மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 22-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
இணைச்சட்டம் 4:1-2, 6-8 | யாக்கேபு 1:17-18, 21ஆ-22,27; | மாற்கு 7:1-8, 14-15, 21-23

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


அன்பே அடித்தளம்

தொடக்கம்
சில வாரங்களாகச் செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சியிலும் தொடர்ந்து வரும் செய்தி, பெப்சி, கொக்கோ கோலா போன்ற பானங்கள் பற்றியது. இதில் கான்சர் (புற்று நோயை) உண்டாக்கும் நச்சுத் தன்மையுள்ளது என்பதை சோதனையில் கண்டு பிடித்துவிட்டோம் என்பது.

கட்சி வேறுபாடு இன்றி, ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி பாராளுமன்றத்தில் பெரிய அமளி ஏற்படுத்தியது. அதன் வளாகத்தில் அப்பானங்கள் கொண்டு வரத் தடைசெய்யப்பட்டன. தெருக்களில் ஆர்ப்பாட்டம், கூடி நின்று பெப்சி, கொக்க கோலா பாட்டில்களை உடைத்து தரையிலே கொட்டிய காட்சி . கடைகளிலே, அலுவலகங்களிலே, வீட்டிலே பேச்சு. நாடே விழித்துக் கொண்டது போல ஒரு காட்சி! இது பாராட்டத்தக்க செயல்தான்!

ஆனால் பெப்சி, கொக்கோ கோலாவை விட அதிக நச்சுத் தன்மை உள்ள காரியங்கள் அறுபத்து மூன்று ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் மலிந்து கிடக்கின்றனவே! அதைப்பற்றி யாருக்கும் கவலை உண்டா? அக்கறையுண்டா?

மருத்துவத் துறையிலே போலித்தனம், கல்வித் துறையிலே வியாபாரம், காவல் துறையிலே காம வெறியர்கள். லஞ்சம் என துறைக்குத் துறை நிறைந்து கொண்டிருக்கும் நாசகார நச்சுக் கிருமிகள் எத்தனை எத்தனை? ஏராளம்? ஏராளம்?

இது மட்டுமா? தூங்கிக் கிடக்கும் நல்ல சமுதாயத் திட்டங்கள், சாதி, மத, மொழிப் பிளவுகளால் மனித நேயத்தைப் பிளக்கும் தீயச் சக்திகள். சிறையுள்ளே இருக்க வேண்டியவர் செல்வாக்கோடு வெளியே உலவி வரும் தீயவர்கள், லஞ்சக் கடலிலே மூழ்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள், சமயவாதிகள், அரசு ஊழியர்கள் எனப் பல நச்சுத் தன்மையுடைய நாசக் கிருமிகள் இந்த நாட்டிலே நிறைந்து கிடக்கின்றனரே? இதுதான் வெளிவேடம்! பரிசேயத் தன்மை! கொக்கோ கோலா, பெப்சி தயாரிக்க அமெரிக்காவிலிருந்தா தண்ணீர் கொண்டு வந்தார்கள்? நம் ஊர் தண்ணீர்தானே! அது மாசுபட்டுள்ளதே! நஞ்சடைந்துள்ளதே ! சாக்கடையோடு கலந்து வருகிறதல்லவா! இதைப்பற்றி யாருக்காவது அக்கறை, கவலை உண்டா?

சமீபத்தில் இந்து பத்திரிக்கையில் ஒரு கார்ட்டூன் வரையப்பட்டு இருந்தது. பிரதமர் வாஜ்பாய்க்குப் பல முகங்கள் உண்டு என்று காட்டும் விதத்தில் கற்பனையோடு வரையப்பட்ட கார்ட்டூன் அது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதே போன்று பல முகங்கள் கொண்டவர்களாகப் பரிசேயத் தன்மையோடு நாம் வாழ்கிறோம் என்பது அப்பட்டமான உண்மை!

பகுதி - II
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அன்றைய மக்கள் தலைவர்கள் எனப்படும் பரிசேயர், மறைநூல் அறிஞர் இயேசுவிடம் வந்து முறையிடுகிறார்கள்.

உம் சீடர்கள் மூதாதையர் மரபுகளைப் பின்பற்றுவது இல்லையே. தீட்டான கைகளால் உணவு அருந்துகிறார்கள் (மாற்கு 7:5) என்றார்கள். இயேசு இதற்குத் தெளிவாகப் பதில் கொடுக்கிறார்.

எது அவசியமோ அதை விட்டு விட்டு உப்பு சப்பு இல்லாத மரபுகளைக் கடைப்பிடித்துக் கொள்கிறீர்கள்.

இந்த மக்களோ உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. ஏனெனில் கடவுளின் கட்டளைகளான நீதி, நேர்மை, நியாயம், உண்மை , நன்மை, அன்பு இவைகளைப் பின்பற்றாமல் போலித்தனமான மரபுகளுக்கு அல்லவா நீங்கள் அடிமையாகக் கிடக்கிறீர்கள் (மாற் 7:6-7) என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

ஓர் ஆளைப்பற்றி இரண்டே வரிகளில் சுருக்கமாக எழுது என்றால் அவ்வளவு எளிதல்ல! ஆனால் விவிலியத்தை முழுதும் இரண்டே வரிகளில் எழுது என்றால் அது இயலுமா? ஆம் நிச்சயமாக இயலும். இதைத்தான் உன் கடவுளாகிய ஆண்டவரை முழு உள்ளத்தோடு அன்பு செய். உன்னைப்போல உன் அயலானையும் அன்பு செய் (இணை . சட். 6: மத். 2:37-39) என்று இயேசு சொன்னார். திருச்சட்டமும், இறைவாக்கும் இவ்விரு கட்டளை களுக்கு அடிப்படை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பரிசேயர்கள், கைகளையும், கால்களையும் பாத்திரங்களையும் கழுவும் புறத்தூய்மையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். ஆனால் அகத் தூய்மையை மறந்தனர். எனவேதான் இன்று இயேசு பரிசேயர்களின் வெளி வேடத்தைக் கண்டிக்கிறார். எந்த அளவுக்கு என்றால் கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கும்,

வெள்ளை யடிக்கப்பட்ட கல்லறைகள் (மத். 23:24, 27) என்றும் சாடினார்.

கதை
தோட்டக்காரர் அழகான பூச்செடிகளின் விதைகளை 40 தொட்டிகளில் விதைத்து வேலைக்காரனைக் கூப்பிட்டுத் தண்ணீர் ஊற்றும்படி சொல்லி ஒரு மாதம் வெளியூர் சென்றார். திரும்பி வந்தபோது வெண்டைச் செடிகள் முளைத்திருந்தன. எங்கே பூச்செடி எனக் கேட்டபோது, தண்ணீர் ஊற்றினேன், முளைக்கவில்லை. எனவே வெண்டை விதைத்தேன். முளைத்தன விரைவில். அதன் பிறகுதான் வேறு விதைகள் முளைத்தன. அவைகளைக் களைகள் என்று நினைத்து பிடுங்கி எறிந்து விட்டேன் என்றான் கூலியாள்.

இதேபோலத்தான் பரிசேயர்கள் நிலை. கடவுள் கட்டளையைக் காற்றில் பறக்கவிட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள். எனவே இயேசு சொன்னார், "நீங்கள் கடவுள் கட்டளையைக் கைவிட்டுவிட்டு மனித மரபுகளைப் பின்பற்றி வருகிறீர்கள்" (மாற் 7:8).

முடிவுரை மதம் மக்களைப் பாவி, தூயவன், தீண்டதக்கவன், தீண்டத் தகாதவன் என்ற பிரிவினைக்கு ஆளாக்காமல், மனிதர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இறையனுபவத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு நம் ஆண்டவர் இயேசு நமக்கு வழிகாட்டியாக உள்ளார். புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல நாமும் கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டிருப்போம் (பிலி. 2:5).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உதவிக்கு ஆற்றல் உண்டு

இறைவனுக்கு ஏற்புடையவர்கள் யார்? என்பதற்கு இன்றைய நற்செய்தி பதில் கூறுகின்றது. கடவுள் அகத்தில் அழகுள்ளவர்களையே அதிகம் அன்பு செய்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட இதோ மீட்பின் வரலாற்றில் நடந்த நிகழ்வு ஒன்று.

1 சாமு 16:1-13 முடிய உள்ள பகுதி!

கடவுள் தமக்குக் கீழ்ப்படியாத சவுல் அரசனுக்குப் பதிலாக, இஸ்ரயேல் நாட்டுக்கு வேறோர் அரசனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். ஆகவே கடவுள் சாமுவேல் என்னும் இறைவாக்கினரை அழைத்து, பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகின்றேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் (1 சாமு 16:1) என்றார்.

ஈசாய் முதல் மகனை சாமுவேல் முன்னால் நிறுத்தினார். சாமுவேல் கடவுளைப் பார்த்து. இவனைத் திருப்பொழிவு செய்யலாமா? என்றார். கடவுளோ சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே;ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை ; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1 சாமு 16:7) என்று கூறிவிட்டார்.

ஈசாய் ஏழு குழந்தைகளை சாமுவேல் முன் நிறுத்தினார். கடவுள் அந்த ஏழு குழந்தைகளையும் தேர்ந்தெடுக்கவில்லை! பிறகு சாமுவேல் ஈசாயிடம், உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? (1 சாமு 16:11) என்று கேட்க, ஈசாய் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது என்னும் சிறுவனை அழைத்துவரச் சொல்கின்றார். தாவீதின் உள்ளம் தூய்மையாக இருந்ததால் அவனைத் திருப்பொழிவு செய்யுமாறு சாமுவேலுக்கு கடவுள் ஆணையிடுகின்றார். திருப்பொழிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது (1 சாமு 16:13).

கடவுள் தந்த கட்டளைகளை (முதல் வாசகம்) புறத்தில் பின்பற்றினால் போதும் என இஸ்ரயேலர் நினைத்தபோது, இயேசுவோ கடவுளின் கட்டளைகளைப் புறத்தில் கடைப்பிடித்தால் மட்டும் போதாது, அகத்திலும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; உடல் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது, உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியின் வழியாக அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார்.

நமது மனம் தூய்மையாக இருந்தால்தான் கடவுளின் ஆசி கிடைக்கும்! ஓர் ஊரிலே பெரிய பணக்காரன் இருந்தான். அவன் இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லை என்று சொல்வதில்லை! ஒருநாள் ஏழை ஒருவர் அவரிடம் சென்று சாப்பாடு கேட்டார். பணக்காரர் கையில் சோறு இருந்தது! ஆனால் பிச்சைக் கேட்டவரின் பாத்திரத்தில் உணவைப் போட தயங்கினார். காரணம் பிச்சைக் கேட்டவர் பாத்திரத்தில் தூசிபடிந்து அது அசுத்தமாக இருந்தது. உன் பாத்திரத்தை சுத்தமாக்கு; சோறு போடுகின்றேன் என்றார் பணக்காரர். பிச்சைக் கேட்டவர் பாத்திரத்தை சுத்தம் செய்தார். அவருக்கு உணவு கிடைத்தது. இந்தக் கதையில் வந்த பணக்காரரைப் போன்றவர் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, நமது உள்ளத்தையும் மனத்தையும் தூய்மைப்படுத்தக்கூடிய ஆற்றல், துன்புறும் அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் நாம் செய்யும் உதவிகளுக்கு உண்டு என்கின்றார்.

மேலும் அறிவோம் :

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் : 231).

பொருள் : வறியவராகிய ஏழைக்கு உணவு முதலானவற்றை வழங்குவதால் புகழ் பெருகும். அத்தகைய புகழாகிய பயன்தரும் ஆக்கத்தைத்தவிர, வாழும் மாந்தர்க்கு எழுச்சி தருவது வேறு எதுவும் இல்லை .

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"இரண்டாவது குலோத்துங்க சோழனைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக" என்ற கேள்விக்கு, ஒரு மாணவன், "இரண்டாம் குலோத்துங்க சோழன் முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின்னால் இருந்தவன்; மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு முன்னால் இருந்தவன்' என்று எழுதியிருந்தான். அவனுடைய அபார மூளையை அருங்காட்சியத்தில் வைக்க வேண்டும்!

கடவுளுடைய கட்டளைகளை, குறிப்பாகப் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து. கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்கும் இடையே உள்ள உறவைச் சீர்படுத்தி, செம்மைப்படுத்தி, புனிதப்படுத்தி கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக, பரிசேயர்கள் கைகளையும் கால்களையும், கிரகணங்களையும் தட்டுகளையும் கழுவித் தங்களைத் தூய்மைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்தினர். புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அகத்தூய்மையில் கோட்டை விட்டனர். கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கினர். எனவே, இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பரிசேயர்களின் வெளிவேடத்தைக் கண்டித்து அகத்தூய்மையை வலியுறுத்துகிறார், வெளியிலிருந்து உள்ளே செல்வது மனிதனை மாசுபடுத்துவதில்லை, மாறாக மனிதருடைய உள்ளத்திலிருந்து வெளியே வருபவை. அதாவது கொலை, களவு, பாத்தமை, காமவெறி ஆகியவை (பத்துக் கட்டளைகளுக்கு எதிரானவை) மனிதனை மாசுபடுத்துகின்றன என்கிறார் இயேசு.

அறன் என்பது அகத்தூய்மையே; மற்றனைத்தும் பகட்டுத் தன்மையைக் கொண்டுள்ளன என்கிறார் வள்ளுவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து
அறன்: ஆகுல நீர பிற (குறள் 34 )

நெஞ்சத்தைக் கோவிலாக்கி, நினைவை மலராக்கி அன்பை மஞ்சன நீராக்கி, கடவுளுக்கு வழிபாடு செய்கிறார் தாயுமானவர்,

"நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வா ராய் பராபரமே",

ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டு நண்பர்களில் ஒருவன் தன் அம்மாவுக்குப் பயந்து கொண்டு ஞாயிறு திருப்பலிக்குச் சென்றான். மற்றவன் புத்தம் புதிய திரைப்படத்திற்குச் சென்றான். மறுநாள் இருவருமே ஒரு விபத்தில் இறந்தனர். திரைப்படத்திற்குச் சென்றவனுக்கு விண்ணகமும் கோவிலுக்குச் சென்றவனுக்கு நரகமும் கிடைத்தது. ஏன்? திரைப்படத்திற்குச் சென்றவன் திரை அரங்கில் இருந்தாலும் அவனுடைய எண்ணம் ஆலயத்தில் இருந்தது. மாறாக, ஆலயத்திற்குச் சென்றவனுடைய எண்ணமெல்லாம் திரை அரங்கில் இருந்தது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதைவிட, நம் உள்ளம் எங்கே இருக்கிறது என்பதுதான் முக்கியம். 'நீ எங்கே என் நினைவுகள் அங்கே!'.

உதட்டளவில் கடவுளைப் புகழ்ந்து, உள்ளத்தளவில் கடவுளுக்கு அந்நியமாக வாழ்ந்த பரிசேயர்களை, இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி கடிந்துரைக்கிறார் இயேசு கிறிஸ்து. "இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது" (மாற் 7:6).

தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட ஒருவர் நாற்பது தொட்டிகளில் அபூர்வரக விதைகளை நட்டு. தனது வேலைக்காரனைக் கூப்பிட்டு, தான் வெளியூர் சென்று பத்து நாள்கள் கழித்துத் திரும்புவதாகவும் அதுவரை பூத்தொட்டிகளில் தண்ணீர் ஊாற்றும்படியாகவும் கூறி வெளியூர் சென்றார். பத்து நாள்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது பூத்தொட்டிகளில் வெண்டை விதைகள் முளைத்திருப்பதைக் கண்டு, அதிர்ச்சியுற்று வேலைக்காரனிடம் விளக்கம் கேட்டார். வேலைக்காரன் அவரிடம், "முதலாளி! ஐந்து நாள்கள் நான் பூத்தொட்டிகளில் தண்ணீர் மாற்றியும் ஒன்றும் முளைக்கவில்லை. எனவே வெண்டை விதைகளை ஊன்றி தண்ணீர் விட்டேன்; அவை விரைவாக முளைத்துவிட்டன. அதன் பிறகு வேறு விதைகள் முளைத்தன; அவைகளைக் களையென்று நினைத்து பிடுங்கி எறிந்து விட்டேன்" என்றான்.

அவ்வேலைக்காரன் முதலாளி நட்ட பூ விதைகளையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, தான் நட்ட வெண்டை விதைகளை வளர்த்தான். அவ்வாறே பரிசேயர்களும் கடவுளுடைய கட்டளைகளைக் காற்றில் பறக்க விட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள், இதைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார், "நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருபவர்கள் (மாற் 7:8).

இறையன்பு பிறரன்பில் வெளிப்பட வேண்டும், இன்றைய இரண்டாம் வாசகத்தில் உண்மையான சமயம் என்ன என்பதைப் புனித யாக்கோபு விளக்குகின்றார். தூய்மையான, மாசற்ற சமய வாழ்வு என்பது அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனிப்பதாகும் (யாக் 1:27). "ஏழை விதவைகளையும் அனாதைகளையும் ஆதரிக்காத எந்த மதத்தையும் நான் நம்பத் தயாராக இல்லை” என்கிறார் சுவாமி விவேகானந்தர். பரிசேயர்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மைப்படுத்தினர். அதற்குப் பதிலாக, கிண்ணத்திற்குள்ளே உள்ளதை. அதாவது உணவை ஏழைகளுக்குத் தர்மமாகக் கொடுத்தால் உள்ளும் புறமும் அனைத்துமே தூய்மையாகும் என்கிறார் இயேசு கிறிஸ்து (லூக் 11:41).

எனவே, இறையன்பையும் பிறரன்பையும் வளர்க்கவே சமயங்கள் உள்ளன. இவை இரண்டையும் வளர்க்காத சமயங்களின் கோட்பாடுகளும், வழிபாட்டு முறைகளும் சாரமற்ற சக்கைகள்! சமுதாயத்தின் சாபக்கேடுகள்! இறைவனைக் குழிதோண்டி புதைக்கும் சவக் குழிகள்!!!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்”

நிகழ்வு

ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவைச் சார்ந்த பிரபல மானுடவியலாரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்கரெட் மீட் (Margaret Mead) என்பவரிடம், “நாகரிகம் எப்போது தோன்றியது?” என்றொரு கேள்வியைக் கேட்டார். இதற்கு மார்கரெட் மீட், ‘எப்பொழுது மீன்பிடிக்கும் தூண்டில், மண்பாண்டம், மாவரைக்கும் கல் என ஏதாவது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோ, அப்பொழுது நாகரிகம் தொடங்கியது’ என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தார் செய்தியாளர்.

ஆனால், செய்தியாளர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, மார்கரெட் மீட் இவ்வாறு பதிலளித்தார்: “ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவி செய்தானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது. ஏனெனில், ஒரு விலங்கு அடிப்பட்டுக் கிடக்கும் இன்னொரு விலங்குக்கு உதவுவதும் இல்லை; காயத்திற்குக் கட்டுப்போட்டு நலப்படுத்துவமில்லை. மனிதன்தான் இன்னொரு மனிதன் அடிபட்டுக் கிடக்கின்றபோது, அவனுக்கு உதவுகின்றான்; அவனுடைய காயத்திற்குக் கட்டுப்போட்டு, அவனை நலப்படுத்துகின்றான். அதனால் ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவினானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது.”

மார்கரெட் மீட் சொன்ன இத்தகையதொரு பதிலைக் கேட்டுச் செய்தியாளர் மிகவும் வியந்து போனார்.

ஆம், துன்பத்தில் இருக்கின்ற ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவுகின்றானோ, அப்பொழுதுதான் அவன் நாகரிகம் அடைந்த மனிதனாகின்றான். பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்போம்

‘சொல்லில் சிறந்த சொல் செயல்’ என்பர். “என்னை நோக்கி ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுவரே செல்வர்” (மத் 7: 21) என்று நாம் சொல்வீரர்களாக மட்டும் இருந்துவிடாமல், செயல்வீரர்களாகவும் இருக்கவேண்டும் என்ற அழைப்பினைப் தருவார் நம் ஆண்டவர் இயேசு.

யாக்கோபு திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகமும் நாம் செயல்வீரர்களாக இருக்க அழைக்கின்றது. அதற்குச் சான்றாக இருப்பதுதான், “இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள்” என்ற இறைவார்த்தை. யாக்கோபு கூறும் இவ்வார்த்தைகளின் ஆழமான பொருளை உணர்ந்துகொள்வதற்கு, அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

யாக்கோபு வாழ்ந்த காலத்தில் அல்லது அவர் இருந்த திருஅவையில் ஏழை பணக்கார் என்ற பாகுபாடு இருந்தது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், பணக்காரர் என்றால், அவருக்கு ஒருவிதமான ‘கவனிப்பும்’, ஏழை என்றால் அவருக்கு ஒருவிதமான ‘கவனிப்பும்’ இருந்தது. இதனால் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. இத்தகைய சூழ்நிலையில்தான் யாக்கோபு, “....இறைவார்த்தையின் படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்” என்று கூறிவிட்டு, துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலே உண்மையான சமய வாழ்வு என்று குறிப்பிடுகின்றார். இங்கே யாக்கோபு கூறுகின்ற வார்த்தைகள், “ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்களுக்காக வழக்காடுங்கள்” (எசா 1: 17) என்ற எசாயாவின் வார்த்தைகளை எதிரொலிப்பவையாக இருக்கின்றன. ஆதலால், நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வது கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று உணர்ந்து வாழவேண்டும்.

வெளிவேடம் இறைவனுக்கு ஏற்புடையது அல்ல

நம்மோடு இருக்கும் துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்வதே கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு, அதுவே உண்மையான சமய வாழ்வு என்று யாக்கோபு கூறுகையில், அதற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டவர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் (இன்றும் பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்). இவர்கள், கைம்பெண்கள், துன்புறுவோரைக் கவனித்துகொள்வது கடவுள் விடுத்த மேலான அழைப்பாக இருக்கும்பொழுது, அதற்கு முற்றிலும் மாறாகக் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொண்டார்கள் (மாற் 12: 40). இவற்றோடு நின்றுவிடாமல், வறியவர்களை இவர்கள் மேலும் நசுக்கினார்கள்.

இன்றைய நற்செய்தியில் இவர்கள் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதை, பெரிய குற்றமாக இயேசுவிடம் முறையிடுகின்றார்கள். உண்மையில் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவித்தான் உண்டார்கள்; ஆனால் அவர்கள் மூதாதையர் மரபுப்படி கைகளைக் கழுவாததாலேயே (மத் 15: 2), மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இங்கே சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதற்கு மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் ஏன் இயேசுவிடம் முறையிட்டார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இயேசு ஒரு இரபியாக, போதகராக இருந்துகொண்டு, தன் சீடர்களுக்கு மூதாதையர் மரபுப்படி முறையாகக் கைகளைக் கழுவதற்குக் கற்றுத் தரவில்லை என்பதற்காகவே இவர்கள் இயேசுவிடம் அவருடைய சீடர்களைப் பற்றி முறையிடுகின்றார்கள். அப்பொழுதான் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைச் சாடிவிட்டு (எசா 29: 13), “நீங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிட்டு, மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்கிறார்.

மறைநூல் அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடவுளுக்கு உண்மையாய் இருந்திருந்தால், தங்களோடு இருந்த துன்புறுவோரைக் கவனித்திருப்பர். அவர்கள் அவ்வாறு இல்லாததாலேயே துன்புறுவோரை மேலும் துன்பப்படுத்தி, வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இறைவார்த்தையின் படி நடக்கும்போது ஆசி

மறைநூல் அறிஞர்களைப் போன்று வெளிவேடமாக வாழாமல், நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வதே கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று சிந்தித்துப் பார்த்தோம். இத்தகையதொரு வாழ்க்கை வாழ்வோருக்குக் கடவுள் எத்தகைய ஆசிகளைத் தருகின்றார் என்று இன்றைய முதல்வாசகம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது. அதைப் பற்றிப் பார்ப்போம்.

நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துகொள்வது உட்பட்ட கடவுளின் முறைமைகள், கட்டளைகளின்படி நாம் வாழ்கின்றபொழுது (வாக்களிக்கப்பட்ட) நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம் என்கிறார் ஆண்டவர். அடுத்ததாக, நாம் கடவுள் நமக்குச் சொன்னவற்றை மறைநூல் அறிஞர்களைப் போன்று கூட்டாமல், குறைக்காமல் அப்படியே கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது, நாம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களினமாவோம். நிறைவாக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும்போது கடவுள் எப்பொழுதும் நம்மோடு இருப்பார்.

ஆகையால், கடவுள் அளிக்கும் இந்த மூன்றுவிதமான ஆசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குத் துன்புறும் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோர் மேலும் மேலும் வஞ்சிப்படுவது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. இவர்களில் இறைவன் இருக்கின்றார் (மத் 25: 40) என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவர்களை நாம் கவனித்துக்கொண்டு உண்மையான சமய வாழ்ந்து வாழ்ந்து, கடவுளின் அளிக்கும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை
‘மக்களிடையே இரக்கமும் சகோதர அன்புமே மனித வாழ்வில் பெறுவதற்கு முயல வேண்டிய பேருணர்ச்சிகளாகும்’ என்பார் மார்லி என்ற அறிஞர். நாம் இரக்கத்தையும் சகோதர அன்பையும் மற்றவர்களிடமிருந்து பெறுபவர்களாக அல்லாமல், தருபவர்களாக இருந்து, துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இதய உருவாக்கம்

'கல்வியின் இதயம் என்பது, இதயத்திற்குக் கல்வி புகட்டுவது' என்பது ஆங்கிலப் பழமொழி. சமயங்களின் விதிமுறைகளின் நோக்கம் இதய உருவாக்கமே என்று முன்மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. முதல் மற்றும் இரண்டாவது ஏற்பாடுகளில் 'கட்டளை' என்ற வார்த்தை முதன்மையானதாக இருக்கின்றது. முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு இரண்டு கட்டளைகளாக இவற்றைச் சுருக்கித் தருவதுடன், புதிய கட்டளை என்று அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகின்றார்.இன்றைய முதல் வாசகத்தின் சூழல் மோசேயின் இரண்டாம் கட்டளை வழங்குதல். அதாவது, சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் பயணத்தில் அத்தலைமுறை மறைந்து புதிய தலைமுறை பிறக்கின்றது. புதிய தலைமுறைக்கு ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளையும் விதிமுறைகளையும் நியமங்களையும் மீண்டும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் மோசே. மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும், அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் இக்கட்டளைகளை அவர்கள் கடைப்பிடித்தல் அவசியம்.

விவிலியத்தில் சட்டம் என்பதை நாம் இன்றைய சட்டம் பற்றிய புரிதலிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கொரோனா பெருந்தொற்று தடுப்பு பற்றிய விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் அரசு வெளியிடுகின்றது. அதன்படி, சிலவற்றைத் தடுக்கிறது. சிலவற்றை அனுமதிக்கிறது. அரசுக்கு மக்கள்மேல் உள்ள அக்கறையினால் இதைச் செய்தாலும், அரசுக்கும் மக்களுக்கும் நேரடியான எந்த உறவும் இல்லை. ஆனால், முதல் ஏற்பாட்டில் சட்டங்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றை நாம் உடன்படிக்கையோடு இணைத்துப் பார்க்க வேண்டும். 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் எம் மக்களாக இருப்பீர்கள்' என்று இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள், அவர்களைத் தம் உரிமைச் சொத்து என ஆக்கிக்கொள்கின்றார். ஆண்டவர் தருகின்ற உணவும், பாதுகாப்பும், உறவும் உடன்படிக்கை அவர்களுக்கு வழங்குகின்ற உரிமைகள் ஆகும். உரிமைகளின் மறுபக்கமே கடமைகள். இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்க சில கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆக, கட்டளைகளை மீறுவது என்பது உடன்படிக்கை உறவை மீறுவதற்கு ஒப்பானது.

ஆகையால்தான், 'இஸ்ரயேலரே! கேளுங்கள்!' என்கிறார் மோசே. ஏனெனில், 'கேள்' என்பதற்கு, தமிழில் இருப்பது போலவே, 'செவிகொடு' மற்றும் 'கீழ்ப்படி' என்று இரு பொருள்கள் உண்டு. ஆக, கட்டளைகளைக் கேட்டுக் கீழ்ப்படிதலின் முதல் நோக்கம் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்பது. இதையே, 'மக்களுக்கு நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?' என்று மோசே கேட்கின்றார். இரண்டாவதாக, கட்டளைகள் வழியாக இஸ்ரயேல் மக்கள் ஞானமும் அறிவாற்றலும் பெற்றனர். அறிவாற்றல் என்பது தேர்ந்து தெளிதல். எடுத்துக்காட்டாக, திருமண உறவில் பிரமாணிக்கமாக இருக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் வரும்போது, 'விபசாரம் செய்யாதே!' என்ற கட்டளை, அவர்கள் எளிதாகத் தேர்ந்து தெளிய உதவி செய்தது. இவ்வாறாக, கட்டளைகள், நெறிமுறைகள், மற்றும் நியமங்கள் இஸ்ரயேல் மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி உடன்படிக்கை உறவில் அவர்கள் நிலைத்திருக்கவும், ஒவ்வொரு சூழலிலும் தேர்ந்து தெளியவும் அவர்களுக்கு உதவி செய்கின்றன.

இரண்டாம் வாசகம் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருத்தூதர் யாக்கோபு எருசலேம் திருஅவையின் தலைவராக விளங்கியவர். இவர் இயேசுவின் சகோதரர். இவருடைய பெயரில் இத்திருமுகம் எழுதப்பட்டுள்ளது எனவும், இத்திருமுகத்தின் ஆசிரியர் ஒரு யூதக் கிறிஸ்தவராக இருந்திருக்கலாம் என்பது பரவலான கருத்து. இணைச்சட்ட நூலில் நாம் காண்பது போலவே, பல வாழ்வியல் பாடங்களும் அறிவுரைகளும் இத்திருமுகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைக் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றனர். இரண்டாம் ஏற்பாட்டில் புதிய இஸ்ரயேல் மக்கள் பெற்றிருக்கின்ற மீட்பு என்ற கொடை கடவுளிடமிருந்து வருகின்றது என்பதை ஆசிரியர் முதலில் பதிவு செய்கின்றார்: 'நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.' உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் பெற்றெடுக்கப்பட்ட மக்கள், இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் அல்லாமல், அதன்படி நடக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.

சமய வாழ்வு என்பது இரண்டு நிலைகளில் வெளிப்பட வேண்டும் என ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்: ஒன்று, 'துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனிக்க வேண்டும்.' அன்றைய கிரேக்க-உரோமை சமூகத்தில் சொத்துரிமையும் சமூக மேனிலையும் ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. தந்தையரை இழந்த பிள்ளைகளும், கணவர்களை இழந்த மனைவியிரும் எந்தவொரு உரிமையும் இன்றி இருந்தனர். ஆக, சமூக மற்றும் பொருளாதார ஆதாரத்தை இவர்களுக்கு நம்பிக்கையாளர்கள் வழங்க வேண்டும். அல்லது சமூக நீதியுணர்வு கொண்டிருக்க வேண்டும். இரண்டு, 'உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வது.' தங்களைச் சுற்றியுள்ள புறவினத்து மக்களின் சமய மற்றும் அறநெறி வாழ்வியல் முறையை விட நம்பிக்கையாளர்கள் சிறந்த வாழ்வியல் முறையைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆக, கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுள்ள சமய அடையாளம் அல்லது கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டு, தாங்கள் சமூக நீதியுணர்விலும், மேலான வாழ்வியல் நெறியிலும் வளர்வதே இதய உருவாக்கம். இயேசுவுக்கும் அவருடைய சமகாலத்து சமயத் தலைவர்களுக்கும் இடையே எழுந்த உரசல் ஒன்றை நம் கண்முன் கொண்டு வருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கட்டளைகளை மிகவும் நுணுக்கமாகக் கடைப்பிடித்தனர். கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும் என்ற பேராவலில் கட்டளைகளின் பின்புலத்தில் நிறைய சடங்குகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அவற்றுக்கு, 'மூதாதையர் மரபு' என்று பெயரிட்டனர். அப்படிப்பட்ட மரபில் ஒன்றுதான் கைகளைக் கழுவுதல், கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்றவை. இயேசுவின் சீடர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

தங்களைப் போன்ற போதகர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசு அவர்களின் செய்கையைக் கண்டிக்காமல் இருப்பதை அவர்கள் இயேசுவிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சூழலைப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு, கடவுளின் கட்டளையின் நோக்கம் என்ன என்பதையும், அதை எப்படிப் பின்பற்றுவது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். கட்டளைகளைப் பின்பற்றுவதை இயேசு தடை செய்யவில்லை. மாறாக, அதற்கு ஒரு புதிய புரிதலைக் கொடுக்கின்றார். வெளிப்புறச் செயல்பாடுகளும் நடைமுறைகளும் சட்டத்தைப் பின்பற்றுவதற்கான அடையாளங்கள் என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முன்மொழிந்தபோது, இதய உருவாக்கமே சட்டத்தைப் பின்பற்றுவதன் அடையாளம் என்ற புதிய புரிதலைக் கொடுக்கின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் வெளிப்புறச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது, இயேசு மேன்மையான அறநெறி வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

எசாயாவின் இறைவாக்குப் பகுதியை மேற்கோள் காட்டி அவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றார். மனிதக் கட்டளைகளைக் கடவுளின் கோட்பாடுகள் என்று கற்பிக்கும் அவர்களின் ஆன்மிகம் உதட்டளவில் மட்டுமே உள்ளது என்று எச்சரிக்கின்றார். முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் கட்டளைகளை வழங்கியதன் நோக்கம் உடன்படிக்கை உறவை நிலைப்படுத்தவே. கைகளைக் கழுவுவதாலும், பாத்திரங்களைக் கழுவுவதாலும் அந்த உடன்படிக்கை உறவு மேம்படுவதில்லை. மாறாக, தூய்மையான மனச்சான்றும், சமத்துவமான பார்வையுமே உடன்படிக்கை உறவை மேம்படுத்துகின்றன. யூதர்கள்-புறவினத்தார்கள், ஆண்கள்-பெண்கள் என்று மனிதர்களை வெளிப்புறத்தில் தூய்மை-தீட்டு என்று பாகுபடுத்திய பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்திலிருந்த தீட்டு பற்றிக் கண்டுகொள்ளவில்லை. அல்லது அகத்தீட்டு அவர்களிடம் அதிகம் இருந்ததால்தான் மக்களை புறத்தில் தீட்டாக்கிப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஆக, அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் இதய உருவாக்கம் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. இவ்வாறாக, முதல் வாசகத்தில், கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது உடன்படிக்கை உறவை ஆழப்படுத்தி, இஸ்ரயேல் மக்களின் அறிவாற்றலைக் கூர்மைப்படுத்துகின்றது.

இவ்வாறாக, இதய உருவாக்கம் நிகழ்கிறது.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவர்கள், தங்களுடைய சமய வாழ்வை நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும், மேன்மையான அறநெறி வாழ்வை வாழ்வதிலும் வெளிப்படுத்த வேண்டும். அதுவே, இதய உருவாக்கம். நற்செய்தி வாசகத்தில், கட்டளைகளை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கின்றோம் என்ற எண்ணத்தில், கடவுள் நம்மிடம் பார்க்கின்ற அகத்தின் தூய்மையைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது. புறத்தூய்மையை விடுத்து, அகத்தைத் தூய்மையாக வைக்க முயற்சி செய்யும்போது இதய உருவாக்கம் நடைபெறுகின்றது. பெருந்தொற்றுக் காலத்தில், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நெறிமுறையில் இருக்கின்றது. இவை சடங்குகள் அல்ல. மாறாக, இவற்றால் தூய்மை பற்றிய உணர்வும், மற்றவர்கள்மேல் நாம் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வும் தூண்டப்படுகின்றது. இப்படியாக, சமூக வாழ்வு, சமய ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டம் என அனைத்து நிலைகளிலும் விதிமுறைகள் நம் இதயங்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த நோக்கத்தை நாம் மறந்துவிடும்போது, நாம் அகம் நோக்கிப் பார்ப்பதை விடுத்துப் புறம் நோக்கிப் பார்த்து மற்றவர்களைத் தீர்ப்பிடத் தொடங்குகின்றோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

" அகத்தூய்மையால் அலங்கரிக்கத் தயாரா! "

ஒரு ஊரில் சத்துமாவு உற்பத்தி செய்து அதன் வழியாக தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என இரு மனிதர்கள் முடிவெடுத்தனர். ஒருவர் அதிக முதலீடு போட்டுதரமான சத்துமாவினை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். மற்றொருவர் குறைந்த செலவில் சத்து மாவு தயாரித்து அதிக வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதிக முதலீடு போட்டு தரமான சத்து மாவை வழங்கிய மனிதர் உண்மையோடும் நேர்மையோடும் வியாபாரம் செய்தார். குறைந்த முதலீட்டில் தரம் குறைந்த சத்துமாவினை உற்பத்தி செய்த மற்றொரு நபர் தான் உற்பத்தி செய்த பொருளை ஒரு மாவு நிறுவனத்தில் வியாபாரம் செய்ய கொடுத்துவிட்டார். தரம் குறைந்த சத்துமாவு மக்கள் மத்தியில் அறிமுகமான பெரிய நிறுவனத்தின் பெயரில் விளம்பரத்தோடு வந்தது. எனவே இந்த தரம் குறைந்த சத்துமாவு மக்கள் மத்தியிலேயே அதிகமாக விற்பனையானது. ஆனால் தரமான அந்த சத்துமாவினை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. காரணம் அது விளம்பரம் செய்யப்படவில்லை. தரம் குறைந்த சத்துமாவினை தயாரித்தவர் செல்வந்தர் ஆனார். தரமான சத்துமாவினை தயாரித்தவர் வியாபாரத்தில் தோல்வியடைந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார். இதற்கு காரணம் விளம்பரம். விளம்பரம் நல்லதை தீயதாகவும் தீயதை நல்லதாகவும் காட்டக்கூடியது. இப்படித்தான் நம்முடைய அன்றாட வாழ்விலே வெளிப்புறத்தில் அழகாக இருந்தால் போதும் உட்புறத்தில் எவ்வளவு அழுக்கு இருந்தாலும் பரவாயில்லை என்று போகும் போக்கு அதிகமாக இருக்கின்றது.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற குழுவினர் இருந்தனர். இவர்கள் சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் மக்களை அடக்கி ஆளக்கூடியவர்களாக இருந்தனர். இன்றைய நற்செய்தியில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, 'உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?' என்று கேட்டனர்'' (மாற்கு 7:5). பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் வெளிப்புற சடங்குகளுக்கும் வெளிப்புற அலங்காரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் உள்ளேயோ அழுக்கு நிறைந்த மனநிலையில் போலியான வாழ்க்கையை வாழ்ந்தனர். எனவே தான் ஆண்டவர் இயேசு அவர்களை இன்றைய நற்செய்தியில் கடுமையாகச் சாடியுள்ளார்.

இயேசு அவர்களைப் பார்த்து, "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறியுள்ளார். இதற்கு காரணம் அந்த அளவுக்கு கடவுளின் பெயராலும் மோசேயின் சட்டத்தின் பெயராலும் சாதாரண ஏழை எளிய பாமர மக்களுக்கு அநீதிகளை அவர்கள் செய்தனர். வெளிப்புறத்தில் நல்லவர்களைப் போல காட்டிக்கொண்டு தற்பெருமை கொண்டவர்களாகவும் ஆணவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். சுத்தம் முக்கியம்தான். ஆனால் அவர்கள் உண்மையான சுத்தத்திற்காக சீடர்களைப் பற்றிக் கூறவில்லை. மாறாக தங்களை தூய்மையானவர்களாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இவ்வாறு செய்தனர். இதற்கு தான் ஆண்ட இயேசு அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

சுத்தம் நம் வாழ்க்கையில் முக்கியம். ஆனால் அந்த சுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைப் போல உட்புறத்திலும் இருக்கவேண்டும். "சுத்தம் சுகம் தரும் " என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. நம் உடலையும், இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் நாம் தூய்மையாக வைத்திருந்தால் தான் வெளியில் பரவும் நோய்களிலிருந்து நம்மைக் காக்க முடியும். அதேபோல நமது அகமாகிய மனதையும் நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது சிந்தனைகள் தூய்மையாக இருக்க வேண்டும். அல்லாமல் நமது மனம் பொய்மை, வஞ்சகம், பொறாமை, பகை, பேராசை, காமம், சுயநலம் போன்வற்றால் நிறைந்திருந்தால் நாம் பலவித நோய்களுக்கு உள்ளாக நேரிடும். இதை உளவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே புறத்தூய்மை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஏன் அதைவிட மேலாகவே அகத்தூய்மை முக்கியமாகிறது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் புறத் தூய்மைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அகமும் புறமும் தூய்மையாக இருக்கின்ற பொழுது நாமும் மறு கிறிஸ்துவாக உருமாறுகிறோம். நம்முடைய வாழ்வு நிறைவுள்ள வாழ்வாக இருக்க வேண்டுமெனில் அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்வில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டுமெனில் அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்வில் போலியான இரட்டை வாழ்வு வாழும் பொழுது நம்மோடு வாழக்கூடிய மக்களை ஏமாற்றலாம். ஆனால் நம்மைப் படைத்த கடவுளை ஏமாற்ற முடியாது. எனவே எப்பொழுதும் ஆண்டவர் இயேசுவைப் போல தூய்மையான உள்ளத்தோடு வாழத் தேவையான அருளை வேண்டுவோம். இவ்வுலகம் சார்ந்த போலிகளுக்கும் மாய கவர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், உண்மையான தூய்மை வாழ்வுக்கும் நற்செய்தி மதிப்பீட்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்து நம் வாழ்வை அலங்கரிப்போம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
தூய இறைவா! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் அகத் தூய்மைக்கு எந்நாளும் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு