மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாஸ்கா காலம்-இரண்டாம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர்கள்பணி 2: 42-47|1பேதுரு 1:3-9 |யோவான் 20:19-31

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இயேசு உயிர்த்தார். உயிர்த்து தன் சீடர்களுக்குக் காட்சித் தந்தார் என்பதை இன்றைய நற்செய்தி பறைசாற்றுகிறது.

உயிருள்ளவரை இறந்தோரிடையே தேடுவானேன். அவர் இங்கு இல்லை. உயிர்த்துவிட்டார் (லூக் 24:5-6). கழுமரத்தில் அவரை ஏற்றிக் கொன்றுபோட்டார்கள். கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார். அவரோடு உண்டு குடித்த நாங்களே சாட்சிகள் என்றனர் (அப். பணி 10:40-42).

ஆம் இன்றைய வார்த்தை வழிபாடு மூன்று நிலைகளில் நம் வாழ்வை அமைக்க அழைப்பு விடுக்கிறது.

 • மன்னிப்பின் மூலம் சமாதானம் : என் தந்தை என்னை அனுப்பியது போல நான் உங்களை அனுப்புகிறேன். நான் கொண்டு வந்த சமாதானத்தை உலகிற்குக் கொடுங்கள் என்கிறார்.
 • மன்னிப்பின் மூலம்தான் சமாதானம் உண்டாகும். எனவே ஒப்புரவாகும் திருவருட்சாதனத்தை வழங்கி யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
 • நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

புனித தோமையாரின் விசுவாச வாழ்வையும், சிறந்த மனிதத் தன்மையையும் விவிலியத்தில் நாம் காண முடியும்.

நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா. 11:16) என்று இயேசுவோடு இணைகின்ற மனப்பக்குவம்.

தன் தந்தையைப் பற்றி கூறிய இயேசுவிடம், நீ எங்கு செல்கிறீர் என்பதே தெரியாது இருக்க நீர் போகும் வழியை எப்படி அறிவோம் (யோவா. 14:5). இது அவரது திறந்த உள்ளம்.

சீடர்கள் தாம் இயேசுவைக் கண்டோம் என்றபோது நான் அவரது தழும்பைப் பார்த்து, விலாவில் விரலை விட்டால் ஒழிய நான் நம்பமாட்டேன் (யோவா. 20:25) என்றது - இவரது திறந்த மனம்.

ஆண்டவர் இயேசு காட்சி தந்தபோது தன் இதய கண் திறக்கப்பட என் ஆண்டவரே என் தேவனே என்று விசுவாச அறிக்கையிட்டார் (யோவா. 20:28).

இந்த விசுவாசம்தான் பிறரோடு பகிர்ந்துகொள்ள அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.

நம் விசுவாசம் நம்மில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்

இன்றைய முதல் வாசகம் இதைத்தான் காட்டுகிறது. ஆதி கிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் போதனைகளுக்குச் செவிமடுத்தார்கள். கூடிச் செபித்தார்கள். அப்பத்தைப் பிட்பதிலும் இறை வேண்டலிலும் உறுதியாக இருந்தார்கள். தங்கள் உடைமைகளை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர்.

பகிர்வதே கிறிஸ்தவ வாழ்வு - இயேசு தன்னையே நமக்குப் பிட்டுக் கொடுத்தார் - பகிர்ந்தளித்தார்.

தன்னையே வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தன்னைப் பகிர்ந்தளித்தார். ஆதலால் வானகத் தந்தை எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அளித்து அவரை உயர்த்தினார் (பிலி. 2:7-9).

இன்றைய திருச்சபை ஒரு சவாலாக அமைய அழைக்கப் படுகிறது. அதிகாரத்தின் நிறுவனமாக அல்ல. மாறாக பகிந்தளிக்கும் திருச்சபையாக இது தன்னையே வெறுமை யாக்குவதின் மூலம் தான்.

 • உலகப் பொருட்களைப் பகிர்வது
 • திருவருட்சாதனங்களைப் பகிர்ந்தளிப்பது
 • அதோடு நாம் பெற்ற விசுவாசத்தைப் போதித்துப் பிறருக்குக் கொடுப்பது.
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கை விடுதலை அளிக்கும்

கபிரியேல் மார்சல் என்னும் பிரான்சு நாட்டு தத்துவ ஞானி, நம்பிக்கை என்றால் என்ன என்பதை விளக்க ஓர் அழகான உவமையை நம் கண்முன் வைக்கின்றார். நாம் நமது நண்பரை இரயிலில் ஏற்றிவிட இரயில் நிலையத்திற்குச் செல்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவர் இரயிலுக்குள் ஏறிய பிறகு கூட அவரோடு பேசிக்கொண்டு நிற்கின்றோம். வண்டி புறப்படுகின்றது. நாம் கையசைக்கின்றோம். மெல்ல, மெல்ல நமக்கும். நமது நண்பருக்குமிடையே உள்ள தூரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒரு கட்டத்திலே நமது நண்பரை நம்மால் பார்க்க முடியவில்லையென்றாலும் நமது மனம் முழுவதும் அவரது பிரசன்னம் நிறைந்திருக்க, அவரோடு நமது மனம் பயணம் செய்கின்றது.

இந்த உவமையிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை உண்டு. நமது மனத்திற்கு நமது உடலைத் தாண்டிச் செல்லும், கடந்து செல்லும், பிரிந்து செல்லும், பறந்து செல்லும் ஆற்றல், வல்லமை, சக்தி உண்டு! இந்த ஆற்றலைப் பயன்படுத்தி நாம் கடவுளுடைய பாதத்தைத் தொடலாம். இப்படிக் கடவுளின் திருவடிகளைத் தொட நாம் மேற்கொள்ளும் திருப்பயணத்திற்குப் பெயர்தான் நம்பிக்கை. கடவுளின் பாதத்தில் நாமிருக்கின்றோம் என்ற எண்ணம், நம்பிக்கை நமது மனத்தில் எழும்போது அங்கே அச்சமிருக்காது, அங்கே அவநம்பிக்கையிருக்காது (நற்செய்தி].மாறாக அங்கே மாறாத மகிழ்ச்சி இருக்கும் (இரண்டாம் வாசகம்).

இன்றையச் சூழலிலே பலருடைய மனங்களில் அச்ச உணர்வுகள்! கடற்கரையிலிருக்கும் காகங்கள் ஊர் பக்கம் பறந்தால்கூட மீண்டும் சுனாமி என்னும் அரக்கன் வந்துவிடுவானோ என்ற பயம். அனைத்தையும் இழந்த எங்கள் வாழ்க்கையில் இனியொரு இனிய உதயம் பிறக்குமா? என்ற சந்தேகம் பலருடைய மனதிலே எழுந்து மறைந்துகொண்டிருக்கின்றது. இப்படி கலங்கி நிற்கும் மக்களுக்கு ஆண்டவர் தரும் ஆறுதல் என்ன?

எனதருமைச் செல்வங்களே! நம்பிக்கையால் ஆகாதது ஒன்றுமில்லை! முதலில் நீங்கள் முதல் கிறிஸ்துவர்களைப் போல் ஒருவரையொருவர் நம்புங்கள். நம்பிக்கை உங்களை ஒரே குடும்பமாக்கும். எங்கே தனிமை இல்லையோ அங்கே அச்சமுமிருக்காது. அவநம்பிக்கையுமிருக்காது.

இரண்டாவதாக எனது சீடர்களைப் போல் என்மீது நம்பிக்கை வையுங்கள். இன்றைய நற்செய்தியிலே என் சீடர் தோமா கூறுவது போல, நான் ஆண்டவர். இந்த உலகத்தை ஆண்டவர். ஆள்பவர், ஆளப் போகின்றவர். நான் கடவுள். நான் எல்லாத் துன்பங்களையும் துயரங்களையும் கடந்து நிற்பவர்.

எனது காலடியில் நீங்கள் இருப்பதாக நினையுங்கள் - நம்புங்கள். உங்கள் நினைவு - உங்கள் நம்பிக்கை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.
மேலும் அறிவோம் :

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3).
பொருள்:

அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஓர் அப்பா தனது 12 வயது மகனிடம் தன் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு வேப்ப மரத்தில் ஏறி, அதன் ஒரு கிளையில் அமர்ந்து கீழே குதிக்கச் சொன்னார். முதலில் அச்சிறுவன் மறுத்தாலும், அவன் அப்பா அவனைப் பிடித்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்ததால் அச்சிறுவன் குதித்தான். ஆனால் அப்பா அவனைத் தாங்கிப் பிடிக்கவில்லை; சிறுவன் கீழே விழுந்து, கால் பிசகி அழுதான். அவன் அப்பா அவனிடம், “மகனே! உனக்கு நான் ஒரு முக்கியமான பாடம் கற்றக்கொடுக்க விரும்பினேன். அது என்னவென்றல், உலகில் எவனையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே" என்று சொல்லிச் சிரித்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் உலகில் யாரும் எவரையும் முழுமையாக நம்ப முடியவில்லை. நண்பர்கள் தங்களது நண்பர்களை நம்புவதில்லை. ஒருவர் கடவுளை நோக்கி, "கடவுளே, எனது நண்பர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்; என் எதிரிகளை நான் சமாளித்துக் கொள்கிறேன்" என்று செபித்தார்! இந்நிலையில் கடவுள் நம்பிக்கையும் தேய்ந்த கொண்டு போகிறது. "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" (லூக் 18:8) என்று பெரிய கேள்வியைக் கேட்டுள்ளார் கிறிஸ்து.

இன்றைய நற்செய்தியில், அறிவியல் மூளை கொண்ட தோமா, கிறிஸ்துவை கண்ணால் கண்டு அவரைக் கையால் தொட்டுப் பார்த்தால் மட்டுமே அவர் உயிர்த்தார் என்பதை நம்புவதாகச் சொல்லுகிறார். ஆனால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்டபோது, “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" (யோவா 20:28) என்று நம்பிக்கை அறிகையிடுகின்றார். அவநம்பிக்கையின் அதாலப் பாதாளத்தில் விழுந்த தோமா, நம்பிக்கையின் சிகரத்தைத் தொடுகிறார். தோமாவின் அவநம்பிக்கை நமது நம்பிக்கைக்கு வித்தாக அமைந்துள்ளது. தோமாவின் அவநம்பிக்கையைக் கண்டித்து கிறிஸ்து அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவா 20:29) எனக் கூறினார். நாம் தோமாவைவிடப் பேறுபெற்றவர்கள். ஏனெனில் நாம் கிறிஸ்துவைக் காணாமலேயே அவரை நம்புகிறோம்.

மேலும் தோமாவின் நம்பிக்கை, கிறிஸ்துவின் பாடுகளுக்கும் அவருடைய உயிர்ப்புக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத தொடர்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. உயிர்த்த ஆண்டவர் தம் உடலில் இருந்த பாடுகளின் தழும்பைக் காட்டுகின்றார். வரலாற்று இயேசு வேறு, நம்பிக்கையின் கிறிஸ்து வேறு என்று ஒரு சிலர் கிறிஸ்துவைக் கூறுபோடுகின்றனர். கிறிஸ்து தமது உடலில் இருந்த தழும்புகளைக் காட்டியதன் மூலம் வரலாற்று இயேசுவே நம்பிக்கையின் கிறிஸ்து என்பதை எண்பிக்கிறார்.

நம்பிக்கையின் உச்சக்கட்டம் கடவுளிடம் சரணடைவதாகும். தோமா, “என் ஆண்டவரே! என் கடவுளே!" என்று கூறிக் கிறிஸ்துவிடம் சரணடைந்தார். அவ்வாறு செய்ய நமது நம்பிக்கை நமக்குக் கை கொடுக்கிறதா? நமது நம்பிக்கை உயிரோட்டம் உள்ள நம்பிக்கையா?

ஒருவர் ஒரு மலை உச்சியின் விளிம்பில் நடந்தபோது, கால் இடறிக் கீழே விழுந்தார். நல்ல வேளையாக மலையின் இடையிலிருந்த ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு, “கடவுளே என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார். இறுகப் பற்றிக் கொண்டிருந்த மரக் கிளையிலிருந்து கைகளை எடுத்துவிட்டுக் கீழே குதிக்கும்படி கடவுள் அவரைக் கேட்டார். ஆனால் அவர் கிளையைப் பிடித்துக் கொண்டே, “கடவுளே என்னைக் காப்பாற்று " “ என்று கத்தினார். அவரைப் போலவே நாமும் பணம், பதவி, பாலின்பம் போன்ற கினைகளைப் பற்றிக் கொண்டு கடவுள் நம்மைக் காப்பாற்றும்படி கேட்கின்றோம். ஆனால் கடவுள் கூறுவது: " நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" ( மத் 6:24). நம்பிக்கையின் தந்தை எனப்படும் ஆபிரகாம்,"தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்" (எபி 11:8). எனவே அவர் சரியான பாதையில் சென்றார். "நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது" (எபி 11:4).

நமது நம்பிக்கை சோதிக்கப்பட வேண்டும். பொன் எவ்வாறு நெருப்பில் புடமிடப்படுகிறதோ அவ்வாறே நமது நம்பிக்கையும் புடமிடப்பட வேண்டும் என்று இன்றைய இரண்டாவது வாசகத்தில் கூறுகிறார் தூய பேதுரு. நாம் துன்புறும்போது, “நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுகிறவர்கள் பேறு பெற்றோர்" (மத் 5:10) என்ற ஆண்டவரின் அருள்வாக்கை நினைவுகூர வேண்டும். கடவுள் நம்மைக் கண்டிப்பாரா? “ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்" (எபி 12:6). எனவே, நாம் துன்புறும்போது அதைக் கடவுளின் சாபமாகக் கருதாமல், கடவுளின் அன்பின் வெளிப்பாடாகக் கருத வேண்டும்.

நம்பிக்கை மட்டும் போதாது; நம்பிக்கை அன்பு மூலம் எண்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ மதத்தின் சுருக்கம், "அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை” (கலா 5:6). தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறையை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது. "நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்" (திப 2:44). அவர்களிடம் நம்பிக்கையும் அன்பும் இணைந்திருந்தது. மன ஒற்றுமையும் பகிர்வும் கோலோச்சியது. திருச்சபையை ஆவியின் இயக்கமாக, அன்பியமாகக் கட்டி எழுப்புவது காலத்தின் கட்டாயமாகும்.

திருமணமான ஒரு பெண்ணிடம், "அன்பு பெயர்ச் சொல்லா? வினைச் சொல்லா? ” என்று கேட்டதற்கு அவர் கூறியது: "என் கணவர் உள்ளூரில் இருக்கும்போது அன்பு வினைச் சொல்; அவர் வெளியூர் போய்விட்டால் அன்பு வெறும் பெயர்ச் சொல்." அன்பு என்ற பெயர்ச் சொல்லை வினைச் சொல்லாக மாற்றுவதே நமது கிறிஸ்தவ அழைத்தலாகும். "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (யோவா 3:18).

ஒரு நோயாளிக்குக் கழுத்தில் கட்டி இருக்கிறது. ஆனால் மருத்துவர் அறுவைச் சிகிச்சையை அவர் வயிற்றில் செய்கிறார். ஏன்? “தன்னை நம்பினவர்களின் கழுத்தில் கத்தி வைக்க மாட்டார்” அந்த மருத்துவர். மனிதர்கள் தங்களை நம்பினவர்களின் கழுத்தில் ஒருவேளை கத்தி வைக்கலாம். ஆனால் கடவுள் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார். கடவுளை முழுமையாக நம்புவோம். நமது நம்பிக்கை வீண் போகாது, “நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (எபி 11:1).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஐயுறுவது பயனுள்ளது

"உதட்டளவில் மறையுண்மைகளை நம்பிக்கை அறிக்கை செய்வதைவிட, தேவையான அளவு நியாயமான வகையில் ஐயுறுவது பயனுள்ளது”, அறிஞர் டென்னிசனின் இந்தக் கூற்று ஆழமான சிந்தனைக்குரியது. இறை நம்பிக்கையை ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்துவது தவறல்ல.

திருத்தூதர்களிலேயே சற்று வித்தியாசமானவர் தோமா. கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு மாறுபட்ட பரிமாணம்.

சிறுவன் ஒருவன் தன் தந்தையின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உற்சாகமாகச் சொன்னானாம். “அப்பா, அப்பா, நான் உங்க அம்மாவைக் கட்டிக்கப் போறேன்" என்று. சற்று அதிர்ச்சி அடைந்த தந்தை அதட்டினார்: “சீச்சீ, என்ன பேச்சு இது? அதுவும் இந்த வயதில்”. மகன் கேட்டான்: “நீங்க மட்டும் என் அம்மாவைக் கட்டிக்கலாம், நான் உங்க அம்மாவைக் கட்டிக்கக் கூடாதோ!” என்ன பதில் சொல்வது?

நம்பிக்கை தொடர்பாக நாம் எழுப்பும் கேள்வி, இப்படிச் சிறுபிள்ளைத்தனத்தால் அல்ல, விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல, கிண்டல் ஏளனத்துக்காக அல்ல. வலுப்படுத்திக் கொள்வதற்காக நம்பிக்கையை வளப்படுத்திக் கொள்வதற்காக!

 	
	துன்பப்படாதவன் வாழவே இல்லை 	
	தோல்வியுறாதவன் முயலவே இல்லை 	
	விம்மியழாதவன் சிரித்ததே இல்லை 	
	சந்தேகப்படாதவன் சிந்தித்ததே இல்லை 

தட்டுத்தடங்கல் இல்லாத தார்ச் சாலையில் அலுங்காமல் குலுங்காமல் செல்லும் சொகுசுப் பேருந்து அல்ல நம்பிக்கை வாழ்வு. மாறாக அது காட்டுப் பாதையில் செல்லும் மாட்டுவண்டி. கடல் அலைகளில் தத்தளித்து மிதக்கும் கட்டுமரம்.

"அழியக் கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1பேதுரு 1:7). இறை நம்பிக்கை சோதிக்கப்பட வேண்டும் என்று தேவையோ நியதியோ இல்லை. இருப்பினும், சோதனையும், துன்பமும் சந்தேகமும் ஊடுருவாத நம்பிக்கை வாழ்வு ஒன்று இல்லை. “என் அன்பார்ந்த மைந்தர் இவரே" (மத்.3:17) என்று இறைத்தந்தையைப் பூரிக்க வைத்த இயேசுவும் “என் இறைவா... ஏன் என்னைக் கைவிட்டீர்? " (மத்.27:46) என்ற கதறும் காலமும் இருந்தது.

'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கைகளை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்" (யோவான். 20:25) என்று கூறிய தோமாவை மட்டமாகக் கருதத் தேவையில்லை. அந்த சந்தேகத்தில் கூட அவருடைய எளிய உள்ளமும், உண்மையை அரியத் துடிக்கும் ஆர்வமும் மிளிரவில்லையா? இங்குகூட தோமா ஐயுற்றது இயேசுவை அல்ல. உயிர்த்த இயேசு பற்றி அவருடைய தோழர்கள் கொடுத்த தகவலைத்தான். அவர் தனது சொந்த அனுபவத்தில் தன் இறை நம்பிக்கையைக் கட்டி எழுப்ப விரும்பினார். அதில் என்ன தவறு? இயேசுவின் மீது தோமாவுக்கு அபார அன்பு இருந்தது. 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்" (யோவான் 11:16) என்று வீரமுழக்கம் செய்தவர்தானே அவர்!

"காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'” என்று இயேசு சொன்னாரே தவிர “காண ஆசைப்படுவது தவறு" என்று கூறவில்லையே! ஏனோதானோவென்று பட்டும்படாமலும் தொட்டும் தொடமலும் வாழும் வாழ்வைவிட, இயேசுவையும் அவருடைய போதனை களையும் சந்தேகித்துக் கேள்விகேட்டு ஆய்ந்தறிந்து பின் அவருக்கு அடி பணிந்து முற்றிலும் சரணடைந்து வாழும் வாழ்வு பன்மடங்கு மேலானது. “நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" (யோவான் 20:28) என்ற தோமாவின் சொற்கள் அதைத்தானே உணர்த்துகின்றன! விசுவாசத்துக்கு விடைதேடுவதோ, விளக்கம் கேட்பதோ அப்படி ஒன்றும் பெரிய தவறல்ல. “நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்" (1 பேதுரு 3:15)

சந்தேகம், சோதனை, துன்பம் இவற்றால் பதம் பார்த்துப் பக்குவம் பெற்ற நம்பிக்கை வாழ்வு கனிகள் நிறைந்தது (தி.ப.2:42-47) தொடக்கக் கால கிறிஸ்தவர்களின் இறைநம்பிக்கை வாழ்வு அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் தங்கள் முழு வாழ்வையும் மீட்கப்பட்ட வாழ்வாகக் கருதினர். செப வாழ்வு, சமூகப் பொருளாதார வாழ்வு என்றெல்லாம் பிளவுபடுத்திப் பார்த்ததில்லை. அவர்களுடைய கொள்கை களுக்கும் செயல்களுக்கும் இடையே எவ்வித இடைவெளியும் இருந்த தில்லை. அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் இடையே பெரிய மலையோ பள்ளத்தாக்கோ இல்லை.

சுவாமி அ.ம. வரப்பிரசாதம், சே.ச. (ஒரு காலத்தில் தமிழக இயேசு சபை மாநிலத் தலைவராக இருந்தவர்) ஆழமான சிந்தனையாளர். "உள்ளதைச் சொன்னால்” என்ற அருமையான அவரது நூலில் ஒரு கார்ட்டூன். உறுத்தலுக்கும் வருத்தத்துக்குமிடையே நான் மிகவும் இரசித்த கேலிச் சித்திரம்.

அழகான ஒரு மேசை. அதன்மேலே முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி. மேசை முழுவதும் பரப்பிக் கிடந்தன அழகுச் சாதனங்கள். கண்ணாடிக்கு முன்னே எலும்பும் தோலுமாக இருமிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி. அந்த மனிதன் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருக்கிறான்: "எனக்குக் காசநோய் என்கிறார்கள். சாதிவெறி, வரதட்சனை, அநீதின்னு எத்தனையோ வியாதி எனக்கு இருக்காம். நான் பார்க்க அகோரமாயிட்டேனாம். அதனால் இப்ப என்ன கெட்டுப் போச்சு? இதோ அழகுச் சாதனங்கள். இவற்றைக் கொண்டு என்னை அழகுபடுத்திக் கொள்வேன். இவையெல்லாம் இருக்கிற வரை எனக்குக் கவலை இல்லை” நோயாளியின் முதுகில் “இறை நம்பிக்கை” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

பவுடர் என்ற நவநாள், சென்ட் என்ற பூசை, லோஷன் என்ற திருவிழா, திருப்பயணம் போன்ற வெறும் அழகுச் சாதனங்களைக் கொண்டு, எலும்புருக்கி நோயை - விசுவாச வாழ்வில் காணக்கூடாத அநீதி, வரதட்சனை, சாதி முதலியவற்றைக் குணப்படுத்த முடியாது.


 	நம்பிக்கையில் தடுமாறலாம். ஆனால் தடம் (பாதை) மாறக்கூடாது. 	
	யூதாஸ் தடுமாறினான். முடிவில் தடம் மாறினான். 	
	பேதுரு தடுமாறினார். ஆனால் தடம் மாறவில்லை. 
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சந்தேகப்படுவோரின் காவலரான புனித தோமா

இறை இரக்கத்தின் ஞாயிறு

கடவுள் கருணையே வடிவானவர் என்பதை எல்லா சமயங்களும் சொல்கின்றன. கருணை வடிவான கடவுளைக் கொண்டாட திருஅவை நம்மை இன்று அழைக்கிறது. உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, கடவுள் கருணையின் ஞாயிறு, அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கிறோம். இந்த இறை இரக்கத்தின் ஞாயிறை, வழிபாட்டு காலத்தின் ஒரு பகுதியாக, 2000மாம் ஆண்டில் இணைத்தவர், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய இரவு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இறையடி சேர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின், 2011ம் ஆண்டு, இதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், அருளாளராகவும், மீண்டும், 2015ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனிதராகவும் உயர்த்தப்பட்டார்.

இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல நேரங்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். முக்கியமாக, சந்தேகமும் அச்சமும் நம் வாழ்வைச் சூழ்ந்தாலும், இறை இரக்கத்தை நம்பி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையமுடியும் என்பதை, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், தன் வாழ்வில் உணர்ந்ததால், அவர் இறை இரக்கத்தின் ஞாயிறை உருவாக்கினார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இதற்கு நேர் மாறாக, இறைவனின் இரக்கமோ, கருணையோ தங்களுக்குத் தேவையில்லை, தங்களை மீறிய சக்தி எதுவும் இல்லை, என்ற ஆணவத்துடன் செயலாற்றும் பல உலகத் தலைவர்கள் இன்று பல நாடுகளில் ஆட்சி செலுத்தி வருகின்றனர். கடவுளுக்கு இணையாக, அல்லது, கடவுளுக்கும் மேலாக தங்களையே உயர்த்திக்கொள்ளும் இத்தலைவர்களின் ஆணவம் நிறைந்த மனநிலை, மனித வரலாற்றில் அவ்வப்போது வெளிப்பட்டவண்ணம் உள்ளது.

111 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 14, மற்றும் 15ம் தேதிகளில் நிகழ்ந்த ஒரு துயர நிகழ்வு மனிதரின் ஆணவம் நிறைந்த மனநிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இறைவனோ, வேறு எந்த சக்தியோ தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்று ஆரம்பித்த அந்நிகழ்வு, துயரத்தின் ஆழத்தில் புதைந்த வரலாற்று நிகழ்வையும் இன்று நாம் சிந்திக்க வேண்டும். 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் அட்லாண்டிக் கடலில் மிதந்து சென்ற இரு மலைகள் மோதிக்கொண்டன. அவற்றில் ஒன்று, பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை உருவாக்கிவந்த பனிப்பாறை. மற்றொன்று, மூன்று ஆண்டுகள் மனிதர்கள் உருவாக்கிய செயற்கையான இரும்பு எஃகு மலை. கடலில் மிதந்து வந்த இந்த இரும்பு மலையின் பெயர் 'டைட்டானிக்'.

1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்தின் Southampton துறைமுகத்தில் இருந்து 'டைட்டானிக்' கிளம்பியபோது, 'கடவுளாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' (“Even God himself couldn't sink this ship.”) என்று இந்தக் கப்பலை இயக்கிய கேப்டன் Edward John Smith சொன்னாராம். இந்தப் பெருமையுடன், இறுமாப்புடன் கிளம்பிய அந்தக் கப்பல் ஜந்தாம் நாள் நள்ளிரவு பனிப்பாறையில் மோதியது. ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை, இரண்டு மணியளவில், அந்தக் கப்பல் இரண்டாகப் பிளந்து, நடுக்கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் அந்த இருளில், குளிரில், கடலில் உயிர் துறந்தனர்.

உலகிலேயே நகர்ந்து செல்லக்கூடிய மிகப்பெரிய அரண்மனை என்றெல்லாம் பறைசாற்றப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சமாதியாகி, நமக்குத் தேவையான பாடங்களைப் புகட்டி வருகிறது. எதுவும், யாரும், அது கடவுளே ஆனாலும் சரி, எவ்வகையிலும் தங்களைத் தீண்டமுடியாது என்ற இறுமாப்பு ஏற்பட்டால், வாழ்வில் என்ன நிகழக்கூடும் என்பதை, கடந்த 111 ஆண்டுகள் நமக்கு நினைவுறுத்தி வருகிறது, 'டைட்டானிக்' பயணம்.

ஒரு கப்பல் கடலில் சந்திக்கக்கூடிய பல்வேறு ஆபத்துக்களையும் முன்கூட்டியே நினைத்துப்பார்த்து, அந்த ஆபத்துக்களை வெல்லும் வகையில் 'டைட்டானிக்' உருவாக்கப்பட்டது. எவ்வகை ஆபத்து வந்தாலும், இந்தக் கப்பல் நீரில் மூழ்காது என்பது இதை உருவாக்கியவர்களின் கணிப்பு. இந்தக் கணிப்பினால் உருவான இறுமாப்பே இந்தக் கப்பலை மூழ்கடித்தது. கப்பல் மூழ்கியதைவிட, அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் இறந்ததுதான், பெரும் அதிர்ச்சியை, ஆத்திரத்தை, கேள்விகளை எழுப்பியது. தஙகளை யாரும், எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்புதான் அத்தனை பேரின் உயிரைப் பலி வாங்கியது.

எந்த ஒரு கப்பலும் கடலில் பயணம் மேற்கொள்ளும்போது, ஏதாவது ஆபத்து நேர்ந்தால், கப்பலில் பயணம் செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கத் தேவையான உயிர்காக்கும் படகுகள் கப்பலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இது கடல் பயணங்களின் சட்டம். 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, அது மூழ்கும் வாய்ப்பே இல்லை என்ற ஆணவம் நிறைந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அந்தக் கப்பல் சட்டப்படி எடுத்துச் செல்லவேண்டிய படகுகளில் பாதி எண்ணிக்கையையே சுமந்து சென்றது. கப்பலில் பயணம் செய்தோரின் எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து படகுகளும் இருந்திருந்தால், ஒருவரும் இறந்திருக்கத் தேவையில்லை.

அது மட்டுமல்ல, டைட்டானிக் செல்லும் பாதையில், பனிப்பாறைகளில் மோதும் ஆபத்து இருந்தது என்று மற்ற கப்பல்களில் இருந்து ஏழு முறை எச்சரிக்கைச் செய்திகளும் வந்தன. ஆனால், டைட்டானிக் கப்பலை இயக்கியவர்கள், அந்த எச்சரிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை. கப்பலை உருவாக்கியவர்கள், அதனை இயக்கியவர்கள் எல்லாருக்கும் அந்த கப்பலின் சக்தி மீது அளவுக்கு மீறிய, ஆபத்தான நம்பிக்கை இருந்தது. இதுதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு பாடம்.

வாழ்வில் நம்பிக்கை தேவைதான். சிறப்பாக, பாஸ்கா காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் உண்மை... நம்பிக்கை. நம்பிக்கையற்ற வாழ்வு நடுக்கடலில் தத்தளிக்கும் படகுபோல் இருக்கும்... ஆனால், எதன்மேல் நம்பிக்கை கொள்வது, எவ்வகையான நம்பிக்கை கொள்வது என்பதையும் நாம் தீர ஆராய வேண்டும். நம்பிக்கையை வளர்க்கும் இந்த பாஸ்கா காலத்தில், நம்பிக்கை இழந்து நடுக்கடலில், சந்தேகப்புயலில் தத்தளித்த சீடர்களைப் பற்றிய ஒரு நிகழ்வு இன்று நமது நற்செய்தியாகிறது.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திதிம் அல்லது தோமையார் என்று அழைக்கப்படும் தோமா சுட்டிக்காட்டப்படுகிறார். உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரிவள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அப்படி சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக மாறிவிட்டார்.

தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்துவிடுகிறோம். "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்று கேள்வி கேட்கிறோம். "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் தந்துவிடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வது எளிது. தோமா மீது கண்டனக் கற்களை எறிவதற்கு முன், நம்மில் யார் இதுவரை சந்தேகப்படாமல் வாழ்ந்திருக்கிறோமோ அவர்கள் அவர் மீது முதல் கல் எறியட்டும். அதுவும் நெருங்கிப் பழகிய பலரை... நம் பெற்றோரை, வாழ்க்கைத் துணையை, நம் பிள்ளைகளை, உயிர் நண்பர்களை பல நேரங்களில் சந்தேகப்படும் நாம், தோமா இயேசுவைச் சந்தேகித்ததை எவ்விதம் குறை சொல்ல முடியும்?

கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவைவிட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். மேலும், உயிர்ப்புக்குப் பின் இயேசு தன் சீடர்களைச் சந்தித்த நிகழ்ச்சிகளை நான்கு நற்செய்திகளிலும் நாம் கவனமாக வாசித்தால், இயேசுவின் உயிர்ப்பைத் தோமா மட்டும் சந்தேகப்படவில்லை; எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். இயேசுவிடம் கேட்கமுடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் தத்தளித்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், பெற்றோர், குடும்பம், வீடு என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். அந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப்போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு பறிக்கப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பிவிட்டன. தங்களில் ஒருவனே இயேசுவைக் காட்டிக்கொடுத்து, இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது. இயேசு பிடிபட்டார் என்பதை அறிந்ததும் அவர்கள் காணாமல்போனது, ஒருவர் இயேசுவைத் தெரியாது என்று மறுதலித்தது என்ற்... அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய சாத்தப்பட்ட கதவுகள் இயேசுவுக்கு ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்கமுடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்?

கருணையே வடிவான இயேசு, சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு கூறிய பதில் இதுதான்: “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்… நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 21: 27-29) இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28) இயேசுவைக் கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, இந்தியாவிலும் அவர் பறைசாற்றினார்.

அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நம் அனைவரின் காவலரான புனித தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

விண்ணகத் தந்தையைப் போல்!

கடலை விடவும் பெரிது!

ஒரு சிற்றூரிலிருந்து சிலர் இன்பச் சுற்றுலா சென்றனர். பல இடங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் மாலை வேளையில் கடற்கரைக்குச் சென்றனர். அது மிகவும் இரம்மியமாக இருந்தது.

அப்போது அவர்களோடு சென்ற ஒரு மூதாட்டி சத்தமாக அழத் தொடங்கினாள். அதைப் பார்த்துவிட்டு அவளுக்குப் பக்கத்தில் இருந்த பெரியவர் ஒருவர், ‘எல்லாரும் கடலைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கையில், இவள் மட்டும் எதற்கு இப்படி அழுகின்றாள்?’ என்று மனத்தில் நினைத்துக்கொண்டு, “இப்போது எதற்காக நீங்கள் இப்படி அழுகின்றீர்கள்?” என்றார்.

உடனே மூதாட்டி தன்னுடைய கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டு, “என் வாழ்நாளில் இப்போதுதான் கடலை முதன்முறையாகப் பார்க்கின்றேன். அது இவ்வளவு பெரிதாக இருக்குமா? என்றுதான் எனக்கு அழுகை வந்துவிட்டது” என்றாள். சிறிது நேரத்திற்கு எதுவும் பேசாமல் இருந்தக பெரியவர், மூதாட்டியிடம், “கடல் இவ்வளவு பெரிது என்று வியக்கின்றீர்கள் அல்லவா! இந்தக் கடலை விடவும் பெரிது கடவுளின் இரக்கம்” என்றார்.

பெரியவர் மூதாட்டியிடம் சொன்னதுபோல, கடவுளின் இரக்கம் கடலை விடவும் பெரிது. இன்று நாம் இறை இரக்க ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். 200௦, ஏப்ரல் 30 ஆம் நாள் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல், பவுஸ்தினாவிற்குப் புனிதர் பட்டம் வழங்கும் திருச்சடங்கில், “ஒவ்வோர் ஆண்டும் உயிப்புப் பெருவிழாவிற்கு அடுத்து வரும் ஞாயிறு இறை இரக்கத்தின் ஞாயிறாகக் கொண்டாடப்படும்” என்று அறிவித்தார். அவர் சொன்னது போன்று, அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வோர் ஆண்டும் இறை இரக்கத்தின் ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நல்ல நாளில், இறை இரக்க ஞாயிறு நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதை இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தைப் பின்னணியில் சிந்திப்போம்.

அமைதியை வழங்கிய உயிர்த்த ஆண்டவர்

மனிதர்கள் எல்லா நேரமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும் சவால்களும் அவர்களை மாற்றிவிடுகின்றன. இயேசுவின் சீடர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் அவரோடு மூன்றாண்டு காலம் உடனிருந்து, அவரோடு உண்டார்கள், அவரோடு பணிசெய்தார்கள். அவரிடமிருந்து பல நன்மைகளைப் பெற்றார்கள். என்றாலும், அவர்களின் உயிருக்கு ஆபத்து வந்தபோது அவர்கள் அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடினார்கள். பேதுரு அவரைத் தனக்குத் தெரியாது என்று மறுதலிக்கவும் செய்தார்.

தன்னிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுவிட்டு, ஆபத்து என்று வரும்போது தன்னைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போன மனிதர்களை மீண்டுமாகச் சிந்திக்கும் ஒருவர் அவர்களைக் கடுமையாகத் திட்டலாம்; ஏன், பேசாமல் கூட இருக்கலாம்; ஆனால், ஆண்டவர் இயேசு தன்னைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போன சீடர்களுக்குக் காட்சியளிக்கும்போது, அவர்களைக் கடிந்துகொள்ளவோ, திட்டவோ இல்லை. மாறாக, அவர் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்கிறார். இதை அவர் மும்முறை சொல்வதும் கவனத்திற்குரியது.

இயேசு தரும் அமைதி என்பது இவ்வுலகம் தர முடியாத அமைதி (யோவா 14: 27); தவிர, அது எல்லா நலன்களையும் நன்மைகளையும் உள்ளடக்கியது. அத்தகைய அமைதியை இயேசு, தன்னை விட்டுவிட்டு ஓடிப்போன சீடர்களுக்குத் தருவதும், அவர்களை மீண்டுமாகப் பணியில் அமர்த்துவதும், அவர் எத்துணை இரக்கமும் அன்பும் கொண்டவர் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. இதையே இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 118 இல் அதன் ஆசிரியர், “ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு” என்கிறார்.

தன்னை விட்டுவிட்டு ஓடிப்போனவர்களுக்கும் மறுதலித்தவருக்கும் ஆசி கூறிய வகையில் இயேசு உண்மையில் பேரிரக்கமுள்ளவரே!

இரக்கத்தைப் பிறருக்கும் காட்டினார்கள்!

இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வில் தன்னிடமிருந்து நலம்பெற்றவர்களிடம் அடிக்கடிச் சொல்வது, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்பதுதான். விதிவிலக்காக, அவர் கெரசேனர் பகுதியில் இருந்த பேய் பிடித்திருந்த மனிதரிடம், “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு, உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” (மாற் 5:19) என்பார். உயர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களைச் சந்திக்கும்போது மேலே உள்ள வார்த்தைகளை நேரடியாக அவர்களிடம் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், இயேசு தங்கள்மீது காட்டிய இரக்கத்தையும் பேரன்பையும் தங்கள் போதனையின் வாயிலாகவும், வாழ்வின் வாயிலாகவும் அவர்கள் மற்றவருக்கு வெளிப்படுத்தினார்கள்.

இன்றைய முதல வாசகத்தில், “திருமுழுக்குப் பெற்றவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும்... நிலைத்திருந்தார்கள்” என்றொரு குறிப்பு வருகின்றது. திருத்தூதர்கள் எதைக் கற்பித்திருப்பார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, அது அவர்கள் இயேசுவிடமிருந்து பெற்ற இரக்கமும் பேரன்புமாக இருக்கலாம். இவ்வாறு திருதூதர்கள் தாங்கள் இயேசுவிடமிருந்து பெற்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் பேரன்பையும் திருமுழுக்குப் பெற்றவர்களுக்குக் கற்பித்தார்கள். அவர்களோ அதை தங்களால் நற்செயல்களாலும் இரக்கச் செயல்களாலும் மற்றவருக்கு வெளிப்படுத்தினார்கள். ஆகவேதான் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் தங்களிடம் இருந்ததை இல்லாதவருக்குப் பகிர்ந்தளித்து, தேவையில் உழல்வோர் யாருமின்றி பார்த்துக்கொண்டார்கள்.

எனில், கடவுளிடமிருந்து பெற்ற இரக்கத்தையும் பேரன்பையும் மற்றவருக்குக் காட்டுவதே நீதியும் நேர்மையுமாகும்.

இரக்கம் காட்டுவோருக்குக் கிடைக்கும் கைம்மாறு

கடவுளின் இரக்கத்தையும் பேரன்பையும் மற்றவர்களுக்குக் காட்டும்போது துன்பங்கள் வராமல் இருப்பதில்லை; நிச்சயம் வரும். இதற்காக ஒருவர் இரக்கத்தையும் பேரன்பையும் மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்துவிடக் கூடாது என்பதைப் பேதுரு இன்றைய முதல் வாசகத்தில் விளக்கிக் கூறுகின்றார்.

தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் இறையன்புக்கும் பிறரன்புக்கும் சாட்சிகளாய்த் திகழ்ந்தார்கள். இதனாலேயே அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள். இப்படித் துன்பங்களை அனுபவித்த ஒருசிலர் மனம் சோர்ந்து போயிருந்த நிலையில்தான் பேதுரு அவர்களிடம், நீங்கள் அனுபவிக்கும் துன்பம் சிறு காலம்தான்; உங்கள் நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகின்றீர்கள் என்று சொல்லிவிட்டு, நீங்கள் பேருவகையும் ஆன்ம மீட்பையும் பெறுவீர்கள் என்கிறார்.

கடவுளின் பேரன்பையும் இரக்கத்தையும் அனுபவித்தவர்களாய், அதன்படி வாழும்போது துன்பம் வருவதைத் தவிர்க்க முடியாது. எனினும் அத்தகைய வாழ்க்கையில் நாம் நிலைத்திருக்கும்போது கடவுள் தரும் கைம்மாறு மிகுதியாக இருக்கும். நாம் கடவுளின் பேரன்பிற்கும் இரக்கத்திற்கும் சாட்சிகளாக வாழ்ந்து அவர் தரும் கைம்மாறினைப் பெற்று மகிழ்வோம்.

சிந்தனைக்கு

“கடவுளின் இரக்கத்தைத் தவிர மானிடரின் வாழ்விற்கு எந்தவொரு நம்பிக்கை ஒளிக்கீற்றும் இல்லை” என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால். நம்முடைய வாழ்விற்கு அடிப்படையும் ஆதாரமாகவும் இருக்கும் கடவுளின் இரக்கத்தை ஆழமாய் உணர்ந்தவர்களாய் நாம் அதை மற்றவருக்கும் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கைக் கண்களைத் திறப்போமா!

உயிர்ப்பு இல்லையேல் கிறிஸ்தவ நம்பிக்கையே வீண். இயேசுவின் இந்த உயிர்ப்பை நாம் உண்மை என உணர்ந்துகொள்ள மூடிக்கிடக்கும் நம் நம்பிக்கைக் கண்களைத் திறக்க வேண்டும். ஏனென்றால் உயிர்ப்பு அனுபவம் நம் வாழ்வில் ஒவ்வொருநாளும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.

பல காலமாக படிப்பில் ஈடுபாடு காட்டாத தன் மகன் திடீரென ஒழுங்காக அமர்ந்து படிப்பதை தாய் கவனித்தாள். அதை தந்தையிடம் கூறிய போது அவர் சிறிதும் நம்பவில்லை. தன் மகன் ஏதோ ஒரு காரியத்திற்காக நடிக்கிறான் என்று தாயிடம் கூறியதோடல்லாமல் மகனிடமும் கூறித் திட்டினார். மகன் சற்று வருத்தமடைந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் படிக்க ஆரம்பித்தான். தேர்வுகளை நன்கு எழுதினான். தாய்க்கு தன் மகன் மேல் நம்பிக்கை இருந்தது. தந்தையோ மதிப்பெண் வரட்டும் அப்போது நம்புகிறேன் என்றார். மதிப்பெண் பெற்ற பின்னரும் அதை நம்பாமல் ஆசிரியரை சந்திக்கச் சென்றார். இது மகனுக்கு வருத்தத்தைத் தரவே, தந்தையிடம் சென்று "அப்பா ,நான் படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது நன்றாகப் படிக்கிறேன். நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருக்கிறேன். நீங்களே என்னை நம்பி ஆதரிக்காவிட்டால் பிறர் என்னை எப்படி நம்புவார்கள்? " என வருத்தத்தோடு கூறினான்.

இப்படித்தான் நம் வாழ்வில் பல அனுபவங்கள் வருகின்றன. வாழ்வில் எவ்வளவோ ஆசிர்வாதங்களைப் பெற்ற பிறகும் கடவுளிடம் நம்பிக்கை குறைவுபடுகிறது. நம்மோடு உடன் வாழ்வோரை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கும் கண்கள் நம்மிடம் இருப்பதை மறுக்க முடியாது. எல்லாவற்றிலும் பயம். எல்லாவற்றிலும் சந்தேகம். இத்தகைய மனநிலையைக் களையவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தி நமக்கு சொல்லும் பாடம் இதுவே. இயேசுவோடு கூட இருந்து அவர் போதனையைக் கேட்டவர்தான் தோமா. இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைப் பற்றி இயேசு மும்முறை அறிவித்ததாக விவிலியத்தில் வாசிக்கிறோம். அதைப் போலவே இயேசு உயிர்த்த பின் மகதலா மரியாவுக்கு காட்சி கொடுத்தார். பேதுருவும் யோவானும் வெற்று கல்லறையையும் வானதூதர்களையும் கண்டார்கள். எம்மாவுஸ் சென்ற சீடர்கள் இயேசுவைக் கண்டதை அறிவித்தார்கள். அதன் பிறகு கூடியிருந்த சீடர்களும் இயேசுவைக் கண்டதாக கூறினார்கள். இத்தனை பேர் சொல்லியும் தோமா அதை நம்பவில்லை. ஏன்? ஒருபுறம் "இயேசுவை எல்லாரும் பார்த்துவிட்டார்கள். நான் பார்க்கவில்லையே! " என்ற ஆதங்கம் இருந்தாலும் மறுபுறம் அவருடைய நம்பிக்கை கண்கள் மூடியிருந்தது என்பதும் உண்மைதான். எனவே தான் இயேசு "ஊனக்கண்களால் கண்டதால் நம்புகிறாய். ஐயம் தவிர்த்து நம்பிக்கைக் கண்களைத் திற " என தோமாவுக்கு கூறுகிறார். நமக்கும் பாடம் கற்பிக்கிறார்.
நாமும் நம்பிக்கைக் கண்களைத் திறந்து "என் ஆண்டவரே என் கடவுளே! " என அறிக்கையிடத் தயாராய் இருக்கிறோமா?

நம்பிக்கை கொண்டோர் ஒன்றாய் இருந்தனர் என நாம் முதல் வாசகத்தில் தொடக்க கால கிறிஸ்தவர்களைப் பற்றி வாசிக்கிறோம். அவர்களை ஒன்றிணைத்ததே நம்பிக்கை தான். இன்று நாம் சிதறுண்டு இருப்பதற்கு காரணம் நாம் நம்பிக்கைக் கண்களை மூடியிருப்பதே. எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முடிந்தவரை உயிர்த்த ஆண்டவரை முழுமையாக நம்புவோம். இயேசு தோமாவிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய்.

காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' '' (யோவான் 20:29) என்ற இறை வார்த்தையை ஆழமாக உள்ளத்தில் தியானித்து இயேசுவை முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்வோம். அப்பொழுது உயிர்த்த ஆண்டவரின் அன்பையும் ஆசீரியையும் இரக்கத்தையும் மீட்பையும் முழுமையாக அனுபவிக்க முடியும். அதற்கு நமக்கு திருப்பலி, ஜெப வழிபாடு, பல்வேறு பக்திமுயற்சிகள், தியானங்கள் போன்றவை உதவி செய்யும் விதமாக இருக்கின்றன. நம்முடைய தனிப்பட்ட இறை அனுபவத்தின் வழியாகவும் உயிர்த்த இயேசுவை இன்னும் அதிகமாக அன்பு செய்து உண்மையான சீடத்துவ சாட்சிய வாழ்விற்கு சான்று பார்க்க முடியும். அதற்கு தேவையான அருளை இறை இரக்கத்தின் ஞாயிறாக கொண்டாடப்படும் இந்த வாரத்தில் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பான இறைவா! உன் மகன் இயேசு மரித்த மூன்றாம் நாள் மாட்சியோடு எங்களுக்காக உயிர்த்தெழுந்துள்ளார் என்பதை ஆழமாக நம்பி உயிர்ப்பின் மாட்சியில் அகமகிழ அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser