மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

மரியாளின் விண்ணேற்றம்
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருவெளிப்பாடு 11: 19a; 12: 1-6, 10ab | 1 கொரிந்தியர் 15: 20-26| லூக்கா 1: 39-56

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


பழைய ஏற்பாட்டிலே கடவுளின் பேழையைத் தாவீது அரசர் மேளதாளத்துடன் தாரை தம்பட்டைகள் முழங்க (2 சாமு. 6:1-23) எருசலேம் நகருக்கு எடுத்துச்சென்றதுபோல இறைவனும் தன் திருமகன் இயேசுவின் பேழையாகிய அன்னை மரியாவை ஆரவாரத்தோடும், மகிழ்ச்சியோடும் தம் திருநகராகிய விண்ணகத்திற்கு அழைத்துச் சென்ற திரு நிகழ்வை நாம் இன்று விழாவாகக் கொண்டாடுகிறோம். நம் பாரத நாடு சுதந்திரம் அடைந்த இந்த நாளில் நம் தாய் மரியா முழுமையான விடுதலையும் சுதந்திரமும் பெற்ற ஆண்டு விழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம்.

  1. 1) மரியன்னைக்கு என உள்ள விழாக்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை. மரியாவின் அமல உற்பவப் பெருவிழா (டிசம்பர் 8). மங்கள வார்த்தைப் பெருவிழா (மார்ச் 25). விண்ணேற்புப் பெருவிழா (ஆகஸ்ட் 15). இவை மூன்றும் மீட்பின் வரலாற்றோடு தொடர்பு கொண்டவை. அருள் மிகப் பெற்றவளே வாழ்க (லூக். 1:28) என்று வானதூதரால் அழைக்கப்பட்ட நம் அன்னை மரியா, தான் பெற்ற அருளை முழுவதுமாக இவ்வுலகின் மீட்புக்காகச் செலவழித்தார். தன் மகனோடு இணைந்து இவ்வுலகின் மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
  2. 2) ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா.
  3. தீயோனின் தயைக் அதைச் செயல்படுத்தி அதன் விளைவாக அழிவைத் தேடிக் கொண்டவள் முதல் ஏவாள். அதனால் கடவுளுக்கும், மனித குலத்திற்கும் இடையில் தடையாக முடிச்சுப் போட்டாள். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபை (திருச்சபை 56) என்ற ஏட்டிலே கூறுவதுபோல, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை ஏற்று, அதைத் தன் உள்ளத்தில் இருத்திச் செயல்படுத்தி வாழ்வைத் தேடிக் கொண்டவள் மரியா. போடப்பட்ட முடிச்சை தன் தாழ்ச்சி கீழ்ப்படிதலால் அவிழ்த்தவள் மரியா.
  4. 4) கடவுளைப்போல் ஆகவேண்டும் என்ற அகந்தையால் சுயநலத்தால் தூண்டப்பட்டவள் முதல் ஏவாள். இதோ உமது அடிமை (லூக். 1:38) என்று சொல்லி, தன்னையே தாழ்த்தி அர்ப்பணம் ஆக்கியவள் மரியா.

நான் தவறு ஏதும் செய்யவில்லை. பாம்புதான் என்னை வஞ்சித்து ஏமாற்றியது என்று பிறர் மேல் குற்றம் சாற்றித் தன்னை நிரபராதியாக்க விரும்பியவள் முதல் ஏவாள். ஆனால் தான் கடவுளால் குற்றமற்றவராகப் படைக்கப்பட்டும். மனுக்குல மீட்பிற்காக, அதன் குற்றங்களை ஏற்றுக்கொண்ட தியாக தீபம் மரியா.

மரியா தன்னைத் தாழ்த்திக் கொண்டாள். எப்படியெனில் ஆற்று மணலில் முளைத்து வளர்ந்த நாணல் வெள்ளம் புரண்டு ஓடியபோது தண்ணீரோடு அடித்துச் செல்லப்படாமல் வளைந்து கொடுப்பது போல மரியா பணிந்து நின்றார்கள். கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை நடத்திய ஏனோக்குக்கும் (தொநூ. 5:22) எலியாவுக்கும் (2 அரச 2:11) விண்ணேற்பு கொடையை இறைவன் வழங்கியது போல, தனிப்பெரும் சீடராகத் தாழ்ச்சி நிறைந்த மரியாவுக்குக் கிடைத்த பரிசுதான் விண்ணேற்பு. எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே (லூக். 1:48). ஏனெனில் நெஞ்சிலே செருக்குற்றோரைச் சிதறடித்து வருகிறார் (லூக். 1:50- 53).தாழ்ந்தோரை உயர்த்தினார் என்று மரியா பாடிய பாடல் அவர்கள் வாழ்வில் நிறைவேறியது. இந்த உண்மையை, சத்தியத்தைத்தான் 12-ஆம் பத்திநாதர் விசுவாசச் சத்தியமாக 1950-ஆம் ஆண்டு பிரகடனம் செய்தார்.

முடிவு
இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றது என்று எல்லோரும் இன்று ஆனந்தம் அடைகிறோம். ஆட்சி கைமாறியதே தவிர, அடிமைத்தனம் மாறவில்லை. கொள்ளையும், ஊழலும் குறையவில்லை. சனநாயகம் என்பதெல்லாம் சொல் அளவில் மட்டுமே. மக்கள் நலன் அரசு என்பது எதிர்பார்க்க முடியாதது என்ற மாயையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்நிய நாட்டின் ஆதிக்கம் உலக வங்கியின் ஊடுருவல் இந்தியாவை மறு காலனியாக்கி வருகிறது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏழைகளின் குரல்வளைகளை நெருக்கிப் பிடிக்கிறது. இதனால் ஏழைகள் பூச்சி மருந்தைத் தேடுகிறார்கள். தூக்குக் கயிற்றைத் தேடுகிறார்கள். பெண்ணடிமை, சாதியம் தலைவிரித்து ஆடுகிறது. அடக்கு முறையால் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். எங்கே விடுதலை?

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்தினார். எனவே கடவுளும் அவரை மிகவும் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அளித்தார் (பிலி.2:6-9) என வாசிக்கிறோம். இந்த உன்னத நிலையைப் பெற்றவர்தான் நம் அன்னையாம் மரியா. நாமும் ஒருநாள் இந்த மகிமையான வாழ்வை அடைய பாவ வாழ்வை விட்டு விடுதலையை நோக்கிப் பயணம் ஆவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாழ்க்கையில் உயர்வது எப்படி?

அன்னை மரியா எவ்வளவுக்கு எவ்வளவு தன்னையே தாழ்த்திக் கொண்டாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் உயர்த்தப்பட்டார்; விண்ணகம் வரை உயர்த்தப்பட்டார். தாழ்ச்சி என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு உவமை ஒன்று பதில் சொல்லும்!

காட்டாற்று மணலிலே விழுந்த ஒரு நாணல் விதை! முளைத்தது, அது தழைத்தது! காட்டாற்றுக்கும் கருணை உண்டு! நாணல் வளர்ந்தது! நாணல் சில நாள்களில் கிளைகள் விட்டு புதரானது! அதன் மீது காற்றுக்கென்ன கோபமோ! அது சுற்றிச் சுற்றி அடித்தது!

காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்தது நாணல்! விவேகமுள்ள நாணல் வளைந்து கொடுத்தது! ஆகவே நிமிர்ந்து நின்றது! திடீரென வானம் கருத்தது! எங்கு பார்த்தாலும் அடை மழை! காட்டாற்றில் வெள்ளம்! வெள்ளத்திற்கு நாணல் மீது என்ன கோபமோ! அதனை அடித்துச் செல்லத் துடித்தது! அதன் எண்ணம் நிறைவேறவில்லை! காரணம் விவேகமுள்ள நாணல் அதன் பாணியைக் கையாண்டது. வெற்றி நாணலுக்கே! ஆற்றிலே அடித்து வரப்பட்ட அத்தனைச் செடிகளும் கொடிகளும் அந்த நாணல் புதரை அழைத்துச் செல்ல விரும்பின! முடியவில்லை! காரணம் நாணல் போர் தொடுக்க விரும்பவில்லை! சற்று நேரப் பணிவு போதும், சற்று நேர விவேகம் போதும் எனச் சொல்லி வளைந்து கொடுத்தது ; பொறுமையாக நிமிர்ந்து நின்றது. யார் மீதும் அதற்கு எந்தக் கோபமும் இல்லை! அதன் ஆசையெல்லாம் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதே!

அவரிடம் புனித கன்னிமரியாவிடம் பணிவு இருந்தது (லூக் 1:38); விவேகம் இருந்தது (லூக் 2:51); அவரிடம் பொறுமையிருந்தது (யோவா 19:23-27). தாழ்ச்சி என்றால் பணிவு: தாழ்ச்சி என்றால் விவேகம் : தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுத்தல்; தாழ்ச்சி என்றால் பொறுமை! மரியாவிற்கு விண்ணேற்பு என்பது அவருடைய தாழ்ச்சிக்கு கடவுள் அளித்த பரிசு. எல்லாத் தலைமுறையினரும் அன்னை மரியாவைப் பேறுபெற்றவர் எனப் போற்றுகின்றனர் என்றால் அதற்குக் காரணம் அவரது தாழ்ச்சிதான் (லூக் 1:48). உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைக் கடவுள் சிதறடிப்பார் (லூக் 1:50-53). நாம் கழுகைப் போல் உயர, உயரப் பறந்தாலும், விண்மீன்களின் நடுவில் நமது வீட்டைக் கட்டி வாழ்ந்தாலும். நம் உள்ளத்தில் இறுமாப்பு இருந்தால் நாம் வீழ்த்தப்படுவோம் (ஒப 1:4).

இன்று இயேசுவுக்கு உலகிலுள்ள எல்லாம் அடிபணிகின்றன (1 கொரி 15:27). இந்த உன்னதமான நிலையில் அவரிருக்கக் காரணம் என்ன? காரணம் அவரது தாழ்ச்சிதான். புனித பவுலடிகளார், கடவுள் வடிவில் விளங்கிய அவர் (கிறிஸ்து) சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் (பிலி 2:6-9) என்று கூறுகின்றார். இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : சூரியனைப் போல் ஒளி பொருந்தியவராய், சந்திரனைப் போல் அழகுள்ளவராய்; விண்மீன்களைத் தலைமீது சூடி, அழகுக்கு அழகு செய்து அதிசயமாய், ஆனந்தமாய், ஆருயிராய் விளங்குகின்ற விண்ணக, மண்ணக அரசியே! உமது விண்ணேற்பில் நாங்களும் பங்குகொண்டு, உம்மோடு என்றும் இணைந்து வாழ எங்களுக்குத் தேவையான தாழ்ச்சியை உமது கைகளிலே தவழும் குழந்தை இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். மேலும் அறிவோம் :

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (குறள் 439).

பொருள்: எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் தன்னைத்தானே உயர்வாகக் கருதும் தற்பெருமை கொள்ளக்கூடாது! அவ்வாறே நன்மை எதுவும் தராத செயல்புரிவதற்கு விரும்பவும் கூடாது!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுடல் பெறும் மாட்சி

இத்தாலி நாட்டில் அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவன்று சில பங்குகளில் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்குத் “தலை வணங்குதல் பவனி" என்று பெயர். ஊரின் முக்கிய வீதியிலே ஒரு முனையிலிருந்து அன்னையின் திருவுருவம் தாங்கிய பவனியும் அதே வீதியின் எதிர்முனையிலிருந்து நம் ஆண்டவர் இயேசுவின் திருவுருவம் தாங்கிய பவனியும் புறப்படும். வீதியின் மையப்பகுதியில் மலர்களாலும் மரக்கிளைகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலை இரண்டு பவனிகளும் சந்திக்கும். தோரண வாயிலில் இயேசுவின் திருவுருவமும் மரியாவின் திருவுருவமும் மூன்று முறை சுற்றிவந்து ஒன்றை ஒன்று வணங்கியபின் பங்குக்கோவிலை நோக்கி இயேசுவின் திருவுருவப் பவனி முன்னால் செல்ல, அதைத் தொடர்ந்து அன்னை மரியாவின் திருவுருவப் பவனி பின் செல்லும்.

இது ஆண்டவர் இயேசு அன்னை மரியாவை விண்ணகத்தின் அரியணைக்கு அழைத்துச் செல்வதின் அடையாளம். இந்தப் பவனி ஒரு மாபெரும் உண்மையை - இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு விழா பற்றிய உண்மையை உணர்த்துகிறது.

மரியாவின் விண்ணேற்பு
இயேசுவின் ஊனுடல் பெற்ற மாட்சியில் பங்கேற்பு.
இயேசுவின் மறையுடல் (திருஅவை) பெற இருக்கும்
மாட்சிக்கு முன் அடையாளம்.

ஆதாம் வழி பாவம், சாவு, அடிமைத்தனம் நுழைந்தது. இரண்டாம் ஆதாம் இயேசு வழி வாழ்வு வந்தது. (இரண்டாம் வாசகம்). "ஒரு மனிதர் வழியாக சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர்" (1 கொரி. 15:21-22).

கிறிஸ்துவைத் தொடர்ந்து, முதல் சீடர், முதல் கிறிஸ்தவர், திருஅவையின் அன்னை என்ற முறையில் அன்னை மரியா நமக்கும் முன்மாதிரியாக விண்ணேற்பில் முதலில் பங்கேற்றார்.

ஒரு மனிதன் யூத ரபியுடன் மேற்கொண்ட உரையாடல்: "ரபி, எங்கிருந்து வருகிறீர்?' "மேலுலகிலிருந்து வருகிறேன்". "எங்கே போகிறீர்?'' "மேலுலகிற்கு போகிறேன்". "இவ்வுலகில் என்ன செய்கிறீர்?' "மறு உலகைப் படைக்கிறேன்". ரபி கூறியதற்கேற்ப அன்னை மரியா இவ்வுலகில் மறு உலகைப் படைத்தார். அவளது இவ்வுலக வாழ்வின் நிறைவே அவளுடைய விண்ணேற்பாக அமைந்தது.

ஓவியன் தான் வரையும் ஓவியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். சிற்பி தான் செதுக்கி உருவாக்கும் சிலையைப் பற்றியே சிந்திக்கிறான். இவை அனைத்திற்கும் மேலாக அன்னையவள் ஆண்டவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலே முழுமையாகத் தன்னையே இழக்கிறாள். இவ்வுலகில் இறையாட்சிக் கருவியாக முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துச் செயல்படுகிறாள். அவளது நம்பிக்கை வாழ்வின் வெற்றியே அவளது விண்ணேற்பு. அது இறைவனின் அன்புப் பரிசு.

இறைமகன் எங்கு இருக்கிறாரோ அங்கேயே இறையன்னையும் இருக்கிறாள். தனிமையில் தாழ்ச்சியோடு இருந்த அன்னையை இறைவன் உயர்த்தி மாட்சிப்படுத்துகிறார். அன்று அவள் எலிசபெத் வீட்டில் பாடிப் புகழ்ந்த சுதந்திர உணர்வுகள் நிறைந்த மகிழ்ச்சிப்பாடல் இன்றும் அவள் உள்ளத்திலே அவளைப் பாட வைக்கிறது. அவள் தன் மகனோடு சேர்ந்து அனுபவித்த துன்ப துயரங்களால், போராட்டங்களால், இறுதியில் விண்ணேற்பால் சாவையும் சாவுக்குக் காரணமான பாவத்தையும் வென்றுவிட்டாள்.

புகழ்பெற்ற போசுவே என்ற மறையுரையாளரின் கூற்றிற்குச் செவி கொடுப்போம்:

"நான் பகர்வதை நீங்கள் நம்புவீர்களானால் அன்னை மரியாவின் இறப்புக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க முனைய மாட்டீர்கள். அவளில் கொழுந்து விட்டு எரிந்த அன்பு எத்துணை வலிமைமிக்கதெனில், அவளுடைய ஒவ்வொரு மூச்சும் அவளது உடலின் தளைகளை அறுத்தெறிய வல்லதாய் இருந்தது. அவளுக்குள் எழுந்த ஏக்கம் அவளுடைய உடற்கட்டைத் தகர்க்கவல்லதாய் இருந்தது. விண்ணுலகின் மீது அவள் கொண்டிருந்த ஆவல் அவளுடைய ஆன்மாவையே இழுத்துச் செல்ல வல்லதாய் இருந்தது..."

"ஓ கிறிஸ்தவர்களே, அன்னை மரியாவின் இறப்பு ஒரு புதுமையாக நிகழ்ந்தது என்று குறிப்பிட்டேன். ஆனால் என் சொற்களைச் சற்று திருத்திக் கொள்ள வேண்டும். அவளுடைய இறப்பு ஒரு புதுமையாக நிகழ்ந்ததென்று கூறுவதைவிட, அவளுடைய இறப்பால் ஒரு புதுமை முடிவுற்றதென்று கூறுவேன். தன் அன்பு மகனைவிட்டுப் பிரிந்து வாழ மரியாவால் முடிந்ததே என்பதுதான் நீடித்த புதுமை. இந்தப் புதுமை எவ்வாறு முடிவுற்றது என்றும், அன்பு எவ்வாறு தன் பலிப்பொருளைத் தகனம் செய்தது என்றும் உங்களுக்கு விளக்க என்னால் முடியுமா?..."

"கன்னி மரியாவின் இறப்புக்குக் காரணம் அவளுடைய உள்ளத்தில் பொங்கி எழுந்து கொண்டே இருந்த அன்புப் பெருக்கின் நிறைவே ஆகும். முற்றும் பழுத்த ஒரு கனியைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் மரக்கிளையைச் சிறிது அசைத்தால் போதும். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு இயற்கையாக மேல்நோக்கித் தாவிச் செல்லும். இவ்வாறு மரியாவின் உள்ளத்தில் கனன்று எரிந்த தெய்வீக அன்பு அவளுடைய ஆன்மாவை சுடர்மீது இவளை விண்ணுலகிற்கு உடலினின்று பிரித்து அன்பின் ஏந்திச் சென்றது."

புனித ஜெர்மானுஸ் என்பவருடைய பார்வையில் "மரியா விண்ணகம் சென்றது மகிழ்ச்சிக்குரிய நற்செய்தி. ஏனென்றால் இப்பொழுது நமக்காகப் பரிந்து பேசவே அவள் சென்றிருக்கிறாள். மனிதத் தன்மை மாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனின் அவளது மாட்சி தொடர்பான அனைத்தும் அவளில் நிறைவேறியுள்ளது. உடல், ஆன்மா, ஆவி இவை மூன்றிலும் ஒரு காலத்தில் அழியாத் தன்மையை நாம் அனுபவிக்க இருக்கிறோம். அதை இப்பொழுது அன்னை மரியா அனுபவிக்கிறாள்".

இன்று விண்ணேற்பு விழா மட்டுமல்ல. இந்தியத் திருநாட்டின் விடுதலை விழாவும்கூட. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் மூவண்ணக்கொடியேற்றித் தேகியகீதம் இசைப்போம். ஜன கன மன என்ற பாடலின் கடைசி வரி 'ஜய ஜய ஜய ஜய கே'. அதன் பொருள் வெற்றி வெற்றி வெற்றி உமக்கே. இது யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது? 1911ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசன் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தபோது முதன்முறையாக இசைக்கப்பட்டது இந்த ஜன கன மன. நம்மை அடிமைப்படுத்திய ஒருவரை வாழ்த்தப்பயன்பட்ட பாடலை தேசிய கீதமாக்குவதா? சர்ச்சை கிளம்பியது. பின்னாளில் பாடலை இயற்றிய வங்கக் கவி தாகூர் தன் விளக்கம் கொடுத்தார் - இந்த நாட்டின் தலையெழுத்தை நிருணயிக்கின்ற, இந்த நாட்டின் வரலாற்றையே தன் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் கடவுளுக்கே ஆட்சியும் மாட்சியும் வல்லமையும் அவருக்கே உரியது.

அந்த வெற்றியில் அன்னை மரியாவுக்குக் கடவுள் கொடுத்த பங்கே, பெரும் பேறே அவளது விண்ணேற்பு. அந்த மாட்சியில் நமக்கும் பங்கு உண்டு என்பதே நமது கிறிஸ்தவ நம்பிக்கை!

சாவுக்குப் பின் நமக்காகக் காத்திருக்கும் விண்ணக வாழ்வில் நம்பிக்கை கொள்வோம். நமது உடல் இந்த மண்ணுக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் நம் உயிர் விண்ணுக்கு உரியது. இன்று நாம் இங்கே இருப்பது இறப்பதற்காக அல்ல, என்றும் இருப்பதற்காகவே!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு


பிரபல பிரஞ்சு எழுத்தாளரான விக்டர் பூகோ என்பவர் சொல்லும் நிகழ்ச்சி இது.

1700 களின் தொடக்கத்தில் பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். ஒரு தாயானவள் தன்னுடைய இரண்டு மகன்களோடு வீட்டிலிருந்து வெளியே தப்பித்து ஓடினாள். கலகக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவள் ஒரு அடர்ந்த காடு வழியாகப் பயணமானாள். இரண்டு மூன்று நாட்களாக உணவு எதுவுமே சாப்பிடக் கிடைக்காததால் அவளும், அவளுடைய இரண்டு மகன்களும் உடல் தளர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு இராணுவ வீரர்கள் அவர்களின் நிலைகண்டு, அவர்களுக்குத் தங்களிடம் இருந்த ஒரு பெரிய துண்டை எடுத்துக் கொடுத்தனர். உடனே அந்தத் தாயானவள், ரொட்டித் துண்டை இரண்டாக உடைத்து, அதைத் தன்னுடைய மகன்களுக்கும் உண்ணக் கொடுத்தார்.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்ற அந்த இரண்டு இராணுவ வீரர்களில் ஒருவர், “ஏன் இவள் இப்படிச் செய்கிறாள். தனக்குக் கிடைத்த ரொட்டித் துண்டை, தன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, இவள் சாப்பிடாமல் இருக்கிறாளே, ஒருவேளை இவளுக்குப் பசிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு இன்னொரு இராணுவ வீரர் அவரிடம், “அவளுக்குப் பசிக்காமல் இருக்காது, தன்னுடைய பிள்ளைகள் இருவரும் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவள் இப்படிச் செய்கிறாள்” என்றார்.

ஆம், தாயானவள் எப்போதுமே தன்னுடைய பிள்ளைகள்மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டிருப்பவள். அந்த வகையில் பார்க்கும்போது, அன்னை மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது எப்போதும் அன்பும், கரிசனையும் கொண்டவளாய் விளங்குகிறாள்.

இன்று திருச்சபையானது அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னை மரியாள் தன்னுடைய மண்ணக வாழ்வை முடித்துகொண்ட உடன், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற உண்மை இவ்விழா எடுத்துரைக்கிறது.

கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து கீழைத் திருச்சபையில் இவ்விழா டார்மிஷன் என்ற பெயரில் அதாவது ‘அன்னை ஆண்டவரில் துயில் கொள்கிறாள்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருவதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யோவான் டமாசின் என்பவர், “அன்னை மரியாள் ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுப்பதன் பொருட்டு, கருவிலே பாவக்கறையின்றி உதித்ததால், அவள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்று கூறுவார்.

1568 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் பத்திநாதர் என்பவர் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற விசுவாசப் பிரகடனமானது இயற்றப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, “மாசற்ற கன்னி மரியாள் மண்ணக வாழ்வை முடித்ததும், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று கட்டியம் கூறியது (திச 59). இவ்வாறுதான் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா உலக முழுவதும் கொண்டாடும் நிலை உருவானது.

இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ்விழா தரும் முதலாவது சிந்தனை மரியாள் புதிய உடன்படிக்கையின் பேழை என்பதாகும்.

திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது’ என்று வாசிக்கின்றோம். இந்த உடன்படிக்கைப் பேழை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் அன்னை மரியாள்தான் என்ற உண்மை நமக்கு விளங்கும்.

மரியாளின் பிராத்தனையில் மரியாளை நாம் ‘உடன்படிக்கையின் பேழையே’ என்றுதான் சொல்கிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குறிப்பிடப்படும் உடன்படிக்கைப் பேழையில் மன்னாவும், பத்துக்கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளும், ஆரோனின் கோலும் இருந்தன. புதிய உடன்படிக்கைப் பேழையான மரியா, உலகிற்கு வாழ்வளிக்கும் உணவும், வார்த்தையுமான இயேசுவை தன்னுடைய உதிரத்தில் தாங்கி இருந்தாள். எப்படி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எங்கெல்லாம் உடன்படிக்கைப் பேழை இருந்ததோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், கடவுளின் ஆசிர்வாதமும் இருந்தtது. அதுபோல, புதிய உடன்படிக்கைப் பேழையான மரியாள் இருந்த இடத்தில் கடவுளின் ஆசிரும், மகிழ்ச்சியும் நிறைவாக இருந்தது. எனவே தான் மரியாவை புதிய உடன்படிக்கைப் பேழை என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.

இவ்விழா நமக்குத் தரும் இரண்டாவது சிந்தனை மரியாள் தேவையில் இருப்போருக்கு உதவுபவளாக விளங்குகின்றாள் என்பதாகும். மரியாள் தூய ஆவியினால் கருவுற்று ஆண்டவர் இயேசுவை தன்னுடைய உதிரத்தில் தாங்கி இருக்கிறாள். அப்படிப்பட்ட தருணத்திலும் தன்னுடைய உறவுக்காரப் பெண்மணி எலிசபெத்து கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டு, அவளுக்கு ஓடோடிச் சென்று உதவுகிறாள்; அவளுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து தருகிறாள்.

மரியாள் எப்போதும் ‘தான் ஆண்டவரின் தாய் அதனால் தனக்கு மற்றவர் உதவி செய்ய வேண்டும்’ என்று நினைக்கவில்லை. அவள் தேவையில் இருப்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தாள். அதனால்தான் கடவுள் அவருக்கு மேலான கொடைகளை வழங்கினார், அவரை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார்.

ஆகவே, மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும் அன்னை மரியாவைப் உடன்படிக்கைப் பேழையாக/கடவுளின் பிரசன்னை மற்றவருக்குத் தரும் கருவியாக வாழ்வோம். அதோடு மட்டுமல்லாமல் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவும். அப்போது நாம் அன்னையின் அன்புப் பிள்ளைகளாக மாறுவோம்.

அன்னை தெரசா தன்னுடைய வாழ்வில் நடந்ததாகப் குறிப்பிடும் நிகழ்ச்சி இது.

ஒருமுறை அன்னைத் தெரசா கல்கத்தா வீதிகளில் வலம்வந்தபோது சிறுவன் ஒருவன் கிழிந்த ஆடையோடும், வற்றிய தேகத்தோடும் தரையில் சுருண்டு கிடந்தான். இதைப் பார்த்த அன்னை அவனைத் தோள்மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு, தன்னுடைய இல்லத்திற்கு கொண்டு சென்றான். அங்கே அவனுக்கு நல்ல உணவு கொடுத்து, உடையும் கொடுத்து, அங்கேயே தங்கச் சொன்னாள். ஆனால் அவனோ அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிப்போனான்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதே சிறுவன் அன்னைத் தெரசா வீதியில் வலம்வந்தபோது தரையில் சுருண்டு படுத்துக்கிடந்தான். உடனே அன்னையானவள் அவனை மீண்டுமாக இல்லத்திற்கு தூக்கிச் வந்து, பராமரித்து வந்தாள். இந்த முறை தன்னுடைய அருட்சகோதரிகளிடம், “ஒருவேளை அவன் எங்காவது ஓடிச்சென்றால், அவன் எங்கே செல்கிறான் என்று பின்தொடர்ந்து பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, அவன் வெளியே ஓடத் தொடங்கினான். ஏற்கனவே அன்னை சொன்னது போன்று, அருட்சகோதரிகள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அப்போது சிறுவன் ஒரு மரத்தடிக்குக்கீழ் போய் நின்றான். அந்த மரத்தடியில் அழுக்கு உடையில், உடலெல்லாம் புண்ணாக இருந்த ஒரு பெண்மணி படுத்துக்கிடந்தாள். அவள் அவனுடைய தாய் போன்று இருந்தாள்.

இந்த வேளையில் சிறுவனைப் பின்தொடர்ந்து வந்த அருட்சகோதரிகள் அவனிடம், “எதற்காக வீட்டை விட்டு, இப்படி அடிக்கடி ஓடிவந்து விடுகிறாய், உனக்கு என்ன ஆயிற்று” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “எது என்னுடைய வீடு? அதுவா?. நிச்சயமாக அதுவல்ல, என்னுடைய தாய் இருக்கும் இந்த இடம்தான் என்னுடைய வீடு, மகிழ்ச்சி எல்லாம்” என்றான்.

ஆம், மரியா என்னும் விண்ணகத் தாயிருக்கும் இடம்தான் நமது மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம். ஆகவே, மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவில் நாம் தாயோடு இருப்போம், தாயின் வழியில் நடப்போம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு