மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..


இரண்டாம் ஆண்டு

பொதுக் காலம் மூன்றாம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்:-
யோனா 3:1-5, 10 | 1கொரிந்தியர் 7:29-31 | மாற்கு 1:14-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
இறைவன் ஒருவரே நிலையானவர்.

எரியும் புதரில் மோயீசனை அழைத்தார் இறைவன்.

மெல்லிய காற்றில் எலியாசை அழைத்தார் இறைவன்

இடியின் ஒலியில் பவுலை அழைத்தார் இறைவன்

கடலில் வலை விரித்த அந்திரேயா, பேதுரு இவர்களை அழைத்தார் இயேசு!

மீன்பிடித்துக் கொண்டிருந்த சாதாரண மக்களாகிய இவர்களை அழைத்த உடன் அவர்களும் உடனே தம் படகையும், வலைகளையும் விட்டு முன்பின் தெரியாத இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸ், ஷிலா என்ற இரு இளம் மருத்துவர்கள் வாழ்க்கைக்கு ஒப்பந்தம் செய்து கணவன் மனைவியாகத் தங்களை அர்ப்பணிக்க முடிவெடுத்தார்கள், பெற்றோர் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாகக் கொண்டாடத் திட்டமிட்டனர். பலரும் இந்த ஆடம்பரத் திருமணத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மருத்துவத் துறையில் இருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 40 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழு மலேரியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கா மக்களுக்கு மருத்துவப் பணி புரிய ஆறு மாதம் தங்க வேண்டும். அதில் இவர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றன. எனவே ஆடம்பரத் திருமணத்தை ரத்து செய்து தாங்கள் பணி புரிந்த மருத்துவமனை சிற்றாலயத்தில் அருட்தந்தை ஒருவரால் எளிமையாகத் திருமணம் நிறைவேற்றி, குறிப்பிட்டத் தேதியில் ஆப்பிரிக்கா புறப்பட்டார்கள் இந்த இளம் தம்பதிகள்.

தற்பெருமை, சுய சார்பு எண்ணங்கள், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்ற தீய வலைகளைக் கிழித்துவிட்டு, பகிர்வு, பாசம், தியாகம், தாழ்ச்சி போன்ற வலைக்குள், நாம் நுழையும் போதுதான் இயேசுவை நாம் பற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு தான் சீடர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். உள் மாற்றத்தையே பெற்று சாதாரண மீனவர்களாக கடலில் உயிரோடு இருந்த மீன்களை கரையிலே கொண்டு சாகடித்தவர்கள், பாவத்தால் இறந்த மனிதர்களை, உயிருள்ள வாழ்வுக்குக் கொண்டு வர உயர்த்தப்பட்டார்கள். மனமாற்றம் அடைந்தார்கள். இதனால் கடல் அல்ல எங்கள் வாழ்வு, கடவுள்தான் எங்கள் வாழ்வின் மையம் என்பதை உணர்ந்தார்கள்.

'ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா'


இறைவன் ஒருவரே நிலையானவர். எதை எதைப் பெற வேண்டும் எனத் திட்டமிடாதே. மாறாக எதை எதை இழக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனம் திரும்புவோம்

பாவி ஒருவன் இறந்த பிறகு விண்ணகம் சென்றான். அங்கு செல்பவர்களுக்கு தீர்ப்பு வழங்க கடவுளால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் இருந்தார்கள். ஒருவர் ஆபிரகாம், மற்றொருவர் தாவீது, இன்னொருவர் புனித பேதுரு, நான்காமவர் புனித லூக்கா. பாவிதன் பாவங்களுக்காக வருந்தி அழுது கொண்டு அவர்கள் முன்னால் நின்றான். அவர்கள் பாவியைப் பார்த்து, நீ செய்திருக்கும் பாவங்கள் பத்துக் கற்பனைகளுக்கு எதிரான பயங்கரப் பாவங்கள். அதனால் உன்னை மோட்சத்திற்குள்ளே விடமுடியாது என்றார்கள்.

உடனே அந்தப்பாவி, ஆபிரகாம், உங்களைப் பற்றி கொஞ்சம் நினைச்சுப் பாருங்க அரசனிடம் உங்கள் மனைவியை உங்க சகோதரின்னு சொல்லி நீங்க பொய் சொல்லலெ என்றான்.

தாவீதைப் பார்த்து, தாவீதே, நீங்க மாற்றான் மனைவியை உங்க மனைவியாக்கிக்கொண்டு, அவளது கணவனைப் போர்க்களத்திற்கு அனுப்பி கொலை செய்யலெ. அதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்றான்.

பேதுருவே, நீங்க மூன்று முறை ஆண்டவர் இயேசுவை மறுதலிக்கலெ என்றான் பாவி,

அந்த சமயம் பார்த்து, கடவுள் அந்தப் பக்கமாகச் சென்றார். அங்கே என்ன நடக்குது? அப்படின்னு கேட்டாரு. நீதிபதிகள் நான்கு பேரும், அந்தப் பாவியோட பாவங்களைப் பட்டியல் போட்டு காட்டினாங்க.

அப்போது கடவுள், உங்க நாலுபேரையும் நான் மோட்சத்துக்குள்ளே விட்டப்போ, நான் எதுவுமே கேட்கலியே, சொல்லலியே அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு.

அந்த நாலு பேரும் ஒரே குரலில் பாவியைப் பார்த்து, நீ மோட்சத்துக்குள்ளே வரலாம் அப்படின்னாங்க.

மேலும் அறிவோம் :

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு? (குறள் 436).
பொருள்: முதலில் தன் குறையை அறிந்து அதனைப் போக்கிக்கொண்டு, பிறகு பிறர் குறையைக் காணும் வல்லமை வாய்ந்த ஆட்சியாளர்க்கு எந்தக் குறையும் வராது...

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறையாட்சி நெருங்கி விட்டது.

தகப்பன் ஒருவர் 10-வது படிக்கும் தன் மகனிடம், "உன்னை இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது என்றார். அதற்கு அவன், நான் என்ன பரிட்சைப் பேப்பரா திருத்துவதற்கு உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போப்பா" என்றான். விடைத்தாள் களைத்தான் திருத்த முடியும், மனிதர்களைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அந்த இளைஞன். மனிதர்கள் திருந்த வேண்டும், மனிதர்கள் மனமாற்றம் அடைய வேண்டும். இன்றைய அருள்வாக்கிள் மையக்கருத்து மனமாற்றமாகும்.

இறைவாக்கினர் யோனாவின் எச்சரிக்கைக்குச் செவிமடுத்து, நினிவே நகர மக்கள் சாக்கு உடுத்தி, சாம்பலில் அமர்ந்து உண்ணாமலும் குடியாமலும் நோன்பு இருந்தனர். அவர்கள் மனமாறியதைக் கண்ட கடவுள் அவர்களை அழிக்காமல் பாதுகாத்தார். பிற இனத்தைச் சார்ந்த நினிவே மக்களும் கடவுளுக்கு அஞ்சி மனமாறினர். மனிதர் மனமாற முடியும், மனமாறவும் வேண்டும்

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1:15) தமது நற்செய்திப் பணியின் தொடக்கத்தில், கிறிஸ்து மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை, "என் பின்னே வாருங்கள்" (மாற் 1:17) என்று அழைத்தார். அவர்களும் உடனே தங்கள் படகுகளையும் வலைகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர், அவர்கள் நம்பியிருந்த கடலை விட்டுவிட்டு முன்பின் தெரியாத கிறிஸ்துவைப் பின்பற்ற முன் வந்தது மனமாற்றமல்லவா? மனிதர் மனமாறவேண்டும், மனமாறவும் முடியும்,

விவிலியம் சுட்டிக்காட்டும் மனமாற்றம் ஆழமான அடிப்படையான மனமாற்றம் அது உள்மனமாற்றம், இதயமாற்றம், "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளவேண்டாம் இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" (யோவே 2:13). கடவுள் ஒருவரையே நமது வாழ்வின் மையமாகவும் ஒப்பற்ற செல்வமாகவும் கருதி வாழ்வதே உண்மையான மனமாற்றம் கடலையும் மீனையும் நம்பி வாழ்ந்த மீனவர்கள் இயேசுவைப் பின்பற்றத் துணிவுடன் முன்வந்தனர். இனி அவர்கள் வாழ்வின் மையம்கடல் அல்ல. கடவுளே!

இன்றைய மனிதரின் மையம் பணமே, இன்றைய உலகின் பாவத்தை "அங்காடியின் சிலைவழிபாடு" என்கிறார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், உலகச் சந்தையும் உலக வங்கியும் தான் இன்று நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதைவிட அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதே முக்கியம். சமூக ஊடகங்களும் தேவையற்ற தேவைகளை உருவாக்கி, நுகர்வுக் கலாசாரத்திற்கு மனிதரை அடிமையாக்கிவிட்டது.

பணம் வாழ்வுக்குத் தேவைதான் "இனிமையான இல்லறத்திற்குத் தேவையானது பணமா? பாசமா?" என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், பணம்தான் தேவை என்று பேசியவர், "பொருட்பால் இல்லையென்றால், காமத்துப்பாலும் வாங்கமுடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்கமுடியாது" என்று அடித்துப் பேசினார். கணவனிடம் பணம் இருந்தால்தான் அவன் 'அத்தான்", இல்லையென்றால் அவர் செத்தான்!

இவ்வுலகச் செல்வங்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் புனித பவுல், "உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1கொரி 7:31)

இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும்போது அதிலே மயங்கி விடலாகாது ஒரு பாம்பின் வாயில் ஒரு தவளை. அத்தவளையின் வாயில் ஒரு வண்டு; அந்த வண்டு சிறிது நேரத்திற்கு முன்பு பூவிலிருந்து தேனை எடுத்துத் தன்வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. தான் தவளை வாயிலும், தவளை பாம்பின் வாயிலும் இருப்பதை உணராமல், தனக்கு வரவிருக்கும் பேராபத்தைப் பற்றிச் சற்றும் எண்ணாமல், அந்த வண்டு தன் வாயில் இருக்கும் தேனைச் சுவைத்து மயங்கி இருக்கிறது. அவ்வாறு நாமும் இருப்பது அறிவுடமையாகுமா?

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு ஒரு இரவு மட்டும் தேவைப்பட்டது. ஆனால் எகிப்தை அவர்களது இதயத்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆம், எகிப்து நாட்டின் வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளைப்பூண்டு. இறைச்சி அம்மக்களின் இதயத்தை விட்டு அகலவே இல்லை. ஏனெனில், "வயிறே அவர்கள் தெய்வம்" (பிலி 319) எனவே இவ்வுலகச் செல்வங்களை ஞானத்துடன் பயன்படுத்தி விண்ணக நலன்களைப் பெறவேண்டும். "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24). ஆண்டவரின் இந்த அருள்வாக்கு நமது மனமாற்றத்திற்கு ஓர் அறை கூவல்

ஒவ்வேர் ஆண்டும் நமது நாட்டின் குடியரசு விழா கொண்டாடும் பொழுது நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே மற்றவர்களை விட நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். "இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்" (திமோ 2:2)

இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இலஞ்சராஜ் - ஊழல் ராஜ் என்றும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு சுரண்டல் ராணி - சுருட்டல்ரானி என்றும் ஒரு பெரியவர் பெயர் சூட்டினார். இலஞ்சமும் ஊழலும், சுரண்டலும் சுருட்டலும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து நமது நாட்டையே உலுக்கி, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைகளாக உள்ளன.

நாட்டுத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மனமாற்றம் அடையவேண்டும். அடுத்தத் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுகிறவன் அரசியல்வாதி அடுத்தத் தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவன் தேசீயவாதி, அரசியல் தலைவர்கள் தங்களது கட்சியின் நலனை நாடாது. நாட்டின் நலனை நாட வேண்டும். வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து, அன்பும் சகோதரத்துவமும் தழைத்தோங்க மன்றாடுவோம்.

பாரதப் பூமி பழம்பெரும்பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் - பாரதி

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனமாற்றம், நம்பிக்கை, சீடத்துவம்

நிகழ்வு

பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மிகப்பெரிய நற்செய்திப் பணியாளரான சாது சுந்தர் சிங் சொன்ன நிகழ்வு இது

உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் மனமாற்றம் அடைந்து, ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, திபெத்திற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றான். அங்கிருந்தவர்கள் அவனைத் தங்களுடைய நாட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்தார்கள். அவனோ, “நீங்கள் என்னைத் தடுத்தாலும், நான் என் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்காமல் இருக்கமாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தான். இதனால் அவனை அங்கிருந்தவர்கள் அடித்துத் துன்புறுத்தி, நாட்டை விட்டே துரத்தினார்கள்.

மக்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தி, நாட்டை விட்டே துரத்திவிட்டார்கள் என்பதற்காக அந்த இளைஞன் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருசில ஆண்டுகள் கழித்து அவன் மீண்டுமாகத் திபெத்திற்குச் சென்று, ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்து, பலரையும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்தான். இச்செய்தியை எப்படியோ, முன்பு அவனைத் துன்புறுத்தி, நாட்டைவிட்டே துரத்தியவர்கள் கேள்விப்பட்டார்கள். ‘நாம் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், இவனைக் கொன்றுபோட்டுவிடுவோம்’ என்று முடிவுசெய்துகொண்டு, முதலில் அவனுடைய தோளை உரித்து, மிளகாய்ப்பொடியைத் தடவினார்கள். அப்பொழுது அவன் அலறி ஆர்ப்பாட்டம் செய்யாமல், “ஆண்டவர் இயேசு எனக்குப் புதியதொரு ஆடையைத் தரப்போகிறார். அதனால் நீங்கள் என்னுடைய தோலை நீக்கினாலும் பரவாயில்லை” என்று உறுதியாகச் சொன்னான்.

இதனால் கடுஞ்சீற்றம் அடைந்த அவர்கள், தீச்சூளையை ஏற்பாடு செய்து, அதில் அவனைத் தூக்கிப் போட்டார்கள். அந்த நேரத்திலும் அவன் புன்னகை மாறாமல், ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்துகொண்ட, தன் ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தான் (சாது சுந்தர்சிங் சொன்ன சின்னச் சின்னக் கதைகள் 100 – ஆர். எஸ். ஜேக்கப்)

.

ஒரு காலத்தில் உலகப் போக்கிலான வாழ்ந்து, பின் அதிலிருந்து மனம்மாறி, ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு, அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவருக்காகவே கொல்லப்பட்ட இந்த இளைஞன் இயேசுவின் உண்மையான சீடருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றான். பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் மனமாற்றம் அடைந்து, ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய உண்மையான சீடராக வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனமாற்றம் காலத்தின் கட்டாயம்

மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்து, அவர்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றவர் திருமுழுக்கு யோவான். அவர் ஏரோது மன்னனின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால், அவனால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றார். திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டதும், ஆண்டவர் இயேசு, “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கின்றார். இவ்வாறு இயேசு இறையாட்சிப் பணி தெய்வடைந்து விடாமல் தொடர்கின்றார். அத்தோடு அவர் இறையாட்சிக்காக ஒவ்வொருவரும் மனம்மாறுவது முதன்மையான தேவை என்ற உண்மையை உணர்த்துகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், அசீரியர்களின் தலைநகரான நினிவே நகரில் இறைவாக்கினர் யோனா இறைவாக்கு உரைப்பதையும், அவர் உரைத்த இறைவாக்கைக் கேட்டு அங்கிருந்த மக்கள் மனம்மாறுவதையும் குறித்து வாசிக்கின்றோம். நினிவே நகரில் இருந்தவர்கள் யூதர்கள் கிடையாது; அவர்கள் பிற இனத்து மக்கள். ஆனாலும் அவர்கள் இறைவாக்கினர் யோனா அறிவித்த இறைவார்த்தையைக் கேட்டு மனம்மாறுகின்றார்கள். இதனால் ஆண்டவர் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை. நாம் யூதர்களாக இருந்தாலும், பிற இனத்து மக்களாக இருந்தாலும், மனம்மாறவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய முதன்மையான் செயலாக இருக்கின்றது.

நற்செய்தியை நம்புதல் நல்வாழ்வின் அடுத்த கட்டம்

தீய வழியில் செல்லும் ஒருவர் மனம்மாறுவதோடு அவருடைய வாழ்க்கை நிறைவடைந்து விடுவதில்லை. மாறாக, அவர் நற்செய்தியை அல்லது இயேசுவை நம்பவேண்டும். இது ஒருவர் செய்யவேண்டிய இரண்டாவது செயலாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குகின்றபொழுது, “.....இறையாட்சி நெருங்கி விட்டது. மனம் மாறுங்கள்” என்று சொல்லி நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, “நற்செய்தியை நம்புங்கள்” என்றும் சொல்கின்றார். இப்படி இயேசுவின் நற்செய்தியை, அவரை நம்பியவர்கள்தான் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் ஆவர்.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, சீமோனையும் அவர் சகோதரான அந்திரேயாவையும், பின்னர் யாக்கோபையும் அவர் சகோதரான யோவானையும் தன் பணி செய்ய அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அந்திரேயாவும் யோவானும் இயேசுவை முன்னரே சந்தித்திருந்தார்கள். மேலும் அந்திரேயா வழியாக பேதுரு இயேசுவைச் சந்தித்திருந்தார் (யோவா 1: 35-39) ஆனாலும் அவர்கள் தாங்கள் செய்துவந்த மீன்பிடிக்கும் தொழிலைத் தொடர்ந்து செய்துவந்தார்கள். எப்பொழுது இயேசு அவர்களிடம், “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்று சொன்னாரோ அல்லது அவர்கள் மிகுதியான மீன்பாட்டைக் கண்டார்களோ (லூக் 5: 1-11), அப்பொழுது அவர்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகின்றார்கள். இவ்வாறு அவர்கள் நால்வரும் இயேசுவின்மீது, அவருடைய நற்செய்தியின்மீது நம்பிக்கை கொண்டதால், அடுத்தக் கட்டத்திற்கு நகர்கின்றார்கள்.

இயேசுவைப் பின்தொடர்ந்து சீடத்துவ வாழ்வின் நிறைவு

மனமாற்றம் முதல் நிலை என்றால், இயேசுவின்மீது, அவருடைய நற்செய்தியின்மீது நம்பிக்கை கொள்தல் அடுத்த நிலை என்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்தல் மூன்றாம் நிலை அல்லது சீடத்துவ வாழ்வின் நிறைவு என்று சொல்லலாம்.

முதல் சீடர்கள் நால்வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டதோடு மட்டும் நின்றுவிடாமல், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள். இறுதியில் அவருக்காகத் தங்கள் உயிரையே தருகின்றார்கள். இங்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்தல் என்பதை, நாம் இந்த உலகின்மீது கொண்டிருக்கும் பற்று, சிற்றின்ப நாட்டங்கள் இவற்றின்மீது உள்ள பற்று ஆகியவற்றை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து அவருடைய உண்மையான சீடராய் இருத்தல் என்றும் பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

புனித பவுல் இத்தகையோரு நிலையை அடைந்தார். அதனால்தான் அவரால், “என் ஆண்டவராம் கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்” (பிலி 3: 8) என்று சொல்ல முடிந்தது. எனவே, நாம் இந்த உலகின்மீது உள்ள பற்றுகளை அகற்றி அல்லது மனம்மாற்றம் பெற்று, ஆண்டவரைப் பற்றிக்கொண்டு, அவரைப் பின்தொடர்ந்து அவருடைய உண்மையான சீடர்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘பொருள்கள், நண்பர்கள் மற்றும் பிற பிணைப்புகளிலிருந்து விலகி இருக்கும் தியாக உள்ளம் அழைக்கப்பட்டவர்களுக்குத் தேவை’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், ஆண்டவரின் பணியைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம், இவ்வுலகின்மீது உள்ள பற்றுகளை அகற்றி, ஆண்டவர் ஒருவரைப் பற்றிக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நற்செய்தி - பறைசாற்றுதலும் பதிலிறுத்தலும்

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் வாட்ஸ்ஆப் செயலி புதியதொரு தனியுரிமைக் கொள்கையை அறிவித்தது. அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் செயலி பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவார்கள் என்றும், மேலும் வாட்ஸ்ஆப்பில் பெறப்படும் தரவுகள் ஃபேஸ்புக் தளத்தோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு இரு தரப்பு பதிலிறுப்புகள் தரப்பட்டன. முதல் தரப்பினர், தங்கள் தரவுகளைத் தற்காத்துக் கொள்வதற்காக வாட்ஸ்ஆப் செயலியை விடுத்து, 'சிக்னல்,' மற்றும் 'டெலிகிராம்' போன்ற செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இன்னொரு தரப்பினர், தங்கள் தரவுகளை வைத்து மார்க் என்ன செய்யப் போகிறார்? நம் பயன்பாட்டுக்கு இதுவே எளிதாக இருக்கிறது என்று வாட்ஸ்ஆப் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் பலர் தங்கள் செயலிகளைத் துறப்பதைக் கண்ட வாட்ஸ்ஆப் வேகமாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டு, பயனர்களின் தனியுரிமைக்கு தங்கள் நிறுவனம் எந்தவொரு இடையூறும் விளைவிக்காது என்று அறிவித்தது.

வாட்ஸ்ஆப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி நாம் இன்று வேகமாக நம் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றோம். ஒவ்வொரு செய்தியையும் நாம் பறைசாற்றுகிறோம், ஒவ்வொரு செய்திக்கும் பதிலிறுப்பு செய்கிறோம். நாம் பறைசாற்றுதலும், பதிலிறுப்பு செய்தலும் நமக்கும் அந்த நபர் சார்ந்தவருக்குமே என்பதை உறுதி செய்யக் கருத்தாய் இருக்கிறோம். ஆனால், இன்றைய தரவுகள் (டேட்டா) மைய உலகில் நாம் எதையும் நமக்கென வைத்துக்கொள்ள இயலாது. இன்று நாம் விரும்புகிறோமா அல்லது விரும்பவில்லையோ, நான் என்னை அறியாமல் என் தரவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

சாலையில் நான் நடந்து சென்றால் என் உருவம் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் தரவுகளாகப் பதிகிறது. நான் மதுரைக்கு வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பீட்ஸா ஆர்டர் செய்வதைக் கண்காணிக்கின்ற ஸ்விக்கி நிறுவனம், தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று, 'நீங்கள் இன்று மதுரை செல்வீர்களா? கார் வேண்டுமா? ஓட்டுநர் வேண்டுமா?' என்ற ஒரு கேள்வியோடு எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அறிவிக்கிறது. ஆக, நான் நான்கு வாரம் தொடர்ந்து மதுரைக்கு வருகிறேன் என்பதை அது பதிவு செய்து, அதில் உள்ள செயற்கை நுண்ணறிவு எனக்குத் தேவையானதைப் பரிந்துரை செய்ய முன்வருகிறது. யூட்யூப், வலைதளம், தேடுபொறி என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு கால் பரப்பிப் படுத்துக்கிடக்கிறது.

ஒரு பக்கம், நான் செய்திகளைப் பரிமாறுகிறேன். இன்னொரு பக்கம் நானே செய்தியாகப் பின்பற்றப்படுகிறேன். மேலும், செய்திகள் என்னைச் சுற்றிப் பரவிக் கிடக்கின்றன.

செய்திகளைப் பறைசாற்றுதலும் செய்திகளுக்குப் பதிலிறுப்பு செய்தலும் இன்றியமையாத ஒன்றாக இன்று ஆகிவிட்டன.

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் நற்செய்தி பறைசாற்றவும் பதிலிறுக்கவும்படுவதை நாம் வாசிக்கின்றோம்.

'யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார்' என்று இயேசுவின் பணித் தொடக்கத்தை அறிமுகம் செய்கின்றார் மாற்கு. மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலின் தொடக்கத்தில், 'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி' (1:1) என்று சொல்கின்றார். ஆனால், இங்கே, 'கடவுளின் நற்செய்தி' என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார். அது என்ன கடவுளின் நற்செய்தி? (அ) இயேசுவே கடவுளின் நற்செய்தி, (ஆ) இயேசு மொழிவதே கடவுளின் நற்செய்தி, மற்றும் (இ) இயேசு வழியாக கடவுள் செயலாற்றும் மீட்புத் திட்டமே கடவுளின் நற்செய்தி என்று மூன்று நிலைகளில் நாம் இந்தச் சொல்லாட்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆக, இயேசுவின் நற்செய்தியின் மையமாகக் கடவுள் இருக்கின்றார்.

முதலில் நற்செய்தியைப் பொதுவாக எல்லா மக்களுக்கும் பறைசாற்றுகின்றார் இயேசு. அங்கே யாரும் பதிலிறுப்பு செய்வதாக மாற்கு குறிப்பிடவில்லை.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'என் பின்னே வாருங்கள்! நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்!' என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், அவருடைய முதற்சீடர்கள் - சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான் - அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களின் பதிலிறுப்பு இரு நிலைகளில் நடக்கிறது: ஒன்று, தங்கள் வலைகளை விட்டுவிடுகின்றனர். இரண்டு, தங்கள் தந்தை யை வேலையாள்களோடு விட்டுவிடுகின்றனர்.

இயேசுவின் செய்தி அவர்கள் வாழ்வில் உடனடியான பதிலிறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வு மூன்று நிலைகளில் நடக்கிறது: முதலில், அவர்கள் இயேசுவின் செய்தியை தாங்கள் இருக்கும் இடத்தில், தங்கள் அன்றாடப் பணியின் நடுவில் கேட்கின்றனர். இரண்டு, அவர்கள் இயேசுவின் செய்தியை முழுமையாக நம்புகிறார்கள். மூன்று, அவர்கள் தங்கள் பாதுகாப்பு வளையங்களான வலை மற்றும் உறவினர், பணியாளர்களை விட்டுவிடத் துணிகிறார்கள்.

முதல் வாசகத்தில், யோனா நினிவே நகரில் நற்செய்தி அறிவித்த நிகழ்வை வாசிக்கின்றோம். நினிவே நகரம் அசீரிய நாட்டின் தலைநகரம். அசீரியர்கள் கிமு 722இல் படையெடுத்து வடக்கு இஸ்ரயேலை அடிமைப்படுத்துகின்றனர். அது முதல், அசீரியர்கள்மேல் தீராத பகையும் கோபமும் இஸ்ரயேல் மக்களுக்கு உண்டாகிறது. இந்நிலையில் அசீரியாவை அழிக்க நினைக்கின்ற கடவுள் யோனாவை அனுப்பி அங்கே மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார். தன் சமகாலத்து இஸ்ரயேல் மக்களைப் போல யோனாவும், நினிவே எப்படியும் அழிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டவருடைய திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்து, ஆண்டவரின் திருமுன்னிலையிலிருந்து தப்பி ஓடுகின்றார். ஆனால், கப்பலிலிலிருந்து தூக்கியெறியப்பட்ட அவரை வியத்தகு முறையில் மீன் ஒன்றின் வழியாகக் காப்பாற்றுகின்றார் கடவுள். இரண்டாம் முறையாக ஆண்டவராகிய கடவுளின் வாக்கு அருளப்பட்டவுடன், ஆண்டவரின் கட்டளைப்படி நினிவேக்குச் செல்கின்றார் யோனா. யோனா என்றால் புறா என்பது பொருள். மூன்று நாள்கள் கடக்க வேண்டிய தூரத்தை ஒரே நாளில் கடந்து ஓட்டமும் நடையுமாக நற்செய்தியை அறிவிக்கின்றார். ஆனால், என்ன விந்தை! நினிவே மக்கள் உடனடியாகக் கடவுளின் செய்தியை நம்பி நோன்பிருக்கின்றனர்.

பெரியவர்கள் முதல், வலது கை எது இடது கை எது என அறியாத குழந்தைகள் வரை அனைவரும் நோன்பிருக்கின்றனர். ஆண்டவரும் தன் மனத்தை மாற்றிக்கொள்கின்றார்.

இங்கே, ஆண்டவராகிய கடவுளின் செய்தி முதலில் யோனாவுக்குப் பறைசாற்றப்படுகின்றது. முதலில் அதற்குப் பதிலிறுக்க மறுக்கும் அவர் இரண்டாம் முறை பதிலிறுக்கின்றார். ஆனால், நினிவே நகர மக்கள், யோனா வழியாகக் கடவுள் அறிவித்த செய்திக்கு உடனே பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பரத்தைமை என்ற செயல் பரவிக்கிடந்த கொரிந்து நகரத் திருஅவையினரிடம் மணத்துறவு பற்றி உரையாடுகின்ற பவுல், இந்த உலகின் நிலையாத்தன்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தாங்கள் பெற்ற நம்பிக்கைக்கு ஏற்ற பதிலிறுப்பைத் தங்கள் வாழ்வில் காட்ட அழைப்பு விடுக்கின்றார்.

இவ்வாறாக,
முதல் வாசகத்தில், யோனா கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார். நினிவே மக்கள் தங்கள் மனமாற்றத்தின் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பவுல், கடவுளின் நம்பிக்கையினால் உந்தப்படும் அறநெறி வாழ்க்கைமுறையைச் சுட்டிக்காட்டி, அதற்கேற்ற பதிலிறுப்பைக் காட்ட கொரிந்து நகர மக்களை அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுளின் செய்தியைப் பறைசாற்றுகின்றார். முதற்சீடர்கள் நால்வர் அவரைப் பின்பற்றுவதன் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

நற்செய்தியைப் பறைசாற்றுதலும், நற்செய்திக்குப் பதிலிறுத்தலும் நம் வாழ்வில் எப்படி நடைபெற வேண்டும்?

(அ) நற்செய்தியைப் பறைசாற்றுதல்

இன்று நாம் பல தளங்களில் நற்செய்தியைப் பறைசாற்றுகிறோம். பல்வேறு ஊடகங்கள் மற்றும் செயலிகள் நற்செய்திப் பறைசாற்றுதலை எளிமையாக்கி உள்ளன. ஆனால், பல நேரங்களில் மேற்காணும் பறைசாற்றுதல்கள் கடவுள் அல்ல, மாறாக, நாமே முதன்மைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு வருகிறது. நான் கொடுத்த செய்தியை எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் விரும்பினார்கள், எத்தனை பேர் பகிர்ந்துகொண்டார்கள், எத்தனை பேர் பாராட்டினார்கள் என்று நம் உள்ளத்தில் எழும் தேடல் சொல்வது என்ன? பறைசாற்றப்படுவது கடவுள் அல்ல! பறைசாற்றுபவர்தான்! யோனா முதலில் கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்ற மறுக்கக் காரணம் அவருடைய முற்சார்பு எண்ணமும், தன்மையப்படுத்தலும்தான். தன்னையும், தன் சார்ந்த இனத்தின் விருப்பு வெறுப்புகளையும் உள்வாங்கிய யோனா, அதன் பின்புலத்தில் கடவுளை அறிவிக்க மறுக்கின்றார்.

இன்று நற்செய்தியைப் பறைசாற்ற மூன்று தடைகள் இருக்கின்றன என்று நாம் சொல்ல முடியும்:

ஒன்று, தயக்கம். அதாவது, 'நான் எப்படி இதைச் செய்வது?' என்ற தயக்கம். இத்தயக்கத்தோடு வருவது, 'என்னால் இயலாது' என்ற எதிர்மறை உணர்வு.

இரண்டு, முற்சார்பு எண்ணம். 'நற்செய்தி சொல்லி என்ன ஆகப் போகிறது? இந்த உலகம் அப்படியே தான் இருக்கும். யாரும் மாறப்போவது இல்லை. எதற்கு நேரத்தை மற்றும் ஆற்றலை விரயம் செய்ய வேண்டும்?' என்ற கேள்விகளோடு நாம் பல நேரங்களில் நம் முற்சார்பு எண்ணங்களில் உறைந்துவிடுகின்றோம்.

மூன்று, தன்மையப் போக்கு. யோனாவைப் போல கடவுளின் நற்செய்தியையும் நம் செய்தியையும் ஒன்று எனப் பல நேரங்களில் குழப்பிக் கொள்கின்றோம்.

(ஆ) நற்செய்திக்குப் பதிலிறுத்தல் - எப்படி?

ஒன்று, தயார்நிலை. நினிவே மக்கள் உடனடியாகத் தவ உடை அணிந்து நோன்பிருக்கின்றனர். முதற்சீடர்கள் உடனயாக தங்கள் வலைகளையும் படகுகளையும் தந்தையையும் பணியாளர்களையும் விட்டுவிட்டு வருகின்றனர். 'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும்!' என்பது ஜென் மொழி. தயாராக இருப்பவர்கள் மட்டுமே பதிலிறுப்பு செய்ய முடியும்.

இரண்டு, வாழ்வின் நிலையாமை. இரண்டாம் வாசகத்தில் இந்த உலக வாழ்வின் நிலையாமை பற்றி எடுத்துச் சொல்கின்றார் பவுல். எதுவும் நிலையற்றதாக இருக்கும் இந்த உலகில், இந்த நொடியில் உடனடியாகக் கடவுளைப் பற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். நாளை என்பது உறுதியாக இல்லாத நிலையில் இன்றே பதிலிறுத்தல் நலம்.

மூன்று, பாதை மாற்றம். ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து இன்னொரு விளைவை எதிர்பார்த்தல் நியாயமற்றது. மீன்களைப் பிடித்துக் கொண்டே மனிதர்களைப் பிடிக்க இயலாது. பரத்தைமையில் இருந்துகொண்டே அறநெறியோடு வாழ இயலாது. பாவ நிலையில் இருந்துகொண்டே கடவுளுக்கு அருகில் வர முடியாது. பின்னையதை அடைய முன்னையதை விட வேண்டும்.

இறுதியாக,

இன்று மனிதச் செய்திகளைப் பறைசாற்றவும், அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்யவும், அவற்றில் நம் தனியுரிமை காக்கப்படவும் முயற்சிகள் எடுக்கும் நாம்,

கடவுளின் நற்செய்தி நம் வாழ்வில் பறைசாற்றப்படவும், அச்செய்தி நம்மை நோக்கி வரும்போது அதற்கேற்ற பதிலிறுப்பு செய்யவும் முயற்சி எடுத்தல் நலம்.

எனவே, 'உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்' (காண். திபா 25) என்று அவரிடம் வேண்டும். அவரின் பாதைகளை அறிதல் நற்செய்தி. அந்தப் பாதையில் வழிநடத்தல் நம் பதிலிறுப்பே.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் "

ஒரு ஊரில் மதுப்பிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாளைக்கு குறைந்தது 200 ரூபாய்க்கு மது வாங்கிக் குடிப்பார். இதனால் இவரின் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானது. இவரின் மனைவியும் இரு மகன்களும் தங்கள் அன்றாட வாழ்விற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள மிகவும் துன்பப் பட்டனர். இவரின் மகன்கள் இருவரும் வீட்டு வறுமையின் காரணமாக ஒரு வேளை உண்ண கூட போதிய உணவு இல்லாமல் தவித்தனர். ஒரு முறை இந்தக் இரு குழந்தைகளின் தந்தை மது அருந்திவிட்டு சாலையில் நடந்து வந்த பொழுது தன்னுடைய இரு குழந்தைகளும் பசியைப் போக்க உணவகத்தில் வெளியிலுள்ள எச்சில் இலையை பொறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதை கண்டதும் அந்த மதுப்பிரியர் தன் குழந்தைகளின் பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். தன்னால் தான் இத்தகைய அவல நிலைக்கு தன் குழந்தைகள் சென்றுவிட்டனர் என்பதை அறிந்து குடியை விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் பிறகு புதிய மனிதனாக மனமாற்றம் அடைந்து நன்றாக வேலைக்கு சென்று தன் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.

இன்றைய நற்செய்தி மூன்று முக்கியமான வார்த்தைகளைச் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது. முதலாவதாக மனமாற்றம், இரண்டாவதாக நற்செய்தி மற்றும் மூன்றாவதாக நம்பிக்கை. பாவத்திலே பாவத்தோடு பாவியாக இருந்தவன், தன் பாவத்தை வெறுக்கின்ற நிலைதான் மனமாற்றம். இப்படிப்பட்ட மனமாற்றத்தை பெற்று நற்செய்தியை நம்பிடஇன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

கிறிஸ்தவ வாழ்வில் மனமாற்றம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் ஏழு அருள்சாதனங்களில் ஒப்புரவு அருட்சாதனம் மிக முக்கியப் பங்கு வகிப்பதற்கு காரணம் மனமாற்றத்தின் வழியாக இறையாட்சியின், மீட்பின் கனியை சுவைக்க வேண்டும் என்பதற்காகவே. மனமாற்றம் என்பது நம் உள்ளத்திலிருந்து வர வேண்டும். சக்கேயு மனமாற்றம் அடைந்தார். அது அவருடைய உள்ளத்தின் மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே தான் அவரால் தான் குறுக்கு வழியில் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் நான்கு மடங்காகத் திருப்பித் தர முன்வர முடிந்தது. இயேசுவோடு சிலுவையில் தொங்கிய நல்ல கள்வர் மனமாற்றம் பெற்று விண்ணக வீட்டை பரிசாக பெற்றார். இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் நினிவே நகர மக்கள் மனமாற்றத்தால் கடவுளின் தண்டனையிலிருந்து தப்பித்தனர். ஏன் கடவுளே அவர்களுடைய மனமாற்றத்தைக் கண்டு தன்னுடைய மனதை தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாற்றிக்கொண்டார். கடவுளின் வார்த்தையை உள்வாங்கி மனமாறும் பொழுது நமக்கு நிச்சயமாக புது வாழ்வு உண்டு என்ற சிந்தனையை கொடுப்பதாக இவ்வார்த்தை அமைகின்றது. மனமாற்றம் அடைகின்ற பொழுது நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் காண முடியும்.

இரண்டாவதாக நாம் சிந்திக்க இருக்கும் வார்த்தை "நற்செய்தி"

நற்செய்தி என்பது நல்ல செய்தி. அதாவது சொல்பவருக்கும் கேட்பவருக்கும் நல்லுணர்வுகளை, மகிழ்ச்சியை, அமைதியைத் தரக்கூடிய செய்தி.துன்ப துயர வாழ்க்கையில் உழல்பவர்களைத் தூக்கிவிடும் செய்தி. இங்கு நாம் நற்செய்தியாகக் காண்பது இயேசுவைத்தான். ஆம் இயேசுவே உண்மையான நற்செய்தி. உடன்படிக்கை அன்பை மறந்து கடவுளைவிட்டுப் பிரிந்த மக்களுக்கு கடவுள் மன்னிப்பு வழங்கி தன்னோடு இணைத்துக்கொள்ள, மீண்டும் அன்பு செய்ய ஆவலாய் இருக்கிறார் என்ற செய்தியை தன் வாழ்வாலும் போதனையாலும் வழங்கிய இயேசுவே நற்செய்தியாய்த் திகழ்கிறார். இயேசுவைப் போலவே நாமும் நற்செய்தியை வழங்குபவர்களாக மட்டுமல்லாமல் பிறருக்கு நற்செய்தியாகவே திகழ அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய உடனிருப்பு நம்மைச் சார்ந்தர்களுக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லுணர்வுகளையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் தருமாயின் நாமும் நற்செய்தியே.

மூன்றாவதாக நம் சிந்தனைக்கு நம்பிக்கை என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். "நம்பிக்கை"என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை நடைபெறும் என்ற திடமான மனநிலை. கடவுள் நம்மை மன்னித்து நமக்குப் புதுவாழ்வு தருவார் என்ற எதிர்நோக்கு. என் கடவுள் எனக்குத் தேவையானவற்றை தகுந்த சமயத்தில் தருவார். என்னைச் சரியான பாதையில் நடத்துவார் என்ற உறுதியான உளப்பாங்கு. நல்வாழ்வின் அடையாளமாய் விளங்கும் இயேசுவை ஏற்று, துன்பத்திலும் மனந்தளராமல் அவர் வழி நடப்பதே திடமான நம்பிக்கை.

சுருக்கமாக ஒரே வரியில் கூறினால் பாவநிலையிலிருந்து மனமாற்றம் பெற்று, கடவுள் தரும் புதுவாழ்வின் அடையாளமாய்த் திகழும் இயேசு என்னும் நற்செய்தியை நம்பி அவர் வழி நடக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இச்சிந்தனைகளை நம் உள்ளத்தில் இறுத்தி, இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல உலகத்தைச் சாராதவர்களாய் வாழ்ந்து உண்மையான மனமாற்றம் பெற்று, நற்செய்தியாம் இயேசுவை நம்பி அவர் வழி வாழ்ந்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.

மேலும் மனம் மாறி நற்செய்தியை நம்பிய பிறகு அந்த நற்செய்தி பிறருக்கு அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். " உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் " என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கிணங்க நற்செய்தி பிறருக்கு அறிவித்துஇறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகரவும் நம்மையே முழுமையாக இறைவனின் கரங்களில் ஒப்படைப்போம். குயவனின் கையிலுள்ள மண் எவ்வாறு அழகிய பானையாக உருமாறுகின்றதோ, அதேபோல நம்மையே முழுமையாக இறைவனின் பாதத்தில் ஒப்படைத்து அடைந்த மனமாற்ற வாழ்வில் நிலைத்திருந்து நம்பிய நற்செய்தியை பிறகு அறிவித்து இறைக்கருவியாக மாறிட தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

புதுவாழ்வு அருளும் இறைவா! எங்கள் பழைய பாவ நிலையை விட்டகன்று, மனம் மாறவும், உமதன்பின் நற்செய்தியான இயேசுவை நம்பி வாழ்ந்து நாங்களும் நற்செய்தியாய்த் திகழவும் அருள் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தீயவைகளிலிருந்து விடுபடுவோமா?

இறைவன் படைத்த இவ்வுலகம் அருமையானது. அழகிய சோலைகள், காடுகள், வனவிலங்குகள், தோட்டங்கள், கனிதரும் மரங்கள், கால் நடைகள் என அனைத்தையும் படைத்து, நல்லதெனக் கண்ட இறைவன் அதன் மணிமகுடமாய் மனிதர்களைப் படைத்து அதன் பாதுகாப்பாளர்களாக இருத்தினார். ஆனால் மனிதன் தன் பணியின் தன்மை அறியாமல் செய்த தவறினால் இறைவன் மானிடர்களைத் தண்டித்தார். இதனால் கோபம் கொண்ட மனிதன் இன்றும் தொடர்ந்து இந்த உலகுக்கும் தன்னோடு வாழும் சக மனிதர்களுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றான். தீங்கு இழைத்து வருகின்றான். இந்த தீங்கின் தொடர்ச்சியை பல நிலைகளில் நாம் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த தொடர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? மனிதனிடம் குற்றவுணர்ச்சியே இல்லாமல் போனதால் தான். புனித திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் அவர்களும் இதையே வலியுறுத்துகிறார். எவனொரு தனது செயல் தவறு என எண்ணுகிறானோ அவன் அச்செயலைத் திருத்திக் கொள்கிறான். ஆனால் இங்கு தவறு, தனது தவறை நியாயப்படுத்துவதில்தான் உள்ளது. இதன் நீட்சி பிற தவறுகளில் பார்க்கிறோம்.

ஆனால் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம் தவறின் தன்மைமையை அறிந்து அதிலிருந்து விலகி இறைவனின் பாதையை பின் தொடர அழைப்பு விடுக்கிறது. ஏனெனில் கடவுள் இரக்கமுள்ளவர். இந்த இரக்கத்தை நாம் சுவைக்க வேண்டுமெனில் நம் தீய வழிகளிலிருந்து நாம் விலகினால் மட்டுமே சுவைத்து பருக முடியும். இன்றைய முதல் வாசகத்தில் புறவினத்தார்களான அசீரியர்கள் மீது இறைவன் இரக்கம் கொள்கிறார். இஸராயேல் நாட்டுடன் பலமுறை போர்தொடுத்து அதை சூறையாடிய நாடு அசீரியா. அந்த மக்களையும் மீட்க இறைவன் யோனா வழியாக அழைப்பு கொடுக்கிறார். இந்த அழைப்பினை ஏற்ற மக்கள் நாற்பது நாட்கள் அன்னம் தண்ணி பருகாமல் சாக்கு உடை உடுத்தி சாம்பலில் இருந்து கடவுளை கூவி அழைத்தனர். உண்மையிலே தங்கள் குற்றத்தை உணர்ந்தவர்களாய் குற்றவுணர்வு கொண்டவர்களாய் தங்கள் வன்முறைகள், தீய வழிகளின் தன்மையை அறிந்தவர்களாய் அவற்றிலிருந்து விலகி கடவுளை நோக்கி தங்கள் குரலை எழுப்புகிறார்கள். இதுதான் உண்மையான மனமாற்றம் என இஸ்ராயேல் சமூகத்திற்கு எடுத்துக் காட்டுகிறார்கள். கடுந்தவம் புரிவதும் கர்த்தரை நோக்கி கதறி அழுவதும் எளிது. ஆனால் உண்மையான மனமாற்றம் இந்த வெளிவேடத்தில் அல்ல் வன்முறைகளையும், தீச்செயல்களையும் விட்டொழிப்பதில்தான் அடங்கியுள்ளது. இதுவே உண்மையான மனமாற்றம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விடுக்கும் அழைப்பு இதுவே. காலம் நிறைவேறிவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் என்பதே. ஆம், யோனா அறிவித்த அதே அறிவிப்பைதான் இன்று இறைவனும் வழங்குகிறார். நமது தீய வழிகளிலிருந்து விடுபட்டால் தான் நாம் இறைவனின் சீடர்களாக மாற முடியும் என்பதை உணர்த்துகிறது. சீடர்களை இயேசு அழைத்தவுடன் தங்கள் படகுகளை விட்டுச் சென்றார்கள் என்பது நமக்கு உணர்த்துவது அவர்களது பழைய வாழ்வை விடுவதே. கடவுளுக்காக தன் வாழ்வை மாற்றிக் கொள்பவர் நிச்சயம் தக்க பிரதிபலனை அடைவார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் இறையாட்சி என்பது எல்லோருக்காமானது என்றாலும், தங்கள் தீய வழிகளிருந்து தங்களை விடுவித்துக் கொள்பவர்களுக்கே முதலிடம் என்பதை இயேவின் போதனைகள் நமக்கு உணர்த்துகிறது. இயேசுவின் இறையாட்சி என்பதில் நாம் நுழைய ஒரே ஒரு தகுதி தேவை. அது நமது தீய வழிகளினின்று வெளிவருவதே. ஆம், நீதிமான்கள் பாவிகள் எனயிருந்தாலும், பாவிகளுக்கே முதலிடம். ஏனெனில் மனுமகன் நீதிமான்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தார். காரணம், தியவர்களும் நல்வழிக்கு வரவேண்டும். என்பதே. இதைத்தான் எசேக்கியேல் இறைவாக்கினர் வெளிப்படுத்துகிறார், பொல்லாரின் சாவையா நான் விரும்புகின்றேன்? அவர் தம் வழிகளினின்று திருந்தி வாழ வேண்டும் என்பது என் விருப்பம் (எசே 18:23). தீயோர் சாக வேண்டுமென்பது என் விருப்பம் அன்று. அத்தீயோர் தம் வழிகளில் இருந்து திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் (எசே 33:11). அப்படியென்றால் இறைவன் விரும்புவதை அடைய நாம் முதலில் நம்மிடம் பாவவுணர்வு இருக்க வேண்டும். குற்றவுணர்வு இருந்தால் அது நிச்சயம் நமது குற்றத்தை கூறுபோட்டுப் பார்த்து நம்மை அதை மீண்டும் செய்யவிடமால் தடுக்கும்.

அப்படியெனில் இயேசுவின் இறையாட்சியில் பங்கெடுக்க சில சின்ன செயல்களை நாம் பயிற்சி செய்தால் நிச்சயம் நமது தீய வழிகளிலிருந்து தொடர்ந்து விடுபடலாம்.
நல்ல மனிதர்களாக வாழலாம். அதனால் இறையாட்சியில் பங்கெடுக்கலாம்.
மாதமொரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கெடுக்கலாமே.

  1. இதை நமது கடமையென நினைத்து பங்கெடுத்து, ஒப்புரவு அருட்சாதானத்தில் நாம் அறிக்கையிடும் பாவங்களை குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு அதிலிருந்த விலகினால் அதுவே தொடர் பயிற்சியாக மாறும்போது நாம் நமது தீய வழிகளிலிருந்து வெளி வர முடியுமே!
  2. குறைந்தபட்சம் ஞாயிறு திருப்பலியிலாவது முழுமையாக பங்கெடுக்கலாமே! ஞாயிறுத் திருப்பலி என்பது இறைவனுக்கு நன்றி சொல்லும் நாள். நாம் இறைவனின் அருளைப் பெற்றுள்ளோம். தவறுகள் எவ்வளவுதான் செய்தாலும் இறைவனின் அருட்கரம் நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறதே அதை நினைத்து நன்றி சொல்லலாமே. அது நம்மை மாற்ற நம்மை திறந்து கொடுக்கலாமே!
  3. எதை செய்தாலும் உணர்ந்து செய்யலாமே! ஆம். பெரும்பாலும் தவறுகள் உருவாகக் காரணம் என்ன? நாம் செய்வதை ஏனோ தானோ எனச் செய்வதே. அப்படியெனில் செய்வதை உணர்ந்து, என்ன செய்கிறோம் என அறிந்து செய்தால் நிச்சயம் நாம் செய்பவற்றில் தெளிவு கிடைக்கும். தீயவைகளிலிந்து விழாமல் தடுக்கலாம். இறையரசில் பங்கு பெறலாம்.

இறைவனின் அருள் இவ்வுலகில் நம்மீது பொங்கி வருகிறது. ஆனால் நமது பாவ நிலைகள் அதனை சாலையில் உள்ள வேகத் தடைகளைப் போல கடவுளின் அருளைத் தடுப்பவைகளாக உள்ளன. இறைவனின் அருளைப் பெற நமது தீய நிலைகளிலிருந்து விடுதலை பெறுவோம். இறைவனின் அரசில் நமது இருத்தலை பதிவு செய்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser