மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 24-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 50:5-9அ|யாக்கோபு 2:14-18|மாற்கு 8:27-35

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


மனிதன் மாண்புடன் படைக்கப்பட்டவன். இயற்கையிலேயே மதிப்புடன் படைக்கப்பட்டாலும் பணம், பதவி, பட்டம் போன்ற அணிகலன்கள் இருந்தால் மட்டுமே தான் மதிப்புடன் வாழ்வதாக ஒரு மாய எண்ணம் அவனுக்குள் விதைக்கப்பட்டு, அது வளர்ந்து, விழுது விட்டு பரந்து கிடக்கிறது. இந்த மதிப்புடன் வாழ்தல் என்பதில் துன்பங்களோ , துயரங்களோ, கஷ்டங்களோ இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். ஏன் இயற்கையான சாவு கூட அவனுக்கு அருகில் வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணற்ற விதத்தில் போராடுகிறான். இங்ஙனம், மலர்ப் பாதை மட்டுமே வாழ்க்கைப் பாதையாக இருக்க வேண்டும் என்பது மனிதரின் சிந்தனையாகவும், அதுவே மனிதருக்கு ஏற்றவையாகவும் இருக்கிறது.

ஒரு சொல்லால் எல்லாவற்றையும் படைத்தவர், ஒரே மகனை மீட்பிற்காய் தந்தவர், நாம் ஒன்றுபட்டு வாழ்வதில் பெருமகிழ்ச்சியும் கொள்கிற கடவுள், எல்லாவற்றையும் கடந்த அவர் துன்பத்தைத் தன் அக வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார். தன் ஒரே மகனை பாடுகள் பட அனுமதித்தார். சிலை செதுக்கப்படும்போது உளிக்கு வலிக்கும் என்று செதுக்குபவன் நினைப்பானா? பாறைக்குச் சேதம் ஏற்படுகின்றது என செதுக்காமல் இருப்பானா? கை வலிக்கிறது என எடுத்த வேலையை நிறுத்துவானா? சிற்பியின் கை வலி, உளியின் வெப்பம், பாறையின் சிதைவு இவை அனைத்தின் காரணமாக உருவாகும் அற்புதமே பார்ப்போர் வியக்கும் அற்புதச் சிலைகள். சிரமங்களும், துன்பங்களும், தடைகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் இன்றியமையாத காரணிகள். இதை உணருகிற மனிதன் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறான்.

படைக்கப்பட்டவை அதன் மாண்பிலிருந்து விலகியதை மீட்பதற்காகவே வந்த இறைமகன் சுமைகளைத் தன் மேல் ஏற்றுக் கொள்ளத் தயாரானார். நான் கிளர்ந்தெழவில்லை : விலகிச் செல்லவுமில்லை. அடிப்போக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற எசாயாவின் வார்த்தை இதை வெளிப்படுத்துகின்றன. மானிட மகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்ற இயேசுவின் வார்த்தைகள் மெய்யாகிறது (மத் 16:21).

இயேசுவில் நம்பிக்கையும், அவர்தம் பாடுகள் வழியாக நம்மை மீட்கிறார் என்பதில் விசுவாசமும் கொண்டுள்ள இறைமக்களின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நம்முடைய நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். குறிப்பாக சமூகத்தின் விளிம்பிலும், ஒடுக்கப்பட்ட நிலையிலும் இருந்துகொண்டு துன்பமே வாழ்வின் பாதை, துயரமே அனுதின அனுபவம் என்று வாழ்கின்ற மக்களிடத்தில் வார்த்தையை மட்டுமல்ல, நம் தலைவராம், மீட்பராம் இயேசுவைப்போல நம் செயல்பாடுகளின் வழியாக அவர்களின் வாழ்வில் மாறுதலைக் கொணர முற்படுவோம். தான் என்று வாழ்கிறவர் மண்ணோடு மண்ணாகிப் போவர். அதே நேரத்தில் பிறர் நலச் சிந்தனையோடு வாழ்பவர், பிறரின் துன்பத்தில் பங்கேற்பவர், என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார் (மத் 10 : 39) என்ற ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குவர். வாழ்வோம், வாழ்விப்போம். கிறிஸ்துவே மெசியா என அறிக்கையிடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தன்னலம் துறப்போம்

இன்றைய நற்செய்தியிலே நாம் தன்னலத்தைத் துறந்தவர்களாக வாழ வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுரை பகர்கின்றார்.

தன்னலத்தைத் துறத்தல் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உவமை.

ஓர் ஊரிலே பரம ஏழை ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு மணி பன்னிரெண்டு இருக்கும். திடீரென பெரும் மழை பெய்தது. அப்போது அந்த ஏழையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தார் அந்த ஏழை! வெளியே ஓர் உப்பு வியாபாரி! அந்த வியாபாரி அந்த வீட்டுக்காரரைப் பார்த்து, ஐயா, நான் ஓர் ஏழை உப்பு வியாபாரி! மழை பெய்கின்றது. இரவு மட்டும் நானும், என் கழுதையும் தங்க சற்று இடம் தாருங்கள் என்றார். அந்த ஏழைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! தன் மனைவியைப் பார்த்தார். தன் மனைவியைப் பார்த்து, நான் உன்னை ஒன்று கேட்கலாமா? என்றார். அன்பும், அறனும் படைத்த பண்பு மிக்க அந்தப் பெண்ணோ , எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார். இப்பொழுது இரவு மணி 12. பொழுது விடிய இன்னும் 5 மணி நேரம் இருக்கின்றது. நீயும், நானும், நமது குழந்தைகளும், தரையில் படுக்காமல், நின்றுகொண்டிருந்தால், இந்த வியாபாரிக்கும், கழுதைக்கும் நம் வீட்டில் இடமிருக்கும் என்றார்.

மனைவி, சரி என்றார். பெற்றோரைப் போல பிள்ளைகள் ! பொழுது விடியும்வரை அந்த வீட்டாரும், உப்பு வியாபாரியும், கழுதையும் அந்த வீட்டுக்குள்ளே நின்றுகொண்டிருந்தனர். எங்கே மனமுண்டோ அங்கே இடமுண்டு!

இந்த உவமையிலுள்ள குடும்பத்தார் அனைவரும் தன்னலத்தைத் துறந்தவர்கள்!

இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வதே பிறர்நலம் (இரண்டாம் வாசகம்).

தன்னலம் துறத்தலைப் பொறுத்தவரையில், நம்மிடம் உள்ள பொருள்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்வது ஓரளவு எளிது. ஆனால் நமது உடலையும், உயிரையும் துறப்பது மிகவும் கடினம்!

நம்மையே நாம் மறந்து, நமது விருப்பு, வெறுப்புகளை நாம் கடந்து, குற்றமற்ற நம்மை குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடுகின்றவர்களை மன்னித்து அவர்களுக்காகச் செபிப்பது மிகவும் கடினம்.

எதற்குமே கிளர்ந்தெழாத (முதல் வாசகம்) நிலையை அடைவது அவ்வளவு எளிது அல்ல! ஆனால் முற்றும் துறந்த வாழ்வை இயேசு வாழ்ந்து காட்டியிருப்பது உண்மைதானே!... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

மேலும் அறிவோம் :

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? (குறள் : 987).

பொருள் : தமக்குத் துன்பம் தரும் கொடிய செயல் புரிந்தவர்க்கும் இன்பம் தரும் நல்லவற்றையே செய்யவில்லை என்றால் நிறை பண்பாகிய சால்புடைமையால் எந்தப் பயனும் விளையாது!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முற்றும் துறந்த துறவியாகிய பட்டினத்தார் வயலில் ஒரு வரப்பின்மேல் தலையை வைத்துப் படுத்திருந்தார். அவ்வழியே விமலா, கமலா என்ற இரு பெண்கள் சென்றனர். விமலா கமலாவிடம், "பஞ்சு மெத்தைமேல் படுக்க வேண்டிய இவர் வரப்பின்மேல் படுத்திருக்கிறார்" என்றார். கமலா விமலாவிடம், "பஞ்சு மெத்தையைத் துறந்தாரே தவிர, தலைக்கு உயரமான இடம் வேண்டும் என்ற எண்ணத்தைத் துறக்கவில்லையே" என்றார். அவர் கூறியதைக் கேட்ட பட்டினத்தார் எழுந்து வயலில் சமதளமான இடத்தில் படுத்துக் கொண்டார், மீண்டும் விமலா கமலா விடம், "பாரு, அவருடைய துறவு இப்பொழுது பூரணமாகிவிட்டது” என்றார். கமலா சும்மா விடவில்லை . அவர் கூறினார்: “ஊரார் பேசுவதையெல்லாம் கேட்டு நடக்கும் இவர் ஒரு துறவியா?" அப்பொழுதுதான் பட்டினத்தார் பின்வருமாறு பாடினார்; “வித்தாரமும் கடமும் வேண்டாம், மட நெஞ்சே! செத்தாரைப் போலத் திரி.” அதாவது, மூட நெஞ்சே, பிறருடைய புகழுரையும் பாராட்டும் உனக்குத் தேவையில்லை. செத்தவனைப்போல் இரு, செத்தவன் யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்பதில்லை.

துறவியின் மனநிலை இப்படியிருக்கும்போது, கிறிஸ்து இன்றைய நற்செய்தியில், “மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" என்று கேட்கின்றாரா? இது அவருக்குத் தேவையா? “எனக்கு மக்கள் தரும் மகிமை தேவையில்லை " என்று கூறிய அவர் (யோவா 5:34) மக்களின் கருத்துக் கணிப்பைக் கேட்கவேண்டியதன் காரணம் என்ன? ஏனெனில் மக்கள் தம்மைப்பற்றித் தவறான எண்ணம் கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை. உண்மையில் மக்களும் சீடர்களும் அவரைப்பற்றித் தவறான கண்ணோட்டம் கொண்டிருந்தனர்.

மாலைக் கல்லூரியில் படித்த இளம் பெண் இரவில் மிகவும் தாமதமாக வீடு திரும்பினார், அவருடைய அம்மா, “ஏண்டி லேட்டாய் வந்தே?" என்று கேட்டார். இதே கேள்வியை அவருடைய அப்பா ஆங்கிலத்திலும், அண்ணன் மலையாளத்திலும், தம்பி தெலுங்கிலும் கேட்டனர். ஏனென்றால் வயசுப் பெண்ணு லேட்டாய் வந்தா, நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்களாம்! இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் மக்கள் நாலு விதமாகப் பேசினார்கள், அவரைத் திருமுழுக்கு யோவான் என்றும், எலியா என்றும், இறைவாக்கினருள் ஒருவர் என்றும், மெசியா என்றும் நான்கு விதமாக விமர்சித்தனர்.

பேதுரு இயேசுவை 'மெசியா' என்றார். ஆனால் மெசியா சிலுவையில் அறையப்பட வேண்டியவர் என்பதை அவர் ஏற்க மறுத்து, கிறிஸ்துவைக் கடிந்து கொண்டார். கிறிஸ்து அவரைச் சாத்தான் என்று குறிப்பிட்டு, அவருடைய எண்னாம் மனித எண்ணமேயன்றி, கடவுளுடைய எண்ணம் இல்லை என்றார். அப்படியானால், கடவுளுடைய எண்ணம் என்ன? அதைப் பற்றி இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. மெசியா துன்புறும் இறை ஊழியனாக இருப்பார், அவர் பாடுகள் பல படவேண்டியிருக்கும். திந்தனைகளை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் அவர் முகத்தைக் காட்டுவார் (எசா 50:5-9). கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னும் சீடர்கள் சிலுவையில் அறையுண்ட மெசியாவைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை . எனவேதான், நம்பிக்கை இழந்து, வாடிய முகத்துடன் எம்மாவும் சென்ற இரு சீடர்களிடம் கிறிஸ்து : "அறிவிலிகளே! மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்ற கூறி கடிந்து கொண்டார் (லூக் 24:25-26)

சிலுவைச் சாவை எற்று, தம்மையே வெறுமையாக்கிய கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் நம்மையே மறுத்து. நமது சிலுவையைச் சுமக்க வேண்டுமென்கிறார் கிறிஸ்து. கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை விருப்பப்பாடமல்ல! கட்டாயப்பாடம், நமது தனிவாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் நம்மை அழுத்துகின்ற பாரமான சிலுவை ஆணவம் என்ற அரக்கன். கிறிஸ்துவைப்போல நாமும் தம்மைத் தாழ்த்தி, மற்றவர்களை நம்மைவிட உயர்வாகக் கருத வேண்டும்.

ஒரு திருமண வரவேற்பில் பங்கேற்ற மக்கள் வாய்விட்டு சிரித்தனர். ஏன்? மணமகன் உயரமானவர்; மணமகள் குட்டையானவர், அவர்கள் மாலை மாற்றிக் கொண்டபோது, மணமகள் தனக்கு மாலையிட வசதியாக மணமகன் மிகவும் குணிந்தார். திருமண நாள் அன்றே, மணமகள் மணமகனைத் தலைகுனிய செய்துவிட்டார். அதைப் பார்த்த நான், "குலியத் தெரிந்த மணமக்களுக்குப் பணியத் தெரியவில்லையே!" என்றேன்.

பிறரை மட்டம் தட்டுவதில் நாம் ஆனந்தம் அடைகிறோம். ஒருவர் தன் நாயுடன் வீதியில் சென்றார். அவருக்கு எதிரில் வந்தவர் அவரிடம், "கழுதையுடன் செல்லுகிறீர்களா? என்று கேட்க அவர், "இல்லை , தாயுடன் செல்கிறேன்" என்றார். அதற்கு மற்றவர், "நான் உங்களைக் கேட்கவில்லை. உங்கள் தாயிடம் கேட்கிறேன்" என்று சொல்லி கடகடவெனச் சிரித்தார்,

சிலுவை என்பது தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவதாகும். நாம் நமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும். பிறரை வாழவைக்க நாம் தியாகம் செய்ய வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்: "நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றது." நமது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பது நமது அன்புச் செயல்கள், "மனிதனாக பிறந்ததற்கு நாலுபேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்று ஒருவரிடம் கூறியதற்கு அவர் கூறியது: “தான் நான்கு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள்: என் மனைவி மற்றும் எனது மூன்று பிள்ளைகள். நமது அன்பு குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல், மற்றவர்களையும் அரவணைக்கும் அன்பாக விரிய வேண்டும்.

சிலுவையில் அறையுண்ட மெசியாவை ஏற்று. நமது அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்போம். ஆணவத்தை அழித்து மற்றவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாக மதிப்போம். தன்னலம் மறந்து பிறர் நலம் பேணுவோம். அன்பில் உயிர் நிலைத்துள்ளது. அன்பிலார் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடு.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் 80)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சாவுக்கு சாட்சிகள்‌ நாம்‌

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனாவுக்குப்‌ பயணித்துக்‌ கொண்டிருந்தது அந்தக்‌ கப்பல்‌. அதன்‌ மேல்தளத்தில்‌ இருவர்‌ உரையாடிக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஒருவர்‌ கத்தோலிக்கக்‌ குருவானவர்‌. மற்றவர்‌ அமெரிக்க வணிகர்‌. “மறை பரப்புப்‌ பணிக்கெனச்‌ சீனாவுக்கா போகிறீர்கள்‌?” என்ற வணிகர்‌ அச்சுறுத்தும்‌ வகையில்‌ தொடர்ந்தார்‌: ““போதிக்கச்‌ செல்லும்‌ குருக்களை அந்த நாட்டில்‌ எப்படியெல்லாம்‌ கொடுமைப்படுத்துகிறார்கள்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? அப்படித்தான்‌ ஒருமுறை மர்‌ஃபி என்ற குருவானவரை கலகக்காரர்கள்‌ பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்‌. அவரை விடுவிக்க வேண்டுமென்றால்‌ பெரும்‌ தொகையைப்‌ பணயமாகக்‌ கேட்டார்கள்‌. பணம்‌ வந்து சேரத்‌ தாமதமான ஒவ்வொரு நாளுக்கும்‌ ஒரு விரலாக அவருடைய வலக்கையின்‌ மூன்று விரல்களைத்‌ துண்டித்து விட்டார்கள்‌. இப்போது அந்தக்‌ குரு அமெரிக்காவில்தான்‌ இருக்கிறாராம்‌. இனியும்‌ நற்செய்திப்‌ பணிக்கெனச்‌ சீனா போக மனம்‌ வருமா?” புன்முறுவலோடு ஏதோ சொல்லக்‌ குரு முனைந்தார்‌. அதற்குள்‌ உணவருந்த அழைப்பு மணி ஒலித்ததால்‌ இருவரும்‌ கை குலுக்கி விடைபெற்றனர்‌. கைகுலுக்கியபோது வணிகருக்கு ஒரே வியப்பு! காரணம்‌, அந்தக்‌ குருவானவரின்‌ வலக்கையில்‌ மூன்று விரல்கள்‌ இல்லை.

ஓர்‌ இறைவாக்கினருக்குரிய இறை வார்த்தைப்‌ பணியில்‌ இழிவுக்கும்‌ எதிர்ப்புக்கும்‌ ஏளனத்துக்கும்‌ ஆளானாலும்‌ வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. இறை வார்த்தையின்‌ பொருட்டு வேதனைக்குள்ளாவதில்‌ ஒரு தனி மகிழ்ச்சி உண்டு. அதுதான்‌ துயரத்தின்‌ மகிழ்ச்சி. ( The joy of sorrow) அதனைத்‌ திருத்தூதர்‌ பவுல்‌ வெளிப்படுத்துவார்‌: “நாங்கள்‌ எல்லாச்‌ சூழ்நிலைகளிலும்‌ இன்னலுற்றாலும்‌ மனம்‌ உடைந்து போவதில்லை... வீழ்த்தப்பட்டாலும்‌ அழிந்து போவதில்லை. இயேசுவின்‌ வாழ்வே எங்கள்‌ உடலில்‌ வெளிப்படுமாறு நாங்கள்‌ எங்கு சென்றாலும்‌ அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள்‌ உடலில்‌ சுமந்து செல்கிறோம்‌” (2 கொரி. 4:8-10).

“இயேசுவுக்குச்‌ சிலுவைச்சாவா; அது எப்படி?” என்ற பேதுருவின்‌ எண்ண ஒட்டத்துக்குக்‌ காரணம்‌ - துன்பத்தைக்‌ கண்டு பின்வாங்கும்‌ மனித இயல்பு மட்டுமல்ல. அவர்‌ சார்ந்த யூதர்களின்‌ மன நிலையும்‌ கூட. மெசியா என்ற மீட்பரை அவர்கள்‌ எதிர்பார்த்தார்கள்‌ - உண்மை! ஆனால்‌ துன்புறும்‌ மெசியா அல்ல. வல்லமையுடன்‌ “தன்‌ பகைவரைத்‌ தனக்குக்‌ கால்‌ மணையாக்கும்‌”” மெசியா (தி.பா. 110:1). “முடிவே இராத ஆட்சியுரிமையும்‌ மாட்சியும்‌ அரசும்‌ கொடுக்கப்பட்ட” மெசியா (தானி 7:14).

இயேசு என்ற இந்த மெசியாவின்‌ துன்பம்‌ பற்றி எண்ணிய பேதுரு, அதே மெசியாவின்‌ துன்பம்‌ பற்றி எசாயா போன்ற இறைவாக்கினர்கள்‌ முன்னுரைத்ததை மறந்து போனார்‌. “அடிப்போர்க்கு என்‌ முதுகையும்‌, தாடியைப்‌ பிடுங்குவோர்க்கு என்‌ தாடையையும்‌ ஒப்புவித்தேன்‌. நிந்தனை செய்வோர்க்கும்‌ காறி உமிழ்வோருக்கும்‌ என்‌ முகத்தை மறைக்கவில்லை”: (எசா. 50:6) என்ற துன்புறும்‌ ஊழியனின்‌ மனநிலை பேதுருவின்‌ உள்ளத்தில்‌ பதியவில்லை.

யூதர்களையோ, பேதுருவையோ சொல்லிப்‌ பயனில்லை மனித மனமே அப்படித்தான்‌. அதனால்‌ “நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல்‌ மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்‌” என்று இயேசு கடிந்து காண்டார்‌ (மார்க்‌ 8:33).

நினைவொப்பம்‌ (autograph) வாங்குவதற்கு சாந்தி நிகேதனுக்கு வந்தான்‌ ஒருவன்‌. தாகூரின்‌ செயலர்‌ மாலீக்‌ எழுதினார்‌: “உன்னை நீ அறிவாய்‌”. ஏட்டின்‌ மறுபக்கம்‌ புரட்டி தாகூர்‌ எழுதினார்‌: “உன்னை நீ மறப்பாய்‌'. உன்னை அறிவது என்ற சாக்ரட்டீசின்‌ தத்துவம்‌ சிறந்தது. ஆனால்‌ உன்னை மறப்பது என்ற தாகூரின்‌ தத்துவம்‌ தான்‌, தனது என்ற குறுகிய வட்டத்தைத்‌ தகர்த்து நிற்பதால்‌ தலைசிறந்தது.

கரைய விரும்பாத உப்பினால்‌ உணவுக்குச்‌ சுவை கொடுக்க இயலாது. “தன்‌ உயிரைக்‌ காத்துக்கொள்ள விரும்பும்‌ எவரும்‌ அதை இழந்துவிடுவர்‌. என்‌ பொருட்டும்‌ நற்செய்தியின்‌ பொருட்டும்‌ தன்‌ உயிரை இழக்கும்‌ எவரும்‌ அதைக்‌ காத்துக்‌ கொள்வர்‌”: (மார்க்‌. 8:35).

இறைமகன்‌ இயேசு .நம்மைப்‌ பார்த்துச்‌ சொல்கிறார்‌: “நான்‌ யார்‌ என்பதைப்‌ புரிந்து கொண்டால்‌, நீங்கள்‌ யார்‌ உங்களுடைய அழைப்பு என்ன என்பதைப்‌ புரிந்து கொள்ளலாம்‌. என்னைப்‌ போல்‌ கடவுளின்‌ உண்மை ஊழியனாய்‌ இருக்க விரும்பினால்‌ நீங்களும்‌ துன்புறும்‌ இறை ஊழியர்களாக வேண்டும்‌... எனவே தியாக வாழ்வுக்கு, பலிவாழ்வுக்கு, துன்பச்‌ : சிலுவை வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கிறார்‌.

இன்றைய வழிபாட்டில்‌ இயேசுவைச்‌ சந்திப்பது என்பது ஒர்‌ அழைப்பாகும்‌. ஏன்‌, ஓர்‌ அறை கூவலாகும்‌.

மெசியா மாட்சியுள்ளவராய்‌, ஆட்சி புரிபவராய்‌, அடக்கி ஆள்பவராய்‌ விளங்க வேண்டும்‌ என்பதே மக்களின்‌ எதிர்பார்ப்பு. இத்தகைய சரியான புரிதல்‌ இல்லாத நிலையில்‌, இயே௬வை ஸசியா என்று மேதுரு அறிக்கை எசய்தது அவரது நம்பிக்கை வளர்ச்சியாகும்‌. ஆனால்‌ ஹசீயாத்‌ தன்மை புறக்கணிப்ப்னும்‌ நத்தம்‌ சிந்துவதீனும்‌ அடங்கி ஒருக்கிறது என்பதைப்‌ புரிந்து காள்ளாமல்‌ ருந்தது பேதுருவின்‌ நம்ப்க்கை ஆஹம்ன்மையாகும்‌.

துன்புறாமல்‌ சுகத்தை அனுபவிக்க விரும்புபவன்‌ சாத்தானுக்கு ஒத்தவன்‌. பாலைவனச்‌ சோதனை நினைவுக்கு வரட்டும்‌ (மத்‌. 4:10). துன்பங்களை ஏற்க மறுப்பதும்‌ சாத்தானிடம்‌ சரணடைவதும்‌ ஒன்றே!

இயேசுவுக்குச்‌ சிலுவை (துன்பம்‌) என்பது மீட்பின்‌ கருவி. அவரது மீட்புப்‌ பணியில்‌ பங்கேற்கும்‌ எவரும்‌ சிலுவையை எப்படி ஒதுக்க முடியும்‌, ஓரங்கட்ட முடியும்‌?

தொடக்க காலத்‌ திருஅவையில்‌ சிலுவை பற்றிய சிந்தனை அழுத்தமானது. “நாங்கள்‌ சிலுவையில்‌ அறையுண்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம்‌'” (1 கொரி. 1:23). “இயேசுகிறிஸ்து சிலுவையில்‌ அறையப்பட்டவராய்‌ உங்கள்‌ கண்முன்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டப்படவில்லையா?”” (கலாத்‌ 3:1). சிலுவை மீட்பின்‌ கருவி மட்டுமல்ல, அன்றாட வாழ்வில்‌ நமக்கு ஆறுதலின்‌ ஊற்று. முதல்‌ உலகப்‌ பெரும்‌ போரில்‌ ஓர்‌ ஊரே தகர்க்கப்பட்டது. அவசர சிகிச்சைக்கு அவ்வூர்க்கோயிலே மருத்துவமனையானது காலில்‌ குண்டடிப்பட்டு ரத்தக்‌ கசிவுக்கும்‌ எலும்பு முறிவுக்கும்‌ ஆளான ஒரு மனிதனைத்‌ தூக்கி வந்து பீடத்தின்‌ மேல்‌ கிடத்தினர்‌. ஒரு காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை. மயக்க மருந்து எதுவுமில்லை. பீடத்தின்‌ மேல்‌ இருந்த பெரிய பாடுபட்ட சிலுவையை உற்று நோக்கினான்‌ அவன்‌. “சிலுவையில்‌ தொங்கும்‌ இயேசுவின்‌ முகத்தை மட்டும்‌ மறைக்காமல்‌ அறுவைச்‌ சிகிச்சையைத்‌ தொடங்குங்கள்‌. எனக்காகத்‌ துன்புற்ற அவரைப்‌ பார்த்துக்‌ கொண்டே என்‌ வலியைப்‌ பொறுத்துக்‌ கொள்வேன்‌ ” என்றார்‌.

அன்னை மரியா மனித இனத்துக்கு இயேசு தந்த மகத்தான கொடை. அந்தக்‌ கொடையைச்‌ சிலுவையடியில்‌ வியாகுல அன்னையாகவன்றோ தந்தார்‌! மீட்பரின்‌ தாய்‌ மரியாவுக்கு பிறவிப்பாவத்திலிருந்து விலக்களித்தார்‌. ஆனால்‌ அந்தப்‌ பாவத்தின்‌ விளைவான துன்பத்திலிருந்து அவருக்கு விலக்களிக்கவில்லையே! பாவமே கல்லாத ஒரு தாயை ஆந்த உலகத்துக்குத்‌ தந்த கடவுள்‌ துன்பமே ஒல்லாத ஒரு தாயை ஏன்‌ தரன்ல்லை?

சீடர்களில்‌ எல்லாம்‌ தலையாய சீடர்‌ அல்லவா மரியா! சிலுவைத்‌ துன்பத்திலிருந்து இயேசு தம்‌ சீடரைப்‌ பிரிப்பதில்லை. பங்கேற்க அழைத்தவரன்றோ அவர்‌! (மார்க்‌. 8:34). எனவே தாயும்‌ சேயும்‌ கல்வாரிப்பலியில்‌ ஒன்றிணைகிறார்கள்‌. ஏன்‌, நாமும்‌ “இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்‌ போதெல்லாம்‌ ஆண்டவரின்‌ சாவை அறிவிக்கிறோம்‌” (1 கொரி. 11:26). திருத்தூதர்‌ பவுலின்‌ பார்வையில்‌ இரத்தம்சிந்தாமல்‌ மன்னிப்பு இல்லை. சிலுவையே மீட்பின்‌ வழி. சிலுவையில்‌ பங்கு கொண்டால்தான்‌ நாமும்‌ மீட்படைவோம்‌. நம்‌ மீட்புக்குத்‌ தடையாக இருப்பதைத்‌ தகர்த்தெறிய நாம்‌ தயாரா?

துன்யங்களின்‌ நடுவலும்‌ வாழ்க்கையின்‌ அருத்தத்தை, கறைவனின்‌ வீருப்பத்தைத்‌ தேடுபவன்‌ மனிதன்‌. அதனைக்‌ கண்டுபிடிப்பவன்‌, கடைப்பிடிப்பவன்‌ புனிதன்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

என் தலைவர் துணை நிற்கின்றார்

நிகழ்வு
மனைவி, இரண்டு மகன்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் அந்த அஞ்சல்காரர் (Post Man). கிறிஸ்தவரான அவர் குடும்பத்தோடு காலையிலும் மாலையிலும் இறைப்புகழ்ச்சிப் பாடல்பாடி, இறைவனிடம் வேண்டி வந்தது, அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்குப் பிடிக்கவே இல்லை. ஆகவே, அவர் தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதியிடம் சென்று, அஞ்சல்காரரின் குடும்பத்தை ஒழித்துக் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். மந்திரவாதியும் அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்டார்.

அன்று இரவு மந்திரவாதி கிறிஸ்தவரின் குடும்பத்தை அழிக்கச் சாத்தானை ஏவி விட்டான். சாத்தானும் கிறிஸ்தவரின் குடும்பத்தை அழிப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றது. சாத்தான் கிறிஸ்தவரின் வீட்டிற்குச் சென்ற நேரம், அவர் தன் குடும்பத்தோடு சேர்ந்து, இறைவனுக்குப் புகழ்ப்பா பாடி வேண்டிக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய வீட்டைச் சுற்றி பெரிய நெருப்புச் சுவரானது சூழ்ந்து நின்றது. இதைப் பார்த்து மிரண்டு போன சாத்தான், அங்கிருந்து வேகமாக வந்து, மந்திரவாதியிடம் நடந்ததையெல்லாம் சொன்னது.

இதையடுத்து மந்திரவாதி, கிறிஸ்தவரின் குடும்பத்தின்மீது சாத்தானை ஏவிவிட்டு, அழிக்கச் சொன்ன கிறிஸ்தவரின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்தவரை அழைத்து, “நீ என்னிடம் சாத்தானை ஏவிவிட்டு, அழிக்கச் சொன்ன குடும்பம் சாதாரண குடும்பம் அல்ல, அது கடவுளே துணை நிற்கும் குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தை என்னால் அழிக்க முடியாது. அதனால் நீ அந்தக் கிறிஸ்தவரிடம் சென்று, நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டு, அவரிடம் நட்பு பாராட்டு. அதுதான் உனக்கு நல்லது” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

ஆம், ஆண்டவர் தன் அடியார்களுக்குத் துணை நிற்கின்றார். அதனால் அவர்களை எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது. பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை ‘தலைவராகிய ஆண்டவர் துணை நிற்கின்றார்’ என்ற செய்தியைத் தருகின்றது. அவர் யாருக்குத் துணை நிற்கின்றார், அவருடைய துணையைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

தன் ஊழியருக்குத் துணை நிற்கும் ஆண்டவர் இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும் துன்புறும் ஊழியரைப் பற்றிய நான்கு பாடல்களில் மூன்றாவது பாடலாக வருவதுதான் இன்று நாம் முதல்வாசகமாக வாசிக்கக் கேட்ட இறைவார்த்தைப் பகுதி. மற்ற மூன்று பாடல்களும் கீழ்க்காணும் இறைவார்த்தைப் பகுதிகளில் இடம்பெறுகின்றன: எசா 42: 1-9, 49: 1-13, 52: 13- 53: 12.

இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியர் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான்: “ஆண்டவராகிய என் தலைவர் துணைநிற்கிறார்” என்பதாகும்.. இவ்வார்த்தைகள் இரண்டுமுறை வருவது நமது கவனத்திற்கு உரியது. இன்றைக்கு மக்கள் திரைப்பட நடிகர், அரசியல்வாதி, டிக்டாக் பிரபலம் என யார் யாரையோ ‘தலைவர்’ என அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்! இவர்களெல்லாம் நமக்கு இறுதிவரைக்கும் துணை நிற்பார்களா என்பது கேள்விக்குறியே! ஆனால், ஆண்டவர் தன் ஊழியர்களுக்குத் துணை நிற்பார். அதனால் அவர்களைக் குற்றவாளிகள் என்று யாராலும் தீர்ப்பிட முடியாது.

பழைய ஏற்பாட்டில் ஆண்டவரின் ஊழியராகப் பலர் அறியப்பட்டாலும், அவர்களில் மிகவும் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மோசே (இச 34: 5). இந்த மோசே எத்தியோப்பிய பெண்ணை மணந்தபோது, மோசேயின் சகோதரியான மிரியாம் ஆரோனோடு சேர்ந்துக்கொண்டு மோசேக்கு எதிராகப் பேசுவார். இதனால் மிரியாம் தொழுநோயால் பீடிக்கப்படுவார் (எண் 12: 10). மோசே சாந்தமுள்ள மானிடராய், ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரிய ஊழியராய் இருந்தபோது மிரியாம் மோசேக்கு எதிராகப் பேசியதால் அல்லது அவரைத் தீர்ப்பிட்டதால் தொழுநோயால் பீடிக்கப்படுகின்றார். ஆதலால், ஆண்டவர் தம் ஊழியருக்குத் துணை நிற்பதால் அவருக்கு எதிராக யாரும் தீர்ப்பிட முடியாது!

தனது திருவுளத்தை நிறைவேற்றுவோருக்குத் துணை நிற்கும் ஆண்டவர்

கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடப்பதற்குப் பதிலாகத் தங்களுடைய விருப்பத்திற்குக் கடவுளைப் பணிய வைக்கிற அல்லது இழுக்கின்ற பல மனிதர்களை இன்று நாம் கண்கூடாகக் காணலாம். அந்த அடிப்படையில் நற்செய்தியில் வருகின்ற பேதுருவும் இயேசுவைக் கடவுளின் திருவுளத்தின்படி நடக்கவிடாமல், தன்னுடைய விருப்பத்திற்கு இழுப்பதைக் குறித்து நாம் வாசிக்கின்றோம்.

“நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்ற கேள்விக்குப் பின், “நீங்கள் நான் யார் எனச் சொல்கின்றீர்கள்?” என்று இயேசு தன்னுடைய சீடர்களிடம் கேட்டபொழுது, “நீர் மெசியா” என்ற பதிலளிப்பார் பேதுரு. இதையடுத்து இயேசு தம் சீடர்களிடம், “தம்மைப் பற்றி எவரிடமும் சொல்லவேண்டாம்” என்று சொல்லிவிட்டு தன் பாடுகளையும் இறப்பையும் கூடவே உயிர்ப்பையும் முன்னறிவிப்பார். அப்பொழுதுதான் பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டு போய், அவரைக் கடிந்துகொள்வார். இயேசு கடவுளின் திருவுளத்தை (திப 2: 23) நிறைவேற்ற முன்வருகையில், பேதுரு மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணுகிறார். இதனால் இயேசு அவரை, “என் கண் முன் நில்லாதே சாத்தானே!” என்கிறார்.

இயேசு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகையில் எதிர்கொண்ட சவால்களும், அனுபவித்த துன்பங்களும் ஏராளம். ஒருகட்டத்தில் அவரது சீடர்களே அவரை விட்டு ஓடிபோனார்கள். ஆனால், தந்தைக் கடவுள் அவரோடு இருந்தார் (யோவா 16: 32). இதன்மூலம் யாரெல்லாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்களோ, அவர்களுக்குத் தந்தைக் கடவுள் துணைநிற்கின்றார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போருக்குத் துணைநிற்கும் ஆண்டவர்

சிலருக்கு மடி நிறையப் பொருள் இருக்கும். ஆனால், அதைப் பிறருக்கு, அதிலும் குறிப்பாகத் தேவையில் உள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கு நல்ல மனது இருக்காது. யாக்கோபு வாழ்ந்த முதலாம் நூற்றாண்டில் சிலர் தேவையில் இருந்தவர்களுக்கு எதுவும் கொடுக்காமல், பெயருக்குக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் யாக்கோபு, “நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்” என்கிறார். அவ்வாறெனில், ஒருவர் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என்றால், அவர் அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் ஆண்டவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை அன்பாக, கருணையாக, இரக்கச் செயல்களாக வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒருவர் தமது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கின்றபோது கடவுள் அவருக்குத் துணை நிற்கின்றார். ஆம், இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற, “நம்பிக்கை கொண்டோன் பதற்ற மடையான்” (எசா 28: 16) என்ற வார்த்தைகள் இதற்குச் சான்று பகர்கின்றன. ஆகையால், நாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து வாழ்கையில் பதற்ற மடையத் தேவையில்லை; ஏனெனில் நமக்குத் துணை நிற்பார் என்பது உறுதி.

சிந்தனை
‘அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர், ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்’ (திபா 118: 13) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நமக்குத் துணை நிற்கும் ஆண்டவரின் திருவுளத்தின் நடந்து, நம்பிக்கைச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தெரிவும் அர்ப்பணமும்

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சரியானவற்றைத் தேர்வு செய்யவும், தேர்ந்து தெரிவு செய்ததற்கு முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்யவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது. சரியானவற்றைத் தெரிவதும், தெரிந்து கொண்டபின் அதற்கு முழுமையாக அர்ப்பணிப்பதுமே ஒருவருக்கு வெற்றியைத் தரும். நாம் சரியான தெரிவுகளைச் செய்ய கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணைநிற்பவை நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையும், கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவு நெருக்கமுமே.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 50:5-9) 'துன்புறும் ஊழியன்' என்று தலைப்பிடப்படும் நான்கு பாடல்கள் வரிசையின் மூன்றாம் பாடல். 'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார். காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார். கற்போர் கேட்பதுபோல் நானும் செவிசாய்க்கச் செய்கின்றார்' (எசா 50:4) என்று தொடங்குகிறது. ஆண்டவரின் ஊழியன் யாரென்றால் இவருக்கு கடவுள்தாமே கற்றுத் தருகின்றார். மேலும், கடவுளின் கற்றுக்கொடுத்தலுக்கு தினமும் அவர் காதுகளைத் திறந்து காத்திருக்கின்றார். ஆனால், இப்படிப்பட்டவருக்கு என்ன நேருகிறது? 'முதுகில் அடிக்கப்படுகின்றார். இவருடைய தாடி பிடுங்கப்படுகிறது. பிடுங்குவதற்கு தாடையையும் இவர் ஒப்புவிக்கின்றார். இவர் நிந்தனை செய்யப்படுகின்றார். காறி உமிழப்படுகின்றார்.' இவ்வாறாக, ஒட்டுமொத்த அவமானத்திற்கும், நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆட்படுகின்றார். ஏன் இவருக்கு இந்த நிலை? இதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், ஒருவேளை இவர் எடுத்த தெரிவுக்காகவும், அந்த தெரிவு கொணர்ந்த அர்ப்பணத்திற்காகவும்தான் இவர் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கின்றார். இருந்தாலும், இவர் தன் தெரிவையும் அர்ப்பணத்தையும் விட்டுவிடவில்லை. தன் எதிரிகளைத் துணிவோடும் மனத்திடத்தோடும் எதிர்கொள்கின்றார். இவர் கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும், இவருடைய கடவுள்சார்நிலையும், கடவுளின் உடனிருப்பும் தொடர்ந்து போராட இவருக்கு ஆற்றல் தருகின்றது. 'ஆண்டவராகிய தலைவர் உடன் நிற்பதால்' இவருடைய எதிரிகள் ஆற்றல் இழக்கின்றனர். இறுதியாக, 'அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்.'

இங்கே 'துணியைப் போல இற்றுப்போதல்' என்ற ஒரு உருவகத்தைப் பார்க்கிறோம். நீண்ட காலமாக மண்ணில் கிடக்கும் ஒரு துணி பார்ப்பதற்கு துணிபோல இருந்தாலும், அந்தத் துணியின் நிறம், அந்தத் துணியின் அச்சு எல்லாம் அப்படியே இருந்தாலும், அதை நாம் கையில் எடுக்கத் தொடங்கினால், அது அப்படியே உதிர ஆரம்பிக்கும். அதுதான் இற்றுப்போதல். ஆக, ஒரு காலத்தில் கையால் வலு கொண்டு இழுத்தாலும் கிழியாத துணி, இப்போது பார்ப்பதற்கு முழுமையாக, வலுவானதாக இருந்தாலும் தொட்டவுடன் உதிர்ந்துபோகும் அளவிற்கு அது வலுவற்று இருக்கிறது.

துன்புறும் ஊழியன் பாடலின் பின்புலம் யூதர்களின் எருசலேம் வருகைதான். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரஸ் அவர்களால் விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர் யூத மக்கள். தங்களின் சொந்த நகரான எருசலேமுக்கு வந்தபோது எருசலேம் நிலைகுலைந்து கிடக்கிறது. இப்போது தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் அவர்கள் கட்ட வேண்டும். இப்போது இவர்கள் முன் இரண்டு தெரிவுகள்: ஒன்று, பாரசீக அரசோடு கைகோர்த்துக்கொள்வது. அவர்களின் துணையால் மீண்டும் நகரத்தையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இந்த எண்ணத்தைக் கொண்டவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தார்கள். ஏனெனில், கடவுள் தாமே தங்களை எதிரியிடம் ஒப்படைத்துவிட்டார் என்று கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். இரண்டு, பாரசீக தாக்கத்திலிருந்து விலகி இருப்பது. கடவுளின் உதவியோடு மீண்டும் தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இங்கே நாம் காணும் 'துன்புறும் ஊழியன்' இந்த இரண்டாம் குழுவின் தலைவராக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவரைப் பொறுத்தவரையில் கடவுளின் குரலைக் கேட்பதும், அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதுமே நன்மையைப் பெற்றுத்தரும். ஆகையால்தான், இவர் 'நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவும் இல்லை' (50:5) என்கிறார். இவ்வாறாக, சரியான தெரிவும், சமரசம் செய்துகொள்ளாத இவரது அர்ப்பணமும் இவருக்குத் துன்பங்களைத் தந்தாலும், இறுதியில் இவர் கடவுளின் துணை கொண்டு அனைவர்மேலும் வெற்றிகொள்கிறார். தன் உயிரே போகும் நிலை வந்தாலும் இவர் தன் தெரிவிலும், அர்ப்பணத்திலும் உறுதியாக இருக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 2:14-18) தொடக்ககால எருசலேம் திருச்சபையில் நிலவிய ஒரு குழப்பம் பற்றி வாசிக்கின்றோம். '... திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்' (கலா 2:16) என்ற பவுலின் போதனையைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர் சிலர். இவர்கள், 'நம்பிக்கை' என்பது 'வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வது' என்றும், 'வேறு எந்தச் செயல்களையும் இதற்குச் செய்யத் தேவையில்லை' என்றும் தங்களின் தவறான புரிதலை மற்றவர்களுக்குப் பரப்பினர். மேலும், விருத்தசேதனம், தூய்மைச் சடங்கு, ஓய்வுநாள் சட்டம் அனைத்தையும் வேண்டாம் எனப் புறந்தள்ளினர். அத்தோடு சேர்த்து இறைவனின் கட்டளைகளையும் ஓரங்கட்டினர். ஆக, 'நான் கடவுளை ஏற்றுக்கொண்டால் போதும்' என்று சொல்லிக்கொண்டு, கடவுளின் 'அன்புக் கட்டளையை' புறக்கணித்தனர். ஆனால், பவுல், 'அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கையே இன்றிமையாதது' (காண். கலா 5:6) என்று சொன்னதை அவர்கள் மறந்தார்கள். இத்தகைய தவறான புரிதல் யாக்கோபின் திருச்சபையை மிகவும் பாதித்தது. நம்பிக்கையாளர்கள் என்று தங்களையே கருதியவர்கள், தங்களின் நம்பிக்கை ஒன்றே தங்களுக்கு மீட்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில், செயல்களை - பிறரன்புச் செயல்களை - ஓரங்கட்டினர். இப்படிச் செய்வது இவர்களுக்கு மிக எளிதாகவும் இருந்தது. ஏனெனில், இப்படி இருக்கும்போது யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. 'நம்பிக்கை' என்ற அக உணர்வு 'நடத்தை' என்ற புறச் செயலில் வெளிப்படவேண்டும் எனச் சொல்கிறார் யாக்கோபு. அப்படி செயல்படாமல் இருக்கிற நம்பிக்கை வெறும் கானல்நீர்தான். கானல்நீர் ஒருபோதும் நம் தாகம் தீர்க்காது. மேலும், தன் திருச்சபையில் உள்ள ப்ராக்டிகலான எடுத்துக்காட்டையும் சொல்கின்றார்: 'உணவும், உடையும் இல்லாத ஒருவர் நம்மிடம் வர, அவரிடம் நாம், 'நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்துகொள்ளுங்கள். பசியாற்றிக்கொள்ளுங்கள்' என்று சொல்வதால் அவருக்குப் பயன் என்ன?' செயல் இல்லாத சொற்கள் வெற்றுச்சொற்களே.

ஆக, நம்பிக்கை என்பதை நாம் தெரிவு செய்கிறோம் என்றால், அந்தத் தெரிவிற்கான அர்ப்பணம் இயேசுவின் மனநிலையை நாமும் பெற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. அந்த மனநிலை நம்முடைய பிறரன்பிலும், பிறர்சேவையிலும் வெளிப்பட வேண்டும். அதைவிடுத்து, செயலற்ற நம்பிக்கையை தெரிவு செய்வதும், எந்தவொரு வலியையும் தராத அர்ப்பணத்தைக் கைக்கொள்வதும் சால்பன்று.

நற்செய்தி வாசகத்திற்கு (காண். மாற் 8:27-35) வருவோம்.

'பேதுருவின் அறிக்கை' என்று சொல்லப்படும் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதிதான் மாற்கு நற்செய்தியின் மையமாக இருக்கிறது. இந்தப் பகுதிதான் மாற்கு நற்செய்திதான் திருப்புமுனை. இதுவரை 'இயேசு யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்த வாசகர், 'இயேசுவே மெசியா' என்ற புரிதலை இங்கேதான் பெறுகின்றார். இதற்கு முன்னால் உள்ள பகுதியில் இயேசு தீய ஆவிகளை விரட்டினார், நோயாளர்களுக்கு நலம் தந்தார், சீடர்களுக்குப் போதித்தார், தொழுகைக்கூடத்தில் போதித்தார். ஆனால், இவற்றிற்காக இயேசு இவ்வுலகிற்கு வரவில்லை. இயேசுவின் இச்செயல்களைக் கண்ட மக்கள் அவரை இறைவாக்கினரில் ஒருவராக, திருமுழுக்கு யோவானாக, எலியாவாக அல்லது அவர்களுக்கு இணையானவராகப் பார்த்தனர். ஆகையால்தான், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்பதன் வழியாக, தன் அடையாளத்தையும், தன் பணியையும் தானே வெளிப்படுத்த தயாராகிறார் இயேசு. பேதுரு சரியாக, 'நீர் மெசியா' என்று சொன்னபோது, தான் வந்ததன் நோக்கத்தையும் வெளிப்படுத்த விளைகிறார் இயேசு. தன் பணியின் உண்மையான இலக்கு - துன்பம், உதறித் தள்ளப்படுதல், கொலை, உயிர்ப்பு - பற்றி முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறார். தன் இறப்பு மிக அருகில் இருக்கிறது என்பதை மனித அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயேசுவுக்கே கடினமாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும், தான் தெரிவு செய்ய வேண்டிய பாதையும், தான் காட்ட வேண்டிய அர்ப்பணமும் அதுவே என்பதில் தெளிவாக இருந்தார் இயேசு. உயிர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கை அவருக்கு துணிவைக் கொடுத்தாலும், மனிதன் என்ற நிலையில் தான் கொடுக்க வேண்டிய அர்ப்பணத்தின் விலை அவருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கும்.

பேதுரு இயேசுவின் தெரிவையும், அர்ப்பணத்தையும் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுரு இயேசுவைப் பற்றி வேறு எண்ணங்கள் வைத்திருந்தார். மேலும், இயேசுவின் தெரிவு மற்றும் அர்ப்பணத்திலிருந்து அவரை விலக்கிவிடத் துடிக்கின்றார். ஆனால், இயேசு பேதுருவை 'சாத்தானே' என கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுருவின் வார்த்தை இயேசுவின் தெரிவை மாற்றுவதாகவும், அவரின் அர்ப்பணம் என்னும் பாதையில் குறுக்கே நிற்பதாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் இயேசு சீடத்துவத்தின் விலை என்ன என்பதைப் பற்றித் தன் சீடர்களோடு பகிர்ந்துகொள்கின்றார். தன் தெரிவும் அர்ப்பணமும் மட்டுமல்ல. மாறாக, தன் சீடர்களின் தெரிவும் அர்ப்பணமும் தான் தேர்ந்துகொண்டதை ஒட்டியதாகவே இருக்க வேண்டும் எனக் கற்பிக்கின்றார். இயேசு இறப்பைத் தேடிச் செல்லவில்லை. மாறாக, இறப்பை தழுவிக்கொள்வதால்தான் வாழ்வை அடைய முடியும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் உலகிற்கு வந்தார். இப்பாதை துன்பத்தின் பாதை என்றாலும் இதைத் தெரிந்துகொண்டார்.

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு நாம் சரியானவற்றைத் தெரிவு செய்யவும், சரியானவற்றிற்கு நம்மை அர்ப்பணம் செய்யவும் தூண்டுகிறது.

எசாயாவின் காலத்தில், கடவுளுக்கு எதிரான பாதையைத் தெரிவு செய்யப் பலர் நினைத்தனர். ஆனால், துன்புறும் ஊழியன், 'கடவுள்' என்னும் பாதையைத் தெரிவு செய்து, அதற்குத் தன்னை அர்ப்பணிக்கிறார்.

யாக்கோபின் திருச்சபையில், வெறும் கோட்பாடுகளை நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளும் எளிய பாதையைத் தெரிவு செய்த நம்பிக்கையாளர்கள், தம் சகோதர, சகோதரிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவர்களை நற்செயல்களோடு கூடிய நம்பிக்கை என்னும் பாதையைத் தெரிவு செய்யவும், ஒவ்வொரு பொழுதும் தங்கள் நம்பிக்கையை நற்செயல்களால் வெளிப்படுத்தும் அர்ப்பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் தூண்டுகிறார் யாக்கோபு.

பேதுருவுக்கு துன்பம் மற்றும் சிலுவையின் தெரிவும், அர்ப்பணமும் 'மெசியா' என்னும் இயேசுவுக்குத் தேவையற்றதாகத் தெரிந்தது. ஏனெனில், இயேசுவை ஓர் 'அரச' அல்லது 'அருள்பணியாளர் மெசியாவாக' அவர் கற்பனை செய்திருந்தார். ஆனால், இயேசு தன் தெரிவும், அர்ப்பணமும் சிலுவையே என்பதை பேதுருவுக்கும், சீடர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் தெளிவாகச் சொல்கின்றார்.

இப்படிப்பட்ட சரியான தெரிவுகளைச் செய்பவர்களும், சரியான தெரிவுகளுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்பவர்களுமே, இன்றைய பதிலுரைப் பாடல் சொல்வதுபோல, 'உயிர் வாழ்வோர் நாட்டில் ஆண்டவரின் திருமுன் வாழ முடியும்' (திபா 116).

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?

நம் வாழ்வில் நமக்கு முன் பல தெரிவுகள் உள்ளன. எந்நேரமும் நம் கண் முன் நிறைய விருப்பங்கள், நம் காதுகளில் நிறைய ஒலிகள், நிறைய வசீகரங்கள், நிறைய மயக்கங்கள் நம்மை இங்கும் அங்கும் அலைக்கழிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், நம்பிக்கையாளர் உறுதியான தளத்தில் நிற்க வேண்டும். அந்த தளத்தில் இருந்து தன் தெரிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் சரியான தெரிவை மேற்கொள்ளவும், சரியான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

நாம் சரியான தெரிவை மேற்கொள்ளும்போது, அந்தத் தெரிவிற்கு ஏற்ற அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும்போது இறைவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை முதல் வாசகத்தின் துன்புறும் ஊழியன் நமக்குச் சொல்கிறார். ஊழியனின் விடாமுயற்சியும் அர்ப்பணமும் அவரை எதிரிகளின் நிலையிலிருந்து உயர்த்தியது. அவருக்கு கடவுளின் பாதுகாப்பு எப்போதும் உடனிருந்தது. அவர் தன் அர்ப்பணத்திற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருந்தாலும் அவர் பெற்ற பரிசு பெரிதாக இருந்தது. நாம் இங்குமங்கும் அலைக்கழிக்கப்படும்போது கடவுளை நோக்கி குரல் எழுப்பினால் அவர் அருகில் வருவார். நாம் சரியான தெரிவுகளை மேற்கொள்ள அவர் நமக்கு உள்ளொளி தருவார்.

இரண்டாவதாக, நம் நம்பிக்கை நம் நற்செயல்களில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கை என்பது வாழ்க்கை. இந்த வாழ்க்கை மற்றவரோடு உள்ள உறவில் வெளிப்பட வேண்டும். அன்றாடம் நம் கண்முன் நிறைய மக்களைப் பார்க்கிறோம் - பசித்தவர்கள், இருப்பிடம் இல்லாதவர்கள், தேவையில் இருப்பவர்கள். இவர்களைக் காணும்போதெல்லாம் நாம் தெரிவு எப்படி இருக்கிறது? நம்முடைய இயலாமையிலும் அவர்களுக்கு நம் உடனிருப்பைக் காட்ட முடிகிறதா? அவர்களோடு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க முடிகிறதா நம்மால்?

மூன்றாவதாக, இயேசுவின் வாழ்வு மற்றும் பணியின் திருப்புமுனையில் அவர் எடுக்க வேண்டிய தெரிவு மற்றும் அர்ப்பணத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டோம். அவரின் தெரிவையும் அர்ப்பணத்தையும் கண்ட நாம் அலைக்கழிக்கப்படும் நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் தெரிவும் அர்ப்பணமும் எப்படி இருக்கிறது?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு