மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 17-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
2அரசர்கள் 4: 42-44 | எபேசிய 4:1-6 | யோவான் 6:1-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
தொடக்கம்

ஒரு வங்கியின் மேலாளர் புகை வண்டிக்காகக் காத்திருந்தார். புகை வண்டி வரத் தாமதமாகவே செய்தித்தாளைப் படித்துக் கொண்டே ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார். தன் இருக்கைக்கு அருகில் இருந்த சிறுவனும் அந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். இதைப் பார்த்த இந்த வங்கி மேலாளர், இப்படியா குழந்தையை வளர்ப்பார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு எரிச்சலோடு கூடிய முகத்தோடு சிறுவனைப் பார்த்து முகம் சுளித்தார். மீண்டும் சிறுவன் பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட்டான். இறுதியில் ஒரு பிஸ்கட் மட்டும் இருந்தது. இதையாவது விட்டு வைப்பானா இந்தப் பயல் என்று பார்த்தார் மேலாளர் . ஆனால் அந்த பிஸ்கட்டை இரண்டாக உடைத்துப் பாதியை மேலாளருக்கு கொடுத்தான். நாகரிகம் இல்லாத சிறுவன் என்று முகம் சுளித்தார். ஆனால் புகை வண்டி வந்தவுடன் அவர் ஏறிக்கொண்டார். பையனின் பெற்றோரோ எதிர்நோக்கிச் செல்லும் வண்டிக்காகக் காத்திருந்தனர். வண்டி ஏறியவுடன் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து, பயணச் சீட்டைக் கேட்டவுடன் பையைத் திறந்தார் வங்கி மேலாளர். அப்போதுதான் பார்த்தார், தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் இருப்பதையும், பையனுடைய பிஸ்கட்டைத்தான் தான் சாப்பிட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து வெட்கப்பட்டார். ஒரு சிறுவன் தன் பிஸ்கட் பாக்கெட்டைத் தன்னைச் சாப்பிட அனுமதித்ததும், இறுதியாக இருந்த ஒரு பிஸ்கட்டையும் பாதி பிட்டுக் கொடுத்ததையும் நினைத்து வியந்து போனார். எனக்கோ எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், மற்றவரோடு பகிராமல் சுயநலமாக உள்ளேனே என்று தன்னைப் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

இன்றைய நற்செய்தியைப் பாருங்கள். ஒரு சிறுவனிடம் இருந்த 5 வாற்கோதுமை அப்பமும், இரண்டு மீன்களும் 5000 பேருக்கு மேலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு மீதியாக 12 கூடைகளில் எடுக்கப்பட்டதாக வாசிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் பசியாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவைக் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார் இறைவன். ஆனால் புதிய ஏற்பாட்டில் தன்னையே உணவாக கொடுக்கும் முன் 5 அப்பத்தை பலுக வைத்துப் புதுமை செய்து, பகிர்தலே சிறந்தது என்பதைச் செய்து காட்டுகிறார் இயேசு. கொடுப்பவர்கள் இறைவனின் இதயத்தில் நிரந்தர இதயத்தைப் பிடிப்பவர் ஆவார்கள். புனித லூக்கா (லூக். 21: மாற். 12:41-44) நற்செய்தியிலே வாசிப்பது போல விதவைப் பெண்ணின் காணிக்கையை இயேசு வியந்து பாராட்டிய நிகழ்வே இதற்குச் சான்றாகும். பகிரா மனநிலைக்கு காரணம் என்ன?

சிலர் பகிராமல் இருப்பதற்குக் காரணம், மனித இதயத்தில் ஏற்படும் ஒரு விதமான விரக்தி மனநிலை. அதாவது உலகமே வறுமையால் வாடுகிறது. நான் மட்டும் பகிர்ந்தால் என்ன மாற்றம் நடைபெறப் போகிறது. எனவே பகிர்தலும், பகிராமல் இருப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணம் பலரை ஆட்டிப்படைக்கிறது. இப்படிப்பட்ட மனநிலையில்தான் அந்திரேயா (யோவா. 6:9) இயேசுவை நோக்கி இத்தகைய கூட்டத்திற்கு 5 அப்பமும், 2 மீன்களும் எந்த மூலைக்குப் பயன்படும் என்று கேட்கிறார்.

அன்பான சகோதரனே! சகோதரியே! உலகத்தின் பசியை நீக்க முடியாவிட்டாலும், ஒரு மனிதனுக்கு, ஒரு குடும்பத்திற்காவது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது மேலானது. இன்றைய உலகில் திருச்சபை என்ற சங்க ஏடு (இ. உல. தி .69) கூறுவது போல, பசியால் மடியும் மனிதனுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவனைக் கொன்றவனாவாய். எப்போதெல்லாம் நீ தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்து பிறருக்குக் கொடுக்காமல் பதுக்கி வைக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ அவர்களை வஞ்சிக்கிறாய். தேவைக்கு உரியதை சேகரிப்பது சேமிப்பு. ஆனால் தேவைக்கு அதிகமாகச் சேகரிப்பது, பிறர் தேவைக்கு உரியதைச் சேமிப்பது என்பது திருட்டு என்கிறார் புனித பேசில்.

எனவேதான் எசாயா நூலில் கூறப்படுவதுபோல பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லம் அழைத்து வருவதும், உடையற்றவர்களுக்கு உடுத்தக் கொடுப்பதும் அன்றோ நாம் விரும்பும் நோன்பு என்கிறார் ஆண்டவர். கொடுப்பதால், பகிர்வதால் மகிழ்ச்சி பிறக்கிறது. மக்களுக்கு கொடு, உண்ட பின் மீதி இருக்கும் என்பதற்கு இன்றைய விவிலிய நிகழ்ச்சி சான்று பகர்கின்றது.

இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால், இருப்பவர், இல்லாதவர் என்ற நிலை மாறும். இதைத்தான் ஆதிக் கிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள் (தி.ப. 2:44).

சிந்தனைக்காக
பகிரும் மனநிலை இல்லாமல் போவது பற்றாக்குறையல்ல. ஏனெனில் இறைவன் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் படைத்துத் தந்துள்ளார். ஆனால் பிறரை நம் உடன்பிறப்பாக, சகோதரனாக, சகோதரியாக காண முடியாத மனநிலைதான்.

இரண்டாவது முன் கூறியதுபோல, வறுமை மிகுந்த இந்த நாட்டிலே எனது சிறிய பகிர்வால் என்ன செய்ய முடியும் என்று விரக்தியில் சுயதிருப்தி செய்து கொள்ளும் நிலை. ஆனால் இறைவன் கொடுத்த கால்கள் கரங்களை இயேசுவுக்குக் கொடுத்தாலே இயேசு மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு உயர்த்துவார்.

நமது உழைப்பையும், பகிரும் மனநிலையையும் கொடுத்தாலே நம் வழியாய் நற்செய்தியைப் பரப்பி ஏராளமான உள்ளங்களைச் சொந்தமாக்கிக் கொள்வார். எனவே பகிர்ந்து செயல்பட ஆரம்பிக்கும்போது இறைவனும் நம்மோடு இணைந்து செயல்படத் தொடங்குகிறார் என்பதை உணர்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாழ்வாங்கு வாழுங்கள்

நடுத்தர வயதுள்ள ஒரு பெண்! அந்தப் பெண்ணைச் சுற்றி அழுகுரல்கள், அணைந்து கிடந்த விளக்குகள்!

அந்தப் பெண் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் பயன்படுத்தி ஒரு பழைய கட்டடத்தை வாடகைக்கு எடுத்தார். அது ஏழைக் குழந்தைகளின் பள்ளிக்கூடமாகியது. அந்தக் கட்டடத்தில் அமர எந்த இருக்கையும் இல்லை, எந்த நாற்காலியும் இல்லை, எந்த மேசையும் இல்லை, எந்தக் கரும்பலகையும் இல்லை!

அழுக்குப் படிந்த தரை கரும்பலகையானது!

அந்தப் பெண் ஏழை எளியவர்களை அடிமைப்படுத்தியிருந்த வறுமையோடு போர் தொடுத்தார். என்னால் எது முடியுமோ அதை இந்த மக்களுக்குக் கொடுப்பேன் எனச்சொல்லி, நாளும் பொழுதும் மக்களின் நலனுக்காக உழைத்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல! அன்னை தெரசாதான் அவர்!

இன்று எண்பதிற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட நடமாடும் மருந்தகங்களையும் எழுபதுக்கும் மேற்பட்ட இறப்பவர்களைக் கண்காணிக்கும் இல்லங்களையும் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகங்களையும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களையும் கொண்டதாக அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட துறவற சபை திகழ்கின்றது.

இன்றைய நற்செய்தியிலே வரும் சிறுவனைப் போல, எலிசாவிற்குக் கீழ்ப்படிந்த பணியாளனைப் போல தன்னிடம் இருந்ததை அன்னை தெரசா இயேசுவிடம் கொடுத்தார். இயேசுவோ அன்னை தெரசா கொடுத்ததை பலுகிப்பெருகச் செய்தார்.

1982-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் ஸ்காட்லாந்து நாட்டுக்குச் சென்றபோது எடின்பர்க் என்ற நகரிலே இளைஞர்களைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: நற்செய்தியில் வந்த சிறுவன். அவனிடமிருந்த அனைத்தையும் இயேசுவிடம் கொடுக்க, இயேசு வியத்தகு முறையில் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்:

எல்லாரும் உண்ட பிறகு மீதியிருந்தது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்வார்; ஆசியளிப்பார். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக அவர் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வார் என்றார்.

இதோ நமது மனவானிலே வலம் வரும் சில ஆசை மேகங்கள்!
வயிறார உண்பதற்கு நல்ல உணவு வேண்டும்!
தெருவோர குழாய்களுக்குச் சுத்தமான தண்ணீர் வேண்டும்!
எல்லாரும் குடியிருக்க விசாலமான வீடுகள் வேண்டும்! கட்டணமின்றி கற்கின்ற உயர்கல்வி வேண்டும்!
எதிர்பார்க்காது பழகுகின்ற உயர்ந்த நண்பர்கள் வேண்டும்!
ஆத்திரப்படாத கணவர் வேண்டும்!
அன்பு செய்யும் மனைவி வேண்டும்!
நீ சொன்ன ஜோக்கை நினைச்சி சிரிச்சி சிரிச்சி பாதி உயிரு போயிட்டுது என்றார் மாமியார். மருமகளோ, அப்போ இன்னொரு ஜோக் சொல்லவா? என்றாள். இவ்வாறு கேட்காத மருமகள் வேண்டும்!
என் மருமகள், என் மறு மகள் என்று சொல்லும் மாமியார் வேண்டும்!

இதோ இயேசு பேசுகின்றார் : என்னால் எல்லாம் முடியும் என நம்புங்கள். உங்களுக்குள் வாழும் இறை ஆவியாரை (இரண்டாம் வாசகம்) நோக்கிச் செபியுங்கள் (லூக் 11:9-13). அவர் தரும் நம்பிக்கை என்னும் வரத்தைப் பெற்று (1 கொரி 12:9) வாழ்வாங்கு வாழுங்கள்.

மேலும் அறிவோம்:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228).

பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு சிறுவனிடம் இரண்டு 'சாக்லட்' கொடுத்து. அதில் ஒன்றை எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டேன். அவன் கொடுக்க மறுத்து விட்டான். அப்போது அவனுடைய அக்கா, "என் தம்பிக்கு மற்றவர்களிடமிருந்து வாங்கத்தான் தெரியும்; கொடுக்கத் தெரியாது" என்றாள்.

இன்றைய நற்செய்தியில் வருகின்ற சிறுவன் சற்று வித்தியாசமானவன். தன்னிடமிருந்த ஐந்து ஆப்பங்களை இயேசுவிடம் கொடுக்க முன் வருகிறான். அவனுடைய ஐந்து அப்பங்கள்தான் 5000 அப்பங்களாகப் பலுகுகின்றன அந்த ஐந்து அப்பங்கள் இல்லாமலேயே இவோ புதுமை செய்திருக்கலாம். இருப்பினும் நாம் நமக்குள்ளதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தவே இயேசு அச்சிறுவனுடைய ஐந்து அப்பங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றைப் பழகச் செய்கிறார்.

நாம் நமக்குள்ளவற்றைப் பிறருடன் பகிரும்போது அவை குறையாமல் மிகுதியாகும், "கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 6:38). இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலிசேயு 24) அப்பங்களைக் கொண்டு 100 பேருக்கு உணவளித்த பின்னும் நிறைய அப்பங்கள் மீதியிருந்தன, ஏழைக் கைம்பெண் இறைவாக்கினர் எலியாவுக்குப் பஞ்ச காலத்தில் அப்பம் சுட்டுக் கொடுக்கிறாள், பஞ்சம் முடியும்வரை பானையில் மாவும், கலயத்தில் எண்ணெயும் எடுக்க எடுக்க வளர்ந்து கொண்டே இருந்தன {1 அரச 17:10-16), மணிமேகலையின் அமுத சுரபியில் இருந்த உணவும் எடுக்க எடுக்கக் குறையவில்லை .

உலகில் பலர் பட்டினியால் சாவதைக் காணும்போது நமக்குக் கடவுள் மேல் கோபம் வருகிறது. இவ்வுலகில் ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டுமென்று கடவுள் அவர்களைப் படைத்திருந்தால், அக்கடவுளே பிச்சை எடுத்து அழியட்டும் என்று கடவுளையே சபிக்கிறார் வள்ளுவர்,

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்துகெடுக உலகு இயற்றியான்" குறள் (362)

ஆனால் எல்லா உயிர்களும் உண்ணவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமேயன்றி, எவரும் வெறும் வயிற்றுடன் படுக்கச் செல்ல வேண்டும் என்பதன்று. "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்” (பதிலுரைப்பாடல், திபா 145:15). எனவே, குறை கடவுளிடம் இல்லை ; மனிதரிடத்தில்தான் உள்ளது. பகிர் ந்து பொழவேண்டிய மனிதர் பதுக்கி வாழ்கின்றனர்.

இவ்வுலகச் செல்வங்கள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவை. வறுமையில் வாடுவோருக்கு வளமையில் இருப்பவர் அவசியமானவற்றைக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளனர், அவ்வாறு அவர்கள் கொடுக்கவில்லை என்றால், வறுமையுற்றோர் தங்களுக்குத் தேவையானவற்றை மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள உரிமை பெற்றுள்ளனர்; அவ்வாறு எடுப்பது திருடாகாது என்று இரண்டாம் வத்திக்கான சங்கம் கூறியுள்ளது.

"ஒருவர் மிகப்பெரும் இடர் நிலையில் உழன்றால், அவர் மற்றவர்களின் செல்வத்திலிருந்து தமக்குத் தேவையானதை எடுக்கும் இடரிமை பெற்றுள்ளான். பசியால் மடியும் மனிதருக்கு உணவளி; ஏனென்றால் அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவர்களைக் கொண்றவளாவாய்" (இன்றைய உலகில் திருச்சபை, 69)

பிறர்க்கு நாம் உணவனிக்காமல் அவர்கள் இறந்தால், நாம் அவர்களைக் கொலை செய்தவர்கள்! பயங்கரமான கூற்று!

"தனி ஒருவனுககு, உணவு இல்லையெனில், செகத்தினை அழிந்திடுவோம்" பாரதியாரின் ஆவேசம்!

கண்ணகி மதுரையைத் தீயால் எரித்துச் சாம்பல் ஆக்கினாள். இருந்து என்ன தெரிகிறது?" என்று தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள், "அக்காலத்தில் தீயணைக்கும் படை இல்லை என்பது தெரிகிறது என்றார்களாம், அவர்களுக்குக் கண்ணகியின் கற்பின் திறன் பற்றிக கடுகளவும் தெரியவில்லை.

அவ்வாறே, "இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐந்தாயிரம் பேருக்கு உணவு கொடுத்ததிலிருந்து என்ன தெரிகிறது?" என்று நம்மை யாராவது கேட்கும்போது, "நமக்குள்ளதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தெரிகிறது என்று நாம் பதில் சொன்னால், நாம் இப்புதுமையின் இறையியல் உண்மையை உணரத் தவறிவிடுகிறோம்.

இயேசு செய்து, பல்வேறு புதுமைகளில், ஏழே ஏழு புதுமைகளை மட்டும் யோவான் பொறுக்கி எடுத்துத் தனது நற்செய்தியில் எழுதியுள்ளார். மேலும், அவர் இயேசுவின் புதுமைகளை வெறும் புதுமைகளாகக் காணாமல், 'அரும் அடையாளங்களாகக்' காண்கின்றார், அரும் அடையாளம் என்றால், புதுமையைக் கடந்து சென்று, அதனுள் பொதிந்துள்ள ஆழமான இறையியல் உண்மையை உணர்த்தும் சாதனமாகும். அப்படியானால், அப்பம் பலுகுகிற புதுமையில் பொதிந்துள்ள ஆழமான இறையியல் உண்மை என்ன ?

பழைய உடன்படிக்கையில் இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் மோசே தலைமையில் 'மன்னா' என்ற அதிசய உணவை உண்டனர். புதிய உடன்படிக்கையில், இயேசு கிறிஸ்து பாலைநிலத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்ததின் மூலம். அவரே புதிய மோசே, உலகிற்கு வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் என்ற ஆழமான இறையியல் உண்மையை வெளிப்படுத்துகிறார் யோவான்.

மோசே தமது இறுதி உரையில் இஸ்ரயேல் மக்களிடம், 'உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு (இச 18:15) என்று கூறினார். மோசேயால் முன்னறிவிக்கப்பட்ட அந்த இறைவாக்கினர்தான் இயேசு கிறிஸ்து இயேசுவின் புதுமையைக் கண்ட மக்களும், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" (யோவா 6:14) என்று கூறினார்கள்.

இயேசு கிறிஸ்து பல்வேறு இறைவாக்கினரில் ஒருவரல்ல. மாறாக, உலகிற்கு வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் : இறைவனால் அருள்பொழிவு பெற்ற மெசியா; உலக மீட்பர். இயேசு கிறிஸ்துவே இறைமகனும் மெசியாவும் ஆவார் என்பதை நம்பி, அவர் பெயரால் வாழ்வு பெறவேண்டும் என்பதே யோவான் நற்செய்தியின் ஒரே குறிக்கோளாகும் (யோவா 20:30).

நாமும், இன்றைய நற்செய்தி வாயிலாக, நமக்குள்ளவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நமது சமுதாயக் கடமையை உணர்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், இயேசுவே கடவுள் உலகிற்கு அனுப்பிய இறுதி இறைவாக்கினர், கடவுளின் மகன் (எபி 1:1). அவரை நம்பி அவர் பெயரால் முடிவில்லா வாழ்வு பெறவேண்டும் என்ற ஆழமான இறையியல் உண்மையையும் உணர்வோமாக.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“அன்புடன் தாங்கி, அமைதியுடன் ஒன்றிணைந்து வாழ்வோம்”

உங்களுக்குக் குஞ்சரம் அம்மாவைத் தெரியுமா? அப்படியானால் நீங்கள் 1885 ஆம் ஆண்டிலிருந்து 1890 ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். உணவு கிடைக்காமல் புற்றில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த அரிசியைத் தின்றும், மூன்றுவேளையும் முருங்கைக் கீரையை அவித்துத் தின்ற காலமது. கண்முன்னே ஒட்டிய வயிறுடன் கணவன், மனைவி, பிள்ளைகள்.. இதில் முதலில் யார் முதலில் இறப்பாரோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த மிகக் கொடுமையான அந்தக் காலக்கட்டத்தில், மதுரையில் உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் வாழ்ந்தவர்தான் குஞ்சரம் அம்மா. தாதி குலத்தைச் சார்ந்த இவரின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. மேலும் அக்காலத்தில் இவர் செல்வச் சீமாட்டியாகவே இருந்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கசிந்து, அவர்களுக்குக் கஞ்சி காயச்சி ஊற்ற முடிவு செய்தார் இவர். முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றி வந்த இவர், மக்கள் நீண்டதொரு வரிசையில் வருவதைப் பார்த்துவிட்டு மூன்று பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றினார். இதற்காக இவர் தன்னிடமிருந்த இரண்டு பெரிய வீடுகள், நகைகள், ஆபரணங்கள் என எல்லாவற்றையும் விற்றார். ஒருசில பணக்காரர்கள் இவர் செய்துவந்த இரக்கச் செயலைப் பார்த்துவிட்டு, “இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை?” என்றெல்லாம் பேசினர். இவர் அவர்கள் பேசியதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்துக்கொண்டு வந்தார். பஞ்சத்தின் கோர தாண்டவத்தைப் பார்த்துவிட்டு, அப்பொழுது மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர், ஆறாவது வாரத்திலிருந்து மூன்று இடங்களில் காஞ்சி காட்சி ஊற்ற ஏற்பாடு செய்தார். அதற்கெல்லாம் குஞ்சரம் அம்மாவே மூல காரணமாக இருந்தார். ஏறக்குறைய பதின்மூன்று மாதங்கள் குஞ்சரம் அம்மாவின் வீட்டில் இருந்த அடுப்பு அணையாமல் எரிந்தது. அதன்பிறகு அவரிடம் மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்க எதுவும் இல்லாமல் போனது.

ஒருவழியாகத் தாது வருடம் முடிந்தது. அதற்குப் பின் வந்த இரண்டாம் மாதத்தில் குஞ்சரம் அம்மா இருந்தார். அப்பொழுது வடக்கு ஆவணி வீதியில் கூடிய கூட்டம், மதுரையில் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு கூடும் கூட்டத்திற்கு இணையானதாக இருந்தது குறிப்புகள் சொல்கின்றன. ஆம், குஞ்சரம் அம்மா மக்களின் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி, அவர்களுக்கு உணவு தந்தார். அதனால்தான் அவருடைய இறப்பின்பொழுது, அவ்வளவு கூட்டம் கூட்டியது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பசியோடு இருப்பவரை அன்புடன் தாங்கிக்கொள்ள அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம் .

உணவின்றித் தவித்த – தவிக்கும் மக்கள்
ஊர்ப்புறங்களில் இப்படியொரு பழமொழி சொல்வதுண்டு: “நரி வலம் வந்தால் என்ன, இடம் வந்தால் என்ன. நம்மீது விழுந்து பிடுங்காது இருந்தால் போதும்.” யாரும் எப்படியும் இருக்கட்டும், நான் நன்றாக இருந்தால் போதும் என்பதுதான் இந்தப் பழமொழி உணர்த்தும் உண்மை. இன்றைக்குப் பலர், ‘நம்முடைய வீட்டில் அடுப்பு எரிந்தால் போதும்; நாம் நன்றாக இருந்தால் போதும். எவரும் எக்கேடு கெட்டும் போகட்டும்’ என்று தன்னலத்தோடு வாழ்வதைக் காண முடிகின்றது. இன்னும் ஒருசிலர் தாங்கள் நன்றாக இருப்பதால், எல்லாரும் நன்றாக இருப்பார்கள் என்ற குறுகிய மனப்பான்மையோடு வாழ்வதையும் காண முடிகின்றது. இன்றைக்கும் ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல் பட்டினி கிடக்கும் மக்கள் உலகில் ஏராளம் உண்டு. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை இயேசுவின் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இருந்திருக்கும்.

இந்தப் பின்னணியில்தான் இயேசு தன் சீடர்களிடம், “இன்று தேவையான உணவை எங்களுக்குத் தரும்” (மத் 6: 11) என்று இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார். தமிழ் இலக்கியத்தில்கூட, “உண்டி (உணவு) கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்” என்று சொல்லப்படுகின்றது. உயிரைக்கொடுப்பவர் கடவுள். அப்படியெனில், ஒருவர் பசியோடு இருக்கின்ற ஒருவருக்கு உணவு கொடுப்பதன் மூலம், அவர் கடவுளாகின்றார் என்பதே இதில் பொதிந்துள்ள உண்மை. ஆதலால், பசியோடு இருக்கின்ற மக்களுக்கு உணவிடவேண்டும். அப்படி நாம் உணவிடுவதன் மூலம் கடவுளின் தூதர்களாக மாறுகின்றோம் என்பது நம் மனத்தில் பதிய வைக்கவேண்டிய செய்தி.

சீடர்களின் தட்டிக்கழிப்பும், இயேசுவின் பரிவும்
பசியோடு இருப்பவருக்கு உணவதன் மூலம் ஒருவர் கடவுளின் தூதராக - கடவுளாக மாறுகின்றார் என்று சிந்தித்தோம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலியா இருபது வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளிப்பதையும், நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதையும் குறித்து வாசிக்கின்றோம்.

தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு இயேசு உணவளிப்பதற்கு முன்பாக, இயேசுவின் சீடர்கள் அப்பிரச்சனையை எப்படி அணுகினார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். முதலாவதாக, மாற்கு நற்செய்தியின்படி இயேசுவின் சீடர்கள் அவரிடம், “...உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பி விடும்” (மாற் 6: 35-36) என்கிறார்கள். இது சீடர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது. அடுத்ததாக, பிலிப்பு இயேசுவிடம், “இருநூறு தெனாரியத்த்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” (யோவா 6:7) என்கிறார். இது பணமிருந்தால் எதையும் செய்துவிட என்ன எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

இதற்கு அடுத்ததாக அந்திரேயா, “...ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்” என்கிறார். அந்திரேயாவின் வார்த்தைகள் எலியாவின் பணியாளர் பேசும், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்ற வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும் அந்திரேயாவின் வார்த்தைகளில் இயலாமேயே வெளிப்படுகின்றது. இப்படித் தன் சீடர்கள் தங்கள் இயலாமையைச் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது, இயேசு சிறுவன் கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்கின்றார். இதனால் எல்லாரும் வயிறார உண்டது மட்டுமல்லாது. எஞ்சியதைப் பன்னிரண்டு கூடைகளில் நிரம்புகின்றார்கள்.

இயேசு செய்த இந்த வல்ல செயல் நான்கு நற்செய்தி நூல்களில் இடம்பெறுவதால் இது உண்மை என நிரூபணமாகின்றது. மேலும் நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதை ஆண்டவரிடம் கொடுத்தால், அது நிறைவாக மாறும் என்ற உண்மையானது நமக்கு உணர்த்தப்படுகின்றது.

வறியவர்களை அன்போடு தாங்குவோம்
நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதைக் கடவுளின் கைகளில் கொடுத்தால் நிறைவாக மாறும்; பட்டினி என்பது இல்லாமல் போகும் என்பதை நற்செய்தி வாசகமும்; ஏன், முதல் நமக்கு உணர்த்தியதைக் குறித்துச் சிந்தித்தோம். இப்படி நம்மிடம் இருப்பதைக் கடவுளின் கையில், அல்லது அவரது மக்களின் கையில் கொடுப்பதற்கு, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, வறியவர்களை அன்புடன் தாங்குவது தேவையான ஒன்றாக இருக்கின்றது. வறியவரை அன்பு தாங்குவதற்கு, எனக்கு அடுத்திருப்பவர் கிறிஸ்துவின் உடலில் ஓர் உறுப்பாக இருக்கின்றார் (1 கொரி 12: 12) என்ற எண்ணமானது நமக்கு இருக்கவேண்டும்.

நம்முடைய உடலில் உள்ள ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டுவிட்டால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மாறாக, அதற்கு ஏதாவது செய்வோம். அதைப் போன்று கிறிஸ்து என்ற உடலின் உறுப்பாய் இருக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும்; அவரை அன்போடு தாங்க வேண்டும். எனவே, நாம் இயேசு எப்படி பசியோடு இருந்தவர்மீது பரிவோடு கொண்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களை அன்புடன் தான்கினாரோ, அப்படி நாமும் வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை அன்புடன் தாங்க முயற்சி செய்வோம்.

சிந்தனை
‘உன்னால் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுக்கலாமே’ என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. ஆகையால், பசியோடு இருப்பவருக்கு உணவளித்து, பசி பட்டினியில்லா உலகை உருவாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இம்மக்களுக்கு உண்ணக் கொடு!

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை சமூகவியலாளர் முன்மொழிகின்றனர். இவற்றில் 'உணவுத் தேவை' இரண்டு நிலைகளில் மற்றவற்றை விட தனித்து நிற்கிறது. ஒன்று, உணவு மட்டும்தான் நம் தேவைக்கு மேல் நம்மால் எடுத்துக்கொள்ள இயலாது. எடுத்துக்காட்டாக, மூன்று அல்லது நான்கு தோசை சாப்பிட்டவுடன் வயிறு, 'போதும்!' என்று சொல்லிவிடும்! அதற்கு மேல் நாம் எவ்வளவு விரும்பினாலும், ருசித்தாலும் வயிறு அதை ஏற்காது. ஆனால், உடையும் இருப்பிடமும் நம் தேவைக்கு மேலும் நம்மால் வைத்துக்கொள்ள இயலும். இரண்டு, உணவு என்னும் தேவையில்தான் நாம் மற்ற எல்லா உயிரினங்களோடும் இணைந்திருக்கின்றோம். எல்லா உயிரினங்களுக்கும் (தாவரங்கள் உட்பட) உணவுத் தேவை இருப்பது போல நமக்கும் இருக்கிறது. பசி என்னும் உணர்வு நம்மை அனைத்து உயிரினங்களிலும் நாமும் ஒருவர் என்ற உணர்வைத் தருகின்றது.

இன்று தொடங்கி, வருகின்ற ஐந்து வாரங்களுக்கு, 'வாழ்வுதரும் உணவு' என்னும் சொல்லாட்சியில் சுழல்கின்றன நற்செய்தி வாசகங்கள். ஒருவர் மற்றவருக்கு ஊட்டம் தருவது அல்லது உணவு தருவது என்பதே இயேசுவின் உரையின் மையமாக இருக்கிறது. அந்தப் பேருரையை அறிமுகம் செய்யும் நிகழ்வாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய முதல் வாசகம் (2 அர 4:42-44) மிகச் சிறிய ஆனால் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. இறைவாக்கினர் எலிசாவிடம் விளங்கிய வல்ல செயல் நிகழ்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது. பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு விவசாயி புது தானியத்தில் செய்யப்பட்ட வாற்கோதுமை அப்பங்களையும் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வருகின்றார். 'பாகால் சாலிசா' என்ற பெயரிலிருந்து, எலியாவின் காலத்திற்குப் பின்னரும் பாகால் வழிபாடு இஸ்ரயேலில் இருந்தது என்பதை நாம் உணர முடிகின்றது. விளைச்சலின் முதற்கனிகளைக் கடவுளுக்குப் படைக்கும் நோக்கில் அந்த நபர் அவற்றை வழிபாட்டுத்தலத்திற்குக் கொண்டு வருகின்றார். வழக்கமாக அப்படிக் கொண்டுவரப்படும் பொருள்கள் தலத்தில் சேகரிக்கப்பட்டு, அங்கே பணியாற்றுகின்ற குருக்கள் மற்றும் இறைவாக்கினர்களால் பகிர்ந்துகொள்ளப்படும்.

முதற்கனிகளை அந்த நபரிடமிருந்து பெறுகின்ற எலிசா அவற்றை கடவுளின் முன் வைக்காமல், அங்கிருந்த மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்குமாறு பணிக்கின்றார். ஒரு வேளை, 'பாகால்' நாட்டிலிருந்து வந்ததால் அதை இஸ்ரயேலின் கடவுளுக்குப் படைக்காமல் இருந்திருக்கலாம் எலிசா. கடவுளுக்கு மட்டுமே உரித்தான பொருளை எடுத்து மனிதர்களுக்குக் கொடுப்பது அங்கிருந்தவர்களுக்குப் பெரிய இடறலாக இருந்திருக்கும். ஆகையால்தான், அங்கிருந்த பணியாளனும், 'இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?' என்று தயக்கம் காட்டுகின்றார். இருந்தாலும் எலிசா அவற்றை மக்களுக்கு அளிக்குமாறு பணிக்கின்றார். மக்கள் அனைவரும் உண்கின்றனர். மீதியும் இருக்கின்றது.

இது எலிசாவின் சொற்களால் அல்ல. மாறாக, ஆண்டவரின் வாக்கின்படியே நிறைவேறுகின்றது. ஆண்டவருடைய வாக்கை எலிசா செயல்படுத்துகின்றார். 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் சொன்னதை அப்படியே சொல்கின்றார் எலிசா. ஆண்டவரின் வாக்கின்படியே நிகழ்கின்றது. கடவுளின் இல்லத்தில் கூடியிருந்தவர்களின் பசியே கடவுளுக்கு முதன்மையானதாகத் தெரிகிறதே தவிர, அங்கு வழக்கத்தில் இருந்த வழிபாட்டு முறைமைகள் அல்ல.

இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:1-6), 'ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்' என எபேசு நகரத் திருஅவையை இறைஞ்சுகின்றார் பவுல். சிறையிலிருந்தாலும் எபேசு நகரத் திருஅவையினர் மதிப்பீடுகளில் வளர வேண்டும் என விரும்பும் பவுல் ஐந்து மதிப்பீடுகளைக் குறிப்பிடுகின்றார்: 'தாழ்ச்சி' – அதாவது, ஒருவர் மற்றவர் மேல் அதிகாரம் செலுத்தாமலும் பயமுறுத்தாமலும் இருப்பது. 'கனிவு' – தேவையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொள்வது. 'பொறுமை' மற்றும் 'அமைதி' – பிரிவுகளும் பிளவுகளும் ஏற்படாத வண்ணம் நடந்துகொள்வது. மற்றும் 'அன்பு' - இதன் வழியாக ஒருவர் மற்றவரைத் தாங்க வேண்டும். மேற்காணும் ஐந்து மதிப்பீடுகள் ஒரு குழுமத்திற்கான உணவு அல்லது ஊட்டமாக இருக்கின்றன.

நற்செய்தி வாசகம் நமக்கு மிகவும் அறிமுகமான வாசகம். இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிரும் நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். முதல் ஏற்பாட்டு எலிசா போல இயேசு இந்த வல்ல செயலை நிகழ்த்தினாலும், அங்கே எலிசா, ஆண்டவருடைய பெயரால் வல்ல செயலை நடத்துகின்றார். ஆனால், இயேசுவோ, தானே இச்செயலை நிகழ்த்துகின்றார்.

முதல் ஏற்பாட்டின் பின்புலத்தில் இந்நிகழ்வு இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: ஒன்று, பாலைநிலத்தில் பசியால் வாடிய மக்களுக்கு மன்னாவை ஆண்டவராகிய கடவுள் வழங்கியது போல, இங்கே இயேசு தன்னைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்திற்கு உணவு தருகின்றார். இரண்டு, இந்த நிகழ்வு நற்கருணையையும் நற்கருணைக் கொண்டாட்டத்தையும் நினைவுபடுத்துகின்றது. ஏனெனில், இந்த நிகழ்வின்படி, மக்கள் பசியாக இருப்பதாக இங்கே எந்தப் பதிவும் இல்லை. மேலும், 'எங்களுக்கு உணவு தாரும்' என்று யாரும் இயேசுவைக் கேட்கவும் இல்லை. இயேசுவே முன்வந்து. 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' என்று பிலிப்பிடம் கேட்கின்றார். மேலும், 'பாஸ்கா விழா அண்மையில் இருந்தது' என்னும் வாக்கியம், நற்கருணையின் முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது. ஏனெனில், ஒத்தமைவு நற்செய்தியாளர்களின் பதிவின்படி, இயேசு பாஸ்கா விழாவின்போதுதான் நற்கருணையை ஏற்படுத்துகின்றார். மேலும், யோவான் நற்செய்தியில் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வு இல்லை. ஆனால் இங்கே, அதே நிகழ்வில் உள்ள வினைச்சொற்களை இயேசு பயன்படுத்துவதாக யோவான் பதிவு செய்கின்றார்: 'அப்பங்களை எடுத்து,' 'கடவுளுக்கு நன்றி செலுத்தி,' 'அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.'

மக்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே!' (காண். இச 18:15) என்று இறைவாக்கின் நிறைவாக இயேசுவைப் பார்க்கின்றனர். தொடர்ந்து அவரை அரசராக்க முயற்சி செய்கின்றனர். இயேசு அங்கிருந்து தனியாக மலைக்குச் செல்கின்றார். இயேசுவின் நோக்கம் மக்களின் வயிற்றுப் பசி நிறைவேற்றுவது அல்ல என்பது இனிதான் வாசகருக்குப் புரியும்.

ஆக, முதல் வாசகத்தில் யாரும் கேட்காமலேயே எலிசா மக்கள் கூட்டத்திற்கு உணவு வழங்க முன் வருகின்றார். இரண்டாம் வாசகத்தில், குழுமத்திற்கான ஊட்டம் என்னும் மதிப்பீடுகளைப் பவுல் வழங்குகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்களின் வயிற்றை நிரப்பி, அதிலிருந்து வயிற்றையும் தாண்டிய உணவு பற்றிப் பேசுவதற்கான தளத்தை உருவாக்குகின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்வது என்ன?

ஒன்று, இறைவன்தாமே உணவு வழங்க முன்வருகின்றார். பசியாற்றுதல் இறைவன் செயல் என்றால், நாம் ஒருவர் மற்றவரின் பசியாற்றும்போது அதே இறைமைப் பண்பை நம்மில் வெளிப்படுத்துகின்றோம்.

இரண்டு, கடவுள் தரும் உணவு குறைவின்றி இருக்கிறது. எலிசாவின் பணியாளர்களும் எஞ்சிய உணவைச் சேகரிக்கின்றனர். இயேசுவின் சீடர்களும் எஞ்சிய உணவைச் சேகரிக்கின்றனர்.

மூன்று, எலிசாவின் பணியாளர்போல, அல்லது பிலிப்பு போல, சில நேரங்களில், 'இது எப்படி?' என்று தயக்கம் காட்டுகின்றோம். மனிதக் கணக்கை விட இறைவனின் மனக் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது.

இறுதியாக, வயிற்றுக்குரிய உணவையும் தாண்டிய ஓர் உணவு உண்டு என்பதைத் தன் தனிமையின் வாயிலாக உணர்த்துகின்றார் இயேசு.

இன்றைய பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (காண். திபா 145), 'எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றுக்கு உணவளிக்கின்றீர்' எனப் பாடுகின்றார்.

அவரை நோக்கி நம் கண்கள் இருக்கும்போது,

நம் வயிற்றை நிரப்பும் அவர், 'மக்களுக்கு உண்ணக் கொடு!' என்று நமக்கும் கட்டளை இடுகின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"பகிர்தலில் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்வோமா!"

பகிர்தல் என்ற பண்பானது இந்த உலகத்திலே உன்னதமான பண்பு. நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிரும் பொழுது நம் வாழ்வு நிறைவு பெறுகின்றது. நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர மனம் இல்லாமல் இருக்கும் பொழுது நம் வாழ்வு நிறைவற்ற வாழ்வாக இருக்கின்றது. இன்றைய நாள் நற்செய்தி வழியாக ஆண்டவர் இயேசு நம்மை பகிர்தலுள்ள மக்களாக வாழ அழைப்பு விடுகிறார். பகிர்தல் என்பது இழப்பல்ல ; மாறாக, அது நீரூற்று. கிணற்றில் ஊற்றின் வழியாக தண்ணீரை எடுக்கும் பொழுது அது மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்கும். கல்வியை பிறருக்கு பகிரும் பொழுது அது பன்மடங்கு கற்பிப்பவர்களுக்கும் கற்றுக் கொள்பவர்களுக்கும் அதிகமாகும். பகிரும் பொழுதுஅதை பன்மடங்காக கடவுள் எனக்கு கொடுப்பார்.இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அப்பம் பகிர்தல் வழியாக மக்களுக்கு உணவு அளித்தார்.

பகிர்தலின் வழியாக தன்னுடைய தியாகம் நிறைந்த மனநிலையையும் பரிவு நிறைந்த உள்ளத்தையும் ஆயருக்குரிய மனநிலையையும் இயேசு வெளிப்படுத்தினார். இயேசு தன் பணி வாழ்வு முழுவதும் பகிர்வு நிறைந்த மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தான் கொண்டிருந்த இறையாற்றலை தன்னுடைய இறையாட்சி பணியில் வழியாக இயேசு வெளிப்படுத்தினார். தன்னுடைய குணமளிக்கும் ஆற்றலை நோயாளர்களை குணப்படுத்துவது வழியாக வெளிப்படுத்தினார். தன்னுடைய போதிக்கும் ஆற்றலை மக்கள் மீட்புப் பெற வழிகாட்டுவது வழியாக வெளிப்படுத்தினார். தன்னுடைய வழிநடத்தும் ஆற்றலை சீடர்களை தனது இறையாட்சி பணிக்கு பக்குவப்படுத்தி வழிநடத்துவதன் வழியாக வெளிப்படுத்தினார். தன்னுடைய மனிதநேயம் நிறைந்த மனநிலையை தன்னுடைய அன்றாட வாழ்வின் வழியாகவும் மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும் வெளிப்படுத்தினார். இவ்வாறு இயேசுவின் வாழ்வு முழுவதுமே பகிர்தலின் மனநிலையை காணமுடிகிறது.

பழைய ஏற்பாட்டிலும் பகிர்தல் நிறைந்த வாழ்வுக்கு சான்றுகள் இருக்கின்றன. கடவுள் இந்த உலகத்தை படைத்ததே பகிர்தலின் உச்சத்தை சுட்டிக்காட்டுகிறது. கடவுள் தன்னுடைய இறை ஆற்றலை தனக்குள்ளே வைத்துக்கொள்ளாமல் உலகத்தைப் படைத்தது வழியாக வெளிப்படுத்தினார். ஆபிரகாம் தன்னுடைய சகோதரர் லோத் தோடு சொத்துக்களை பகிர்ந்தார். குறிப்பாக நல்லவற்றை அவருக்கு கொடுத்து பகிர்ந்தார். எனவே கடவுள் ஆபிரகாமை உயர்த்தினார். இறைவாக்கினர்களும் கடவுளிடமிருந்து பெற்ற இறைவாக்குகளை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளாமல் பிறரோடு பகிர கூடிய மனநிலை கொண்டவராக இருந்தனர். ஆண்டவருடைய இறைவார்த்தையைக் கேட்டு மக்கள் அனைவரும் நலமோடும் வளமோடும் கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ வழிகாட்டினர். அன்னை மரியாள் "இதோ ஆண்டவரின் அடிமை. உன் சொற்படி நிகழட்டும் "என்று தன்னையே பகிர்ந்து இவ்வுலகம் மீட்புப் பெற ஒரு கருவியாகப் பயன்பட்டார். மீட்பராக இயேசுவை இந்த உலகிற்கு கொண்டு வர அன்னை மரியாவின் பகிர்தல் நிறைந்த வாழ்வு அடிப்படையாக இருந்தது. ஆண்டவர் இயேசு தன்னுடைய இறையாட்சி பணியை தொடர்ந்து செய்ய தன்னுடைய ஆற்றலையும் வல்லமையையும் சீடர்களோடு பகிர்ந்து, அவர்கள் நோய்களை போக்கி பேய்களை விரட்ட அதிகாரம் அளித்தார். இது இயேசுவின் பகிர்தலுக்கு மிகச்சிறந்த உதாரணம். இயேசுவும் தன்னுடைய இறையாட்சி பணியினை தொடர்ந்து செய்ய தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுப்பதன் வழியாக புது வாழ்வையும் புது மாற்றத்தையும் கொடுத்துள்ளார்.

நமது அன்றாட வாழ்வில் சிந்தித்து பார்ப்போம். பகிர்வு நிறைந்த உள்ளத்தோடு நாம் வாழ தயாரா? கொரோனா என்ற இந்த இக்கட்டான சூழலில் எத்தனையோ மனிதர்கள் உண்ண உணவில்லாமலும் உடுத்த உடையில்லால்லாமலும் இருக்க இடமில்லாமலும் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யும் பொழுது நாம் பகிர்வு நிறைந்த உள்ளத்தோடு வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக நம்முடைய வாழ்வு இயேசுவின் பார்வையில் முழுமை பெற்றதாக இருக்கும். பகிர்தல் வழியாக நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர தயாரா?

இறைவேண்டல் :
அன்பான இறைவா! பகிர்தலின் வழியாக இந்த நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகரவும் பிறர் வாழ்வு வளம் பெற மனிதநேய சிந்தனையோடு உழைத்திடுவும் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு