மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..


இரண்டாம் ஆண்டு

சாம்பல் புதன்
இன்றைய வாசகங்கள்:-
யோவேல் 2: 12-18 | 2 கொரிந்தியர் 5: 20-6:2 | மத்தேயு 6: 1-6, 16-18

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
நம்மையே சரிப்படுத்த இந்தத்‌ தவக்காலத்தில்‌ நுழைவோம்‌.

திருச்சிக்கு அருகில்‌ ஒரு கிராமம்‌ உண்டு. இந்தக்‌ கிராமத்தில்‌ உள்ளவர்கள்‌ மூடப்பழக்க வழக்கங்களுக்கும்‌, மூட நம்பிக்கைக்கும்‌ பேர்‌ போனவர்கள்‌. தங்கள்‌ ஊரில்‌ இரவு 12 மணிக்கு மேல்‌ புலி சுற்றி வருகிறது. யாரும்‌ வீட்டை விட்டு வெளியேறக்‌ கூடாது என்று சொல்லி வந்தார்கள்‌. ஆனால்‌ மூட நம்பிக்கையை ஏற்றுக்‌ கொள்ளாத பெரியாரின்‌ பக்தர்கள்‌ சிலர்‌, ஏன்‌ வெளியேறக்‌ கூடாது நாங்கள்‌ வெளியே வருவோம்‌. அப்படி புலி வந்தால்‌ எதிர்த்து விரட்டுவோம்‌, உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை என முடிவு செய்தார்கள்‌. எனவே இரவு 11 மணிக்குமேல்‌ புலி வருவதைப்‌ பார்க்கக்‌ காத்திருந்தார்கள்‌. சரியாக 12 மணிக்கு புலியும்‌ வந்தது, விரட்டினார்கள்‌. ஆனால்‌ புலியால்‌ ஓட முடியவில்லை. அடித்தார்கள்‌. அடி தாங்காமல்‌ கனைத்தது புலி. அப்போதுதான்‌ அது புலியல்ல, புலித்தோல்‌ போர்த்தப்பட்ட தங்கள்‌ ஊருக்கு அருகில்‌ இருக்கும்‌ சலவைக்காரனின்‌ கழுதை எனக்‌ கண்டு கொண்டார்கள்‌. கழுதை சுதந்திரமாக இரவில்‌ போய்‌ மேய வேண்டும்‌ என்பதற்காகவும்‌, யாரும்‌ அதை அடித்துக்‌ கொன்றுவிடக்‌ கூடாது என்பதற்காகவும்‌ சலவைக்காரன்‌: புலித்தோலைப்‌ போர்த்தி ஊருக்குள்‌ மேய விட்டான்‌. இது எதைக்‌ காட்டுகிறது?

நடிகர்‌ தாங்கள்‌ ஏற்ற பாத்திரத்தை வெளிக்காட்ட வேடம்‌ போட்டு நடிக்கிறார்கள்‌. அது மேடையில்‌ மட்டும்தான்‌. நாம்‌ செய்யும்‌ பக்தி முயற்சிகள்‌ நடிப்பதற்காக அல்ல, பிறர்‌ பார்க்க வேண்டும்‌ என்பதற்காக அல்ல. பக்திச்‌ செயல்கள்‌ இறைவனுக்கு மட்டும்தான்‌ காட்சி தர வேண்டும்‌, மனிதர்‌ முன்‌ மறைவாக இருக்க வேண்டும்‌ என்பதை உணர்த்துகிறது இன்றைய நற்செய்தி. இந்தத்‌ தவக்காலத்தில்‌ நாம்‌ நம்மையே சரி செய்ய, தர்மம்‌, இறைவேண்டல்‌, நோன்பு இருக்க அழைக்கப்படுகிறோம்‌. இதனால்‌ நம்மில்‌ இருக்கும்‌ “நான்‌” என்ற மமதையை நீக்கி, தாழ்ச்சியைப்‌ பெறத்தான்‌ நோன்பும்‌, தர்மமும்‌, செபமும்‌ செய்ய வேண்டும்‌. அதோடு நாம்‌ தர்மம்‌ செய்யும்போது நாம்‌ நம்‌ அயலாரை ஏறெடுத்துப்‌ பார்க்க உதவுகிறது. இறைவேண்டல்‌ என்பது நம்மைப்‌ படைத்து அன்பு செய்யும்‌ (எசா.54 : 10, எரே. 31: 39) இறைவனை நோக்கிப்‌ பார்க்க உதவுகிறது. நோன்பு அல்லது தவம்‌ என்பது நம்மையே நாம்‌ உள்நோக்கி பயணம்‌ செய்து நம்மைச்‌ சரி செய்ய உதவுகிறது.

இதை உணராது வெளிவேடத்திற்காக நிறைவேற்றும்‌ அறச்செயல்கள்‌ ஒன்றுக்கும்‌ உதவாது என்பதையும்‌ நம்‌ ஆண்டவர்‌ இயேசு (மத்‌ 6 : 1-6, 16-18) எச்சரிக்கிறார்‌. “உங்கள்‌ இதயத்தோடு அழுது புலம்பி, என்னிடம்‌ திரும்பி வாருங்கள்‌. உங்கள்‌ உடைகளைக்‌ கிழிக்க வேண்டாம்‌. உங்கள்‌ இதயத்தைக்‌ கிழித்துக்கொண்டு உங்கள்‌ கடவுளாகிய என்னிடம்‌ திரும்பி வாருங்கள்‌” (யோவே. 2:12-18) என்று அழைப்பு விடுக்கிறார்‌ ஆண்டவர்‌ (முதல்‌ வாசகம்‌). இதன்‌ மூலம்‌ பிறர்‌ பார்க்க வேண்டும்‌ என்பதற்காக மட்டும்‌ எதையும்‌ செய்யாதீர்கள்‌ என்று இறைவாக்கினர்‌ யோவேல்‌ மூலமாக ஆண்டவர்‌ எச்சரிப்பு தருகிறார்‌.

இந்தத்‌ தவக்காலத்தைத்‌ தொடங்கும்‌ இந்தப்‌ புனித நாட்களைக்‌ கண்முன்‌ கொண்டு திருத்தூதர்‌ பவுல்‌, “இதுவே தகுந்த காலம்‌. இன்றே மீட்பு நாள்‌ என்றும்‌, உங்கள்‌ இதயக்‌ கதவு திறந்தே இருக்கட்டும்‌” (2 கொரி. 6 : 2, 12) என்றும்‌ கூறுகிறார்‌ (2ஆம்‌ வாசகம்‌). இதை உணர்ந்தவர்களாக நம்மையே சரிப்படுத்த இந்தத்‌ தவக்காலத்தில்‌ நுழைவோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நெற்றியில்‌ திரு நீறோடு...

அமெரிக்காவின்‌ முன்னாள்‌ அதிபரான பில்‌ கிளிண்டனின்‌ துணைவியார்‌ திருமதி.கில்லாரி ரோடம்‌ கிளிண்டன்‌. அவர்‌ தனது பல்வேறு அனுபவங்களைக்‌ குறித்து மிக அருமையான ஆங்கிலத்தில்‌ “வாழும்‌ வரலாறு” - Living History என்ற நூலில்‌ எழுதுகிறார்‌. அவரது கணவர்‌ பில்‌ கிளிண்டன்‌ தனது அலுவலகச்‌ செயலர்‌ லெவின்ஸ்கி என்ற ஒரு பெண்ணுடன்‌ தகாத உறவு கொண்டிருந்தது பற்றி, அவர்‌ தனது மனஉளைச்சல்‌, வேதனை, ஆத்திரம்‌, கோபம்‌ பற்றியெல்லாம்‌ குறிப்பிட்டுள்ளார்‌. பல நாட்டுத்‌ தலைவர்கள்‌ அவருக்கு ஆறுதல்‌ கூறியது பற்றியும்‌ அதில்‌ எழுதியுள்ளார்‌. ஏறத்தாழ 27 ஆண்டுகளாக “லாங்‌ ஐஜலண்டு” சிறையில்‌ இருந்த தென்னாப்பிரிக்கக் கருப்பர்‌ இன விடுதலைத்‌ தலைவர்‌ நெல்சன்‌ மண்டேலா இரு கிளிண்டன்களுக்கும்‌ ஆறுதலாக இவ்வாறு எழுதினார்‌: “நமது வாழ்வின்‌ மிகப்‌ பெரிய, சிறப்பு மிக்க புகழ்‌, பெருமை எதில்‌ உள்ளது என்றால்‌, எப்போழுதும்‌ விழுந்ததில்லை என்று சொல்வதில்‌ அல்ல; விழும்போதெல்லாம்‌ எழுந்து நிமிர்ந்து நிற்கிறேன்‌ என்பதில்‌ தான்‌!”

நினிவே மக்கள்‌ பாவத்தில்‌ விழுந்தார்கள்‌. இறைவாக்கினர்‌ யோனாவின்‌ குரல்‌ ஒலித்தது. உடனே விழித்துக்‌ கொண்டார்கள்‌. விழுந்து கிடக்கிறோம்‌. உடனே எழ வேண்டும்‌, மனம்‌ திருந்த வேண்டும்‌ என்ற எண்ணம்‌ வந்தது. சாக்கு உடை உடுத்தி, சாம்பல்‌ மீது அமர்ந்து நோன்பிருந்து மனம்‌ மாறினார்கள்‌.

நாம்‌ விழுகிறோம்‌. விழுந்து கிடக்கிறோம்‌ என்ற எச்சரிக்கை எங்கிருந்தும்‌ வரலாம்‌. தன்னிலை உணர்கிறோமா, எழமுனைகிறோமா? தெரியவில்லை.

நீனிவே எழுந்து மணமாறியது - புதுவாழ்வு கண்டது!
சோதோம்‌ மனமாறத்‌ தவறியது - பேரழ்வைச்‌ சந்தீத்தது
சோதோமாக அழ்வதைவிட நீனிவேயாக எமுவோம்‌!

நாம்‌ செய்யும்‌ சிறு தவறுகள்‌ கூட நாளைக்குப்‌ பெரு வீழ்ச்சியாக - இருக்க முடியும்‌. பெஞ்சமின்‌ பிராங்கிளின்‌ சொன்னதுபோல்‌ ஆணி விழுந்ததால்‌ அரசு வீழ்ந்த கதையாகி விடும்‌. எதிரிக்குச்‌ சமாதானத்‌ தூது அனுப்பினானாம்‌ மன்னன்‌. குதிரையில்‌ ஏறிச்‌ செய்தியைக்‌ கொண்டு சென்றானாம்‌ வீரன்‌. ஆணி விழுந்ததால்‌ லாடம்‌ விழுந்ததாம்‌. இலாடம்‌ விழுந்ததால்‌ குதிரை விழுந்ததாம்‌. குதிரை விழுந்ததால்‌ வீரன்‌ விழுந்தானாம்‌. வீரன்‌ விழுந்ததால்‌ அவன்‌ கொண்டு சென்ற செய்தி விழுந்ததாம்‌. செய்தி விழுந்ததால்‌ அரசன்‌ விழுந்தானாம்‌. அரசன்‌ விழுந்ததால்‌ அரசு விழுந்ததாம்‌.

சிறிய ஆணிதானே என்று ஒதுக்கிச்‌ சென்றதால்‌ பெரிய அரசே விழுந்தவிட்டதல்லவா! ஆணி விழுந்த உடனேயே அதை எடுத்து இலாடத்தில்‌ அடித்திருந்தால்‌ அரசைக்‌ காப்பாற்றியிருக்கலாமே! சிறிய காரியம்‌ என்று எதையும்‌ ஒதுக்கினால்‌, நாளை "அது பெரிய அழிவாகலாம்‌. சிறிய ஓட்டையினால்‌ பெரிய கப்பலே மூழ்கிவிடாதோ! சிறிய கிருமிதானே பெரிய தொற்றுநோய்க்கே காரணம்‌! சிறிய தீக்குச்சியினால்‌ பெரிய காட்டுக்கே நாசம்‌. அதனால்‌ சிறிய தவறுகள்‌ கூட இத்தவக்காலத்தில்‌ நம்‌ ஆன்ம ஆய்வுக்கு உட்படட்டும்‌.

எல்லாத்‌ தீமைகளும்‌ முதலில்‌ சிறிய அளவில்தான்‌ தொடங்குகின்றன. ஒரே ஒரு 'சிகரெட்டு' புகைத்தால்‌ என்ன? ஒரே ஒரு கப்‌ மது அருந்தினால்‌ என்ன, ஒரே ஒரு பொய்‌ சொன்னால்‌ என்ன, ஒரே ஒரு ரூபாய்‌ லஞ்சம்‌ வாங்கினால்‌ என்ன, என்பதுதான்‌ ஆரம்பம்‌.

ஓர்‌ அரசு அலுவலர்‌ எப்பொழுதும்‌ ஐந்து ரூபாய்‌ இலஞ்சம்‌ வாங்குவார்‌. அவர்‌ இருக்கைக்குப்‌ பின்னால்‌ சுவரில்‌ காந்தி அண்ணல்‌ படம்‌. அதில்‌ நம்மை ஆசீர்வதிப்பது போல கையை வைத்துக்‌ கொண்டிருந்தார்‌. “ஏன்‌ இப்படி காந்தி படத்தை வைத்துக்‌ கொண்டு ஐந்து ரூபாய்‌ இலஞ்சம்‌ வாங்குகிறீர்கள்‌?” என்று கேட்டபோது, “ஐந்துக்குக்‌ குறைந்து வாங்காதே என்று காந்தியே ஐந்து விரல்களைக் காண்பிக்கிறார்‌ பாருங்கள்‌” என்றாராம்‌. இந்த ஐந்து ஜம்பதாகி பிறகு ஐநூறாகி முடிவில்‌ ஐயாயிரமாகி, இன்று அவர்‌ சிறையில்‌ கம்பி எண்ணுகிறார்‌.

ஐந்தில்‌ வளையாதது ஐம்பதில்‌ வளையும்‌. அதாவது ஐந்து ரூபாய் கொடுத்தால்‌ வளையாதது ஐம்பது ரூபாய்‌ கொடுத்தால்‌ வளைந்துவிடும்‌. யூத சமயமாகட்டும்‌, கிறித்தவ மரபாகட்டும்‌ காலம்காலமாகப்‌ புனிதப்படுத்தும்‌ வழிகளாகப்‌ போற்றிவருபவை:

செபம்‌ - தவம்‌ - ஈகை

அவற்றைக்‌ கூட என்ன செய்கிறோம்‌ என்பதல்ல, என்ன நோக்கோடு எத்தகைய மனநிலையில்‌ எப்படிச்‌ செய்கிறோம்‌ என்பதே இறைவனின்‌ எதிர்பார்ப்பு. அதோ, பரிசேயன்‌ செபிக்கிறானே 'வாரத்தில்‌ 2 நாட்கள்‌ ஒரு சந்தி, பத்தில்‌ ஒரு பகுதி இறைவனுக்கு'... உண்மையாக அவன்‌ செய்ததுகூட இறைவன்‌ மனத்தைத்‌ தொடவில்லையே. இதோ இந்த விதவையின்‌ காணிக்கை.... எல்லாரையும்விட இவள்‌ அன்றோ அதிகம்‌ போட்டிருக்கிறாள்‌!

“செபத்துக்கு ஆன்மா உண்ணா நோன்பு” என்றார்‌ திருத்தந்தை 16ஆம்‌ ஆசீர்வாதப்பர்‌.

உண்ணா நோன்பு பொருளும்‌ நிறைவும்‌ பெற வேண்டுமா? உண்ணா நோன்பில்‌ நாம்‌ உண்ண வேண்டியவை இரண்டு.

இறைவார்த்தை. “மனிதர்‌ அப்பத்தினால்‌ மட்டுமல்ல, மாறாகக்‌ கடவுளின்‌ வாய்ச்சொல்‌ ஒவ்வொன்றாலும்‌ வாழ்வர்‌" (மத்‌.4:4) இறைத்திருவுளம்‌. “என்னை அனுப்பியவரின்‌ திருவுளத்தை நிறைவேற்றுவதும்‌ அவர்‌ கொடுத்த வேலையைச்‌ செய்து முடிப்பதுமே என்‌ உணவு” (யோ.4:34)

உன்‌ மன்றாட்டு இறைவனை நோக்கிப்‌ பறக்க வேண்டுமா? அதற்கு நோன்பு, ஈகை என்ற இரு இறக்கைகளைப்‌ பொருத்து.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“கடவுளோடு ஒப்புரவாகுங்கள்”

கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கிறார். நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கிறோமா?

அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய மறையுரைகளிலும் போதனைகளிலும் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்: “கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார்; நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?” என்பதுதான்.

இதைத் தொடர்ந்து கவனித்து வந்த பெரியவர் ஒருநாள் அருள்பணியாளரிடம் சென்று, “சுவாமி! உங்களுடைய மறையுரைகளில் அடிக்கடி ‘கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார்; நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி வருகின்றீர்களே! அதற்கான காரணத்தை நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றார். உடனே அருள்பணியாளர் அவரிடம், “நான் இளங்குருவாய் இருந்த காலக்கட்டத்தில் மூதாட்டி ஒருவர் என்னிடம், “நீங்கள் ஏன் உங்களுடைய மறையுரைகளில், ‘கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார். நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தக்கூடாது! இந்த வாக்கியத்தை உங்களுடைய மறையுரைகளில் பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்” என்றார்.

இதற்குப் பிறகு நான் என்னுடைய மறையுரைகளில் மூதாட்டி சொன்ன அந்த வாக்கியத்தை அடிக்கடி பயன்படுத்தினேன். என்றைக்கு நான் அந்த வாக்கியத்தைப் பயன்படுத்தத் தொடங்கினேனோ, அன்றையிலிருந்து மக்கள் நடுவில் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கின்றேன். அதனால்தான் நான் அந்த வாக்கியத்தை அடிக்கடி என்னுடைய மறையுரைகளில் பயன்படுத்துகின்றேன்” என்றார்.

ஆம். கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார்; நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?’ என்பதுதான், தவக்காலத்தைத் தொடங்கியிருக்கும் இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்கவேண்டிய கேள்வியாக இருக்கின்றது. இன்று நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளோடு நாம் ஒப்புரவாவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துச்சொல்கின்றது. அதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

திருநீற்றுப் புதன் - கிறிஸ்தவர்களுக்கான பாவக் கழுவாய் நாள்:

இஸ்ரயேல் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏழாம் மாதம், பத்தாம் நாளில் நோன்பிருக்க வேண்டும். அன்றைய நாளில் அவர்கள் தூய்மையாகும்படி, குரு பாவக்கழுவாயை நிறைவேற்றுவார். குரு பாவக்கழுவாயை நிறைவேற்றியதும் அவர்கள் தூய்மையடைவார்கள் (லேவி 16: 29-31). மேலும் அவர்கள் பாவமன்னிப்புப் பெற சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்காரவேண்டும் (யோனா 3: 7).

திருஅவையின் தொடக்கக் காலக்கட்டத்தில், அதிலும் குறிப்பாக முதலாம் கிரகோரி திருத்தந்தையாக இருந்த காலக்கட்டத்தில் (590-604) மிகப்பெரிய பாவம் செய்தவர்கள், சாக்கு உடை அணிந்து, சாம்பலில் உட்கார வேண்டும் என்று அறிவுறுத்தினார். 1091 ஆம் ஆண்டு நடந்த பெனவெந்தோ சங்கமானது, தவக்காலத்தின் முதல் நாளில், சாம்பல் பூசிக்கொண்டு நோன்பிருக்கவேண்டும் என்றது. அப்படித்தான் தவக்காலத்தின் முதல் நாளில் நெற்றியில் சாம்பல் பூசும் வழக்கம் உண்டானது. இஸ்ரயேல் மக்கள் எப்படிப் பாவப் பரிகார நாளில் சாக்கு உடை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருந்தார்களோ, அப்படி கிறிஸ்தவர்களாகிய நாம் நெற்றியில் சாம்பலைப் பூசிக்கொண்டு நோன்பிருக்கின்றோம். ஆகவே, திருநீற்றுப் புதன் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு பாவக்கழுவாய் நாள் என்று சொல்லலாம்.

இன்றைய நாளில் அருள்பணியாளர் சாம்பலைக் கையில் எடுத்து ஒவ்வொருவருடைய நெற்றிலும் சிலுவை அடையாளம் வரைந்து, ‘மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய்; மண்ணுக்கே திரும்புவாய்’ அல்லது ‘மனம்மாறி, நற்செய்தியை நம்புங்கள்’ என்கிறார். அருள்பணியாளர் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள், நாம் ஒவ்வொருவரும் மனம்மாறி, ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.

கடவுளோடு ஒப்புரவாவதற்கான அழைப்பு:

திருத்தூதர் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்ற வேண்டுகோளை விடுக்கின்றார். இத்தகைய வேண்டுகோளை அவர் தாமாக அல்ல, கடவுளே விடுப்பதாகக் கூறுகின்றார். புனித பவுல் சொல்வதுபோல், நாம் கடவுளோடு ஒப்புரவாகவேண்டுமெனில், எப்படி ஒப்புரவாக வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோவேல் மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார்.

கடவுளைப் பலியினால் மகிழ்விக்க முடியாது; எரிபலி செலுத்தினாலும் அதில் அவர் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே (திபா 51: 16-17). ஆகவே, கடவுளோடு ஒப்புரவாக வரும்பொழுது அல்லது அவரிடம் திரும்பி வருகின்றபொழுது ஒருவர் நொறுங்கிய, குற்றமுணர்ந்த நெஞ்சத்தோடு வரவேண்டும். அதையே இறைவாக்கினர் யோவேல், உங்கள் உடைகளை அல்ல, உங்கள் இதயத்தைக் கிழித்துகொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார்.

கடவுளோடு ஒப்புரவாவதற்கான மூன்று வழிகள்:

மேலார்ந்த விதமாக அல்ல, உள்ளார்ந்த விதமாகக் கடவுளிடம் ஒப்புரவாக வேண்டும், அவரிடம் திரும்பி வரவேண்டும் என்று இன்றைய முதல் வாசகமும், இரண்டாம் வாசகமும் எடுத்துக்கூறுகின்ற வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் நாம் கடவுளோடு எப்படியெல்லாம் ஒப்புரவாகலாம் என்பதற்கான மூன்று வழிகளை எடுத்துச் சொல்கின்றது.

அறச்செயல்கள், நோன்பு, இறைவேண்டல் ஆகிய மூன்றும் யூத சமயத்தின் மூன்று முக்கியமான தூண்கள். இம்மூன்றையும் கடவுளோடு ஒப்புரவாவதற்கான வழிகளாக இன்றைய நற்செய்தி இயேசு சொல்கின்றார். நாம் நம்மோடு வாழக்கூடிய மனிதர்களுக்கு, அதிலும் குறிப்பாக வறியவர்களுக்கு, ஏழைகளுக்கு அறச்செயல்களை எந்தவோர் பிரதிபாலன் பாராமல் செய்கின்றபொழுது, அது கடவுளுக்கே செய்வதாக இருக்கின்றது (நீமொ 19: 17; மத் 25: 40). அப்படி நாம் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் நாம் அறச்செயல்களைச் செய்கின்றபொழுது கடவுளோடு ஒப்புரவாகின்றோம். அடுத்ததாக நாம் மேற்கொள்ளும் நோன்பின் வழியாக, உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு போன்ற தீமைகளும் பாவங்களும் காணாமல் போகின்றன. இதன்மூலம் நம்முடைய உடலை உண்மையிலேயே கடவுளுடைய கோயிலாக (1 கொரி 3: 16) மாற்றிக் கடவுளோடு ஒப்புரவாகின்றோம்.

நிறைவாக நாம் செய்யக்கூடிய இறைவேண்டுதல் கடவுளுக்கும் நமக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்துகின்றது. ஆகவே அதன்வழியாகவும் நாம் கடவுளோடு ஒப்புரவாகின்றோம். இவ்வாறு நாம் மேற்கொள்ளும் அறச்செயல், நோன்பு, இறைவேண்டல் ஆகியவற்றின் வழியாக நாம் கடவுளோடு ஒப்புரவாகும்பொழுது, இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் நாம் படிப்பது போன்று, கடவுள் நம்மீது கருணை காட்டி, தம் மேலான ஆசிகளை நமக்கு வழங்குவார் என்பது உறுதி. ஆகவே, நாம் கடவுளோடு ஒப்புரவாகி, அவரது மேலான ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை:

‘நாம் ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்பு காட்டுகின்றபொழுது, கடவுள் ஒப்புரவிற்கான பாதையை அமைக்கின்றார்’ என்பார் ஹாரி சாப்மேன் என்ற அறிஞர். எனவே, நாம் ஒருவர் மற்றவரிடம் காட்டும் அன்பின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவாகி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"தவக்காலம் ஓர் அருளின் காலமா! "

பங்கில் ஒரு அருட்பணியாளர் மறைக்கல்வி மாணவ மாணவியர்களுக்கு தியானம் கொடுக்க சென்றிருந்தார். அப்போது அந்த அருட்பணியாளர் "தவக்காலம் என்றால் என்ன? " என்ற கேள்வியை கேட்டார். அதற்கு அந்த மாணவ மாணவியரில் ஒருவர் "கோவில் கோவிலாக சுற்றுலா செல்வது " என்று பதிலளித்தார். மற்றொருவர் "தவக்காலம் என்பது திருமணம் வைக்க முடியாத காலம் "என்று கூறினார். இக்கேள்விகளுக்கான பதிலை கேட்ட அருள்பணியாளர் சற்று அதிர்ந்து போனார். இறுதியாகத் அருட்பணியாளர் "நோன்பு என்றால் என்ன? " என்ற கேள்வியை கேட்டார். அதற்கு ஒருவர் "இஸ்லாமியர்களைப் போல நாமும் உணவு உண்ணாமல் இருப்பது" என்று பதில் கூறினார். இவற்றைக் கேட்ட அருட்பணியாளர் இறுதியாக"தவக்காலம் என்பது உண்மையான கடவுளின் அருளை அடைய உகந்த காலம். இயேசுவோடு இணைந்து பயணிக்கும் சிறப்பு காலம். " என கேள்விக்கு பதில் கொடுத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தைத் தொடங்கி ஆண்டவர் இயேசு உயிர்ப்பு பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். அந்த விழாவானது நம்மில் மாற்றத்தை தரவேண்டும். உண்மையாக தவக்காலம் என்றால் என்ன? இந்த புரிதலை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் . தவக்காலம் சுட்டிக்காட்டும் மதிப்பீடுகளை நாம் அறிந்து கற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.

தவக்காலம் அருளின் காலம்.அப்படியென்றால் மற்ற காலங்களில் கடவுளின் அருள் கிடைக்காதா என்ற கேள்வி எழலாம்.அப்படியல்ல. தவக்காலம் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முக்கியமாக காலமாக இருக்கின்றது. கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்வதற்கு இந்தத் தவக்காலத்தில் மூன்று முக்கியமான செயல்களை செய்து நம் நம்மையே ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

முதலாவதாக தவக்காலத்தில் முக்கியமான பண்பு நோன்பிருத்தல். நோன்பிருத்தல் என்பது எல்லா மதங்களிலும் இருக்கக் கூடிய புனிதச் செயல்பாடு. நோன்பிருத்தல் நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. மேலும் நோன்பு என்பது இறைவேண்டலின் மற்றொரு பரிமாணம். நோன்பு இருத்தலின் வழியாக நாம் நம்மை ஆய்வு செய்ய முடிகிறது. நம்முடைய வாழ்வு எப்படி இருக்கின்றது என்பது பற்றிய தெளிவைப் பெற முடிகின்றது. நம்மையே நாம் முழுமையாக அன்பு செய்து ஏற்றுக்கொள்ள நோன்பிருத்தல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. நோன்பிருத்தல் நம்மை தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது. இத்தகைய தூய்மை நிறைந்த வாழ்வுதான் நமக்கு பாவத்தையும் தீய சக்திகளையும் வெல்ல உதவிசெய்கிறது. எந்த மதத்திலும் நோன்பிருத்தலுக்கு மாதிரிகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் நம் முன்மாதிரி இயேசு தானே நோன்பிருந்து நோன்பின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் நோன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். நோன்பு இருக்கும் பொழுது மக்கள் பார்க்க வேண்டும் என்று தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொண்டு இருப்பது தவறு என்று கூறியுள்ளார். நோன்பு இருக்கும் பொழுது நம் தலையில் எண்ணெயைத் தேய்த்து முகத்தை அழகாக வைத்துக் கொள்ள இயேசு பணித்துள்ளார். இது எதை சுட்டி காட்டுகிறது என்றால் நாம் நோன்பு இருப்பது வெறும் சடங்கு அல்ல ; மாறாக, இது நம்மோடும் இறைவனோடும் கொண்டிருக்கக் கூடிய நல்லுறவு.

எனவே இந்த தவக்காலத்தில் நாம் முடிந்தவரை நோன்பிருந்து இறை ஒன்றிப்பில் சிறந்து விளங்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் உண்ணாமல் நோன்பிருந்து சேமித்த பணத்தை நம்மோடு வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்ற பொழுது, இந்த தவக்காலம் பொருள் நிறைந்ததாக மாறும்.உணவை மட்டுமல்லாது நம்முடைய ஆடம்பரங்கள்,தேவையற்ற உணர்வுகள், வெறுப்புக்கள் போன்றவற்றைக் களைவதும் சுய கட்டுப்பாட்டோடு வாழ்வதும் சிறப்பான நோன்புதான். எனவே நாம் இறைவனோடு ஒன்றித்து அவரின் அருளைப் பெறத் தவக்காலத்தின் நற்செயல்களில் ஒன்றான நோன்பிருத்தல் பண்பினை நாம் வாழ்வாக்க முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக இறைவேண்டல் கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தத் தவக்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றது. இறைவேண்டல் நமக்கும் கடவுளுக்கும் உள்ள நல்லுறவை வலுப்படுத்துவம் பாலமாக இருக்கின்றது. இறைவேண்டல் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. இறைவேண்டலைப் பற்றியத் தெளிவைப் பெற இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு வழிகாட்டுகிறார். இறைவேண்டல் என்பது வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவதல்ல ; மாறாக, இறைவனின் உடனிருப்பை ஆழமாக உணர்வது. இறைவேண்டல் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்ற ஆழமான கருத்தினை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு எடுத்துரைத்துள்ளார். "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும், வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் " (மத்: 6: 5) என்கின்ற வசனம் வழியாக மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இறைவேண்டல் செய்யக்கூடாது என்ற இயேசுவின் எதிர்பார்ப்பை அறியமுடிகின்றது. இன்றைய நாளில் நம்முடைய இறைவேண்டல் வாழ்வை சற்று ஆய்வு செய்து பார்ப்போம். நாம் உண்மையிலேயே கடவுளோடு உறவு கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவேண்டல் செய்திருக்கிறோமா?அல்லது தன்னை ஒரு புனிதராக மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்று இறை வேண்டல் செய்திருக்கிறோமா? இந்த தவக்காலம் முழுவதும் இறைவேண்டல் செய்ய சிறப்பான விதத்தில் அழைக்கப்பட்டுள்ளோம். அந்த இறைவேண்டல் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செய்தோமென்றால் விண்ணகத் தந்தையின் அருளைப் பெற முடியாது.

மேலும்

நாம் இறைவேண்டல் செய்யும் போது உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்து இறை வேண்டல் செய்யவும் பிற இனத்தாரை போல பிதற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே இறைவேண்டல் செய்யாமல் இருக்கவும் இயேசு நமக்கு கற்பித்துள்ளனர். உண்மையான இறைவேண்டல் என்பது மற்றவரின் குற்றங்களை மன்னிப்பதாகும்.இதைத்தான் இயேசு " மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் " (மத்: 6: 14-15) என்று கூறியுள்ளார். பிறரின் குற்றங்களை மன்னிப்பதே இறைவேண்டல்தான். எனவே இந்த தவக்காலத்தில் நமக்கு எதிராக தீங்கு செய்தவர்களை வெறுக்காமல், அவர்களை மன்னித்து அன்பு செய்ய முயற்சி செய்வோம். திருஅவை வரலாற்றில் எண்ணற்ற புனிதர்களை நாம் அறிந்திருக்கின்றோம். அவர்கள் இறைவனோடு ஒன்றித்து நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்ததற்கு இறைவேண்டல் தான் அடிப்படையாக இருந்தது. இறைவேண்டல் நமக்கு ஆற்றலையும் கடவுளின் திருவுளத்தையும் ஞானத்தையும் தருகின்றது. இயேசு தன்னுடைய மூன்றாண்டு இறையாட்சி பணியில் தன்னுடைய பணியை செய்வதற்கு முன்பாக 40 நாட்கள் அலகையால் சோதிக்கப்பட்டு, மனம் தளராமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இறுதியில் அனைத்து சோதனைகளையும்வென்று சிறப்பான இறையாட்சிப் பணியினை செய்தார். அதேபோல பணி செய்கின்ற பொழுது இயேசு அதிகாலையில் இறைவேண்டல் செய்ததாக விவிலியத்தில் அறிய வருகிறோம். எனவே நாமும் இறைவேண்டலில் நிலைத்திருக்கும் பொழுது கடவுளின் திருவுளத்தை அறிந்து அதற்கேற்றார்போல் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். அதேபோல இயேசு தன்னை கல்வாரியில் கையளிப்பதற்கு முன்பாக கெச்தமனி தோட்டத்தில் இறைவேண்டல் செய்தார். ஒரு மனிதராக கொடூரமான துன்பத்தை ஏற்கத் தயங்கினாலும் இறைமகனாகத் தன் தந்தையின் திருவுளப்படி அனைத்தும் நிகழட்டும் என முழுவதுமாக ஒப்படைத்தார். இறைவேண்டல் மட்டுமே இயேசுவுக்கு ஆற்றலையும் துணிவையும் தந்தது. இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கிய பொழுது தன் கனிவான இதயத்தால் கல்லான இதயத்தை கொண்ட படை வீரர்களுக்காக இறைவேண்டல் செய்தார். இத்தகைய மனநிலையைத் தான் இந்த தவக்காலத்தில் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். எனவே இந்த 40 நாட்களும் முடிந்தவரை இறைவேண்டலின் வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டு அவரின் அருளை நிறைவாகப் பெற முயற்சி செய்வோம்.அதை வாழ்நாள் முழுவதும் தொடர முயற்சி செய்வோம்.

மூன்றாவதாக பிறரன்பு பணி செய்தல். பிறரன்பு பணி செய்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆன்மீகமாக இருக்கின்றது. நாம் இறைவனோடு கொள்ளுகின்ற நல்லுறவு பிறரன்பில் தான் நிறைவடைகிறது. நாம் ஒவ்வொருவருமே மனித சேவையில் புனிதம் காண அழைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகத்தில் எத்தனையோ நபர்கள் உண்ண உணவில்லாமலும் இருக்க இடமில்லாமலும் உடுத்த உடையில்லாமலும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டுபுது வாழ்வைப் பெற்றுக் கொள்ள வழிகாட்டுவதுதான் உண்மையான இயேசுவின் மனநிலை. இத்தகைய மனநிலையைத் தான் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இந்தத் தவக்காலத்தில் வளர்த்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவர் இயேசு கொடூரமான சிலுவைச் சாவை ஏற்று தன்னுடைய இரத்தத்தை சிந்தி மீட்பளித்தது, பிறரன்பின் உச்சத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. எனவே இயேசுவின் சகோதர சகோதரிகளாகிய நாம் பிறர் நலத்தோடு வாழ முயற்சி செய்வோம். நம்மாலான உதவிகளைப் பிறருக்குச் செய்ய முயற்சி செய்வோம்.உதவி என்பது பொருளாதாரத்தை மட்டும் மையப்படுத்தியது அல்ல; மாறாக, நம்முடைய உடனிருப்பு, ஆறுதலான வார்த்தை, ஊக்கமூட்டும் மனநிலை, பிறரைப் பற்றிய நேர்மறை எண்ணம், பிறருக்கு வழிகாட்டும் மனநிலை போன்ற அனைத்துமே பிறரன்பு வாழ்வுக்கு சான்று பகர்கின்றது. இந்த தவக்காலம் முழுவதும் நம்முடைய தவ முயற்சியின் வழியாகச் சேமித்தப் பணத்தை ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக கொடுக்க முன்வருவோம். அதேபோல பிறருக்கு உயிர் கொடுக்கக்கூடிய இரத்தத்தை இரத்ததானத்தின் வழியாக கொடுக்க முயற்சி செய்வோம். ஆளுமை இழந்து தவிக்கின்ற மக்களுக்கு ஆளுமை உணர்வை கொடுப்போம். இவ்வாறான பிறரன்பு பணிகளைச் செய்கின்ற பொழுது இத்தவக்காலம் அருளின் காலமாகவும் மகிழ்ச்சியின் காலமாகவும் இரக்கத்தின் காலமாகவும் அமையும்.

நோன்பிருத்தல், இறைவேண்டல் மற்றும் பிறரன்பு பணிகள் போன்ற
இம் மூன்று நற்செயல்பாடுகளும் நம்மைக் கிறிஸ்தவ ஆன்மீக உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றன. நாம் புரட்சிகரமான ஆன்மீக வாழ்வை வாழ்ந்திட இவை நமக்கு வழிகாட்டுகின்றன.

இந்த நாற்பது நாட்களும் நம்மையே முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்து, இறையருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். அதற்கு தேவையான இறைபயத்தையும் பிறர் நலம் பேணும் எண்ணங்களையும் தியாகம் செய்யும் மனநிலையையும் இறைவனிடம் கேட்போம். இறையருளை நாமும் பிறரும் பெற்றுக்கொள்ள, நாம் கருவிகளாகப் பயன்பட இந்த தவக்காலம் முழுவதும் நம் பயணத்தைத் தொடர்வோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா! இந்த தவக்காலம் முழுவதும் நாங்கள் நோன்பின் வழியாகவும் இறைவேண்டலில் வழியாகவும் பிறரன்புப் பணிகளின் வழியாகவும் உமக்கு சான்று பகர்ந்து, உம்முடைய அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ளத் தேவையான ஆற்றலையும் ஞானத்தையும் தந்தருளும். ஆமென்.

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் அன்பைத் தேடி வர….

அன்புக்குரியவர்களே! வழிபாட்டு ஆண்டின்படி இன்றைய நாளில் தவக்காலத்தை தொடங்குகிறோம். வழிபாட்டு ஆண்டிலே இது உன்னதமான காலம். புனிதமான காலம். நமது மீட்பின் பாதையைச் சுட்டும் காலம். சாம்பல் பூசி இன்றிலிருந்து 40 நாட்கள் அனுசரிக்கப் போகிறோம். 40 என்பது விவிலியத்தில் மிக முக்கியமான எண்களில் ஒன்று. தொடக்க நூல் முதல் திருவெளிப்பாடு வரை பார்க்கையில் நாற்பது என்பது முழுமையின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் விடுதலைப் பயணத்தில் வரும் 40 ஆண்டுகள் பாலைவனப் பயணமும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் திருமுழுக்குப் பின் பொதுப் பணிக்கு முன் சென்ற 40 நாற்பது நாட்கள் பாலைவன அனுபவமும் மிக முக்கியமானது.

இந்த இரண்டும்

1. இறைவனின் அன்பை புரிந்து கொள்ள உதவியது
2. இறைவன் அன்பை பிறருக்கு கொடுக்கத் தன்னை தயாரித்தது
இன்றும் இதே 40 நாற்கள் நம்மையும் ஆண்டவரின் அன்பைத் தேடி வர அழைப்பு விடுக்கின்றது.

முதலாவதாக சாம்பல் உணர்த்தவது என்ன? - நாம் அனைவரும் மண்ணிலிருந்து படைக்கப்பட்டதால் அனைவரும் மண்ணுக்கு சமம் என்பதை உணர்த்தியும், எனவே இறைவா எங்கள் மீது இரக்கம் கொண்டு உமது பேரன்பைக் காட்டும் என்பதை நமக்கு நினைவுப்படுத்திக் கூறுவது.

இந்த புனித நாட்களில் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு “உங்கள் முழு இதயத்தோடு திரும்பி வாருங்கள்” அதாவது என் அன்பில் நிலைத்திருக்க வாருங்கள் என்பதே. நாம் தவறு செய்தாலும், துரோகங்கள் செய்தாலும் நம்மைத் தேடி வருவது இறைவனின் அன்பு. விபசாரிகளாக இறைவனுடைய அன்பிலிருந்து விலகிப்போன இஸ்ராயேல் மக்களுக்கு ஊதாரி மைந்தன் உவமை, காணாமல் போன ஆடு உவமை போன்றவைகள் வழியாக தனது அன்பின் தன்மையைப் பற்றி எடுத்துரைக்கிறார். இந்த ஆண்டவரின் அன்பில் நிலைத்தருப்பதால் நாம் எப்படிப்பட்ட பயன்களை அடையப் போகிறோம்?

ஆண்டவன் அன்பு சக்தி தரும்
ஆண்டவன் அன்பு சித்தி தரும்
அண்டவன் அன்பு புத்தி தரும்
ஆண்டவன் அன்பு முக்தி தரும்
ஆண்டவன் அன்பு புகழ் அளிக்கும்
அண்டவன் அன்பு மகிழ்வு அளிக்கும்
ஆண்டவன் அன்பால் சீர் பரவும்
ஆண்டவன் அன்பால் நேர் பரவும்
ஆண்டவன் அன்பால் குணம் பெறலாம்
ஆண்டவன் அன்பால் மணம் பெறலாம்
ஆண்டவன் அன்பே சத்தியமே
ஆண்டவன் அன்பே நித்தியமே…

இந்த பலன்களைப் பெற நாம் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.. நம் இதயத்தை கிழிக்காமல் இதயத்தோடு வருவோம். அண்டவரின் அன்பில் நிலைத்திருக்க உதவுவதுதான் இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லும் செபம், நோன்பு, அறச்செயல்கள். இவை போன்றவை இன்று பொருளற்று போய்விட்டது. பெரும்பாலும் வாழ்வுக்கு உதவாமல் சடங்காகிவிட்டது. நான் திருச்சியில் இறையியல் படித்துக் கொண்டிருந்த காலம். வார இறுதி களப்பணிக்காக செல்லுமிடங்களில் எல்லா மதத்தவர்களும் இருப்பார்கள். அதில் ஒரு இளைஞர் மாலை அணிந்து 40 நாட்கள் விரதம் இருந்து தன்னுடைய புனித கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் இல்லம் திரும்பினார். இல்லம் திரும்பிய இரண்டாம் நாளில் மது அருந்தியதால் சாலை விபத்தில் சிக்குகிறார் 4-ம் நாளில் மரணிக்கிறார். நாமும் பல நிலைகளில் இப்படித்தான் இருக்கிறோம். நமது செயல்கள் நமது வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லையெனில் அது வீண் பெருமைக்கு தானே.

நமது செயல்களில் நம்மை மையப்படுத்தாமல் பிறரை மையப்படுத்தி அதன்மூலம் ஆண்டவன் அன்பை பெற வேண்டும் என எசாயா அழைக்கிறார்.

எசாயவின் இறைவாக்கின்படி

நோன்பு – இந்த நோன்பு என்பது பிறருக்கு காட்டுவது அல்ல. அறச்செயல்கள் வழி நம்மை வருத்துவது நாம் சேர்த்து வைக்க அல்ல: அது பிறருக்கு உதவவே. எசாயா 58:7-ன் படி பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோருக்கு உடை கொடுப்பதும் தான் கடவுள் விரும்பும் நோன்பு. பிறரு;கு உதவாத, உள்ளத்தை உருத்தாத நோன்பு என்ன நோன்பு. இயேசுவும் நமக்காகத்தானே சிலுவையில் தன்னையே வருத்தினார். நமக்காக ஒருவர் உயிரைக் கொடுக்கும்போது அந்த அன்பில் நிலைத்திருக்க நம்மோடு இருப்பவனுக்காக நம் உடலை கொஞ்சம் வருத்தக் கூட முடியாதா? செபம் - இரவிந்திரநாத் தாகூர் சொல்லுவார் - செபம் என்பது நான் என்பதிலிருந்து நாம் என்பதற்கு அதாவது குறுகியதிலிருந்து பெரியதற்கு கடந்து போவது. நமது செபங்களில் பிறரை முன்னிலைப்படுத்த வேண்டும். அதற்காக நான் உனக்காக செபிக்கிறேன் என சொல்லிக் கொண்டே இருக்கவும் கூடாது, நடிக்கவும் கூடாது. நமது செயம் பிறருக்கு உதவும் போது, இறைவனின் அன்பு நம்மைத் தேடி வருகிறது. இயேசுவின் புனித குழந்தை தெரசாள் தான் செய்யும் அனைத்து வேலைகளையும் செபங்களாக மாற்றி பாவிகள் மனந் திரும்ப உதவினார். நமது செபங்களும் பிறருக்கு உதவுவதன் வழி இறைவனின் அன்பும் நம்மைத் தேடி வரும்.

இந்த செபம், நோன்பு, அறச் செயல்கள் இவற்றைத் தொகுத்து ஒரு சில செயல்களையாவது நாம் செய்தால் இறைவனின் அன்பைத் தெடிச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பதே என் என் நம்பிக்கை.

  1. திருமணமான ஆண்கள் : மது அருந்துவதைத் இந்த 40 நாட்களும் தவிர்க்கலாம். உழைத்த பெற்ற வருமானத்தை வீட்டில் கொடுத்து தந்தையின் அன்பு என்ன என்பதை காட்டி ஆண்டவரின் அன்புக்கு நெருங்கிச் செல்லலாமே! 40 நாட்கள் முடியாவிட்டால் குறைந்தபட்சம் 7 வெள்ளிக் கிழமைகளிலாவது மது அருந்துவதைத் தவிர்க்கலாமே!
  2. திருமணமான பெண்கள் : தெருக்களில் அமர்ந்து வெற்றிலை மென்று, வீண் பேச்சுகள், தாயம் உருட்டுதல் அடுத்தவர் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது போன்றவற்றை தவிர்த்து நமது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி மட்டும் சிந்திக்கலாமே!
  3. இளையோர் : இளையோரே அலைபேசியில் நமது நேரத்தை அதிகம் விணாக்குகிறோம். ஏன் வாழ்வையே இழந்து வருகிறோம். எனவே முடிந்த அளவு வெள்ளிக் கிழமைகளில் ஊடக நோன்பு இருக்கலாமே! அந்நாட்களில் அலைபேசி, தொலைக் காட்சி போன்றவற்றை அணைத்து வைக்கலாமே!
  4. ஒட்டு மொத்தமாக அனைவரும் முடிந்தால் ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு நமது பங்கு ஆலயம் வந்து நற்கருணை சந்தித்து, தனியாக சிலுவைப் பாதை சொல்லி செபிக்கலாமே!
இது போன்ற செயல்களால் இறைவனின் அன்பை உணரலாம். அந்த அன்பை பிறருக்கு வழங்கலாம்.

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு