காட்டுப் பகுதியிலே தனியாகப் பயணம் செய்த ஒருவன் பாதையை மறந்துவிட்டு வழிதவறி மூன்றுநாட்களாகச் சுற்றித் திரிந்தான். அடுத்தநாள் ஒரு மனிதனைப் பார்த்தான். தனக்கு வழிகாட்ட ஒருவன் கிடைத்துவிட்டான் என்று மிக்க மகிழ்ச்சி அடைந்து அவனிடம் சென்று, பாதை தவறி அலைகிறேன் என்றும் தனக்கு வழிகாட்டும்படியும் வேண்டினான். அவனும் வழிகாட்டி அவனது எல்லையை அடைய உதவினான்.
ஆம்! யூத மக்கள் வழிகாட்டி இல்லாத சூழ்நிலையில் அலைந்து திரிந்தபோது இவர்களை ஒன்றுபடுத்த இறைவன் விரும்புகிறார். எனவே தன்னையே நல்ல ஆயனாக வெளிப்படுத்துகிறார் இயேசு. நல்ல ஆயன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார். "பசும்புல்வெளி மீது அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைக்கு அழைத்துச் செல்வார்" (திபா. 23:2) என்றும் திருப்பாடல் வெளிப்படுத்துகிறது.
"நல்ல ஆயன் நானே. நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தம் உயிரையும் கொடுப்பார்" (யோவா. 10:11) என்றும் இயேசு அறிவிக்கிறார். இயேசு வழிநடத்தும் பணி என்பது தலைசாய்க்கவும் இடமின்றி, ஓய்வு உறக்கமின்றி உழைப்பதாகும். இயேசு சுய சிந்தனையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் செயல்பட்டார். சுய சிந்தனை என்பது, இரவில் தந்தையோடு செபத்தில் நிலைத்திருத்தல் என்பதாகும். தொலைநோக்குப் பார்வை என்பது புதுமைகள், போதனைகள், வழிகாட்டுதல் வழியாக மக்களை ஒன்றுசேர்ப்பதாகும். எனவேதான், "ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும்நிறைவாழ்வைப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" (யோவா. 10:10) என்கிறார் இயேசு.
ஒரு அரசன் வயதாகிவிட்ட காரணத்தால் நாட்டு மக்களை வழிநடத்தத் திறமையான ஆட்சி செய்யத் தன் ஒரே மகனை அரசனாக்க விரும்பினான். அவனுக்குப் போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு துறவியிடம் பயிற்சிப் பெற அனுப்பினான்.
துறவி, இளவரசனை நோக்கி, இந்தக் காட்டில் ஒரு வாரம் தங்கி, உன் அனுபவத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று பணித்தார். ஒரு வாரம் கடந்து என்ன அனுபவம் பெற்றாய் என்று துறவி இளவரசனிடம் கேட்க, "நான் பறவைகள் பாடுவதையும், விலங்குகள் சத்தமிடுவதையும் கண்டேன்" என்றான். அதற்குத் துறவி நீ இன்னும் ஒரு வாரம் காட்டில் தங்கி உன் அனுபவத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டும் எனப் பணித்தார். ஒரு வாரம் கடந்து வந்த இளவரசன், “நான் நீரோடையின் சத்தம் கேட்டேன். தாகத்திற்குத் தண்ணீர் தேடும் மான்களைப் பார்த்தேன்" என்றான். அதற்குத் துறவி நீ இன்னும் ஒரு வாரம் காட்டில் தங்க வேண்டும் என்றார். ஒரு வாரம் கடந்து திரும்பி வந்த இளவரசனைப் பார்த்து உன் அனுபவம் என்ன என்று கேட்க, தாகத்திற்குத் தண்ணீர் தேடும் புள்ளிமான்களையும், இரை தேடி அலையும் பறவைகளையும், வழி தவறித் திரியும் சிறு விலங்குகளையும் பார்த்தேன். அவைகளுக்கு எப்படி வழிகாட்டுவது என்ற ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன் என்றான். ஆம்! நீ அரசனாகி மக்களை வழிநடத்தலாம் என்று இளவரசனை அரண்மனைக்கு துறவி அனுப்பி வைத்தார்.
எந்த மனிதன் மற்ற மனிதர்களின் உள் உணர்வுகளை, துன்பங்களை, இதயக் குமுறல்களை, இதயச் சுமைகளைப் புரிந்து, அதைத் தனதாக்கிக் கொண்டு வழிநடத்துகிறானோ, அவனே சுயநலமில்லாத தலைவன், ஆயன், வழிகாட்டியாவான். ஆயன் என்பவன் சிதறிப்போன மந்தையை ஒன்று சேர்ப்பவன் (எசே. 34 :11-12). காயமுற்றவனுக்குக் கட்டுப் போடுபவன் (எசே. 34: 16). உயிரைக் கொடுப்பவன் (யோவா. 10:10). அன்பில் நிலைத் திருப்பவன் (1 கொரி 13 : 12).
நாம் அனைவரும், நாம் பெற்ற திருமுழுக்கால் மக்களுக்கு வழிகாட்ட, ஒன்று சேர்க்க, ஆயனாக, தலைவனாகச் செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் சுய சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் பெற்று, மற்றவருக்கு வழிகாட்டியாகச் செயல்பட முன் வருவோம்.இருப்பதைக் கொடுப்போம். பிறருக்காக நம்மையே இழப்போம். ஆமென்.
இன்று எங்கு பார்த்தாலும் நேசப் பஞ்சம் !
இல்லறத்தில் வாழ்ந்த நல்லவன் ஒருவனைத் துறவி ஒருவர் சமூகப்பணி செய்யத் தூண்டினார். எனக்கு வீட்டை விட்டு வர ஆசைதான். ஆனால், என் மனைவியும், மக்களும் என்னை உயிருக்கு உயிராக நேசிக்கின்றார்கள்: அவர்கள் என்னை விடமாட்டார்கள் என்றான் இல்லறவாசி. உனது வீட்டாரின் அன்பை சற்று சோதித்துப் பார்க்கலாம். இறந்தவன் போல் நடிக்கும் இரகசியம் ஒன்றை உனக்கு கற்றுத்தருகின்றேன். நீ செத்தவன் போல நடி. அப்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் என்றார் துறவி.
துறவி சொன்னபடி இல்லத் தலைவன் நடித்தான். அவன் குடும்பத்தார் தேம்பித் தேம்பி அழுதார்கள். துறவி அங்கே தோன்றினார். குடும்பத்தாரைப் பார்த்து. உங்களில் யாராவது ஒருவர் இவருக்குப் பதிலாக சாவதற்கு முன்வந்தால், இவருக்கு என் தவ வல்லமையால் உயிர்ப்பிச்சை அளிக்கின்றேன் என்றார். இறந்தவன் மனைவியோ. இவருக்குப் பதில் எங்களில் யாரும் சாக வேண்டிய அவசியமில்லை. இவரில்லாமல் எங்களால் வாழமுடியும் என்று சொல்லிவிட்டாள்.
வீடுவரை உறவு. வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை. கடைசிவரை யாரோ? என்றான் கவிஞன். நமக்காக உயிரைக்கொடுக்க முன்வருபவர்கள் நம் நடுவே யாராவது உண்டா?
இயேசு இன்று நம் அனைவரையும் பார்த்து, இந்த உலக அன்பிலிருந்து வேறுபட்டது. மாறுபட்டது என் அன்பு. நான் எதையும் பெறுவதற்காக இந்த உலகத்திற்கு வரவில்லை ; என் ஆடுகளாகிய உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுக்கவே வந்தேன் என்கின்றார். தமது ஆடுகளின், அன்பு மக்களின் நலம் காக்க, அவற்றிற்கு. அவர்களுக்கு இயேசு உண்ண உணவைக் கொடுத்தார் (யோவா 6:1-13); குடிக்க இரசத்தைக் கொடுத்தார் (யோவா 2:1-11); நோயுற்றோருக்கு உடல் நலத்தைக் கொடுத்தார் (மத் 9:27-31); பாவம் செய்தோர்க்குப் பாவ மன்னிப்பைக் கொடுத்தார் (லூக் 7:36-50); இறந்தவருக்கு உயிர்ப்பைக் கொடுத்தார் (யோவா 11:1 - 44); பேய் பிடித்தவருக்கு விடுதலையைக் கொடுத்தார் (மாற் 9:14-29); காற்றையும், நீரையும் கடிந்து பாதுகாப்பைக் கொடுத்தார் (லூக் 8:22-25).
இறுதியாக, பெரிய வியாழக்கிழமை தமது உடலைக் கொடுத்து (மத் 26:26-29) பெரிய வெள்ளிக்கிழமை தமது உயிரைக் கொடுத்தார் (மத் 27:50). அவரது வாழ்நாளில் வன்செயல் எதுவும் செய்ததில்லை (இரண்டாம் வாசகம்). இப்படி அன்று அனைத்தையும் உலக மக்களுக்குக் கொடுத்த இயேசு. இன்று ஆண்டவரும், மெசியாவுமாகத் திகழ்கின்றார் (முதல் வாசகம்); நமது ஆன்மாக்களின் ஆயராகவும், கண்காணிப்பாளராகவும் அவர் விளங்குகின்றார். பல சமயங்களிலே நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை நேசிப்பதில்லை : யார் நம்மை நேசிக்கிறார்களோ அவர்களை நேசிப்பதில்லை. இன்று எங்கு பார்த்தாலும் நேசப் பஞ்சம்.
இன்றைய அருள்வாக்கின் வழியாக இயேசு நம்மைப் பார்த்து, நிபந்தனையில்லாமல் நேச மழையை உங்கள் மீது பொழிகின்றேன்; உங்கள் நம்பிக்கை நிறைந்த கண்களை என் பக்கம் திருப்புங்கள் என்கின்றார்.
மேலும் அறிவோம்:
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் (குறள் : 71).
பொருள் :
ஒருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினைத் தாழ்ப்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. அன்பரின் துன்பத்தைக் காணும்போது சிந்திடும் கண்ணீர்த்துளியே அந்த அன்பைப் பலரும் அறியச் செய்து விடும்.
நியூயார்க்கில் மாபெரும் இசைமேதை ஒருவர் நல்லாயன் திருப்பாவிற்கு (திப 23) இசை அமைத்து இசை நயத்துடன் ஒரு கலையரங்கில் பாடி அனைவருடைய கைதட்டுதலையும் பெற்றார். அவரை அடுத்து அதே திருப்பாடலை ஒரு பங்குக்குரு பாடினார். அவர் அவ்வளவு இசை நயத்துடன் பாடவில்லையென்றாலும், உணர்வுப் பூர்வமாக நெஞ்சம் நெகிழப் பாடினார், அதைக் கேட்டு மக்கள் கைதட்டுவதற்குப் பதிலாகக் கண்ணீர் சிந்தினர். முதலில் பாடிய இசைமேதை கலையரங்கின் மேடையில் ஏறி மக்களைப் பார்த்து, "அன்பர்களே! தான் நல்லாயன் திருப்பாவை மட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் பங்குக்குருவோ அந்த நல்லாயனையே அறிந்திருக்கிறார்" என்றார்.
இன்று நல்லாயன் ஞாயிறு. இன்றைய பதிலுரைப் பாடல் நல்லாயன் திருப்பா: 'ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை” (திபா 23:1). இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு கூறுகிறார்: "நீங்கள் வழிதவறி அலையும் ஆடுளைப்போல் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்" (1போது 2:25). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நல்லாயன் உவமையைக் கூறுகிறார் (யோவா 10:1-10).
நல்லாயனைப் பற்றிய பாடல்களைத் திருவழிபாட்டில் பாடுகிறோம். ஆனால், நல்லாயனாகிய கிறிஸ்துவை ஆள் சார்ந்த முறையில் ஆழமாக நாம் அறிந்திருக்கின்றோமா? அவர் நமது பெயரைச் சொல்லி அழைக்கிறார்; நம்மைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக் கிறார். இறைவாக்கினர் வாயிலாசுக் கடவுள் நமக்குக் கூறுவது: "இதோ என் உள்ளங்கையில் உன்னை நாள் பொறித்துள்ளேன்" (எசா 49:16), சிலருக்கு நினைவாற்றல் குறைவு. ஒரு கணவர் தன் மனைவியைப் பார்த்து, 'நீ யார்? உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது" என்றாராம்! ஆனால் நல்லாயன் கிறிஸ்து நம்மை மறப்பதில்லை; அவர் நமக்குமுன் நடக்கிறார்.
கிறிஸ்துவே ஆட்டுக் கொட்டிலின் வாயில். அவரே வழியும் உண்மையும்: அவர் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் செல்ல முடியாது (யோவா 14:6). கிறிஸ்து வழியாக ஆடுகள் உள்ளே போகும்; வெளியே வரும். சுதந்திரமாக நடமாடும். அவர்தாள் விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ஏணி (யோவா 1:51), அவரே கடவுளையும் மனிதரையும் இணைப்பவர் (1 திமொ 2:5).
கிறிஸ்துவுக்கு வெளியே உள்ள வழிகாட்டிகள் திருடர்கள்; கொள்ளையர்கள். அவர்கள் மந்தையிலிருந்து ஆடுகளைத் திருடுவதற்கும் கொல்வதற்கும் வருகின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் பொதுப்பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். திருடனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? திருடன் ஓட்டைப் பிரித்துத் திருடுகிறான்; அரசியல்வாதி "ஓட்டை" வாங்கித் திருடுகிறான்!
அரசியலில் மட்டுமல்ல, சமயங்களிலும் கொள்ளையர்கள் பெருகி வருகின்றனர். திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, "போதனை என்ற பெயரில் பொருள் பறிக்கின்றனர்” (1 தெச 2:5). ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்கள் மந்தையில் நுழைந்து ஆடுகளைத் தாக்குகின்றனர்; சீடர்களைத் திசை திருப்புகின்றனர்; உண்மையைத் திரித்துக் கூறுகின்றனர் (காண். திப 20:29). இவற்றைக் கண்டும் காணாததுபோல மௌனம் காக்கும் திருப்பணியாளர்களைக் "குரைக்க இயலா ஊமை நாய்கள்" என்று கடவுளே கடிந்துரைக்கின்றார் (எசா 56:10). இந்நிலையில், கடவுளின் மந்தையை மேய்த்துப் பேணும் படியும், இழிவான ஊதியத்தை எதிர்பார்த்துப் பணிபுரியாமல், மக்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாக இருக்கும்படியும் பேதுரு மேய்ப்பர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் (1 பேது 5:2-3).
நல்ல ஆடுகளின் பண்பு மேய்ப்பரின் குரலுக்குச் செவிசாய்க்கும் தன்மை (யோவா 10:3). இன்று பல்வேறு திசைகளிலிருந்து பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. அக்குரல்கள் நமது காதுகளைச் செவிடாக்குகின்றன. இந்நிலையில் நாம் கிறிஸ்துவின் குரலைக் கேட்கின்றோமா?
ஓர் ஊரில் ஓங்கி வளர்ந்த, பசுமையான இலைகள் நிறைந்த. ஆண்டு முழுவதும் பழம் கொடுத்த ஒரு மரம் இருந்தது. அதன் அழகைக் கண்டு ரசிக்கவும் அதன் பழங்களை ருசிக்கவும் ஆண்டு முழுவதும் மக்கள் வந்தார்கள். ஒருநாள் அம்மரம் திடீரெனப் பட்டுப் போய்விட்டது.. மக்கள் அம்மாத்தைப் பார்க்க வரவில்லை. இந்நிலையில் பட்டுப்போன அம்மரத்தின் ஒரு கிளையில் சிட்டுக்குருவி கூடுகட்டி அழகாகப் பாடிக்கொண்டிருந்தது. மரம் அக்குருவியிடம், "நான் பசுமையாக இருந்த காலத்தில் என்னிடம் நீ வரவில்லை; நான் பட்டுப் போன நிலையில் ஏன் என்னிடம் வந்து பாடுகிறாய்? என்று கேட்டது. அதற்கு அக்குருவி அம்மரத்திடம் "நான் தொடக்கத்தில் இருந்தே உன் கிளையில் கூடுகட்டிப் பாடினேன். ஆனால் நீதான் உன் அழகில் மயங்கி உன்னைப் புகழ்ந்தவர்களின் குரலை மட்டும் கேட்டு என் குரலைக் கேட்கவில்லை" என்று கூறியது.
நாம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற சமூக ஊடகங்களின் குரலில் மயங்கி நமது மனச்சாட்சியில் கடவுள் பேசும் மென்மையான குரலைக் கேட்கத் தவறுகின்றோம். கடவுளது குரலைக் கேட்டாலும் நமது இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்கின்றோம். நல்லாயன் கிறிஸ்துவின் குரலைக் கேட்டு அவரைப் பின்பற்றக் கவனம் உள்ளவர்களாய் இருப்போம்.
நாம் வாழ்வு பெறவும், அதை நிறைவாகப் பெறவும் (யோவா 10:10) நல்லாயன் கிறிஸ்து தமது இன்னுயிரைக் கையளித்தார். கிறிஸ்துவே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும், பலிப்பீடமாகவும், பலிப்பொருளாகவும் திகழ்கின்றார். திருத்தூதர் பவுல் உணர்வுப் பூர்வமாகக் கூறினார்: "கிறிஸ்து என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்” (கலா 2:20). இத்தகைய இறை அனுபவம் பெற முயலுவோம்.
நல்லாயன் ஞாயிறு இறை அழைத்தல் ஞாயிறு. "அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுவோம்" (மத் 9:37-38).
நல்ல ஆயன் யார்?
ஒரு காட்டில் புள்ளிமான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களின் தலைவன் “மின்னல் அழகன்". பாதுகாப்பற்ற காட்டு வாழ்க்கையில் அந்தத் தலைவனது வழிகாட்டல், முடிவு எல்லாமே மின்னல் வேகத்தில் இருக்கும்.
ஒருநாள் மேய்ச்சலின் போது அருகில் சலசலப்பு ஓசை. மோப்பம் பிடித்த மின்னல் தலைவன், சிங்கம் ஒன்று நெருங்கி வருவதை உணர்ந்தது. மின்னல் வேகத்தில் எச்சரிக்கை கொடுத்தது. மான் கூட்டம் துள்ளிப் பாய்ந்து ஓடியது.
காட்டுப் பாதையில் குறுக்கே நீண்ட பள்ளம் ஒன்று இருந்தது. சில கிழ மான்களும் சிறுகுட்டிகளும் பள்ளத்தைத் தாண்ட முடியாமல் திகைத்து நின்றன. திரும்பிப் பார்த்த தலைவன் திடுக்கிட்டு நின்றது. உடனடியாகப் பள்ளத்தில் இறங்கித் தன்னையே பாலமாக்கித் தன் முதுகில் அனைவரும் மிதித்துத் தாண்டிச் செல்லுமாறு சொன்னது. இயலாத மான்கள் தலைவன் முதுகின்மேல் ஏறித்தாவித் தப்பித்து ஓடின. ஆனால் தலைவனால் கரையேற முடியாதபடி முதுகெலும்பு முறிந்து போயிருந்தது. சில நொடிகளில் தலைவன் மான், சிங்கத்தின் பசிக்கு இரையானது.
தன்னலமற்ற அந்த மான் கூட்டத் தலைவன் போல இயேசு நம் பாவங்களையும் துன்பங்களையும் தம்மேல் ஏற்றுக் கொண்டார். "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்" (1 பேதுரு 2:24). பிரச்சனைகளே வாழ்க்கை என்றாகிப் போன காலம் இது. வாழ வகையறியாமல், வாழ்க்கைப் பாதையில் சரியான வழிதெரியாமல் வாடித் தவிக்கும் ஆடுகளாகிய நமக்கு முடிவில்லா வாழ்வின் "நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை " (யோவான் 10:9) என உறுதிமொழி தந்து நம் உள்மனக் காயங்களுக்கு மருந்திடும் உண்மையான மருத்துவராகத் திகழ்கிறார் இயேசு. "ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக் குட்டியைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்" (எசா.40:11)
இன்றைய நற்செய்தி, பார்வை இழந்த மனிதனுக்கு இயேசு பார்வை கொடுத்த நிகழ்ச்சியைத் தொடர்வது. மக்களின் தலைவர் களாய் இருந்த அன்றையப் பரிசேயர்களை குருட்டு வழிகாட்டிகள் என்று குறிப்பிட்டு "திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்" (யோவான் 10:10,11) (எசேக்.34இல் போலி ஆயர்கள் பற்றிய கடுமையான வார்த்தைகளையும் கவனத்தில் கொள்க)
உரோமை நகரில் காணப்படும் Catacomb (அது பூமிக்கடியில் அமைந்துள்ள தொடக்ககாலக் கிறிஸ்தவர்களின் கல்லறை. அங்கு போகச் சுரங்கப் பாதைகள் உண்டு. பழங்காலத்தில் கொடுங்கோலர் களால் துன்பத்திற்கு ஆளான கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்ய இத்தகைய கல்லறைகளைப் பயன்படுத்தினார்கள்) ஒன்றில் மிகப்பழமையான ஓர் ஓவியம் உண்டு. அந்த ஓவியத்தில் நல்லாயனாகிய கிறிஸ்து, தவறிப் போய்க் காயப்பட்ட ஆடு ஒன்றினைக் கனிவோடு தன் தோள்மேல் தூக்கிவரும் காட்சியைக் காணலாம். இது துன்பத்தில் உழலும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் ஆறுதலும் மனத்திடனும் அளிக்க வல்லது.
இன்றைய நற்செய்தியில் இரண்டு சித்தரிப்புக்கள் - இயேசு தன்னைப் பற்றிக் கூறிய இரண்டு உருவகங்கள்.
1. நல்ல ஆயன் நானே. (யோ.10:11).
இயேசுவின் இந்தச் சொற்கள். இன்றையத் திருவழிபாட்டின் மையம். ஆடுமாடுகள் மேய்த்து வந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளையே ஆயனாகக் கண்டனர். (தி.பா.23:1, 77:20, 80:1, 95:7, 100:3) இந்த மரபைப் பின்பற்றியே இயேசுவும் ஓர் ஆயனாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். (மத்.18:12, மார்க் 6:34, 14:27, லூக்.12:32). மக்கள் செய்து வந்த தொழிலிருந்தே கடவுளும், பின்னர் இயேசுவும், இன்று திருச்சபைத் தலைவர்களும், இப்பெயரைப் பெறுகின்றனர்.
ஒரு குடையைப் பார்த்துக் கவிஞன் கேட்டான்: "குடையே, உனக்கு மழையில் நனைய விருப்பமா? வெயிலில் காய விருப்பமா?" அதற்குக் குடை “நான் மழையில் நனைந்தாலும் வெயிலில் காய்ந்தாலும் கவலையில்லை. ஆனால் என்னைப் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மழையில் நனையவும் கூடாது. வெயிலில் காயவும் கூடாது" என்றதாம். இப்படித் தன்னை மறந்து, தன்னை இழந்து நம்மை அன்பு செய்பவர் நல்லாயன் இயேசு!
2.மந்தைக்கு வாயில் நானே. (யோவான் 10:9).
தூய கிறிசோஸ்தம் கூறுவது போல, யூதர்கள் இயேசுவைப் பின்பற்றாததன் காரணம் இயேசுவை ஆயனாகக் காண முடியாததினால் அல்ல. இவர்கள் நல்ல ஆடுகளாக இல்லாமல் இருந்ததினால்தான். அதனால் இயேசு அவர்களைத் "திருடரும் கொள்ளையரும்" (யோவான் 10:8) என்கிறார்.
விவிலியம் உவமைகளின் கருவூலம். ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை வழியாக நமக்கும் ஆடுகளாக இருக்க அல்ல ஆயர்களாக இருக்க அழைப்பு விடுக்கின்றார் இயேசு. ஏனெனில் தன்னறிவின்றி கும்பல் மன நிலையோடு செயல்படும் ஆடுகளோடு இன்றையக் கிறிஸ்தவர்களை ஒப்பிடுவது திருச்சபையில் அவர்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் தலைமைப் பணியையும் பிரதிபலிக்குமா? இயல்பாக எழும் கேள்வி இது. இன்று தேவை நல்ல தலைவர்கள்.
"உங்களுக்காக நான் ஆயனாக இருக்க, உங்களுடன் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்" என்று சொன்ன தூய அகுஸ்தினார். தமது ஹிப்போ மறைமாவட்ட மக்களைப் பார்த்து மேலும். கூறியது: ''திருமுழுக்குப் பெற்ற நல்ல ஆடுகளாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் எதார்த்தமோ திருமுழுக்குப் பெற்ற ஓநாய்களும் உங்களுக்கு மத்தியிலே இருப்பதை அறிகின்றேன். அது மட்டுமல்ல கிறிஸ்தவத்துக்கு வெளியே இருக்கின்ற ஓநாய்கள் மத்தியிலும் திருமுழுக்குப் பெறாத நல்ல ஆடுகள் இருப்பதையும் நான் அறிவேன். நீங்களும் அறிவீர்கள்".
நான்காம் நூற்றாண்டில் எடுத்தியம்பிய மேற்கூறிய வார்த்தைகள் 21ஆம் நூற்றாண்டில் இருக்கின்ற நமக்கும் எவ்வளவு பொருந்தும்!
மாண்புமிக்க மேய்ப்பர்
மாவீரன் அலெக்சாண்டர் தன் படைவீரர்களுடன் மக்ரான் என்ற பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள், நீண்ட தூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். “வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை” என்று கூறியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். சூழ இருந்த வீரர்கள், மென்மையான உள்ளம் கொண்ட தங்கள் தலைவனை, பெருமையுடன் எண்ணி, ஆர்ப்பரித்தனர்.
ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக்கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப் பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை நாம் எளிதில் எண்ணிப் பார்ப்பதில்லை. "எங்கத் தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு" என்று யாராவது சொன்னால், அதை, கேலி கலந்த ஒரு சிரிப்புத் துணுக்காகவே கருதுவோம்.
மாவீரன் அலெக்சாண்டரைப்பற்றி நாம் பகிர்ந்த இந்த நிகழ்வில், அவரது இளகிய, மென்மையான மனமும், வீரர்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொண்ட தியாகமும் தெளிவாகின்றன. உலகத் தலைவர்களிடம் இத்தகையப் பண்புகளை எதிர்பார்க்கக்கூடாது என்று நாமாகவே முடிவு செய்துவிட்டோம். உலகின் அரசியல், மற்றும், நிறுவனத்தலைவர்கள், தலைமைத்துவத்தைப்பற்றி உருவாக்கித் தந்துள்ள தவறான இலக்கணம், இத்தகைய முடிவுக்கு நம்மைத் தள்ளிவிட்டுள்ளது.
உலகத் தலைவர்களிடம் காணப்படும் நிர்வாகத்திறமை, அறிவுக்கூர்மை போன்ற பண்புகளையே ஆன்மீகத் தலைவர்களிடம், மதத் தலைவர்களிடம், திருஅவைத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். இது, அண்மையக் காலங்களில் உருவாகியுள்ள ஓர் ஆபத்து. தலைவர்களுக்குரிய பண்புகள் என்று மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை, ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற போக்கு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞாயிறு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2ம் வத்திக்கான் சங்கம் நடைபெற்றுவந்த 1964ம் ஆண்டு முதல்முறை கொண்டாடப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு, 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நல்லாயன் ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு வாசகங்களில், முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது, இன்று நாம் பயன்படுத்தும் பதிலுரைப் பாடல். திருப்பாடல்கள் நூலில் உள்ள 150 பாடல்களில், "ஆண்டவரே என் ஆயர்" என்று துவங்கும் 23ம் திருப்பாடலை, நாம் ஆலயங்களில் பாடி மகிழ்ந்திருக்கிறோம்; பலமுறை தியானித்துப் பலனடைந்திருக்கிறோம். கவலைகள், மனவேதனைகள் என்று, நம்மை இருள் சூழும் நேரங்களிலும், நிறைவு, நன்றி என்று, நம் மனதில் ஒளி எழும் நேரங்களிலும், இந்தத் திருப்பாடலை நாம் பயன்படுத்துகிறோம். உடல் நோய் கண்டவர்கள், குடும்பத்தில் ஒருவரை இழந்து தவித்தவர்கள் பலர், இந்தப் பாடல் வழியாக, மனஅமைதியும், நம்பிக்கையும் பெற்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம்.
ஏனைய 149 திருப்பாடல்களை விட, விவிலியத்தின் பிற பகுதிகளை விட, 23ம் திருப்பாடலை பலரும் பயன்படுத்துவதற்கு காரணம் என்ன? இந்தத் திருப்பாடல், நாம் எல்லாரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒர் உண்மையை, ஆறு இறைவாக்கியங்களில் சொல்கிறது. அந்த உண்மை இதுதான்: உலகில் அநீதிகள், அவலங்கள், அழிவுகள் நிகழும்போது, குறிப்பாக, அக்கொடுமைகள் நம் வாழ்வைத் தாக்கும்போது, "இறைவா நீ எங்கிருக்கிறாய்? ஏன் எங்களை இந்த இருளில் தள்ளிவிட்டாய்?" என்று நம் மனதில் கேள்விகள் எழுகின்றன. அதற்கு, கடவுளின் பதில் இவ்வாறு ஒலிக்கலாம்: “இந்த உலகம் நீதியாக, அமைதியாக, பிரச்சனைகள் இன்றி இருக்கும் என்று நான் வாக்குறுதி தரவில்லை. மாறாக, பிரச்சனைகளை நீ சந்திக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன் என்றுதான் நான் உறுதி கூறியுள்ளேன்.” இந்த எண்ணத்தை ஆழமாகச் சொல்கிறது இந்தத் திருப்பாடல்.
“நீர் என்னோடு இருப்பதால், உலகில் எத்தீங்கும் நிகழாது” என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறவில்லை. “நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திருப்பாடல் 23: 4). என்பதே, அவர் அறிக்கையிடும் உண்மை. தீமைகள், துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியைவிட, அத்துன்பங்களில் கடவுளின் துணை உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 வழங்குகிறது. அத்தகைய உறுதி, இன்று, நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது. இஞ்ஞாயிறன்று, இத்திருப்பாடலை, வழிபாட்டில், பதிலுரைப்பாடலாகக் கேட்பதோடு நின்றுவிடாமல், மீண்டும் ஒருமுறை, இத்திருப்பாடலின் ஆறு இறைவாக்கியங்களை, தனியாகவோ, குடும்பமாகவோ இணைந்து வாசித்து, தியானித்து, பலனடைய முயல்வோம்.
நல்லாயன் ஞாயிறன்று, ‘நல்லாயன்’ என்ற சொல்லைக் கேட்டதும், பரிவான, அமைதியான இயேசுவின் உருவம் நம் உள்ளங்களில் தோன்றி, இதமான உணர்வுகளைத் தருகிறது. கிறிஸ்தவப் பாரம்பரியத்தில், இயேசுவைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட முதல் உருவம், நல்லாயன் உருவம் என்பது, திருஅவை வரலாற்று அறிஞர்களின் கருத்து.
கிறிஸ்தவர்கள், உரோமையப் பேரரசால் வேட்டையாடப்பட்ட வேளையில், அவர்கள் உருவாக்கிய நிலத்தடி கல்லறைகளில், இயேசு, நல்லாயனாக வரையப்பட்டுள்ளார். 3ம் நூற்றாண்டையொட்டி உருவாக்கப்பட்ட இந்தக் கல்லறைகளில், அடிக்கடி தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்களுக்கு, ஆறுதலும், நம்பிக்கையும் தந்த உருவமாக, நல்லாயன் இயேசு இருந்தார். கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்த நல்லாயன் என்ற உருவகத்தை, இயேசு தன் வாழ்நாளில் பயன்படுத்தியபோது, அது, இஸ்ரயேல் மக்கள் நடுவே, ஒரு புரட்சியை உருவாக்கியது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள், ஆடுகளைப் பேணிக்காத்தவர்கள் என்பதை அறியலாம். இவர்களில், மோசேயைப்பற்றி கூறப்படும் ஒரு பாரம்பரியக் கதை நினைவுக்கு வருகிறது.
மோசே தன் மாமனார் இத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு குட்டி ஆடு, மந்தையிலிருந்து காணாமற்போனது. அந்த ஆட்டுக்குட்டியைத் தேடி, மோசே, பலமணி நேரம், அலைந்து திரிந்தார். இறுதியில், அந்த ஆட்டுக்குட்டி, ஓர் ஆழமான பாறை இடுக்கில் நுழைந்து, அங்கிருந்த ஒரு நீர்ச்சுனையில், தண்ணீர் பருகிக்கொண்டிருந்ததை மோசே கண்டார். "ஓ, உன் தேவை இந்த நீர்தானா? இது தெரிந்திருந்தால், நானே உன்னை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றிருப்பேனே! சரி, இப்போது நீ மிகவும் களைத்திருப்பாய். வா, உன்னை நான் தூக்கிச் செல்கிறேன்" என்று கூறி, அந்த ஆட்டை, தோளில் சுமந்தவண்ணம் தன் மந்தை நோக்கித் திரும்பினார் மோசே. அவர் திரும்பி வரும் வழியில், கடவுள் அவரிடம், "உனக்குச் சொந்தமில்லாத ஒரு மந்தையின் ஆடு தவறியபோதே, நீ இவ்வளவு அக்கறையுடன் அதைத் தேடிச் சென்றாயே! எனவே, உன்னை நம்பி என் மக்களை நான் ஒப்படைக்கிறேன். அவர்களை, நீ, எகிப்திலிருந்து அழைத்து வரவேண்டும்" என்று கூறியதாக இந்தப் பாரம்பரியக் கதை சொல்கிறது. தங்கள் தலைவர்கள், ஆயர்களாக இருந்தனர் என்பதில் பெருமை கொண்ட இஸ்ரயேல் மக்கள், அந்தப் பெருமையின் அடிப்படையில், தங்கள் இறைவனையும் ஓர் ஆயராக ஒப்புமைப்படுத்திப் பேசினர். (காண்க. தொடக்க நூல் 49:24; திருப்பாடல் 80:1; எரேமியா 31:10)
இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்பு பெற்றிருந்த ஆயர்கள், அல்லது இடையர்கள், படிப்படியாக தங்கள் மதிப்பை இழந்து, இயேசுவின் காலத்தில், மிக, மிகத் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர். தங்கள் ஆடுகளோடு, அவர்கள், இரவும், பகலும் வாழ்ந்ததால், தூய்மையற்றவர்களாக, துர்நாற்றம் வீசுபவர்களாக கருதப்பட்டனர். பசும்புல்வெளிகளைத் தேடி, ஆடுகளை அவர்கள் வழிநடத்திச் சென்றதால், ஊரில் தங்கி, தொழுகைக்கூட வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியவில்லை. மோசே நிறுவிய ஒய்வுநாள், புனித நாள் கடமைகளை கடைபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் இஸ்ரயேல் சமுதாயத்தில் மிகத் தாழ்ந்தவர்களெனக் கருதப்பட்டனர்.
அழுக்கானவர்கள், துர்நாற்றம் வீசுபவர்கள், ஒய்வுநாள் கடமையைத் தவறியவர்கள், என்று அடுக்கடுக்காக அவர்கள் மீது குத்தப்பட்ட முத்திரைகள், ஆயர்களை, இஸ்ரயேல் சமுதாயத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிட்டன. எவ்வளவு தூரம் அவர்கள் ஒதுக்கப்பட்டனர் என்பதை, லூக்கா நற்செய்தியில், இயேசு பிறப்பு நிகழ்வின்போது, நாம் புரிந்துகொள்ளலாம்.
இஸ்ரயேல் சமுதாயத்தின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது என்று லூக்கா நற்செய்தியில் (லூக்கா 2:1-5) வாசிக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பில், தங்கள் பெயர்களைப் பதிவுசெய்ய, மக்கள் அனைவரும், அவரவரது சொந்த ஊர்களுக்குச் சென்ற வேளையில், இடையர்கள், ஊருக்கு வெளியே, வயல்வெளியில் தங்கியிருந்தனர் (லூக்கா 2:8) என்பதை நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுச் சொல்கிறார். மக்கள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாத இடையர்கள், ஆடுகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இறைமகன் இயேசுவுக்கும் இதே நிலைதான். அவர் பிறந்தபோது, மக்கள் தங்கியிருந்த இல்லங்களில் இடம் இல்லாமல், விலங்குகள் தங்கியிருந்த தொழுவத்தில் இடம் கிடைத்தது.
இஸ்ரயேல் குலங்களிலிருந்து, ஏன், சொல்லப்போனால், மக்கள் சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட இடையர்களைத் தேடி, இறைவனின் தூதர்கள் சென்றனர் (லூக்கா 2:9) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுவது, ஒரு புரட்சியின் துவக்கமாக உள்ளது. மனிதரோடு இறைவன் என்ற பொருள்படும் 'இம்மானுவேலாக' தான் வந்துள்ளேன் என்ற உண்மையைச் சொல்வதற்கு, குழந்தை இயேசு, இடையர்களைத் தேர்ந்ததிலிருந்து, அவர்கள் மீது அவர் கொண்டிருந்த பெரும் மதிப்பு வெளிப்படுகிறது.
முப்பது ஆண்டுகளுக்குப் பின், இயேசு, தன் பணிவாழ்வில், ஆயர்களுக்குரிய மதிப்பை மீண்டும் அளித்தார். அவர், தன்னை, பல வழிகளில் உருவகப்படுத்திப் பேசியுள்ளார். வழி, ஒளி, வாழ்வு, திராட்சைச் செடி, வாழ்வின் நீர், உயிர் தரும் உணவு என்று அவர் அறிமுகப்படுத்திய உருவகங்களை இஸ்ரயேல் மக்கள் எளிதில் ஏற்றுக்கொண்டிருப்பர். ஆனால், “நல்ல ஆயன் நானே” (யோவான் 10:11) என்று அவர் கூறியது, இஸ்ரயேல் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் அத்தகைய ஓர் அதிர்ச்சியை இயேசு வழங்குகிறார்.
இடையர்களை உயர்த்திப் பிடித்து, இஸ்ரயேல் மக்களுக்கு அதிர்ச்சி தந்த இயேசு, இன்று நம் நடுவே வாழ்ந்தால், பாதாள சாக்கடையில் இறங்கி, தன் கரங்களால் அதைச் சுத்தம் செய்யும் ஒரு துப்புரவுத் தொழிலாளியுடன் தன்னை ஒப்புமைப்படுத்தி பேசி, நமக்கும் அதிர்ச்சியூட்டியிருப்பார். அன்றைய இடையர்களுக்கு இஸ்ரயேல் மக்கள் அளித்த மதிப்பை, இன்றைய தொழிலாளர்களுக்கு நாம் வழங்குகிறோம் என்பதை மறுக்க இயலாது.
நாளை, மே 1, திங்களன்று நாம் சிறப்பிக்கும் தொழிலாளர்கள் நாள், தொழிலாளர்களின் காவலரான புனித யோசேப்பு திருநாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இத்தருணத்தில், உடலை வருத்தி, சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு நாம் எத்தகைய மதிப்பை வழங்குகிறோம் என்பதைச் சிந்திக்கவும், இதைக்குறித்து நாம் இழைத்துள்ள தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், நல்லாயனாம் இயேசு நம்மை அழைக்கிறார்.
இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ள பகுதி யோவான் நற்செய்தியின் 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தியின் 9ம் பிரிவில், பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமை கொடுக்கப்பட்டுள்ளது. அப்புதுமையின் இறுதியில் எழும் ஒரு காரசாரமான விவாதத்தில், இயேசுவை, ஒரு பாவி என்று அடையாளப்படுத்தினர் பரிசேயர்கள். அவர்களுக்குப் பதில்சொல்லும் வகையில், இயேசு, தன்னை ஒரு நல்ல ஆயனாக அடையாளப்படுத்தினார். அது மட்டுமல்ல, ஆடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் திருடர், கொள்ளையர், கூலிக்கு மேய்ப்பவர் இவர்களைப் பற்றியும் இயேசு பேசினார். உண்மையான ஆயனின் குணங்களாக இயேசு கூறும் பண்புகளில் ஒன்றை சிறிது ஆழமாகச் சிந்திப்போம்: யோவான் 10: 3-4
அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின், அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.
ஆட்டுக் கொட்டிலில், நூற்றுக்கணக்காய் ஆடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் பாசமாய் பெயரிட்டு அழைப்பது, ஆயனின் முக்கிய குணங்களில் ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் மிக நெருக்கமான, உயர்ந்த அடையாளம், அவரது பெயர். ஒருவரைப் பெயரிட்டு அழைக்கும்போது உருவாகும் உறவும், பிணைப்பும், உணர்ந்து பார்க்க வேண்டிய உண்மை. ஆனால், நாம் வாழும் காலத்தில், பெயர்கள் என்ற அடையாளத்தைக் காட்டிலும், எண்ணிக்கை என்ற அடையாளத்திற்குத் தரப்பட்டுள்ள மதிப்பை நாம் அனைவரும் அறிவோம். நமது வாழ்வை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் என்று, பல அடையாள அட்டைகளாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து, நமது முக்கியமான அடையாளங்கள், எண்களில் சிக்கியுள்ளதை நாம் அனைவரும் உணர்ந்துவருகிறோம். முதல் தர நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில், ஒருவரது வாழ்வே, அட்டைகளிலும், அவற்றில் உள்ள எண்களிலும் புதைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த அட்டைகள் தொலைந்துவிட்டால், அவற்றிலுள்ள எண்களை ஒருவர் மறந்துவிட்டால், அவர், தன் சுய அடையாளத்தையே இழக்கும் ஆபத்து உண்டு.
இயந்திர மனிதர்களான 'ரோபோக்களும்', செயற்கை நுண்ணறிவும் வளர்ந்துவரும் இன்றையச் சூழலில், தனி மனித அடையாளங்களும், ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர் என்ற மாண்பும் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகையைச் சூழலில், ஒவ்வொருவரின் தனிப்பட்ட மாண்பை உறுதி செய்து, அதை வளர்ப்பது இன்றைய உலகில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள 'அழைப்பு'. இந்த அழைப்பில் நாம் உறுதியாக இருந்தால், ஒவ்வொரு ஆட்டையும் பெயர் சொல்லி அழைத்துச் செல்லும் நல்லாயரின் பணியை நாம் இவ்வுலகில் தொடர்வோம்.
நம் குடும்பங்களில் தொடங்கி, நம் நண்பர்கள், அயலவர் என்று நம்மைச் சுற்றியுள்ள ஆட்டுக் கொட்டிலில் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர், மாண்பு மிக்கவர் என்பதை நிலைநாட்டும் பணியே நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ள அழைப்பு! இந்த அழைப்பில் நாம் நிலைத்திருக்க, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளன்று ஒருவர் ஒருவருக்காக செபிப்போம்.
ஆயன்போல திருடன்போல
ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை உண்டவுடன் மரங்களுக்குப் பின் ஒளிந்துகொள்கின்றனர் ஆதாமும் ஏவாளும். அவர்களைத் தேடி வருகின்றார் கடவுள். 'நீ எங்கே இருக்கிறாய்?' என்று கேட்கிறார் கடவுள். 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்' என்கிறார் ஆதாம்.
குரல் ஒலியைக் கேட்டு அச்சம் கொள்கிறார் ஆதாம்.
'குரல் ஒலி'
நம்மைச் சுற்றி இன்று நிறைய குரல் ஒலிகளைக் கேட்கின்றோம். ஒரு நிமிடம் கண்களை மூடி நம்மைச் சுற்றி இருக்கும் சப்தங்களைக் கேட்க ஆரம்பித்தால் நம்மால் நூற்றுக்கணக்கான ஒலிகளைக் கேட்க முடியும்.
நம் செல்ஃபோனில் செய்தி அல்லது அழைப்பு வரும் ஒலி.
நோட்டிஃபிகேஷன் ஒலி.
அறையில் ஓடும் ஃபேன் அல்லது ஏஸியின் ஒலி.
பறவைகளின் ஒலி.
பேருந்து மற்றும் வாகனங்களின் ஒலி.
தொழிற்சாலைகளின் ஒலி.
நாம் ஃபோனில் கேட்கும் மற்றவரின் ஒலி.
நம்மோடு நேருக்கு நேர் பேசுபவரின் ஒலி.
தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளத்தில் நாம் கேட்கும் ஒலி.
இப்படி ஒலி சூழ் உலகில் நாம் அமர்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த ஒலிகளுக்கு நடுவில் நல் ஆயன் கிறிஸ்துவின் ஒலியும் கேட்கிறது என்றும் அந்த ஒலிக்கு யார் யார் செவிகொடுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 10:1-10).
உயிர்ப்புக்காலத்தில் நான்காம் ஞாயிற்றை 'நல்லாயன் ஞாயிறு' எனக் கொண்டாடுகிறோம்.
'ஆயன்' என்னும் உருவகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் உருவகம். வாழ்வியல் உருவகங்கள் மிக இயல்பாக நம் வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. ஆகையால்தான் தங்கள் கடவுளை, தங்கள் அரசர்களை, தங்கள் தலைவர்களை, 'ஆயன்' என்று அழைத்து மகிழ்ந்தனர் இஸ்ரயேல் மக்கள்.
'ஆயர் - திருடர்'
இந்த முரண்பாட்டில் கட்டப்பட்டிருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:
- ஆயன் வாயில் வழியே நுழைவார் - திருடன் வேறு வழியாக ஏறிக் குதிப்பார்
- ஆயன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பார் - திருடன் அமைதி காப்பார். அவர் குரல் எழுப்பினால் மாட்டிக்கொள்வார். மேலும் அவரது குரல் ஆடுகளுக்குத் தெரியாது.
- ஆயன்தான் தன் ஆட்டுக்கொட்டிலுக்கு வாயில் - திருடன் வாயில் அல்ல.
- வாழ்வு தருவதும், அதை நிறைவாகத் தருவதும் ஆயனின் பணி - திருடுவதும், கொல்வதும், அழிப்பதும் திருடனின் பணி.
- ஆயன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார் - திருடன் தன் உயிரைக் காக்கும் பொருட்டு ஆடுகளின் உயிரை அழிப்பார்.
இந்த முரண்பாட்டில் 'ஆயன்' என்பதும், 'ஆடு' என்பதும், 'திருடன்' என்பதும் உருவகங்களே.
ஆயன் என்பது தன்னைக் குறிப்பதாகவும், 'ஆடு' என்பது இஸ்ரயேல் மக்களைக் குறிப்பதாகவும், 'திருடன்' என்பது தனக்கு முன் வந்த அனைவரையும் குறிப்பதாகவும் இயேசு மொழிகின்றார்.
திருச்சபை, நாடு, பணியிடம், படிப்பிடம், குடும்பம் என பல இடங்களில் மற்றவர்கள் நமக்கு தலைவர்களாகவும், இவைகளில் சில இடங்களில் நாமே தலைவர்களாகவும் இருக்கின்றோம்.
நம் முன் இருப்பது இரண்டு ஆப்ஷன்:
ஒன்று, ஆயன்போல இருப்பது.
இரண்டு, திருடன் போல இருப்பது.
இவைகளில் நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதுதான் கேள்வி.
மேற்காணும் இரண்டு நிலைகளிலும் மையமாக இருப்பது 'வாழ்வு.'
என்னால் பிறருக்கு வாழ்வு வருகிறது என்றால் நான் ஆயன்.
என்னால் பிறருக்கு இழப்பு வருகிறது என்றால் நான் திருடன்.
ஆயன் நிலை - திருடன் நிலை
இதை இன்று நாம் மூன்று வாழ்க்கை நிலைகளுடன் பொருத்திப் பார்ப்போம்:
1. உறவு நிலைகள்
2. பணி நிலைகள்
1. உறவு நிலைகள்
நம் வாழ்வின் உறவு நிலைகளை 'எனக்கும் எனக்குமான உறவு,' 'எனக்கும் பிறருக்குமான உறவு,' 'எனக்கும் இறைவனுக்குமான உறவு,' 'எனக்கும் இயற்கைக்குமான உறவு' என்று நான்காகப் பிரிக்கலாம்.
எனக்கும் எனக்குமான உறவில் ஆயன் நிலை என்பது என்னை முழுமையாக அறிவதும், என்னை இருப்பது போல ஏற்றுக்கொள்வதும், என் இனியது இன்னாததை பொறுத்துக்கொள்வதும் ஆகும். திருடன் நிலை என்பது என்னையே அறியாமல் இருந்துகொண்டு, அறிந்ததுபோல நடிப்பதும், அல்லது என்னையே அறிய மறுப்பதும் ஆகும். திருடன் நிலையில் நான் என்மேல் தேவையற்ற சுமைகளைச் சுமத்துகிறேன்.
எனக்கும் பிறருக்குமான உறவில் ஆயன் நிலை என்பது பிறரை அறிவதிலும், பிறரை பெயர் சொல்லி அழைத்து உரிமை பாராட்டுவதிலும், பிறருக்குரிய எல்கையை மதிப்பதிலும், பிறரின் உடலை, உணர்வை மதிப்பதிலும் இருக்கிறது. இங்கே திருடன் மனநிலை என்பது நாம் அடுத்தவரின் எல்கைக்குள் அத்துமீறி நுழைவதிலும், அடுத்தவருக்கு உரியதை எனதாக்கிக்கொள்ள நினைப்பதிலும் இருக்கிறது.
எனக்கும் இறைவனுக்குமான உறவில் நான் அவருக்கு ஆயனாக இருக்க முடியவில்லை என்றாலும், நான் இந்த நிலையில் திருடனாக இல்லாமல் இருக்க முடியும்.
எனக்கும் இயற்கைக்குமான உறவில் ஆயன் நிலை என்பது நான் சார்ந்திருக்கும் இந்த இயற்கையை நேசிப்பதிலும், அதைப் பராமரிப்பதிலும் அடங்கி இருக்கிறது. அதை விடுத்து நான் என் முன் இருக்கும் அனைத்தையும் எனதாக்கவும், வியாபாரம் ஆக்கவும், நுகர்ந்து கொள்ளவும் நினைத்தால் நான் திருடன் ஆகிவிடுகிறேன்.
2. பணி நிலைகள்
திருடனின் பணி என மூன்றை வரையறை செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:
அ. திருடுவது. அதாவது, எனக்கு உரிமை இல்லாத ஒன்றை என் உரிமையாக்கிக்கொள்வது. நான் உழைக்காத ஒன்றை சுரண்டிக் கொள்வது. மிக எளிதான அல்லது குறுக்கு வழியிலான பொருளை நாடுவது. திருட்டு என்பது சில நேரங்களில் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன் பாஸ் மேல் இருக்கும் கோபத்தில் அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்வது அல்லது நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண் அல்லது பையன் நம்மேல் உள்ள கோபத்தைக் காட்டுவதற்காக நம் வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்வது அல்லது சேதப்படுத்துவது என்பவை இதன் உதாரணங்கள்.
ஆ. கொல்வது. ஆடுகளைத் திருட வருபவர் ஆடுகள் சத்தமிட்டால் ஆடுகளைக் கொன்றுவிடுவார். ஏனெனில் ஆடுகளின் சத்தத்தால் மற்றவர்கள் விழித்துக்கொண்டு திருடனைப் பிடித்துவிடுவார்கள். அல்லது திருடன் தன் திருட்டிற்கு தடையாக இருக்கும் ஆயன் அல்லது மற்றவர்களைக் கொன்றுவிடுவார். அதாவது, தான் யார் என்றும், தன் அடையாளம் எது என்றும் வெளிப்பட்டவுடன் அதை மறைக்க அவர் இவ்வாறு செய்கிறார்.
இ. அழிப்பது. ஆட்டு மந்தையில் ஓர் ஆடு அழிந்தாலும் அதன் குழுமம் அழிவைச் சந்திக்கிறது. சில வீடுகளில் திருட்டு நடக்கும்போதும் நாம் இதையே கேள்விப்படுகிறோம். நகைத்திருட்டால் நிறுத்தப்படும் திருமணங்கள். அதன் விளைவாக நடக்கும் தற்கொலைகள். இவ்வாறாக, ஒரு செயல் அடுத்த செயலுக்கு இட்டுச் செல்கின்றது. ஒரு அழிவு அடுத்த அழிவுக்கு இட்டுச்செல்கின்றது.
ஆனால், இதற்கு மாறாக ஆயனின் பணி இரண்டு நிலைகளில் வரையறுக்கப்படுகிறது:
அ. அவர்கள் உள்ளே போவர். வெளியே வருவர். அதாவது, ஒருவகையான கட்டின்மையை அனுபவமாக தருபவர் நல் ஆயன்.
ஆ. அவர்கள் வாழ்வு பெறுவர். அதை நிறைவாகப் பெறுவர். நிறைவான மேய்ச்சல். ஆகையால் பசியும், தாகமும் தீர்ந்துவிடும். எவ்வித குறையும் இன்றி நிறைவாக இருப்பர்.
பொதுநிலையினர் நம் தனிப்பட்ட குடும்பத்தையும், அருள்நிலையினர் நம் பணித்தளம் என்னும் குடும்பத்தையும் எடுத்து மேற்காணும் இந்த பண்புகளைப் பொருத்திப் பார்ப்போம்.
என் உடனிருப்பு ஆயன் நிலையாக இருக்கிறதா அல்லது திருடன் நிலையாக இருக்கிறதா?
இறுதியாக,
இன்றைய முதல் வாசகத்தில் பேதுருவின் உரையைக் கேட்ட மக்கள் உள்ளம் குத்துண்டவர்களாய், 'சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கின்றனர்.
இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் கேட்க வேண்டும். இதற்கு விடை, 'அவரின் குரல் கேட்பது' என்று இருக்கட்டும்.
மேலும், 'நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போல் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்' என்று தன் திருமடலில் பதிவு செய்யும் பேதுரு, இயேசுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 'ஆயர்' என்ற உருவகம் நமக்கு தெளிவாகிறது.
என் வாழ்க்கை உறவு நிலைகளில் நான் ஆயரா அல்லது திருடரா?
அவர் குரல் கேட்பதில் நான் நல்ல ஆடா?


