மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 19-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1 அரசர்கள் 19:4-8 | எபேசியர் எபேசியர் 4:30–5:2 |யோவான் 6:41-51

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்

arul

நற்கருணை

ஒரு குகையிலே வாழ்ந்த ஒரு ஞானி சாகாமைக்கு மருந்து கண்டு பிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கூடும்படியும் விளம்பரம் செய்தார். கடல் அலையென ஏராளமான மக்கள் வந்து குவிந்தார்கள். ஞானியார் வந்தவுடன், மக்கள் பரபரப்போடு அவர் சொல்வதைக் கேட்க ஆவலோடு இருந்தார்கள். மக்கள் கூட்டத்தைப் பார்த்து நீங்கள் இறவாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பிறவாமல் இருந்திருக்க வேண்டும் என்றார். வந்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலைகுனிந்து வீடு திரும்பினார்கள்.

அருமையான சகோதரனே! சகோதரியே! சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று வந்தே தீரும். இது இயற்கையின் நியதி. காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூன்று வகையான மருந்துகளை வழங்குகிறார். இந்த மூன்றையும் நமதாக்கிக் கொண்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம். சாவு நம்மைப் பாதிக்காது.

சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருந்து என்ன? அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியிலே என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா. 6:47). மேலும் வாசரை உயிர்த்தெழச் செய்யும் முன் மார்த்தாவிடம் சொன்னார் : உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா. 11:25-26).

சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து
அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும்.

என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் (யோவா. 8:51) என்று இயேசு கூறுகின்றார். நான் கூறிய வார்த்தைகள் ஆவியும் உயிரும் ஆகும் (யோவா. 6:63) என்கிறார். நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. (யோவா. 6:68).

சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து
அவருடைய திருவுடலாகும். இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவா. 6:51).

பகுதி - II
ஆண்டவருடைய அருள் வாக்கைக் கேட்டு அதைச் சுவைத்த பின்னரே ஆண்டவருடைய திருவுடலாகிய நற்கருணையை உட்கொள்வது முறையாகும். எனவேதான் ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முதல் பகுதியாகவும் - நற்கருணை வழிபாடு இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இந்த நற்கருணையானது இறைவனின் திருப்பிரசன்னம், ஒரு திருப்பலி, அதோடு ஒரு திருவுணவு என்ற மூன்று முக்கிய பரிமாணங்களை உள்ளடக்கியது.

இன்றைய முதல் வாசகத்தைப் பாருங்கள் (1 அரச 19:4-8)
எலியா தீர்க்கதரிசி மனச்சோர்வினால் சாக விரும்புகிறார். இருப்பதைவிட இறப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து உறங்கும் வேளையில் வானதூதர் இரண்டு முறை அவரைத் தட்டி எழுப்பி எழுந்து சாப்பிடு என்று கூறி அப்பமும் தண்ணீரும் கொடுக்கிறார். எலியா அந்த உணவினால் வலிமைப் பெற்று நாற்பது நாட்கள் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைகிறார். எலியாவுக்கு உணவு தேவைப்பட்டது போல் பயணம் செய்யும் திருச்சபையில் இருக்கும் நமக்கும் உணவு தேவைப்படுகிறது. நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஏற்படும் இளைப்பு, களைப்பு, ஏக்கம், மனச் சோர்வை நீக்க ஆண்டவர் நமக்கு வழங்கும் பயண உணவு அவருடைய அருள்வாக்கும் அவரது திருவுடலுமாகும். இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாத வகையில் இணைந்துள்ளது.

உம் சொற்கள், என் நாவுக்கு எத்துணை இனிமையானவை. என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை (தி. பாடல் 119:103) என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார்.

ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (தி. பா. 34:8) என்றும் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர் கொடுத்தது முதலில் அருள்வாக்கு, மறைநூலை விளக்கினார். அதன் பின்னரே அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தார். அவர்கள் இயேசுவைக் கண்டு கொண்டார்கள் (லூக். 24:25-31).

முடிவுரை:
இயேசுவை நாம் உண்டால் மட்டும் போதாது. நாம் இயேசுவாக மாற வேண்டும். என்னை உண்போர் என்னால் வாழ்வர் (யோவா. 6:57) என்ற வார்த்தை அந்த உண்மையை உணர்த்துகிறது. வாழ்வது நானல்ல. இயேசுவே என்னில் வாழ்கிறார் (கலாத். 2:20) என்று கூற வேண்டும். இயேசுவாக மாறுவது என்றால் மனக்கசப்பு, சீற்றம், சினம், கடுஞ்சொல் , தீயவை தவிர்த்து பிறர்பால் பரிவு காட்டி மன்னித்து வாழ அழைக்கப்படுகிறோம். இயேசு விரும்பிய இறையாட்சியை நாம் வாழும் இம்மண்ணில் இப்போதே மலரச் செய்ய நாம் இயேசுவாக மாற வேண்டும். இதற்குத் துணையாக இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு, அவர் தந்த அருள்வாக்கைக் கடைப்பிடித்து, அவரது திருவுடலை உண்டு, சாகா வரம் பெற்றவர்களாக நாம் வாழ்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
antony

இதோ ஓர் அற்புத மருந்து

ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழும் ஒருவகையான காட்டுப்பூனைகளுக்கும், காடுகளில் வாழும் நஞ்சு நிறைந்த பாம்புகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்கும். எப்பொழுதெல்லாம் சண்டை நடக்கின்றதோ அப்பொழுதெல்லாம் காட்டுப்பூனைகள் வெற்றி பெறும்.

தன்னை பாம்பு கடித்துவிட்டால், பூனை உடனே ஓடிப்போய் ஒரு குறிப்பிட்ட புல்லின் மீது புரளும். அந்தப் புல் அந்தப் பூனையின் மீது பட்ட காயத்தின் வழியாக நஞ்சை உறிஞ்சி எடுத்துவிடும்; பூனை பிழைத்துக்கொள்ளும். போரிலே வெற்றிபெறும் வரை, காயப்படும்போதெல்லாம், பூனை புல்லைப் பயன்படுத்திக்கொள்ளும்.

பல நேரங்களில் நம்மையே நாம் காயப்படுத்திக்கொள்கின்றோம்; அல்லது மற்றவர்களால் காயப்படுத்தப்படுகின்றோம். இப்படி காயப்படும்போது அந்தக் காயங்களால் ஏற்படும் வலியிலிருந்து. பாதிப்புகளிலிருந்து விடுதலை அடைய ஓர் அருமையான வழி, இனி வாழ்பவன் நானல்ல ; கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் (கலா 2:20) என்று கூறிய புனித பவுலடிகளாரைப் போல நற்கருணை ஆண்டவரோடு ஐக்கியமாவதாகும்.

நற்கருணை ஆண்டவர் ஓர் அற்புத மருந்து, மூலிகை. அன்று பாலை நிலத்தில் கிடைத்த உணவு (முதல் வாசகம்) மக்களின் உடல் பசியை மட்டும்தான் தீர்த்தது. ஆனால் நம்மை எல்லா விதமான பாதிப்புகளிலிருந்தும் காக்கும் ஆற்றல் இயேசுவின் உடலுக்கு உண்டு (யோவா 2:1-11, மத் 9:27-31, லூக் 7:36-50, மாற் 1:21-28, யோவா 11:1-44). இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் காட்டும் வழியில் நம்மை நடக்க வைக்கும் சக்தி நற்கருணைக்கு உண்டு.

மேலும் அறிவோம் :

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் குறள்; 217

பொருள் : உலக நலம் பேணும் பெருந்தகையாளனிடம் செல்வம் திரளுமானால், அது பூ, இலை, தளிர், காய், கனி, வேர், பட்டை ஆகிய அனைத்து உறுப்புகளாலும் பிணி போக்கும் மருந்து மரத்துக்கு இணையானதாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
iraj

பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு ஞானி, சாகாமைக்கு அவர் மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட ஒரு வளாகத்தில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வரும்படியும் விளம்பரம் செய்தார். கடல் அலையென பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர், ஞானியார் அவர்களைப் பார்த்து, நீங்கள் இறவாமல் இருக்க வேண்டு மென்றால், நீங்கள் பிறவாமல் இருந்திருக்க வேண்டும்" என்றார். வந்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலை குனிந்து விடு திரும்பினர்.

சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்று ஒன்று இருந்தே தீரும். இது இயற்கையின் நியதி; காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூவகையான மருந்தை நமக்கு வழங்குகிறார். இம்மூன்றையும் இணைத்துச் சாப்பிட்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம்; சாவு நம்மைப் பாதிக்காது.

சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருத்து: அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியில், என்னை நம்புவோம் நிலை) வாழ்வைக் கொண்டுள்ளனர்" (யோவா 6:47) எனகிறார். மேலும், இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் மாத்தாவிடம், *உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. . . என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" (யோவா 11:25 28) என்று திட்டவட்டமாகக் கூறினார்.

சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து: அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். "என் வார்த்தையைக் கடையிடிப்போர் என்றுமே சாக மாட்டார்கள" (யோவா 3:51).

சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து: அவருடைய திருவுடலாகும், இன்றைய நற்செய்தியில், வாழ்வு தரும் உணவு நானே ... உண்பவரை இறக்காமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே" (யோவா 6:48 - 50) என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார்,

நற்கருணையை உட்கொள்ளுமுன் கிறிஸ்துவை நம்பி, அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். கிறிஸ்துவை நம்பி, அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதின் உச்சக் கட்டமே நற்கருணையை உட்கொள்வதாகும். கிறிஸ்துவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காமல், அவருடைய திருவுடலுக்கு மட்டும் மதிப்புக் கொடுத்தால் போதுமா? என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் கால் வீட்டாரும் ஆண்டவருக்கே கோழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்,

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைநரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)
குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல. நயவஞ்சகர்கள்.

ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், "நீ மாலையானால் நான் அதில் மலராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலா வேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடி யாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருணை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவளுக்குள் அலகை நுழைந்தது: நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை, இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக, நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஒடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
lourd

வாழ்க்கைக்கு இலக்கு வேண்டும்

ஜெர்மனி நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றார்கள். அவர்கள் பயணம் செய்த விமானம் பனிமலை ஒன்றில் விபத்துக்குள்ளானது. ஏழு பேர் இருந்த அந்த விமானத்தில் ஐந்துபேர் இறந்துவிட்டனர். இருவர் உயிர் தப்பினர். இந்த விமானம் எங்கு விழுந்து நொறுங்கியது என்பதை இரண்டு மாதங்களுக்குப் பின்தான் ஜெர்மனி அரசால் கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு உயிரோடிருந்த இரண்டு பேரையும் மீட்டு நாட்டுக்கு அழைத்துச் சென்றபோது பலர் இவர்களை நாட்டுக்குள் நுழையவிடக்கூடாது என்றார்கள். காரணம் இந்த இரண்டு மாதங்களும் அவர்கள் உணவு கிடைக்காத நிலையில் தங்களோடு இருந்து இறந்துபோன தங்கள் நண்பர்கள் ஐவரின் உடலையும் தின்று தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். மனித இறைச்சியை உண்ட இவர்களை எப்படி நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்வது என்பதுதான் பிரச்சனை.

' இந்தச் சூழ்நிலையில் இறந்துபோன வீரர்களின் பெற்றோர்கள் * ஒன்றிணைந்து ஓர் அறிக்கை விட்டனர். அதில் இறந்துபோன எங்கள் பிள்ளைகளை நாங்கள் இந்த உயிரோடு இருக்கும் விளையாட்டு வீர்களில் காண்கிறோம். எங்கள் பிள்ளைகள் இவர்களில் உயிர் வாழ்வதாகக் கருதுகிறோம் என்று சொன்னதும் மக்கள் அந்த விளையாட்டு வீரர்களை ஏற்றுக் கொண்டார்களாம்.

இங்கே மனித இறைச்சியை உண்டு அதனால் இறக்காமல் உயிர்வாழ்ந்த ஒரு நிகழ்வைப் பார்க்கின்றோம். ஆனால் வரலாற்றில் அந்த விளையாட்டு வீரர்கள் இறப்பது உறுதி. இயேசு இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்'' (யோ. 6:51) என்று அழுத்தமாகக் சொல்கிறார். வழக்கமான முணுமுணுப்பு., எனினும் தன் உடல் சாகா வரம் தரும் உணவு என்கிறார் இயேசு.

சாகா வரம் தரும் உணவு என்றால் என்ன பொருள்? நற்கருணை அருந்துபவர்கள் எல்லாரும் இந்த உடலில் சாகமாட்டார்கள் என்றா பொருள்? "உங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே” (யோ. 6:49, 50). உங்கள் முன்னோர்கள் மன்னாவை உண்டனர். ஆயினும் இறந்தார்கள். அதாவது மன்னாவை உண்டும் தங்கள் இலக்கான வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையவில்லை. மோசே உள்பட எவருக்கும் அந்தப் பேறு கிட்டவில்லை. ஆனால் இயேசுவை உண்பவர்கள் இலக்கை அடைவார்கள்.

வாழ்க்கை என்பது இலக்கு நோக்கிய பயணம். அப்படியானால் பயணத்தின் இலக்கு எது? பயணத்தின் தன்மை என்ன? பயணத்துக்கு வலிமை தருவது எது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இன்றைய வழிபாடு.

1. பயண இலக்கு. விண்ணகம் நோக்கியது நம் வாழ்க்கைப் பயணம். "நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை. வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம் " (எபி. 13:!4). இவ்வுலகில் நாம் வழிப்போக்கர்களே!முதல் வாசகத்தில் வரும் இறைவாக்கினர் எலியாவின் பயணம் மனித வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முன்னடையாளமே! அவர் எங்கே போகிறார்? ஒரேபு மலையை நோக்கி, அதாவது சீனாய் மலை நோக்கி. அங்குதானே மோசே கடவுளைச் சந்தித்தார்!

பொதுவாக மலைகள் கடவுளின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன. குன்றுதோறும் குடியிருக்கும் குமரா என்றுதானே பிற சமயத்தினர் கூடத் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். ஒரேப் மலையை நோக்கி எலியா செல்கிறார் என்றால் கடவுளை நோக்கிப் பயணிக்கிறார் என்று பொருள். நமக்கும் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு கடவுளே! 'ஆடி அடங்கும் வாழ்க்கை ஆறடிக் குழிக்குள்ளே' என்று நாம் வாழக்கூடாது. ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ' என்று விரக்திக் கீதம் பாடக்கூடாது. இதையே இயேசு நற்செய்தியில் “நிலை வாழ்வு” என்று குறிப்பிடுகிறார். இயேசுவை உண்பவர்கள் இலக்கை அடைவார்கள்.

2. பயணத்தின் தன்மை. அது பாலைவனப்பாதை. இறைவாக்கினர் எலியா தன் உயிரைக் காத்துக் கொள்ள மேற்கொண்ட சாவுப்பயணம். எதிர்ப்புக்களையும் இடற்பாடுகளையும் இழிவுகளையும் ஏளனங்களையும் எதிர்கொள்ள மனவலிமை இழந்த விரக்திப் பயணம். இறைவனை அடையக்கூட இறைவனின் அருள் வேண்டும். சொந்த முயற்சியாலும் முனைப்பாலும் சொர்க்கத்துக்கான கோபுரம் கட்ட முயன்றவர்களின் கதி (தொ.நூ. 11) நாம் அறிந்ததுதானே!இயேசுவே நம் வழி. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாயன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை ” (யோ. 14:6).

நாம் நமக்காக மட்டும் படைக்கப்படவில்லை. இறைவனுக்காகவும் நாம் சார்ந்த சமுதாயத்திற்காகவும் படைக்கப்பட்டுள்ளோம். ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உண்டு. எனவே “எழுந்து சாப்பிடு. ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்'' என்று வானதூதர் அப்பமும் தண்ணீரும் கொடுக்க "அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்” (1 அரசர் 19:7-8).

3. பயணத்துக்கான வலிமை. வாழத் தேவையான வலிமையையும் நம்பிக்கையையும் தருவது. நோயில் பூசுதலில் “வழி உணவைப் பெற்றுக் கொள்" என்று சொல்லி நற்கருணை வழங்கப்படுகிறது. அது வழி உணவு மட்டுமல்ல. பயண முடிவில் உயிர்ப்பின் உறுதிப்பாடு மகிமையின் அச்சாரம். “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்” (யோ. 6:54).

புனித பிரான்சிஸ் சலேசியார் கூறுவார்: “வலிமை வாய்ந்தோர் (புனித வாழ்வு நடத்துவோர்) வலிமை இழக்காமல் இருக்கவும். வலிமையற்றோர் (ஆன்ம வாழ்வில் பலவீனர்கள்) வலிமை பெறவும் அடிக்கடி நற்கருணை உட்கொள்ள வேண்டும்”. இறைவாக்கினர் எலியாவுக்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நற்கருணைக்கு முன்னோடி நிகழ்வுகள் அவை கடவுளே நேரடியாக இருமுறை எலியாவுக்கு உணவளிக்கிறார்.

1. யோர்தானுக்கு அப்பால் கெரீத்து என்ற ஓடைக்கருகில் காகங்கள் வழியாக அப்பமும் இறைச்சியும் (1 அர. 17:6).
2. சூரைச் செடியின் கீழ் தளர்ந்து படுத்திருந்த போது வான தூதர் வழியாக அப்பமும் தண்ணீரும் (1 அர. 19:7-8).

எலியா தாமே வல்லமையோடு உணவு வழங்குவது இருமுறை.
1. சாரிபாத் கைம்பெண்ணின் வீட்டில் அள்ள அள்ள அமுத சுரபி போல (1 அர. 17:14).
2. குகைகளில் தங்க வைக்கப்பட்ட இறைவாக்கினர் நூறு பேருக்கு (1 அர. 18:4).

பயணத்தின் இலக்கும் இயேசுவே. பயணத்தில் வழி நடத்துபவரும் அவரே. வலிமையாக இருப்பவரும் அவரே.
சாகாமைக்கு ஒரே மருந்து பிறவாமை. பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருந்தே தீரும். இது இயற்கையின் நியதி. ஆனால் இயேசு சாகாமைக்கு மூன்று வகையான மருந்தை வழங்குகிறார்.
மருந்து 1 : இயேசுவில் நம்பிக்கை கொள்வதாகும். "என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்” (யோ. 6 : 47).
மருந்து 2 : இறைவார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். "என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்" (யோ . 8: 51).
மருந்து 3 : இயேசுவின் திருஉடலை உண்பதாகும். “உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே” (யோ. 6 : 50).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
maria

“கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்”

நிகழ்வு
இங்கிலாந்தைச் சார்ந்த மிகப்பெரிய நற்செய்திப் பணியாளர் ஜீ.சி. மோர்கன் (G.C. Morgan 1863-1945). கடவுளின் வார்த்தையை சிறந்த விதமாய்க் கற்பித்த இவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். இந்த நான்கு பேருமே தங்கள் தந்தையைப் போன்று கடவுளின் வார்த்தையை மிகுந்த வல்லமையோடு மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள்.

ஒருநாள் செய்தியாளர் ஒருவர் மோர்கனின் நான்காவது மகனான ஹார்வரிடம், “உங்களுடைய தந்தையோடு சேர்த்து உங்களது குடும்பத்தில் ஐந்து பேர் கடவுளின் வார்த்தையைக் கற்பித்து வருகின்றீர்கள். இதில் யார் சிறந்த முறையில் கடவுளின் வார்த்தையைக் கற்பித்து வருகின்றார் அல்லது உங்களில் யார் சிறந்த போதகர் என்று நினைக்கிறீர்கள்?” என்றார். இதற்கு ஹார்வர்ட் மிகவும் உறுதியான குரலில், “என்னைப் பொறுத்தவரையில், கடவுளின் வார்த்தையை எங்கள் ஐந்து பேரையும்விட, என் தாய்தான் சிறந்த விதமாய்க் கற்பித்து வருகின்றார் என்று சொல்வேன். ஏனெனில், அவர்தான் எங்கள் அனைவர்மீதும் அன்பையும் பாசத்தையும் பொழிந்து வருகின்றார். எங்களுக்குத் தேவையானதை அவர் தருகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தன் வாழ்வால் எங்களுக்குக் கடவுளின் வார்த்தையைக் கற்பிக்கின்றார். அதனால் அவரே எங்கள் எல்லாரையும் விட சிறந்த போதகர்” என்றார்.

(தன்) தாய்தான் சிறந்த போதகர், ஆசிரியர். அவரே கடவுளின் வார்த்தையை மிகச் சிறந்த விதமாய்க் கற்பிக்கின்றவர் என்று ஹார்வர்ட் சொன்ன வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை. பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்” என்ற செய்தியை நமக்குத் தருகின்றது. கடவுள் நமக்குக் கற்றுத் தருகின்றபொழுது, அதைக் கேட்கின்ற நமது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

கற்றுத் தருகின்ற கடவுள்

எல்லாராலும் கற்றுத்தர முடியாது. கற்றுத் தருகின்ற எல்லாராலும் போதகராக, ஆசிரியராகிவிட முடியாது. கடைப்பிடித்துக் கற்பிக்க வேண்டும் அவரே சிறந்த போதகர், ஆசிரியர். அப்படிப்பட்டவரே விண்ணரசில் மிகப்பெரியவர் (மத் 5: 19). யூதர்கள் நடுவில் “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” (எசா 54: 13) என்ற நம்பிக்கை இருந்தது. நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே!” என்று சொன்னபிறகு, ‘அது எப்படி நம்மோடு இருக்கின்ற ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவாக உணவாக முடியும்... இவன் கடவுளைப் பழிக்கின்றான்’ என்று யூதர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தபோதுதான், இயேசு இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும், “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்.

கடவுளைவிடவும் சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. ஏனெனில், மனிதர்கள் கற்பிப்பது ஒன்றும், கடைப்பிடிப்பது வேறொன்றுமாக இருக்கும். ஆனால், கடவுள் சொல்லிலும் செயலிலும் வல்லவர் (லூக் 24: 19) நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளைக் கொண்டிருப்பவர் (யோவா 6: 68). அப்படிப்பட்டவர் அனைவருக்கும் கற்றுத் தருகின்றவர். ஆதலால், அவர் கற்றுத் தருவதற்கு அல்லது அவரது வார்த்தைக்குச் செவிசாய்க்கின்ற ஒருவர் இயேசுவை இறைமகன் என்றும், அவர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு என்றும் ஏற்றுக்கொள்வார். யூதர்கள் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவாக ஏற்றுக்கொள்ளாததை வைத்துப் பார்க்கும்பொழுது, அவர்கள் கடவுள் கற்றுத்தந்ததற்குச் செவிசாய்க்க வில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டவர் தீமை செய்வதில்லை

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு என்று நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்று பார்த்தோம். அடுத்ததாக, கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையை விட்டுவிடுவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்திப்போம்.

எபேசியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள்” என்று சொல்லிவிட்டு, “தீமை அனைத்தையும் உங்களைவிட்டு நீக்குங்கள்” என்கிறார். நம்மிடமிருந்து தீமை அனைத்தையும் விட்டு நீக்குவதற்கும், கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிப்பதற்கும் என்ன தொடர்பிருக்கின்றது என்று தெரிந்துகொள்வது நல்லது. யோவான் நற்செய்தியில் இயேசு தூய ஆவியரைக் குறித்துப் பேசுகின்றபொழுது, தூய ஆவியாரே உண்மையை வெளிப்படுத்துபவர் (யோவா 14: 17) என்பார். கடவுளின் தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துவர் எனில், அல்லது கற்றுத்தருபவர் எனில், அவரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையை ஒருபோதும் செய்யமாட்டார். அதன்மூலம் அவருக்குத் துயரமும் வருவிக்கமாட்டார்.

அரசர்கள் முதல்நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், இறைவாக்கினர் எலியா பாலைநிலத்தில் பயணம் செய்வதைக் குறித்துப் படிக்கின்றோம். அவர் ஏன் பாலைநிலத்தில் பயணிக்க வேண்டும் எனில், ஆகாபு மன்னனும் அவனுடைய மனைவி ஈசபேலும் பாகால் தெய்வ வழிபாட்டை ஊக்கப்படுத்தியதற்காக, எலியா அவர்களைச் சாடியதைத் தொடர்ந்து, அவர்கள் அவரைக் கொல்லத் துணிகிறார்கள். இதனால் அவர் பாலைநிலத்தில் பயணிக்க வேண்டியதாயிற்று. ஒருவேளை ஆகாபு மன்னன் ஆண்டவர் கற்றுக்கொடுத்ததற்குச் செவிசாய்த்திருந்தால், அவன் எலியாவைக் கொல்லத் துணிந்திருக்கமாட்டேன். இன்னும் பல தீமைகளை அவன் செய்திருக்க மாட்டான். அவன் கடவுள் கற்றுக்கொடுத்ததற்குச் செவிசாய்க்காததாலேயே இப்படியெல்லாம் நடந்துகொண்டான். ஆதலால், ஆண்டவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டார் எனில், அவர் தீமையை விட்டுவிடவேண்டும்.

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் அன்புசெய்து வாழவேண்டும்

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையைத் தன்னிடமிருந்து விட்டொழிப்பது மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக, அவர் நன்மை செய்து பரிவு அடுத்தவரிடம் காட்டவேண்டும். இவையெல்லாவற்றையும் விட ஆண்டவர் இயேசு நம்மீது அன்பு கூர்ந்துபோல, ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு வாழவேண்டும். இதைப் புனித பவுல், இன்றைய இரண்டாம் வாசகத்தின், இரண்டாவது பகுதியில் மிக அழகாக விளக்குகின்றார்.

இன்றைக்குப் பலர் கடவுள் தன் அடியார்கள் வழியாகக் கற்றுத்தருவதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. கற்றுத்தருவதைக் கேட்டாலும், அதன்படி வாழத் தயாராக இல்லை. எவர் ஒருவர் கடவுள் கற்றுத்தருவதற்குச் செவி சாய்க்கின்றாரோ, அவர் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவாகவும், இறைமகனாகவும் ஏற்றுக்கொள்வார். மட்டுமல்லாமல், அவர் தன்னிடம் இருக்கின்ற தீமைகள் அனைத்தையும் விட்டொழித்து, ஒருவர் மற்றவரை அன்பு செய்வார். எனவே, நாம் கடவுள் கற்றுத்தருவதற்குச் செவிசாய்த்து, இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாக ஏற்று, தீமையை விட்டொழித்து, நன்மை செய்வோம்; ஆண்டவர் நம்மை அன்பு செய்தது போன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்து, அவரது அன்பிற்குச் சாட்சிகளாத் திகழ்வோம்.

சிந்தனை:
‘உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத் தாரும்’ (திபா 119: 29) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கடவுளிடம் அவரது திருச்சட்டத்தை நமக்குக் கற்றுத் தரக்கேட்போம்; அவர் கற்றுத் தந்ததன்படி, நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அவர் எத்துணை இனியவர்!

'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' எனத் துள்ளிக் குதிக்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 34).

ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் எலியா துவண்டு கிடக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு மக்கள் இடறல்பட்டு நிற்கின்றனர். இரண்டாம் வாசகத்தில் தங்களின் பழைய வாழ்க்கை நிலைகளில் சிக்கிக் கிடக்கின்றனர் எபேசு நகர இறைமக்கள்.

இந்தப் பின்புலத்தில் நம் ஆண்டவரை இனியவர் என்று எப்படிப் புரிந்துகொள்வது?

பாகால் இறைவாக்கினர்கள் நானூறு பேரை நேருக்கு நேராக எதிர்கொண்டு, அவர்களை வெட்டி வீழ்த்திய எலியா, ஈசபேல் தன்னை விரட்டுவது கண்டு, பயந்துபோய் அகதியாகப் பாலைநிலத்தில் அலைகின்றார். சில நேரங்களில் நம் வாழ்க்கையின் மிக இனிமையான பொழுதுகள் மிகவும் துன்பமான பொழுதுகளாகவும், வெற்றியில் களிக்க வேண்டிய பொழுதுகள் தோல்வியில் துவண்ட பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன. 'அச்சமுற்று, தன் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடுகின்ற' எலியா, சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, 'ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும். நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்ல' என்கிறார். ஒரே நேரத்தில் எலியா நான்கு எதிர்மறை உணர்வுகளால் அவதியுறுகிறார்: ஈசபேல் பற்றிய பயம், தன் செயல்மேல் கோபம், தன் கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வு, தன்நிலை பற்றிய தாழ்வு மனப்பான்மை.

'உயிரைக் காத்துக்கொள்ளுமாறு' ஓடிய எலியா, 'உயிரை எடுத்துக்கொள்ளும்' என ஆண்டவரிடம் கேட்பது ஏன்? தன் உயிரை எடுக்குமாறு தன்னைத் துரத்துகின்ற ஈசபேலிடம் அதைக் கொடுத்திருக்கலாமே! புலம்பிக் கொண்டே இருந்த அவர் அப்படியே தூங்கிவிடுகின்றார். மனச்சோர்வும் தூக்கமும் உடன்பிறந்த சகோதரர்கள். வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, 'எழுந்து சாப்பிடு!' என்கிறார். தணலில் சுட்ட அப்பமும் தண்ணீரும் கண்டு, அவற்றை உண்டபின் மீ;ண்டும் உறங்கிப் போகின்றார். 'நீ நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்' என்று இரண்டாம் முறை வானதூதர் உணவு வழங்கியபோது, உண்டு வலிமை பெறுகின்றார். நாற்பது நாள்கள் அவர் மேற்கொள்ளும் பயணமே அவருடைய இறையனுபவப் பயணமாக மாறுகின்றது. அந்த மலையில் அவர் புதிய மனிதராகப் பிறக்கின்றார்.

ஆக, 'இறந்து போக வேண்டும்' என வந்தவர், புதிய வாழ்வுக்குப் பிறக்கின்றார். ஆண்டவர் அவருக்குப் பரிமாறிய உணவினால் அவருடைய வாழ்க்கை மாறுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அவருக்குக் கொடுத்தது அப்பம் என்றாலும், அது அவருடைய உடல் வலிமைக்குப் பயன்பட்டதோடு, அவர் ஆன்மிக வலிமை பெறுவதற்கான பயணத்திற்கும் உதவியாக இருந்தது. மனச்சோர்வு மற்றும் விரக்தியானால் வருந்திய இறைவாக்கினர் நம்பிக்கையும் எதிர்நோக்கும் பெறுகின்றார். ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை உணர்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம் பற்றிய கருத்துரு தொடர்கின்றது. கிறிஸ்தவ அடையாளம் என்பது தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது. இந்தத் தெரிவு நிபந்தனையற்றதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் தெரிவில் ஒருவர் உறுதியாக இருத்தல் வேண்டும். கிறிஸ்தவக் குழும வாழ்விற்கான ஆறு தடைகளைப் பவுல் பட்டியலிடுகின்றார்: 'மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல், தீமை'. இவை கிறிஸ்தவ அடையாளத்தை வலுவிழக்கச் செய்வதோடு, தூய ஆவியாருக்கும் துயரம் வருவிக்க வல்லவை எனப் பவுல் எச்சரிக்கின்றார். மேலும், கிறிஸ்தவ அடையாளத்திற்கு வலுவூட்டும் காரணிகளையும் அவர் முன்மொழிகின்றார்: 'நன்மை செய்தல், பரிவு காட்டுதல், மன்னித்தல், அன்புகொண்டு வாழ்தல்.' கிறிஸ்துவையே அன்பிற்கான முன்னுதாரணமாக வைக்கின்றார் பவுல். அன்பில் தற்கையளிப்பு இருக்க வேண்டும் என்பது பவுலின் பாடம்.

ஆக, மனக்கசப்பு கொண்டு வாழும் எபேசு நகர மக்களுக்கு இனிமையாக வருகின்றது கிறிஸ்துவின் அன்பு. கிறிஸ்துவுடைய அன்பின் தற்கையளிப்புப் பண்பை அறிந்தனுபவிக்கும் அவர்கள், அந்த அன்பை தங்கள் வாழ்வின் மேல்வரிச்சட்டாக ஏற்க வேண்டும்.

நற்செய்தி வாசகம் கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. தன்னைத் தேடி வந்தவர்களின் தேடலைக் கூர்மைப்படுத்துகின்ற இயேசு, இந்த வாரம், அந்தத் தேடலின் தேடுபொருள் தானே என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். இயேசு, தன்னையே, 'வானிலிருந்து இறங்கி வந்த உணவு' என்று முன்மொழிந்தபோது, அதைக் கேட்கின்ற மக்கள் முணுமுணுக்கின்றனர். இரண்டு காரணங்கள்: ஒன்று, இயேசு வானிலிருந்து இறங்கி வரவில்லை. ஏனெனில், அவர் நாசரேத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய எளிய பின்புலம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மேலும், 'இவர் யோசேப்பின் மகனல்லவா!' என்று அவரைக் கேலி செய்கின்றனர். இயேசு ஒரு கன்னியிடமிருந்து பிறந்தார் என்றும், எந்தவொரு ஆண்தொடர்பும் இல்லாமல் அவருடைய அன்னை வியத்தகு முறையில் கருத்தாங்கினார் என்றும் இயேசுவின் சமகாலத்தவர்கள் அறிந்திருந்தனர். அந்தப் பின்புலத்தில்தான் அவரைக் கேலி செய்யும் நோக்குடன், 'யோசேப்பின் மகனல்லவா!' என்று அவருடைய பிறப்பு பற்றியும் இடறல்படுகின்றனர். இப்படிச் சொல்வதன் வழியாக இயேசுவின் பிறப்பில் எந்தவொரு இறைத்தொடுதலும் இல்லை என்பதை உறுதிபடச் சொல்கின்றனர்.

'கடவுள் ஈர்த்தாலொழிய தன்னிடம் யாரும் வர இயலாது' என உறுதிபடச் சொல்கின்றார் இயேசு. மேலும், தன்னை அவர்கள் உண்ண வேண்டும் என முன்வைக்கின்றார். உண்ணப்படும் பொருள் தன்னையே இழக்கின்றது. சிலுவையில் இயேசு தன்னையே இழப்பார் என்பதை இது முன்னுணர்த்துகிறது.

இயேசுவின் எளிய பின்புலம் கண்டு இடறல்பட்டவர்களுக்குத் தன்னையே உணவாக அளிக்க முன்வருகின்றார் இயேசு.
ஆக,
முதல் வாசகத்தில் மனச்சோர்வடைந்த எலியா, ஆண்டவராகிய கடவுள் தருகின்ற அப்பம் என்ற உணவின் வழியாக, அவரது இனிமையைச் சுவைக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், மனக்கசப்பில் வாழ்ந்த எபேசு நகர நம்பிக்கையாளர்கள், இயேசுவின் அன்பில் திகழ்ந்த தற்கையளிப்பு வழியாக, அவருடைய இனிமையைச் சுவைக்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு அவரைப் பற்றி இடறல்பட்டவர்கள், தந்தையால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் வந்து அவருடைய இனிமையைச் சுவைக்கின்றனர்.
இவ்வாறாக, ஆண்டவர் இனியவராக இருக்கின்றார்.
இது நமக்கு இரண்டு நிலைகளில் சவாலாக அமைகின்றது:
இரண்டு, 'நானும் ஓர் இனியவராக இருக்கின்றேனா?'
எலியா போலச் சோர்ந்து விழும் பொழுதுகள் பல. மனக்கசப்பினால் குடும்ப மற்றும் குழும உறவுகளில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் பல. இயேசுவின் ஊர்க்காரர்கள்போல மற்றவர்களின் பின்புலம் கண்டு இடறல் படும் பொழுதுகள் பல.
ஆனால், இவற்றையெல்லாம் கடந்த இனிமை நம் இறைவனிடம் உள்ளது என உணர்ந்துகொள்தல் நலம்.
'அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர். அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை' என்னும் பதிலுரைப்பாடலின் வரிகள் நம் வாழ்வியல் அனுபவமாக மாறட்டும். .

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பிறர் வாழ்வு பெற உன்னை தரத் தயாரா?

ஒரு பங்கில் பங்குப் பணியாளர் ஒருவர் ஒவ்வொரு தெருவாக சென்று திருப்பலி நிறைவேற்றலாம் என முடிவு செய்திருந்தார் அப்போது அந்த தெருவில் உள்ள அனைவரும் இணைந்து திருப்பலிக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொண்டிருந்தனர். வீடுவீடாகச் சென்று ஒலி அமைக்கவும் சிற்றுண்டிகள் வாங்கவும் பணம் வசூலித்துக்கொண்டிருந்தனர் சிலர். அப்போது அத்தெருவிலே வசிக்கும் ஒரு ஏழைத்தாய் " என்னிடம் தருவதற்கு பணமில்லை. என்னால் முடிந்த அளவு என் உடலுழைப்பைத் தருகிறேன்" என்று கூறி திருப்பலி நிறைவேற்றப்படுகின்ற இடத்தை சுத்தம் செய்வது, பிறர் அமர்வதற்காக நாற்காலிகளை போடுவது போன்ற வேலைகளையெல்லாம் செவ்வனே செய்து திருப்பலி நல்லமுறையில் நிறைவேற்றப்பட சிறப்பாக உதவினார். எல்லாம் முடிந்தவுடன் அத்தெருவிலே உள்ள சிலர் அத்தாயிடம் சென்று "நாங்கள் கொடுத்த பணத்தினாலல்ல உங்களுடைய சுயநலமற்ற உழைப்பினால்தான் இத்திருப்பலி சிறப்பாக நடந்தேறியது. இறையாசிரை நாங்கள் அனைவரும் பெற நீங்கள்தான் மிக முக்கிய காரணம்" எனக் கூறி அத்தாயை வாழ்த்தினர்.

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.” என்று இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார். என் சதையை கொடுக்கிறேன் என இயேசு கூறியதன் பொருள் என்ன?

சதை என்பது மனிதனுக்கு உருவத்தைக் கொடுக்கும் ஒன்று. சதை இல்லாத மனிதன் வெறும் எலும்புக்கூடாகத்தான் இருப்பான். சதை அல்லது திசுக்கள் தான் நமது உடலின் மிக முக்கிய உள்ளுறுப்புக்களை மூடிப் பாதுகாக்கிறது. நமது உடலில் ஏற்படும் காயங்கள் எல்லாம் சதையைத் தாண்டிதான் உறுப்புக்களைத் தீண்டும்.சதை என்பது ஒரு முழுமனிதனை அவன் உணர்வுகளைக் கூட குறிப்பதாக இருக்கிறது.

இயேசு தன் சதையை நமக்குத் தருகிறார் என்றால் அவர் தம்முடைய எல்லாவற்றையும் நமக்குத் தருகிறார் என்பது தான் பொருள். அவருடைய ஆற்றலை, பாதுகாப்பு ,நல்லுணர்வுகள் என அனைத்தையும் தன் சதையைத் தருவதன் மூலம் இயேசு நமக்குத் தந்து வாழ்வை அருளுகின்றார்.

அன்புக்குரியவர்களே பிறர் நலனுக்காக, அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே நம் சதையைக் கொடுப்பதற்கு சமம் என்ற ஆழமான செய்தியை இன்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக செய்யும் அனைத்தின் வழியாகவும் தங்கள் சதையை அல்லவா தருகின்றனர். அவர்களின் உழைப்பும் வியர்வையும் தியாகமும் குடும்பத்திற்கு வாழ்வளிக்கிறது. கடமை உணர்வுடன் பணிபுரியும் தொழிலாளிகள் தங்ளுடைய நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் பொழுது அவர்களின் சதையை தங்கள் கடின உழைப்பின் வழியாகக் கொடுக்கின்றனர் . எத்தனையோ சமூக ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையை முன்னேற்ற தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி உழைத்து தங்களையே முழுமையாகக் கையளிக்கின்றனர்.

எனவே நம்முடைய வாழ்விலும் இயேசுவைப் போல பிறர் வாழ்வு பெற நம்மையே கொடுக்க தயாராவோம். நம் உழைப்பையும் ஆற்றலையும் தியாகத்தையும் பிறர் வாழ்வு பெறும் பொருட்டு கையளிப்போம்.

இறைவேண்டல்
உம்மையே எமக்காகக் கையளித்த இயேசுவே பிறர் வாழ்வு பெற எம்மையே கொடுக்கும் மனம் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறையுணவால் ஊட்டம் பெறுவோம்!

மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக குப்பையோடு குப்பையாக, புழுதியிலே புரண்டு, கைகள் அழுகிய நிலையில் ஒருவர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாய் இருந்தது. மக்கள் அங்கும் இங்குமாக செல்கிறார்கள். அனைவரின் கண்ணிலும் அம்மனிதர் படுகிறார். ஆனால் உதவிடவோ அல்லது அவருக்கு என்ன தேவையென்று புரிந்துகொண்டு அவரை மீட்டெடுப்பதற்கோ யாரும் முன்வரவில்லை. அச்சமயம்தான் லண்டனிலுள்ள மறைமாவட்டத்தில் அருள்பணியாளராக இருந்த தந்தை ஒருவர் எதேர்ச்சியாக மதுரைக்கு வந்திருக்கிறார். இந்த மனிதனின் அவலநிலையைக் கண்டு, இவருக்கு எதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப தன் நண்பரின் உதவியுடன் அவரை மீட்கிறார். காயங்களுக்கு கட்டுப்போடுகிறார். குளிப்பாட்டுகிறார். நல்ல உடை கொடுக்கிறார். உறங்க வைக்கிறார். அப்போது அம்மனிதன் தந்தையிடத்திலே, 'பசிகிறது என்று சொல்கிறான்', தந்தையும் அவருக்கு வயிராற சாப்பிட உணவு கொடுக்கிறார். மனநிறைவுடன் அம்மனிதன் உணவு உண்டான். திடன் அடைகிறான். ஊட்டம் பெறுகிறான். அவரின் வாழ்வு இறக்கும் வரையில் வசந்தமாய் மாறிற்று. இப்படியாய் ஒருவருக்கு மட்டுமல்ல இவரைப் போன்று இருக்கும் அனைவருக்குமே உணவு அளிக்க வேண்டும். தங்க வைக்க வேண்டும். வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். உடல்நலத்தைப் பேணிக் காக்க வேண்டும். அனாதையாய் வருபவருக்கு நாமே உறவாக வேண்டும் என்று சொல்லி மிகச் சிறப்பாக இந்த அன்புப்பணியை ஆற்றிக் கொண்டிருப்பவர்தான் அருள்தந்தை. தாமஸ் அவர்கள். திண்டுக்கல் கொடைரோடுக்கு அருகிலுள்ள ST.JOSEPH'S HOSPICE என்பதுதான் இவரின் இல்லம். இங்குதான் பலரும் அன்பென்னும் உணவாலும், பாசமென்னும் உணவாலும், உறவு என்னும் உணவாலும் ஊட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இறைவுணவாம் இயேசுவின் உடனிருப்பால் என்றென்றும் மகிழ்கின்றார்கள்.

இறைஇயேசுவில் இனியவர்களே!

மனித வாழ்வின் அடிப்படை தேவைகள் மூன்று உணவு, உடை, இருப்பிடம். இம்மூன்றில் எதாவது ஒன்று குறைப்பட்டாலும் முழுமையான வாழ்வு பெறாத சூழல் உருவாகிறது. உணவு இருக்கும் போது உடையும், இருப்பிடமும் இல்லாமல் இருந்தால், உண்ட உணவுகூட ஒழுங்காய் செல்லாது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் நாம் நம்முடைய அடிப்படை தேவைகளை எப்படியாவது பூர்த்திச் செய்ய விரும்புகின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்துமே இத்தகைய கருத்தைத்தான் வலியுறுத்தி நிற்கின்றது. 'இறைவுணவால் நாம் ஊட்டம் அடைய வேண்டும்' என்பதுதான் இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையச் சிந்தனை. இறைவனை நம்பி வந்தோருக்கும், இன்று நம்பி வரும் நம் ஒவ்வொருவருக்கு இறைவன் உணவின் வழியாய் நமக்கு ஊட்டம் கொடுக்கிறார். அவ்வுணவை ஏற்க தகுதியுள்ளவராய் நம்மையும் மாற்றுகிறார் என்பதுதான் அடிப்படையான சிந்தனை.

முதல் வாசகத்தில், எலியா இறைவாக்கினர் பற்றி வாசிக்கின்றோம். நேர்மையானவராக, துணிச்சல் மிக்கவராக, நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவராக வலம் வந்த எலியா அரசியான ஈசபேலுக்கு பயந்து, அங்கிருந்து தப்பியோடுகிறார். யாவேதான் உண்மையான கடவுள் என்று உரைத்ததன் விளைவாகவும், போலி இறைவாக்கினர்களின் போதனைக்கும், பாகால் குறித்த பார்வைக்கும் எதிராகவும் நின்றதாலும், ஆண்டவருக்குரிய வகையில் வாழ்ந்து காட்டியதாலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசி அவரைக் கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால் எலியா அங்கிருந்து தப்பி ஓடுகிறார். இடையில் முடியாத பட்சத்தில் "ஆண்டவரே நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்" என்று கடவுளிடத்திலே முறையிடுகிறார். ஆனால் முறையிட்ட கடவுள் அவரை முறையான வழிக்கு இட்டுச்செல்ல, சோர்வுற்ற அவனுக்கு தெம்பை அளிக்கிறார். அவர் உறங்கிக் கொண்டிருக்கின்ற போது இரண்டு முறை வானத்தூதர் அவருக்கு உணவளிக்கிறார். அதன் வழியாய் ஊட்டம் கொடுக்கிறார். அந்த ஊட்டம் உடனிருப்பாய் அமைந்து ஓரேபு மலையை நோக்கி வழிநடத்திச் செல்கிறது.

நற்செய்தியில், இயேசுவின் வாழ்வு அடுத்தவருக்கு எல்லா வகையிலும் ஊட்டமளிப்பதாய் அமைந்துள்ளது. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்று தன்னை வெளிப்படுத்தும் இயேசு தன்னால் மற்றவர்கள் வாழ்வார்கள் என்ற மாபெரும் சிந்தனையை வழங்குகிறார். எனவேதான் என்னை நம்புவோர் நிலைவாழ்வைப் பெறுகிறார் என்று சொல்கிறார். இருப்பினும் அவரின் உடனிருப்பை ஏற்றுக்கொள்ளாத மனிதரின் முணுமுணுப்பைக் கண்டு, முறைத்துகொள்ளாமல் முறையாக அங்கே அவற்றை இயேசு கையாள்வதன் அடையாளமே அவரை நம்பி வரும் மக்கள் யாவரும் ஊட்டம் பெற வேண்டும் என்பதற்காகவும், நிறைவான வாழ்வைப் பெற வேண்டுமென்பதற்காகவும், நிலையான மகிழ்ச்சியை அவர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும் எல்லாவற்றையும் செய்கிறார். உலகு வாழ்வதற்காகவே வந்தேன் என்ற கூற்று ஒன்றே போதும் எந்தளவு இயேசு நம் ஒவ்வொருவருக்கும் ஊட்டமளிக்க தன்னையே உணவாக்கியிருக்கிறார் என்று. இதைத்தான் மத்; 28:20 இல் "இதோ உலகம் முடியும்வரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன்" என்று மொழிகிறார். இத்தகைய உணர்வினை நாம் ஆழமாய் புரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள, இயேசுவின் உடனிருப்பை முழுமையாய் அறிந்துகொள்ள பாதையமைத்து கொடுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம்.

இறைவனின் உடனிருப்பை நாம் பல நேரங்களில் உணராமலும், அவர் கொடுக்கின்ற ஊட்டத்தை முழுமையாய் அனுபவிக்காமலும் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றைத்தான் புனித பவுல் எபேசு நகர மக்களின் வழியாக நமக்கும் வழங்குகிறார். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல்;, தீமையான காரியங்கள் இவையனைத்தும் கடவுள் கொடுக்கின்ற ஊட்டத்தையும், உடனிருப்பையும் புறக்கணிக்கும் காரணிகளாகவே பவுல் சொல்கிறார்.

மனக்கசப்பு இருக்குமிடத்தில் மனமகிழ்ச்சி இருக்காது, சீற்றம் இருக்குமிடத்தில் சீர்மிகு எண்ணங்கள் இருக்காது, சினம் இருக்குமிடத்தில் நல்ல மனம் இருக்காது, கூச்சல் இருக்குமிடத்தில் கூட்டு தோழமையும், கூட்டுறவும் இருக்காது, பழிச்சொல் இருக்குமிடத்தில் பாசமும், பகிர்வும், பண்பட்ட செயல்முறையும், பக்குவமுள்ள வாழ்க்கைமுறையும் இருக்காது, தீமையான காரியங்கள் இருக்குமிடத்தில் நன்மை ஒருபோதும் இருக்காது. ஆக தன் உடனிருப்பை ஒவ்வொரு நாளும் வெண்ணிற அப்பத்தின் வடிவில் கொடுக்கும் இயேசு முழுமையான ஊட்டத்தையும், திடத்தையும், உடனிருப்பையும், அன்பையும் வழங்குகிறார். அதை ஏற்க தடையாக இருக்கும் தீய சிந்தனைகளை நாம் களைய முற்படும் போது நிறைவான ஆசீர்வாதத்தை பெறுகிறோம் என்ற நம்பிக்கையை வழங்குகிறது இன்றைய ஞாயிறு வழிபாடு.

இறைஇயேசுவில் பிரியமானவர்களே,
நம்முடைய வாழ்வில் இறைவன் கொடுக்க விரும்பும் உடனிருப்பை, ஊட்டமுள்ள வாழ்வை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இப்போது சிந்திப்போம். இயேசுவின் தொடர் பிரசன்னம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இருக்கின்றது. அதைப் புரிந்துகொண்டாலே போதும் நாம் நிறைவான ஊட்டத்தையும், உடனிருப்பையும் பெற்று மகிழலாம். இத்தகு ஆசீரைப் பெற்றிட கீழ்க்காணும் நான்கு வழிகள் நமக்கு உதவட்டும்:

ஆண்டவர் காப்பார் என்ற நம்பிக்கை
ஆவிக்குரிய வாழ்வை நடத்துதல்
தகுதியுள்ள மனநிலையில் நற்கருணை பெறுதல்
என்னால் அல்ல கடவுளால் என்ற சிந்தனை தெளிவு
ஆண்டவர் காப்பார் என்ற நம்பிக்கை:
முதல் வாசகத்தில் எலியாவை ஆண்டவர் தன் உடனிருப்பால் காப்பாற்றியது போல, நம் ஒவ்வொருவரையும் கடவுள் நித்தமும் காப்பார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். இiத்தான் எசாயா புத்தகம் 48:17இல் இவ்வாறாகப் பார்க்கிறோம்: 'உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!" இத்தகைய நம்பிக்கை இருக்கையில் ஆண்டவரின் உடனிருப்பு என்றென்றும் நம்மில் நிலைக்கும்.

ஆவிக்குரிய வாழ்வை நடத்துதல்:
இறைவனின் உடனிருப்பை நாம் பெற்று வாழ்ந்திட நம் வாழ்வை ஆவிக்குரிய விதத்தில் அமைதல் அவசியம். இதைத்தான் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் 6:8இல் "ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவி அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்" என்று கூறுகிறார். இறைவனின் தொடர் பராமரிப்பை உடனிருப்பாய் கண்டு மகிழ நம் தீய வழிகளை விட்டுவிட்டு நேரிய வழியைத் தேர்ந்தெடுத்து, ஆவிக்குரிய மனிதர்களாய் வாழ்ந்தால் நிச்சயம் இறைஉடனிருப்பு நம்மில் நிறைவாய் இருக்கும்.

தகுதியுள்ள மனநிலையில் நற்கருணையை பெறுதல்:
இயேசு தன் உடனிருப்பை நற்கருணை வழியாக கொடுத்து தன்னையே நமக்காகக் கையளித்தார். எனவே உலகம் முடியும் வரை உலகு வாழ்வதற்காகவே வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். ஆகவே இவரின் இத்தகு சிறப்புமிக்க உடனிருப்பை நாம் அடிக்கடி நற்கருணையைப் பெறுவதன் வழியாக அடைகின்றோமென்றால், அதற்கு நம்மை நாமே தகுதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். தகுதியற்ற மனநிலையில் ஏற்கையில் அது நமக்கு பாவமே. இதைத்தான் புனித பவுல் கொரிந்து நகர மக்களுக்குச் சொல்கிறார்: "எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராக குற்றம் புரிகிறார்" (1கொரி 11: 27) என்று அர்த்தம். எனவே தகுதியுள்ள மனநிலையோடு நற்கருணையை உட்கொள்வோம். அதிலிருந்து தவறிச் செல்கிறபோது நாம் இறைஉடனிருப்பை இழந்து தவிக்கின்றோம் என்ற படிப்பினையை ஏற்று பக்குவமடைவோம்.

'என்னால் அல்ல கடவுளால்' என்ற சிந்தனை தெளிவு
என் வாழ்வில் நடக்கும் எல்லாமே என்னால் நடக்கிறது என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் என்னால் அல்ல கடவுளால் நடக்கிறது என்ற சிந்தனை தெளிவு நமக்கு நிச்சயம் தேவை. அப்போதுதான் இறையுணவின் ஊட்டத்தால் பாவ வாழ்விலிருந்து, முழுமையான விடுதலை பெற்று நிலையான மகிழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள முடியும்.

இத்தகைய சிந்தனைகளை இதயத்தில் ஏற்றவர்களாக நாம் வாழ்வோம்! அப்போது ஆண்டவர் கொடுக்க விரும்பும் நிறைவான உடனிருப்பு என்றென்றும் நம்மில் தங்கும்!!

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு