மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..


இரண்டாம் ஆண்டு

பொதுக் காலம் இரண்டாம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்:-
1 சாமுவேல் 3:3ஆ-10, 19 | 1கொரிந்தியர் 6:13இ-15அ. 17-20 | யோவான் 1:35-42

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
இறைவனைத் தேடு

மனித வாழ்வு என்பது ஒரு தேடல், மனிதன் மகிழ்ச்சியை அடைய ஒடித் திரிகின்றான். நண்பர்களைச் சம்பாதிக்க ஒடித் திரிகின்றான். பணத்தைத் திரட்ட ஒடித் திரிகின்றான். பட்டம் பதவிக்காக ஒடித் திரிகின்றான். பிரச்சனையைத் தீர்த்து வைக்க ஒடித் திரிகின்றான். உடலால் உள்ளத்தால் ஏற்படும் நோயிலிருந்து விடுதலைப் பெற ஒடித் திரிகின்றான். ஆனால் இவை அனைத்தும் இறைவனைத் தேடுவதில் முடிவு பெற வேண்டும்.

வாழ்வு என்பது மனிதனுக்கு இறைவன் தந்த அழைப்பு. எதற்காக? மகிழ்ச்சியைப் பெறுவதற்காக, சாதனைகளைச் செய்து முடிக்க, கடமையை நிறைவேற்ற சேவை செய்ய. ஏன், தன்னையே பலியாக்க - இந்த அழைப்பு நண்பர்களினாலோ, உறவினர் களினாலோ, அதிகாரிகளினாலோ பலவித சூழ்நிலைகளில் வாழும் மக்களாலோ வரலாம். ஆனால் இவையனைத்தும் இறுதியில் கடவுளின் இறுதி அழைப்பில் நிறைவு பெற வேண்டும். வாருங்கள் தந்தையில் ஆசி பெற்றவர்களே. உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக (மத். 25:34).

இன்றைய வார்த்தை வழிபாட்டிலே தரப்பட்டிருக்கின்ற வாசகங்களுக்கு வருவோம். இன்று தெளிவாக உண்மையான சீடனாக இருக்கின்றவர்களுக்கு உரிய தேடுதலும், அழைப்பும் தெளிவாக்கப்பட்டிருப்பதை நாம் காண வேண்டும்.

திருமுழுக்கு யோவானின் சீடர்களில் இருவர் இயேசுவைத் தேடி வருகின்றார்கள். ஆனால் தேடியவர்கள் நீர் யார் என்று கேட்கத் துணிவில்லை. ஆனால் இயேசுவோ திரும்பிப் பார்த்து எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்கின்றார்? இதிலிருந்து எல்லா அழைப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன என்பதை அறிய வேண்டும். சீடர்கள் கேட்ட கேள்வி? போதகரே நீ எங்கே இருக்கிறீர்? இங்கே இருக்கிறேன் என்று விளக்கம் தந்தாரா? இல்லை. "வந்து பாருங்கள்” (யோவா. 1:39) என்றார் இயேசு. இவர்கள் சென்றார்கள். இயேசுவோடு தங்கினார்கள். அவரை அறிந்தார்கள். அனுபவித்தார்கள் (திபா. 34:8). அவரது சீடராக மாறினார்கள்.

சென்னையில் நடந்த அகில இந்திய அருங்கொடை மாநாட்டிலிருந்து திரும்பிய பின் என்னைச் சந்தித்த பலர் என்னைப் பார்த்துக் கேட்டார்கள், மாநாடு எப்படி இருந்தது என்று? நான் அவர்களுக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? நீங்கள் அங்கு வந்து பார்த்திருக்க வேண்டும். ஏனெனில் நான் பெற்ற இறை அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே முடியும் என்றேன். இதைத்தான் இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்: வந்து பாருங்கள் என்னிடம் வருபவனுக்கு பசியே இராது. என்னிடம் விசுவாசம் கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது (யோவா. 6:35) என்றார்.

நம்முடைய வாழ்க்கையைச் சிறிது சிந்திப்பது நல்லது. அந்த இரண்டு சீடர்கள் வழியே கண்டு, கேட்டு, அறிந்து, விலகிச் செல்லவில்லை. அவரோடு சென்று தங்கி, அனுபவித்து உறவு கொண்டு வாழ்வு பெற்றார்கள்.

நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள் (யோவா. 14:3) என்கிறார் ஆண்டவர்.

புனித திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடியாக வந்தவர். இயேசுவை முன்னறிவிக்கின்றார். உலகின் பாவங்களைப் போக்க வந்த செம்மறி (யோவா. 1:29) என்று அறிமுகப்படுத்துகின்றார்.

இப்படி இயேசு கடவுளின் செம்மறி என்று அறிவிக்கிறார். நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமானால் நாம் அவரோடு இருக்க வேண்டும். அவரின் வாழ்வையும், பணியையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்ல நாமும் இறைவனின் செம்மறிகளாக, பிறரைப் பாவங்களிலிருந்து விடுவிக்கும் செம்மறிகளாக மாற வேண்டும். தவறான எண்ணங்கள், தவறான மதிப்புகள், நிலையற்ற பற்றுகள் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் செம்மறிகளாக மாற வேண்டும்.

1. கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே நாம் இயேசுவைத் தேடி வந்திருக்கின்றோம். ஆனால் அவரைப் பார்த்துச் செல்லும் மக்களாகத்தான் நாம் காலம் கடத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் நாம் ஏதோ வழிப்போக்கர்களைச் சந்தித்தது போல் நாமும் சந்தித்தவர்களாக இன்னும் அவரை அனுபவிக்காதவர்களாகத்தான் இருக்கின்றோம். கடவுளின் அழைப்பை உணராது, உலக அழைப்புகளுக்கு உலகத்தின் ஆசைகளுக்கு இடம் கொடுக்கும்போது நாம் அவரோடு வாழ முடியாது.

2. அதே நேரத்தில் ஓர் எச்சரிக்கை. இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் யார்? இயேசுவின் சீடரில் ஒருவன்தான். சீடன் என்று உலகத்திற்கு முன்பாகப் பெயர் பெற்றான். ஆனால் அவரை அனுபவிக்க முடியவில்லை. பணத்தையும், புகழையும் பெற்றான். ஆனால் வாழ்வை இழந்தான். அவனுக்குச் சீரழிவுதான். இந்த நிலை நமக்கு நேரக் கூடாது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மெளனமே உன்னை நேசிக்கின்றேன்

போதி தர்மா என்பவர் ஒன்பது ஆண்டுகள் தம் சீடர்களுக்குப் போதித்தார். ஒருநாள் இவர் மரணப்படுக்கையிலிருந்த போது, அவரது கொள்கையைப் பரப்ப சரியான சீடரைத் தேர்ந்தெடுக்க எண்ணி, ஒரே கேள்வியை எல்லாச் சீடர்களிடமும் கேட்டார். இதுதான் கேள்வி : "நீங்கள் எவ்வாறு என் கொள்கைகளைப் பரப்புவீர்கள்?"

முதல் சீடர் : "ஐயா, உமது உரைகள் பிறர் காதுகளைத் துளைக்கும்படி போதிப்பேன்" என்றார். அதற்குக் குரு, "எனது சதைக்கு நீ உரியவன்" என்றார்.

இரண்டாவது சீடர் : "குருவே, நான் பாகுபாடின்றி, அனைவரையும் சமமாக நேசிப்பேன்" என்றார். அதற்குக் குரு, "என்னுடைய தோள் உனக்குரியது" என்றார்.

மூன்றாவது சீடர் : "போதகரே. நான் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை உருவாக்குவேன்" என்றார். அதற்குக் குரு, "என் எலும்புகளுக்கு நீ சொந்தக்காரன்" என்றார்.

நான்காவதாக ஹிகோ என்ற சீடர் வந்து குருவை மிகுந்த வணக்கத்துடன் வணங்கி மெளனமாக ஒதுங்கி நின்றார். அவரைப் பார்த்து குரு, "மௌனமே அனைத்திலும் ஆற்றல் மிக்கது. என் ஆன்மா உனக்குரியது. நீதான் எனது வாரிசு. பொறுப்பு அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கின்றேன்" என்றார்.

பேச்சு வெள்ளி, மெளனமோ தங்கம்,

மெளனத்திற்கு மிகுந்த ஆற்றல் உண்டு குறிப்பாகக் கடவுள் நம்மோடு பேசும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் சக்தி மெளனத்திற்கு உண்டு.

இறைவாக்கினர் எலியாவோடு இறைவன் சுழற்காற்றில் பேசவில்லை, நிலநடுக்கத்தில் பேசவில்லை, தீயில் பேசவில்லை, மாறாக அடக்கமான மெல்லிய ஒலியில் பேசினார் (1 அர 19:1-13). இயேசு அவரது பரமதந்தையோடு பேச அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்றார் (மாற் 1:35).

இன்றைய முதல் வாசகத்திலே சாமுவேல் இறைவனைப் பார்த்து, ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கின்றேன் என்கின்றார் (1 சாமு 3-10)இவ்வாறு சொல்லிவிட்டு மெளனமாகின்றார். அவர் பேசாமலிருக்கத் தொடங்கியதும், கடவுள் அவரோடு தங்கத் தொடங்கினார் (சாமு 3-19). அவரோடு பேசத்தொடங்கினார். சாமுவேலின் மௌனம் அவரை பெரிய இறைவாக்கினராக உயர்த்தியது.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானின் இரண்டு சீடர்களும் வந்து பாருங்கள் என்று கூறிய இயேசுவோடு சென்று அவரோடு தங்கியதாகப் படிக்கின்றோம்.

இயேசுவோடு தங்கியிருந்தார்கள் ஆனால் அவரோடு எதுவும் பேசவில்லை! சீடர்கள் எதுவும் பேசியதாக நாம் நற்செய்தியில் படிப்பதில்லை! அந்தச் சீடர்கள் மெளனமாக இருந்தபோது இயேசு மெசியா என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்பட்டது : மெளனத்திலே அவர்கள் இயேசுவை அனுபவித்தார்கள்: கண்டு கொண்டார்கள். பேதுருவின் சகோதரர் அந்திரேயா, சீமோனிடம் சென்று, மெசியாவைக் கண்டோம் என்றார்.

நாம் பேசாமலிருக்கும்போது கடவுள் பேசுவார். நாம் பேசாமலிருக்கும், நமது வெளிப் புலன்களும், உள் புலன்களும் அமைதியாக இருக்கும்போது, நமக்குள் வாழும் கடவுள் (இரண்டாம் வாசகம்) அவரது தூய ஆவியாரின் வரங்களாலும் (கொரி 12:8-10), அவரது கனிகளாலும் (கலா 5:22-23) நம்மை நிரப்புவார்; நாம் புதுப்படைப்பாக மாறி (எபே 4:24) கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்(உரோ 1314) நமது புதுவாழ்வால் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம் (1 கொரி 6:19)

மேலும் அறிவோம்

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொர் (குறள் : 415).

பொருள்: வழுக்கும் பாறையில் நடப்பவர்க்கு வலிய ஊன்றுகோல் உதவுவது போன்று, கற்றுத் தெளிந்த நல்லறிஞர் பெருமக்களின் மனம் தளரும்போது பெரிதும் துணைபுரியும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒரு பெரியவர் ஓர் இளைஞனிடம் மணி (நேரம்) கேட்டார் அவன், 'பத்து - பத்து என்றான். பெரியவர் கோபத்துடன், "எப்பா, நான் என்ன செவிடனா? பத்து என்று ஒருமுறை சொன்னால் போதாதா? ஏன் பத்து - பத்து என்று இருமுறை கூறினாய்?" என்று கேட்டார்.

சிறுவன் சாமுவேலை, சாமுவேல் - சாமுவேல்' என்று இருமுறை பெயர் சொல்லிக் கூப்பிட்டார் (1 சாமு 310) அவ்வாறே ஆபிரகாமை 'ஆபிரகாம், ஆபிரகாம்' என்றும் (தொநூ 22:11) யாக்கோபை, யாக்கோபு யாக்கோபு என்றும் (தொநூ 46:2). மோசேயை மோசே, மோசே என்றும் (விப 34) இரண்டுமுறை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.

இறைவன் இவர்களை இருமுறைப் பெயர் சொல்லி அழைத்தது அவர்கள் செவிடர்கள் என்பதற்காக அல்ல, மாறாக, இறைவன் ஒருவரை ஒரு குறிப்பிட்ட பணிக்குப் பெயர் சொல்லி அழைக்கிறார் நிச்சயமாக அழைக்கிறார் அழைத்தல் என்பது இறைவனுடைய முன் செயல் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.

இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட சிறுவன் சாமுவேல், பேசும் உன் அடியான் கேட்கிறேன்" (1 சாமு 310) என்று பதில் கூறுகிறான். சாமுவேல் இறைவனுடைய அழைத்தலுக்குத் தாராள மனதுடனும் திறந்த உள்ளத்துடனும் கீழ்ப்படிய தயார் நிலையில் இருந்ததை இது காட்டுகிறது

இன்றைய நற்செய்தியிலும் இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர்கள் திறந்த மனதுடனும் தாராள உள்ளத்துடனும் இயேசுவைப் பின் தொடர்கின்றனர். இது வியப்பாக இருக்கிறதா?

ஓர் இளைஞன் ஒரு இளம்பெண்ணின் அழகில் மயங்கி, அவளிடம் இருபது வருஷம் என் பெற்றோர் வசமிருந்தேன், இருபது நிமிஷத்தில் உன் வசமாகி விட்டேன்" என்றான். மனித காதலுக்கு இவ்வளவு கவர்ச்சி இருந்தால் தெய்வீகக் காதலுக்கு எவ்வளவு கவர்ச்சி இருக்க வேண்டும்?" இறைவா என்னை நீர் மயக்கி விட்டீர் நானும் மயங்கிப்போனேன்" (எரே 20:7) என்று இறைவாக்கினர் எரேமியா கூறவில்லையா?

இறைவன் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இறைவனுடைய அண்டித்தல் என்பது துறவற அழைத்தலாகவோ இல்லற அழைத்தலாகவோ இருக்கலாம் துறவறம் எவ்வாறு இறைவனது கொடையோ அவ்வாறே இல்லறமும் இறைவனது கொடையாகும். "ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும் வேறொருவருக்கு வேறுவகையாகவும் இருக்கிறது" (1கொரி 7:7).

இறைவன் நம்மை எத்தகைய வாழ்க்கை நிலைக்கு அழைத்தாலும் அவருடைய அழைத்தலைத் தாராள உள்ளத்துடனும் திறந்த மனதுடனும் ஏற்பது நமது கடமையாகும் "ஆண்டவரே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (பதிலுரைப்பாடல்). இதுவே நமது மனநிலையாக இருக்க வேண்டும் ஒரு பேருந்தில் கண்டெக்டர் பயணிகளிடம் கை நீட்டிக் காக வாங்கி'டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அதே பேருந்தில் ஒரு பிச்சைக்காரனும் பயணிகளிடம் கை நீட்டிக் காசு வாங்கிக் கொண்டிருந்தான் கண்டெக்டர் கோபத்துடன் பிச்சைக்காரனிடம், வண்டியை விட்டுக் கீழே இறங்குடா. இரண்டுபேரும் பயணிகளிடம் கைநீட்டிக்காக வாங்குறோம் யார் கண்டெக்டர்? யார் பிச்சைக்காரன்? என்ற விவஸ்தை இல்லாமல் போயிடுச்சு" என்றார்

அவ்வாறே இன்று திருச்சபையிலும் யார் திருப்பணியாளர்கள்? யார் பொதுநிலையினர்? என்ற வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. பொதுநிலையினர் திருப்பணியாளர் களாகவும் திருப்பணியாளர்கள் பொதுநிலையினராகவும் மாறிக்கொண்டு வருகின்றனர். எனவேதான், சாமியர்களின் சம்சாரித்தனமும் சம்சாரிகளின் சாமியார்த்தனமும் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குருப்பட்டம் என்ற அருளடையாளத்தால் குருக்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்களாகின்றனர். எனவே அவர்கள் கிறிஸ்துவின் இடத்தில், கிறிஸ்துவின் பெயரால், கிறிஸ்துவின் ஆளுமையில் (in the person of Christ) இறைமக்களுக்குப் போதிக்கின்றனர்; அவர்களைப் புனிதப்படுத்துகின்றனர். அவர்களுக்கு நல்ல ஆயனாக இருந்து வழிநடத்துகின்றனர். அவர்கள் உலகில் இருந்தாலும் அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல (யோவா 17:16)

ஆனால், பொதுநிலையினரோ உலகத்தில் இருக்கின்றனர். உலகைச் சார்ந்தும் இருக்கின்றனர்; உலகக் காரியங்களில் ஈடுபடுகின்றனர் உலகைச் சார்ந்திருக்கும் பண்பு பொது நிலையினரின் தனிப்பட்ட அழைத்தலாகும் என்று இரண்டாவது வத்திக்கான் சங்கம் உறுதிபடக் கூறியுள்ளது. உலகின் நடுவே வாழ்ந்து குடும்பம், அரசியல், பொருளாதாரம், கலை, கல்வி ஆகிய உலகியல் காரியங்களில் ஈடுபட்டு, உலகியல் காரியங்களை நற்செய்தி மதிப்பீடுகளால் ஊடுருவி, புளிப்பு மாவு போல் (மத் 13:33) பொதுநிலையினர் உலகில் இறையரசைக் கட்டி எழுப்புகின்றனர். இதுவே பொதுநிலையினரின் தனிப்பட்ட அழைத்தலாகும்.

பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது. கருட செளக்கியமா? இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாரும் செளக்கியமே கருடன் சொன்னது ஆம் இல்லறத்தாரும் துறவறத்தரும் தத்தம் அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாய் இருந்துகொண்டு. தங்களின் கிறிஸ்துவ, சமுதாயக்கடமைகளை நிறைவேற்றினால் எல்லாம் நலமுடன் இருக்கும். "ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக் கிறார்களோ அந்நிலையிலே நிலைத்திருக்கட்டும்". (1கொரி 7:20)

இல்லறத்தாரும் துறவறத்தாரும் தத்தம் கடமைகளைச் செம்மையாகச் செய்து முடிக்க இறைஅனுபவம் தேவை. "வந்துபாருங்கள்" (யோவா 1:39) என்ற இயேசுவின் அழைப்பை ஏற்ற முதல் சீடர்கள் இயேசுவுடன் ஒருநாள் தங்கி, இறைஅனுபவம் பெற்று, மற்றவர்களையும் அவரிடம் அழைத்து வந்தனர். அவ்வாறே நாமும் இயேசுவைக் குறிப்பாக அருள்வாக்கு அருளடையாளங்கள் வழியாகச் சந்தித்து, இறை அனுபவம் பெற்று, எல்லாரையும் இயேசுவிடம் கொண்டுவருவது நமது அழைத்தலாகும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“கடவுளின் ஆட்டுக்குட்டி”

நிகழ்வு

யூதர்கள் நடுவில் சொல்லப்படுகின்ற கதை இது. ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, அவற்றை உற்று நோக்கியபொழுது, யாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க, செம்மறியாடு மட்டும் மிகவும் வருத்தத்தோடு இருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் கடவுள், “நான் படைத்த யாவும் மகிழ்ச்சியாக இருக்க, நீ ஏன் கவலையோடு இருக்கின்றாய்?” என்று கேட்க, செம்மறியாடு கடவுளிடம், “நீர் படைத்த விலங்குகளிலியே நான் மிகவும் வலுக்குறைந்தவனாக இருக்கின்றேன். மற்ற விலங்குகளுக்கு பெரிய கொம்புகளும், கூரிய நகங்களும், நச்சுத்தன்மை நிறைந்த பற்களும் இருக்கின்றன. எனக்குத்தான் அப்படி எதுவுமே இல்லை. அதுதான் என்னுடைய வருத்தத்திற்குக் காரணம்” என்று சொன்னது.

அதற்குக் கடவுள், “அப்படியானால், நான் உனக்கு மற்ற விலங்குகளைப் போல் பெரிய கொம்புகளையும், கூரிய நகங்களையும், நச்சுத்தன்மை நிறைந்த பற்களையும் தரட்டுமா? அப்படித் தந்தால், யாரும் உன் அருகில் வந்து, உனக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள்” என்றார். “கடவுளே! எனக்கு அப்படி எதுவும் வேண்டாம். நான் அமைதியைப் பெரிதும் விரும்புகின்றனவன்; வன்முறையை விரும்பாதவன். அதனால் நீர் எனக்குத் தீமை செய்கின்றவர்களை மன்னிப்பதற்கான ஆற்றலையும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலையும் தாரும். அது போதும்” என்றது செம்மறி ஆடு. கடவுளும் அது கேட்டுக்கொண்டதற்கேற்ப, அதற்குத் தீமை செய்கின்றவர்களை மன்னிப்பதற்கான ஆற்றலையும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்ளும் ஆற்றலையும் தந்தார்.

இங்கு இடம்பெறும் செம்மறி ஆட்டினைப் போன்று, உயிருள்ள கடவுளின் செம்மறியான இயேசு தீமை செய்தவர்களை மன்னிக்கின்றவராகவும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்ளக்கூடியவராகவும்; ஏன், மானிட மீட்புக்காகத் தம்மையே பலியாகத் தருபவராக இருக்கிறார். பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி” என்கின்றார். திருமுழுக்கு யோவான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன, இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எருசலேம் திருக்கோயிலில், ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் பாவம் போக்கும் பலியாக (லேவி 14: 12, 21, 24; எண் 6: 12) ஓர் ஆடானது ஒப்புக் கொடுக்கப்படும் (விப 39: 38-40). இறைவாக்கினர் எசாயாவோ, துன்புறும் ஊழியரைக் குறித்துக் கூறும்பொழுது, அவர் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் தா வாயைத் திறவாதிருந்தார் என்று கூறுகின்றார் (எசா 53: 7)

ஆனால், இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தன் சீடர்கள் யோவான், அந்திரேயா ஆகியோரோடு இருக்கின்றபொழுது, அப்பக்கமாய் வருகின்ற இயேசுவைப் பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று கூறுகின்றார். திருமுழுக்கு யோவான் தன் சீடர்களிடம் சொன்ன இந்த வார்த்தைகள், அவர்களுக்குப் பாஸ்கா ஆட்டினை (விப 12) நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் எந்தவோர் ஐயமுமில்லை. ஆம், இயேசு கிறிஸ்து உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி. அதையே திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் உறுதி செய்கின்றன.

நாம் நமக்குரியவர்கள் அல்லர்; கடவுளுக்குரியவர்கள்

கடவுளின் ஆட்டுக்குட்டியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு, ஆடுகளாகிய நாம் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டுத் தன்னையே பலியாகத் தந்தார் (யோவா 10: 10). இதன்மூலம் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுவது போல், கடவுள் நம்மை தன் திருமகனின் இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டுக்கொண்டார். கடவுள் நம்மை விலை கொடுத்து மீட்டுக்கொண்டார் எனில், நாம் நமக்கானவர்கள் அல்லர்; கடவுளுக்கானவர்கள்.

நாம் கடவுளுக்கானவர்கள் எனில், கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்வதுதான் சாலச்சிறந்த ஒரு செயலாகும். சாமுவேல் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், சாமுவேலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் இருந்த சிறுவன் சாமுவேலை ஆண்டவர் மூன்று முறை அவனுடைய பெயரைச் சொல்லி அழைக்கின்றார். மூன்றுமுறையும் அவன் தன்னை அழைப்பது குரு ஏலிதான் என நினைத்துக்கொண்டு அவரிடம் செல்கின்றான். அப்பொழுதுதான் குரு ஏலி, சிறுவன் சாமுவேலை அழைப்பது கடவுள்தான் என உணர்ந்துகொண்டு, உன்னை அவர் மீண்டுமாக அழைத்தால், “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று சொல்லும் என்கின்றார். பின்னர் ஆண்டவர் சிறுவன் சாமுவேலை அழைத்தபொழுது, அவனும் குரு ஏலி தன்னிடம் சொன்னது போன்றே சொல்லி, ஆண்டவருடைய பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கின்றார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுளால் விலைகொடுத்து மீட்கப்பட்டவர்கள் என்பதால், சாமுவேலைப் போன்று கடவுளுடைய பணியைச் செய்ய நம்மை முழுமையாய் அர்ப்பணிக்கவேண்டும்.

பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகர்வோம்.

கடவுளுடைய பணியைச் செய்ய கடவுளுக்கு நம்மை முற்றிலும் அர்ப்பணித்து விட்டு கடவுளுக்குரியவர்களாய் இருக்கும் ஒவ்வொருவரும், தான் பெற்ற இறை அனுபவத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், அதைப் பிறரோடும் பகிரவேண்டும். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குபவர் அந்திரேயா. இந்த அந்திரேயா இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற பின், தன் சகோதரர் சீமோன் பேதுருவிடம் சென்று, “மெசியாவைக் கண்டோம்” என்று சான்றுபகர்கின்றார். இதனால் பேதுரு இயேசுவிடம் வருகின்றார்.

அந்திரேயா மேலும் ஒருசிலரை ஆண்டவரிடம் கொண்டுவருவதைப் பற்றி யோவான் நற்செய்தி எடுத்துக்கூறுகின்றது. குறிப்பாக இயேசு அப்பங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் அவர் சிறுவனை ஆண்டவரிடம் கொண்டு வருகின்றார் (யோவா 6: 9), இயேசுவைக் காண விரும்பிய கிரேக்கர்களை அவர் இயேசுவிடம் கொண்டு வருகின்றார் (யோவா 12: 20-22) இவ்வாறு அந்திரேயா தான் பெற்ற இறை அனுபவத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், அதைப் பிறரோடு பகிர்ந்து, அவர்களை இயேசுவிடம் அழைத்து வருகின்றார். இந்த அந்திரேயாவைப் போன்று நாம் இறை அனுபவம் பெறவேண்டும். அவ்வாறு பெற்ற இறை அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்து, அவர்களை இயேசுவிடம் கொண்டு வரவேண்டும்.

இன்றைக்குப் பலர் தாங்கள் கடவுளுக்குரியவர்கள் என்பதை உணராமல், தங்கள் விருப்பம்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் இறை அனுபவம் பெறுவதும் இல்லை, பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகிர்வதுமில்லை. உலகிற்கு ஒளியாக இருக்கும் நாம் (மத் 5: 14) ஒவ்வொரு கடவுளுக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்து, பெற்ற இறை அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்து வாழ வேண்டும்.

சிந்தனை
‘ஒருவர் இறைவனால் வழிநடத்தப்படுவதற்கு அவர் தன்னை அனுமதித்து, கிறிஸ்து மற்றும் நற்செயதிக்கான அன்பால் நிறைந்து, ஒன்றிப்பின் ஊழியர்களாக வாழ்வதன் வழியாக ஆண்டவரை அறிவிக்க முடியும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் கிறிஸ்துவின் அன்பால் நிறைந்து, அவரைப் பற்றிய நற்செய்தி மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அழைத்தலும் அறிதலும்

இறைவனின் அழைத்தலை அறிதலும், அறிதலுக்கு ஏற்ற பதிலிறுப்பு தருவதும் நம் வாழ்வைப் புரட்டிப் போடுகின்றன. அவரின் அழைப்பு நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் நடந்தேறுகிறது. அதை உய்த்துணர்ந்து தேர்ந்து தெளிபவர்கள் தங்கள் வாழ்க்கைத் திசையை மாற்றுகின்றனர்.

முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 3:3-10,19), சாமுவேலின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். கடவுள் சாமுவேலை அழைக்க, இளவல் சாமுவேல் அந்த அழைப்புக்கு பதிலிறுப்பு தருகின்றார். 'சாமுவேல்' என்றால் 'கடவுள் கேட்டார்' என்பது பொருள். கடவுள் இஸ்ரயேல் மக்களின் குரலைக் கேட்டார் என்ற செய்தியைத் தாங்கி நிற்கிறது சாமுவேல் நூல். முதலில், சாமுவேல், மலடியாயிருந்த அன்னாவின் விண்ணப்பத்தைக் கேட்டார். பின்னர், தங்களுக்கென்று ஓர் அரசன் வேண்டும் என்ற இஸ்ரயேல் மக்களின் விண்ணப்பத்தைக் கேட்டார். பால்குடி மறந்தவுடன் அன்னா சாமுவேலை ஏலியிடம் கொண்டுபோய் விடுகின்றார். சீலோவிலே அருள்பணியாளராக இருந்த அவருடைய இல்லத்திலேயே சாமுவேல் தங்குகின்றார். அங்குதான் அழைத்தல் நிகழ்வு நடக்கிறது. கடவுள் நேரடியாகவும் தனிப்பட்ட விதத்திலும் இளவல் சாமுவேலை அழைக்கின்றார். ஆனால், கடவுளின் குரலை ஏலியின் குரல் என நினைத்துக் கொள்கின்றார் சாமுவேல். இரு முறை அப்படியே நடக்கின்றது. இந்த இடத்தில், 'சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை' என்று ஒரு குறிப்பைத் தருகின்றார் ஆசிரியர். ஞானமும் கனிவும் நிறைந்த தந்தையாக இருந்த ஏலி, சாமுவேல் ஆண்டவரது குரலை அடையாளம் காண உதவுகின்றார். 'ஆண்டவரே பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' எனப் பதிலிறுக்குமாறு சொல்லி அனுப்ப, சாமுவேல், 'பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' என்கிறார்.

சாமுவேல் மூன்று முறை அழைக்கப்படும் நிகழ்வு, அவருடைய அறிதலில் எழுந்த படிநிலையைக் காட்டுகிறது. மேலும், 'பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' என்ற சாமுவேலின் தயார்நிலை, 'காது வழியாகக் கேட்டல்' என்பதோடு அல்லாமல், 'கீழ்ப்படிகிறேன்' என்ற பொருளையும் தருவதால், சாமுவேல் இங்கேயே ஓர் இறைவாக்கினராகத் தன் பணியைத் தொடங்குவதைப் பார்க்கின்றோம். 'சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' என நிகழ்வை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

ஆக, சாமுவேலுக்கு ஆண்டவரின் அழைத்தல் வருகின்றது. அந்த அழைத்தலை அறிந்துகொள்ள ஏலி உதவுகின்றார். அறிந்துகொண்ட சாமுவேல் அதற்கேற்ற பதிலிறுப்பு செய்கின்றார். பதிலிறுப்பின் விளைவாக இறைவாக்கினராகின்றார். இதுமுதல் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் குரல் எது என்பதை அறியவும், தேர்ந்து தெளியவும் அவர்களுக்கு இவர் வழிகாட்டுவார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 6:13-15,17-20), தூய்மையானவற்றுக்கும் பாவத்துக்குரியவற்றுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணத் தவறிய கொரிந்து நகரக் கிறிஸ்தவ மக்களைக் கடிந்துகொள்கின்றார் பவுல். கொரிந்து ஒரு துறைமுக நகரம். வளமைக்கும், ஆடம்பரத்துக்கும், மேட்டிமையான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றது. மேலும், பாலியல் கூறுகள் நிடந்த நிறைய சமய வழிபாட்டு முறைகள் அங்கே இருந்தன. பரத்தைமை மற்றும் கூடாஒழுக்கம் அதிகமாக இருந்த அந்த நகரத்தில், நம்பிக்கையாளர்கள் தங்களின் தூய்மை நிலையைத் தக்கவைக்கவும், தங்கள் அழைப்புக்கேற்ற அறநெறி வாழ்க்கை வாழவும் வேண்டிய தேவை இருந்தது. பாலியல் பிறழ்வுகள் கிறிஸ்தவ அறநெறிக்கு எதிரானது என்பது பவுலின் போதனையாக இருக்கிறது. மேலும், உடல் மற்றும் ஆன்மா கொண்டுள்ள ஒவ்வொரு தனிநபரும் 'தூய ஆவியார் குடிகொள்ளும் கோவில்' என்று அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். பாலியல் நன்னடத்தை என்று வரும்போது கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் அதில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது என்பது பவுலின் எண்ணமாக இருந்தது.

ஆக, கிறிஸ்தவர்களாகிய வாழ அழைப்பு பெற்றுள்ள கொரிந்து நகர மக்கள், அதற்கேற்றவாறு, நன்மை தீமையைச் சீர்தூக்கிப் பார்த்து, தீமையை அகற்றிவிட்டு, நன்மையைப் பற்றிக்கொள்ள வேண்டும். இதுவே அவர்கள் செய்யும் பதிலிறுப்பு.

நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:35-42) இன்னொரு அழைத்தல் கதையாடலை வாசிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் தன் சீடர்கள் இருவரிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டி, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!' என முன்மொழிகின்றார். அதைக் கேட்ட அச்சீடர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்கின்றனர்.

இந்த நிகழ்வில், இயேசுவே தாமாக முன்வந்து, 'என்ன தேடுகிறீர்கள்?' எனக் கேட்கின்றார். இது வெறும் கேள்வி அல்ல. மாறாக, அவர்களை நோக்கி விடுக்கப்பட்ட சவால் மற்றும் அழைப்பு. தம்மைப் பற்றி அவர்கள் என்ன அறிந்துள்ளார்கள் என்பதை அவர்கள் ஆய்வு செய்து பார்ப்பதற்காக இயேசு கொடுக்கும் கால இடைவெளியே இக்கேள்வி.

இயேசுவுக்குப் பதிலிறுக்கின்ற சீடர்கள், தங்கள் விடையை ஒரு கேள்வியாக முன்வைக்கின்றனர்: 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' 'தங்குதல்' என்பது யோவான் நற்செய்தியில் மிகவும் பொருள் பொதிந்த வார்த்தை. ஏனெனில், இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் அல்லது வாக்கு மனுக்குலத்தோடு 'தங்குகின்றார்.' மேலும், 'நீர் கடவுளோடு தங்கியிருக்கிறீரா?' என்ற கேள்வியும் இக்கேள்வியில் அடங்கியுள்ளது. அவர்கள் இந்த இடத்தில் இயேசுவை, 'போதகர்' என்று அழைக்கின்றனர்.

'வந்து பாருங்கள்' என்னும் இயேசுவின் பதில் மொழி அவர்களைத் தன்னோடு இருப்பதற்கு அழைப்பதோடு, தன் உடனிருப்பை அனுபவிக்கவும் தூண்டுகிறது. மேலோட்டமான வாசிப்பில், இயேசுவின் இடம் எங்கே இருக்கிறது என்று பார்க்க சீடர்கள் சென்றார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், ஆழமான வாசிப்பில், அவர்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இயேசுவோடு தங்கிய அந்த அனுபவம் அவர்களைப் புரட்டிப் போடுகின்றது. 'சரி! போய் வருகிறோம்!' என்ற புறப்பட்டவர்களில் ஒருவரான அந்திரேயா நேரடியாகத் தன் சகோதரர் சீமோனைச் சென்று பார்க்கின்றார். 'நாங்கள் மெசியாவைக் கண்டோம்!' என அறிக்கையிடுகின்றார். 'போதகர்' என்று அழைத்துப் பின் தொடர்ந்தவர், 'மெசியாவை' கண்டது எப்படி? இறையனுபவம் பெற்ற ஒருவர் இன்னொருவரைத் தேடிச் சென்று அழைத்து வருவது யோவான் நற்செய்தியில் காணப்படும் ஓர் இறையியல் கூறு (காண். யோவா 1:43-51ளூ யோவா 4:28-30,39-42). அந்திரேயா செய்ததையே நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

ஆக, திருமுழுக்கு யோவான் சிறிய திரியை ஏற்ற, அதைத் தன் கேள்வியாலும் அழைப்பாலும் ஒளிரச் செய்கின்றார் இயேசு. அந்த ஒளியில் வழிநடந்த முதற்சீடர்கள் இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்டதோடு, அதை மற்றவர்களுக்கும் அறிவிக்கத் தொடங்குகின்றனர்.

இவ்வாறாக,
முதல் வாசகத்தில், ஏலி வழிகாட்ட, இளவல் சாமுவேல் ஆண்டவரின் குரலை அறிந்துகொள்கின்றார். 'பேசும்! கேட்கிறேன்!' எனப் பதிலிறுப்பு செய்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், பவுல் வழிபாட்ட, கொரிந்து நகர இறைமக்கள் தங்கள் உடலாகிய கோவிலின் தூய்மையை அறிந்துகொள்வதோடு, பிறழ்வுபட்ட வாழ்வை அகற்றித் தூய்மையான வாழ்வு வாழ முன்வருகின்றனர்.

நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் வழிகாட்ட, முதற்சீடர்கள் இயேசுவை மெசியா எனக் கண்டு அதற்குச் சான்று பகர்கின்றனர்.

அழைத்தல் அல்லது இறையழைத்தல் என்பதை அர்ப்பண வாழ்வுக்கான அழைத்தல், அல்லது அருள்பணியாளர்களாக மாறுவதற்கான அழைத்தல் என்ற குறுகிய பார்வையோடு நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இறைவன் நம் எல்லாரையும் அழைக்கின்றார். இறைவன் யாரென்று அறியாமல் நாம் தூங்கும்போது, நம் பிறழ்வுபட்ட வாழ்க்கை முறைகளில் நாம் சிக்கித் தவிக்கும்போது, மற்றவர்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கும்போது, நம் வேலையில், படிப்பில், பயணத்தில், 'இதைச் செய்! இங்கே வா! இதுதான் நான்!' என்று அவர் நம் உள்ளுணர்வில், உறவுநிலைகளில் அழைத்துக் கொண்டே இருக்கின்றார்.

அவரின் அழைத்தலை அறிதல் என்றால், அவரை அறிதல். அவரை அறிதல் என்றால் அவரின் அழைத்தலை அறிதல். ஆக, அழைத்தலும் அறிதலும் இணைந்து செல்லும்போது அங்கே பதிலிறுப்பு அவசியமாகிறது, சாத்தியமாகிறது.

இன்று நாம் அவரது அழைத்தலையும், அவரையும் அறிந்துகொள்ளவும், அதற்கேற்ற பதிலிறுப்பு செய்யவும் மூன்று தடைகள் உள்ளன என்று வாசகங்கள் சொல்கின்றன:

(அ) தவறாகப் புரிந்துகொள்தல்

சாமுவேல் கடவுளின் குரலை ஏலியின் குரல் என நினைக்கிறார். ஆனாலும் எழுந்து செல்கின்றார். கடவுளின் குரலை வெறும் மனிதக் குரலாக எடுத்துக்கொள்வதுதான் பெரிய தடை. அதாவது, மனிதர் பேசுகிறாரா அல்லது மனிதர் வழியாகக் கடவுள் பேசுகிறாரா என்று தெளிந்து தெரிய இயலாத ஒரு நிலையில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நம் மூளை நம்மை ஏமாற்ற முயற்சி செய்கின்றது. தனக்குச் சாதகமாக அது விடையைத் திருத்திக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, நான் ஒன்றைச் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளேன் என வைத்துக்கொள்வோம். 'அதைச் செய்தால் என்ன? எல்லாரும் செய்கிறார்களே! பிரச்சினை வந்தால் பார்த்துக்கொள்ளலாம்!' என்று என் இன்னொரு மூளை சொல்ல, என் மனம் அதை அப்படியே நம்பிச் செயலாற்றத் தொடங்குகிறது. ஆக, மூளை மனத்தை ஏமாற்றிவிடுகிறது. இதை எப்படி வெல்வது? விவிலியம் விடை கூறுகிறது: 'இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:15).

(ஆ) தூங்குதல்

சாமுவேலின் தூக்கம் ஆண்டவரின் அழைத்தலுக்கான இயங்குதளமாக இருந்தாலும், இத்தூக்கம் ஆண்டவரின் குரலை அறிந்துகொள்ளத் தடையாகவும் இருக்கின்றது. தூக்கம் என்பது நம் இருத்தல் நிலையைக் குறிக்கிறது. எழுந்து நடப்பதற்குப் பதிலாக இருத்தல் நிலையில் இருப்பது நமக்குப் பல நேரங்களில் இன்பமாக இருக்கிறது. கொரிந்து நகரத் திருஅவையும் ஒருவகைத் தூக்கத்தில்தான் இருந்தது. ஒரு பக்கம் கிறிஸ்தவம் விடுக்கும் அறநெறி வாழ்க்கை. இன்னொரு பக்கம் தங்களது பழைய வாழ்க்கையும் அதன் பிறழ்வுகளும் தந்த இன்பம். அந்த இன்பத்திலேயே சற்று நேரம் கை மடக்கித் தூங்குவது அவர்களுக்கு இனிமையாக இருந்தது. இன்று நான் எந்த நிலையில் தூங்கிக்கொண்டிருக்கிறேன்? என் பழைய வாழ்க்கை அல்லது பழைய இயல்பு என்னை இன்னும் கொஞ்சம் தூங்குமாறு அழைக்கிறதா?

(இ) தயக்கம்

திருமுழுக்கு யோவானின் சான்றைக் கேட்ட முதற் சீடர்கள் உடனடியாகத் தயக்கமின்றி இயேசுவைப் பின்தொடர்கின்றனர். 'வந்து பாருங்கள்' என்ற இயேசுவின் அழைப்பு எதிர்பாராமல் வந்தாலும், தயக்கமின்றி பதிலிறுப்பு செய்கின்றனர். 'நாளை பார்க்கலாம்! இன்னொரு நாள்! இப்பவேவா?' என்றெல்லாம் கேட்கவில்லை. எந்நேரமும் தயார்நிலையில் இருக்கின்றனர். பல நேரங்களில் நாம் தயங்குகின்றோம். புதிய முயற்சி எடுக்க, புதிய நபரைச் சந்திக்க, புதிய வேலையைத் தொடங்க, தொடங்கிய வேலையை முடிக்க என்று அச்சத்தாலும் தயக்கத்தாலும் அல்லல்படுகின்றோம்.

மேற்காணும் மூன்று தடைகளை நாம் தாண்டிவிட்டால், அவரின் அழைத்தலை அறிதலும், அவரை அறிதலும், அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தலும் எளிதாகும்.

அப்போது, நாமும் இன்றைய பதிலுரைப் பாடலின் ஆசிரியர் சொல்வது போல, 'உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்!' (காண். திபா 40) என்று சொல்ல முடியும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இறைவனின் குரலைக் கேட்போமா!

அலைப்பேசியில் காதொலிக் கருவியைப்பொருத்திக் கொண்டு நீண்ட நேரமாக தனிமையில் அமர்ந்த வண்ணம் பாடல் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு இளம்பெண். தன்னுடைய தாய் வீட்டு வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருந்ததைக் கண்டும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அக்கறை கொஞ்சம் கூட இல்லை. திடீரென தாயானவள் தனக்கு ஏதோ நேர்வதைப் போல உணர்ந்தார். வீட்டில் அந்த இளம்பெண்ணைத் தவிர யாருமில்லை. தாயானவள் தன் மகளைப் பல முறை கூப்பிட்டும் இசையை ரசித்துக் கொண்டு தன்னிலை மறந்த நிலையில் இருந்ததால் தன் தாயின் குரலைக் கேட்க இயலாமல் போனது. இறுதியில் தாயின் நிலையும் கவலைக்கிடமானது.

இன்றைய வாசகங்கள் இறைவனின் குரலைக் கேட்க நம்மை அழைக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலை இறைவன் பெயர் சொல்லி அழைத்த நிகழ்வானது கொடுக்கப்பட்டுள்ளது. சிறுவன் சாமுவேல் உறங்கும்போது கூட தன் தலைவரான குரு ஏலியின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததால் தான் தன்னுடைய பெயரைக் கேட்டவுடனேயே எழுந்து தன் தலைவரிடம் ஓடினார் . குருவின் வழிகாட்டுதலின் கீழ் "ஆண்டவரே பேசும். உம் அடியவன் கேட்கிறேன் "என இறைவனிடம் அடிபணிந்தார் சாமுவேல்.

அன்புக்குரியவர்களே இறைவன் எப்போதும் நம்முடன் உரையாடிக்கொண்டே இருக்கிறார். இறைவேண்டல் வழியாக, இறைவார்த்தை வழியாக,இயற்கை வழியாக,உறவுகள் மற்றும் நண்பர்கள் வழியாக, நம்முடைய மனச்சான்று வழியாக, நம்முடைய அன்றாட நிகழ்வுகள் வழியாக அவர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதைக் கேட்க நமதுள்ளம் தயாராக இருக்கிறதா? பலவேளைகளில் உலகக் காரியங்கள்,கேளிக்கைகள், அசட்டைத்தனம், மெத்தனப்போக்கு போன்றவற்றால் தன்னிலை மறந்த மனநிலையில் வாழும் நாம் இறைவனின் குரலைக் கேட்க மறந்து விடுகிறோம். அவர் குரல் நம் உள்ளத்தில் ஒலிக்கின்ற உணர்வே இல்லாமல் இருந்துவிடுகிறோம். இத்தகைய மனநிலையை அகற்றி சாமுவேலைப் போல எப்போதும் அவர் குரலைக் கேட்கத் தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

சாமுவேலைப் போலவே இன்றைய நற்செய்தியில் நாம் காணும் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மெசியாவைக் கண்டறியும் ஆர்வத்தில் அவர் தங்குமிடப்பற்றி வினாவினார்கள். "வந்து பாருங்கள் "என அவர் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் சென்று பார்த்தார்கள். மெசியாவைக் கண்டார்கள். நம்பினார்கள். கடவுளின் குரலைக் கேட்பதால் நாம் ஒருபோதும் வீழ்ந்து போவதில்லை. வாழ்வு பெறுகிறோம்.சவால்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் திடமுடன் வாழ வழிவகுப்பது கடவுளின் வார்த்தைகள்.

அப்படிப்பட்ட கடவுளின் வார்த்தைகளைக் கேட்க நம் உள்ளமும் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.இதையே நாம் அனைவரும் தூய ஆவியின் ஆலயங்கள் ,எனவே தேவையற்றவைகளுக்கு நம் வாழ்வில் இடமளிக்கக் கூடாது என்ற கருத்தின் மூலம் இரண்டாம் வாசகம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இன்றைய சமூக சூழலில் இறைவனின் குரல் இயற்கை சீற்றங்கள்,பருவ மாறுபாடுகள், நீதிக்கான போராட்டங்கள் மூலமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பருவம் மாறி பொழிகின்ற மழை,புயல் தாக்கங்கள்,வேளான் சட்டத்திற்கெதிரான விவசாயிகள் போராட்டம்,உலகத்தையே உலுக்கும் கொரோனா போன்ற தொற்றுநோய்கள் இவை அனைத்தின் மூலமும் கடவுள் நம்மிடம் என்ன சொல்லவருகிறார் என்பதை மனம் திறந்து கேட்கமுயற்சிப்போம். இவற்றால் எனக்கு எந்த பாதிப்புமில்லை என உறங்கிக் கிடந்தால்,கதையில் நாம் கண்ட இளம்பெண் தன் தாயின் குரலைக் கேட்காமல் அவரைக் காப்பாற்ற இயலாமல் போனதைப் போல, நாமும் வாழ்வை இழக்க நேரிடும். எனவே இக்கருத்துக்களை மனதில் கொண்டு இறைவனின் குரலை உள்ளத்தால் உணரும் வரம் கேட்போம்.

இறைவேண்டல்
எங்களோடு உரையாடும் இறைவா! உம் குரலைக் கேட்கும் வண்ணம் எம் இதயத்தின் காதுகளைத் திறந்தருளும்.உலக உறக்க நிலையிலிருந்து எம்மை எழுப்பி உமது வார்த்தைகளுக்கு அடிபணிந்து, உம்மை எம் வாழ்வில் கண்டடைய வரம் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இளமையில் பயனுள்ளவற்றை தேடுவோம்

அன்பு நண்பர்களே! இன்று ஆண்டின் பொதுக்காலம் 2-ம் ஞாயிறு வழிபாட்டிற்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் நமது இளமையையும் இளமைப்பருவத்தில் நமது உடலைப் பேணவும் அழைப்பு விடுக்கிறது. இளமைப் பருவம் என்பது நமது வாழ்வில் மிக முக்கியமான பருவம். இன்று தொலைத்துவிட்டு நாளைத் தேடுவது சரியானத் தேடலாக அமையாது. தேட வேண்டிய நேரத்தில் சோம்பேறிகளாக இருந்துவிட்டு பின்னாளில் தேடுவதில் எந்த பயனும் இல்லை. இளையோருக்கான கூடுகை ஒன்றில் இளையோரின் சுறுசுறுப்பை சோதிக்க வேண்டி அவர்களிடம் காலையில் எழுவது பற்றி கேட்கப்பட்டதாம். காலை 3 மணிக்கு எழுந்தால் அவர் முனிவர், 4 மணிக்கு எழுந்தால் அவர் ஞானி, 5 மணிக்கு எழுந்தால் அவர் அறிஞர், 6 மணிக்கு எழுந்தால் அவர் சாதாரண மனிதர் என்றார். அப்போது ஒரு இளவல் 7 மணிக்கு எழுபவர்கள் யார்? எனக் கேட்டான். இவ்வாறாக நம் இளைஞர்கள் சோம்பேறிகளாக மாறிக் கொண்டு வருகின்றனர். அதுபோக அவர்கள் பயன்படுத்தும் அலைபேசிகளும் சாபக்கேடுகளாக மாறிக் கொண்டே இருக்கின்றன. அண்மையில் ஒரு கணக்கெடுப்பின்படி 1000 மாணவர்களிடம் அவர்கள் கைப்பேசியை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என வினவிய போது மாணவர்களில் 67 பேரும், மாணவியரில் 39 பேரும் அதை ஆபாச படங்கள் பார்க்கப் பயன்படுத்துகிறார்கள் என தெரிய வந்தது.

இதுபோன்ற சின்னசின்ன காரணங்களால் நம் இளையோரின் மனமானது சிதறடிக்கப்படுகிறது. இதனால் இளமையில் பயனுள்ளதை தேடுவோம் எனும் மனநிலை மாறி இருப்பதை கொண்டு வாழ்வோம் எனும் குறுகிய மனநிலைக்கு மாறி வருகிறார்கள். ஆனால் இன்றைய முதல் வாசகம் பயனுள்ளதைத் தேடவும், அதற்கு நம்மை முழுமையாக திறந்து கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. சாமுவேலை இறைவன் அழைத்தபோது அவர் முழுமையாக முன் வந்ததை பார்க்கிறோம். இது அவரின் தேடலுக்கு கிடைத்த வெகுமதி. எனவேதான் ஆண்டவர் அவரோடு இருந்தார்.

அதுபோல பல விவிலிய மாந்தர்கள் உள்ளார்கள். அவர்களில், தொடக்க நூலில் வரும் யோசேப்பு கடவுளுக்கு அஞ்சினார் பதினேழாவது வயதிலேயே அவர் மற்ற எல்லாச் சகோதரர்களைவிட சிறந்து விளங்கினார் என விவிலியம் சான்று பகர்கிறது. நாமானின் வேலைக்காரச் சிறுமி கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை அவர் நாமான் வழியாக செயல்படுத்திக் காட்டுவதையும் பார்க்கிறோம். இவ்வாறு நாம் காணும் விவிலிய மாந்தர்கள் தங்கள் தேடுதலின் வழி தங்களையும் தங்கள் எதிர்கால வாழ்வையும் மேம்படுத்திக் கொண்டவர்கள். தேடுபவர்கள் பலனின்றி போவதில்லை. ஆனால் தேடுகின்ற நாம் துடிப்புடன் தேட வேண்டும். வாழ்வின் மீது பேரார்வம் கொள்ளும் போது அந்த பேரார்வம் நம் வாழ்வில் நாம் வெற்றியடைய வழிவகுக்கும். நாம் சோம்பேறிகளாக இருந்தால் நம் வாழ்வு சீர்குலையும். அதற்கும் நம் உடலைக் காத்தக் கொள்ள வேண்டும் என இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துக் கூறுகிறது.

நமது உடல் தூய ஆவி உறையும் ஆலயம் எனில் நாம் அதனைப் பாதுகாக்க வேண்டும். அவரின் உந்துதல் நாம் பெற, அதற்கு ஏற்ப நம் வாழ்வை பாதுகாக்க வேண்டும். சோம்பேறிகளாக இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் நீதிமொழிகள் நூல் பதில் தருகிறது 6:10-11 - இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிதுநேரம் உறங்குங்கள், கையை மடக்கிக் கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள். வாழ்க்கை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல பாயும். ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப் போல் தாக்கும் என்கிறது. கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட வாழ்வைப் பயன்படுத்தாவிடில் நாம்தான் வீழ்வோம்.

தேடல் உள்ள மனங்களிலே தினமும் பசியெடுக்கும். சோம்பேறிகளாக இருந்தால் பசியெடுக்க வாய்ப்பில்லை. இன்றைய நற்செய்தியில் வரும் சீடர்களின் பின் தொடர்வும், தேடுதலும் அவர்கள் மெசியாவைக் காணச் செய்தது. அவர்களே நமக்கு சிறந்த முன்மாதிரிகள். இளைமைப்பருவத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பலனை சுவைக்கிறார்கள். அவர்கள் தேடலின் பலனை பிறரோடு பகிர்ந்து பிறரும் தேடலின் அருமையை உணரச் செய்வதைப் பார்க்கிறோம். நாமும் இவர்களைப் போல மாறலாமே. முடியாது என்று எதுவும் இல்லை. நம்முயற்சி மலையையே தகர்க்கும். ஆனால் தேவை நமது சிறு தேடுதல் அல்லது முயற்சியே.

இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் தனது அன்பின் மகிழ்சி எனும் திருத்தூது ஊக்கவுரை எண் 260-261-ல் நமது குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள். மிண்ணனு சாதனங்கள் வழி யாரிடம் பேசுகிறார்கள்? உடலவில், மனதளவில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பதை பெற்றோரிடம் கேட்கின்றார். நீங்கள்தான் உங்கள் குழந்தைகள் சோம்பேறிகளாக, மந்தமாக, மந்தைகளாக இருக்க காரணம். நீங்கள் சரிவர வளர்காததே காரணம். அவர்களின் வாழ்வை சரிவர அமைத்துக் கொடுப்பதும் உங்கள் கடமையே.

அதுபோல கிறிஸ்து வாழ்கிறார் எனும் திருத்தூது ஊக்கவுரையின் வழி இளையோர் தேர்ந்து தெளிய அழைப்பு விடுக்கிறார். அதற்கு இந்த சமூகம் என்ன செய்யலாம் என்பதையும் சுட்டிக்காட்டி இளந்தலைமுறைக்கு வழிவிட, உருவாக்க கூறுகிறார். முரண்பாடுகளை எதிர்கொண்டு சென்று புதிய வாழ்வை வாழ்ந்து காட்ட அழைக்கிறார். சிந்தித்துப் பார்ப்போம். நமது இளையோரை எப்படி உருவாக்கலாம்?

ஞாயிறு திருப்பலிகளில் முழுமையாக பங்கெடுக்கத் தூண்டலாமே!

 1. அலைபேசி, இணையதளங்கள் போன்றவற்றால் ஏற்படும் தீமைகளை உணரச் செய்து அவாற்றின் தேவையை குறைக்கச் சொல்லலாம்.
 2. பங்கின் பொறுப்புகளில் அமர வைக்கலாம்.
 3. அவர்களை குழுவாக உருவாக்கி அவர்களின் ஆற்றலை வெளிக் கொணரலாம்.
 4. இளையோரின் குரலுக்கு செவி கொடுக்கலாம்.

இதுபோன்ற பலவற்றை நாம் செய்யலாம். அதன்வழி பயனுள்ளதை தேட இளமைக் காலத்தை பயன்படுத்தலாம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser