மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 16-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எரேமியா. 23:1-6|எபேசியர் 2:13-18|மாற்கு 6:30-34

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்இயேசு என் மீட்பர்

நியூயார்க் நகரிலே எலினா என்ற கிராமப் பகுதியிலே ஒரு நீக்ரோ பெண்மணி தன் 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் காத்து நிற்கிறாள். சிறிய பையனுக்கோ ஒன்றுமே புரியவில்லை . ஓடியாடி விளையாடும் சிறுவன் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறான். தாயோ சோக நிலையில் ஆவலோடு எதையோ எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அம்மா ஏன் இங்கு நிற்கிறீர்கள்? வாங்கம்மா வீடு போவோம் எனக் கூப்பிடுகிறான். அதேநேரத்தில் அவள் எதிர்பார்த்த புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தது. ஆவலோடு நெருங்குகிறாள். மகனே இங்கே பார்! இங்கே இறந்து கிடக்கும் ஆப்ரகாம் லிங்கன் இவர்தான் உன்னையும் என்னையும் உரிமையோடு இந்த நாட்டிலே வாழ வைக்க உயிர் கொடுத்த மகான். நமக்கு உரிமை பெற்றுத்தர தன் உயிரையே பலியாக்கத் துணிந்துவிட்டார் என்று கண்ணீர் மல்கத் தாய் தன் மகனிடம் கூறினாள். உடலைத் தொட்டு முத்தமிட்டு இடம் நகர்ந்தாள்.

இதேபோல் உலகிலே எத்தனையோ தலைவர்கள் உயிர் கொடுத்துள்ளார்கள். பாரத நாட்டின் உரிமைக்காக உயிர் கொடுத்தார் காந்திமகான் . மாந்தருள் மாணிக்கமாய்த் திகழ்ந்த ஜான் கென்னடி நீதிக்குச் சான்று பகரத் தன் உயிரையும் கொடுத்தார். தென் அமெரிக்காவில் எல் சால்வடோர் மறைமாவட்ட பேராயர் ஆஸ்கார் ரோமோரோ அந்த மறைமாவட்ட ஏழை மக்களுக்கு குரல் கொடுத்ததால் பலி பீடத்தில் நிற்கும்போதே சுட்டுக்கொல்லப் பட்டார். இவர்கள் எல்லாம் நாட்டின் அரசியல் விடுதலைக்காக, உரிமைக்காக உயிர் கொடுத்தவர்கள். ஆனால் சரித்திரத்தில் ஒரே ஒருவர் தான் உலகின் பாவங்களைப் போக்க உயிர் கொடுத்துள்ளார். இவர்தான் இயேசு என்ற நாமம் கொண்ட பெருமகான்.

இவரைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே புனித மாற்கு என்பவர் 6-ஆம் அதிகாரத்தில் 34- ஆம் வசனத்தில் குறிப்பிடுவதுபோல் ஆடுகளின் மேல் அக்கறையும் இரக்கமும் கொண்டவராக காட்சி தருகின்றார். நெடுநேரம் போதிக்கின்றார். பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் ஆட்டின் தலையிலே கை நீட்டி தங்கள் பாவங்களை அதன் மேல் சுமத்தி காட்டுக்குள்ளே விரட்டி விடுவார்கள். அது அவர்களின் பாவங்களைச் சுமந்து போகும் பலி ஆடாகும். அதேபோல் அனைத்துப் பாவங்களையும் தன் மேல் சுமந்தவராய் யோர்தான் நதிக்கரையிலே நடந்து வர இவரே உலகின் பாவங்களைப் போக்க வந்த உன்னத செம்மறி என திருமுழுக்கு யோவானால் (யோவா. 1:29) சுட்டிக்காட்டப்படுகிறார். இவர் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டு சென்றார். எப்படி சந்தனக் கட்டையானது அரைக்கப்பட்டுத் தண்ணீரில் கலக்கப்பட்டால் தன் மணத்தைப் பரப்புகின்றதோ அதேபோல் நல்லாயன் இயேசு ஆடுகளின் மேல் அக்கறை கொண்டவராய் போதிக்கின்றார். ஆடுகளுக்காக உயிர் கொடுக்கும் ஆயனாக மாறிவிட்டார்.

பன்றியும் பசுவும் நடத்திய உரையாடலை கற்பனையாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கேட்க விரும்புகிறீர்களா? அன்றொரு நாள் பன்றியானது பசுவை நோக்கி பேசியது: ஓபசுவே! எத்தனையோ மக்கள் என்னை வெட்டி சமைத்து நாட்கணக்காக சாப்பிடுகிறார்கள், ஊறுகாய் உண்டாக்கி உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள். ஆனால் மக்களோ சீ பன்றி என்று கூறி என்னை வெறுக்கிறார்கள். ஆனால் உன்னை ஓ பசுவே என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும் அழைக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சமான வித்தியாசம்! சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பசு பேச ஆரம்பித்தது : ஓ பன்றி! நீயும் நானும் மிருகங்கள் தான். ஆனால் ஒன்று, நீ இறந்த பின் மக்களுக்கு பயன்படுகின்றாய். நானோ உயிரோடு இருக்கும்போதே பயன்படுத்தப்படுகின்றேன். எனவே என்னை மக்கள் மதிக்கிறார்கள், விரும்புகிறார்கள் என்று பதில் உரைத்தது. ஆம் அன்புக்குரிய வர்களே நல்லாயனாகிய இறைவன் நமக்குத் தரும் பாடம் உயிரோடு இருக்கும்போதே நல்ல ஆடுகளாக, ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கும் ஆடுகளாக, ஏன் பலி ஆடாக கூட மாற வேண்டும். அப்போது நாம் நிறை வாழ்வு பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நற்செய்தியாளர்களாக மாறுவோம்.

எதற்காகத் தனிமையான இடத்திற்குச் சென்று திருத்தூதர்களை இயேசு ஓய்வெடுக்கச் சொன்னார்? இதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு தலையாய காரணம் அவர்கள் இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக!

ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்குவதுபோல, இறைவனோடு தனித்திருக்கவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உண்மையை இயேசு நமக்கு இன்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஞான முத்துக்கள் (Pearls of Wisdom) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட உவமை இது.

எல் பெத்தேல் (EI Bethel) என்பவர் ஒரு மடாதிபதியைச் சந்தித்தார். அவருக்குத் துறவியாக ஆசை. அவர் துறவற மடத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினார். எல் பெத்தேல் மடாதிபதியைப் பார்த்து, ஏன் துறவிகள் தனிமையில் வாழ வேண்டும்? கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! அவரை எங்கு வேண்டுமானாலும் அன்பு செய்யலாமே! என்றார்.

மடாதிபதி பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு மெழுகுதிரியை ஏற்றி அதை எல் பெத்தேலிடம் கொடுத்து, குடிசைக்கு வெளியே நின்று இதை அணையாமல் பார்த்துக்கொள் என்றார்.

எத்தனை முறை ஏற்றினாலும் அத்தனை முறையும் மெழுகுதிரி காற்றில் அணைந்துவிட்டது. அப்போது எல் பெத்தேல், இது குடிசைக்குள் மட்டுமே அணையாது எரியும் என்றார். அதற்கு மடாதிபதி, நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லிவிட்டாய். இறை அன்பு என்பது இந்த மெழுகுதிரியைப் போன்றது. சத்தமும், சந்தடியும், பராக்குகளும், சோதனைகளும் நிறைந்த உலகத்திலே அதனால் எளிதாக எரிய முடியாது; அமைதியில்தான் அது எரிய முடியும் என்றார். எல் பெத்தேல் ஞானம் பெற்று துறவற மடத்தில் சேர்ந்தார்.

சீடர்கள் மனத்தில், இதயத்தில் இறை அன்பு சுடர்விட்டு எரிய வேண்டும். அந்த இறை அன்பில் அவர்கள் மனம், இதயம் வெதுவெதுப்பாகி இறை அன்பை உலகுக்கு அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். இதனால்தான் தனிமையான இடத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்கு அன்புடன் கட்டளையிட்டார். அவரே தனிமையை நாடி, அவரது சீடர்களுக்கு முன்மாதிரியாய் விளங்கினார் (மாற் 1:35).

தனிமையில் நமது மனமும், இதயமும் இறை அன்பால் பற்றி எரியும்போது நாம் உள்ளொளி பெற்று நீதி நிறைந்த ஆயர்களாக (முதல் வாசகம்), அமைதி நிறைந்த நற்செய்தியாளர்களாக (இரண்டாம் வாசகம்) மாறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !

மேலும் அறிவோம் :

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பங்குத் தந்தை ஞாயிறு திருப்பலியில் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்தபோது மக்கள் தங்குவதைக் கண்டு, "ஐயோ! தீ. தீ" என்று கத்த, மக்கள் கோவிலைவிட்டு ஓட ஆரம்பித்தனர், ஆனால், எங்குமே தீயைக் காணாத அவர்கள் பங்குத் தந்தையிடம், 'சாமி, தீ எங்கே?' என்று கேட்க, அவர், "நரகத்தில் " என்று அமைதியாகச் சொன்னார். மக்கள் கோபமும் ஆத்திரமும் அடைந்து அவரை மனதாரத் திட்டினார்கள். அப்போது பங்குத் தந்தை அவர்களிடம், “நான் பிரசங்கத்தில் உண்மையைச் சொல்லும்போது தூங்கி விழுகிறீர்கள்; பொய் சொன்னால் விழித்துக் கொள்கிறீர்கள்" என்றார்.

ஆம், இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்குக் கிடையாது. இன்றைய விளம்பர உலகில் பொய் மெய்யாகி விடுகிறது; மெய் பொயயாகி விடுகிறது. பழங்காலத் தமிழ்ப்பாடல் பின்வருமாறு உள்ளது:

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால்
மெய்போலும்மே மெய்போலும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

ஒருவர் பேசுவதெல்லாம் பச்சைப்பொய்; ஆனால் அவர் கவர்ச்சியாகப் பேசுகிறார். எனவே அவரது பொய்யையும் மக்கள் மெய்யென நம்புகின்றனர். மாறாக, மற்றொருவன் உண்மை பேசினாலும், அவருடைய பேச்சில் கவர்ச்சி இல்லாததால், அவருடைய மெய்யும் பொய்யாகிவிடுகிறது. வழியும் வாழ்வும் உண்மையும் உயிருமான இயேசு கிறிஸ்து (யோவா 14:6) உண்மையை எடுத்துரைக்கவே இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து (யோவா 3:37). உண்மையினால் தம் சீடர்களை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய இயேசு கிறிஸ்து (யோவா 17:17-19), இன்றைய தற்செய்தியில், மக்கள், 'ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34) என்று வாசிக்கிறோம்.

இன்றைய உலகம் பொய்யாலும் பொய்மையின் பிறப்பிடமான சாத்தான் பிடியிலும் (யோவா 8:44) சிக்கித் தவிக்கின்றது. எனவே, இன்றைய உலக மக்களுக்குத் தேவை உண்மை, முழுமையான உண்மை. திருமேய்ப்பர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில். ஆடுகளை மேய்க்காமல், அவற்றைச் சிதறடிக்கும் போலி மேய்ப்பர்களைக் கடவுள் சபிக்கின்றார். ஆனால், அதே நேரத்தில் ஆடுகளின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நல்ல மேய்ப்பர்களை மக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் வாக்களிக்கின்றார் (எரே 23:1-4).

நல்லாயர் தனது ஆடுகளைப் 'பசும்புல் வெளிக்கும். அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்; நீதி வழி நடத்துவார், சுவையான விருந்தளிப்பான் (பதிலுரைப்பாடல், திபா 23:1-5).

நல்லாயர் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருமேய்ப்பர்கள் மக்களுக்குச் சுவையான விருந்தை நலமிக்கப்போதனையை வழங்க வேண்டும். இறைவார்த்தையில் வேரூன்றியிராத எவ்விதப் போதனையும் போலியானது; பொய்யானது: வஞ்சகமானது. அத்தகைய மறையுரை. மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும்; மனமாற்றத்திற்கும் புதுவாழ்வுக்கும் வழிவகுக்காது. வாழ்வு தரும் வார்த்தையைத் தேடி வருகிற மக்களுக்கு வெறும் தவிட்டைக் கொடுத்து ஏமாற்றுவது அநீதியாகும்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது : "இறைமக்களுக்கு இறைவார்த்தைப் பந்தியில் நிறைவான 2,ணவு வழங்கப்பட வேண்டும். விவிலியத்தின் கருவூலம் தாராளமாகத் திறந்து விடப்படவேண்டும். மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி: இதில் நம்பிக்கையின் மறை பொருளும் வாழ்க்கை நெறிகளும் விளக்கப்பட வேண்டும்" (திருவழிபாடு. 51-52)

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் பங்குத் தந்தையை எழுப்பி, *சுவாமி, உடனடியாக எங்க வீட்டுக்கு வாங்க; என் மகள் நீங்கள் இல்லாமல் தூங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றார், பங்குத் தந்தை அதிர்ச்சியுற்றவராய், "ஏன் அவ்வாறு சொல்லுகிறாள்?" என்று கேட்டதற்கு அப்பெண், "சாமி நாங்கள் அவளுக்கு எத்தனையோ தக்க மாத்திரைகள் கொடுத்தும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் வந்து ஐந்து நிமிடம் பிரசங்கம் வைத்தால், உடனடியாகத் தூக்கம் வந்துவிடும் என்கிறாள்" என்றார்.

பங்குத் தந்தையர்களின் மறையுரை மக்களைத் தூங்க வைக்கும் தூக்க மாத்திரையாக அமையாமல். சமுதாயத் தீமைகளுக்கு வேட்டு வைக்கும் வெடி மருந்தாகவும், பாவ நோய்ககுக் குணமளிக்கும் அருமருந்தாகவும் அமைய வேண்டும்.

இன்றைய உலகிற்குத் தேவை 'அமைதியின் நற்செய்தி. இயேசு கிறிஸ்துவே நமது அமைதி : அவர் யூத இனத்திற்கும் பிற இனத்திற்கும் இடையே இருந்த பகைமை என்ற தடைச் சுவரைத் தமது சிலுவையால் தகர்த்துவிட்டு, இரு இனத்திலுமிருந்து புதியதொரு மனித குலத்தைப் படைத்து, அமைதியை நற்செய்தியாக அறிவித்தார் (எபே 2:13-14) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார் புனித பவுல். திருப்பணியாளர்கள் திரும்பத் திரும்ப அமைதியின் நற்செய்தியைத் தங்களது மறையுரையில் விளக்க வேண்டும்.

கடவுள் மனிதரைக் கிறிஸ்து வழியாகத் தம்முடன் ஒப்புரவாக்கி, அந்த ஒப்புரவுச் செய்தியைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:19-20), திருச்சபை ஒரே நேரத்தில் ஒப்புரவு அடைந்த சமூகமாகவும், ஒப்புரவை வழங்கும் சமூகமாகவும் திகழ்கிறது.

இன்று எங்கும் எதிலும் போர். கடமைக்கும் உரிமைக்கும் இடையே போர்: காமத்திற்கும் காதலுக்கும் இடையே போர்; கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே போர், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே போர், இவ்வுலகே ஒரு போர்க்களம். இன்று மனிதன் சமுதாயம் என்ற நிலத்தில் பகைமை என்ற விதையை ஊன்றி, வெறுப்பு என்ற திரைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். அதன் விளைவாக வேற்றுமை என்ற மரம் வளர்ந்து, பொறாமை என்ற பூ பூத்து. கலகம் என்ற காய் காய்த்து. வன்முறை என்ற பழம் பழுத்துக் கொண்டிருக்கிறது.

"மங்கை தீட்டுப்பட்டால் கங்கையில் நீராடலாம்; கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே நீராடுவது? ஆம், உலகம் பிளவுபட்டால் திருச்சபை அப்பிளவைச் சரி செய்யலாம். திருச்சபையே பிளவுபட்டு நின்றால், பிளவுபட்ட திருச்சபை அமைதியின் நற்செய்தியை எவ்வாறு உலகிற்கு அளிக்க முடியும்?

திருப்பணியாளர்களும் மக்களும் இனம், மொழி, நிறம், சாதி அடிப்படையில் மக்களை, அரசியல்வாதிகள் போல், பிளவுபடுத்தாமல் ஆடுகளைச் சிதறடிக்காமல் திருச்சபையை மாபெரும் அன்பியமாகக் கட்டி எழுப்பத் தங்கள் சொல்லாலும் செயலாலும் உழைக்க வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆயனில்லா ஆடுகளாக ..

இயேசுவே பதில்‌! - இயேசு‌ அழைக்கிறார்‌, இயேசு வருகிறார்‌, இயேசு விடுவிக்கிறார்‌, Jesus saves என்பது போல இன்று கிறிஸ்தவ உலகில்‌ எழும்‌ நற்செய்தி முழக்கங்களில்‌ ஒன்று: Christ is the answer. இதனைச்‌ சுவர்‌ எழுத்தாய்க்‌ கண்ட இளைஞன்‌ ஒருவன்‌ அதனடியில்‌ எழுதி வைத்தானாம்‌ “What then is the question?” என்று.
கிறிஸ்து பதில்‌ என்றால்‌ எந்தக்‌ கேள்விக்கு?
கிறிஸ்து தீர்வு என்றால்‌ எந்தத்‌ தேவைக்கு?
கிறிஸ்து மாற்று என்றால்‌ எந்தப்‌ பிரச்சனைக்கு?
கிறிஸ்து மருந்து என்றால்‌ எந்த நோய்க்கு?
பதில்‌ எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்குக்‌ கேள்வியும்‌ முக்கியம்‌. இயேசுவே பதில்‌! எந்த கேள்விக்கு இயேசு பதிலாக இருக்கிறார்‌?

முட்டி போட்டு நன்மை வாங்குவதா, முதுகு வளையாமல்‌ நிமிர்ந்து நின்று வாங்குவதா எது சரி என்ற கேள்விக்கா? நற்கருணை வாங்க நாக்கை நீட்டுவதா, கைகளை ஏந்துவதா, எது சரி என்ற கேள்விக்கா? குருக்கள்‌ திருமணம்‌ செய்து கொள்ளலாமா, இல்லை கட்டைப்‌ பிரமச்சாரிகளாகத்‌ தான்‌ காலத்தைத்‌ தள்ள வேண்டுமா என்ற கேள்விக்கா? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம்‌ பதில்‌ சொல்ல கிறிஸ்து வேலையற்றவரல்ல. நாமும்‌ வேறு வேலை இல்லாதவர்கள்‌ போல இவற்றைப்‌ பற்றி அலசிக்கொண்டும்‌ அலட்டிக்‌ கொண்டும்‌ நேரத்தை வீணடித்துக்‌ கொண்டிருப்பதா?

அன்று சமயத்தால்‌, அரசியலால்‌ ஏற்பட்ட சமுதாயச்‌ சீர்கேடுகள்‌, அநீதிகள்‌, அடிமைத்தனங்கள்‌ ... இவற்றின்‌ பின்னணியில்தான்‌ இயேசு பதிலாக இருந்தார்‌. இயேசு எப்படிப்‌ பதிலாக இருந்தார்‌ என்பதை அவரது வார்த்தையைப்‌ படித்தாலே புரியும்‌; வாழ்க்கையைப்‌ பார்த்தாலே தெரியும்‌.

லூக்‌ 4:18,19 “ஆண்டவருடைய ஆவி என்மேல்‌ உளது” என்று நாசரேத்‌ என்ற இயேசு வளர்ந்த ஊரில்‌ ஒய்வு நாளில்‌ தொழுகைக்‌ கூடத்தில்‌ அவர்‌ வாசித்த எசாயாவின்‌ சுருளேடு. இயேசு இப்படித்தான்‌ பதிலாக இருந்தார்‌ - நோயுற்றோருக்கு நலமாக, பசித்தோருக்கு உணவாக, சிறைப்பட்டோருக்கு விடுதலையாக, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வாக, பாவிகளுக்கு மீட்பாக, எளியவருக்கு நற்செய்தியாக...

வாழ்க்கையின்‌ அனைத்துக்‌ கேள்விகளுக்கும்‌ பதிலாக நோய்களுக்கெல்லாம்‌ மருந்தாக, தேவைகளுக்கெல்லாம்‌ தீர்வாக, சிக்கல்களுக்கெல்லாம்‌ மாற்றாக இருந்த இயேசுவை மக்கள்‌ திரள்‌ தேடியதில்‌ வியப்பென்ன இருக்க முடியும்‌! மக்களின்‌ இந்தத்‌ தேடலில்‌ இயேசு எப்படி செயல்படுகிறார்‌ என்பதை நற்செய்தி பரிவுமிக்க ஆயராகப்‌ படம்பிடித்துக்‌ காட்டுகிறது. “அவர்கள்‌ ஆயரில்லா ஆடுகளைப்‌ போல்‌ இருந்ததால்‌ அவர்கள்‌ மீது பரிவு கொண்டு அவர்‌ அவர்களுக்குப்‌ பலவற்றைக்‌ கற்பித்தார்‌” (மார்க்‌. 6:34). நல்ல ஆயன்‌ நானே. நல்ல ஆயன்‌ தன்‌ ஆடுகளுக்காக உயிரைக்‌ கொடுப்பான்‌ என்று சொன்னவரல்லவா நம்‌ இயேசு!

தூதுரைப்‌ பணியை முடித்துவிட்டுத்‌ திரும்பி வந்த திருத்தூதர்கள்‌ “தாங்கள்‌ செய்தவை கற்பித்தவையெல்லாம்‌ அவருக்குத்‌ தெரிவித்தார்கள்‌” (மார்க்‌. 6 : 30). அந்நேரத்தில்‌ மக்கள்‌ பலர்‌ வருவதும்‌ போவதுமாய்‌ இருந்ததால்‌ அவர்களுக்கு உண்பதற்குக்‌ கூட நேரம்‌ கிடைக்கவில்லை. அவர்களுக்கும்‌ தனக்கும்‌ தனிமையும்‌: ஓய்வும்‌ வேண்டும்‌ என்று நினைக்கிறார்‌.

ஓய்வு என்பது உழைப்புக்கு எதீர்ச்-சால்‌ அல்ல. மாறாக உழைப்புக்குரிய ஆக்க சக்தியே! போதிய ஓய்வு இல்லாமல்‌ மனிதனால்‌ உழைக்க இயலாது; கூடாது.

அந்த நிலையில்‌ தன்னைத்‌ தேடிய திரளான மக்களைப்‌ பார்க்கிறார்‌. தனது தேவையை மறந்தார்‌. பசியை மறந்தார்‌, உணவை மறந்தார்‌, ஒய்வை மறந்தார்‌. மக்களுடைய தேவைகளை உணர்ந்தார்‌. தீர்த்து வைத்துத்‌ தன்‌ பரிவை வெளிப்படுத்துகிறார்‌.

பரிவு என்னும்‌ தமிழ்‌ வார்த்தைக்குப்‌ பொருள்‌ உடன்‌ துன்புறுதல்‌ என்பதாகும்‌. அடுத்தவர்‌ படும்‌ துன்பத்தை நமதாக நம்மில்‌ உணர்வது அனுபவிப்பது. வாடிய பயிரைக்‌ கண்டபோதெல்லாம்‌ வாடினேன்‌ என்ற வள்ளலாரின்‌ உணர்வு.

இராமகிருஷ்ண பரமஹம்சர்‌ ஒருமுறை படகில்‌ சென்று கொண்டிருந்தார்‌. படகு கரையை நெருங்குகின்ற தருணம்‌. அப்போது திடீரென வலியால்‌ துடித்தார்‌. அவர்‌ முதுகை மூடியிருந்த துணியை விலக்கியபோது ' காயங்கள்‌ காணப்பட்டன. அவர்‌ வலியால்‌ முனகியபடியே கரையைச்‌ சுட்டிக்காட்டினார்‌. அந்தக்‌ கரையில்‌ சிலர்‌ ஓர்‌ அப்பாவி மனிதனை அடித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஒரு மனிதனைச்‌ சில வன்முறையாளர்கள்‌ அடிப்பதைப்‌ பார்க்கின்றபோதே அவர்‌ முதுகு முழுவதும்‌ இரத்தம்‌ கசிந்தது. அதற்குப்‌ பெயர்தான்‌ பரிவு.

பல சமயங்களிலும்‌ பிறருடைய பசியை நம்மால்‌ உணர முடிவதில்லை. பிறருடைய வலியை நம்‌ வலியாக உணர்வதில்லை. மாறாக “இது அவன்‌ தலையெழுத்து ... அவனுக்கு இதுவும்‌ வேண்டும்‌ இன்னமும்‌ வேண்டும்‌" என்று நினைப்போம்‌. பேசுவோம்‌. இயேசு அப்படி எப்போதும்‌ நடந்து கொண்டதில்லை. பிறருடைய துயரத்தை தன்‌ துயரமாக உணர்ந்தார்‌. அப்படி ஓர்‌ உணர்வுதான்‌ நம்மை உதவிடும்‌ செயல்பாட்டுக்கு இட்டுச்‌ செல்லும்‌.

பரிவு என்பது மனித நேய வெளிப்பாடு. அதுதான்‌ நற்செய்திப்‌ பணியால்‌ களைத்துச்‌ சோர்ந்த சீடர்களை ஓய்வு கொள்ளச்‌ சொல்கிறது. பின்னர்‌ மக்களின்‌ பசியை உணர்ந்து அதைத்‌ தீர்க்க வழி வகுக்கிறது. பரிவு என்பது இறைவனுக்கே உரித்தான பண்பு. சென்ற இடமெல்லாம்‌. நன்மை செய்தது இதனால்தான்‌. நயீன்‌ பட்டணத்து விதவையின்‌ மகனை உயிர்ப்பித்தது அந்த ஏழைத்தாயின்‌ மீது கொண்ட பரிவினால்தான்‌. உங்கள்‌ பாவங்கள்‌ செந்தூரம்‌ போல்‌ சிவந்திருந்தாலும்‌ உங்களை வெண்பனியிலும்‌ வெண்மையாக்குவேன்‌ என்று கூறுவதும்‌ மனித இனத்தின்‌. மீது கொண்ட பரிவினால்தான்‌. “தந்தையே இவர்களை மன்னியும்‌” என்று தன்னைச்‌ சிலுவையில்‌ அறைந்தவர்களுகாக மன்றாடியதும்‌ அவர்கள்‌ மீது கொண்ட பரிவினால்தான்‌. இயேசுவின்‌ பரிவு “காணாமல்‌ போனதைத்‌ தேடுவேன்‌. அலைந்து திரிவதைத்‌ திரும்பக்‌ கொண்டு வருவேன்‌. காயப்பட்டதற்குக்‌ கட்டுப்போடுவேன்‌. நலிந்தவற்றைத்‌ திடப்படுத்துவேன்‌” (எசேக்‌. 34:16) என்ற இறைவாக்கினர்‌ எசேக்கியேலின்‌ கூற்றை, உண்மையாக்குகிறது.

ஆயனில்லாத ஆடுகள்‌ மூன்று வதத்‌ துயரங்களுக்கு உள்ளாகும்‌. 1. போகும்‌ வழி ஒதரியாது திணறும்‌. 2. மேய்ச்சலுக்கான ஆடம்‌ காணாமல்‌ பசிக்கு உணவின்றி; தாகத்துக்கு நீரீன்றி தனக்கும்‌. 3. எதிரீகளால்‌ வலிய மிருகங்களால்‌ தாக்கிக்‌ கொல்லப்படும்‌ ஆபத்தை, பாதுகாப்பற்ற நிலையில்‌ சந்திக்கும்‌.

மனிதர்களாகிய நமக்கும்‌ இம்மூன்றும்‌ பொருந்தும்‌. எந்த வழி போவது என்று தெரியாததால்‌ கண்ணைக்‌ கட்டிக்‌ காட்டில்‌ விட்ட நிலை. தவறான பல போதனைகளால்‌ அலைக்கழிப்பு. எங்கு யார்‌ மூலம்‌ தேவையானவைகளைப்‌ பெறக்கூடும்‌ என்று வழிகாட்டி இல்லாத அவலம்‌. இறுதியாக யாரை விழுங்கலாபெனக்‌ கர்ச்சிக்கும்‌ சிங்கம்‌ போல்‌ தேடித்‌ திரியும்‌ அலகையோடு, பலவிதமான தீய, தூய்மையற்ற மனிதர்களோடு நாம்‌ நடத்த வேண்டிய அன்றாடப்‌ போராட்டங்கள்‌.

ஆயனில்லா ஆடுகளாகக்‌ காரணம்‌? ஆயர்‌ மட்டும்தானா? ஆடுகள்‌ இல்லையா? இதுவும்‌ சிந்தனைக்குரியதே!

எனவே அன்றைய மக்களைக்‌ குறித்து இயேசு பரிவிரக்கம்‌ கொண்டார்‌. பலவற்றைக்‌ கற்றுக்‌ கொடுக்கலானார்‌. இன்றைக்கும்‌ இயேசு நம்மீது அதே அக்கறை உள்ளவராக இருக்கிறார்‌. எனவே “உங்கள்‌ கவலைகளையெல்லாம்‌ அவரிடம்‌ விட்டுவிடுங்கள்‌. ஏனென்றால்‌ அவர்‌ உங்கள்‌ மேல்‌ கவலை கொண்டுள்ளார்‌” (1 பேதுரு 5:7).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“ஓய்வறியா நல்லாயன் இயேசு”

நிகழ்வு
தனது எழுபத்தெட்டாவது வயதில், இருநூற்று அறுபத்தைந்தாவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜோசப் அலோசியஸ் இரட்சிங்கர் எனப்படும் நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள். இவர் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் பேராயராக இருந்த சமயத்தில் (1977-1982) மக்கள் தன்னை எந்த நேரத்தில் வேண்டுமானா; ஏன், நள்ளிரவிலும்கூடச் சந்திக்கலாம் என்றார். அந்தளவு இவர் தன்னை மக்களில் ஒருவராக இனங்கண்டுகொண்டார்.

இப்படிப்பட்டவரிடம் ஒருமுறை சிறுவன் ஒருவன், “ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு இருக்கின்றீர்களே...! நீங்கள் தூங்குவதே இல்லையா?” என்றான். “நீ நிம்மதியாகத் தூங்கினாலே போதும் மகனே! அது எனக்குப் புத்துணர்ச்சியைத் தந்துவிடும். அந்தப் புத்துணர்ச்சியைக் கொண்டு நான் நீண்டே நேரம் உழைப்பேன்” என்று வாஞ்சையோடு பதிலளித்தார் பின்னாளில் திருத்தந்தை பதினாறாம் பெனடிட்.டாக உயர்ந்த ஜோசப் அலோசியஸ் இரட்சிங்கர் அவர்கள்.

ஆம், கடவுளின் மக்களுக்காக ஓய்வின்று உழைத்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் ஒரு நல்ல ஆயனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசு ஓய்வறியாது உழைத்த நல்லாயன் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மக்களைப் பராமரிக்காத ஆயர்கள் – தலைவர்கள்
இயேசு கிறிஸ்து உயர்த்தெழுந்த பின் பேதுருவோடு பேசுகின்றபொழுது, அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” (யோவா 21: 15), “என் ஆடுகளை மேய்” (யோவா 21: 16), “என் ஆடுகளைப் பேணி வளர்” (யோவா 21: 17) என்பார். இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்லக் காரணம், திருஅவையின் தலைவராக இருக்கப் போகிறவர், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை – ஆடுகளைப் பேணிப் பராமரிக்கவேண்டியது அவருடைய முதன்மையான கடமை என்பதாலேயே ஆகும். இயேசு பேதுருவிடம் ஒப்படைத்த இப்பொறுப்பினை அவர் தன் உயிரையே தந்து சிறப்பாகச் செய்தார்.

ஆனால், இறைவாக்கினர் எரேமியாவின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள், அதாவது ஆயர்கள் மக்களைப் பராமரிக்கவில்லை. மாறாக, அவர்கள் மக்களை – மந்தையைச் சிதறடித்தார்கள்; துரத்தியடித்தார்கள். மக்களைப் பேணிக் காத்து, நலிவுற்றத்தைத் திடப்படுத்தி, பிணியுற்றத்தை நலப்படுத்தி, காயமுற்றவற்றிற்குக் கட்டு போட்டு, வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டிவந்து, காணாமல் போனவற்றைத் தேடவேண்டிய ஆயர்கள் (எசே 34: 4) அவ்வாறு இல்லாததால், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் எழுகின்றது. இதனால் ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியா வழியாக, “என் ஆடுகளைச் அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!” என்கிறார். அதைவிடவும், “ஆடுகளைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்” என்கிறார்.

ஆண்டவர், இறைவாக்கினர் எரேமியா வழியாகச் சொன்ன, ஆயர்களை நியமிப்பேன்... அவர் ஞானமுடன் செயல்படுவார்... நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார் என்ற வாக்குறுதி நிறைவேற்றியதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

மக்கள்மீது பரிவுகொண்ட நல்லாயர் இயேசு
வான்ஸ் ஹாவ்னர் (Vance Havner) என்ற எழுத்தாளர் ஒருமுறை குறிப்பிட்ட செய்தி இது: “ஓய்வெடுக்க நேரம் ஒதுக்காதவர், வெகு சீக்கிரம் நிரந்தரமாக ஓய்வெடுத்து விடுவார்.” இக்கூற்று கேட்பதற்குக் கசப்பாக இருந்தாலும். யாராலும் மறுக்க முடியாத உண்மை. இன்றைக்குப் பலர் வேலை வேலை என்று ஓய்வெடுக்க நேரம் ஒதுக்காமல் தொடர்ந்து உழைப்பதைக் காணமுடிகின்றது. இத்தகையோர் தங்களுடைய வாழ்வினை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது நல்லது.

நற்செய்தியில், பணித்தளங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்வி வருகின்ற தன் சீடர்களிடம் இயேசு மேலும் வேலை கொடுக்காமல், அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, சற்று ஓய்வெடுங்கள்” என்கிறார். இயேசு தன் சீடர்கள் எத்துனை அன்பும் பரிவும் கொண்டிருந்தால், இத்தகைய வார்த்தைகளை அவர் சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். இயேசு தன்னுடைய சீடர்கள்மீது உண்மையான அன்பும் பரிவும் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அவர்களிடம், “சற்று ஓய்வெடுங்கள்” என்கிறார். இயேசு தன் சீடர்களிடம் மேற்கூறிய வார்த்தைகளைச் சொல்வதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில், ஏரோது மற்றும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு. இத்தகைய காரணங்களால் இயேசு சீடர்களிடம் அவ்வாறு சொல்கின்றார்.

இதையடுத்து இயேசு தன்னுடைய சீடர்களோடு பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் செல்கின்றார். இயேசு தன் சீடர்களோடு தனிமையான இடத்திற்குப் போவதைக் கண்ட மக்கள், அவருக்கு முன்பாகவே அங்கு வந்து சேர்கின்றார்கள். ‘ஓய்வெடுக்க வந்த இடத்திற்கு மக்கள் வந்துவிட்டார்களே!’ என்று இயேசு அவர்களைத் துரத்திவிடவில்லை அல்லது அவர்களிடம் பாராமுகமாகவும் இல்லை. மாறாக, அவர் ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருந்த மக்கள்மீது பரிவு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். இவ்வாறு ‘மேய்ப்பர்களை நியமிப்பேன்...’ என்று கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாகத் தந்த வாக்குறுதி இயேசுவில் நிறைவேறுகின்றது.

ஆம், நீதியுள்ள தளிரான இயேசு ஞானத்தோடு செயல்பட்டு, நீதியை நிலைநாட்டி, ஆயனில்லா ஆடுகள் போன்று இருந்த மக்கள்மீது பரிவுகொண்டார். இது இயேசுவின் காலத்திற்கு முன்பு யாருமே செய்யாத ஒன்று. அதனால்தான் இயேசு, “எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே” (யோவா 10: 8) என்று துணிவோடு சொல்ல முடிந்தது. இயேசு தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தையும் மக்களுக்காகப் பயன்படுத்தித் தான் பரிவுள்ள ஓர் என்பதை வெளிப்படுத்துகின்றார். இதைவிடவும் ஒன்றைச் செய்தார். அது என்ன பார்ப்போம்.

தம் இரத்தத்தைச் சிந்திய நல்லாயர் இயேசு
நற்செய்தி வாசகம், இயேசு மக்கள்மீது பரிவு கொண்டதை எடுத்தியம்புகின்ற வேளையில், இன்றைய இரண்டாம் வாசகம், இயேசு மக்கள்மீதுகொண்ட பரிவின் வெளிப்பாடாகச் சிலுவையில் தம் விலை மதிக்கப்பெறாத இரத்தத்தைச் சிந்தி, யூதர், பிறவினத்தார் என்று பிரிந்து கிடந்தவர்களிடையே அமைதியைக் கொண்டுவந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் என்று எடுத்தியம்புகின்றது.

யூதர்கள், தாங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என நினைத்தார்கள். மற்றவர்களையோ அவர்கள் விலங்கினும் கீழாகத் ‘தீட்டுப்பட்டவர்களாக’ நினைத்தார்கள். இதனால் யூதர்களுக்கும் யூதரல்லாத பிறவினத்தாருக்கும் இடையே பகைமையும் வெறுப்பும் இருந்துகொண்டே இருந்தன. இந்நிலையில் நல்லாயனாம் இயேசு மக்கள்மீது கொண்ட பேரன்பின், பரிவின் வெளிப்பாடாகச் சிலுவையில் சிந்திய தம் விலை மதிக்கப்பெறாத இரத்தத்தின் வழியாக அவர்களை ஒன்றுபடுத்தினார். எனவேதான் புனித பவுல், “இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா 3: 28) என்கிறார்.

ஆதலால், மக்களுக்காக ஓய்வின்றி உழைத்த, மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்காகத் தம் உயிரையும் தந்து, இம்மண்ணுலகில் அமைதியைக் கொணர்ந்த நல்லாயர் இயேசுவின் வழியில் நாமும் நடந்து, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு நல்ல ஆயர்களாக இருந்து, அவர்களைப் பேணிப் பராமரிப்போம்.

சிந்தனை
‘மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களும் அளிக்கப்பட்ட முதன்மையான கடமை’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே நமது முதன்மையான கடமை என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் பணிசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் புனித பவுல் இறையியல் கல்லூரியில் நடைபெற்ற அருள்பணியாளர்களுக்கான கூடுகையை நெறிப்படுத்த செங்கை மறைமாவட்ட அருள்பணியாளர் பேரருள்திரு பாக்கிய ரெஜிஸ் அவர்கள் வந்திருந்தார்கள். அறிவர் அம்பேத்கர் அவர்கள் 1942ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் பயன்படுத்தி அவருடைய ட்ரேட் மார்க் ஸ்லோகன் என உயர்ந்த, 'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்' என்னும் மூன்று சொல்லாடல்களை எடுத்து, அருள்பணியாளர்களின் 'எளிமை – கீழ்ப்படிதல் - கன்னிமை' என்னும் மூன்று வாக்குறுதிகளோடு இணைத்து மிக அழகான செய்தியைத் தந்தார்கள். 'எந்த வயிறும் சோறில்லாமல் காயக் கூடாது. எந்தக் கண்ணும் எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்கக் கூடாது' என்று தன் தாய் தன் குருத்துவ அருள்பொழிவு அன்று சொன்னதையும் அருள்பணியாளர் நினைவுகூர்ந்தார்.

'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்!' என்னும் சொல்லாடல்கள் முதன் முதலாக எஸ்.டி.எஃப் (சமூக சனநாயகக் கூட்டமைப்பு) என்ற அமைப்பின் இலச்சினையாக 1883ஆம் ஆண்டு வெளி வந்தது. 'கற்பி – ஏனெனில் நம் எல்லா அறிவும் நமக்குத் தேவை! கலகம் செய் - ஏனெனில் நம் எல்லா ஆர்வமும் நமக்குத் தேவை! ஒன்றுசேர் – ஏனெனில் நம் எல்லா ஆற்றுலும் நமக்குத் தேவை!' என்று இலச்சினையின் பொருள் விளக்கப்பட்டது. ஆக, அறிவு, ஆர்வம், மற்றும் ஆற்றலின் ஒருங்கியக்கமே மேற்காணும், 'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்' என்னும் சொல்லாடல்களின் உட்பொருளாக இருக்கின்றது.

அண்ணல் அம்பேத்கர் மேற்காணும் சொல்லாடல்களைத் தன் 1942ஆம் ஆண்டு உரையில் பின்வருமாறு பயன்படுத்துகின்றார்:

'என் இறுதி அறிவுரை வார்த்தைகள் இவையே: கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்! உன்மேல் நீ நம்பிக்கை கொள்! நீதி நம் பக்கம் இருக்க, நாம் தோல்வியடைய முடியாது. என்னைப் பொருத்தவரையில் போராட்டம் என்பது மகிழ்ச்சி. போராட்டம் என்பது ஆன்மிகம். அது பொருள்வகையோ சமூகவகையோ அல்ல. நம் போராட்டம் பணத்திற்கோ அல்லது அதிகாரத்துக்கோ அல்ல. மாறாக, கட்டின்மைக்கு. நம் மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கு!'

கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்! என்னும் சொல்லாடல்கள் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மூன்று வாசகங்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. அறிவர் அம்பேத்கர் குறிப்பிடுவது போல, இவ்வார்த்தைகளில் ஒரு தனிமனிதர் ஆன்மிக எழுச்சியைக் காண முடியும் என்றால், இன்றைய இறைவார்த்தை வழிபாட்டோடு இணைத்துப் பார்ப்பதில் தவறில்லை.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 6:30-34), 'அவர்கள் (மக்கள் கூட்டத்தினர்) ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்' என்று நிறைவு பெறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக வரும் பகுதியில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கின்றார். வயிற்றுக்கு உணவு கொடுக்குமுன் செவிக்கு உணவு கொடுக்கின்றார் இயேசு. இயேசு எதைக் கற்பித்தார் என்பதைப் பற்றிய நற்செய்தியாளர் பதிவிடவில்லை. ஆனால், 'பலவற்றைக் கற்பித்தார்' என்று மாற்கு நற்செய்தியாளர் மிகவும் திருத்தமாக எழுதுகின்றார்.

'டிடாஸ்கெய்ன்' (கற்பித்தல்) என்ற கிரேக்கச் சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் 13 முறை வருகின்றது. அவற்றில் 4 முறை மாற்கு நற்செய்தியில் வருகின்றது. ஓரிடத்தில் இயேசு உவமைகள் வழியாக விண்ணரசு பற்றிக் கற்பிக்கின்றார். இன்னொரு முறை மானிட மகன் பட வேண்டிய துன்பங்கள் பற்றிப் பேசுகின்றார். இரு இடங்களில் வெறும் 'கற்பித்தல்' மட்டும் நடைபெறுகிறது. 'கற்பித்தல்' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி நற்செய்தியாளர் இயேசுவைப் பற்றிய மூன்று புரிதல்களைக் கொடுக்கின்றார்: (அ) முதல் ஏற்பாட்டில் மோசே ஆண்டவராகிய கடவுளின் திருச்சட்டத்தை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிக்கின்றார் (காண். இச 4). அவ்வகையில், இயேசு ஒரு புதிய மோசே என முன்மொழியப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இந்தக் கருத்துருவை மிக நேர்த்தியாகக் கையளாளுகின்றார் (காண். மத் 5).
(ஆ) இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் திருச்சட்டங்களைப் பற்றிய விளக்கவுரைகளை தங்கள் சீடர்களுக்குக் கற்பித்தனர். பெரிய அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின்னர் பாலஸ்தீனாவில் நிறைய தெருப் போதகர்கள் தங்களுக்கென சீடர்களைச் சேர்த்துக்கொண்டு போதித்து வந்தனர். இயேசுவை ஒரே நேரத்தில் ரபி என்றும், தெருப் போதகர் என்றும் காட்டுவதற்காக நற்செய்தியாளர்கள், 'கற்பித்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
(இ) இயேசுவின் எளிய பின்புலம் அறிந்தவர்கள் அவருக்குக் கற்பிக்கத் தெரியாது என்று இடறல்பட்டனர். அக்கருத்தை எதிர்ப்பதற்காகவும் நற்செய்தியாளர்கள் இயேசு கற்பித்தார் எனப் பதிவு செய்கின்றனர்.

இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு குழுவினருக்குக் கற்பிக்கின்றார்: முதல் குழுவினர் சீடர்கள். அவர்களுக்குத் தன் வார்த்தையால் கற்பிக்கின்றார். பணி முடிந்து வெற்றியோடு வந்தவர்களிடம், 'நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்!' என்று கற்பிக்கின்றார். இரண்டாம் குழுவினர் மக்கள். அவர்களுக்குத் தன் பரிவு என்னும் உணர்வால் கற்பிக்கின்றார். இவ்விரண்டிலுமே கற்பித்தல் என்பது ஒருவருடைய இருத்தலை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறது.

கற்பித்தலின் நோக்கம் இதுதான். 'நீ இப்போது இங்கே, இப்படி இருக்கிறாய்!' என்ற மெய்யறிவை நான் மற்றவருக்குத் தரும்போது அவருக்கு நான் கற்றுக்கொடுக்கிறேன். அந்த மெய்யறிவு அவருக்கு வந்தவுடன் அவர் அந்தநிலையிலிருந்து தன்னையே விடுவித்துக்கொள்வார். தங்கள் பணிகளோடு சீடர்கள் தங்களையே ஒன்றிணைத்துக்கொண்டு அதுவே தங்களுடைய அடையாளம் என நினைக்கின்றனர். ஆனால், பணி மட்டுமே அடையாளம் அல்ல. அதையும் தாண்டிய ஓய்வு இருக்கிறது என்று அவர்களுக்கு மெய்யறிவு அளிக்கின்றார் இயேசு. தாங்கள் யாவே இறைவனால் தேர்ந்தெடுத்த மக்கள் என்ற பெருமையில் இருந்தனர் இயேசுவின் சமகாலத்தவர். ஆனால், தங்களை உரோமையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதை மறந்துவிட்டனர். அரசியல், பொருளாதாரம், மற்றும் சமய அடிமைத்தனங்களால் அல்லல்பட்டவர்களுக்குக் கற்பித்தலின் வழியாக அவர்களின் மெய்நிலையை உணரச் செய்கின்றார் இயேசு.

புனித அகுஸ்தினாரின் வாழ்வில், 'நான் இப்படி இருக்கிறேனே!' என்ற மெய்யறிவுதான் அவருடைய பழைய வாழ்க்கையை உதறிவிட அவருக்குத் துணைநிற்கிறது. ஆக, கற்பித்தல் என்பது வெளியிலிருந்து உள்ளேயோ, அல்லது ஒருவருக்கு உள்ளே புறப்பட்டு உள்ளேயே நகர்வதாகவோ இருக்கலாம்.

இரண்டாவதாக, கலகம் செய்.
அறிவர் அம்பேத்கரைப் பொருத்தவரையில் கலகம் செய் என்பது போராட்டம் செய்தல், அல்லது கிளர்ச்சி செய்தல் என்று பொருள் அல்ல. மாறாக, ஆர்வத்தை ஒருங்கிணைப்பது. கலகம் செய்தல் ஒவ்வொருவருடைய தனி மனிதருக்கு உள்ளே நடக்கின்ற செயல். மெய்யறிவு பெற்ற ஒருவர் தன்னிலை உணர்ந்தவுடன், தன் இருத்தலுக்கும் செல்ல வேண்டிய இடத்திற்கும் இடையே ஓர் இழுபறி நிலை உருவாகிறது. அதுவே 'கலகம்.' எடுத்துக்காட்டாக, இளைய மகன் பன்றிகள் மேய்த்துக்கொண்டிருக்கும்போது, அறிவு தெளிகின்றார். அது கற்பித்தல். 'என் தந்தையிடம் செல்வேன்' என்று தனக்குள்ளே பேச ஆரம்பிக்கின்றார். அதுதான் கலகம். யாக்கோபு தன் மாமனார் லாபானின் வீட்டிலிருந்து தப்பி ஓடி வந்தபோது ஆடவர் ஒருவர் அவருடன் இரவு முழுவதும் போரிடுகின்றார். அங்கே அந்தக் கலகம் யாக்கோபின் உள்ளத்தில் நிகழ்கிறது. ஆக, மெய்யறிவு பெற்ற ஒவ்வொருவரும் கலகத்தைத் தன் உள்ளத்தில் உணர்கின்றார்.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலின் ஆயர்களைச் சாடுகின்றார். எரேமியா பாபிலோனியப் படையெடுப்பு பற்றி எச்சரிக்கை விடுத்ததுடன், அப்படையெடுப்பை தானே நேருக்கு நேராகக் காண்கின்றார். இஸ்ரயேலின் அரசர்கள், குருக்கள், மற்றும் தலைவர்களின் சிலைவழிபாட்டால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர். நாடுகடத்தப்படுகின்றனர். 'ஆயர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள்' என்ற சொல்லாடல் இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டதையே குறிக்கின்றது. மேலும், 'நான் மேய்ப்பர்களை நியமிப்பேன் ... யூதா விடுதலை பெறும் ... ஆண்டவரே நமது நீதி என்னும் பெயரால் நாடு அழைக்கப்பெறும்' என இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. இறைவாக்கினர் எரேமியாவின் இவ்வார்த்தைகள் எருசலேம் நகரில் ஒரு கலகத்தை ஏற்படுத்துகிறது. அரசர்கள், குருக்கள், மற்றும் மக்கள் தலைவர்களுக்கு நடுவே ஒரு சலசலப்பை ஏற்படுத்துகின்றார் எரேமியா. ஒரு பக்கம் ஆண்டவராகிய கடவுளுக்கு தாங்கள் கொண்டிருக்கின்ற பிரமாணிக்கம், இன்னொரு பக்கம் தங்களுடைய வேற்றுத் தெய்வ வழிபாடு என இவ்விரண்டுக்கும் நடுவே எதைத் தெரிவு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளத்தில் கலங்கித் தவிக்கின்றனர்.

'யாவே சித்கேனு – ஆண்டவரே நமது நீதி' என்பது இந்நகரின் பெயர் என்றால், நீதி என்னவாயிற்று? என்று தங்களுக்குள்ளே கேள்வி கேட்கின்றனர். இதுதான் கலகம் செய்தல். ஆக, கலகம் என்பது இங்கே பொதுவான ஓர் உணர்வாகத் தொடங்கி ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அரங்கேறுகிறது.

ஆக, கலகம் செய்தல் என்பது மாற்றத்திற்கான வழியை முன்னெடுப்பதைக் குறிக்கின்றது.

மூன்றாவதாக, ஒன்றுசேர்.
எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், அவர்கள் கிறிஸ்து வழியாகப் பெற்ற மீட்பு என்னும் பேறு பற்றிப் பாராட்டிவிட்டு, கிறிஸ்து வழியாக ஏற்பட்ட ஒப்புரவு பற்றி எடுத்துரைக்கின்றார்: 'அவரே (கிறிஸ்து) இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (ஒன்று சேர்த்தார்).' அதாவது, மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டுமே என்று எண்ணி, புறவினத்தாரை ஒதுக்கி வைத்த, அல்லது தள்ளி வைத்த நிலையைத் தகர்த்தெறிகின்றார். யூதர்களும் புறவினத்தார்களும் கிறிஸ்துவில் ஒன்றுசேர்கின்றனர். இப்படி அவர்கள் ஒன்று சேர்வதால் பாவத்திலிருந்து மீட்பு அல்லது விடுதலை பெறுகின்றனர்.

ஆக, ஒன்று சேர்தல் என்பது தனிமனித விடுதலைக்கும் குழும விடுதலைக்கும் வழிகோலுகிறது.

இந்த ஒன்று சேர்தல் எப்படி நடக்கிறது? 'பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்ததன் வழியாக' கிறிஸ்து மக்களை ஒன்றுசேர்க்கின்றார். அதாவது, பிரிக்கின்ற அனைத்தையும் தகர்க்கின்றார். இங்கே ஒருவருடைய ஆற்றல் இன்னொருவருடைய ஆற்றலோடு இணைகின்றது.

ஒன்று சேர்தல் என்பதை இங்கே, நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, யூதர்களும் புறவினத்தார்களும் மீட்பில் ஒன்றுசேர்கின்றனர். இரண்டு, கிறிஸ்துவின் வழியாக இவர்கள் அனைவரும் கடவுளோடு ஒன்றுசேர்கின்றனர். மனிதர்கள் ஒருவர் மற்றவரோடு ஒன்றுசேர்தலே ஆற்றலின் குவியலாக இருக்கிறது என்றால், இறைவனோடு நாம் சேரும்போது நம் ஆற்றல் இன்னும் பெருகும் அல்லவா!

ஆக, இயேசு தன் சீடர்களுக்கு வார்த்தையும், தன்னைத் தேடி வந்த மக்களுக்கு பரிவு என்னும் உணர்வாலும் கற்பிக்கின்றார்.

எரேமியா, தன் சமகாலத்தவர்கள் நடுவே கலகம் செய்கின்றார். ஒருவிதமான பாதுகாப்பின்மையை உருவாக்குகின்றார்.

பவுல், கிறிஸ்து வழியாக மனுக்குலம் ஒன்றுசேர்ந்ததையும், இறைவனோடு அது ஒப்புரவாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

கற்பித்தல் - கலகம் செய்தல் - ஒன்று சேர்தல் என்னும் சொல்லாடல்கள் இன்று நம் ஆன்மிக வாழ்வுக்கு எப்படி சவால் விடுகின்றன?

(அ) கற்பி: இன்று நான் மெய்யறிவு பெற வேண்டிய தேவை என்ன? எதில் எனக்கு கற்பித்தல் தேவைப்படுகிறது? எதை நான் கற்க வேண்டும்? பரபரப்பான என் வாழ்விலிருந்து, பக்தி முயற்சிகளில் மட்டுமே மூழ்கிக் கிடந்து, 'பூசை பார்த்தேனா? செபமாலை செய்தேனா? நவநாள் செய்தேனா?' என்னும் செயல்பாடுகளின் பரபரப்பிலிருந்து விடுபட்டு, ஆண்டவர் தருகின்ற ஓய்வு பற்றிய மெய்யறிவைப் பெறுகின்றேனா? என்னைச் சுற்றி நிற்கும் மக்களின் கண்களின் வழியாக அவர்களுடைய இதயங்களை என்னால் கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்ள நான் கற்றுள்ளேனா?

(ஆ) கலகம் செய்: இறைவனுக்கு நான் கொடுக்க வேண்டிய அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கத்திலிருந்து என்னைப் பிரித்து வைப்பது எது? என் உள்ளே எழும் பாதுகாப்பின்மை குறித்தும், அச்சம் குறித்தும் நான் கவனமாக இருக்கின்றேனா?

(இ) ஒன்றுசேர்: ஒருவர் மற்றவரோடு நான் ஒன்றுசேர்வதற்குத் தடையாக இருக்கின்ற காரணிகள் எவை? இறைவனிடமிருந்து நான் அந்நியப்பட்டுக் கிடந்தால் என் வாழ்வை நான் எப்படிச் சரி செய்வேன்?

இறுதியாக,
கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர் என்னும் சொல்லாடல்களின் ஊற்று நம் இறைவனே எனக் கற்றுக்கொடுக்கின்றது இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 23).

'தம் பெயர்க்கேற்ப அவர் என்னை நீதி வழி நடத்துகிறார்' - இதுவே கற்பித்தல்!

'என் எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றார். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார்' - இதுவே கலகம் செய்தல்!

'உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள்நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும். நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்' - இதுவே ஒன்று சேர்த்தல்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஊராரும், உடனிருப்பவர்களும் என்னால் வாழ்கிறார்களா?

அன்றொரு நாள், அது ஒரு மாலை பொழுது. மக்கள் எல்லாரும் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் நேரம். நானும் என் வீட்டிற்கு வேகமாக வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். எப்போதுமே நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் விழிகள் தேடும் முதல் முகம் என் தங்கையின் முகம்தான். வீடு முழுவதும் தேடிவிட்டு, தெருவிலும் தேட ஆரம்பித்தேன். அந்தோ பரிதாபம்! என் தங்கை அருகிலுள்ள ஒரு சாக்கடையில் விழுந்து கிடந்தால், உடனே ஓடிச் சென்று அவளைத் தூக்கி, தண்ணீரால் கழுவி மெதுவாக அவளை நாற்காலியில் அமர வைத்தேன். ஏன் பாப்பா இப்படிப் பண்ண, ஏன் வெளிய போன? என்று கேட்டேன். அவளிடம் பதில் ஒன்றுமில்லை. அப்போதுதான் நான் சிந்தித்தேன். இவளைப் போன்று எத்தனை பேர் இந்த உலகத்தில் இருப்பார்கள். நான் வாழும் இக்கோவை மாநகரத்தில் எத்தனை மனிதர்கள் இப்படி இருப்பார்கள் என ஏங்கினேன். வருத்தப்பட்டேன். அக்கணமே என்னில் உதித்த எண்ணம்தான் ' ஈர நெஞ்சம்' என்ற அறக்கட்டளை. என் தங்கை மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி. அவள் வீட்டிலிருந்து அன்று வெளியே சென்று, சாக்கடையில் விழுந்துகிடந்த தருணம், எத்தனையோ பேர் இப்படித்தானே விழுந்து கிடப்பார்கள் என்ற சிந்தனையைக் கொடுத்தது. எனவே இனிமேல் என் பார்வையில் இப்பேர்ப்பட்டவர்கள் நலமான வாழ்வைப் பெற வேண்டுமென்ற ஆசையில் இந்த அறக்கட்டளையை நிறுவி, அதன் வழியாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, ஆதரவற்றவர்களை, யாருமில்லலாமல் தெருவிலே சுற்றித் திரிபவர்களை காப்பகத்திற்கு அழைத்து வந்து, சிகிச்சை அளித்து, ஆற்றுப்படுத்தி, அவர்களின் வீட்டார் இருந்தால் அவர்களிடத்தில் ஒப்படைத்து, நலமான வாழ்வை அவர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறார் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் திரு. மகேந்திரன் அவர்கள். இவர் கோவையில் மோட்டார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். எப்படி இந்த எண்ணம் உங்களில் உதித்தது என்று அவரிடத்தில் கேட்ட பத்திரிக்கையாளருக்கு அவர் கொடுத்த பதில்: "என் தங்கை யாருமில்லாமல் தவித்த தவிப்பின் உச்சக்கட்டமே அவள் சாக்கடையில் விழுந்து, சகதியில் புரண்டு, எழுந்து நிற்ககூட முடியாமல் கிடந்த ஒரு அவலநிலை. என் தங்கை போன்று எவ்வளவு பேர் இந்த கோவை நகரத்தில் இருப்பார்கள், அவர்களுக்கு நலமான வாழ்வை அமைத்துகொடுக்க வேண்டுமென்ற ஆவல்தான் என்னை இந்தளவு மற்றவர்களுக்காக வாழ வைத்தது. இன்று என்னால் அவர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்க முடிகிறது, அவர்களின் இதயத்தில் மனமகிழ்வைக் கொடுக்க முடிகிறது" என்றார். உடன் பிறந்த தங்கையும், உடன் பிறவா ஊராரும் என்னால் வாழ்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி நிற்கிறது திரு. மகேந்திரனின் மகத்தான சேவை.

இறைஇயேசுவில் இனியவர்களே,
இன்றைய உலகம் நம்முடைய வாழ்வை மட்டுமல்ல, நம் எண்ணத்தையும், வாழ்க்கை முறையையும், வாழ்வியல் சிந்தனைகளையும் குறுக்கிவிட்டது. சிந்திக்கின்ற யாவற்றையும் உயர்வாக சிந்தித்த நம் சமூகம், இன்று எல்லாவற்றிலும் குறுகிய மனப்பான்மையுடன் அணுகுவது சற்று வருத்துமளிக்கிறது. அகன்ற பார்வை, விசாலமான எண்ணம், உயர்ந்த நோக்கம், எதிர்பாராத உதவி, ஏற்றிவிடும் ஏணி, வழிகாட்டும் நல்லெண்ணம் இவையெல்லாம் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அகன்று வரும் வாழ்வியல் சிந்தனைகள். முகம் பார்த்து பேசிய காலங்கள் மாறி முகநூலில் பேசும் காலம் வந்துவிட்டது. எவ்வளவு இம்சை கொடுத்தாலும் immediate ஆக வந்து உதவிய மனிதர்கள் இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் வருகிறார்கள், Google pay செய்கிறார்கள். மின்னல் வேகத்தில் விசாரிக்க கிளம்பிய மக்கள் கூட்டம் இன்று மின்னஞ்சலில் தங்கள் விசாரணையை முடித்து கொள்கின்றனர். அடுத்தவரின் வாய்ஸ் கேட்டு ஆனந்தம் அடைந்த நம் மக்கள் வாய்ஸ் மெசேஜ் வந்தால் போதும் என்கிற அளவிற்கு மாறிவிட்டனர். இக்கலாச்சாரப் பின்னணியில் நாமும் ஒழுங்காய் வாழ்வதில்லை, மற்றவர்களுக்கும் நலமான வாழ்வைக் கொடுப்பதில்லை என்கிற ஆழமான சிந்தனையைத்தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வழங்குகின்றது. நம்முடைய சுயநலப் பார்வையால் படைத்தவனின் திட்டம் நம்மில் நிறைவேறுவதையும் நாம் விரும்புவதில்லை. நாம் அடுத்தவர் மீது காண்பிக்க வேண்டிய பரிவுமிக்க வாழ்வினை கொடுக்கவும் மனமில்லை என்கிற உண்மையை உரக்கச் சொல்கின்றது இன்றைய வாசகங்கள்.

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் பிற இனத்தவரைப் போல தங்களையும் வழிநடத்த ஓர் அரசன் வேண்டுமென ஒரு காலத்தில் விண்ணப்பித்தனர் (1சாமு 8:5). எங்களை ஆள்வதற்கென்று நீர் அரசர் ஒருவரை எங்களுக்குத் தாரும் என்று மக்கள் இறைவனிடத்தில் கேட்டனர். அரசர்களால் நிகழும் துன்பங்கள் பலவாறு இருக்கும் என சாமுவேல் பல முறை எச்சரித்தும் (1சாமு 8:10) அவர்கள் அரசர் வேண்டுமென விரும்பினர். மக்கள் தங்களை அரசர்கள் வாழ வைப்பார்கள் என நினைத்தார்கள். நல்ல ஆயனாக இருந்து எங்களை வழிநடத்துவார்கள் என நினைத்தார்கள். ஆனால் அவர்கள் ஆடுகளை மேயும் ஓநாய்களாக இருக்கிறார்கள் என்பதை பின்னாளில் தான் மக்கள் உணர்ந்துகொண்டார்கள். எனவே எரேமியா, எசேக்கியேல் இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் நல்ல மேய்ப்பர்களை வழங்கி என் மக்களை நீதியின் வழியில் நடத்துவேன் என்ற வாக்குறுதியை நிலைநாட்டும் வண்ணமாய் அமைகிறது இன்றைய முதல் வாசகம். சிதறடிக்கும் மேய்ப்பர்களைப் பார்த்து, ஐயோ உங்களுக்கு கேடு, என் மந்தையை நீங்கள் சிதறடித்துவிட்டீர்கள். அதனை பராமரிக்கவில்லை. ஆகவே உங்களைத் தண்டிக்க போகிறேன் என்று கூறும் தந்தையாம் இறைவன், சிதறிப் போன மந்தையைத் தேடி கூட்டிச் சேர்க்கும் நல்ல மேய்ப்பர்களை நியமிப்பேன் என்கிறார். வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வைக் கொடுக்க இறைவன் நல்ல மேய்ப்பனை உருவாக்குகிறார். அவர்;கள் தன்னிகரில்லா மேய்ப்பனாய் இருப்பார்கள் (எசே 34:11-16, எரே 23:3) என்பதையும், அவர்கள் விடுதலையையும், பாதுகாப்பையும் கொடுத்து (எரே 23:5-6) உங்களை வாழ்விப்பார் என்பதையும் இறைவன் கூறுகிறார். ஆக இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வினை இழந்து நிற்கும் போது கடவுள் அவர்களுக்கு மீண்டும் தன் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களின் வழியாக வாழ்வைக் கொடுக்கிறார். அப்படியாய் கொடுக்க இருக்கும் நல்ல ஆயனாய், தாவீதின் வழிமரபினில் உதிக்கும் தளிராக இயேசுவைக் குறித்து முன்னறிவிக்கப்படுகிறது. ஞானமுடன் செயல்படுவார், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டுவார். யூதா அந்நாளில் விடுதலை பெறும், இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும் என்று இயேசுவைக் குறித்த பார்வை கொடுக்கப்படுகின்றது என்றால், அவர் நல்ல ஆயனாக பிறரின் வாழ்விற்காய் தன் உயிரைக் கொடுக்க இருப்பவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இதைத்தான் இரண்டாம் வாசகம் மிகத் தெளிவாக எண்பித்துகாட்டுகிறது. சகோதரர், சகோதரிகளே, ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள் (எபே 2:13) என்பதன் அடையாளமே இயேசு தன் வாழ்வை நமக்காய் கொடுத்திருக்கிறார் என்பதன் வெளிப்பாடே. அவர் நல்லாயனாய் தன் மந்தைக்கு வாழ்வு கொடுக்க தன் வாழ்வை இழந்து நம்மை வாழ்வித்துள்ளார். மந்தையாகிய நாம் மனநிறைவுடன் வாழ்வதற்கு அவர் தம் வாழ்வை சிலுவையில் நமக்காய் கொடுத்தார். 'ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவான வாழ்வு பெறும் பொருட்டு வந்துள்ளேன்' (யோவான் 10:10) என்ற இயேசுவின் வார்த்தை நமக்கு வாழ்வைக் கொடுத்தது.

நற்செய்தியில் இயேசு இரண்டு விதமான வாழ்வியல் சிந்தனைகளை நமக்குக் கொடுக்கிறார். ஒன்று தன்னுடன் பயணித்த திருத்தூதர்களின் வாழ்வைப் பற்றியும், தன் கண்ணுக்கு முன்பாக வந்த மக்களின் வாழ்வைப் பற்றியும் சிந்திக்கிறார். சற்று இளைப்பாறுங்கள் என்கிற இயேசு முதலில் திருத்தூதர்களின் மீது பரிவு கொள்கிறார். நற்செய்தி அறிவித்து, பிணிகளை நீக்கி சோர்வுற்று இருக்கும் அவர்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று அவர்கள் மீது பரிவு கொள்கிறார். இன்னொரு புறம் பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்த மக்கள் கூட்டத்தை இயேசு பார்த்து அவர்கள் மீது பரிவு கொள்கிறார். பரிவு என்பது வாழ்வு கொடுத்தலின் அடையாளம். இiத்தான் இயேசு இன்றைய நாளில் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். நாம் நம்முடைய செயலால் மற்றவர்களை வாழ்விக்கின்றோமா ? என்ற மிகப்பெரிய கேள்விளைக் கேட்கிறார். என்னை அண்டி வந்த மனிதர்கள் யாவரும் என்னால் வாழ்ந்தார்கள். நோயோடு வந்தவர்கள் நோய் நீக்கப்பட்டு கடவுளுக்கு நன்றிச் செலுத்தினர். பிணிகளோடு வந்தவர்கள் பிணிகள் விலகி, இறைவனைத் தேடினர். உயிரை இழந்தவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டனர். இவ்வாறாக "வாழ்வு தரும் நீரூற்றிலிருந்து" (யோவான் 4:14) மக்கள் முகர்ந்துகொண்டார்கள். எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு ஆயனுக்குரிய மனநிலையோடு தன் திருத்தூதர்கள் மீதும், மக்கள் மீது பரிவு கொள்கிறார். உடனிருக்கும் சீடர்களுக்கும், பல ஊர்களிலிருந்து வந்திருந்த மக்களுக்கும் இயேசு வாழ்வு கொடுக்கிறார்.

இறைஇயேசுவில் பிரியமானவர்களே, இயேசு கொடுத்த வாழ்வை நாம் பிறருக்கு வழங்க முற்படுகின்றோமா? என்கிற கேள்விக்கு விடைத்தேடுவதே இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு விடுவிக்கும் அழைப்பு. யார் வாழ்வைத் தர முடியும்? யார் ஒரு வாழ்கிறாரோ அவரால்தான் வாழ்வைத் தர முடியும். அடுத்தவரின் வாழ்வைக் கெடுக்க வேண்டுமென்று நினைப்பவரால் நிச்சயமாய் வாழ்வைத் தர முடியாது. "எனது சதை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்விற்காகவே கொடுக்கிறேன்" (யோவான் 6:51) என்று இயேசு சொல்வதன் அடையாளமே, அவர் வாழ்வைக் கொண்டிருந்தார். அத்தகைய வாழ்வை வாழ்விழந்து தவித்த நமக்காய் கல்வாரி மலையில் செம்மறியாய் தன்னையே பலியிட்டு, நம் பாவங்கள் போக்கி நிலைவாழ்வைக் கொடுத்தார். அவரைப் பின்பற்றி வாழும் நாமும் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். அதன் ஒரு பகுதிதான் பரிவு காட்டும் குணம்.

அன்பிற்கினியவர்களே, நாம் ஒரு கருத்தை மிகத் தெளிவாக இன்று புரிந்துகொள்ள வேண்டும். பரிவு, பரிதாபம் இவ்விரண்டு வார்த்;தைக்கும் வித்தியாசம் உண்டு. இயேசு யார் மீதும் பரிதாபம் கொள்ளவில்லை. மாறாக பரிவு கொண்டார். அதனால்தான் அவரால் சிதறிய மந்தையாய் விளங்கிய நமக்கு நல்லாயனாய் வாழ்வு தர முடிந்தது. ஆனால் நாமோ பல நேரங்களில் பரிதாபம் மட்டும் படுவதால், வாழ்வு மலர்வதில்லை. இதைத்தான் சற்று ஆழமாக நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்க ஆசைப்படுகின்றேன். ஏன் நம்மால் வாழ்வு கொடுக்க முடியவில்லை? இயேசுவைப் போன்று ஏன் நம்மால் பரிவுகாட்ட முடியவில்லை? சின்ன உதாரணத்தின் வழியாக விளக்குகிறேன். நம்முடைய குழந்தைகள் இப்போதெல்லாம் வீடியோ கேம்மில் அதிக ஆர்வமிக்கவராய் இருக்கிறார்கள். நம் குழந்தைகள் அதிகம் அந்த வீடியோ கேம்மின் பெயர்தான் ஃபீரிஃபைர் (free fire) என்ற விளையாட்டு. அந்த கேம்மில் 50 பிளேயர்ஸ் இருப்பார்கள் அவர்களை ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, இறுதியில் வெற்றியாளராய் மாற வேண்டும். இதுதான் அந்த கேம்மின் சுருக்கம். நம் குழந்தைகள் அதிகமாய் இந்த விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். இந்த கேம்மின் நோக்கம் அடுத்தவரின் வாழ்வை எடுப்பது. அதாவது துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது. நம் குழந்தைகள் சுமார் 8 மணிநேரம் இந்த கேம்மை விளையாடுகிறது என வைத்துகொள்வோம். எவ்வளவு நேரம் அழிக்கும் சக்தியைச் சிந்தனையாக தன் மனதுக்குள் தெரிந்தோ தெரியாமலோ செலுத்துகிறது. தான் வாழ்வதற்காக மற்றவர்களை அழிக்கலாம் என்ற சிந்தனைதான் வருமே ஒழிய, நான் வாழாவிட்டாலும், தகுதியுள்ள அடுத்தவரை வாழ்விக்கலாம் என்ற எண்ணம் எப்படி வரும். ஆனால் தன்னை ஒரு பொருட்டாக கருதாமல் மற்றவர்களை வாழ்விப்பவர்கள் பரிவு காட்டுகிறார்கள். இதுதான் இயேசு விரும்பும் பரிவுள்ளம். பரிதாபம் கொள்ள இயேசு அழைக்கவில்லை. பரிவுகாட்டவே நம்மை அழைத்துள்ளார். நம் வாழ்வில் நாம் உடனிருப்போருக்கும், ஊராருக்கும் எப்படி பரிவு காட்ட முடியுமென்றால், கீழ்வரும் சிந்தனைகளிலிருந்த நம்மை விடுவித்துகொண்டாலே போதும் நாம் பரிவு என்னும் பண்பால் அடுத்தவரை பாருலகில் வாழ்விக்க முடியும்.

1.தீர்ப்பளிக்கும் குணம்:
யார் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டிலும், நான் மற்றவர்களுக்கு என்னச் செய்கிறேன் என்பதுதான் முக்கியம். நீங்கள் உங்களுக்கு தீர்ப்பளித்து திருந்தி வாழ்ந்தால் போதும், மற்றவர்களுக்கு தீர்ப்பளிப்பதைக் கடவுள் பார்த்துகொள்வார். காரணம் நாம் வழங்கும் தவறான தீர்ப்புகளால் பரிதாபம்கூட நம் வாழ்வில் எட்டிப்பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. தீர்ப்பிட ஆரம்பித்தால் வாழ்வைக் கொடுப்பதற்கு பதில் வாழ்வைக் கெடுப்போம் என்பது தெளிவாகட்டும். இதைத்தான் புனித பவுல் உரோமை நகர மக்களுக்கு இவ்வாறாய் எழுதுகிறார்: "ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப கடவுள் கைம்மாறு செய்வார். மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்" (உரோ 2:6-7)

2. கடவுள் பயம் அற்ற வாழ்வு:
நாம் நம் அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டோம். ஞானம் மிக்கவராய் இருக்கிறோம் என எண்ணுகின்றோம். எல்லாம் எனக்கு இருக்கிறது. யாருக்காய் நான் பயப்பட வேண்டுமென்று சிந்திக்கின்றோம். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், யார் ஒருவர் கடவுள் பயம் இன்றி வாழ்கிறாரோ அவரால் அடுத்தவர்களுக்கு வாழ்வு கொடுக்க முடியாது. பயமில்லாமல் இருப்பது சொகுசு வாழ்வு அல்ல. சுடுகாட்டுக்கு இட்டுச்செல்லும் வாழ்வு. நாம் பல நேரங்களில் யார் என்னைப் பார்க்க போகிறார் என தவறு செய்கிறோம். அதை நியாயப்படுத்தவும் செய்கிறோம். இதைத்தான் ஆண்டவர் நம்மிடமிருந்து அகற்ற வேண்டுமென்று சொல்கிறார். கடவுள் மீது பயமிருந்தால், செய்யும் செயல் நீதியாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும், ஆவிக்குரியதாகவும், அடுத்தவர் நலன் சார்ந்தாகவும் இருக்கும், அப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் மீது நிச்சயமாய் பரிவு கொண்டு, அவர்களுக்கு வாழ்வு கொடுப்போம். இதைத்தான் புனித பவுல் கொரிந்து நகர மக்களுக்கு இவ்வாறாய் சொல்கிறார்: "கடவுளுக்கு அஞ்சித் தூயவாழ்வில் நிறைவடைவோம்" (2கொரி 7:1). இத்தகைய நிறைவுதான் அடுத்தவர்களுக்கு பரிவு காட்டும். பார்போற்றும்வண்ணம் வாழ்வைக் கொடுக்கும்.

3. கிறிஸ்துவின் மனநிலையில்லா சூழல்:
எதார்த்தமாய் சிந்திப்போம். பெற்றவர்கள் கண்டிப்பாய் கொடுத்து பழக வேண்டும். அதுதான் உலக நியதி. சாதாரணமாக உதவி பெறுகிறவர்கள், முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்கிற சிந்தனை, அடுத்தவர்களுக்கு வாழ்வு கொடுக்க அளவிற்கு மாற வேண்டுமென்பதே இயேசுவின் விருப்பம். கிறிஸ்துவின் மனநிலை நம்மில் உருவாகும் போது நாமும் இயேசுவைப் போன்று வாழ்வு கொடுப்பவர்களாக மாறுவோம். இதைத்தான் புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!" (பிலி 2:5) என்று கூறுகிறார். இயேசுவின் போதனையைக் கடைபிடிப்பது, அவர் கொடுத்த வாழ்வியல் சிந்தனைகளை உள்வாங்குவது, அவர் காட்டிய வழியில் நடப்பது இவையெல்லாம்தான் கிறிஸ்துவின் மனநிலையில் வாழ்வது. சுருங்கூறின் மற்றவர்களுக்கு வாழ்வைக் கொடுப்பது அவ்வளவுதான்.

4. அன்புச் செலுத்தாமை:
உண்மையான அன்பு யாரிடத்தில் விளங்குகிறதோ அவர்கள் நிச்சயமாய் மற்றவர் மீது பரிவு கொள்வார்கள். தம் திருத்தூதர்கள் மீதும், தன்னைத் தேடி வந்த மக்கள் மீதும் இயேசு பரிவுகொண்டார் என்றால், அவர்களை அவர் ஆழமாய் அன்புச்செய்தார். ஆனால் நாமோ அன்பிற்கு என்ன விலை என்று கேட்கின்றோம். இன்றைய அன்பை இரட்டை வாழ்க்கை முறை, பிறழ்வுபட்ட பேச்சு, கண்டுக்கொள்ளாமை, மதிப்பற்று நடத்துவது, விமர்சனம் செய்வது, வீணானவற்றைப் பேசுவது, அவதூறு உரைப்பது இவற்றால் தூய அன்பை நாம் களங்கப்படுத்திவிட்டோம். ஆகவேதான் கண்முன் நிற்போரை அன்புச்செய்து, பரிவு காட்ட நம்மால் முடியவில்லை. இருப்பினும் பேதுரு தன் திருமடலில் இவ்வாறாய் நமக்கு நம்பிக்கை கொடுக்கிறார்: "எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும்" (1பேதுரு 4:8). மேற்சொன்ன பாவங்கள் நம்மிடமிருந்து அகன்று, அடுத்தவருக்கு வாழ்வைக் கொடுக்க வேண்டுமெனில், நாம் அன்புச்செய்ய வேண்டும்.

எனவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து பெற்ற அருளை இழந்துவிடாமல், உடனிருப்பவர்களுக்கும், ஊராருக்கும் வாழ்வைக் கொடுக்கின்ற மனிதர்களாக வாழ இறைவனிடத்தில் செபிப்போம். அப்போது நம்மை வாழ்வித்த கடவுள், நம்மால் மற்றவர்களையும் வாழ்விக்கும் நல்ல மேய்ப்பர்களாக நம்மை உருவாக்குவார். இத்தகைய மனநிலையுள்ள மேய்ப்பர் தன் மந்தையின் மீது நிச்சயம் பரிவுகாட்டுவார். நீதியின் வழியில் நடத்துவார்! அத்தகு மேய்ப்பார்களாய் வாழ்ந்திட நல்ல ஆயனாம் இயேசுவிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து செபிப்போம்!!

"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை" (திபா 23:1)

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு