மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் திருமுழுக்கு விழா
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 55:1-11 | 1யோவான் 5:1-9 | மாற்கு 1:7-11

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
இன்றைய திருவிழாவின் வழியாக இயேசு , தான் யார் என்பதை உலக மக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார். இயேசு திருமுழுக்குப் பெற்றபோது தூய ஆவியானவர் அவர் மீது புறா வடிவில் இறங்கி வந்தார். இஸ்ரயேல் நாட்டிலே உருவாக்குதலுக்கு , உண்டாக்குதலுக்கு, படைத்தலுக்கு, புதுப்பிப்பதற்கு புறா அடையாளம். ஆகவே புறா புதியவை அனைத்திற்கும் அடையாளம். இயேசு புதிய உலகத்தைப் படைக்க வந்த ஒரு புதிய பிறவி. இந்த உண்மையை நமக்கு எடுத்துச் சொல்லும் திருவிழாதான் இயேசுவின் திருமுழுக்குத் திருவிழா . இயேசு புதிய கொள்கை வரைவோடும் இலட்சியத் தெளிவோடும் புதிய சமுதாயம் படைக்க வந்தார். எசாயா இறைவாக்கினர் குறிப்பிடுவதுபோல (எசாயா 61:1) சிறைப் பட்டோருக்கு விடுதலை, குருடருக்குப் பார்வை , ஒடுக்கப் பட்டோருக்கு உரிமை வாழ்வு, ஏழைகளுக்கு நற்செய்தி, அலகையின் பிடியில் அகப்பட்டவருக்கு ஆண்டவர் அருள் தரும் வாழ்வு என்ற, புதிய உலகம் படைக்கும் கொள்கை வரைவு தெளிவாக்கப்படுகிறது. இதை அறிவிக்கவே அனுப்பப்பட்டேன் என்பதை உணர்ந்த இயேசு , தனது சொல்லால், செயலால், வாழ்வால் புதிய சமுதாயத்தை அமைத்துக் காட்டியதை அறிவோம்.

இயேசு திருமுழுக்கு யோவானிடத்தில் திருமுழுக்குப் பெற்றார் என்று ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இயேசுவின் மறைந்த வாழ்வு முடிந்து பொது வாழ்வு தொடங்குகிறது. மக்களின் பாவங்களைத் தன் மீது சுமந்தவராக இயேசு யோர்தான் ஆற்றிலே இறங்கி திருமுழுக்குப் பெறுகிறார். இறைவாக்கினர் எசாயா கூறுவதுபோல, துன்புறும் ஊழியர் இவரே என் அன்பார்ந்த மகன் இவரில் நான் பூரிப்படைகிறேன் (மாற்கு 1:11) என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. இதன் வழியாக தந்தையாகிய இறைவனால் உலகிற்கு அடையாளப்படுத்தப்பட்டு, தூய ஆவியானவரால் திருப்பொழிவு செய்யப்பட்டு தனது பணியைத் தொடங்கினார் இயேசு . புதுவாழ்வின் அச்சாரமாகத் தூய ஆவியானவர் குடிபுகுகின்றார்.

திருமுழுக்கின் வழியாகக் கடவுளின் குரலை இயேசு புரிந்து கொள்கிறார். ஆண்டவரின் குரல் அன்புக் குரல். அன்பு ஆள் பார்ப்பதில்லை (தி.ப. 10:34). நேரம் பார்ப்பதில்லை . எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அக்குரல் இயேசுவைத் திடப்படுத்துகிறது. அதுவே அவருக்கு அப்பா அனுபவமாக மாறுகிறது. அந்த அனுபவம் உலகை மீட்கவும், அவரின் பணி வாழ்வுக்கும், இறையாட்சிக்கும் உந்து சக்தியாக அமைந்தது. அன்றைய சமூக, அரசியல், பொருளாதார, சமய சிக்கல்களை மாற்றியமைக்கத் தன்னையே தாழ்த்தி அதே நிலைக்கு உட்படுத்திக் கொண்டு திருமுழுக்குப் பெற்றார் இயேசு.

எனவே இயேசுவின் இறையாட்சிப் பணிக்குத் தயாரிப்பாக, தொடக்கமாக அமைந்தது அவரின் யோர்தான் ஆற்றுத் திருமுழுக்கு . இறையரசுப் பணிக்கு அவர் தயார் என்பதை வெளிப்படுத்தும் ஓர் அடையாளம், அரங்கேற்றம், அறிமுகமாகும். எனவே திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும், ஒரு சில குறிக்கோள்களை, இலக்குகளைத் நமதாக்கிக் கொண்டு அதில் இறுதி வரை நிலைத்திருக்க நம்மையே உட்படுத்திக் கொள்ள வேண்டும். திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் வாழ்வில் இடர்கள், துன்பங்கள், அவதூறுகள் வந்தாலும் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு முன் நோக்கி நடந்தது போல, நமது குறிக்கோளில் நாம் இறுதிவரை நிலைத்திருந்து இயேசுவின் இறையரசுப் பணியைப் பகிர்ந்து செயல்பட அழைக்கப் பட்டிருக்கிறோம். எனவே நமது திருமுழுக்கின் வழியாகக் கிறிஸ்துவை மகிமைப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது வாழ்வு சாட்சிய வாழ்வாக அமைய வேண்டும். இல்லையெனில் நாம் பெறும் திருமுழுக்கு வெறும் சடங்காக வெற்றுத் தண்ணீர் தெளிப்பாக மட்டுமே இருந்து விடும். நமது திருமுழுக்கு துன்பப்படுபவர்களோடு தோழமை கொள்ள தூண்டுதலாக அமைய வேண்டும். ஆகவே இயேசுவின் திருமுழுக்கு நமது வாழ்க்கைப் பாடமாகட்டும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நாம் ஒவ்வொருவரும் விண்ணகத் தந்தையின் அன்பு மகளாவோம், மகனாவோம்

இயேசு இன்றைய நற்செய்தியில் விண்ணகத் தந்தையின் அன்பார்ந்த மகன் என்று அழைக்கப்படுகின்றார். இன்றைய முதல் வாசகமும், இரண்டாம் வாசகமும், இயேசுவின் அரும்பெரும் குணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

இதோ இரண்டு வாசகங்களும் சுட்டிக்காட்டும் அன்பார்ந்த மகனின் அற்புதக் குணங்கள் :

 1. அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார் (எசா 42 : 1).
 2. அவர் உலகின் ஒளியாகத் திகழ்வார் (எசா 42 : 6ஆ).
 3. அவர் பார்வை குறைந்தோரின் கண்களைத் திறப்பார் (எசா 42:7அ).
 4. அவர் கைதிகளின் தளைகளை அறுத்தெறிவார் (எசா 42:7ஆ).
 5. அவர் இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்பார் (எசா 42:7இ).
 6. அவர் அமைதியை நிலை நாட்டுவார் (திப 10 : 36).
 7. அவர் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிப்பார்(திப 10 : 38ஆ).
 8. அவர் எங்கும் எதிலும் எல்லாருக்கும் நன்மையைச் செய்வார் (திப 10 : 38இ).

சுருங்கச் சொன்னால் இயேசு தனக்கென்று வாழாமல், மற்றவர்களுக்காக வாழ்ந்தவர். குறிப்பாக ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், உரிமையை இழந்தவர்கள், அநீதியாலும் அலகையினாலும் சூழப்பட்டு இருளில் வாழ்ந்தவர்கள் அனைவர் மேலும் நிபந்தனையற்ற அன்பு மழையைப் பொழிந்தவர்; அன்பைத் தவிர வேறு ஒன்றுமே எனக்குத் தெரியாது என வாழ்ந்தவர் இயேசு! இதனால்தான் அன்பே உருவான விண்ணகத் தந்தை (1யோவா 4 : 8) அவரைப் பார்த்து, இவரே என் அன்பார்ந்த மகன் என்றார்.

நாமும் விண்ணகத் தந்தையால், அன்பார்ந்த மகள்/ மகன் என்று அழைக்கப்பட வேண்டுமானால் இயேசுவைப் போல இந்த உலகத்திலுள்ள ஏழைகளை, ஏழைகளில் ஏழையாக வாழ்பவர்களை அன்பு செய்ய முன்வர வேண்டும்!

நாம் ஏன் மற்றவர்களை அன்பு செய்யத் தயங்குகின்றோம்? நம்மிடமுள்ள அனைத்தையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டால் நாம் எப்படி வாழ்வது? என்ற பயமே மற்றவர்களை அன்பு செய்யவிடாது நம்மைத் தடுத்துவிடுகின்றது!

நமது அச்சத்தைப் போக்கும் கதையொன்று உண்டு! இயேசு சபையைச் சேர்ந்த அருள்பணி. ஹெட்விக் லீவிஸ் 'இதயத்தின் கண்ணாடிகள்' என்னும் நூலில் எழுதிவைத்திருக்கும் கதை இது!

அவர்கள் இருவரும் புதுமணத் தம்பதியர், ஊர்சுற்றிப் பார்க்கக்காரிலே புறப்பட்டார்கள். ஒரு நாள் இரவு! திடீரென பெரும் மழை! பலத்த காற்று! அதற்கு மேல் அவர்களால் காரை ஓட்டிச்செல்ல முடியவில்லை!

சாலையின் ஓரத்தில் அவர்கள் காரை நிறுத்தினார்கள். எங்கும் இருள்! பக்கத்திலே ஒரு வீடு. வீட்டுக்கதவைத் தட்டினார்கள், கையில் ஒரு ஹரிக்கன் விளக்கோடு வயதான மனிதர் ஒருவர் கதவைத் திறந்தார். அந்தத் தம்பதியர் நடந்ததைச் சொல்லி இரவு மட்டும் தங்குவதற்கு இடம் கேட்டார்கள்.

தாராளமாகத் தருகின்றோம் எனச் சொல்லி அந்தத் தாத்தாவும், பாட்டியும் அந்தத் தம்பதியருக்கு ஓர் அறையைக் காண்பித்தார்கள். பொழுது விடிந்ததும் அறையில் தங்கியிருந்த புதுமணத் தம்பதியர் கொஞ்சம் பணத்தை மேஜைமீது வைத்துவிட்டு அறையின் கதவைத் திறந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி என்ன தெரியுமா?

அந்தத் தாத்தா தரையில் படுத்திருந்தார். அந்தப் பாட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்தப் புதுமணத் திருமணத் தம்பதியரின் கண்கள் குளமாயின! அந்த வயதான தம்பதியரின் அன்பை, கனிவை, கருணையை, தியாகத்தை நினைந்து அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

இந்தக் கதையை எழுதிவிட்டு இந்தக் கதையின் ஆசிரியர் அருள்பணி. ஹெட்விக் லீவிஸ் ஒரு கேள்வியை வானதூதரைப் பார்த்து கேட்கின்றார்.

வானதூதரே, அந்தத்தாத்தாவைப் போல, அந்தப் பாட்டியைப் போல நான் என்னிடம் உள்ளதை மற்றவர்க்குக் கொடுக்க ஆசை!

ஆனால் ஒரு சந்தேகம்! நான் எப்போது கொடுப்பதை நிறுத்த வேண்டும்? இந்தக் கேள்விக்கு சம்மனசு ஓர் அழகான பதிலைக் கொடுக்கின்றது:

கடவுள் நமக்குக் கொடுப்பதை நிறுத்தும்வரை நாம் கொடுக்க வேண்டும். அடுத்த கேள்வி : கடவுள் எப்போது கொடுப்பதை நிறுத்துவார்? பதில் : கடவுள் நமக்குக் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டார்! ஆகவே நாம் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.

திருமுழுக்கின் வழியாக தூய ஆவியாரால் நாம் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளோம். தூய ஆவியார் ஒரு தெய்வீக நயாகரா நீர்வீழ்ச்சி!

ஆழ்கடல் கூட வற்றலாம்! ஆனால் ஆவியாரின் வரங்களும் (1 கொரி 12 : 8 - 10) கனிகளும் (கலா 5 : 22 - 23) ஒரு போதும் வற்றாது.

ஆகவே, அஞ்சாது துணிந்து நம்மிடம் உள்ளதை மற்றவர்க்குத் தந்து புதியதோர் உலகம் செய்வோம்; விண்ணகத் தந்தையின் அன்பார்ந்த மகள்களாக, மகன்களாக வாழ்வோம்!

மேலும் அறிவோம்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பணக்காரர் ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவரைப் பார்க்க வந்த ஓர் அறிஞர் அவருக்கு எத்தனை பின்ளைகள் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரே மகள் என்றார். அறிஞர் வியப்புடன், 'உமக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இல்லையா? என்று கேட்க, அவர் அடுத்த அறையில் இருந்த தனது ஐந்து பையன்களையும் பெயர் சொல்லி ஒவ்வொருவராக அழைக்க, ஒருவன் மட்டும் வந்தான். பணக்காரர் அறிஞரிடம், 'நான் பெற்றபின்ளைகள் ஐந்து. ஆனால், என் பேச்சைக் கேட்டு நடப்பவன் ஒருவன்தான். எனவேதான் எனக்கு ஒரே மகன் என்று சொன்னேன்' என்று வேதனையுடன் கூறினார். " எல்லாரும் இறைவனின் பிள்ளைகள் என்றாலும் இறைவனின் விருப்பப்படி நடப்பவர்கள் வெகு சிலரே. இறைவனுடைய விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றியவர் கிறிஸ்து ஒருவரே எனவேதான் அவர் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது, 'என் அன்பார்ந்த மகள் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (மாற் 1:11) என்று வானகத் தந்தை சான்று பகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து இறைவனின் அன்பார்ந்த மகன், ஏனெனில் அவர் இறைவனின் ஊழியன். அவர் இறைவனின் பாழியனாக இருந்த காரணத்தாலேயே அவர் இறைவனின் அன்பார்ந்த மகன் ஆனார். அவர் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா 'துன்புறும் இறை ஊழியனைப்பற்றி எழுதியிருந்த நான்கு கவிதைகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றிற்குச் செயல் வடிவம் கொடுக்க முன் வந்தார்.

துன்புறும் பாழியன் இறைவனுக்குச் செவிமடுத்துக் கீழ்ப்படிவார் (எசா 50:4-5). அவர் மக்களுக்கு விடுதலை அளிப்பார்; நெரித்த நாணலை முறிக்கமாட்டார்; மங்கி காரியும் திரியை அணைக்கமாட்டார்; சாந்தமுள்ளவராய் இருப்பார் (எசா 42:3), எல்லாவற்றிற்கும் மேலாக, துன்புறும் ஊழியன் மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாகத் தன் இன்னுயிரையே பலியாக்கும் செம்மறியாவார் (எசா 53:4-12)

சுருக்கமாக, பாவமே அறியாத அவரைக் கடவுள் பாவ உருவாக்கினார். அதாவது, மனிதருடைய பாவதிலையை ஏற்கச் செய்தார் (2கொரி 5:21) உண்மையில், கிறிஸ்து மனிதகுலத்தின் பாவ மூட்டைகளை யெல்லாம் தம்மேல் சுமந்து கொண்டு யோர்தான் தண்ணீரில் இறங்கினார். யோர்தான் தண்ணீர் அவரைப் புனிதப்படுத்தவில்லை; மாறாக, அவர்தான் அத்தண்ணீரைப் புனிதப்படுத்தினார்.

கிறிஸ்துவின் உண்மையான திருமுழுக்கு அவர் கல்வாரியில் தமது சொந்த இரத்தத்தால் பெற்றத் திருமுழுக்காகும். இதை அவரே நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளார். "நான் பெற வேண்டிய திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறும் அளவும் மனநெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன் (லூக் 12:50). ஆம், துன்புறும் இறை ஊழியனாகக் கல்வாரியில் இரத்தம் சிந்தித திருமுழுக்குப் பெற்றார். அவரே உலகின் பாவங்களைப் போக்கிய மெய்யான செம்மறி, தம்மைச் சாவுக்குக் கையளித்த துன்புறும் இறை வழியனைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து மகிமைப்படுத்தினார். இன்று நாம் நமது திருமுழுக்கை நினைவு கூர்கின்றோம். நாம் குழந்தைகளாக இருந்த போதே திருமுழுக்குப் பெற்றோம். குழந்தைத் திருமுழுக்கு முற்றிலும் சரியானது. தேவையானதும் கூட. நாம் கடவுளை அறிவதற்கு முன்பே கடவுள் நம்மை அறிந்துள்ளார். நாம் கடவுளை அன்பு செய்வதற்கு முன்பே கடவுள் தம்மை அன்பு செய்துள்ளார். நாம் கடவுளைத் தெரிவு செய்வதற்கு முன்பே கடவுள் நம்மைத் தெரிவு செய்துள்ளார். இதுதான் குழந்தைத் திருமுழுக்கின் ஆழமான இறையியல் உண்மை ! உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். (எபே 1:4). நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்' (தீத், 3:6).

திருமுழுக்கின் விளைவாக, நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாகவே இருக்கிறோம் (1யோவா 3:1). இறைவனின் ஆவியைப் பெற்றுள்ள தாம். அந்த ஆவியால் இறைவனை 'அப்பா தந்தாய்' எனக் கூப்பிடுகிறோம் (உரோ 8:15).

நாம் எந்த வயதில், எந்த முறையில் திருமுழுக்குப் பெற்றோம் என்பதை விட, திருமுழுக்கின் மறைபொருளை வாழ்வதே முக்கியமாகும். திருமுழுக்கினால் கிறிஸ்துவின் சாவிலும் உயிர்ப்பிலும் பங்கு பெற்றுள்ளோம். பாவ வாழ்வுக்குச் செத்தவர்களாய், பதிய வாழ்வுக்கு உயிர்த்தெழுந்துள்ளோம் (உரோ 6:1-14) திருமுழுக்கு ஒரு கல்லறை, ஏனெனில் அது பழைய வாழ்வின் அடக்கம்; திருமுழுக்கு ஒரு கருவறை, ஏனெனில் அது புதிய வாழ்வின் தொடக்கம்.

ஒரு மாணவன், 'வாழைப்பழம்' என்பதற்குப் பதிலாக, "வாயப்பயம்' என்றான். வகுப்பு ஆசிரியர் அவனுடைய அப்பாவை அழைத்து, 'உன் மகன் ஏன் 'வாயப்பயம்' என்று சொல்லுகிறான்? என்று கேட்டதற்கு, அந்த அப்பா, 'அது எங்க பயக்கவயக்கம்' என்றாராம்!

நாம் ஒரு சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி அவதிப்படுகிறோம். பாவ நாட்டங்களின் பிடியில் உள்ள நமது பழைய பாவ இயல்பைக் களைந்துவிட்டு, நீதியிலும் உண்மையிலும் உருவாக்கப்பட்ட புதிய இயல்பை அணிந்து கொள்வோம் (எபே 4:22-24).

இன்று நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். தன்னலத்தையும் ஆணவத்தையும், சாதி உணர்வையும், மொழி, இன, மதவெறிகளையும் விட்டுவிடுவோம். தன்னையே அழித்து உலகிற்குப் புத்துயிர் அளித்த இயேசுவைப் பின்பற்றி, நம்மையே அழித்து உலகிற்குக் கிறிஸ்துவின் உருக்கொடுப்போம்.

நீரினாலும் ஆவியினாலும் புதுப்பிறப்படைந்துள்ள மெய்யடியார்களாகிய நாம், ஆவியிலும் உண்மையிலும் இறைவனைத் தொழுது (யோவா 4:23), இத்திருப்பலியில் பங்கேற்போமாக!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இயேசு”

நிகழ்வு
ஒருமுறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் காந்தியடிகளைப் பார்த்து, “அரை நிர்வாணப் பக்கிரி” என்று குறிப்பிட்டார்.

காந்தியடிகள் இங்கிலாந்தில் வழக்குரைஞருக்குப் படிக்கின்றபோதும், அவர் வழக்குரைஞராகத் தென்னாப்பிரிக்காவில் பணியாற்றும்போதும் மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்தியவர். அப்படிப்பட்டவர் நாலுமுழ வேட்டியோடும் தோளில் ஒரு துண்டாடும் அரை நிர்வாணமாக, அமைதி வழியில் நாட்டிற்காகப் போராடி, விடுதலை பெற்றுத் தந்ததற்கு மதுரையில், அவருடைய வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு காரணமாக இருக்கின்றது.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் காந்தியடிகள் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்திருந்தபொழுது, மதுரை மேலவாசி வீதியாக நடந்து சென்றார். அப்பொழுது அவர் அங்குள்ள மக்கள் மேலுடை அணியாமல், வெறும் நாலுமுழ வேட்டியை மட்டும் அணிந்திருப்பதைக் கண்டார். அக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போன காந்தியடிகள், ‘இந்நாட்டில் உள்ள பலரும் உடுத்துவதற்குச் சரியான உடை இல்லாமல் இருக்கும்பொழுது, நான் மட்டும் மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்து நல்லதில்லை’ என்று, தான் அணிந்து வந்த ஆடம்பரமான ஆடைகளைத் துறந்து, நாலுமுழ வேட்டியோடும், தோளில் துண்டாடும் அரை நிர்வாணமாக வலம்வந்து, நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார்.

காந்தியடிகள் தான் அணிந்து வந்த ஆடம்பரமான ஆடைகளைத் துறந்து, மேலுடை இல்லாமல் வலம் வந்ததன் மூலம், இந்த நாட்டில் இருந்த பல கோடி ஏழை எளிய மக்களோடு தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். ஆண்டவராகிய இயேசுவும் பாவிகள் மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டதன் மூலம், அவர் மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார், இயேசு ஏன் திருமுழுக்குப் பெற வேண்டும், இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு என்ன உண்மையை உணர்த்துகின்றது என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்மோடு அடையாளப்படுத்தி கொண்ட இயேசு
இன்றைக்குப் பலர் அதிகாரத்திலும், பதவியிலும் உயர்ந்து மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். இயேசு இதற்கு முற்றிலும் மாறாக, தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து (பிலி 2: 6-8), பாவிகள் மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கினைப் பெறுகின்றார்

இயேசு பாவம் அறியாதவர் (2 கொரி 5: 21). அப்படியிருந்தும் அவர் திருமுழுக்குப் பெற்றார் எனில், அவர் மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்தவே. இயேசு தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, திருமுழுக்கின் வழியாகத் தன்னை மனக்குலத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டதுபோல், நாமும் நம்முடைய ஆணவத்திலிருந்து, அகந்தையிலிருந்து கீழே இறங்கி வந்து, துன்புறுகின்ற மக்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். இது குறித்து திருத்தூதர் புனித பேதுரு இவ்வாறு கூறுவார்: “கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துகள். அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார் (1 பேது 5: 6). ஆகவே, நாம் நம்முடைய ஆணவத்திலிருந்து இறங்கி வந்து, மிகுந்த தாழ்ச்சியோடு மக்களோடு நம்மை அடையாளபடுத்திக் கொண்டுவாழ்வோம்.

தன் பணியைத் தொடங்கிய இயேசு
திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு பெற்ற திருமுழுக்கு அவரது பணிவாழ்வின் தொடக்கமாக இருக்கின்றது. முப்பது ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபடாமல் இருந்த இயேசு, திருமுழுக்குப் பெற்றதும், தூய ஆவியார் அவர்மேல் இறங்கி வந்ததும், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்து, எங்கும் நன்மை செய்துகொண்டே செல்கின்றார் (திப 10: 32).

இயேசு திருமுழுக்குப் பெற்றபின் இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கினார் எனில், திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று இறையாட்சிப் பணியைச் செய்யக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் திருமுழுக்கில் நாம் பெற்ற அருள் நம்மை இறைப்பணியை செய்ய உந்தித் தள்ளுவதாக இருக்கவேண்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் கூறுவதாக இவ்வாறு வாசிக்கின்றோம்: “நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்கு தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன்” (எசா 55: 4). ஆண்டவராகிய கடவுள் கூறுவதாக இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு தன் வாழ்வாலும் போதனையாலும் மக்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் விளங்கினார். அப்படியெனில், திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் மக்களுக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும். இது நம்முடைய தலையாய கடமை.

கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாக இருக்க அழைப்பு
இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றதும், “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கின்றது. இயேசு தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அதன்மூலம் அவருடைய அன்பார்ந்த மகன் ஆனதால் வானத்திலிருந்து இப்படியொரு குரல் ஒலிக்கின்றது. பின்னர் இக்குரல் இயேசு தோற்றமாற்றம் அடைகின்றபொழுதும் இதே போன்று ஒலிக்கும் (மத் 17: 5). இயேசு தந்தைக் கடவுள் திருவுளத்தை நிறைவேற்றி அவரது அன்பார்ந்த மகனானதுபோன்று, நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது மகனான, மகளான மாறவேண்டும்.

திருத்தூதர் புனித யோவான் முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் அவர்மீதும் அன்பு கூர்கின்றார் என்றும், அதன்மூலம் அவர் கடவுளின் மக்கள் ஆகின்றார் என்றும் கூறுகின்றார். இங்கு கடவுளை அன்புகூர்வது என்பதை ‘இயேசுவை மெசியா என நம்புவதும், நம்பி அதன்படி வாழ்வதுமாகும்’ என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். முதல் நூற்றாண்டைச் சார்ந்த செரிந்துஸ், இயேசு திருமுழுக்குப் பெற்றது முதல் பாடுகள்படுகிறவரைக்கு மட்டுமே இறைமகனாக இருந்தார், அதற்கு முன்பும் பின்பும் அவர் இறைமகனாக, மெசியாவாக இல்லை என்று சொல்லிவந்தனர். இதற்குத் தன் கண்டனத்தைப் பதிவு செய்யும் யோவான், இயேசுவே உண்மையான மெசியா, அதற்கு நீரும் இரத்தமும் தூய ஆவியும் சான்றுகள், இதை நம்பி ஏற்றுக்கொள்வோர் உலகை வெல்வர் என்று கூறுகின்றார்.

அப்படியெனில், நாம் கடவுளின் அன்பார்ந்த மக்களாக வேண்டும் எனில், இயேசுவே மெசியா என நம்பி, அதன்படி வாழவேண்டும். இது குறித்து யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கின்றோம்: “அவரிடம் நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்” (யோவா 1: 12). எனவே, நாம் ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவில் இயேசுவை மெசியா என்று நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடந்து, அதன்மூலம் தந்தைக் கடவுளின் அன்பார்ந்த மக்களாவோம்.

சிந்தனை
‘நிலைவாழ்வை நோக்கிய பாதையின் முதல் அடி திருமுழுக்கு’ என்பார் டெல்பர்ட் எல்.ஸ்டாப்லே (Delbert L. Stapley) என்ற அறிஞர். ஆகையால், திருமுழுக்கின் வழியாக நிலைவாழ்வை நோக்கிய பாதையில் முதல் அடி எடுத்து வைத்து, அதில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்ற நாம், அதில் இறுதிவரைக்கும் நடந்து, கடவுளின் அன்பு மக்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நீர்நிலைகளுக்கு வாருங்கள்!

இன்றைய பதிலுரைப்பாடலின் பல்லவியாக, 'மீட்பளிக்கும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்' (காண். எசா 12) தரப்பட்டுள்ளது. இயேசுவின் திருஇருதயப் பெருவிழா அன்று திருப்பலியின் வருகைப் பல்லவியாகவும் இவ்வாக்கியம் அமைந்துள்ளது. 'தண்ணீரை நோக்கி வருமாறு அழைத்தல்' அல்லது 'தண்ணீரை நோக்கிச் செல்லுதல்' விவிலியத்தில் வளமை, பசுமை, மற்றும் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.

ஏன்?

பாலஸ்தீனமும் இஸ்ரயேலின் பெரும் பகுதியும் பாலைநிலப் பகுதி. பாலைநிலப் பகுதியில் வாழ்பவர்களுக்குத் தண்ணீர் மிகப் பெரிய புதையல். தண்ணீர் இருக்கும் இடம் நாடி அவர்கள் செல்வது இயல்பு. முதல் படைப்புக் கதையாடலிலும் எங்கும் தண்ணீர் நிறைந்திருப்பதை நாம் காண முடிகிறது. மேலும், தண்ணீர் வாழ்வின் ஊற்றாகவும் இருக்கிறது. ஏதேன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக பீசோன், கீகோன், திக்ரீசு, மற்றும் யூப்பிரத்தீசு என்னும் நான்கு ஆறுகள் ஓடுகின்றன (காண். தொநூ 2:10-14). ஆகார் தண்ணீர் தந்து தனக்கு வாழ்வுதரும் இறைவனைக் கண்டுகொள்கின்றார் (காண். தொநூ 21:19). தானும் தன் ஊர் மக்களும் பயன்படுத்துவதற்காக கிணறு ஒன்றை வெட்டுகின்ற ஆபிரகாம் அபிமெலக்கோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றார் (காண். தொநூ 21:22-33). யோர்தான் ஆற்றை யோசுவாவின் தலைமையில் கடக்கின்ற இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகின்றனர் (காண். யோசு 3). ஆண்டவரைத் தன் ஆயர் என அழைக்கின்ற தாவீது, 'அமைதியான நீர்நிலைகளுக்கு என அழைத்துச் செல்வார்' (காண். திபா 23:2) என்று பாடுகின்றார்.

ஆக, புதிய வாழ்வு, புதிய தொடக்கம், புதிய திருப்பம், புதிய நாடு, புதிய நிறைவு எனப் புதியவற்றின் ஊற்றாக இருக்கின்றது நீர்நிலை.

இன்றைய முதல் வாசகத்தில், 'நீர்நிலைகளுக்கு வாருங்கள்' என இஸ்ரயேல் மக்களை அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். நற்செய்தி வாசகத்தில், 'இயேசு நீர்நிலைக்கு வருகின்றார்.' நாமும் நம் திருமுழுக்கு நாளில் நீர்நிலைக்கு நம் பெற்றோராலும் ஞானப் பெற்றோராலும் அழைத்துச் செல்லப் பெற்றோம். நீர்நிலைகளுக்கு வருதல் என்பதன் பொருள், திருமுழுக்கின் பொருள், மற்றும் நீர்நிலைக்கு வர நாம் செய்ய வேண்டியவை எவை என்று இன்று சிந்திப்போம்.

முதல் வாசகம் (காண். எசா 55:1-11) 'இரண்டாம் எசாயா' நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனம் நிறைவுறும் காலத்தில் (கி.மு. 536) இந்த இறைவாக்கு உரைவாக்கப்படுகிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தின் நிறைவையும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் மக்கள் பெறும் மகிழ்ச்சியையும் முன்னுரைப்பதாக இருக்கிறது இந்த இறைவாக்குப் பகுதி. இஸ்ரயேல் மக்கள் தங்கள் உடன்படிக்கை உறவிலிருந்து பிறழ்வுபட்டதால் ஆண்டவராகிய கடவுள் பாபிலோனிய நாடுகடத்தலுக்கு அவர்களை உட்படுத்தினார் என்ற செய்தியைத் தெரிவித்த எசாயா, இன்று, அவர்கள் திரும்பி வரும்போது மீண்டும் அதே பழைய பிரமாணிக்கமின்மையில் விழக்கூடாது என அவர்களை எச்சரிக்கின்றார்.

முதல் வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: ஒன்று, விருந்துக்கான அழைப்புளூ இரண்டு, மனந்திரும்புதலுக்கான கட்டளைளூ மூன்று, கடவுளின் வாக்குறுதியின் உறுதித்தன்மை. 'வாருங்கள்! பருகுங்கள்! உண்ணு ங்கள்!' என்று தன் மக்களை அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். தண்ணீரும் உணவும் ஆண்டவராகிய கடவுள் வழங்குகின்ற விருந்தின் உருவகங்களாக இருக்கின்றன. இந்த விருந்தில் பங்கேற்க வேண்டுமெனில், அவர்கள் ஆண்டவராகிய கடவுளுக்குச் செவிகொடுக்க வேண்டும். அவரை நோக்கித் திரும்ப வேண்டும். கடவுளின் வாக்குறுதியின் உறுதித்தன்மை இரண்டு நிலைகளில் வரையறுக்கப்படுகிறது: ஒன்று, கடவுளின் எண்ணங்கள் மனித எண்ணங்களை விட உயர்ந்தவை. இரண்டு, கடவுளின் வார்த்தை எதற்காகப் புறப்பட்டதோ அதைச் செய்து முடிக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 5:1-9) தொடக்ககாலக் கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படை இருப்பதைக் காண்கிறோம். இயேசுவை, 'கிறிஸ்து' என ஏற்று நம்பிக்கை அறிக்கை செய்வதே முதன்மையானது. இந்த நம்பிக்கையால் ஒருவர் உலகை வெல்கிறார். 'உலகு' என்பது தீமையின் அடையாளம். மேலும், இந்த நம்பிக்கை கொண்டிருப்பவர் ஒருவர் மற்றவரை அன்பு செய்கிறார். இரண்டாம் வாசகத்தின் இரண்டாம் பகுதி, யோவான் கொண்டிருந்த மூவொரு இறைவன் பற்றிய புரிதலை நமக்குச் சொல்கிறது. 'நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு' என்கிறார் யோவான். இதன் வழியாக, இயேசுவின் பணி நீரில் (திருமுழுக்கில்) தொடங்கி, இரத்தத்தில் (சிலுவையில்) நிறைவுறுகிறது என்று இயேசுவின் ஒட்டுமொத்தப் பணி, பாடுகள், மற்றும் இறப்பைச் சுருங்கச் சொல்கின்றார். தூய ஆவியார், இயேசுவின் மீட்புப் பணியின் தாக்கத்தை நம்பிக்கையாளர்கள் இதயத்தில் நம்பிக்கை மற்றும் அன்பு வழியாகத் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றார். இறுதியாக, இயேசுவின் பணியும், தூய ஆவியாரின் செயல்பாடுகளும் கடவுளின் அன்புக்கும் மீட்புத் திட்டத்துக்கும் சான்று பகர்கின்றன. ஆக, கிறிஸ்தவ வாழ்வு என்பது இயேசுவை நம்புவதிலும், அந்த நம்பிக்கையில் நிலைத்திருந்து ஒருவர் மற்றவரை அன்பு செய்வதிலும் அடங்கியுள்ளது. நம்பிக்கையை அறிக்கையிட்டு, அன்பினால் செயல்பட நம்பிக்கையாளர்களின் அழைக்கப்படுகின்றனர்.

நற்செய்தி வாசகம் (காண். மாற் 1:7-11), இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றியும், தனக்குப் பின் வருபவர் பற்றியும் சான்று பகர்கின்றார். இரண்டாவது பகுதியில், இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை மாற்கு பதிவு செய்கின்றார். திருமுழுக்கு யோவான், இயேசு தன்னைவிட வலிமை வாய்ந்தவர் என உரைக்கின்றார். இயேசுவின் வலிமை அல்லது மேன்மை அவர் தரும் திருமுழுக்கில் உள்ளது: இயேசு தரும் திருமுழுக்கு தூய ஆவியால் நிகழ்ந்தேறுகிறது. இது இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் நிகழும் பெந்தகோஸ்தே நிகழ்வை முன்னுரைப்பதாக அமைந்துள்ளது. மேலும், திருமுழுக்கு யோவான் தன்னை இயேசுவின் அடிமை அல்லது பணியாளர் என்ற நிலைக்குத் தன்னையே தாழ்த்திக் கொள்கிறார்.

இயேசு திருழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார். யோவான் மனமாற்றத்துக்கான திருமுழுக்கை வழங்கினார். இயேசு தன் பாவங்களுக்காக அல்ல, மாறாக, தன் பணிவாழ்வின் தொடக்கத்தை முன்னிட்டே யோவானிடம் திருமுழுக்கு பெறுகின்றார். ஆகையால்தான், 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என வானத்திலிருந்து குரல் கேட்கிறது. இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்தை கடவுள் ஏற்பதாக இக்குரல் ஒலி அமைகிறது.

ஆக,

முதல் வாசகத்தில், நீர்நிலை என்பது ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த நிறைவு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக உள்ளது.

இரண்டாம் வாசகத்தில், நீரினால் திருமுழுக்கு பெறுகின்ற நம்பிக்கையாளர், இயேசுவின்மேல் நம்பிக்கை அறிக்கை செய்வதுடன், நம்பிக்கையை அன்புச் செயல்களால் வாழ்ந்து காட் அழைக்கப்படுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், நீர்நிலைக்கு வருகின்ற இயேசு இறையனுபவம் பெறுகின்றார். அதுவே அவருடைய பணிவாழ்வின் அடித்தள அனுபவமாக அமைகிறது.

இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா நமக்குத் தரும் செய்தி என்ன? 'நீர்நிலைக்கு வாருங்கள்'

நீர்நிலைக்கு வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

(1) நீர்நிலைக்கு வருதல் ஓர் அன்றாட நிகழ்வு நாம் குழந்தைகளாக இருந்தபோது திருமுழுக்கு பெற்றோம். அந்த நேரத்தில், நம் பெற்றோரும் ஞானப் பெற்றோரும் திருமுழுக்கு நீர்த் தொட்டி என்னும் நீர்நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றனர். அந்த நீர்நிலையில் நாம் கழுவப்பெற்றோம், நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாம் திருஅவையின் உறுப்பினர்களாக, கிறிஸ்துவின் மறையுடலில் ஓர் உறுப்பாக மாறினோம். அந்த நிகழ்வில் நம் சார்பாகப் பங்கேற்றவர்கள் நம் பெற்றோர்களும், ஞானப் பெற்றோர்களுமே! இன்று நாம் அந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கலாம். திருமுழுக்குத் தொட்டி என்னும் நீர்நிலைக்கு நான் செல்வதற்குக் காரணமாக இருந்த அவர்களுக்காக நாம் நன்றி கூறுவதோடு, அந்த நிகழ்வு நம்மில் ஏற்படுத்திய தூய்மை மற்றும் ஒளிநிறை வாழ்க்கையை மீண்டும் வாழ உறுதி எடுக்கலாம்.

(2) செவிகொடுத்தல் நீர்நிலைகளுக்கு வர வேண்டுமெனில், நாம் செவிகொடுக்க வேண்டும். ஆண்டவர் அருகில் இருக்கும்போதே அவரைத் தேட வேண்டும். அவரின் வாக்குப்பிறழாமையில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இன்று நாம் விரும்புகிறோமா விரும்பவில்லையோ நிறையக் காணொளிகளிலும், ஒலிகளிலும் செய்திகளைக் கேட்கின்றோம். பெரும்பாலான செய்திகள் நமக்குப் போலியான நம்பிக்கையையே தருகின்றன. அல்லது நம் நம்பிக்கையைக் குலைத்து நமக்கு அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளன. ஆண்டவராகிய கடவுளின் செய்தியும் அழைப்பும் நமக்கு ஆறுதல் மட்டுமே தருகின்றது. இன்று நான் அவருடைய குரலுக்குச் செவிகொடுக்கத் தடையாக உள்ள அக மற்றும் புறக் காரணிகளை நான் அகற்றிவிடத் தயாராக இருக்கின்றேனா?

(3) இலக்குத் தெளிவும் தெரிவும் தன் பணி என்ன என்பதையும், தன் பணியின் நேரம் என்ன என்பதையும் தெளிந்து தெரிகின்ற இயேசு, உடனடியாகச் செயல்படுத்துகிறார். தெளிவும் தெரிவும் கொண்டிருக்கின்ற ஒருவர் மட்டுமே நீர்நிலைக்கு வர முடியும். மேலும் நீர்நிலையில் இறங்கியபின் பழைய வாழ்க்கைக்கு ஒருவர் திரும்ப முடியாது. ஆக, திரும்ப முடியாத திடம் கொண்டிருத்தல் அவசியம்.

இறுதியாக,
இன்று நமக்கு முன் நீர்நிலைகள் போல பல கானல்நீர்த் தடாகங்கள் இருக்கின்றன. அவற்றின்பின் நாம் செல்வதால் நம் ஆற்றல் விரயமாவதுடன், அவற்றால் நாம் எந்தப் பயனும் அடைய முடிவதில்லை.

'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (காண். எசா 30:21).

அக்குரல் வழி சென்றால், நீர்நிலையை நாம் அடையலாம். அந்த நீர்நிலையில் நாம் நுழைந்தால் நமக்கு மேலும் குரல் ஒலிக்கும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"திருமுழுக்கு ஒரு மறுபிறப்பா!"

சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கண்ட ஒரு செய்தி. காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் மகள், அதே காவல் துறையில் மிக உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை மகிழ்ச்சியைடைந்தார். தன் மகளைக் குறித்து பெருமையடைந்தார். தன் மகளைப் பெருமைப்படுத்தும் விதமாக சாலையில் அனைவரின் முன்னிலையில் காவல்துறை முறைப்படி தன் மகளுக்கு "சல்யூட்" அடித்து தன் பெருமிதத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு அந்த மகளை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியது.

அன்புக்குரியவர்களே நம்முடைய அருமை பெருமைகளை யார் பாராட்டாவிட்டாலும், அவற்றைக் கொண்டாடுபவர்கள் நம் பெற்றோர்கள்.நம்முடைய சின்னச் சின்ன வெற்றிகள் கூட அவர்கள் பார்வையில் பெரிய சாதனை தான்.அதிலும் குறிப்பாக நம்முடைய பெற்றோருக்கு நாம் கீழ்படிந்து அவர்கள் விருப்பத்திற்கேற்ற பிள்ளைகளாய் வாழ்ந்தோமானால் இவ்வுலகத்திலேயே நாம் தான் சிறந்தவர்கள் என மார்தட்டிக் கொள்வார்கள். இதே போன்ற ஒரு அனுபவத்தை இயேசு பெறுகிறார்.

இன்று திருஅவையோடு இணைந்து இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். தந்தைக் கடவுளின் விருப்பத்தை ஏற்று, உலகம் தோன்றுமுன்பே இருந்தவரான வார்த்தை மனுஉருவாகி,குடும்பத்திலே வளர்ந்து முப்பது ஆண்டுகளாய்த் தன்னைத் தயாரித்து தந்தையின் திருஉளத்தை நிறைவேற்றப் புறப்படும் முன்பு திருமுழுக்குப் பெறுகிறார் இயேசு. தன் விருப்பத்தை நிறைவேற்ற மனமுவந்து தன்னைக் கையளித்த தன் மகனைப் பெருமைப்படுத்தி "என் அன்பார்ந்த மகன் இவரே" என்று சான்று பகர்கிறார் கடவுள். கடவுளின் இவ்வார்த்தையும் தூய ஆவியின் திடப்படுத்துதலும் இயேசுவின் பணிவாழ்க்கைக்கு பெரும் உந்து சக்தியாய் அமைந்தது. கடவுளின் சான்று மனிதரின் சான்றைவிட மேலானது என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் குறிப்பிடுகிறார். இந்த அப்பா அனுபவமே இயேசுவின் மிகப்பெரிய பலமானது.

இயேசுவின் திருமுழுக்கு கடவுள் மனித வாழ்வில் பங்கெடுக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பாவத்தில் உழன்று கிடந்த மக்களை மீட்க, பாவமே செய்யாத கடவுளின் மகன் பாவ மன்னிபிற்கான திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறார். கடவுளின் நற்சான்றைப் பெறுகிறார். நாம் பெற்ற திருமுழுக்கு கடவுளின் இயல்பில் நாம் பங்கெடுப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிறவிப் பாவத்தோடு நாம் பிறந்த போதும் திருமுழுக்கினால் அப்பாவம் நீக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளாக நாம் மாறுகிறோம். அன்று "என் அன்பார்ந்த மகன் இவரே; என் அன்பார்ந்த மகள் இவரே" என்ற வார்த்தைகளைக் கூறி கடவுள் நமக்கும் சான்றளிக்கிறார்.

இவ்வாறு கடவுள் நமக்குச் சான்று பகர்வதன் நோக்கம் நாம் அவருக்கு சான்று பகரவே. இயேசுவின் திருமுழுக்கு இறையாட்சிப் பணிக்கு அவரைத் தூண்டியது.தன் பணிகளால் கடவுளுக்கு சான்று பகர்ந்தார் இயேசு.

இயேசுவின் திருமுழுக்கு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. இயேசு திருமுழுக்கின் வழியாக தந்தை இறைவனாலும், தூய ஆவியினாலும் திடப்படுத்தப்பட்டார். 30 ஆண்டுகள் தன்னையே ஆயத்தப்படுத்திய பிறகு தன்னுடைய பணி வாழ்வை தொடங்கு விதமாக இறை மகனாகிய இயேசு கிறிஸ்து யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். இறை மகனாகிய இயேசு கிறிஸ்து மனமாற வேண்டிய பாவிகள் பெறவேண்டிய திருமுழுக்கு ஏன் பெற வேண்டும்? என்ற கேள்வி நம்மில் எழலாம். இதற்கான காரணங்களை இன்று சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

முதலாவதாக, பாவிகள் திருமுழுக்கு பெற வேண்டிய இடத்தில் இயேசு திருமுழுக்கு பெற்றது பாவிகளை அன்பு செய்வதை சுட்டிக்காட்டுகிறது. "நேர்மையாளர்களை அல்ல; பாவிகளையே தேடி வந்தேன் " என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர் திருமுழுக்குப் பெறுவதன் வழியாக வாழ்வாக்கப்படுகிறது. இயேசு பாவிகளுக்கு மனமாற்ற வாழ்வுக்கான அழைப்பு விடுக்கிறார். தன்னை ஒரு முன்மாதிரியாக அவர்களுக்கு சுட்டிக்காட்டி அவர்களும் தூய வாழ்வு வாழ்ந்து இறை கருவிகளாக மாற அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டாவதாக, யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்குக் கொடுத்து வந்த திருமுழுக்கு யோவானுக்கு இறைமகன் இயேசு ஒரு சிறப்பு அங்கீகாரம் கொடுக்கிறார். திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணியில் எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு உண்மையாக வாழ்ந்து இயேசுவின் வருகையை செம்மைப் படுத்தினார். மேலும் பாவிகளை மனமாற்றம் பெறச்செய்து மீட்பின் கனியைச் சுவைக்க வழிகாட்டினார். தன் பணிக்காலம் முழுவதும் தான்பெற்ற அழைப்பில் உறுதியாக இருந்து உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகர்ந்து தனது இரத்தத்தை சிந்தி நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தார். எனவே தான் ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானின் உண்மைத் தன்மையை அறிந்து அவரிடம் திருமுழுக்குப் பெறுவதன் வழியாக அவருக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தார்.

மூன்றாவதாக, யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு யோவான் தண்ணீரால் பாவிகளுக்கு திருமுழுக்குக் கொடுத்து மனமாற்ற வாழ்வுக்கு வழி காட்டினார். தண்ணீர் பாவிகளை தூய்மையுள்ளவர்களாக மாற்றியது. இயேசுவும் அந்த தண்ணீரில் பாவிகளை போல தூய்மை பெற வரவில்லை; மாறாக, தண்ணீரில் இறங்கி திருமுழுக்கு பெறுவதுதன் வழியாக தண்ணீர் தூய்மையாக மாறியது.

நான்காவதாக, இயேசு திருமுழுக்கு பெறுவதன் வழியாக அப்பா அனுபவத்தை பெறுகிறார். இயேசுவின் தகுதியுள்ள நிலையை கண்டு தந்தையாம் கடவுள் பூரிப்படைகிறார். தூய ஆவி வெண்புறா போல இறங்கி வந்து அப்பா அனுபவத்தைப் பெற்று இறையாட்சி பணியில் திடம் பெற இந்த திருமுழுக்குக்கானது இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தில் அடிப்படையாக இருந்தது. இயேசுவின் திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் தந்தையாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள இவ்விழா ஒரு சிறப்பான அழைப்பாக இருக்கின்றது.

ஐந்தாவதாக, இயேசு திருமுழுக்கு பெறுவதன் வழியாக, இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கேற்ப வாழ்வதற்கு திருமுழுக்கு ஆணிவேராக இருக்கின்றது என்ற ஆழமான இறையியல் சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார்.

இயேசுவின் திருமுழுக்கின் வழியாக இயேசு தனது இலக்கில் முழு தெளிவு பெற்று தன்னுடைய இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். இயேசு அன்னை மரியா வழியாக இம்மண்ணுலகில் பிறந்தாலும் திருமுழுக்கின் வழியாக புது பிறப்பை அடைந்துள்ளார். இதுதான் இவருக்கு உண்மையான பிறந்தநாள். இதற்காகத்தான் இயேசு குழந்தையாக இந்த உலகிற்கு அனுப்பப்பட்டார்.

எனவே இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவை கொண்டாடும் நாம் இயேசுவைப் போல பாவிகளையும் சமூகத்தில் அடையாளம் காணப்படாத மக்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு புது வாழ்வு வழங்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு திருமுழுக்கு யோவானின் இறைப்பணிக்கு அங்கீகாரம் கொடுத்தது போல நாம் உண்மையாக உழைக்கின்ற மக்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அவருடைய வாழ்வை மேம்படுத்த ஒரு கருவியாக பயன்பட முயற்சி செய்வோம். இயேசு யோர்தான் நதிக்கரையில் தண்ணீரில் இறங்கி தண்ணீரை தூய்மைப்படுத்தியதைப்போல நாமும் இச்சமூகத்தில் உள்ள தீமைகளை அகற்றி அனைவரும் இயேசுவின் மதிப்பீடுகளை உள்வாங்கி தூயவர்களாக வாழவும், இறைக் கருவிகளாக மாறவும் முயற்சி செய்வோம். இயேசு அப்பா அனுபவத்தையும் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றது போல திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்தின் வழியாகவும் தவத்தின் வழியாகவும் அப்பா அனுபவத்தை மென்மேலும் பெற்று நல்ல இறை கருவிகளாக மாற முயற்சி செய்வோம். இயேசு தன்னுடைய பணி வாழ்வின் தொடக்கத்தில் திருமுழுக்குப் பெற்று தனது பணியை வல்லமையோடு தொடங்கியது போல நாமும் நமது அன்றாட வாழ்வில் இயேசுவைப்போல வல்லமையோடு பணிசெய்து இறையாட்சி மதிப்பீடுகள் வாழ்வாக்கப்பட தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் : வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்குப் பெருவிழாவின் வழியாக நாங்களும் அவரை போல எங்கள் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். நாங்கள் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெற்று உம்முடைய மதிப்பீடுகளுக்கு எதிராக வாழ்ந்துவரும் நேரத்திற்காக மன்னிப்பு கேட்கின்றோம். எனவே இனி வரும் காலங்களில் நற்செய்தியை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2021| Email ID: anbinmadal at gmail.com