மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 2: 1-5|உரோமையர் 13: 11-14|மத்தேயு 24: 37-44

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

அனிஸ் என்ற ஏழு வயது சிறுவன் பெங்களூரில் ஓர் ஆங்கிலப் பள்ளியிலே 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா ஒரு பொறியாளர், அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருந்தார். அவன் அம்மா, அக்காள் இந்தப் பையன் மூவரும் விடுமுறையில் அப்பாவோடு இருவாரங்கள் தங்கி வர, அமெரிக்காவைப் பார்த்து வர பாஸ்போர்ட், விசா எல்லாம் ஒழுங்கு செய்து புறப்பட இரண்டு நாட்கள் இருந்தன. அப்பாவுக்கு இந்தியா லாலா மிட்டாய் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று விரும்பி அருகில் இருந்த கடைக்குச் சென்று ஒரு கிலோ லாலா மிட்டாய் வாங்கி வரும்போது, தரையில் அறுபட்டுக்கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து அங்கே பிணமானான் சிறுவன். ஒரு வாழ்வு மலருமுன்னே மறைந்து, எல்லோரையும் துயரத்தின் கடலிலே ஆழ்த்தியது. ஆம் எதிர்பாராத சோக நிகழ்ச்சி!

இன்றைய நற்செய்தியில் நாம் விழிப்பாய் இருக்கவும், ஆயத்தமாக இருக்கவும் அழைப்பு விடுக்கிறார் இயேசு. இதற்காக ஒரு நிகழ்வையும், ஓர் உவமையையும் தருகிறார். மக்கள் கடவுளை மறந்து சிற்றின்ப வாழ்வில் மூழ்கினார்கள். வெள்ளப் பெருக்கைக் கொண்டு அம்மக்களை அழிக்க விரும்பினார். நீதிமான் நோவாவை நோக்கிக் கப்பல் கட்டச் சொன்னவுடன், பணிந்து வேலையை ஆரம்பிக்கிறார். மற்றவர்கள் அவரைப் பார்த்து தண்ணீர் இல்லையே! ஏன் இந்தப் பெரிய கப்பல் என்று ஏளனம் செய்கின்றனர். பெட்டக வேலை முடிந்தவுடன் பெருமழை வந்தது. நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட்டது. ஆனால் தயாரின்றி இருந்த மற்றவர் அனைவரும் அழிந்தனர் (மத்: 24:37-44).

இரண்டாவது, இயேசு சொல்கிறார், இருவர் வயலில் இருப்பர், ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார், மற்றவர் விடப்படுவார். புனித பேதுரு கூறுவதுபோல ஆண்டவருடைய நாள் திருடனைப்போல் வரும் (2பேதுரு 3:10). ஆண்டவருடைய நாள் என்பது பழைய ஏற்பாட்டிலே கடவுளின் வாக்குறுதியின் நிறைவாக, மெசியாவின் வருகையைக் குறிப்பதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலே இயேசுவில் நாம் பெறும் மீட்பைப் பற்றியதாக, இயேசுவை நம் இரட்சகராக ஏற்று நாம் பெறும் நித்திய வாழ்வைப் பற்றியதாக உள்ளது. இன்றைய முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர் கூறுவது போல நாம் அனைவரும் பயணிகள், நமது நோக்கம் எருசலேம் தேவாலயம் அல்ல. மாறாக இறைவனோடு என்றும் வாழ்வுக்கு, அந்த உன்னத வாழ்வுக்கு, சீயோன் மலைக்குச் செல்லத் தயாராக இருக்க அழைப்பு விடுக்கிறார். சிறுவன் அனிஸ் வாழ்வு திடீரென முடிவுக்கு வந்ததுபோல, நமது வாழ்வு என்று முடிவுபெறும் என்று தெரியாததால் நாம் என்றும் விழிப்போடும். தொடர்ந்த ஆயத்தத்தோடும் வாழ வேண்டும் என்பதை இயேசு நற்செய்திலே வலியுறுத்துகிறார் (மத்: 24:43-44).

இன்றைய சமுதாயத்தை ஆட்டிப்படைப்பது மனவிரக்தியும், மனச்சோர்வும் ஆகும். இத்தகைய மனவிரக்தியிலும், மனச்சோர்விலும் வாழும் நமக்குப் புனித பவுல் அடிகளாரின் இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ. 13:11-14), நம்பிக்கையையும். ஆற்றலையும், ஊட்டவல்லவையாக அமைகின்றன. தீமைகளும், அநீதிகளும், இரவின் செயல்களும் முடியப்போகின்றன என்று முன்னறிவிக்கிறார். மீட்பு அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி வந்துவிட்டது என்றும் உற்சாகமூட்டும் வார்த்தைகளைத் தருகிறார்.

அன்பார்ந்தவர்களே!
புதிய சமுதாயத்தைப் படைக்க நம்மிடத்தில் முதலாவது இருக்க வேண்டியது துணிவும், தளராத மனமும், விடாமுயற்சியும், இலட்சியத் தெளிவும் ஆகும்.

ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாததால் நாம் மனப்பக்குவத்துடன் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம் திரும்பலாம், என்று தள்ளிப்போடும் மடமை, முட்டாள்தனத்திற்கு இன்று முடிவு கட்டியாக வேண்டும். கடந்த கால வாழ்வை எண்ணிக் கவலைப்பட்டு, எதிர்காலத்தை நினைத்து அச்சத்துடன் வாழ்வதை விட்டு, நிகழ்காலத்தில் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இருளின் ஆட்சிக்குரிய செயல்களான களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவுகளை நாம் தவிர்க்க வேண்டும் (உரோ. 13:11).

இறுதியாக ஒளியின் படைக்கலன்களாக அன்பு, விசுவாசம். நம்பிக்கை ஆகிய கொடைகளை (1தெச.5:8) அணிந்து கொண்டு, (உரோ.13:14) நம்மைச் சந்திக்க வரும் இயேசுவோடு நாம் நம்மையே ஒன்றித்து, உறவை வளர்த்து அவரோடு பயணம் செய்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எப்பொழுதும் விழித்திருப்போம்

நம் வீட்டிற்கு ஒரு புனிதரோ, புனிதையோ வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வந்தால் நமது வீட்டைத் தூய்மையாக. சுத்தமாக வைத்துக்கொள்வோம் அல்லவா?

இன்னும் சில வாரங்களிலே புனிதர்களையும், புனிதைகளையும் படைத்த படைப்பின் தலைவர் கடவுள், இயேசுவின் உருவிலே நம்மைத் தேடி வரப்போகின்றார். அவர் தூய்மையே உருவானவர். அவரை வரவேற்க நமது உள்ளத்தையும், இல்லத்தையும் தூய்மையாக, சுத்தமாக வைத்துக்கொள்வோம்!

நமது மனத்தை, உள்ளத்தை, வாழ்க்கையை அழுக்காக்குவது எது? பாவம்!

பாவம் என்றால் என்ன? இலக்கைத் தவறவிடுவதற்கு அல்லது மறப்பதற்குப் பெயர்தான் பாவம்!

இலக்கு என்பது இறைவனால் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்! ஆக. குறிக்கோளை மறந்து, வழிதவறி நடப்பதற்கு, வாழ்வதற்குப் பெயர்தான் பாவம்!

செபத்திலும், தவத்திலும் ஈடுபட்டு தேர்ந்துதெளிதல் வழியாக (உரோ 12 : 1-2) நமது அழைத்தலின் தன்மைக்கு ஏற்றவாறு நமது இலக்கை, குறிக்கோளை நிர்ணயித்த பிறகு அதைநோக்கி நாம் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். இதோ ஒரு கதை!

ஞானம் தேடி இளைஞன் ஒருவன் இமயமலை நோக்கிப் பயணம் செய்தான்! அவன் கங்கை நதிக் கரையிலிருந்த ஒரு பாறையின்மீது அமர்ந்து தியானம் செய்தான்!

அப்போது கங்கை நதி அவனோடு பேசியது!

கங்கை அவனைப் பார்த்து, "உன் கண்ணோரத்தில் கங்கை எதற்கு? உன் முகத்தில் ஏனிந்த சோக ரேகைகள்?" என்றது.

அதற்கு அந்த இளைஞன், "நான் எடுக்கும் எந்த முயற்சியிலும் எனக்கு வெற்றி கிட்டுவதில்லை. முன்னேற்றம் என்ற சொல்லுக்கே என் வாழ்வில் இடமில்லை!" என்றான்.

அதற்குக் கங்கை நதி அவனைப் பார்த்து. "என்னைப் பார்! என் இலக்கு கடல்! கடலை அடையும்வரை என் பயணம் ஓயாது! என்னைச் சுற்றி எத்தனையோ அழகான செடிகள், கொடிகள், மரங்கள், மலர்கள்! எதையும் நான் பற்றிக்கொள்ள நினைப்பதில்லை! என் இலக்கான கடவை நோக்கி என் பயணம் தொடர்கின்றது! என்னைப் போல நீயும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு உன் பயணத்தைத் தொடங்கு. உனக்கு வெற்றி கிடைக்கும்" என்றது!

அவனும் அவ்வாறே செய்தான்! தன் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயித்தான்! "இந்த இலக்கை அடையும் வரை நான் எதையும் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்" என்று முடிவெடுத்தான்! அவன் பயணத்தில் வெற்றிபெற்றான்!

கயிற்றின்மீது நடக்கும் கலைஞனுக்கு இலக்கு எது? கயிற்றின் மறுபக்கத்தை அடைவது!

தூண்டில் போடுகின்றவனுக்கு இலக்கு எது ? தக்கை தண்ணீருக்குள் செல்லும்போது மீனை கரைக்குக் கொண்டுவருவது!

ஊர்தியை இயக்கும் ஓட்டுநருக்கு இலக்கு எது? சேர வேண்டிய ஊரை அடைவது!

கிறிஸ்தவர்களாகிய நமது இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?

இந்த கேள்விக்குப் புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் பதில் கூறுகின்றார்! இருள் என்னும் பாவத்தை விட்டுவிட்டு பகல் என்னும் புண்ணியத்தை நமதாக்கிக்கொண்டு இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ள வேண்டும்! இதுவே கிறிஸ்தவ வாழ்வின் இலக்கு!

பாவத்தை விட்டுவிடும் வழிகளை. நன்னெறிகளை நமக்கு ஆண்டவர் கற்பிப்பார் (எசா 2 : 3).

நமது இலக்கை அடைய கயிற்றில் நடப்பவரைப் போல, தூண்டில் போடுகின்றவனைப் போல, ஊர்தி ஓட்டுநரைப் போல நாமும் விழிப்பாய் இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி (மத் 24 : 42) எடுத்துரைப்பது போல எப்போதும் நாம் விழிப்பாயிருக்கவேண்டும்.
மேலும் அறிவோம்:

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் (குறள் : 433).

பொருள் :
பழி பாவங்களுக்கு அஞ்சுபவர். தினையளவு குற்றத்தையும் பனையளவு பெரியதாகக் கருதி, அதனைச் செய்யாது தங்களைக் காத்துக்கொள்வர்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆசிரியர் அவனை எழுப்பிவிட்டு அவன் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டதற்கு அவன் கூறினாள்: "தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் முழிச்சிக்கிட்டு இருக்காதே' என்று அப்பாதான் சொன்னார். தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் மாணவர்கள் தூங்குகின்றனர். தேர்வு என்பது என்ன? அறிந்தும் அறியாததும். வாழ்க்கைத் தேர்வில் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாத மனிதர்கள் தூங்குகின்றனர். மனிதரின் வாழ்வு: "தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி,"

இத்தகைய சூழலில் நாம் இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து "விழிப்பாயிருங்கள்" (மத் 24:42) என்றும் "ஆயத்தமாய் இருங்கள்" (மத் 24:44) என்றும் அறிவுறுத்துகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும் "உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது" (உரோ 13:11) என்கிறார் திருத்தூதர் பவுல்.

நாம் உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும். "தூங்குகிறவனே. விழித்தெழு" (எபே 5:14), ஏனெனில் நாம் இரவின் மக்கள் அல்ல ஒளியின் மக்கள். நாம் பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடக்க வேண்டும். இருளின் செயல்களைக் களைந்துவிட்டுக் கிறிஸ்துவை அணிந்து கொள்ள வேண்டும். ஊனியல்பின் செயல்கள்: களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச் சச்சரவு என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் திருத்தூதர் பவுல் (உரோ 13:3), இந்த அருள்வாக்குத்தான் தூய அகுஸ்தினாரின் மனமாற்றத்திற்கு உந்துதலாக இருந்தது.

இன்றைய விளம்பர உலகம், ஊடக உலகம், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி உலகம் மனிதர்களைக் குடிவெறியிலும் காமத்திலும் தள்ளிவிட்டுப் பணத்தைக் குவிக்கிறது. அந்தக் காலத்தில் திரைப்படங்களில் கதை இருந்தது, ஆனால் இக்காலத் திரைப்படங்களில் கதை இல்லை; சதைதான் இருக்கிறது. இதன் விளைவாக இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 'பாஸ்மார்க்” வாங்காவிட்டாலும் "டாஸ்மாக்கில் வேலை கிடைக்கிறது. பட்டதாரிகளாக மாற வேண்டிய இனைஞர்கள் பட்டைதாரிகளாக மாறிவருகின்றனர், பல்வேறு பால்வினை நோய்களுக்குப் பலிக்கிடாக்களாகி வருகின்றனர்.

காய்ச்சல் வரும். போய்விடும்; வயிற்று வலி வரும். போய்விடும்; காச நோய் வரும். போய்விடும்; ஆனால் ஒரு நோய் மட்டும் வந்தால் போகவே போகாது. அதுதான் 'எய்ட்ஸ்" என்னும் உயிர்க்கொல்லி நோய், இத்நோயைத் தடுக்க மனக்கட்டுப்பாடு தேவை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு தீமையையும், அது வருமுன்பே அதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், வைக்கோல் புல்லை நெருப்பு எரிப்பதுபோல அது நம்மை எரித்துவிடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போவக் கெடும். (குறள் 435)

*அரசர் ஏன் தள்ளாடித் தள்ளாடி வருகிறார்? ஏனெனில் அவர் போருக்குப் போகாமல் பாருக்குப் போனாராம்". இன்று அரசே 'பார்' வசதியுடன் மதுபானக் கடைகளை நடத்துகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கையுடன் மதுபான விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. இந்நிலையில் குடிவெறியைக் குழிதோண்டிப் புதைக்கும்படி அறிவுறுத்துகிறார் பவுல். நோவா காலத்தில் வரப்போகும் வெள்ளப் பெருக்கைப் பற்றி அறியாத மக்கள் உண்டும் குடித்தும் வந்ததுபோலவே உலக முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போதும் மக்கள் உண்டு குடித்துக் களியாட்டம் புரிவர்; அப்போது கிறிஸ்து நினையாத நேரத்தில் வருவார் என்று இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து எச்சரிக்கிறார்.

வீட்டில் யார் கை ஓங்கும்? அப்பா கை ஓங்கும். அம்மா கை வீங்கும். குடிகார அப்பா அம்மாவை ஓங்கி அடிக்கிறார்; அம்மா கை வீங்குகிறது. குடிகாரக் கணவர்களால் பல பெண்கள் துன்புறுகின்றனர். அவர்களிடதிலிருந்து பெண்களைப் பாதுகாக்க "குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை" அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் சட்டத்தால் மனிதனைத் திருத்த முடியுமா? ஒவ்வொருவரும் தனக்குத்தானே சட்டமாக இருந்து, தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், "திருந்தாத சென்மம் இருந்தென்ன லாபம்?" என்று கூற வேண்டியுள்ளது.

மேலும், சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டுமென்றும் திருத்தூதர் பவுல் கேட்கின்றார். இன்று எங்கு பார்த்தாலும் சண்டையும் சச்சரவும், போரும் பூசலும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது. நாடுகளுக்கிடையே போர் இருக்கக் கூடாது; போர்ப்பயிற்சியும் கூடாது. போர்க் கருவிகளை எல்லாம் விவசாயக் கருவிகளாக மாற்ற வேண்டும் (எசா 2:1-5). கிறிஸ்துதான் நமது அமைதி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்ற பகைமை என்னும் தடைச் சுவரைத் தகர்த்து இரு இனத்தையும் ஓரினமாக இணைத்துள்ளார் (எபே 2:13-16).

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவுக்காகத் தயாரிக்கும் இக்காலத்தில் நாம் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்ப்போம். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது அங்கு கூடிய கூட்டம் இரண்டு வாகனங்களில் இருந்தப் பொருள்களைச் குரையாடினர். நாம் மற்றவர்களுடன் சண்டை போடுவதால் நமது அமைதி கொள்ளையடிக்கப்படுகிறது. நாம் ஒருவர் மற்றவரை அழிக்கின்றோம். "நீங்கள் ஒருவர் ஒருவரைக் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால். ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை" (கலா 5:15).

விழித்தெழுவோம்; ஏனெனில் நமது மீட்பு அண்மையில் உள்ளது, ஊனியல்பின் இச்சைகளை அழித்துவிட்டு, கிறிஸ்துவையே அணிந்து கொள்வோம். இத்திருவருகைக் காலம் நமக்கு மீட்பின் காலமாக, மனமாற்றத்தின் காலமாக அமைவதாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விழித்திரு

இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம். ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார்: “அழிவு, சிதைவு, இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம். புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது..."

மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான, செழிப்பான புதிய ஜெர்மனி.

திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம் விழிப்பாயிருங்கள் என்பதுதான். காரணம்? “உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை.13:11.)

போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்.

பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைக் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை, சோகத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.

இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே, இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு. "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம். எங்கள் தீச்செல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன". (எசாயா 64:6)

இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. ''ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்- படுத்தியதேன்?" (எசாயா 63:17) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி “நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்" (எசா.64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு.

-களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக் குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?" (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு. திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: “ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும்" இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது. நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!

ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்". (தி.ப.1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?

"விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு. 13:35)

சென்னையில் ஓர் அரசு அலுவலர். தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. “ஐயா, எங்களை மன்னியுங்கள். ஓர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்” என்பது கடித வாசகம். இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.

"சுதந்திரம் இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை என்று யார் சொன்னது?

விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கலப்பைக் கொழுக்களாக மாறும் வாள்கள்

ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை நாம் துவக்குகிறோம். புத்தாண்டு என்றாலே, புதியனவற்றைப் புகுத்தும் எண்ணம் மனதில் எழுகிறது. இந்தத் திருவழிபாட்டு ஆண்டும் புதிய எண்ணங்களை, அந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் புதிய கண்ணோட்டங்களை, புதிய மனதை நமக்குள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, பதியதொரு திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிப்போம்.

சென்ற ஆண்டு திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு நவம்பர் 28ம் தேதி வந்தது. இவ்வாண்டு அது நவம்பர் 27ம் தேதி வந்துள்ளது. நாள் காட்டியில் வரும் விழாக்கள் பொதுவாக பின்னோக்கி நகரும். ஆனால், காலம் பின்னோக்கி நகருமா? நகராது.

குளிர்காலம் ஆரம்பமாகி உள்ளது. குளிர் காலத்தில் பகல் நேரம் மிகவும் குறுகி விடும். எனவே, பல நாடுகளில் பகல் ஒளியைக் காப்பாற்றும் நேரம் (Daylight Saving Time) என்ற காரணம் காட்டி, கடிகாரத்தின் முள்ளை ஒரு மணி நேரம் பின்னோக்கித் தள்ளி வைத்துக் கொள்வார்கள். குளிர்காலம் முடிந்து வசந்தம் வந்ததும், கடிகார முள்ளை மீண்டும் பழையபடி திருப்பி வைத்துக் கொள்வார்கள்.

நமது நாள் காட்டியில் திருநாட்கள் முன், பின்னாக வர முடியும்; நமது வசதிக்காக கடிகார முள்ளைத் திருப்பி வைக்க முடியும். ஆனால், காலத்தை முன்னோக்கியோ, பின்னோக்கியோ தள்ள முடியுமா? முடியாது.

காலம் பின்னோக்கிப் போனால் நன்றாக இருக்குமே என்று நம்மில் பலர் பல நேரங்களில் ஏங்குகிறோம். இல்லையா? நமது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் இவைகளை மீண்டும் வாழ ஆசைப்படுகிறோம். அவ்வப்போது கற்பனையில், கனவில் அல்லது நாம் பேசிக் கொள்ளும் கதைகளில் இந்தப் பருவத்தை எட்டிப் பார்த்து வருகிறோம். ஏக்கப் பெருமூச்சு விடுகிறோம்.

நம் தனிப்பட்ட வாழ்வில் பின்னோக்கிப் போவதற்கு ஏங்குவது போல், உலக வரலாறும் பின்னோக்கிப் போவதற்கு ஆசைப் படுகிறோம். நம் மூதாதையர் வாழ்ந்த நிம்மதியான வாழ்வை எண்ணிப் பார்க்கிறோம். 'பிரிட்டிஷ்காரன்' ஆண்ட காலம் பிரமாதம் என்றெல்லாம் பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.

நாம் என்னதான் ஏங்கினாலும் காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது. அது நிச்சயம். ஆனால், நாம் வாழும் வாழ்க்கை முறையை பின்னோக்கித் தள்ளலாம். நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதென்று உணர்ந்தால், அந்தக்காலத்து வாழ்க்கை முறைக்கு நாம் திரும்பிச் செல்ல முடியும். அது நம் சக்திக்கு உட்பட்டது. இப்படி வாழும் பல குழுக்கள் உலகில் 2010ம் ஆண்டு இருக்கத்தான் செய்கின்றன.

மனித குலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. இன்று, இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவைக்கும் அதிகமாகப் பாழடித்து, இயற்கையைச் சீரழித்து வருகிறோம். நமது அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் இயற்கையைத் தேவைக்கும் அதிகமாகச் சுரண்டி வருகிறோம். இந்த அநீதிகளைச் சரி செய்யும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் சிறு சிறு குழுக்கள் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்ந்து வருகின்றன. குறைவான அளவு எரிபொருளின் பயன்பாடு, சூரிய ஒளி சக்தியின் பயன்பாடு, மறுசுழற்சி என்று பல வழிகளில் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்ந்து வருகின்றன இக்குழுக்கள். ஒவ்வொரு நாட்டு அரசும் இயற்கையின் மீது இன்னும் சிறிது அக்கறையுடன் செயல்பட்டால் நமது இயற்கையும், உலகமும் காப்பற்றப்படுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன.

பருவ நிலை மாற்றங்கள் குறித்து நவம்பர் 29, Mexico நாட்டில் Cancun நகரில் ஐ.நா. அமைப்பின் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று ஆரம்பமாகிறது. திருவருகைக் காலத்தின் ஆரம்பத்தில் இப்படி ஒரு கருத்தரங்கு நடைபெறுவதை நம் திருவழிபாட்டு கண்ணோட்டத்துடனும் நாம் பார்க்கலாம். உலகம் காப்பற்றப்படுவதைப் பற்றி இன்று நாம் பேச வேண்டும். திருவருகைக் காலத்தின் இந்த முதல் ஞாயிறன்று நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள் இப்படி நம்மை எண்ண வைக்கின்றன பேச வைக்கின்றன.

உலகைக் காப்பாற்றும் முயற்சியில் பல நாடுகளில் இளையோர் விழித்தெழுந்திருப்பது நல்லதொரு அறிகுறியாகத் தெரிகிறது. இந்த முயற்சிகளில் ஒன்றாக, ஒவ்வோர் அரசும் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையைக் குறைப்பது பற்றி இளையோர் குரலெழுப்பி வருகின்றனர். இராணுவத்திற்கு ஆகும் செலவைக் குறைத்து, அத்தொகையைக் கொண்டு மக்களின் வாழ்வுத்தரத்தை, முக்கியமாக, ஏழை மக்களின் வாழ்வுத்தரத்தை உயர்த்த திட்டங்கள் தீட்டுங்கள் என்று இளையோர் பல வழிகளில் குரலெழுப்பி வருகின்றனர். கேட்பதற்கு அற்புதமான நற்செய்தி இது!

அன்புள்ளங்களே, இராணுவச் செலவு பற்றி பல புள்ளி விவரங்களைத் தரலாம். ஒரே ஒரு புள்ளி விவரத்தைத் தர நான் விழைகிறேன்: 2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339 trillion Dollars) அதே ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 billion dollars) இராணுவச் செலவுகளுக்கான தொகையில் ஒரு தூசு கூட இல்லை. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் கறுப்புப் பணத்தைப் பற்றி ஒரு ஞாயிறு சிந்தனையில் நாம் சிந்தித்தபோது, ட்ரில்லியன் டாலர்களைப் பற்றி பேசினோம். உலகில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வறியோருக்குப் பகிர்ந்தளித்தால், உலகில் வறுமை என்பதை முற்றிலும் அகற்றலாம், விண்ணக வாழ்வை இவ்வுலகிலேயே ஆரம்பித்து வைக்கலாம் என்று சொன்னோம். அதையே இன்றும் சொல்வோம். உலக அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித் தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.

இராணுவத்தைப் பற்றி ஏன் இவ்வளவு பெரிய விளக்கம், ஆராய்ச்சி என்று கேள்வி எழலாம். இரு காரணங்கள் உண்டு. முதல் காரணம்: அண்மையில் இந்தியாவிலும் இன்னும் பிற ஆசிய நாடுகளிலும் அமெரிக்க அரசுத்தலைவர் மேற்கொண்ட பயணம் ஒரு காரணம். தீபாவளியை ஓட்டி ஒபாமா இந்தியா வந்ததால், வாண வேடிக்கைகளுடன் அவர் வரவைக் கொண்டாடினோம். இப்பயணத்தை ஒரு பெரும் விழாவைப் போல் நமது ஊடகங்கள் அலங்கரித்தாலும், இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிக்க ஒபாமா முயன்றார். வெற்றியும் கண்டார். அவரது பயணத்தால், அமெரிக்கா இந்தியாவுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்களை விற்க உள்ளது. தீபாவளி நேரத்தில் ஒபாமா வந்தது பொருத்தமாகத்தான் தெரிகிறது. தீபாவளி நேரத்தில் வெடிகள், மத்தாப்புக்கள் என்று நாம் கோடிக்கணக்கான மதிப்புடைய காசைக் கரியாக்குகிறோம். அதைக் குழந்தைத் தனம் என்று கடிந்து கொள்கிறோம். ஆனால், பல பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் இந்திய அரசைப் பார்த்து என்ன சொல்வது?

இராணுவத்தைப் பற்றி நான் பேச இரண்டாவது காரணம் நமது முதல் வாசகம். இந்த வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள் குறித்து காணும் ஒரு அழகான கனவு இது:
எசா. 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும்.
ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும்.
உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள்.
போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பயிற்சிகள் நடைபெறும்
.அடுக்கு மொழியில் சொல்லப்பட்டுள்ள இந்த அற்புதமான, அழகான கற்பனை, நாம் நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப் பருவத்திற்கு அல்லது ‘அந்த காலத்திற்குச்’ செல்லும் கற்பனையைப் போன்றது. இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூரம் நம் சாதியப் போர்களில் நடந்து வருகிறது.மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும் போது, கலிகாலம், முடிவு காலம் ஆரம்பித்து விட்டதோ என்று மனம் குமுறுகிறோம். முடிவு என்றாலே, அழிவுதானா? இல்லை. அது நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

முடிவு, இறுதி என்பவைகளை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்றும் பார்க்கலாம். நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் முடிவு காலத்தைப் பற்றி சொல்கின்றன. அழிவும் இருளும் இருக்கும் என்று சொன்னாலும், நம்பிக்கையுடன், விழிப்புடன் இதை எதிர்நோக்கும்படி மூன்று வாசகங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு வாசகத்தின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் நம் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வரிகள்:

யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.எசாயா 2 : 5
இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.உரோமையர் 13 : 14
ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். மத்தேயு 24 : 44

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்”

கிறிஸ்துவை அணிந்துகொண்டவர்:

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பாக்கியம் ஆசிரியர், தன் இறுதி நாள்களை அமைதியாகக் கழிக்க விரும்பினார். அதனால் அவர் நகருக்கு வெளியே ஓர் இடம் வாங்கி, அங்கே புதிதாக ஒரு வீடுகட்டி, அதில் தன் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பாக்கியம் ஆசிரியர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டிற்குப் பின்னால் இருந்த இடத்தில் பழ மரங்களையும் காய்கறிச் செடிகளையும் வளர்த்து வந்தார்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், பாக்கியம் ஆசிரியர் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்த சந்திரன் என்ற பெரியவர், அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவருடைய வீட்டிற்குள் குப்பையை வீசி வந்தார். ‘சில நாள்களில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்துக்கொண்டு பாக்கியம் ஆசிரியர் பொறுமையாய் இருந்தபோது, நாளுக்கு நாள் சந்திரன் என்ற அந்தப் பெரியவர் செய்த அட்டூழியங்கள் கூடிக்கொண்டே போயின.

ஒருநாள் காலையில் பாக்கியம் ஆசிரியர் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு, வெளியே வந்தபோது, வீட்டிற்கு முன்னால் குப்பைக் கூடை ஒன்று இருந்தது. கண்டு அதிர்ந்துபோனார். ‘எல்லாம் இந்தச் சந்திரனின் வேலையாகத்தான் இருக்கும்’ என்று அவர் மனத்தில் நினைத்துக்கொண்டு குப்பைக் கூடையை எடுத்து, அதனை நன்றாகக் கழுவி, தன்னுடைய தோட்டத்தில் விளைந்திருந்த பழங்களாலும் காய்கறிகளாலும் நிரப்பி, பக்கத்து வீட்டில் இருந்த சந்திரனிடம் போய்க் கொடுத்தார்.

அதைப் பார்த்ததும் சந்திரவன், “இத்தனை நாள்களும் நான் உங்களுடைய வீட்டில் குப்பையைக் கொட்டியபோது, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்குப் பழங்களையும் காய்கறிகளையும் கொடுக்கின்றீர்களே!” என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார். அதற்குப் பாக்கியம் ஆசிரியர், “யாரிடம் எது மிகுதியாக உள்ளதோ, அதைத் தானே அவர்கள் கொடுப்பார்கள்” என்றார். இவ்வார்த்தைகள் சந்திரனின் உள்ளத்தை வெகுவாகப் பாதிக்க, அவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, பாக்கியம் ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டார். அதன்பிறகு இருவரும் நல்ல நண்பர்களாய் வாழ்ந்து வந்தார்கள்.

ஆம், தன் பக்கத்து வீட்டில் இருந்த சந்திரன் என்ற பெரியவர் குப்பையை, வெறுப்பை வீசியபோதும் பாக்கியம் ஆசிரியர் அவர்மீது அன்பை மட்டுமே பொழிந்தார். இவ்வாறு அவர் கிறிஸ்துவை அணிந்துகொண்டவர் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, “இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்” என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் ஏன் கிறிஸ்துவை அணிந்து கொள்ளவேண்டும்? கிறிஸ்துவை அணிந்து கொள்வதனால் நாம் பெறும் ஆசிகள் என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

பகல் நெருங்கி உள்ளது:
அனைத்துக்கும் அரசராம் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெருவிழாவைக் கொண்டாடிவிட்டுத் திருவருகைக் காலத்தில் இன்று அடியெடுத்து வைக்கின்றோம். இந்த நல்ல நாளில், இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப் பவுல் விடுக்கின்ற அழைப்புதான், “கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்” என்பதாகும்.

கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள் என்றால், ஓர் ஆடையைப் போன்று அவரை அணிந்து கொள்வதல்ல; மாறாக, அவரது மதிப்பீடுகளின்படி வாழ்வது. நாம் ஏன் கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் எனில், இதுவே இறுதிக்காலம், அல்லது இரவு முடியப் போகிறது, பகல் நெருங்கி உள்ளது என்பதாகும். இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வதுதான் முறையானது. இருளின் ஆட்சிக்குரிய செயல் எவை என்று இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் பவுல் விவரிக்கின்றார்.

ஆதலால், இது இறுதிக் காலம் என்பதாலும், ஆண்டவரின் வருகை அண்மையில் இருப்பதாலும், நாம் கிறிஸ்துவை அணிந்துகொண்டு, அவரது மதிப்பீடுகளின்படி வாழ்வது இன்றியமையாததாக இருக்கின்றது.

அமைதியின் அரசர்:
‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ – என்பது பல பெரியவர்களும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. ஆனால், இந்த உண்மையை உணராமல், பலரும் மண்மீதும், பொன்மீதும் கொண்ட ஆசையால் நாடுகள்மீது போர்தொடுத்தும், அதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். இது இன்று நேற்று அல்ல, காலங்காலமாகவே இருந்து வருகின்றது. இப்படி இவ்வுலக அரசர்கள் போர்களையும் வன்முறைகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் வேளையில், வரவிருக்கும் மெசியா அமைதியின் அரசராக இருப்பார் என்கிறது இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்.

சீயோன் மலை, எல்லாருக்கும் பொதுவான ஒன்று, ஏனெனில், அங்குதான் மெசியாவாம் இயேசு அமைதியின் அரசராய் (எசா 9:6) வீற்றிருந்து ஆட்சி செலுத்துவார். அவரது காலத்தில் போர்களோ, சண்டை சச்சரவோ எதுவுமே இராது என்பதுதான் இறைவாக்கினர் எசாயா உரைக்கின்ற இறைவாக்கு. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது இதெல்லாம் நிறைவேறும் என்பதுதான் திருவிவிலிய அறிஞர்களின் கூற்று.

விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருங்கள்:
இரவு முடிந்து பகல் நெருங்கி உள்ளது என்றும், அமைதியின் அரசர் வரப்போகிறார் என்றும் நாம் சிந்தித்துப் பார்த்தோம். இத்தகைய அமைதியின் அரசரது வருகைக்கு நாம் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவினைத் தருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

மானிட மகனுடைய வருகையின் எப்படி இருக்கும் என்பது பற்றிப் பேசுகின்ற இயேசு, “நோவாவின் காலத்தில் இருந்தது போலவே இருக்கும்” என்கிறார். நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் உண்டும் குடித்தும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு நோவா நீதியைப் பற்றி அறிவித்தபோதும் (2 பேது 2:5), அவர்கள் அதற்குச் செவிசாய்க்காமல், தங்கள் விருப்பத்தின்படி நடந்தார்கள். இதனால் அவர்கள் வெள்ளப்பெருக்கினால் அழிந்தார்கள். இயேசு நோவாவைப் பற்றிச் சொல்லிவிட்டு, மானிட மகனுடைய வருகைக்காக விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இல்லாமல் இருப்பவர்கள் அப்படியே விட்டுவிடப்படுவார்கள். அதே நேரத்தில் ஆண்டவரின் வருகைக்காக விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்கிறார்.

எனவே, மானிட மகன் எப்போது வருவார் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், அவர் இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டுவார்; அவருக்கு அஞ்சி வாழ்வோருக்கும், விழிப்பாய், ஆயத்தமாய் இருப்போருக்கும், அவரை அணிந்து கொண்டு வாழ்வோருக்கும் அவர் தக்க கைம்மாறு தருவார் என்ற நம்பிக்கையோடு நாம் அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.

இறைவாக்கு:
‘புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். இவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகின்றது’ (கொலோ 3:10) என்று பவுல் கூறுவார். எனவே, நாம் புதிய மனித இயல்பை அணிந்திருக்கின்றோம் என்ற உணர்வோடு, கிறிஸ்துவை நமது வாழ்வால் பிரதிபலிப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டும், ஆலயமும், விழித்திருத்தலும்

புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகின்றோம். வருகிற நான்கு வாரங்களிலும் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுமாறு நம்மை அழைக்கின்ற திருவழிபாடு, அவர் நம் வாழ்வில் அன்றாடம் வருகிறார் என்றும், இறுதி நாள்களில் மாட்சியுடன் மீண்டும் வருவார் என்றும் நினைவூட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், 'இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும். எல்லாக் குன்றுகளுக்கும் மேலாய் உயர்த்தப்படும். மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்' (எசா 2:2) என இறைவாக்குரைக்கிறார் எசாயா. மக்களினங்கள் இணைந்து வரும் மற்றும் சந்திக்கும் இடமாக ஆலயம் முன்நிறுத்தப்படுகிறது. தன் மனுவுருவாதலுக்குப் பின்னர் இயேசு தம்மையே உண்மையான ஆலயம் என முன்மொழிந்தார். ஆக, எசாயாவின் காட்சி இறைவனின் வாக்குறுதியாகவும், அது இயேசுவில் நிறைவேறுவதாகவும் உள்ளது. கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்யும் உளப்பாங்கை இன்று நாம் பெற வேண்டும். நீதிக்கான வேட்கை கொள்பவர்கள் ஆண்டவரின் வழிகளைப் பின்பற்றுவதன் வழியாகவே அதைப் பெற்றுக்கொள்ள முடியும். தங்களுடைய தீய வழிகளைப் பின்பற்றுவோர் பாவத்தையே கொணர்கின்றனர். இயேசு நம் நடுவில் அமைதியை விதைக்க வருகிறார். அவரை நோக்கிப் பயணம் செய்யும் நாம் அமைதியை நம்மில் ஏந்த வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்மை விழித்திருக்க அழைக்கிறார் இயேசு (மத் 24:42). விழித்திருத்தல் என்பது கண்களைத் திறந்திருப்பது அல்ல. மாறாக, விடுதலை பெற்ற இதயத்துடன், சரியான திசையை நோக்கி நம் கண்களைத் திருப்பி, கொடுப்பதற்கும் பணி செய்வதற்கும் தயாராகக் காத்திருப்பது. நாம் விழித்தெழ வேண்டிய தூக்கங்கள் எவை? கண்டுகொள்ளாத்தன்மை, தற்பெருமை, உறவுகளுக்கு நம்மையே மூடிக்கொள்ளும் மனநிலை, மற்றவர்களுக்குப் பொறுப்பேற்காத உளப்பாங்கு, தேவையில் உள்ளவர்களைக் கண்டுகொள்ளாத நிலை ஆகியவையே. விழித்திருத்தல் என்பது தேவையில் இருப்பவர்கள் கேட்பதற்கு முன்னரே அவர்களுக்கு உதவுகின்ற தயார்நிலையையும் குறிக்கிறது.

நம் சிந்தனைக்கு: (அ) இத்திருவழிபாட்டு ஆண்டுக்கென நான் எடுக்கும் வாக்குறுதி என்ன? ஆன்மிக வாழ்வு வளர்ச்சிக்கு இப்புதிய ஆண்டை நான் எப்படிப் பயன்படுத்திக்கொள்வேன்? (ஆ) இயேசுவின் அன்றாட வருகையை நான் அறியா வண்ணம் வாழக் காரணங்கள் எவை? (இ) இயேசு என்னும் ஆலயத்தை நோக்கிய என் வாழ்க்கைப் பயணம் எந்த நிலையில் இருக்கிறது? அந்த மலைப் பயணத்தில் நான் எதிர்கொள்ளும் தடைகள் எவை? (ஈ) நான் என் அயலாரின் தேவைகளுக்கு விழித்திருக்கிறேனா?

மறையுரைக் குறிப்பு 2 (திருத்தந்தை பிரான்சிஸ், மூவேளை செபம், 27 நவம்பர் 2016)
அன்றாட வாழ்க்கையும் ஆண்டவரின் வருகையும்
அன்றாட வாழ்க்கையின் நடுவே ஆண்டவரின் வருகை நடந்தேறுகிறது என மொழிகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்கு முன்னர் மக்களின் வாழ்க்கை இயல்பாக இருக்கிறது. தங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதில் - உண்பது, குடிப்பது, பெண் எடுப்பது, பெண் கொடுப்பது – அவர்கள் கருத்தாய் இருக்கின்றனர். ஆனால், திடீரென ஒரு நாள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவர்கள் அழிந்துபோகின்றனர். பெரிய ஆபத்துகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் நடக்கும் முன்பும் ஒரு மாதிரியான அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கையில் நாம் இருக்கிறோம். அன்றாடப் பணிகள் மற்றும் பயணங்களில் மும்முரமாய் இருக்கிறோம். திடீரென வாழ்க்கை தலைகீழாகத் தடம் புரள்கின்றது. நற்செய்தி வாசகம் நம்மை அச்சுறுத்தவில்லை. மாறாக, வாழ்வின் மறுபக்கத்திற்கு நம் கண்களைத் திறக்கின்றது. அந்த மறுபக்கம் குறித்த பார்வையே நம் வாழ்க்கையைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவதுடன், அன்றாட வாழ்க்கையை நன்றாகவும் பயனுள்ளதாகவும் வாழ நம்மைத் தூண்டுகிறது. எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ, அதை அதை அப்போது செய்யவும், வாழ்வின் முதன்மையானவற்றை முதன்மையற்றவை ஆக்கிரமித்துக்கொள்ளா வண்ணம் காத்துக் கொள்ளவும் அறிவுறுத்துகிறது. நம்மைச் சந்திக்க வருகின்ற ஆண்டவரோடு நாம் கொள்ளும் உறவே ஒவ்வொன்றைப் பற்றிய புதிய புரிதலை நமக்குத் தருகிறது.

இந்தப் புரிதலைப் பெறுகின்ற நாம் மயக்கநிலையிலிருந்து எழுகின்றோம். இந்த உலகின் பொருள்கள் நம்மைக் கட்டுப்படுத்தாதபடி விழித்துக்கொள்கிறோம். ஆனால், அவை நம்மைக் கட்டுப்படுத்துமாறு அவற்றுக்கு நம்மையே நாம் கையளித்தால் ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ளத் தவறிவிடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு நாள் அக்கறையும் ஆண்டவரின் வருகை என்னும் அக்கரை நோக்கி நம்மை வழிநடத்த வேண்டும். அந்த நேரத்தில், 'இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விடப்படுவார்' (மத் 24:40). அவர் எந்த நேரம் வருவார் என்று நமக்குத் தெரியாததால், அவரோடு வழிநடக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நம் இதயத்தின் எல்கைகள் இத்தவக்காலத்தில் விரிவுபெறட்டும். அன்றாட வாழ்வு தரும் புதுமை மற்றும் புத்துணர்ச்சியை நாம் பற்றிக்கொள்வோம். உறுதியானவை என நாம் கருதுபவற்றையும், நம்மையே அடிமையாக்கும் எண்ணங்களையும் விடுப்போம். ஏனெனில், ஆண்டவரின் வருகை பற்றிய நேரம் உறுதிசெய்யப்பட இயலாதது. உறுதியற்ற நிலையில் நம்மை எதிர்கொள்ளும் அவர் வாழ்வின் அழகானவற்றை நமக்குக் காட்டுகிறார்.

நம் சிந்தனைக்கு: (அ) நாளின் ஒவ்வொரு பொழுதையும் கருத்தாய் வாழ நான் கற்றுள்ளேனா? (ஆ) என் வாழ்வின் முதன்மைகள் எவை? அவற்றை நான் சரியான நிலையில் வைத்துள்ளேனா? (இ) என் பொருள், உறவு, பணி போன்றவை போதும் என நினைத்து அனைத்தையும் உறுதியாக்கிக்கொள்ள விழைந்து சோர்வடைகின்றேனா?

மறையுரைக் குறிப்பு 3 (திருத்தந்தை பிரான்சிஸ், மூவேளை செபம், 1 டிசம்பர் 2013)
புதிய பயணமும் இலக்கும் எதிர்நோக்கும்
புதிய திருவழிபாட்டு ஆண்டில் இறைமக்களாகிய நாம் புதிய பயணத்தைத் தொடங்குகின்றோம். இப்பயணம் பணியாக மலர்ந்து அனைத்து மனிதர்களையும் சென்றடைகின்றது.

ஆனால், நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம்? நம் பயணத்தின் பொது இலக்கு என்ன? 'ஆண்டவரின் வழிகளில் நாம் நடப்போம்' என்று புதிய பாதையை மொழிகின்ற எசாயா, நம் இலக்காக ஆண்டவரின் மலை இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். எருசலேம் இறைவனின் திருமுகத்தின், அவருடைய திருச்சட்டத்தின் அடையாளமாக இருந்தது. புதிய எருசலேம் ஆலயமாகத் தம்மையே முன்மொழிகிறார் இயேசு (காண் யோவா 2). மேலும், இறுதி நாள்களில் போர்க் கருவிகள் அனைத்தும் தொழில் கருவிகளாக மாற்றம் பெறும் என்றும் இறைவாக்குரைக்கின்றார் எசாயா. அந்த நாள் மிகவும் அழகான நாளாக இருக்கும். ஏனெனில், மனிதர்கள் ஒருவர் மற்றவரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, வளப்படுத்தத் தொடங்குவர். அத்தகைய அமைதியான நாளை எதிர்நோக்குதல் நலம்.

இப்பயணம் ஒருபோதும் முடிவுக்கு வருவதே இல்லை. ஒவ்வொரு நாளும் இப்பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இந்த இலக்கை ஒவ்வொரு நாளும் நாம் அடைய வேண்டும். நாம் கொண்டிருக்கும் எதிர்நோக்கு நமக்கு ஏமாற்றம் தருவதில்லை.

நம் சிந்தனைக்கு: (அ) என் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு என்ன? (ஆ) நான் பேசும் சொற்கள், என் செயல்கள் ஆகியவை கூடச் சில நேரங்களில் போர்க் கருவிகள் போல இருக்கலாம். அவற்றை நான் தொழிற்கருவிகளாக மாற்றுவது எப்படி? (இ) என் வாழ்வின் எதிர்நோக்கு என்னும் திரி அணைந்து போகிறதா? என் வாழ்வின் தேக்கநிலை கண்டு நான் சோர்வடைகின்றேனா?

நிறைவாக,
'உறக்கம்' என்னும் உருவகத்தை நம் வாழ்க்கை நிலைக்கப் பயன்படுத்துகின்ற பவுல் (இரண்டாம் வாசகம்), நாம் எழ வேண்டிய கட்டாயத்தையும், இரவுக்குரிய செயல்களை விடுத்து, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களையும் அணிந்துகொள்ள நம்மை அழைக்கின்றார். பகலில் நடப்பது போல மதிப்புடன் நடக்கவும், ஊனியல்பின் செயல்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகின்றார்.

இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கிறது. திரியை ஏற்றும் நாம் இயேசு கிறிஸ்துவை, அவரின் மதிப்பீடுகளை, அணிந்துகொள்வோம்.

'ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்னும் அழைப்பைக் கேட்ட திருப்பாடல் ஆசிரியர் தான் அகமகிழ்ந்ததாக மொழிகிறார் (பதிலுரைப்பாடல், திபா 122). புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் நுழையும் நம் உதடுகளிலும் உள்ளங்களிலும் இதே மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.

திருவருகைக் கால வாழ்த்துக்களும், செபங்களும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விழிப்பாயிருங்கள்!

திருவருகைக்காலம் என்பது 'Advent' என்னும் இலத்தீன் மொழிப் பெயர்ப்பிலிருந்து "வருகை" எனப் பொருள் பெறுகின்றது. திருவருகைக்காலம் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்க காலம் ஆகும். இன்றைய நாளில் திருவழிபாட்டில் புத்தாண்டை கொண்டாடுகிறோம். எனவே இன்றைய நாள் நம்முடைய ஆன்மீக வாழ்வை புதுப்பித்து விழிப்போடு வாழ அழைப்பு விடுக்கின்றது. திருவருகைக்காலம் இரண்டு வகையான இயல்பைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு பெருவிழாவைத் தகுதியான உள்ளத்தோடு கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. இரண்டாவதாக ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்தி அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுக்கின்றது.

நம்முடைய அன்றாட வாழ்வில் விழிப்பாய் இருந்து ஆயத்தப்படுத்துதல் என்பதைச் சிந்திக்கின்ற பொழுது பல நேரங்களில் நாம் விழிப்போடு இல்லாததால்தான் வாழ்வில் பல துன்பங்களையும் தோல்விகளையும் சந்திக்கின்றோம் என்பதை உணர முடிகிறது. எனவேதான் ஆண்டவர் இயேசு இன்றைய நாளிலே ''விழிப்பாயிருங்கள். ஏனெனில் ஆண்டவர்  எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' என்று இன்றைய நற்செய்தியில் விழிப்போடு இருத்தலின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார். நம்மைப் படைத்த கடவுள் நாம் தூயோர்களாக வாழ்ந்து மீட்பின் கனிகளைச் சுவைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதற்கு அடிப்படையாக இருப்பது விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்துவதாகும். தாய்த்திருஅவையால் இதற்காகக் கொடுக்கப்பட்ட உன்னதமான காலம்தான் இந்த திருவருகைக்காலம்.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும்.அதுமட்டுமல்லாது திருடன் வருவதாகக் கேள்விப்பட்ட பின் அவனிடமிருந்து தன் உடைமைகளைக் காப்பாற்றி கொள்ள ஒரு வீட்டு உரிமையாளர் எவ்வளவு விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்பாரோ அந்த அளவுக்கு நாம் கண்ணும் கருத்துமாக இருந்து நம் ஆன்ம வீட்டைக் காத்துக்கொண்டு ஆண்டவரை எதிர்கொள்ள வேண்டும்.

விழிப்பாக இருத்தல் என்பது எந்த நேரத்திலும் மனம் தளராது, எதிர்பார்ப்புடன் வாழ்தலே ஆகும். நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இடையூறுகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் நாம் நம் ஆண்டவர் இயேசு விட்டுச்சென்ற நற்செய்தி மதிப்பீடுகளின் படி வாழ்ந்து இறையாட்சிக்கு சான்று பகர்ந்து நம்மையே ஆயத்தப்படுத்தும் பொழுது மண்ணுலகில் நாம் துன்பப்பட்டாலும் விண்ணுலகில் மிகுந்த கைமாறு பெற்று புனிதரின் கூட்டத்தில் இணைந்து கடவுளை நேருக்கு நேராக கண்டு நிறைவான வாழ்வு பெற முடியும். இத்தகைய நிலையை அடைந்து மீட்பின் கனியை சுவைக்க கடவுள் கொடுத்த வாய்ப்புதான் இந்த உலக வாழ்வு. இந்த உலக வாழ்வு ஒரு நிலையற்ற வாழ்வு. இந்த நிலையற்ற வாழ்விலே நாம் இவ்வுலகம் சார்ந்த பணம் பட்டம் பதவி ஜாதி இன வேறுபாடு போன்றவற்றிற்கு மதிப்பளிக்காமல் இறையாட்சியின் மதிப்பீடான மனிதத்திற்கும் மனித நேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நாம் மீட்பின் கனியைச் சுவைக்க முடியும். இதன் வழியாக கடவுளுக்கு உகந்த வகையிலேயே வாழ்ந்து விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 

 விழிப்போடு எவ்வாறு ஆயத்தப்படுத்துவது? என்பது பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமைகளை செய்வது வழியாக நான் விழிப்போடு இருக்க முடியும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கடமைகளை செய்வதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் மாணவராக இருந்தபொழுது போதிய பணம் இல்லாததால் படிக்கக் கூட வசதி இல்லாமல் இருந்தார். ஆனால் அவற்றை தடையாக கருதாமல் எப்படியாவது படித்து வாழ்வில் முன்னேறுவேன் என்ற ஆழமான நம்பிக்கையோடு தன்னுடைய கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்தார். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினார். இதன் வழியாக மிகச் சிறந்த வெற்றியாளராக மாறினார். இதுதான் மனித வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றது. நம்முடைய கிறிஸ்தவ வாழ்விலும் நமக்கு கொடுக்கப்பட்ட கடமைகளில் உண்மையோடும் நேர்மையோடும் செயல்படுகின்ற பொழுது, நிச்சயமாக வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 

இரண்டாவதாக நம் குறைகளை அறிந்து விழிப்போடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நாம், நம்முடைய பாவங்களை ஏற்று மனம் வருந்த முயற்சி செய்வோம். தொடக்கத்தில் காயின் தான் செய்த பாவத்தை கடவுளுக்கு முன்பாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. எனவே கடவுளின் ஆசியை இழந்தார். காயீனைப் போல இன்றைய காலக்கட்டத்தில் நம்மோடு வாழக்கூடிய எத்தனையோ மனிதர்கள் தன்னுடைய குற்றங்களை ஏற்காமல் தங்களையே நேர்மையாளராக நியாயப்படுத்தி வருகின்றனர்.நாமும் கூட பல வேளைகளில் இம்மனநிலையைப் பெற்றிருக்கிறோம். இத்தகைய நிலையை அகற்றும் பொழுது தான் நாம் கடவுளுக்கு உகந்த வகையில் நம்மை ஆயத்தப்படுத்த முடியும்.

மூன்றாவதாக கடவுளோடு இணைந்திருத்தல் வழியாக நாம் விழிப்போடு வாழ முடியும். "கிளைகள், திராட்சைச் செடியோடு இணைந்திராவிடில் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தால் அன்றி கனி தர இயலாது " (யோ: 15: 4) என்ற இறைவசனம் கடவுளோடு இணைந்திருப்பது வழியாக நாம் நம்மையே அவரின் வருகைக்காக ஆயத்தப்படுத்த முடியும் என்ற சிந்தனையை வழங்குகின்றது. நம்முடைய செபத்தின் வழியாகவும் தவத்தின் வழியாகவும் மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து அவருக்கு வந்த பிள்ளைகளாக நாம் வாழ முடியும். எனவே திருவருகைக் காலத்தில் நம்முடைய செப வாழ்வை அதிகப்படுத்துவோம். நம்முடைய அன்பை வெளிப்படுத்தி நம்மோடு வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்து அவர்களின் மகிழ்ச்சியில் பாலன் இயேசுவை கண்டு அகமகிழ முயற்சி செய்வோம். தவ வாழ்வின் வழியாக கடவுளின் உடனிருப்பை உணர்வோம் . இவ்வாறாக கடவுளோடு இணைந்திருப்பதன் வழியாக கடவுளின் வருகைக்காக விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்த முடியும். 

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கின்ற நாம், விழிப்போடு நம்மை தேடி மீட்க வருகின்ற ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு நம்மையே ஆயத்தப்படுத்த முன்வருவோம். "கடந்தது கடந்துவிட்டது, எதிர்காலம் நமது கையில் இல்லை, நிகழ்காலம் நம்முடையது" என்ற வார்த்தைகளைப் புரிந்து கொண்டு நாம் பிறருக்குப் பலன் கொடுக்கும் வகையில் அன்போடு நன்மைகள் பல செய்வோம்.இரண்டாம் வாசகம் கூறுவது போல இயேசுவை அணிந்து கொள்வோம். அப்பொழுது நம்மை மீட்க வருகைதரும் இயேசுவின் மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுக்க முடியும். அதற்கு நம்முடைய சிந்தனை, சொல், செயல், உடல், ஆவி அனைத்தையும் தூய்மையாக வைத்திருந்து விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்துவோம். இத்தகைய மனநிலையோடு வாழும் பொழுது ஆண்டவர் இயேசுவின் வருகை எப்பொழுது வந்தாலும் நமக்கு பயம் இல்லை. வாழுகின்ற சான்று பகரக்கூடிய வாழ்வுக்கு நிச்சயமாக இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் கைமாறு உண்டு. எனவே விழிப்போடு நம்மையே கடவுளுக்கு உகந்த வகையில் ஆயத்தப்படுத்த தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல் :
எங்களை மீட்க வந்த பாலன் இயேசுவே! எங்களுடைய மனித பலவீனத்தை நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் அவற்றை வெற்றி கொண்டு உமக்கு உகந்த வகையில் எங்களையே விழிப்போடு ஆயத்தப்படுத்த தேவையான இறையருளை தாரும். உமது வருகையின் வழியாக இந்த உலகிற்கு நீர் கொண்டு வந்த அன்பு, நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, மீட்பு போன்றவற்றை நாங்களும் பெற்று பிறரும் பெற்று நிறைவான மகிழ்வைப் பெற்றிடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser