாம் உணரத் தொடங்கும் அந்த நொடியில் இயேசு நம் அருகில் இருக்கிறார். வாழ்கின்ற இயேசுவைக் கல்லறையில் தேடுவது முறை அல்ல. இனி அவரைக் கல்லறையில் அல்ல, மாறாக, கலிலேயாவில்தான் கண்டுகொள்ள முடியும். நம் வாழ்வைத் தொடாத வெற்று வழிபாட்டுச் சடங்குகளில் அவர் இல்லை. 'நான், எனது, எனக்கு' என்னும் தன்னல மனப்பாங்கில் அவர் இல்லை. மது, போதை, இணையதளம் மோகம், இன்ப நாட்டம் போன்றவற்றில் அவர் இல்லை. இவை எல்லாம் வெற்றுக் கல்லறைகள். உயிர்த்த அனுபவம் பெறுதல் என்பது இவற்றை வெற்றுக் கல்லறைகள் என உணர்ந்து, இயேசுவின் காலடிகளைப் பற்றிக்கொள்வது. இறப்பின் காரணிகளைத் தள்ளி வைப்பது.
(இ) அனுப்பப்படுதல். 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும் செய்தியை உலகுக்குச் சொன்ன மகதலா நாட்டு மரியா போல, நாம் வாழ்கிற இடங்களில் கிறிஸ்துவை நம் வாழ்க்கையால் அறிவிக்கும்போது நாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வில் கொண்டாடுகிறோம். அன்றாட வாழ்க்கையை முழுமையாக வாழ முயற்சி செய்வோம். அன்பு செய்தல், இரக்கம் காட்டுதல், மன்னித்தல், பிறரையும் நம்மையும் மேம்படுத்துதல் போன்றவை நம் வாழ்வின் இலக்குகளாக அமையட்டும்.
மூன்று 'அ' கடந்து, இன்னொரு 'அ' இருக்கிறது. அதுதான், 'அமைதி.' உயிர்த்த ஆண்டவர் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' எனத் தம் சீடர்களை வாழ்த்துகிறார். அமைதி (கிரேக்கத்தில், எய்ரேன், எபிரேயத்தில் ஷலோம்). அமைதி என்பது விரிசல்கள், பிளவுகள், உடைதல் இல்லாத ஒருங்கிணைந்த நிலை.
யாராவது இறந்தால், 'ரெஸ்ட் இன் பீஸ்' (ஆர்.ஐ.பி) எனச் சொல்கிறோம். இறந்தோருக்கு அல்ல, இன்று வாழ்வோருக்கே பீஸ் ('அமைதி') தேவைப்படுகிறது. ஆக, 'லிவ் இன் பீஸ்' என இயேசு நம்மை வாழ்த்துவதையே, நாம் ஒருவர் மற்றவருக்கு அறிவிப்போம்.
இயேசுவின் எதிரிகள் அவருடைய கல்லறையில் இன்னொரு 'ஆர்.ஐ.பி' எழுதினார்கள்: 'ரைஸ் இஃப் பாஸ்ஸிப்ள்'. 'இது எனக்குச் சாத்தியம்' என அவர் எழுந்தார்.
கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன் என்பதே (காண். பிலி 3:10) பவுலடியாரின் பேரார்வமாக இருந்தது. இதுவே நம் பேரார்வமாக இருக்கட்டும். இன்று நாம் கொண்டாடுகிற ஒளி, தண்ணீர், புதிய வாழ்வு ஆகியவை அனைத்தும் உயிர்ப்பின் நிகழ்வை நமக்கு நினைவுறுத்துவதோடு உயிர்ப்பை நம் வாழ்வியல் அனுபவமாக மாற்றட்டம். இறப்புக்குப் பின்னர் மட்டுமல்ல, இறப்புக்கு முன்னும் உயிர்ப்பு சாத்தியம்.
நம் பயணம் கல்லறையை நோக்கியதாக அல்ல, கலிலேயாவை நோக்கியதாகவே இருக்கட்டும்!
அங்கே அவர் நமக்கு முன் சென்றுகொண்டிருக்கிறார்.
இயேசுவாய் வாழ உயிர்ப்போம்!
உயிர்ப்பு கிறிஸ்தவ வாழ்வின் அச்சாரம். உயிர்ப்பு என்ற ஒன்று இல்லையேல் நம் நம்பிக்கை வீண். திருஅவை என்ற ஒன்று உயிர்ப்பு என்னும் அடித்தளத்தில் தான் இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் நிலையாய் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இயேசுவின் இந்த உயிர்ப்பு நம்மை அழைப்பது எதற்காக? நாமும் இவ்வுலகில் இயேசுவாக வாழ உயிர்க்க வேண்டும் என்பதற்காக.
உயிர்க்க வேண்டுமா? ஏன்? நாம் ஏற்கனவே உயிரோடுதானே இருக்கிறோம்! என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.ஆம். நாம் உயிரோடு தான் இருக்கிறோம். ஆனால் இயேசுவைப் போல உயிர்த்துடிப்போடு இருக்கிறோமா என்றால் இல்லை. இயேசு உயிர்த்துடிப்போடு இருந்ததால்தான் தந்தையோடு ஒன்றித்திருந்தார். மனிதர்களோடு அன்பாய் இருந்தார். சுறுசுறுப்பாக தன் பணிகளைச் செய்து தந்தையை மாட்சிப்படுத்தினார். துயரங்களைக் கண்டு அஞ்சாமல் வாழ்ந்தார். அவற்றை எதிர்கொண்டார். அவரிடமிருந்து வாழ்வின் ஊற்று பலருக்கு பாய்ந்தது.அப்படிப்பட்ட இயேசுவை கல்லறை எப்படி உள்ளே வைத்துக்கொள்ள முடியும்!
இயேசு தன் உயிர்ப்பின் வழியாக நம்மை தந்தையின் பிள்ளைகளாக மீண்டும் உயிர்ப்பித்தார். படைப்பின் சிகரமாக நம்மை இயற்கையோடு இணைத்தார். இந்நற்செய்தியை உலகெங்கும் பரப்ப நம்மைப் பணித்திருக்கிறார். இதுதான் உயிர்ப்பின் உண்மையான அர்த்தம்.
நம்முடைய சொந்த வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். தந்தை கடவுளோடு நமக்குள்ள இயேசு மீட்டெடுத்த உறவை நாம் கடைபிடிக்கிறோமா? ஆழப்படுத்தியிருக்கிறோமா? சடங்குக்காகவும் வாடிக்கைக்காகவும் வேடிக்கைக்காகவும் கோவிலுக்கு வந்து செல்கிறோமே. அப்படி என்றால் நாம் உயிர்த்துடிப்பு இல்லாதவர்களாகிவிடுகிறோம். இந்த ஆன்மீக இறப்பு நிலையிலிருந்து உயிர்த்து தந்தையோடு இறைவேண்டலிலும் இறைவார்த்தையை வாழ்வதிலும் நாம் இணைந்தால் அதுதான் உண்மையான உயிர்ப்பு.
படைப்பின் சிகரமாக படைக்கப்பட்ட நாம் சக மனிதர்களையும் நம்முடைய பராமரிப்பிற்காக படைக்கப்பட்ட அனைத்தையும் மதித்து அன்பு செய்து உறவு விரிசல்களை சரிசெய்யாவிடில், நாம் கல்லறைக்குள் இருப்பதற்கு சமம். அந்த கல்லறையைப் பிளந்து படைப்புக்களோடு உறவுள்ளவர்களாக வாழ முயன்றால் நாமும் உயிருள்ளவர்களே.
வாழ்வுக்கு சாவில்லை. சாவுக்கு வாழ்வில்லை. நம்மை அன்பு செய்யும் இறைவன் எந்நாளும் நம்மோடு இருக்கிறார். நமக்கு புதுவாழ்வு அளிக்கிறார் என்ற நற்செய்தியை நம்மோடு வைத்துக்கொள்ளாமல் நம் சொல்லால் செயலால் அன்பால் பிறருக்கு பரப்பும் போது நாமும் இயேசுவைப் போல உயிருள்ளவர்களாவோம்.
நமக்கு முன் வாழ்ந்த பலர் தங்கள் இறந்த நிலையை உணர்ந்து இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு உயிர்த்தெழுந்தார்கள். இயேசுவின் சீடர்கள் இயேசுவின் கொள்கைகள் மண்ணில் வாழ இறந்த நிலையிலிருந்து உயிர்த்தார்கள். பல புனிதர்கள் தங்கள் உலக பாவ வாழ்வுக்கு இறந்து இயேசுவைப் போல உயிர்த்து இயேசுவாகவே வாழ்ந்தார்கள். நம் கண் முன்னே வாழ்ந்த அன்னை தெரசா, கார்லோஸ், தேவ சகாயம் பிள்ளை, நற்செய்தி விழுமியங்களுடன் மரித்த அருட்பணி ஸ்டேன் சுவாமி போன்றோர் இயேசுவைப் போல உயிர்த்தவர்களாய் உயிர்த்துடிப்புள்ளவர்களாய் வாழ்ந்தார்கள். இறந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் நம்மால் இயன்ற அளவு நாம் வாழும் பகுதிகளில் உயிர்த்துடிப்புள்ளவர்களாக வாழுவோம். ஏன் வாழ்கிறேன்? என்ற இறப்பு நிலையை விட்டு வெளிவருவோம். தெய்வ பயமற்ற இருளிலிருந்து வெளிவருவோம். உறலில்லா கல்லறைகளைத் தகர்ப்போம். இயேசுவைப் போல உலகில் வாழ புதுப்படைப்பாய் உயிர்த்தெழுவோம்.
இறைவேண்டல்
உயிரின் ஊற்றே! இறைவா! எங்களையும் இயேசுவைப் போல உயிர்த்துடிப்புள்ளவர்களாய் மாற்றும். அன்றாட வாழ்வில் பல நிலைகளில் இறந்த நிலையில் இருக்கும் நாங்கள் கல்லறைகளைத் தகர்த்தெறிந்து "இயேசு"க்களாக புவியிலே வாழ எம்மை உயிர்ப்பித்தருளும். ஆமென்.
