மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 1:1-11 | எபேசியர் 4:1-13 | மாற்கு 16:15-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
இயேசுவின்‌ விண்ணேற்றப்‌ பெருவிழா

வார்த்தை மனு உருவானார்‌. நம்மிடையே குடிகொண்டார்‌. இது கிறிஸ்து பிறப்பு விழாக்‌ கொண்டாட்டம்‌. மனு உரு எடுத்த வார்த்தை மகிமையானார்‌. இது உயிர்ப்புப்‌ பெருவிழாக்‌ கொண்டாட்டம்‌. ஆனால்‌ மகிமையான மனுஉ௫ மீண்டும்‌ வார்த்தையானார்‌. இதுதான்‌ விண்ணேற்பு விழாக்‌ கொண்டாட்டம்‌. ஆம்‌ இந்த மாபெரும்‌ விண்ணேற்பு விழாவைத்தான்‌ இன்று தாயாகிய திருச்சபை நினைவு கூர்கிறது இன்றைய வழிபாட்டிலே.

கதை

மறைக்கல்வி வகுப்பிலே ஆசிரியர்‌ மாணவர்களிடம்‌ விண்ணகம்‌ செல்ல விரும்புகிறவர்கள்‌ கைகளை மேலே உயர்த்துங்கள்‌ என்று கேட்டார்‌. ஒரு மாணவனைத்‌ தவிர மற்ற மாணவர்கள்‌ கைகளை மேலே உயர்த்தினார்கள்‌. தம்பி! உனக்கு விண்ணகம்‌ செல்ல விருப்பம்‌ இல்லையா என்று ஆசிரியர்‌ கேட்டபோது, எனக்கு விருப்பம்தான்‌, ஆனால்‌ எங்க. அப்பா மறைக்கல்வி முடிந்தவுடன்‌ நேரா வீட்டிற்கு வரும்படி கண்டிப்பாகச்‌ சொல்லிவிட்டார்‌ என்றான்‌. எல்லோருக்கும்‌ சிரிப்பு.

நிகழச்சி

நமக்கும்‌ விண்ணகம்‌ செல்ல விருப்பம்‌ என்றாலும்‌ இந்த மண்ணகத்தை விட்டுப்‌ போக விருப்பம்‌ இல்லை. அன்னை தெரெசா இறக்கும்‌ வேளையில்‌ அவரது ஏழைக்‌ குழந்தைகள்‌ அம்மா எங்களை அனாதையாக விட்டு விட்டு ஏன்‌ விண்ணகம்‌ செல்கிறீர்கள்‌. அங்கே ஏழைகள்‌ இல்லையம்மா என்று சொல்லி அழுதார்களாம்‌.

கிறிஸ்து விண்ணகம்‌ செல்லாமல்‌ எப்போதும்‌ இம்‌ மண்ணகத்தில்‌ வாழ்ந்து பணிபுரிந்திருக்கலாம்‌. ஆனால்‌ தந்தையின்‌ திருவுளப்படி எல்லாம்‌ நிறைவேற்றி அவர்‌ விண்ணகம்‌ சென்றுவிட்டார்‌. அவர்‌ விண்ணகம்‌ சென்றது இம்மண்ணக துன்பங்களிலிருந்து தப்பித்துக்‌ கொள்வதற்காக அல்ல. மாறாக மகிமையின்‌ நிலையை அடைவதற்காக. ஆனால்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ தூய பவுல்‌ எபேசியருக்கு கூறுவதுபோல, இயேசுவே உடலுக்குத்‌ தலையாக இருக்கிறார்‌. எனவே தலையாகிய கிறிஸ்துவோடு, அவரது உடலாகிய திருச்சபையைப்‌ பிரிக்க இயலாது. எனவே நம்‌ தலையாகிய கிறிஸ்து அடைந்த அதே விண்ணக மகிமையில்‌ அவரது உடலாகிய நாம்‌ பங்கு பெறுவது உறுதியாகிவிட்டது (எபே. 1:22-23). விண்ணகம்‌ சென்ற கிறிஸ்து மீண்டும்‌ மண்ணகம்‌ திரும்புவார்‌ என்பதைத்‌ திருத்தூதர்‌ பணியில்‌ இயேசு அறிவிக்கிறார்‌. அவர்‌ மீண்டும்‌ வருவார்‌ (தி. பணி 1:11), எனவேதான்‌ திருப்பலியில்‌ எனக்காக மரித்தார்‌, எனக்காக உயிர்த்தார்‌. . எனக்காக மீண்டும்‌ வருவார்‌ என விசுவாச அறிக்கையாகவும்‌, நாங்கள்‌ நம்பியிருக்கும்‌ பேரின்ப வாழ்வையும்‌ - எம்‌ மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின்‌ வருகையையும்‌ மகிழ்ச்சியுடன்‌ எதிர்பார்த்திருக்கிறோம்‌ என்றும்‌ திரும்பத்‌ திரும்ப செபிக்கிறோம்‌. ஆனால்‌ மகிமையோடு மனுமகனாகிய இயேசு தன்‌ மணவாட்டியாகிய திருச்சபையைத்‌ திரும்ப அழைக்க வருமுன்‌ நம்மிடம்‌ மிக முக்கிய ஒரு பணியை விட்டுச்‌ சென்றிருக்கிறார்‌.

உலகமெங்கும்‌ சென்று படைப்பிற்கெல்லாம்‌ நற்செய்தியை பறைசாற்றுங்கள்‌ (மாற்‌. 16:15). திருச்சபையானது இந்தப்‌ பணியில்‌ தனித்து இயங்கவில்லை. கிறிஸ்துவே உடனிருந்து செயலாற்றுகிறார்‌. ஆண்டவரும்‌ உடனிருந்து செயல்பட்டு, நிகழும்‌ அடையாளங்களால்‌ அவர்களுடைய வார்த்தையை உறுதிப்‌ படுத்தினார்‌ (மாற்‌. 16:20). எனவேதான்‌ இயேசு உறுதியான ஒரு வாக்குறுதியைத்‌ தந்துள்ளார்‌. உலகம்‌ முடியுமட்டும்‌ எந்நாளும்‌ உங்களோடு இருப்பேன்‌ (மத்‌. 28:20) என்று. எனவே அவரது கரங்களாக, அவரது குரலாக இருந்து செயல்பட நம்மை அழைக்கிறார்‌. அன்று ஆதித்‌ திருச்சபையிலே திருத்தூதர்களும்‌, சீடர்களும்‌, தாங்கள்‌ கண்டதையும்‌, கேட்டதையும்‌, தொட்டு உணர்ந்ததையும்‌ மற்றவருக்குத்‌ துணிவுடன்‌ அறிவித்தார்கள்‌. அதுதான்‌ நற்செய்தி. இன்று நாம்‌ அறிவிக்கும்‌ நற்செய்தி என்ன?

முதலாவதாக, இறைவனுக்கு நன்றி கூறி தான்‌ பெற்ற கொடைகளுக்கு, ஆண்டவரைப்‌ புகழ்வதால்‌ அவரது திருவார்த்தையைச்‌ செபிப்பதால்‌, வாசிப்பதால்‌ நற்செய்திக்குச்‌ சான்று பகர முடியும்‌.

இரண்டாவதாக, உன்‌ வாழ்வில்‌ இறைவன்‌ தரும்‌ கொடை களையும்‌, சந்தர்ப்பச்‌ சூழ்நிலைகளையும்‌ கொண்டு, இயேசுவின்‌ பிரசன்னம்‌, அவரது அன்பு, அவரது வாழ்வு போன்றவைகளைக்‌ கொண்டு மற்றவரை உற்சாகப்படுத்தியும்‌, பாராட்டியும்‌ மற்றவரோடு பகிர்ந்தும்‌, செவிமடுத்தும்‌, ஆறுதல்‌ படுத்தியும்‌ நீ சாட்சியாக இருக்க முடியும்‌.

மூன்றாவதாக, உன்‌ வாழ்வில்‌ உயிர்த்த இயேசு, மக்கள்‌ மூலமாக, நிகழ்ச்சிகள்‌ மூலமாக உன்னைத்‌ தொட்டதை மற்றவருக்குத்‌ தெரிவிப்பதால்‌ நீ சாட்சியாக வாழ முடியும்‌.

முடிவுரை

ஒரு சிறு தொழிலக நிர்வாகி ஒருவருக்கு வேலை கொடுக்கும்படி சிபாரிசு கடிதம்‌ எழுதி அனுப்பினேன்‌. பல பேர்‌ நேர்முகத்‌ தேர்வுக்கு வந்தாலும்‌ நான்‌ அனுப்பிய மனிதருக்கு மட்டும்‌ வேலை கிடைத்தது. எனவே தொலைபேசியில்‌ நன்றி கூற எடுத்தேன்‌. ஆனால்‌ அந்த நிர்வாகி சொன்ன வார்த்தைகள்‌ என்னைச்‌ சிந்திக்க வைத்தன. அவர்‌ ஓர்‌ இந்து. பாதர்‌! இவர்‌ ஒரு நல்ல, சிறந்த கத்தோலிக்கர்‌ என எழுதி இருந்தீர்கள்‌. அதற்காகவே வேலை கொடுத்தேன்‌. ஏனெனில்‌ உங்கள்‌ : பைபிள்‌ போதனையோடும்‌ மனசாட்சியோடும்‌ அவர்‌ நடப்பார்‌ என நம்புகிறேன்‌ என்றார்‌. ஆம்‌ இந்த நம்பிக்கையைப்‌ பிறரில்‌ உண்டாக்கத்தான்‌ இயேசு, அவர்‌ வரும்வரை நம்மை அனுப்புகிறார்‌

நீங்கள்‌ கிறிஸ்துவோடு உயிர்‌ பெற்று எழுந்தவர்களானால்‌ மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்‌ (கொலோ. 3:1). வாழ்வளிக்கும்‌ இயேசு தோன்றும்பொழுது நீங்களும்‌ அவரோடு மாட்சிமை பொருந்தியவராய்த்‌ தோன்றுவீர்கள்‌ (கொலோ. 3:4).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கடவுளால் ஆகாதது ஒன்றுமில்ல.

விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பதுதான் அது.

பழைய ஏற்பாட்டில் நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டது நம்பிக்கையினால்! ஆபிரகாம் நம்பிக்கை கொண்டோரின் தந்தையாகியது நம்பிக்கையினால்! செங்கடல் இரண்டாகப் பிரிந்தது நம்பிக்கையினால் ! வானத்திலிருந்து மன்னா பொழிந்தது நம்பிக்கையினால்! கற்பாறை இரண்டாகப் பிளந்தது நம்பிக்கையினால்! புதிய ஏற்பாட்டில் மரியா கடவுளின் தாயானது நம்பிக்கையினால்! யோசேப்பு நேர்மையாளரானது நம்பிக்கையினால் நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையினால்! பாவிகள் பாவமன்னிப்புப் பெற்றது நம்பிக்கையினால்! இறந்தவர் உயிர்பெற்று எழுந்தது நம்பிக்கையினால்!

ஆம். உலகத்தை எல்லா துன்ப துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

அமைதியான நதியினிலே ஓடம்! அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்! காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்! அந்தக் கரைதான் நம்பிக்கை

இப்படிப்பட்ட நம்பிக்கையை நமது உள்ளத்திற்குள்ளும், இல்லத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம். முனிவர் ஒருவர் ஒரு வெற்றுப்பானையை அவரது சீடர்கள் முன்னால் வைத்துவிட்டு, அவரது சீடர்களைப் பார்த்து, இதற்குள் என்ன இருக்கின்றது? என்று கேட்டார். சிலர், ஒன்றுமில்லை என்றார்கள். சிலர், இதற்குள் காற்று இருக்கின்றது என்றார்கள்

முனிவர், காற்று இருக்கின்றது என்று சொன்னவர்களைப் பாராட்டிவிட்டு, இதற்குள் இருக்கும் காற்றை வெளியே எடுக்க முடியுமா? என்று கேட்டார்.

எல்லா சீடர்களும், முடியாது என்றார்கள். முனிவரோ, முடியும் என்றார். எப்படி? என்று சீடர்கள் கேட்டார்கள். அதற்கு முனிவர், இந்தப் பானைக்குள்ளே தண்ணீரை ஊற்றினால், இதற்குள்ளிருக்கும் காற்று வெளியேறிவிடும் என்றார்.

தூய ஆவியாரின் துணையோடு (முதல் வாசகம்) நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை (இரண்டாம் வாசகம்) என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்! அப்போது நாம் அனைவரும் மீட்கப்பட்டவர்களாய் நிலா போல உலா வருவோம்.

மேலும் அறிவோம் :

செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (குறள் : 26).
பொருள் :
பிறரால் செய்வதற்கு அரிய பெருமைதரும் நல்ல செயல்களை நிறைவேற்றுபவர் பெரியவர் என்று பாராட்டப்படுவர். சிறுமையான செயல்களை மட்டுமே செய்து பெருமையான நற்பணிபுரியாதவர் சிறியவர் ஆவர்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

விண்ணகம் செல்ல...

மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம், “விண்ணகம் செல்ல விரும்புவர்கள் கைகளை மேலே உயர்த்துங்கள் " என்று கேட்டார், ஒரு மாணவனைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் கைகளை உயர்த்தினர். கையை உயர்த்தாத மாணவனிடம், "ஏப்பா, உனக்கு விண்ணகம் செல்ல விருப்பம் இல்லையா?” என்று ஆசிரியர் கேட்டபோது, அவன், "விண்ணகம் செல்ல எனக்கு விருப்பம் தான்; ஆனால், இன்று பள்ளி முடிந்தவுடன் வேறு எங்கும் போகாமல் நேராக வீட்டிற்கு வரும்படி எங்கப்பா சுன்ண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார் " என்றான், நமக்கு விண்ணகம் செல்லப் பிரியம் என்றாலும், இந்த மண்ணகத்தை விட்டுப் போகப்பிரியமில்லை!

அன்னைத் தெரசா இறக்கும் வேளையில், அவரிடம் ஏழைக்குழந்தைகள், "அம்மா! எங்களை அனாதைகளாக விட்டுவிட்டு விண்ணகம் செல்லாதீர்கள், அங்கே நீங்கள் சேவை செய்ய ஏழைகள் இல்லை" என்று சொல்லி அழுதார்களாம்!

கிறிஸ்து விண்ணகம் செல்லாமல், எப்போதும் இம் மண்ணகத்தில் வாழ்ந்து மக்களுக்குப் பணிபுரிந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் ஏன் விண்ணகம் சென்றார், "அவர் விண்ணகம் சென்றது இம்மண்ணகத் துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல; நம் முதல்வரும் தலைவருமான அவர் சென்ற அதே விண்ணகத்திற்கு, அவருடைய சீடர்களாகிய நாமும் செல்வோம் என்னும் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே" என்று இன்றைய திருப்பலியின் நன்றியுரையில் திருச்சபை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், திருச்சபை கிறிஸ்துவின் உடலென்றும், அவரே அவ்வுடலுக்குத் தலையாய் இருக்கிறார் என்றும் கூறுகிறார் (எபே 1:22-23) எவ்வாறு தலையிலிருந்து உடலைப்பிரிக்க இயலாதோ, அவ்வாறே தலையாகிய கிறிஸ்துவிடமிருந்து அவரது உடலா கிய திருச்சபையைப் பிரிக்க இயலாது. எனவே, நம் தலையாகிய கிறிஸ்து அடைந்த அதே விண்க மகிமையில் அவரது உடலாகிய நாமும் பங்கு பெறுவது. உறுதியாகிவிட்டது.

விண்ணகம் சென்ற கிறிஸ்து மீண்டும் மண்ணகம் திரும்புவார் என்று இன்றைய முதல் வாசகத்தில் வானதூதர்கள் சீடர்களுக்கு அறிவிக்கின்றனர் (திப 1:11). அவர் மீண்டும் வருவார் என்பது எவ்வளவு உறுதியானதோ, அவ்வளவு உறுதியற்றது அவர் எப்போது வருவார் என்பது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறியமுயல்வது ஆணவம் மட்டுமல்ல, இறை நிந்தையுமாகும். ஏனெனில், கடவுள் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7) என்று இயேசுவே குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றியும் கத்தோலிக்கத் திருச்சபை போதிய அளவு வலியுறுத்துவதில்லை என்று ஏனைய சபைகள் சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, ஏனெனில், ஒவ்வொரு திருப்பலியிலும் "நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்று திருச்சபை ஓயாது ஓதிக்கொண்டிருக்கிறது!

ஆடிமாதத்தில் பலத்த காற்று வீசுகிறது. ஏனென்றால், ஆடிமாதத்தில் புதிய தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட தம்பதிகள் ஒருவர் மற்றவரை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுடைய ஏக்கப் பெருமூச்சு தான் பலத்த காற்றாக மாறிவிடுகிறதாம்!

திருச்சபை என்னும் மணமகளும் தனது மனமகனாகிய கிறிஸ்து எப்போது திரும்புவார் என்று எண்ணி எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகின்றது. தொடக்கக் காலக் கிறிஸ்துவர்கள் அடிக்கடி "மாரனாத்தா", அதாவது, "ஆண்டவரே வருக!" என்று கூவி அழைத்தனர் (1கொரி 16:22), விவிலியத்தின் இறுதிவாக்கியம்' "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (திவெ 22:20)

தன் கணவர் தன்னை விட்டுப்பிரிந்து வீடு திரும்பிவராத நிலையில் "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்த கணவர் இன்னும் வீடு திரும்பலை." என்று சோகத்துடன் பாடும் மனைவியைப் போல் இராது, திருச்சபை தன்னிடம் கிறிஸ்து ஒப்படைத்துள்ள மீட்புப்பணியை முழு மூச்சுடன் ஆற்றிக் கொண்டிருக்கிறது.

இன்றைய நற்செய்தி உணர்த்தும் உண்மைகள் பின்வருமாறு:

 1. விண்ணகம் செல்லுமுன் கிறிஸ்து, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார், கிறிஸ்துவே நற்செய்தியின் முதலும் முடிவுமாவார், ஒவ்வொரு சீடரும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அறிவிக்கும் திருத்தூதராவார்.
 2. முழு மனிதனையும் குணமாக்கும் பணி திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சீடர்கள் பேய்களை ஒட்டலாம்; நோய்களைக் குணமாக்கலாம்; பயமின்றிப் பாம்பைக் கையால் பிடிக்கலாம்; கொடிய நஞ்சையும் அருந்தலாம், அதாவது, சீடர்களால் மேற்கொள்ள முடியாத தடைகளோ தீயசக்திகளோ இவ்வுலகில் எதுவுமில்லை .
 3. திருச்சபை தனது மீட்புப் பணியில் தனித்து இயங்கவில்லை, கிறிஸ்துவே திருச்சபையில் உடனிருந்து செயலாற்றுகிறார். "ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழும் அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப் படுத்தினார்” (மாற் 16:20).

திருச்சபை எவ்வளவுக்கு விண்ணக வாழ்வை எதிர்பார்க்கிறதோ, அவ்வளவுக்கு இம்மண்ணக மாந்தரின் முன்னேற்றத்திற்காக அது உழைக்க அழைக்கப்பட்டுள்ளது. மண்ணசு நலன்களில் அக்கறை கொண்டு, விண்ணக நலன்களை விருப்பமுடன் நாடவேண்டும். "பாச்சி பாச்சி” என்று அழுத குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாததால் "பூச்சி பூச்சி" என்று சொல்லி அக்குழந்தையை ஏமாற்றியதுபோல், தாயாகிய திருச்சபை விண்ணக வாழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு மண்ணக வாழ்வை இருட்டடிப்புச் செய்யக்கூடாது. "உமது அரசு வருக!

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்." எனவே மண்ணக வாழ்வையும் விண்ணக வாழ்வையும் பிரிக்காமல் இரண்டையும் ஒருங்கிணைத்து வாழக் கற்றுக் கொள்வோமாக!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

வாழும் போதே மறுமைக்கு வசதி செய்து கொள்வோம்

1917ம் ஆண்டு மே 13ம் நாள். நண்பகல் வேளை. போர்த்துக்கல் நாட்டில் ஃபாத்திமா என்ற சிற்றூருக்கருகில் லூசியா, ஜெசிந்தா என்ற இரு சிறுமிகளும் ஃபிரான்சிஸ் என்ற சிறுவனும் கண்ட காட்சி. உடல் எல்லாம் ஒளிக்கதிர் பாய, வார்த்தைக்கோ வருணனைக்கோ அடங்காத வனப்போடு தோன்றிய அந்த அழகுப் பெண்மணியிடம் - அன்னை மரியாவிடம் - அச்சிறுவருள் சற்று மூத்தவளான லூசியா உரையாடிக் கேட்ட கேள்விகளும் பெற்ற பதில்களும்:

''நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?''
"நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்''.
“உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?''
"தொடர்ந்து ஆறுமாதம் ஒவ்வொரு மாதமும் 13ம் நாள் இதே நேரம் இதே இடத்துக்கு வர வேண்டும் .
"நான் மோட்சத்துக்குப் போவேனா?"
"ஆம் நீ போவாய்" "ஜெசிந்தா?"
"அவளும் போவாள்"
"பிரான்சிஸ்?” “அவனும் போவான், ஆனால் அதற்கு முன் அவன் சிறிது ஆழமாக செபிக்க வேண்டும்”

இது நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு திருப்பயணிகள் ஃபிரான்சிஸிடம் கேட்ட கேள்விகள்! “தம்பி எதிர்காலத்தில் நீ என்ன செய்யப் போகிறாய்?” "தச்சுத் தொழிலில் ஈடுபாடா?" "இல்லை '' "பட்டாளத்தில் பணியா?" "இல்லை". “மருத்துவ மேற்படிப்பா?" "இல்லை" "குருவாக ஆசையா?" "இல்லை " "திருப்பலி நிறைவேற்ற, பாவ சங்கீர்த்தனம் கேட்க, கோவிலில் செபிக்க இதையெல்லாம் நீ விரும்பவில்லையா?" ''விரும்பவில்லை , குருவாக விருப்பமில்லை .” “அப்போ, நீ என்னதான் செய்யப் போகிறாய்?'' ''நான் இறக்க வேண்டும். மோட்சத்துக்குப் போக வேண்டும்”.

அத்தனை சிறிய வயதில் அந்தப் பிஞ்சு மனதில் இத்தனை ஆசைகள் - விண்ணகம் செல்ல வேண்டும், கடவுளைச் சென்றடைய வேண்டும் என்று!

பிறந்த 40ஆம் நாள் ஆலயத்தில் அர்ப்பணம். அந்த அர்ப்பணம் நிறைவில் உயிர்த்த 40ஆம் நாள் ஒலிவமலையில் விண்ணேற்றம். இயேசு விண்ணேறிச் சென்றது இரண்டு காரணங்களுக்காக:

1. நமக்கென ஓர் உறைவிடத்தைத் தயார் செய்ய: “என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன... நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின், திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். (யோவான் 14:2,3). வாழ்க்கை என்பதே ஒரு பயணம். நாமெல்லாம் வழிப்போக்கர்கள், “ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை, வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம்” (எபி.13:14).

2, தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேச: "தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை, அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார். அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்” (எபி.7:25) “ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து (1 யோ .2:1).

நற்செய்தி ஊழியர் ஒருவர், 'இன்ன நாளில் இறப்பு' என்று எழுதுவதை விடுத்து இன்ன நாளில் விண்ணேற்பு' என்று கல்வெட்டில் பொறிப்பதில் தனி ஆறுதல் காண்பாராம். நம்பிக்கையாளருக்கு சாவு என்பது அறியாத உலகை நோக்கிய இருண்ட பயணம் அல்ல. மகிமைக்கான வாசல். நாம் சாகும் போது நம் உடல்தான் புதைக்கப் படுகிறது. ஆன்மா? அது விண்ணேறிச் செல்கிறது. அதனால்தான் பவுல் சொல்வார்: “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். இவ்வுடலை விட்டு அகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறேன். எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்” (2 கொரி. 5:7-9)

விண்ணக வாழ்வுக்கான உரிமைப் பேற்றை திருமுழுக்கின் வழியாகவே பெற்றோம். நம் நன்மைத்தனத்தின் பொருட்டு அல்ல, இந்த அரிய பேற்றினை இறைவன் நமக்குக் கொடுத்தது அவரது எல்லையற்ற இரக்கத்தினால் மட்டுமே!

எப்படியாவது மோட்சத்துக்குச் சென்று விட முடிவெடுத்தான் ஒருவன். அதற்கான வழியைத் தேடி அலைந்தான். துறவு வாழ்வைத் தழுவினால் பேரின்ப வீட்டை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தான். துறவு வாழ்வு கடினமானது என்றனர் பலரும். இருப்பினும் துறவு வாழ்வைக் கடைப்பிடிக்க இயலாது என்று உணர்ந்தும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்: "நான் இப்போது துறவியாகி விட்டேன். இது மோட்சத்தில் ஒரு கால் வைத்து விட்டதற்குச் சமம். துறவு வாழ்வை என்னால் முற்றிலும் வாழ முடியா விட்டாலும், நான் மோட்சம் போவது உறுதி”.

இந்த மனிதனைப் போலவே நம்மில் பலர் இருக்கிறோம். திருமுழுக்குப் பெற்றதனாலேயே மோட்சத்திற்குப் பயணச்சீட்டு வாங்கி விட்டதாக நினைக்கிறோம். ஆனால் மாட்சி பெற்ற இயேசுவின் மனிதத் தன்மையோடு, நமது மனிதத் தன்மையும் ஐக்கியமாகவில்லையென்றால் நம் பயணச்சீட்டு செல்லாமல் போய்விடும்.

கங்கைக் கரையில் இருந்த அந்த அரசில் விந்தையான ஒரு வழக்கம். பட்டத்து யானை மாலை போட்டு அரசனைத் தேர்ந்தெடுக்கும். அவன் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வான். பின் அவனை அக்கரையில் உள்ள காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள். அங்கே தன்னந்தனியாய் பட்டினி கிடந்து மடிய வேண்டியதுதான். ஐந்து ஆண்டுகள் ஆனந்த அனுபவம், முடிவில் அலறி அழுது புலம்புவது. வாடிக்கையாக நடப்பது இது.

ஆனால் ஒருமுறை அக்கரை செல்லப் படகேறிய அரசன் பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தான். அவனால் எப்படி ஆனந்தமாக இருக்க முடிகிறது என்று அமைச்சன் வியந்து கேட்டபோது "என்னோடு வந்து பார்" என்றான் அந்த முன்னாள் மன்னன். கூடச் சென்று பார்த்த போது அங்கே காடுகள் இல்லை, மாட மாளிகை, செல்வச் செழிப்பு! அரசனாக இருந்த போதே அவன் செய்து கொண்ட முன்னேற்பாடுகள்.

இம்மையில் இன்பம் துய்க்கும் போதே மறுமைக்கும் வசதி செய்து கொள்வது எவ்வளவு அறிவுடைமை

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“அவர் உயரே ஏறிச் சென்றார்”

நிகழ்வு
பிரபல இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். இவர் ஓர் இசைத் தொகுப்பினை இரவு பகல் பாராமல், மிகக் கடினமாக உழைத்து உருவாக்கிக்கொண்டிருந்தார். திடீரென இவருக்குப் புற்றுநோய் வந்தது, இதனால் இவர் மிகவும் சிரமப்பட்டார்.

தனக்குப் புற்றுநோய் வந்த போதும் இவர் இசைத் தொகுப்பை உருவாக்குவதை மட்டும் நிறுத்தவே இல்லை. அப்பொழுது இவரது நண்பர்கள் இவரிடம், “உங்களுக்குத்தான் உடம்புக்கு முடியவில்லையே! பிறகு எதற்குத் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றீர்; நன்றாக ஓய்வெடுங்கள்!” என்று அறிவுறுத்தினார்கள். இவர் அவர்களது அறிவுரையை ஏற்காமல், தொடர்ந்து உழைத்தார். ஒரு கட்டத்தில் இவர் தனக்குச் சாவு நெருங்கி வருவதை உணர்ந்து, தன் மாணவர்களை அழைத்து, “நான் ஓர் இசைத்தொகுப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். இதை நான் இறப்பதற்குள் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஒருவேளை என்னால் இது முடியாத பட்சத்தில் நீங்கள்தான் இதை நிறைவு செய்ய வேண்டும்” என்றார். இவ்வாறு இவர் தன் மாணவர்களிடம் கூறிவிட்டு, ஒருசில நாள்களிலேயே இறந்தார்.

இதன்பிறகு இவரது மாணவர்கள் அந்த இசைத்தொகுப்பை நிறைவுசெய்து, ஒரு குறிப்பிட்ட நாளில், நகரில் இருந்த ஒரு பெரிய அரங்கில் அரங்கேற்றினார்கள். அரங்கில் கூடியிருந்த மக்களனைவரும் மெய்ம்மறந்து இசையை இரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இசையைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் மக்களுக்கு முன்பாக வந்து, “எங்களுடைய குருநாதரால் இதுவரைக்கும்தான் இசையை உருவாக்க முடிந்தது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதன்பிறகு வரும் பகுதியை அவரது மாணவர்களான நாங்கள்தான் உருவாக்கினோம்” என்றார். இதைக்கேட்டு அரங்கிலிருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற இசைக் கலைஞர் வேறு யாருமல்லர் இத்தாலியைச் சார்ந்த மிகப்பெரிய ஓபரா இசைக்கலைஞரான கியோகோமோ புக்கினி (Giocomo Puccini 1858 -1924) என்பவர்தான். இவர் Turandot என்ற இசைத் தொகுப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும்பொழுதுதான் திடீரென இறந்தார். இதன்பிறகு இவருடைய மாணவர்கள்தான் இவர் உருவாக்கிக்கொண்டிருந்த Turandot என்ற இசைத் தொகுப்பை நிறைவு செய்து அரங்கேற்றினார்கள். அது இன்றளவும் மிகச் சிறந்ததொரு படைப்பாகக் கருதப்படுகின்றது.

கியோகோமோ புக்கினி தான் உருவாக்கிக்கொண்டிருந்த இசைத் தொகுப்புப் பணியைத் தன் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு இறையடி சேர்ந்தார். நம் ஆண்டவர் இயேசுவோ தான் தான் தொடங்கிய நற்செய்திப் பணியைத் தன் சீடரிடம் கொடுத்துவிட்டுத் விண்ணேற்றம் அடைகின்றார். அதைத்தான் இன்று நாம் ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.

இனி அவர் நமக்காகப் பரிந்து பேசுவார்

“மறைநூல்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்” – இவை நம்பிக்கை அறிக்கையில் நாம் சொல்லக்கூடிய வார்த்தைகள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாவை வென்று வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்த பின்பு, யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை மூடிவைத்து வாழ்ந்த (யோவா 20: 19) சீடர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். மேலும் பல்வேறு சான்றுகளால் தாம் உண்மையாகவே உயிர்த்துவிட்டேன் என்பதை அவர் அவர்களுக்கு அறிவித்தார். நாற்பது நாள்களுக்குப் பின் விண்ணேற்றம் அடைந்து, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்தார்.

இயேசு தன் சீடர்களை விட்டு அல்லது இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார் என்று நாம் வருத்தமடையத் தேவையில்லை. மாறாக, இயேசு தந்தையின் வலப்பக்கத்தில் இருக்கின்றார், அங்கு அவர் நமக்காகப் பரிந்து பேசுகின்றார் (உரோ 8: 34; எபி 7: 25; 1 யோவா 2: 1) என்று நாம் ஆறுதல் அடையலாம். ஆகவே, இயேசுவின் விண்ணேற்றம் அவர் நமக்காகப் பரிந்து பேசுவார் என்ற நம்பிக்கைச் செய்தியை அளிக்கின்றது.

இனி அவர் தூய ஆவியாரை அனுப்பி வைப்பார்

இயேசு இம்மண்ணுலகில், தம் சீடர்களோடு இருந்தபொழுது அவர்களிடம், “நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்’ (யோவா 16: 7) என்று சொல்லியிருப்பார். இன்றைய நாளில் இயேசு விண்ணேற்றம் அடைந்திருக்கின்றார். அப்படியெனில், அவர் தூய ஆவியாரை அனுப்பி வைப்பார் என்பது உறுதி. ஏனெனில் கடவுளின் வார்த்தைகள் உண்மையும் (திபா 119: 160) நம்பிக்கைக்குரியவையும் ஆனவை (2 சாமு 7: 28). மேலும் இயேசு உண்மையாய் (யோவா 16: 4) இருப்பதால், அவர் நிச்சயம் தூய ஆவியாரை அனுப்பி வைப்பார்.

இயேசு தம் சீடர்களிடம் தூய ஆவியாரை அனுப்புவதாகச் சொல்கின்றாரே... அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் அவர்களுக்குச் சொல்லத் தவறவில்லை. இயேசு தூய ஆவியாரைத் குறித்துப் பேசுகின்றபொழுது அவரைத் துணையாளர் (யோவா 14: 16; 16: 7) என்கிறார். அவ்வாறெனில், இயேசு இவ்வுலகைவிட்டுச் சென்று, தந்தையின் வலப்பக்கம் இருந்தாலும், தூய ஆவியார் நமக்குத் துணையாக இருப்பதால், நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அத்தகைய நம்பிக்கைச் செய்தியையும் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு அளிக்கின்றது.

இனி அவரது நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்குச் சான்று பகரவேண்டும்

விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் இருந்து நமக்காகப் பரிந்து பேசுவார்; துணையாளர் வருவார் என்ற இரண்டு நம்பிக்கைச் செய்திகளை இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா நமக்குத் தருகின்ற அதே நேரத்தில், “உலங்கெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்ற அழைப்பினையும் நமக்குத் தருகின்றது.

இயேசு தம் சீடர்களிடம், “நற்செய்தியை அறிவியுங்கள்” என்று சொல்லவில்லை; மாறாக, “நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்கிறார். அறிவியுங்கள் என்பது போதிப்பது நின்றுவிடும்; ஆனால், பறைசாற்றுங்கள் என்பது வாழ்ந்து போதிப்பதாக இருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், சாட்சிகளாய் வாழ்வது. இதையே இயேசு இன்றைய முதல் வாசகத்தில், “சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்று கூறுவதாக நாம் வாசிக்கின்றோம்.

எனவே, ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இயேசு நமக்காகப் பரிந்து பேசுவார்; தூய ஆவியார் வருவார் என்ற நம்பிக்கைச் செய்தியைப் பெற்றுக்கொண்டவர்களாய், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்குச் சாட்சிகளாய்த் திகழ்வோம்.

சிந்தனை
‘நல்ல கிறிஸ்தவர்கள் தங்களது துன்பங்களையும் சோதனைகளையும் குறை சொல்லாமல் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் மகிழ்வுக்குச் சான்று பகர வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நமது வாழ்வில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, இயேசுவின் நற்செய்தியை எங்கும் பறைசாற்றி, அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் உடனிருப்பும் செயலாற்றுதலும்

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே'

புனித அகுஸ்தினாரின் மேற்காணும் வார்த்தைகள் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையாக அமைந்து, இன்றைய நாளின் முக்கியத்துவத்தை மிக அழகாக நமக்குக் காட்டுகின்றன.

இயேசு திருத்தூதர்களை விட்டு மறைகின்றார். அல்லது இயேசு அவர்களிடமிருந்து மறைந்து விண்ணேற்றம் அடைகின்றார். ஒருவருடைய மறைவை நாம் கொண்டாட முடியுமா? நம்மோடு உடனிருந்து, நம்மை அழைத்து, தேர்ந்தெடுத்து, வழிகாட்டி, புதியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து நம்மிடமிருந்து ஒருவர் மறைகின்றார் என்றால், அவருடைய மறைவை நாம் கொண்டாட முடியுமா?

இந்த நாள்களில் நாம் எதிர்கொள்ளும் பெருந்தொற்று மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நம் அன்புக்குரியவர்கள் வேகமாக நம்மிடமிருந்து மறைந்துகொண்டிருக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்கும் விண்ணேற்றத்துக்கும் இடையே இருந்த நாற்பது நாள்கள் இடைவெளி கூட, ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கும், அவர் இறப்பதற்கும் இடையே இல்லை. நம் வாட்ஸ்ஆப் செயலியில் மற்றவர் வைக்க நாம் காணும் ஸ்டேடஸில் ஒரு டிக் டாக் சிரிப்பு வீடியோ கடந்து செல்வது போல, நம் அன்புக்குரியவர்கள் அடுத்தடுத்த நிழற்படங்களாகக் கடந்து செல்கிறார்கள். யாருக்கும் யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எல்லார் வீட்டிலும் இழப்பு என்றால் யார் யாருக்கு தேற்றுதல்மொழி பகர முடியும்?

கடந்த இரு வாரங்களுக்குள் நடந்த இருவரின் இறப்பு என்மேல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த மாதம் 27ஆம் தேதி அருள்திரு டோமா ஜோஜி ரத்னாகர், விஜயவாடா மறைமாவட்ட அருள்பணியாளர், நேற்று (மே 12), அருள்திரு கிளமென்ட் ஃப்ராங், பெங்களுரு உயர்மறைமாவட்ட அருள்பணியாளர், இயற்கை எய்தினர்.

நான் புனே பாப்பிறை அருள்பணி பயிற்சி மையத்திற்கு 2000 ஆவது ஆண்டில் சென்றபோது முதன் முதலாகச் சந்தித்த வேற்று மாநிலத்தவர் ரத்னாகர். ரொம்ப ஸ்டைலாக இருப்பார். அன்று தொடங்கிய எங்கள் நட்பு உரோமையில் நான் பயின்றபோதும் தொடர்ந்தது. தன் படிப்புடன் இணைந்து எப்போதும் தன் குடும்பத்தையும் சிந்திப்பவர். வந்த புதிதில், தனக்கு இங்கு கிடைக்கும் நல்ல உணவு தன் தங்கைக்கும் தாய்க்கும் கிடைக்காதே என்று புலம்பிக்கொண்டு, வெறும் தட்டுடன் சாப்பாட்டு அறையில் அமர்ந்திருப்பார். கடந்த ஆண்டுதான் தன் முனைவர் பட்ட படிப்பை முடித்து தன் ஊர் திரும்பினார். நிறையப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.

கிளமென்ட்-ஐ நான் முதன்முதலாக உரோமையில் உள்ள பாப்பிறை விவிலியக் கழகத்தில் சந்தித்தேன். நான் அட்மிஷன் போடச் சென்ற அதே நாளில் அவரும் வந்திருந்தார். 'தமிழாப்பா நீ?' என்று கேட்டு, மிக அழகாகப் புன்முறுவல் செய்தார். 'நாம நல்லாப் படிச்சு தமிழ்த்திருச்சபைக்கு நிறையச் செய்யணும்!' என்று சொன்னார். என்னைவிட வயதில் மூத்தவர். அவருடைய குடும்பம் அறிமுகம் இல்லை. எனக்கு அருகில் வகுப்பில் அமர்ந்திருப்பார். ஜெகன், அந்தோனிசாமி, கிளமென்ட், நவீன், நான் என்னும் ஐவர் அணி இணைந்துதான் தினமும் கஃபேடேரியா செல்வோம். ஓடிக்கொண்டே இருப்பார். தன் பங்குப் பணிகள் அனுபவம் பற்றியும் பகிர்வார். கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தையும் நூலகத்தில் செலவிடுவார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் தன் சொந்த மறைமாவட்டம் திரும்பினார். விவிலியத்தைக் கற்பிப்பதில் நிறைய ஆர்வம் கொண்டிருந்தார். விவிலிய மற்றும் மேற்கத்தேய மொழிகளை நன்கு கற்றவர். நிறையப் பயணம் செய்தவர். திருஅவை மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர். அன்னை கன்னி மரியா மேல் அவர் கொண்டிருந்த அதீதப் பற்றுறுதியால் என்னவோ, பாத்திமா அன்னை திருநாள் அன்றே விண்ணகம் திரும்பிவிட்டார்.

நிற்க.

தங்களுடைய தலைவரும் போதகரும் ஆண்டவருமான இயேசு தங்களை விட்டு மறைந்ததைத் திருத்தூதர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

'அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நின்றார்கள்' என்று லூக்கா பதிவு செய்கின்றார். நம் அன்புக்குரியவர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட, நாமோ குனிந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்ணாந்து பார்ப்பதிலும், குனிந்து பார்ப்பதிலும் இருக்கும் உணர்வு ஒன்றுதான். 'எப்படியாகிலும் அவரை நான் எட்டிப் பிடித்துவிட மாட்டேனா?' என்ற ஏக்கம்தான் அப்போது திருத்தூதர்கள் பார்வையில் இருந்தது. இன்று நம் பார்வையில் இருக்கிறது. 'அவர் விண்ணேறிச் சென்றவாறே மீண்டும் திரும்பி வருவார்!' என்று திருத்தூதர்களுக்கு வானதூதர்கள் ஆறுதல் மொழி சொல்கின்றனர். நாமோ இன்று ஆறுதலின்றி நிற்கின்றோம்.

இயேசுவின் விண்ணேற்றம் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) அவர் தன் மண்ணக வாழ்வுப் பயணம் முடித்து தந்தையின் இல்லம் திரும்புகிறார். (ஆ) திருஅவையின் பணி இங்கே தொடங்குகிறது. (இ) தூய ஆவியார் உடனிருந்து திருஅவையை வழிநடத்துகின்றார். தன் விண்ணேற்றத்தின் கொடையாக இயேசு, அவர் வாக்களித்தவாறே, தூய ஆவியாரை அனுப்புகிறார்.

விண்ணேற்றம் திருத்தூதர்களுக்குச் சொன்ன செய்தி என்ன?

இன்றைய முதல் வாசகத்தில், லூக்கா பதிவு செய்வது போல, அவர்கள் எருசலேமை விட்டு நீங்குதல் கூடாது. மேலும், அவர்கள் கடவுளது வல்லமை பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் சாட்சியாக இருப்பார்கள். இயேசு பணியை நிறுத்திய இடத்திலிருந்து திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு நற்செய்தியாளரும் அப்படியே பதிவிடுகிறார்: 'இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.' விண்ணேற்றம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

(அ) இயேசுவின் உடனிருப்பு. 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என்று ஏறிச்செல்கின்றார். அவர் நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், 'எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்ற அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்' என எழுதுகிறார். ஆக, ஆண்டவர் எப்போதும் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் தன் உடனிருப்பை பல்வேறு நபர்கள் வழியாகவும், திருஅவையில் உள்ள தன் இருத்தலின் வழியாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்.

(ஆ) இயேசுவின் செயல்பாடு. நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்' என மாற்கு பதிவு செய்கின்றார். 'உடனிருப்பு' என்பது இருத்தல் என்றால், 'செயல்படுதல்' என்பது இயக்கம். ஆண்டவர் செயல்படுகின்றார். எப்படி? நம் செயல்கள் வழியாக. நம் செயல்கள் அவருடைய செயல்களாக இருந்தால் அவர் அவற்றை உறுதிப்படுத்துகின்றார். அவற்றுக்குச் சான்றாக நிற்கின்றார். எளியோரைத் தூக்கி விடுவதில், உள்ளம் உடைந்தோரைக் குணமாக்குவதில், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்வதில், வாழ்வின் சின்னஞ்சிறிய நிகழ்வுகளில் அவர் நம்மோடு செயல்படுகின்றார்.

ஆக, 'உடனிருப்பும்' 'செயல்படுதலும்' ஆண்டவர் நமக்குத் தருகின்ற செய்தி.

உடனிருப்பு மட்டும் இருந்து செயல்படுதல் இல்லை என்றால், அடுத்தவர் நமக்குச் சுமையாகி விடுவார். செயல்படுதல் மட்டும் இருந்து உடனிருப்பு இல்லை என்றால், அடுத்தவர் நம்மை எண்ணத்தை விட்டு எளிதாக மறைந்துவிடுவார். இரண்டும் இணையும்போது, அங்கே வல்ல செயல் (அரும் அடையாளம்) நடக்கிறது: பேய்கள் ஓட்டப்படுகின்றன. புதிய மொழிகள் பேசப்படுகின்றன. பாம்புகள் கைகளால் பிடிக்கப்படுகின்றன. கொல்லும் நஞ்சு தீங்கிழைப்பதில்லை. நலமற்றவர்கள் மேல் கைகள் வைக்கப்பட்டவுடன் அவர்கள் நலம் பெறுகின்றனர்.

மறைதல் என்றால் இறைமை. இதையே பவுலும், 'நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) என எழுதுகின்றார். காணக்கூடிய நிலையில் இருந்த இயேசு திருத்தூதர்களின் பார்வையிலிருந்து மறைகின்றார். நிலையற்ற தன்மையிலிருந்து நித்தியத்திற்கு இயேசு கடந்து செல்கின்றார்.

காண முடியாத நிலைக்குக் கடந்து செல்லும் அனைவரும் நித்தியத்திற்குள் கடந்து செல்கின்றனர். இனி இவர்கள் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். எனவே, இவர்களால் எந்தக் காலத்திற்குள்ளும் எந்த இடத்திற்குள்ளும் இனி நுழைய முடியும். ஆகையால்தான், உயரே ஏறுகின்ற ஆண்டவர் குறித்து, 'அல்லேலூயா' பாடி அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 47).

இறுதியாக, 'எங்கள் கண்கள் முன்பாக இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டார்' எனக் கூறும் முதல் வாசகம், அதே கண்களை நாம் இந்த உலகத்தின்மேல் பதிக்கவும், 'கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்' என்று சொல்லும் இரண்டாம் வாசகம், விண்ணேற்றம் என்பது நாம் அடையும் நிறைவு என்றும், இன்றே நம் எண்ணங்களும் செயல்களும் முதிர்ச்சி பெற்று மேன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் ஊக்கம் தருகிறது.

ஆண்டவரின் உடனிருப்பும், செயலாற்றுதலும் இன்றும் என்றும் நம்மோடு!

நம்மைவிட்டு மறைந்து இறைமையில் கலக்கும் நம் அன்புக்குரியவர்களின் உடனிருப்பும் செயலாற்றுதலும் என்றும் நம்மோடு!

இன்று விண்ணேற்றம் அடையும் இறைவன் தன் அரும் அடையாளங்களால் பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிப்பாராக! மனுக்குலத்தின் துன்பத்தை அவர் அங்கிருந்து பார்க்கவில்லை. மாறாக, இங்கே நம்மோடு, நம்மில் ஒருவராக அதை அனுபவித்தார். அவர் நமக்காக விண்ணேறிச் செல்தல் சிறப்பு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"இறை மாட்சியில் அகமகிழ வேண்டுமா! "

நம்முடைய திருஅவையில் எத்தனையோ புனிதர்கள் வாழ்ந்துள்ளனர். புனிதர்கள் அனைவருமே வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. மாறாக நம்மைப் போல சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவர்கள். ஆனால் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்காக எல்லாவற்றையும் அர்ப்பணத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தவர்கள். நற்செய்தியை தங்களுடைய சொல்லாலும் செயலாலும் பறைசாற்ற முழு ஈடுபாட்டோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றவர்கள். எனவேதான் அவர்களால் மிகச்சிறந்த நற்செய்திப் பணியைச் செய்ய முடிந்தது. துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் மனத் துணிவோடும் இறை நம்பிக்கையோடும் தங்கள் வாழ்வில் பயணித்தவர்கள். எனவேதான் கடவுள் துன்பத்தை அடைந்த புனிதர்களுக்கு இறைமாட்சியில் பங்குகொள்ள வாய்ப்பினை வழங்கினார்.

புனித அல்போன்சா அவர்களின் வாழ்வை எடுத்துப் பார்த்தோமென்றால் அவருடைய வாழ்வில் அதிகமான துன்பங்களையும் நோய்களையும் பெற்றார். ஆனால் அவர் மனம் தளராமல் துன்பம் வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாகத் துன்பத்தை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை இறைவனிடம் வேண்டினார். எனவே தான் அவரால் இறைமாட்சியைத் தன் வாழ்வில் அனுபவிக்க முடிந்தது.

இயேசு விண்ணேற்ற பெருவிழாவை இன்றைய நாளில் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தப் பெருவிழா துன்பத்தின் வழியில்தான் இறைவனின் மாட்சி இருக்கின்றது என்ற ஆழமான சிந்தனையை வழங்குகின்றது. இயேசுவின் துன்பத்தைக் கண்ட சீடர்கள் அச்சமும் கலக்கமும் அடைந்தனர். இயேசுவை பின்பற்றினால் தங்களுக்கும் துன்பம்தான் வரும் என்று யூதர்களுக்கு அஞ்சி நடுங்கினர். ஆனால் இயேசு துன்பத்தை வென்று இறந்து உயிர்த்தெழுந்து இறை மாட்சியை வெளிப்படுத்தினார். இந்த இறைமாட்சியின் உச்சகட்டமாக விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு அவருடைய சீடர்கள் தான் சாட்சிகள். இயேசுவின் துன்பத்தைக் கண்ட சீடர்கள் இயேசுவின் விண்ணேற்றத்தைக் கண்ணால் கண்டு இறை மாட்சியை அனுபவித்தனர். இயேசுவின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டு அவரின் நற்செய்தி மதிப்பீடுகளை உலகெல்லாம் அறிவிக்கும் மிகச்சிறந்த கருவிகளாக மாறினர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் " என்ற அன்புக் கட்டளையை விண்ணேற்றத்திற்கு முன்பாக இயேசு தம் அன்புச் சீடர்களுக்கு வழங்கினார். சீடர்களும் இயேசுவின் வார்த்தையின்படி உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றினார்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுகின்றவர்களுக்கு திருமுழுக்கு வழங்கி மீட்பின் கனியைச் சுவைக்க வழிகாட்டினார்கள். இந்த உலகை வாட்டி வதைத்த பல்வேறு நோய்களை இயேசுவின் பெயரால் குணமாக்கினார்கள். இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டி அநீதியை விரட்டினார்கள். பல்வேறு அரும் அடையாளங்கள் வழியாக இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்தார்கள். இத்தகைய சாட்சியமுள்ள நற்செய்தி பணிக்கு சீடர்களுக்கு ஊக்கம் தந்தது இயேசுவின் விண்ணேற்பு.

இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா நம்மையும்இயேசுவைப் பின்பற்றிய சீடர்களை போலச் சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ அழைப்பு விடுக்கின்றது. திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் உலகெங்கும் நற்செய்தி பறைசாற்றவும் நம்பிக்கை கொண்டோருக்கு திருமுழுக்கு வழங்கவும் இயேசுவின் பெயரால் நோய்களையும் பேய்களையும் ஓட்டவும் அழைக்கப்பட்டுள்ளோம். இத்தகைய சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ நாம் இயேசுவோடு இருக்கவேண்டும். இயேசுவோடு இருக்கும்பொழுது நம் வாழ்வில் துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும் வரும். ஆனால் நாம் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் இயேசு என்னோடு இருக்கிறார் என்று முழுமையாக நம்புகின்ற பொழுது, நிச்சயமாக நாம் இறைமாட்சியை நம் வாழ்வில் அனுபவிக்க முடியும்.

மேலும் இறைமாட்சி அனுபவிக்க இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கின்றது. "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள் " என்று திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலில் சுட்டிக்காட்டியுள்ளார். நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் வாழுகின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்வில் துன்பங்களும் இடையூறுகளும் வரும். ஆனால் அவற்றை இயேசுவின் மனநிலையோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்கும் பொழுது நாம் வாழ்வில் இறை மாட்சியை அனுபவிக்க முடியும். எனவே இன்றைய நாளில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளின் பொருட்டு நம் அன்றாட வாழ்வில் வருகின்ற துன்பங்களையும் இடையூறுகளையும் அன்போடு ஏற்றுக் கொள்வோம்.அப்பொழுது கடவுள் நம்மோடு இறுதிவரை உடனிருந்து இறை மாட்சியில் பங்குகொள்ள உதவி செய்வார்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள ஆண்டவரே! உம் திருமகன் இயேசுகிறிஸ்து விண்ணேற்றம் அடைந்த நாளில் நாங்களும் அவரிடம் எங்கள் உள்ளத்தை ஒப்புக்கொடுத்து வேண்டுகின்றோம். எங்கள் வாழ்வில் துன்பங்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் இறுதிவரை உம் திருமகன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இறை மாட்சியில் பங்குகொள்ளத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இயேசு தந்த பணியை செய்வோமா?

இறை இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இன்று தீமையையும் சாவையும் வென்ற வெற்றி வேந்தர் நமக்கான இடத்தை ஆயத்தம் செய்ய தந்தையிடம் சென்ற நாளை விண்ணேற்பு நாளாக இன்று நாம் கொண்டாடுகிறோம். இயேசு பலநேரம் பலவகைகளில் சொன்னது நிறைவேறிய நாளாக இன்றைய நாளை நாம் பார்க்கலாம். இயேசு உயிர்த்தகின் நாற்பது நாட்கள் ஆங்காங்கே காட்சி கொடுத்து தனது சீடர்களைத் தேற்றிய இயேசு இன்று விண்ணகம் எழுந்தருளுகிறார். இயேசுவின் உயிர்ப்புக்கும் விண்ணேற்புக்கும் இடைப்பட்ட காலம் ஒரு தயாரிப்பு காலம். எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்துக்கு செல்லும் போது 40 ஆண்டுகள் யாவே இறைவன் எவ்வாறு தயாரித்தாரோ அதுபோல இந்த நாற்பது நாட்களும் தனது சீடர்களை அவர் தயாரிக்கிறார்: எதிர்வரும் காலத்திற்கேற்ப திடப்படுத்துகிறார். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் செல்லும் முன் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட தலைவர்களை வழங்கினாரோ அதுபோல உங்களுக்கு நான் ஒரு துணையாளரை அனுப்புவேன் என்று உறுதி தருகிறார். இந்த துணையாளரின் துணையோடு இறைபணிணைத் தொடர இயேசு அழைக்கிறார்.

விவிலிய பாரம்பரியம் இயேசுவின் விண்ணேற்பு நிகழ்ச்சி பற்றி சில கருத்துருக்கள் வழங்குகின்றன. - கடவுள் மோசேயுடன் சீனாய் மலையில் உடன்படிக்கை செய்து கொண்ட பேர்து அங்கே மேகம் வந்து தங்கியதாக விடுதலைப் பயணத்தில் (19:16) வாசிக்கிறோம்.

- 40 ஆண்டுகள் விடுதலைப் பயணத்தில் இஸ்ராயேல் மக்களை பகலில் மேகத்தூணாகவும் இரவில் நெருப்புத் தூணாகவும் வழிநடத்தினார்.

- இயேசு தாபோர் மலையில் உறுமாற்றம் அடைந்த போது அவரை மேகம் மூடிக் கொண்டதாக லூக்கா நற்செய்தியாளரும், மத்தேயு நற்செய்தியாளரும் சொல்லுகின்றனர்.

- இயேவின் இரண்டாம் வருகையின்போது அவர் மேகங்களின் நடுவே வருவதாக கூறுகின்றார்.

- எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் அவர் மகத்துவமிக்கவரது வலப்புறத்திலே வானகத்தில் அமர்ந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு துணையாளரின் உதவி நம்மோடும் இருக்கும் என விவிலியம் நமக்கு முன்னுரைக்கின்றது. இந்த துணையாளரின் துணை எதற்காக? இயேசு கொடுத்த பணியை அல்லது கட்டளையை நிறைவேற்ற. அது என்ன? உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறை சாற்றுங்கள் என்பதே. பாலஸ்தீனம் எனும் குறுகிய எல்லையைக் கடந்து சிந்திக்க இயேசு தன் சீடர்களுக்கு உணர்த்துகிறார்.

திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அது சொல்லாலும் அமையலாம் அல்லது செயலாலும் அமையலாம். ஆனால் ஏதோ ஒரு பயனுள்ள வகையில் நற்செய்தி அறிவிப்பது நமது கடமை.

விண்ணேற்றம் அடைந்த இயேசுவின் பணி இன்றும் நம்மிடையேத் தொடர்ந்து கொண்டே உள்ளன. நற்செய்தியின் போதனையை யாரெல்லாம் போதித்து வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி வருகிறார்களோ அவர்கள் அனைவரின் நடுவிலும் அவர் செயலாற்றி வருகிறார். வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை.. இயேசுவின் பெயரால் எழுந்து நட என்ற பேதுருவின் சொற்கள் நமக்கு அதையே உணர்த்துகிறது.

சீடர்கள் இயேசு வழங்கிய பணியைச் செய்தனர். நாமும் செயலாற்ற அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆவியாரின் அனுபவம் பெற்ற சீடர்கள் துன்பமோ, துயரமோ அனைத்தையும் தூசியென உதறிவிட்டு உயிரையும் துச்சமென எண்ண எதுக் காரணம்? உயிர்த்த இயேசுவும் அவரின் துணையாளரான ஆவியாரின் அனுபவமும்தான். இதனை அவர்களின் வரலாறு நமக்கு தெளிவுபடுத்துகிறது. இயேசுவின் சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி திருமுழுக்குப் பெற்ற நமக்கும் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. நாம் இயேசுவை அறிந்ததுபோல பிறரும் அறிய அனுபவிக்க முற்பட வேண்டும். திருக்குறள் சொல்வது போல
தாமின் புறுவது உலகின்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

என்பது போல நாம் பெற்ற பெறற்கரிய பேறான இயேசுவை நாம் பிறர்க்கு அளிக்க வேண்டும் என்று கூறுவது போன்றது இது. நற்செய்தியை நானிலம் முழுவதும் அறிவிக்க நம் இறைவேண்டல்களால், அறப்பணிகளால், போதனையால் செய்வோம். முடங்கி கிடக்காமல் நிறைவுடன் செய்வோம். இறைவன் நம்மோடு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser