மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் திருக்காட்சி விழா
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60:1-6 | எபேசியர் 3: 2-3a, 5-6 | மத்தேயு 2:1-12

ser

ஒரு பாலைவனச் சோலை. அங்கே ஓர் ஒட்டகக் கூட்டம். அந்தக் கூட்டத்திலிருந்த எந்த ஒட்டகத்திற்கும் உண்ண உணவிற்கோ , குடிக்கத் தண்ணீருக்கோ குறைவில்லை. ஆகவே அந்த ஒட்டகங்களில் ஒன்றுகூட பூமியிலிருந்து தனது கண்களைத் திருப்பி வானத்தைப் பார்க்கவில்லை.

ஒரு நாள் ஓர் ஒட்டகம் அண்ணாந்து பார்த்துவிட்டது. அதன் கண்களை அதனால் நம்ப முடியவில்லை ! ஒரு வால் நட்சத்திரம் வானத்திலே நகர்ந்து கொண்டிருந்தது. அதுவரை உணவிலும், தண்ணீ ரிலும் அதற்குக் கிடைக்காத ஏதோ ஓர் இனம் புரியாத சுகம், மகிழ்ச்சி அதன் மனதிற்குள் புகுந்தது.

தான் கண்டதை அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களிடம் கூறியது. அவற்றில் சில அந்த ஒட்டகம் சொன்னதைக் கேட்கவேயில்லை.
எல்லா வசதிகளும் இங்கேயிருக்கும் போது ஏன் நட்சத்திரத்தை வந்து பார்க்கச் சொல்லுகிறாய்? அதனால் நமக்கு என்ன பயன் விளையப்போகிறது என்று சில கூறிவிட்டன!

ஆனால் நட்சத்திரத்தைக் கண்ட ஒட்டகம் நட்சத்திரத்தின் பின்னால் சென்றது. வழியில் எத்தனையோ சோதனைகளும், வேதனைகளும்! ஆயினும் அது பயணத்தைத் தொடர்ந்தது. இறுதியாக அந்த நட்சத்திரம் இயேசு பிறந்த குடிலுக்கு மேல் போய் நின்றது.

ஒட்டகம் அதுவரை காணாத காட்சியைக் கண்டதால் அடையாத மகிழ்ச்சியை அடைந்தது.

வந்தேன், பார்த்தேன், இரசித்தேன்! எங்கும் தேன்! தேன்! தேன்! இல்லை, இல்லை தேனைவிட இனிமையான இயேசுவைக் கண்டேன். கண்டதில் நான் அனுபவித்த சுகத்தை இதுவரை நான் அனுபவித்ததேயில்லை என்றது.

இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? நாம் ஒரு சுகத்தைத் தியாகம் செய்யும் போதுதான் இன்னொரு சுகத்தை அனுபவிக்க முடியும்.

கதையிலே வந்த ஒட்டகம், தான் வாழ்ந்த சோலை வாழ்வை விட்டு விட்டுப் புதியதோர் பயணத்தைத் தொடர்ந்ததினால் தான் புதிய அனுபவம் ஒன்றை அனுபவிக்க முடிந்தது!

இன்று நாம் விழாக் கொண்டாடும் மூன்று ஞானிகளும் அவர்களுடைய நாட்டை விட்டு வெளியில் புறப்படாமல் இருந்திருந்தால், குழந்தை இயேசுவைத் தரிசித்திருக்க மாட்டார்கள் !

கொலம்பஸ் ஐரோப்பா கண்டத்தை விட்டுப் புறப்படாமல் இருந்திருந்தால் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருக்க மாட்டார்!
திருமணம் நடக்கிறதே அப்போது பெண் தாய்வீட்டைவிட்டு கணவன் வீட்டிற்குச் செல்கின்றாள். தனக்குப் பிரியமானவர்களாக அந்த நாள் வரை அவள் கருதிய அவளுடைய அப்பா, அம்மா, அக்காள், அண்ணன், தங்கை, தம்பி, உற்றார், உறவினர் எல்லாரையும் விட்டு கணவன் வீட்டுக்குப் புறப்படுகிறாள்!

ஏன் இயற்கையைப் பாருங்கள் ! மா மரத்தை எடுத்துக் கொள்வோம்! அது பூக்களை சிந்தும் போதுதான் - அங்கே பிஞ்சுகள் பிறக்கின்றன!

ஆம். ஒரு பிரிவிலிருந்துதான் மற்றொரு வரவு பிறக்கிறது! இதனால் தான் உறவு என்று ஒன்று இருந்தால் அங்கே பிரிவு என்று ஒன்று இருக்கும் என பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்!

நமது ஆன்மீக வாழ்வைப் பொறுத்த வரையில், நாம் இயேசுவைக் காண விரும்பினால் சில பிரிவுகளை மேற்கொள்ள வேண்டும்!

எப்படி மூன்று ஞானிகள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு விட்டு இயேசு இருக்கும் இடத்தை நோக்கிப் பயணம் செய்தார்களோ அதேபோல நாம், நாம் வாழும் இடங்களை விட்டு விட்டு இயேசு வாழ்கின்ற இடத்தை நோக்கிப் பயணம் செல்ல வேண்டும்.

அன்று மாட்டுத் தொழுவத்திலே பிரசன்னமாயிருந்த இயேசு இன்று எங்கே பிரசன்னமாயிருக்கிறார்?

அவரே சொல்லியிருக்கிறார்! எங்கே இரண்டு மூன்று பேர் சமாதான உள்ளத்தோடு கூடியிருக்கிறார்களோ அவர்கள் நடுவே நானிருக்கிறேன். ஆகவே சமாதானத்தைத் தேடி நாம் செல்ல வேண்டும்! (மத். 18:20).

சின்னஞ்சிறிய ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்தபோதெல்லாம் அதை எனக்கே செய்தீர்கள். ஆகவே பாதுகாப்புத் தேவைப்படும் அனைவரையும் தேடிச் செல்ல வேண்டும்! (மத். 25:40).
ஆலயத்தில் இறைவன் நற்கருணை உருவிலே பிரசன்னமாயிருக்கிறார்! அவரைத் தரிசிக்க நாம் நமது வீட்டை விட்டுப் பிரிய வேண்டும்.

ஆம். நாம் பிரிவதற்குத் தயாராக இருந்தால், இருக்கும் இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தால், நாம் நமது வாழ்க்கையில் பொருளாதார வாழ்க்கையாக இருந்தாலும் சரி , அருளாதார வாழ்க்கையாக இருந்தாலும் சரி முன்னேறுவது உறுதி.

குறிப்பாக நமது சொந்தப் பொருளாக, நமது உரிமைப் பொருளாக நாம் கருதும் பாவங்களைவிட்டு, புனிதப் பயணத்தை இந்தப் புத்தாண்டிலே மேற்கொள்வோம். அப்போது மூன்று ஞானிகளுக்குக் காட்சி தந்த அதே இயேசு நமக்கும், நமது மனத்திற்குள்ளும் காட்சி அளிப்பார்!

அந்தக் காட்சியால் நமது இதயத்திற்குள் மகிழ்ச்சி பிறக்கும். அகம் மலர முகமும் மலரும். அகமும், புறமும் மலர நமது வாழ்வும் மலரும்.

ser ser

நாம் திருக்காட்சியாக மாறுவோம்.

ஹென்றி வாண் டைக் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கதை இதோ! இயேசுவை மூன்று ஞானிகள் அல்ல, நான்கு ஞானிகள் தேடிச்சென்றார்கள். நான்கு பேரும் திரளான செல்வத்தை ஏந்திச்சென்றார்கள் (முதல் வாசகம்). அவர்களுடைய பைகளிலும், கைகளிலும் பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இருந்தன (நற்செய்தி). அவர்கள் கிழக்கிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்திருந்த - இயேசுவைத் தேடிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பாதையிலே ஏழைகளும் இருந்தார்கள், பணக்காரர்களும் இருந்தார்கள்!

பணக்கார ஞானிகளைப் பார்த்ததும் ஏழைகளின் இதயத்திலே ஏக்கங்கள். சிலர் உண்ண உணவு கேட்டார்கள்; சிலர் உடுக்க உடை கேட்டார்கள் : சிலர் இருக்க இடம் கேட்டார்கள்!

முன்னே சென்ற மூன்று ஞானிகளும் எந்த ஏழையின் கூக்குரலுக்கும் செவிமடுக்கவில்லை! அவர்கள் இதயத்தில் நிரம்பியிருந்ததெல்லாம் இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த ஆசை. கவனத்தை வேறுபக்கம் திருப்பினால் விண்மீனின் வழிகாட்டுதலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம்!

நான்காவது ஞானி - அவர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் மனம் படைத்தவர். தன்னிடம் பேச விரும்பிய ஏழைகளோடு பேசினார்; இல்லை என்று சொன்னவருக்கு இல்லை என்று சொல்லாது தன்னிடம் இருந்ததை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார். மற்ற மூன்று ஞானிகளும் அவருக்காகக் காத்திருக்க விரும்பவில்லை! விண்மீன் பின்னால் சென்றுவிட்டார்கள்.

வாரி வழங்கிய வள்ளலான நான்காவது ஞானி 33 ஆண்டுகள் இயேசுவைத் தேடி அலைந்தார். இறுதியாக சிலுவையை ஏந்திச் சென்ற இயேசுவை அவர் சந்திக்கின்றார். இயேசுவின் நிலைகண்டு கண்ணீர் சிந்துகின்றார். ஐயோ, உமக்கு இந்த நேரத்தில் கொடுக்க ஒன்றுமேயில்லையே என்கின்றார். இயேசுவோ அவரைப் பார்த்து, அப்படிச்சொல்லாதே; 33 ஆண்டுகளுக்குமுன்பே எனக்குப் பிரியமானதை எனக்குக் கொடுத்துவிட்டாய் என்றார். உம்மை நான் இப்போதுதான் இயேசுவே சந்திக்கின்றேன் என்று ஞானி சொல்ல, இயேசு, ஏழைகளுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தாய் என்றார்.

இன்று இயேசு நம்மைச் சுற்றி வாழும், நம் நடுவே வாழும் ஒவ்வோர் ஏழைக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இன்று நம்மால் இயேசுவைத் தேடி பெத்லகேமிற்குச் செல்ல முடியாமலிருக்கலாம்! ஆனால் நம் பக்கத்திலுள்ள ஏழைகளைத் தேடிச் சென்று அவர்களுக்குள் இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுக்குப் பரிசுப் பொருள்களை அளிக்கலாமே!

அன்று தன்னை பிற இனத்தவர்க்கு வெளிப்படுத்திய இயேசு, இன்று நம் வழியாகத் தம்மைப் பிற இனத்தவர்க்கு வெளிப்படுத்த விரும்புகின்றார்.

திருச்சபையின் ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். திருத்தூதர் பணிகள் தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை (திப 4:34) என்கின்றது. அவர்கள் நடுவே நீதி, அமைதி, மகிழ்ச்சி அனைத்தும் களிநடனம் புரிந்தன அவர்கள் அவர்களைச் சுற்றியிருந்த மக்கள் அனைவருக்கும் நீதியின் கதிரவனாகவும், அமைதியின் ஊற்றாகவும், மகிழ்ச்சியின் மகுடமாகவும் திகழ்ந்தனர். இவர்கள் எப்படி ஒருவரையொருவர் அன்பு செய்து, அகமகிழ்ந்து வருகின்றனர்! வாருங்கள் நாமும் அவர்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ்வோம் எனச் சொல்லி பிற இனத்தவர் கிறிஸ்தவ மறையில் சேர்ந்தனர் (திப 2:47). அன்றைய கிறிஸ்தவர்களின் அன்பு வாழ்வு, பாச வாழ்வு, நேச வாழ்வு, கருணை வாழ்வு பிற இனத்தவர்க்கு ஒரு மாபெரும் நற்செய்தியாக (இரண்டாம் வாசகம்) அமைந்திருந்தது.

நாம் ஒவ்வொருவரும் நமது நினைவாலும், சொல்லாலும், செயலாலும், திருக்காட்சியாக மாற முயல்வோம்.

மேலும் அறிவோம் :

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்லைப் புழி (குறள் : 228). பொருள்:

பசியால் வாழத் துன்புறும் வறியவர் பசிக் கொடுமையைப் போக்க வேண்டும். அச்செயலே ஒருவன் தான் தேடித்திரட்டிய செல்வத்தைப் பிற்காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கத்தக்க கருவூலமாகும்!

ser ser

பணக்காரர் ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவரைப் பார்க்க வந்த ஓர் அறிஞர் அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரே மகன் என்றார். அறிஞர் வியப்புடன், 'உமக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இல்லையா? என்று கேட்க, அவர் அடுத்த அறையில் இருந்த தனது ஐந்து பையன்களையும் பெயர் சொல்லி ஒவ்வொருவராக அழைக்க, ஒருவன் மட்டும் வந்தான். பணக்காரர் அறிஞரிடம், 'நான் பெற்ற பிள்ளைகள் ஐந்து. ஆனால், என் பேச்சைக் கேட்டு நடப்பவன் ஒருவன்தான். எனவேதான் எனக்கு ஒரே மகன் என்று சொன்னேன்' என்று வேதனையுடன் கூறினார்.

எல்லாரும் இறைவனின் பிள்ளைகள் என்றாலும் இறைவனின் விருப்பப்படி நடப்பவர்கள் வெகு சிலரே. இறைவனுடைய விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றியவர் கிறிஸ்து ஒருவரே. எனவேதான் அவர் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது, 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (மாற் 1:11) என்று வானகத் தந்தை சான்று பகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து இறைவனின் அன்பார்ந்த மகன், ஏனெனில் அவர் இறைவனின் ஊழியன். அவர் இறைவனின் ஊழியனாக இருந்த காரணத்தாலேயே அவர் இறைவனின் அன்பார்ந்த மகன் ஆனார். அவர் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா 'துன்புறும் இறை ஊழியனைப்பற்றி' எழுதியிருந்த நான்கு கவிதைகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றிற்குச் செயல் வடிவம் கொடுக்க முன் வந்தார்.

துன்புறும் ஊழியன் இறைவனுக்குச் செவிமடுத்துக் கீழ்ப்படிவார் (எசா 50:4-5). அவர் மக்களுக்கு விடுதலை அளிப்பார்; நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்; மங்கி எரியும் திரியை அணைக்க மாட்டார்; சாந்தமுள்ளவராய் இருப்பார் (எசா 42:3). எல்லாவற்றிற்கும் மேலாக, துன்புறும் ஊழியன் மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாகத் தன் இன்னுயிரையே பலியாக்கும் செம்மறியாவார் (எசா 53:4-12)

சுருக்கமாக, பாவமே அறியாத அவரைக் கடவுள் பாவ உருவாக்கினார், அதாவது, மனிதருடைய பாவநிலையை ஏற்கச் செய்தார் (2கொரி 5:21). உண்மையில், கிறிஸ்து மனிதகுலத்தின் பாவ மூட்டைகளையெல்லாம் தம்மேல் சுமந்து கொண்டு யோர்தான் தண்ணீரில் இறங்கினார். யோர்தான் தண்ணீர் அவரைப் புனிதப்படுத்தவில்லை; மாறாக, அவர்தான் அத்தண்ணீரைப் புனிதப்படுத்தினார்.

கிறிஸ்துவின் உண்மையான திருமுழுக்கு அவர் கல்வாரியில் தமது சொந்த இரத்தத்தால் பெற்றத் திருமுழுக்காகும். இதை அவரே நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளார். "நான் பெற வேண்டிய திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறும் அளவும் மனநெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50). ஆம், துன்புறும் இறை ஊழியனாகக் கல்வாரியில் இரத்தம் சிந்தித் திருமுழுக்குப் பெற்றார். அவரே உலகின் பாவங்களைப் போக்கிய மெய்யான செம்மறி. தம்மைச் சாவுக்குக் கையளித்த துன்புறும் இறை ஊழியனைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து மகிமைப்படுத்தினார். இன்று நாம் நமது திருமுழுக்கை நினைவு கூர்கின்றோம். நாம் குழந்தைகளாக இருந்த போதே திருமுழுக்குப் பெற்றோம். குழந்தைத் திருமுழுக்கு முற்றிலும் சரியானது, தேவையானதும் கூட. நாம் கடவுளை அறிவதற்கு முன்பே கடவுள் நம்மை அறிந்துள்ளார். நாம் கடவுளை அன்பு செய்வதற்கு முன்பே கடவுள் நம்மை அன்பு செய்துள்ளார். நாம் கடவுளைத் தெரிவு செய்வதற்கு முன்பே கடவுள் நம்மைத் தெரிவு செய்துள்ளார். இதுதான் குழந்தைத் திருமுழுக்கின் ஆழமான இறையியல் உண்மை ! உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' (எபே 1:4). 'நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்' (தீத். 3:5).

திருமுழுக்கின் விளைவாக, நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாகவே இருக்கிறோம் (1யோவா 3:1). இறைவனின் ஆவியைப் பெற்றுள்ள நாம், அந்த ஆவியால் இறைவனை அப்பா தந்தாய்' எனக் கூப்பிடுகிறோம் (உரோ 8:15).

நாம் எந்த வயதில், எந்த முறையில் திருமுழுக்குப் பெற்றோம் என்பதை விட, திருமுழுக்கின் மறைபொருளை வாழ்வதே முக்கியமாகும். திருமுழுக்கினால் கிறிஸ்துவின் சாவிலும் உயிர்ப்பிலும் பங்கு பெற்றுள்ளோம். பாவ வாழ்வுக்குச் செத்தவர்களாய், புதிய வாழ்வுக்கு உயிர்த்தெழுந்துள்ளோம் (உரோ 6:3-14). திருமுழுக்கு ஒரு கல்லறை, ஏனெனில் அது பழைய வாழ்வின் அடக்கம் ; திருமுழுக்கு ஒரு கருவறை, ஏனெனில் அது புதிய வாழ்வின் தொடக்கம்.

ஒரு மாணவன், 'வாழைப்பழம்' என்பதற்குப் பதிலாக, 'வாயப்பயம்' என்றான். வகுப்பு ஆசிரியர் அவனுடைய அப்பாவை அழைத்து, 'உன் மகன் என் வாயப்பயம்' என்று சொல்லுகிறான்? என்று கேட்டதற்கு, அந்த அப்பா, அது எங்க பயக்கவயக்கம்' என்றாராம்!

நாம் ஒரு சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி அவதிப்படுகிறோம். பாவ நாட்டங்களின் பிடியில் உள்ள நமது பழைய பாவ இயல்பைக் களைந்துவிட்டு, நீதியிலும் உண்மையிலும் உருவாக்கப்பட்ட புதிய இயல்பை அணிந்து கொள்வோம் (எபே 4:22-24).

இன்று நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். தன்னலத்தையும் ஆணவத்தையும், சாதி உணர்வையும், மொழி, இன, மதவெறிகளையும் விட்டுவிடுவோம். தன்னையே அழித்து உலகிற்குப் புத்துயிர் அளித்த இயேசுவைப் பின்பற்றி, நம்மையே அழித்து உலகிற்குக் கிறிஸ்துவின் உருக்கொடுப்போம்.

நீரினாலும் ஆவியினாலும் புதுப்பிறப்படைந்துள்ள மெய்யடியார்களாகிய நாம், ஆவியிலும் உண்மையிலும் இறைவனைத் தொழுது (யோவா 4:23), இத்திருப்பலியில் பங்கேற்போமாக!

ser ser

மூன்று வித மனிதர்கள்

ஆங்கிலத் தத்துவ மேதை பெர்ட்ரான்று ரசல் ஒரு நாத்திகர். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு எள்ளி நகையாடுபவர். கடவுளை நம்புகிறவர்கள் கற்பனைத் திறனற்றவர்கள், கடவுள் இல்லாத உலகத்தையே நினைத்துப் பார்க்க அஞ்சுபவர்கள் என்றெல்லாம் சொல்லிச் சிரிப்பார். நண்பர் ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்டார். "நீங்கள் இறந்தபின் இறைவனைச் சந்திக்க நேர்ந்தால் என்ன கேட்பீர்கள்? இரசல் சொன்ன பதில் என்ன தெரியுமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த இறைவனைப் பார்த்து நான் கேட்பது இதுவாகத்தான் இருக்கும். கடவுளே, உலகில் நான் உயிர் வாழும்போதே ஐயமற்ற வகையில் உம்மைப் பற்றிய தெளிவான சான்றை ஏன் வெளிப்படுத்தவில்லை?”

இன்று நாம் கொண்டாடும் திருக்காட்சித் திருவிழா கடவுள் தந்த அந்தச் சான்று பற்றியது தான். திருக்காட்சி என்றாலே இறைத் தோற்றம், இயேசுவில் தனது மீட்கும் இறைப்பிரசன்னத்தை உலக மக்களுக்கெல்லாம் உணர்த்தும் இறைவெளிப்பாடு. விவிலியக் கண்ணோட்டத்தில், இறைப் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்பவனே ஞானி, இறைப் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்ளாதவன் எவ்வளவுதான் பெரிய ஆற்றலும் திறமையும் உள்ளவனாயினும் அவன் ஒர் அறிவிலியே.

"கற்றதனால் ஆயப் பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்?" (திருக்குறள் )

"கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்" (திபா14:1531) என்ற திருப்பாடலின் வரிகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை கடவுள் மனிதருக்கு அவரவர் தன்மை, நிலைக்கு ஏற்பத் தன்னை வெளிப்படுத்துகிறார்.

மூன்று வித மனிதர்கள் : படித்த முட்டாள்கள், படிக்காத மேதைகள், படித்த ஞானிகள்

பரிசேயர், மறைநூல் அறிஞர்.
இப்படிப் படித்தவர்களுக்கு மறைநூல் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். மறைநூலை நன்கு கற்றவர்கள். மறைநூலுக்கு விளக்கம் தரும் திறன் பெற்றவர்கள். பழைய ஏற்பாட்டில் மெசியா பற்றிய குறிப்புக்களையெல்லாம் தெரிந்து கொண்டவர்கள்; ஆனால் உண்மையின் ஊற்றிடம் செல்வது பற்றி அக்கறையற்றவர்கள். எனவே மீட்பரைப் பற்றிய பற்றோ, பாசமோ, பகையோ இல்லாதவர்கள். இவர்களிடம் உண்மையில்லை, நேர்மை இல்லை, திறந்த மனமில்லை. இவர்கள் படித்த முட்டாள்கள்.

வயல்வெளியில் இடையர்கள்.
இப்படிப் பாமரர்களுக்கு வானதூதர் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். ஏழைகள் என்றாலும் எளிமை, தாழ்ச்சிமிக்கவர்கள். வறியவர்கள் என்றாலும் வஞ்சகம் சூது இல்லாதவர்கள். "இடையர்கள் தாங்கள் கண்டவை கேட்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே திரும்பிச் சென்றார்கள்” (லூக்.2:20). இவர்கள் படிக்காத மேதைகள்!

கீழ்த்திசை ஞானிகள்.
இப்படி அறிஞர்களுக்கு விண்மீன் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் - பிற இனத்தாருக்கு இருளகற்றும் ஒளியாக (லூக்.2:32). அறிஞர்கள் என்றாலும் அகந்தை இல்லாதவர்கள். இறைவனைத் தேடுவதே அறிவின் பயன் என்பதை உணர்ந்து செயல்பட்டவர்கள். ஞானத்தின் இருப்பிடத்தைத் தேடி அலைந்தவர்கள். இவர்கள் படித்த ஞானிகள்.

கடவுள் உண்டு என்று சொல்பவர்களை நம்பலாம். கடவுள் இல்லை என்று சொல்பவர்களைக் கூட நம்பலாம். கடவுளை நம்புவது போல் நடிப்பவர்களை நம்ப முடியாது, நம்பக் கூடாது.

சிலர் கடவுளை நம்புவர், வணங்குவர். அவருக்கேற்ற செயல்களைச் செய்வர். இவர்கள் ஆத்திகர்கள். இவர்களால் ஆபத்தில்லை.

சிலர் கடவுள் இல்லை என்பர். ஆனாலும் மனிதம் வாழச் சிறப்பான செயல்களைச் செய்வர். இவர்கள் நாத்திகர்கள். இவர்களாலும் ஆபத்தில்லை.

சிலர் கடவுளை நம்புவது போல் நடிப்பர். ஆலயத்துக்குச் செல்வர். ஆண்டவனை வணங்குவர். ஆனால் கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராக அஞ்சாது செயல்படுவர். இவர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்.

சந்தேகப் பேர்வழியான ஏரோது தனக்கு அடுத்த வாரிசு விரைவில் வரக்கூடாது என்பதற்காகத் தன் உறவினர்களையே கொலை செய்தவன். யூதர்களின் அரசர் எங்கே பிறந்துள்ளார் என்று ஞானிகள் கேட்டதும் ஆடிப்போனான். நயவஞ்சகமாய் ஞானிகளிடம் தன் நடிப்பைப் புலப்படுத்துகிறான். 'வணங்கிவிட்டு வந்து சொல்லுங்கள். நானும் வணங்குகிறேன்” என்கிறான்! அவனது கபடநாடகத்தை ஆண்டவரின் தூதர் கனவில் விளக்க ஞானிகள் வேறுவழியில் திரும்புகின்றனர். கொடூர மனம் கொண்ட ஏரோது ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்றொழிக்கும்படி கட்டளை இடுகிறான்.

“பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவர்” (எசா.60:3). இந்த இறைவாக்கு கிறிஸ்து பிறப்பில் செயல்படத் தொடங்கியது. ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றும். அப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து ஞானிகள். ஆனால் இயேசுவைத் தவறாகப் புரிந்து கொண்ட ஏரோது போன்றவர்கள் கலங்கினர். கொல்லவும் திட்டமிட்டனர். இயேசு வந்தது எவருடைய அரசையும் வீழ்த்த அல்ல, எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்றே.

திருக்காட்சித் திருவிழா கீழ்த்திசை ஞானிகள் பெற்ற இறைவெளிப்பாட்டைக் கொண்டாடுவதற்காக அன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கொண்டிருப்பது பரிசேயா இடையரா, ஏரோதா, கீழ்த்திசை ஞானியா என்பதைத் தேர்ந்து தெளிவதற்காக!

ser ser

ஒளி - பார்த்தலும் பதிலிறுத்தலும்

கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.

லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது. இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'

இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை, பிரிவினை சபை சகோதரர்களின் விவிலியம், 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.

ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.

அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் நகரம் ஒளி வீசுகிறது. அதைக் காணுகின்ற இஸ்ரயேல் மக்களும், புறவினத்து மக்களும் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களது பதிலிறுப்பு திரும்பி வருதலில் இருக்கின்றது.

இரண்டாம் வாசகத்தில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த எபேசு நகர மக்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒளிபெற்ற மக்களாக வாழ வேண்டும்' (காண். எபே 5:8). புறவினத்தாருக்கு கிறிஸ்துவின் மீட்பு என்னும் ஒளி வழங்கப்பட, அவர்களும் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

நற்செய்தி வாசகத்தில், ஒளியைக் காணுகின்ற கீழ்த்திசை ஞானியர், அந்த ஒளியைப் பின்தொடர்ந்து வந்து, ஒளியாம் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்.

ஒளியைப் பார்த்தலும் பதிலிறுத்தலும் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. இருவகைக் காணுதல்
கீழ்த்திசை ஞானியரின் ஞானம் நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. ஏன்? அவர்கள் தங்களுக்கு வெளியே இருக்கின்ற விண்மீனின் ஒளியைக் காண்கின்றனர். அதே வேளையில், தங்கள் கனவில் வெளிப்படுத்தப்பட்ட ஒளியைக் கண்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகின்றனர். ஆக, தங்களுக்கு வெளியே நடப்பது பற்றிய அறிவும், தங்களுக்கு உள்ளே இருக்கின்ற உள்ளுணர்வு பற்றிய அறிவும் அவர்களுக்கு ஒருங்கே அமைந்திருந்தது. இதுதான் ஞானம். பல நேரங்களில் அறிவார்ந்த பலர் தங்களுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தெளிவாக இருப்பர். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்களில் வீசும் ஒளியைக் கண்டுகொள்ள மறந்துவிடுவர். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் உள்ளத்தின் ஒளி பற்றி இப்படி எழுதுகிறார்: 'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகின்றது ... உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15). இன்றைய திருநாளின் ஞானியர் தங்கள் உள்ளத்தின் அறிவுரையை ஏற்றனர். அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தனர். இன்று நாம் புறக் காணுதல் மற்றும் அகக் காணுதல் நிலைகளில் எப்படி இருக்கிறோம்?

2. மூவகை பதிலிறுப்புகள்
ஏரோது ஒளியைக் கண்டு அஞ்சுகிறார், எருசலேம் நகரத்தவர் ஒளியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், ஞானியர் ஒளியைப் பின்தொடர்கின்றனர். ஒளி அல்லது உண்மை பல நேரங்களில் நமக்கு அச்சத்தை விளைவிக்கலாம். நம்மில் சிலர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மருத்தவரிடம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனெனில், நம்மிடம் உள்ள நோயை மருத்துவர் கண்டுபிடித்துவிட்டால், அல்லது நம் நோய் பற்றிய உண்மைநிலை நமக்குத் தெரிந்துவிட்டால், அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மக்கள் ஒளியைக் கண்டு அஞ்சுவதை இயேசுவும் நிக்கதேமிடம் சொல்கின்றார்: 'ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர் ... தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்' (காண். யோவா 3:19-21). ஏரோதுவின் அரியணை ஒளியை அவரிடமிருந்து மறைத்தது. எருசலேம் நகர மக்கள் ஒளியைக் கண்டனர். ஆனால், அன்றாட கவலைகளுக்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்ததால் அவர்கள் ஒளியைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் வாழ்வின் இன்ப துன்பங்களிலிருந்து எழுந்து பார்க்கவோ, அந்த ஒளியைப் பின்பற்றவோ அவர்களுக்குத் தோன்றவில்லை. சில வேளைகளில் நமக்கும் இதே மனநிலை வரலாம். 'பின்னர் பார்த்துக்கொள்ளலாம்!' என்று தள்ளிப் போடலாம். ஆனால், ஞானியர் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர். ஒளியைப் பின்தொடர்தல் கடினமாக இருந்தாலும் பின் தொடர்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பயணம் பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கும்.

3. இரண்டாம் முறை விண்மீன்
நம் பாதையும் பதிலிறுப்பும் தெளிவாக இருந்தால், நாம் தீயவனின் அரண்மனையில் இருந்தாலும் விண்மீன் மீண்டும் தோன்றும். விண்மீன் இரண்டாம் முறை தோன்றுவதைக் கண்ட ஞானியர் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களின் பயணமும் பாதையும் சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதன் அடையாளமாக அதைக் காண்கின்றனர். நாம் நம் கனவுகள் நோக்கிச் செல்லும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நம்முடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது என்ற இரசவாதமும் (காண். பவுலோ கோயலோ, தி ஆல்கெமிஸ்ட்) இதுவே. இன்று நம் இலக்குகள் அல்லது நட்சத்திரங்கள் நோக்கி நாம் வழிநடக்கும்போது இதே அனுபவத்தை நாமும் பெற்றிருக்கலாம். அப்படி இருக்க நம் இலக்குகளை நோக்கி நகர்வதிலிருந்து நாம் பின்வாங்குவது ஏன்?

இறுதியாக,

'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக!' எனப் பாடுகின்றார் திபா ஆசிரியர் (காண். 72). நிலவின், கதிரவனின், விண்மீனின் ஒளி உள்ளவரை அதைப் பார்த்தலும், அதற்குப் பதிலிறுத்தலும் தொடரும். பாதையிலும் பாதையின் இறுதியிலும் நம் கண்கள் அவரைக் காணும்.

திருக்காட்சிப் பெருவிழா நல்வாழ்த்துகள்!

serser

இறைவனே வழிகாட்டும் விண்மீன்!

இன்று திருஅவையோடு இணைந்து திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். யூதர்களின் அரசராகப் பிறந்த இயேசுவைக் கண்டு வணங்க கீழை நாடுகளிலிருந்து பரிசுப்பொருட்களோடு நெடும்பயணம் மேற்கொண்ட மூன்று ஞானிகளின் பெருவிழா இன்று. இவ்விழா நமக்குக் கூறும் செய்தி என்ன? இணைந்து சிந்திப்போம்

முதலாவதாக கீழை நாடுகளிலிருந்து வந்த ஞானிகள் என்று சொல்லப்படும் போது, யூதர்கள் அல்லாதவர்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. யூதர் அல்லாதவர்கள் யூதர்களின் அரசரைக் காண நெடும்பயணம் மேற்கொள்ளக் காரணம் என்ன? அது உண்மையான இறை அனுபவத்திற்கான ஒரு தேடல். இஸ்ரயேலின் கடவுள் தம்மைத் தேடிவரும் பிற இனத்தவரையும் ஏற்றுக்கொள்வார் என்று தங்களுடைய ஞானத்தால் அந்த ஞானிகள் உய்த்துணர்ந்திருந்தார்கள். தேடிவந்தார்கள். கண்டடைந்தார்கள். ஆசி பெற்று மகிழ்வுடன் சென்றார்கள். நம் கடவுளைத் தேடிவரும் பிறசமயத்தவரைப் பற்றி நம்முடைய சிந்தனைகளைச் சீர் செய்ய ஞானிகளின் வருகை நம்மைத் தூண்டுவதை நாம் உணர இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.அத்தோடு கடவுளை நம் வாழ்வில் கண்டடைய நாம் கொண்டுள்ள தாகம் ஆழமானதா என்பதைப் பற்றி சிந்திக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். நம்முடைய தேடல் எதைச் சார்ந்தது என்பதை ஆராய்ந்து கடவுளை நோக்கி அதைத் திருப்ப நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இரண்டாவதாக வழிகாட்டும் விண்மீன் இப்பெருவிழாவின் சிறப்பம்சம். தன்னைத் தேடிவருபவரை வழிநடத்துபவர் இறைவனே என்ற மாபெரும் உண்மை இதில் புலப்படுகிறது. அதாவது இறைவனை அடைய நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் இறைவனே துணைநிற்கிறார். கடவுளை அன்பு செய்யவும் ,அவரைச் சென்றடையவும் நம்முடைய சொந்த விருப்பமும் முயற்சியும் மட்டும் போதாது. மாறாக இறைவனுடைய வழிகாட்டுதலும் உடனிருப்பும் மிக அவசியம் என்பதை விண்மீன் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இறைவனின் வழிகாட்டுதல் நம்மை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ளவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பல சமயங்களில் நாம் வழிதவறும் போது கடவுளின் வழிகாட்டுதலை நம்மால் உணர இயலாமல் போகலாம்.மெசியாவை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஞானிகள் ஏரோதை அணுகிய போது விண்மீன் மறைந்ததையும்,மீண்டுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்த போது அதே விண்மீன் அவர்களுக்கு வழிகாட்டுவதையும் நாம் காண்கிறோம்.

கடவுளின் வழிகாட்டுதல் ஒருபோதும் நம்மை விட்டு அகலாது என்ற ஆழமான உண்மையை இந்நிகழ்வு நமக்கு விளக்குகிறது.

மூன்றாவதாக மெசயாவைக் கண்டு வணங்கி ,அவருக்கு காணிக்கைகள் செலுத்தி மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடரும் பொழுதும் அவர்களைக் கடவுள் வேறுவழியில் வழிநடத்தி ஏரோதின் தீய திட்டத்திலிருந்து அவர்களையும், இயேசுவையும் பாதுகாத்தார் என்பதையும் நாம் வாசிக்கிறோம்.சோதனைகளுக்கும், இடர்களுக்கும் மத்தியிலும் இறைவனின் குரலை நம்மால் அறிய முடிகிறதா என நம்மையே ஆய்வு செய்யவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.அவ்வாறு அவருடைய குரலைக் கேட்கும் போது நமக்கு அவருடைய பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைவனின் திட்டங்களையும் வழிமுறைகளையும் யாராலும் உய்த்துணர இயலாது. ஆனால் அவரை நம்பி, அவரை நம் வாழ்வின் உயரிய இலக்காகக் கருதி, அனைத்திலும் அவரைக் காணவேண்டும் என்ற தேடல் நம்மிடம் ஆழமாக இருக்கும் போது, இறைவனே நமக்கு வழிகாட்டும் விண்மீனாய் இருந்து வழிகாட்டுவார் என்பது தான் இத்திருக்காட்சிப் பெருவிழா நமக்கு வழங்கும் செய்தி. இறைவனின் வழிகாட்டுதலில் நம்மையே அர்ப்பணித்து, நம்பிக்கையுடன் பயணிக்கும் போது ஞானிகள் மெசியாவைக் கண்டடைந்தது போல நாமும் கண்டடைவோம். நம் வாழ்வின் எல்லா நாளுமே திருக்காட்சிப் பெருவிழாகவே அமையும். எனவே இன்றைய நாளில் ஞானிகளைப் போல கடவுளைத் தேடும் உள்ளமும்,அதற்காக முயற்சி செய்யும் குணமும், இறைவனின் வழிகாட்டுதலை நம்பி பயணத்தைத் தொடரும் துணிச்சலும் கடவுளிடத்தில் வேண்டுவோம். நம் வாழ்வில் இறைவனே வழிகாட்டும் விண்மீனாய் இருந்து வழிநடத்துவார்.

இறைவேண்டல்
வழிகாட்டும் விண்மீனே இறைவா! உம்மை அடையாமல் எங்கள் வாழ்வு பொருள்பெறாது என்பதை நாங்கள் அறிவோம். உம்மை எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நாங்கள் கண்டுணர வேண்டும் என்ற ஆவலை எங்களுக்குத் தாரும். எங்கள் சொந்த முயற்சிளை மட்டுமே நம்பாமல் உம்முடைய வழிகாட்டுதலை முழுமையாக நம்பி வாழ்வில் தொடர்ந்து பயணிக்க அருள் தாரும். ஆமென்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com