மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 15-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
ஆமோஸ் 7:12-15 | எபேசியர் 1:3-14 | மாற்கு 6:7-13

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்

குடும்பத்தைக் கட்டி எழுப்பு

நாம் வாழும் இன்றைய காலக் கட்டத்திலே திறமையும், சக்தியும் வாய்ந்த மனிதர்களைத் தேடிச் செல்கின்றது இன்றைய சமுதாயம். திறமை மிக்க ஆசிரியர்களைத் தேடுகிறார்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க சக்தியும், திறமையும் வாய்ந்த மருத்துவரை நாடுகின்றான் ஒரு நோயாளி. திறமை வாய்ந்த சமையல் கலைஞனை தேடுகின்றான் ஓர் உணவக உரிமையாளன். திறமை வாய்ந்த ஓட்டுநரை நாடுகின்றான் ஒரு அதிகாரி தன் காரை ஓட்ட. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் திறமையை நாடுகின்றோம். ஆனால் திறமையானது பிறப்பிலே வந்துவிடுவதும் இல்லை. புத்தக அறிவால் நிறைவு பெறுவதும் இல்லை. மாறாக மனிதனின் அன்றாட அனுபவத்தில் நிறைவு காண்பதுதான் திறமை. பழமொழி ஆகமம் 24- ஆம் அதிகாரம், 3-4 வசனங்கள் தருவது போல எந்த ஒரு செயலும் முதலில் ஞானத்தோடு திட்டமிடுவதால், அறிவோடு செயல்படுவதால், காலக்குறிகளுக்கு ஏற்றவாறு அமைப்பதால் திறமை மிக்க செயலாகும் என்று நிரூபிக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஞானத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்த இயேசு என்ற திறமை மிக்க ஒப்பற்ற தலைவர் திறமை மிக்கவர்களைத் தேடவில்லை. ஆனால் சாதாரண, படிப்பறிவில்லா பாமரராக கடலிலே தொழில் நடத்திய மீனவர்களை அழைத்தார். தன் ஞானத்திலே பயிற்சி கொடுத்தார். ஆவியின் சக்தியிலே பலப்படுத்தினார். திறமை மிக்க சீடர்களாக உருவாக்கினார். தான் கொடுத்த நற்செய்தியை அறிவிக்க இருவர் இருவராக அனுப்பினார். நற்செய்தியை அறிவிக்க திறமை மிக்க பாத்திரங்களாக மாறினார்கள். சாட்சி பகரும் உண்மை வீரர்களாக மாறினார்கள். இவர்கள் ஆற்றிய அரும்பெரும் செயல்களை நற்செய்தி ஏட்டிலே நாம் காணலாம். வாசித்து மகிழலாம்.

இன்றைய நாட்களிலே இறைவன் உன்னையும் அழைக்கலாம். தனியாக அல்லது குடும்பமாக . எதற்காக? குடும்பங்களைக் கட்டி எழுப்ப உன்னை அழைக்கலாம். இன்று எத்தனையோ குடும்பங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. கணவன் மனைவிக்குள்ளே பிரிவு. பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளே விரிசல். திருமணத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. கணவன் குடித்து குடும்பத்தின் பொறுப்பற்ற நிலையிலே வாழும் காட்சி. அதனால் மனைவி கண்ணீர் கடலிலே தவிக்கும் காட்சி. மனைவி கணவனை மதிக்காத நிலையிலே தான்தோன்றித் தனமாக மாறும் காட்சி. பணம், பதவி, இன்பம் இவைகளுக்கு இடம் கொடுத்து, உண்மை அன்புக்கு இடமின்றி வறண்ட பாலைவனமாக இன்று எத்தனையோ குடும்பங்கள் காட்சித் தருகின்றன. இத்தகைய குடும்பங்களைக் கட்டி எழுப்ப இறைவன் உன்னையும் உன் வாழ்க்கை துணைவர், துணைவியையும் அழைக்கலாம்.

சென்னை மாநகரத்திலே எனக்குத் தெரிந்த சாதாரண கூலி வேலை செய்யும் ஒரு குடும்பம் உண்டு. நல்லதோர் குடும்பம். கணவனும் மனைவியும் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் தம்பதிகள். என்னைச் சந்தித்தபோது அவர்களின் பணி வாழ்வில் ஒன்றை என்னிடம் மகிழ்ச்சியோடு கூறினார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் சில குடும்பங்களை நாங்கள் கணவன் மனைவியுமாக சந்திக்கின்றோம். இறைவன் அன்றாட வாழ்வில் எங்களுக்குச் செய்த இணையற்ற கொடைகளை எடுத்துச் சொல்லுகின்றோம். எப்படி எங்கள் வாழ்வில் துன்பங்களையும், சவால்களையும் சந்திக்கின்றோம் என்பதையும் பகிர்ந்து கொள்ளுகிறோம். நாங்கள் சந்திக்கும் குடும்பங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகளைக் கவனத்தோடு நாங்கள் செவிமடுக்கின்றோம். இறுதியாக எங்களுக்குத் தெரிந்த சிறிய செபத்தால் குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கின்றோம். இது எங்களைப் பலப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்கள்.

ஆம் நண்பா! நீயும் உன் மனைவியும் இதற்குச் சான்றாகத் திகழலாம் அல்லவா! சகோதரியே! நீயும் உன் கணவனும் இதற்குச் சான்று பகரலாமே! என்ன தகுதி எனக்கு உண்டு? என்ன திறமை எனக்கு உண்டு என்று திகையாதே! இறைவனுக்குத் தகுதியுள்ளவர்கள் தேவையல்ல. தகுதியற்ற உன்னை தகுதியுள்ளவராக்குவார். உறுதியூட்டும் இறைவனால் எனக்கு எதையும் செய்ய ஆற்றல் உண்டு என்று புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய மடலிலே 4-ஆம் அதிகாரம் 13 - ஆம் வசனத்தில் குறிப்பிடுவது போல் தேவன் உன்னை ஆற்றல் மிக்க பாத்திரமாக மாற்றுவார். ஆனால் ஒன்று, நீ பிற குடும்பங்களுக்கு திருத்தூதராக மாறும்போது முதலில் நீ உன் குடும்பத்திற்கு திருத்தூதராக மாறுவாய். அது உன்னைப் பலப்படுத்தும். உன் குடும்பம் நிறைவும் மகிழ்ச்சியும் பெறும். பலப்படுத்தும் தேவன் உன்னை வழிநடத்துவாராக.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

துறவு மனத்தவரின் தூயவாழ்வு எப்படி இருக்க வேண்டும்?

இயேசு அவருடைய சீடர்களுக்கு அளித்த அறிவுரை வழியாக மனத் துறவைப் பற்றிய விளக்கமொன்றை நமக்குத் தருகின்றார். அவர் தம் சீடர்களைப் பார்த்து, பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையிலே செப்புக்காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம். அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் (மாற் 6:8-9) என்கின்றார்.

துறவின் மையம் வெறுமை போல தோன்றும்! ஆனால் துறவு உண்மையிலேயே நிறைவானது, வல்லமை மிக்கது, ஆற்றல் வாய்ந்தது.

இரு நண்பர்கள்! இருவரும் துறவிகள்! ஒருவர் முற்றிலும் துறந்தவர்! மற்றொருவர் சற்றே மாறுபட்டவர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை! மாலை நேரம்!

முற்றிலும் துறந்தவர், "ஓடக்காரருக்குக் கொடுக்க, என்னிடம் பணமில்லை ; இங்கேயே தங்குவோம். காலையில் யாராவது நமக்கு உதவிசெய்வார்கள்” என்றார். மற்றவரோ, "இது காடு. மிருகங்களால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். என்னிடம் பணமிருக்கின்றது. ஆற்றைக் கடந்து விடுவோம்" என்றார்.

இருவரும் அக்கரையை அடைந்தார்கள். அப்போது முற்றும் துறந்தவரைப் பார்த்து அவருடைய நண்பர், "உம்மைப்போல நானும் முற்றும் துறந்திருந்தால் ஆற்றைக் கடந்திருக்க முடியாதே" என்றார்.

அதற்கு முற்றும் துறந்தவர் சொன்னார் : "உன் துறவு மனப்பாங்குதான் நம்மை இக்கரை சேர்த்தது. நீ பொருளைப் படகோட்டிக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாம் வந்து சேர்ந்திருக்க முடியாது. மேலும் என் பையில் பணமில்லாதபோது உன்னுடையது என்னுடையதாயிற்று. எனக்குத் தேவையானது எனக்கு எப்படியும் கிடைத்துவிடுகின்றது. பொருள் இல்லாததால் ஒருபொழுதும் நான் துன்புற்றதில்லை” என்றார்.

இதனால்தான் இயேசு பற்றற்ற வாழ்வுக்கு, துறவு வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றார். இல்லறத்தில், தனியறத்தில் வாழ்பவர்கள் கூட துறவை மேற்கொள்ளலாம். மனத் துறவு - இது எல்லாருக்கும் பொதுவானது. துறவு மனம் படைத்தோர் ஒருபோதும் ஏமாறுவதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை! துறவு மனம் படைத்தோர் எதையும் இழப்பதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் பற்றிக்கொள்வதில்லை! ( முதல் வாசகம் ).

மேலும் அறிவோம் :

பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் : 350).

பொருள் : எவற்றின் மீதும் பற்று வைக்காமல் இருப்பவரிடம் பற்று வைக்கலாம். உலகச் செல்வங்கள் மீது பற்றுக்கொள்வோர் அவை நிலையற்றவை என்பதை உணர்ந்து, பற்றற்றான் ஆகிய இறைவன் மீது பற்று வைப்பர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பெந்தக்கோஸ்து சபையைச் சார்ந்த கிறிஸ்துவர்கள், "இயேசு வருகிறார் என்ற தலைப்பில் பல துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அவற்றை ஒரு பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்குக் கொடுத்தனர். மேலும், ஒரு பேருந்து நடத்துனரிடம் அதைக் கொடுக்க, அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, "இயேசு வருகிறாரா? யார் வந்தாலும் வரட்டும்; ஆனால், மரியாதையாக 'டிக்கட்' வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இன்று இயேசுவே வந்தாலும், அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறமுடியும்: பயணம் செய்ய முடியும், அப்படியிருக்க, இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்பும்போது, அவர்கள் தங்களுடன் உணவோ, பையோ, காசோ எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று கட்டளையிடுகிறாரே; இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்று நாம் கேட்கலாம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறார். ஒன்று, நற்செய்தியை அறிவிப்பவர்கள் பணத்தை அல்ல, கடவுளையே நம்பித் தங்கள் தாதுரைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இரண்டு, நற்செய்தியைக் கேட்பவர்கள் அதை அறிவிப்பவர்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யக் கடமைப்பட்டுள்ளாளர்.

நற்செய்தியை அறிவிப்பவர்கள் கடவுளை மட்டுமே நம்பித் தங்கள் பணியை ஆற்றவேண்டும், செல்வமும் சொத்துக்களும் நற்செய்திப் பணிக்கு மாபெரும் இடையூறாகவும் வேகத் தடைகளாகவும் உள்ளன. நற்செய்திப் பணிக்காகச் சொத்துக்களைக் குவிப்பவர்களுக்கு. இறுதியில் அச்சொத்துக்களைக் கட்டிக் காப்பதற்குத்தான் நேரமிருக்கும்; நற்செய்திப் பணிக்கு நேரமிருக்காது.

நற்செய்தி அறிவிப்பவர்கள் ஊர் ஊராகச் செல்லவேண்டும். எவ்வளவுக்கு அதிகமாகப் பொருள்கள் அவர்களிடம் உள்ளதோ, அவ்வளவுக்கு அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லத் தயங்குவார்கள்.

தனது பங்கிலே 100 தென்னம்பிள்ளைகளை நட்டுவளர்த்த பங்குத்தந்தை. அம்மரங்கள் காய்க்கும்வரைத் தன்னை அப்பங்கிலிருந்து மாற்றக்கூடாது என்கிறார். கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் பங்குத்தந்தை. அக்கட்டடம் கட்டி முடியும்வரை பணிமாற்றத்தை எதிர்க்கிறார், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல இலட்சங்களைத் தனியார் நிறுவனத்தில் கொடுத்து வைத்த துறவறச் சபைக் குரு. அந்நிறுவனம் திவ்லாகி, 'மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியவுடன் மாரடைப்பால் மரணமடைகிறார்!

"எவரும் இருதலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்களும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 8:24). ஆண்டவரின் இவ்வருள் வாக்கை மறந்தத் திருப்பணியாளர்கள் காலப்போக்கில் திருவாளர்களாக மாறிவிடுவதில் வியப்பொன்றுமில்லை, பொருளாளர்கள் அருளாளர்களாக இருப்பது ஒருபோதும் இயலாது. புனித சாமிநாதர் மூன்றாம் 'இன்னசென்ட்' என்ற திருத்தந்தையைச் சந்தித்தபோது, திருத்தந்தை அவரிடம், "பேதுரு தன்னிடம் பொன்னோ வென்ளியோ இல்லை என்றார். ஆனால் நான் அவ்வாறு கூற முடியாது. ஏனெனில் என்னிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் உள்ளன என்றார். அதற்குச் சாமிநாதர் திருத்தந்தையிடம், "உங்களிடம் பொன்னோ வெள்ளியோ இல்லை என்று கூறமுடியாது. ஆனால் நீங்கள் முடவனைப் பார்த்து எழுந்து நட' என்றும் சொல்ல முடியாது" என்று பதிலடி கொடுத்தார். பேதுருவும் ஏனைய திருத்தத்தங்களும் புதுமை செய்தனர்; ஏனெனில் அவர்களிடம் பொன்னும் வெள்ளியுமில்லை. இக்காலத்தில் திருப்பணியாளர்களிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் இருப்பதால் அவர்களால் புதுமை செய்ய இயலவில்லை . திருப்பணியாளர்கள் தங்கள் அருள் பணிக்குப் பணம் வாங்கக் கூடாது. ஏனெனில் கொடையாக, அதாவது, இலவசமாகப் பெற்றுக் கொண்டதைக் கொடையாக, இலவசமாகவே வழங்க வேண்டும் (மத் 10:8) என்பதுதான் இயேசுவின் விருப்பம்.

ஒரு பங்கிற்கு உறுதிப்பூசுதல் கொடுப்பதற்காக ஆயர் சென்ற போது, உறுதிப்பூசுதல் பெறும் சிறுவர்கள் ஓர் உறையுள் 10 ரூபாய் வைத்து ஆயருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டுமென்று பங்குத்தந்தைக் கேட்டிருந்தார், ஓர் உறையுள் 10 ரூபாய் இருந்தது: அத்துடன் ஒரு காகிதத்துண்டில், “பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குமா இலஞ்சம் கொடுக்க வேண்டும்?" என்று எழுதப்பட்டிருந்தது.

திருப்பலி நிறைவேற்றுவதற்கும் திருவருள் சாதனங்களை வழங்குவதற்கும் இறைமக்களிடமிருந்து பெறப்படுவது இலஞ்சமோ கட்டாயக் கட்டணமோ அல்ல; மாறாக, திருப்பணியாளர்களைப் பராமரிப்பதற்காக இறைமக்கள் கொடுக்கும் விருப்பக் காரிக்கையாகும், திருப்பணியாளர்கள் இழிவான ஊதியத்திற்காகப் பணி செய்யலாகாது (1பேது 5:2). ஆனால், பங்கு மக்கள் தங்களது பங்குப்பாரியாளரைப் பராமரிக்க வேண்டிய கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர். இக்கடமையை இயேசுவும் புனித பவுலும் வலியுறுத்துகின்றனர்.

'வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே' (மத் 10:10 இயேசு வின் சீடருக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுப்பவரும் கைமாறு பெறுவார் (காண்க: மத் 10:42) "நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்கு உரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பனரித்திருக்கிறார்" (1கொரி 9:14), “இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக் கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்க வேண்டும்" (கலா 6:6).

ஞாயிறு திருப்பலி முடிந்து, தனது சிறிய மகனுடன் வீடு திரும்பிய ஒரு பெண்மணி, பங்குத் தந்தையின் பிரசங்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து. கண்டபடி அவரைத் திட்டினார். அவருடைய சிறிய மகன் அவரிடம், "ஆமா, நீ போட்ட 10 பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம் வேணுமா? பேசாம வாங்கம்மா" என்றாள், 10 பைசா உண்டியலில் போட்டுவிட்டு, 10,000 கேள்விகள் கேட்பார் பலர் உண்டு.

ஒவ்வொருவரும் தங்கள் மாதவருமானத்தில் 1/10 பகுதியை கொடுக்கவேண்டாம்: 1/100 பகுதியாவது கொடுத்தாலே போதும். பங்குத் தந்தையைக்கூடப் பராமரிக்காத பங்கு மக்கள் கடவுளிடமிருந்து கொடைகளை எதிர்பார்க்க முடியுமா?

*கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக் 6:33) "மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலேயோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர், கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்பவல்லவர்" (2கொரி 9:7-8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விறகுக்கட்டை விணையாகும்‌

வீரலாற்றுப்‌ புகழ்பெற்ற வயலின்‌ வித்தகர்‌ பகாநினே (Paganine) என்பவர்‌ ஒருமுறை இன்னிசைக்‌ கச்சேரி நிகழ்த்த அரங்கேறினார்‌. அவரைக்‌ கண்டதும்‌ திரளான இரசிகர்கள்‌ எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பொலி எழுப்பினர்‌. உற்சாக வரவேற்பு! வாழ்த்தை ' ஏற்று அவையை வணங்கி அமர்ந்தார்‌. வயலினை எடுக்கப்‌ பெட்டியைத்‌ திறந்தார்‌. ஒரே அதிர்ச்சி. ஒரு கணம்‌ செயலற்று நின்றார்‌. வழக்கமாக அவர்‌ இசைக்கும்‌ வயலினைக்‌ காணோம்‌. பதிலாக வேறொன்று இருந்தது. பெட்டியை வைத்திருந்த இடமெல்லாம்‌ தேடினார்‌. ஒவியமாக அவர்‌ போற்றிப்‌ பேணிய வயலினை எவரோ திருடிவிட்டு மாற்று வயலினை வைத்திருந்தனர்‌. தன்னையே தேற்றித்‌ திடப்படுத்திக்‌ கொண்டு மக்களைப்‌ பார்த்துச்‌ சொன்னார்‌: "என்‌ இனிய இரசிகப்‌ பெருமக்களே, என்‌ உயிரான வயலினை எவரோ திருடிவிட்டனர்‌. பதிலாக வேறொன்றை வைத்துவிட்டு! ஆவலோடு துடித்துக்‌ கொண்டிருக்கிற உங்களை மேலும்‌ காக்க வைக்கவோ, ஏமாற்றத்துக்கு ஆளாக்கவோ விரும்பவில்லை. இசை என்ன இசைக்‌ கருவியில்‌ மட்டும்தானா இருக்கிறது? இசைக்கின்ற கலைஞனின்‌ திறமையிலும்‌ கேட்கின்ற மக்களின்‌ இரசனையிலும்‌ இல்லையா? Yes, the music is not in the tnstrument but in the soul" சொல்லிவிட்டு அமர்ந்து இசைக்கத்‌ தொடங்கினார்‌. பிரமித்து நின்றது மக்கள்‌ பெருவெள்ளம்‌.

கடவுளைப்‌ போல்‌ மகத்தான கலைஞன்‌ வேறு யார்‌? அவன்‌ புல்லை எடுத்து புல்லாங்குழலாக்கி இசைப்பான்‌. விறகுக்கட்டையை எடுத்து வீணையாக்கி மீட்டுவான்‌. இறைப்பணியின்‌ மாட்சி தனி மனிதத்‌ திறமையில்‌ அல்ல. “இசைப்பதெல்லாம்‌ இறைவனே” என்ற தாழ்ச்சியான தன்னுணர்விலும்‌ இசையை ஏற்கும்‌ மக்களின்‌ . முறையான இர சனையிலுமே! ஆனால்‌ இன்று...இறைப்பணியாளர்களின்‌ செயல்பாடுகளாகட்டும்‌, இறைமக்களின்‌ சிந்தனைப்‌ போக்காகட்டும்‌ ... நாம்‌ எங்கே போய்க்‌ கொண்டிருக்கிறோம்‌?!

இயேசு தன்‌ சீடர்களை அனுப்பியது போதனைப்‌ பணிக்கு மட்டுமல்ல. சாட்சிய வாழ்வுக்கும்கூட. வாழ்வுக்கும்‌ பணிக்கும்‌ பொலிவும்‌ நிறைவும்‌ தருவது வாழ்வுக்கான பண்புகள்‌. எடுக்க வேண்டிய நிலைப்பாடு, சந்திக்க வேண்டிய சவால்கள்‌, எதிர்கொள்ள நேரும்‌ இடற்பாடுகள்‌ இவை பற்றிய தெளிவு. இயேசு தன்‌ சீடர்களுக்கு இந்தத்‌ தெளிவைத்‌ தருகிறார்‌.

நமது போதனை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்‌. அதாவது நமது போதனைக்கும்‌ வாழ்வுக்கும்‌ நெருங்கிய தொடர்பு வேண்டும்‌. ஒவ்வொரு கிறிஸ்தவனும்‌ இயேசுவின்‌ சீடன்‌. சீடன்‌ என்பவன்‌ குருவைப்‌ பின்பற்றுபவன்‌ மட்டுமல்ல. குருவைப்‌ பிரதிபலிப்பவன்‌. அதுதான்‌ உண்மையான சீடத்துவம்‌. “நரிகளுக்குப்‌ பதுங்குக்‌ குழிகளும்‌, வானத்துப்‌ பறவைகளுக்குக்‌ கூடுகளும்‌ உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்‌ கூட இடமில்லை” (மத்‌. 8:20). இயேசு எந்த அளவுக்கு எளிமையை அணிந்து கொண்டார்‌ என்றால்‌ திருத்தூதர்‌ பவுல்‌ கூறுவது போல “கடவுள்‌ வடிவில்‌ விளங்கிய அவர்‌. கடவுளுக்கு இணையாயிருக்கும்‌ நிலையை வலிந்து பற்றிக்‌ கொண்டிருக்க வேண்டியதொன்றாகக்‌ கருதவில்லை. ஆனால்‌ தம்மையே வெறுமையாக்கி அடிமையின்‌ வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்‌'' (பிலிப்‌. 2:6,7).

எளிமை இல்லாத தொண்டு, தன்னலத்தை, ஆணவத்தை வெளிப்படுத்தும்‌. நாம்‌ ஆற்றும்‌ தொண்டு அருத்தமிழக்காமல்‌ இருக்க இறைவன்‌ விரும்பும்‌ எளிமையை அணிந்து கொள்வோம்‌. இன்றைய நற்செய்தியில்‌ சீடனாக இருப்பதற்கான தகுதிகளை இயேசு தெளிவாக வரையறுத்துக்‌ காட்டுகிறார்‌. தன்னலம்‌ மறந்து அருப்பண உணர்வுடன்‌ ஒருவன்‌ தன்னை இயேசுவின்‌ சீடனாக மாற்றிக்‌ கொள்ளும்‌ போது இந்த உலகில்‌ அவனுக்குப்‌ பாதுகாப்பு நிச்சயமாக இருக்காது.

கிறிஸ்தவன்‌ இயேசுவின்‌ சீடன்‌. இயேசுவின்‌ இறையாட்சிப்‌பணியே அவனது இலட்சியம்‌. அந்தப்‌ பணியைத்‌ தொடர்வதே அவனது வாழ்வு. “அனைத்தையும்‌ கிறிஸ்துவுக்குள்‌" ஒன்று சேர்க்க வேண்டும்‌” (எபேசி. 1:10) என்னும்‌ இறைத்திட்டத்தை, இறையாட்சிப்‌ பணியை நிறைவேற்றுவதே அவனது ஆன்மீகம்‌, அருள்வாழ்வு.

பணப்பற்றோ பதவி (அதிகார) வெறியோ வாழ்க்கை வசதிகளையும்‌ சொத்து சுகங்களையும்‌ தேடும்‌ மனப்பான்மையோ இந்தப்‌ பணிக்கு இடையூறுகளே! அதனால்தான்‌ பணிக்கு இன்றியமையாதவை தவிர வேறு எதையும்‌ நற்செய்திப்‌ பணியாளன்‌ கொண்டிருக்கலாகாது (மார்க்‌. 6:8-9); எளிய வாழ்க்கை முறையே ஆறையாட£சிப்‌ பணிக்கு ஏற்றது என்கிறார்‌ நற்செய்தி நாயகன்‌ இயேசு.இயேசுவுக்கு எளிமையே வலிமை.

மேலும்‌ இப்பணியில்‌ ஈடுபடுகின்றவர்களுக்கு உண்மையான தாழ்ச்சி வேண்டும்‌. தாம்‌ ஆண்டவரால்‌ அனுப்பப்பட்டவர்கள்‌ (மார்க்‌. 6:7) என்ற உணர்வு எப்போதும்‌ வேண்டும்‌. நீதியின்‌ இறைவாக்கினர்‌ ஆமோஸ்‌ கூடத்‌ தனது இறைவாக்குப்‌ பணியை தனது திறமையாக நினைக்கவில்லை. “நான்‌ இறைவாக்கினர்‌ இல்லை. இறைவாக்கினர்‌ குழுவில்‌ உறுப்பினனும்‌ இல்லை. நான்‌ ஆடு மேய்ப்பவன்‌. காட்டு அத்திமரத்‌ தோட்டக்காரன்‌. ஆடுகள்‌ ஓட்டிக்‌ கொண்டுபோன என்னை . ஆண்டவர்‌ தேர்ந்தெடுத்து என்‌ மக்களாகிய இஸ்ரயேலிடம்‌ சென்று இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்‌” (ஆமோஸ்‌ 7 : 14-15)

எரோபோவாம்‌ இஸ்ரயேலை ஆட்சி செய்த காலம்‌. சமுதாயச்‌ சீர்கேடுகள்‌ பணக்காரர்களின்‌ சொகுசான. வாழ்வுக்கு ஒத்தடம்‌ கொடுத்த, அரியணை ஏறிய அநீதிக்குச்‌ சமயம்‌ பாதுகாப்பு அளித்த காலக்கட்டம்‌ அது. அதனை வன்மையாகக்‌ கண்டனம்‌ செய்கிறார்‌ ஆமோஸ்‌ (7:3). ஆண்டவனுக்கு ஊழியம்‌ செய்வதை விடுத்து அரசனுக்கு ஊழியம்‌ செய்து பிழைப்பு நடத்திய அர்ச்சகன்‌ அமாட்சியா ஆமோசை எதிர்க்கிறார்‌. “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு. , யூதாவின்‌ நாட்டுக்குப்‌ ... போய்‌ இறைவாக்குரைத்து உன்‌ பிழைப்பைத்‌ தேடிக்கொள்‌...” (ஆமோஸ்‌. 7:12) என்று விரட்டுகிறான்‌. எனினும்‌ ஆமோஸ்‌ துணிச்சலோடு இறைச்‌ செய்தியை அறிவிக்கிறார்‌.

இறையாட்சியின்‌ மொத்த உரு இயேசுவே! ஆம்‌, இயேசுதான்‌ இறையாட்சி, இறையாட்சியின்‌ பள்ளிக்கூடம்‌. பயிற்சித்தளம்‌, பாசறை எல்லாமே. திருத்தூர்தர்கள்‌ இயேசுவோடு தங்கி உறவு கொண்டது "இறையாட்சி அனுபவம்‌ பெறுவதற்காகவே, இயேசுவால்‌ அழைக்கப்பட்ட நாம்‌ அனைவரும்‌ இறையாட்சியின்‌ மாணவர்களே! நற்செய்தி அறிவிப்புப்‌ பணி ஓர்‌ உன்னதமான பணி. கடவுளின்‌ அன்பையும்‌ இரக்கத்தையும்‌ மன்னிப்பையும்‌ வல்லமையையும்‌ மக்களுக்கு (வெளிப்படுத்தும்‌ பணி. நற்செய்தி அறிவிப்பவர்கள்‌' கருவிகளே. கடவுளே அவர்கள்‌ வழியாகச்‌ செயல்படுத்துகிறார்‌. சான்று பகர்கின்ற வாழ்க்கை இறை வார்த்தையின்‌ வல்லமையை முழுமையாக _- வெளிப்படுத்தும்‌ பணிபுரிவோம்‌. சாட்சிகளாவேம்‌.

திரு அவையின்‌ மரபில்‌ இதுவரை இல்லாத “பிரான்சிஸ்‌” என்ற பெயரைத்‌ தேர்ந்தெடுத்தார்‌ இன்றையத்‌ திருத்தந்தை. ஏழையாய்‌ இருந்த இயேசுவை நெருங்கிப்‌ பின்சென்ற அசிசியாரின்‌ நினைவை மீண்டும்‌ வெளிப்படுத்துகின்றார்‌. திரு அவை ஏழ்மை உணர்வோடு ஏழைகளில்‌: இறைவனைக்‌ காண அழைக்கிறார்‌.

அண்ணல்‌ காந்தியிடம்‌ ஒரு சிறுமி “தாத்தா, நீங்கள்‌ ஏன்‌ சட்டை போடுவதில்லை? என்‌ அப்பாவிடம்‌ சொல்லி உங்களுக்குச்‌ சட்டை வாங்கித்‌ தரவா?” என்று கேட்டாள்‌. சிரித்துக்கொண்டே நான்‌ மட்டும்‌: சட்டை போட்டால்‌ போதாது. ஆயிரக்கணக்கான என்‌ தம்பிதங்கையர்‌ இந்த நாட்டில்‌ சட்டை போடாமல்‌ இருக்கிறார்கள்‌. அவர்களுக்கும்‌ சட்டை கிடைத்தால்‌ அப்போது நானும்‌ சட்டை போடுவேன்‌” என்றார்‌ காந்தியார்‌. இத்தகைய மனநிலை இயேசுவின்‌ சீடர்களுக்கு வேண்டும்‌.

மனிதர்களின்‌ தகுதியை முன்னிட்டு அல்ல அவரது அழைப்பு (1 கொரி. 1:25-27) தகுதியின்மைதான்‌ இயேசுவின்‌ சீடனாகத்‌ தேவையான ஒரே தகுதி. எனவே அவர்கள்‌ தங்களை நம்பியிராமல்‌ தங்களை அழைத்து அனுப்புகிறவரை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்‌. மனிதக்‌ கருவிகள்‌ நடலாம்‌, நீர்ப்பாய்ச்சலாம்‌. ஆனால்‌ விளையச்‌ செய்பவர்‌ ' ஆண்டவரே (1 கொரி. 3:6). அவர்கள்‌ செய்ய வேண்டியதெல்லாம்‌ “செல்வதும்‌ சொல்வதும்‌” தான்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அனுப்பப்படுதலும் அறிவித்தலும்

நிகழ்வு
அன்று இறையழைத்தல் ஞாயிறு என்பதால், அந்தப் பங்கின் பங்குப்பணியாளர், இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும்மாறு மறையுரையில் குறிப்பிட்டார். திருப்பலி முடிந்ததும், பங்குப் பணியாளரைச் சந்திக்க அந்தப் பங்கில் இருந்த பணக்காரர் ஒருவர் வந்தார். அவர் பங்குப் பணியாளரிடம், “இன்று உங்களுடைய மறையுரையில் இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு சொன்னீர்களே! இறைப்பணிக்காக – மறைப்பணிக்காகப் பண உதவி அல்லது காசோலையை அனுப்பி வைத்தால் போதாதா! பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டுமா?” என்றார்.

பணக்காரர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குப்பணியாளர், அவர் பேசி முடித்ததும் அவரிடம், “மறைப்பணிக்கு பண உதவியோ அல்லது காசோலையோ அனுப்பி வைத்தால் போதாதா... பிள்ளைகளை ஏன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கின்றீர்கள். ஒன்றை உங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: கடவுள் தன்னுடைய பணி இம்மண்ணுலகில் நடைபெறக் காசோலையை அனுப்பி வைக்கவில்லை. தன் ஒரே மகனான இயேசுவை அனுப்பி வைத்தார். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும், நான் ஏன் உங்கள் பிள்ளைகள் இறைப்பணிக்காக அனுப்பி வைக்கவேண்டும் என்று” என்றார். பணக்காரரோ எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இறைப்பணி செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் அழைப்பையும், அழைக்கப்பட்டவர்கள் எப்படிப் பணிசெய்தார்கள், நாம் எப்படிப் பணி செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கடவுள் யாரையும் தன் பணிக்காக அழைக்கலாம்

இன்று எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், பணியாளர்களைத் தகுதி பார்த்துத் தேர்ந்தெடுக்கின்றது; ஆனால், கடவுளுடைய அழைப்பைப் பொறுத்தளவில் இது முற்றிலும் நேர் எதிராக இருக்கின்றது. இந்த உலகம் மடமை அல்லது ‘தகுதியில்லாதவர்கள்’, ‘வலுவற்றவர்கள்’ என்று யாரையெல்லாம் கருதியதோ, அவர்களைக் கடவுள் தம் பணிக்கென அழைக்கின்றார் (1 கொரி 1: 27).

முதல்வாசகத்தில் ஆமோசின் அழைப்பையும், நற்செய்தியில் பன்னிரு திருத்தூதர்களின் அழைப்பையும் குறித்து வாசிக்கிறோம். இறைவாக்கினர் ஆமோஸ் காட்டு அத்திமரத் தோட்டக்காரர், ஆடுகளை ஓட்டிக்கொண்டு இருந்தவர். யூதா நாட்டைச் சார்ந்த அவரைக் கடவுள் வடநாட்டினருக்குத் தன்னுடைய வார்த்தையை அறிவிக்க அழைக்கின்றார். நற்செய்தியில், திருத்தூதர்களாக ஆண்டவர் இயேசு தேர்ந்தெடுத்த பன்னிருவரும் மிகுதியாகப் படித்தவர்கள் கிடையாது. பணக்காரர்களும் கிடையாது. அத்தகையோரை இயேசு தன் பணிக்காக அழைக்கின்றார். இதில் நாம் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், கடவுள் தகுதியில்லாதவர்களைத் தன் பணிக்கென அழைத்தாலும், இறுதிவரைக்கும் அவர்களைத் தகுதியில்லாதவர்களாக வைத்திருக்கவில்லை என்பதுதான். தகுதியில்லாத பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்த இயேசு, அவர்களுக்குத் தம் அதிகாரத்தைக் கொடுத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். பழைய ஏற்பாட்டில் வரும் மோசே, இறைவாக்கினர் எசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் இதற்கு நல்ல சான்றுகள். கடவுள் தகுதியில்லாதவர்களைத் தம் பணிக்கென அழைத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றக் காரணம், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, கடவுள் அவர்களைத் தம் அன்பினால் முன்குறித்து வைத்துள்ளார் என்பதால். எனவே, தம் அன்பினால் முன்குறித்து வைத்தவர்களை – அவர்கள் உலகப் பார்வைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும், அழைக்கின்றார் என்பதால், அழைக்கப்பட்டவர்கள் சொல்லும் செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது.

அனுப்பப்பட்டவர் வழியாகக் கிடைக்கும் ஆசியும் தண்டனையும்

ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், அழைக்கப்பட்டவர்கள் அறிவிக்கும் செய்தி, ஆண்டவருடைய செய்தியாக இருக்கின்றது. ஆதலால், ஒருவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்திக்குச் செவிகொடுப்பதைப் பொறுத்தே அவருடைய உயர்வும் தாழ்வும் இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.

முதல்வாசகத்தில், ஆண்டவரால் அழைக்கப்பட்ட ஆமோஸ், வடநாட்டிச் சென்று ஆண்டவர் தன்னிடம் சொன்னது போன்று இறைவாக்கு உரைக்கின்றார். அவர் உரைத்த இரண்டு செய்திகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று, வேற்று தெய்வ வழிபாடு நடந்து கொண்டிருந்த பெத்தேல் அழிக்கப்படும் (ஆமோ 5: 5). இரண்டு வேற்று செய்த வழிபாட்டை ஊக்கப்படுத்திய எரொபவாம் கொல்லப்படுவான் (ஆமோ 2: 16). இந்த இரண்டு செய்திகளையும் ஆமோஸ் வடநாடான இஸ்ரயேலில் போய் அறிவிக்கின்றபொழுது, பெத்தேலில் இருந்த அமாட்சியா என்ற குரு, ஆமோஸ் அறிவித்த செய்தியைக் கேளாமல் அவரிடம், “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்” என்கிறார்.

ஒருவேளை ஆமோஸ் அறிவித்த செய்தியைக் கேட்டு, மன்னனும் மக்களும் உண்மைக் கடவுளை வழிபட்டிருந்தால், அவர்கள்மீது அசீரியர்களின் படையெடுத்து நடக்காமலே இருந்திருக்கும்; ஆனால், அவர்கள் ஆமோஸ் அறிவித்த ஆண்டவரின் செய்தியைக் கேளாததால், அவர்கள்மீது அழிவு வந்தது. நற்செய்தியில் இயேசு பன்னிருவரிடம், எந்த ஊராவது உங்களுக்குச் செவிசாய்க்காமல் போனால், உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் என்கிறார். இப்பகுதியை மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கின்றபொழுது, சீடர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குச் சோதோம், கொமொராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவிடக் கடுமையாக இருக்கும் (மத் 10: 15) என்று வாசிக்கின்றோம். இதன்மூலம் ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பதைப் பொறுத்தே ஒருவரின் உயர்வும் தாழ்வும் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அழைக்கப்பட்டோர் கடவுளை நம்பிப் பணிசெய்யவேண்டும்

ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் அறிவிக்கும் நற்செய்திக்கு செவிமடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்த நாம், ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் எத்தகைய மனநிலையோடு பணிசெய்யவேண்டும் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

இயேசு திருத்தூதர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களிடம், “பயணத்திற்குக் கைத்தடி தவிர... எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்” என்கிறார். இயேசு திருத்தூதர்களிடம் இவ்வாறு சொல்வதில் ஒரு முக்கியமான செய்தி அடங்கியிருக்கின்றது. அது என்னவெனில், அவர்கள் அறிவிக்கின்ற நற்செய்திப் பணியானது கடவுளுடைய பணி. அதனால் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், பொருள் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்காமல், ஆண்டவரில் நம்பிக்கை வைத்துப் பணி செய்யவேண்டும். அனுப்பப்பட்டவர்கள் தங்கள் சொந்த ஆற்றலில், தங்களிடம் உள்ள பணம், பொருள் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துப் பணிசெய்தால், அது தோல்வியில்தான் முடியும். அதே நேரத்தில் அவர்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்துப் பணிசெய்தால், புனித பவுல் சொல்வது போன்று எதையும் செய்துவிட முடியும் (பிலி 4: 13). மேலும் தோல்விகள் வந்தாலும், துவண்டு போகாமல் பணி செய்ய முடியும்.

ஆதலால், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரால் அவரது பணியைச் செய்யச் சிறப்பாக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து, அவரில் நம்பிக்கை வைத்து, இறைப்பணியைச் செய்ய முன்வருவோம்.

சிந்தனை
‘பணம், புகழ், பதவி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடுபடும் திருஅவைப் பணியாளர்கள் இறைவனின் உண்மையான பணியாளர்கள் அல்ல’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் பணத்தின்மீதும் படைத்தவரும், நம்மைத் தன் பணிக்காக அழைத்தவருமான ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் பணி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வியத்தகு மாற்றங்கள்

பழைய பொருள்கள் விற்கக்கூடிய கடை ஒன்றில் வயலின் ஒன்று நெடுநாள்களாகக் கிடந்தது. அதை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதற்காக கடை உரிமையாளர் அதன் விலையைக் குறைத்துக்கொண்டே வந்தார். அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் அதை யாராவது ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்துவிடவும் நினைத்தார். 'இதை வைத்து அடுப்புதான் எரிக்க முடியும்' என்று பலர் அதை வாங்குவதைத் தவிர்த்தனர். ஒருநாள் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டது. கடையில் ஓரமாகக் கிடந்த வயலின் அவருடைய பார்வையை ஈர்த்தது. 'இதை நான் பார்க்கலாமா?' எனக் கேட்ட அவர், அங்கிருந்த பழைய துணியால் அதை நன்றாகத் துடைத்து, அறுந்துபோன கம்பிகளை இழுத்துக் கட்டி, அந்த வயலினை மீட்டத் தொடங்குகின்றார். வயலின் இசை கேட்ட மக்கள் அப்படியே மெய்மறந்து நிற்கின்றனர். சிறிது நேரம் மீட்டிய அவர் அதை அங்கேயே வைத்துவிட்டுத் தன் வழியே தொடர்கின்றார். 'இந்த வயலின் எனக்கு வேண்டும்' என்று ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு அதை வாங்க விரும்புகின்றனர். உரிமையாளரோ அதைத் தனக்கென வைத்துக்கொள்ள விரும்பினார்.

அடுப்பெரிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சொல்லப்பட்ட வயலின் வியத்தகு இசை எழுப்பும் இசைக்கருவியாக மாறியது எப்படி?

இசைக்கலைஞனின் தொடுதல் அதன் மதிப்பை மாற்றுகிறது.

இறைவனின் தொடுதல் மனிதரில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது எனச் சொல்கிறது இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தை அதன் வரலாற்றுப் பின்னணியில் காண்போம். சாலமோனுக்குப் பிறகு ஒருங்கிணைந்து இஸ்ரயேல் பேரரசு, வடக்கே 'இஸ்ரேல்', தெற்கே 'யூதா' என்று இரண்டாக உடைகின்றது. எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதாவில் தாவீது அரசரின் தனிப்பெரும் வழிமரபினர் என்றும், உடன்படிக்கையின் பணியாளர்கள் என்றும் தன்னை அழைத்துக்கொண்ட அவருடைய மைந்தர்கள் ஆட்சி செலுத்துகின்றர். வடக்கே சமாரியாவைத் தலைநகரமாகக் கொண்டு தாவீது அரசரின் நேரடி வழிமரபில் வராதவர்கள் ஆட்சி செய்கின்றனர். வடக்கே இருந்த பல முதன்மையான வழிபாட்டுத் தலங்களில் பெத்தேலும் ஒன்று. குலமுதுவர் யாக்கோபின் காலத்திலிருந்து பெத்தேல் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்துவந்தது.

வடக்கே நிலவிய உடன்படிக்கைப் பிறழ்வுகளையும், கடவுளின் திருச்சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டிக்கவும், வடக்கே உள்ள அரசர்களையும் தலைவர்களையும் எச்சரிக்கவும் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆமோஸை அனுப்புகின்றார். ஆமோஸ் தெற்கே உள்ள யூதாவைச் சார்ந்தவர். அவருடைய சமகாலத்தவரான ஓசேயா போல அன்று நிலவிய சமூக அநீதியையும் பிறழ்வுகளையும் கண்டிக்கின்றார் ஆமோஸ். தெற்கே இருந்த வந்த ஒருவன் நமக்கு அறிவுரை சொல்வதா என்று நினைக்கின்றனர் வடக்கே உள்ள தலைவர்கள்.

இந்தப் பின்புலத்தில் பெத்தேலின் தலைமைக்குருவான அமட்சியாவுக்கும் ஆண்டவராகிய கடவுளின் இறைவாக்கினரான ஆமோஸூக்கும் இடையே ஏற்படும் முரண்தான் இன்றைய முதல் வாசகம். பெத்தேலின் தலைமைக்குரு என்ற நிலையில் அமட்சியா அதிகாரம் பெற்றிருந்தவராகவும், வடக்கே உள்ள அரசர்களின் ஆலோசகராகவும் இருந்தார். அரச அலுவலர் என்ற அடிப்படையிலும் அதிகாரம் பெற்றிருந்தார். அரசரின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், அரசருடைய பெயரால் அவ்வழிபாட்டுத் தலத்தை நிர்வாகம் செய்வதும் அவருடைய பணியாக இருந்தது.

ஆனால், அமட்சியாவுடன் ஒப்பிடும் போது ஆமோஸ் ஆடு மேய்ப்பவர், தோட்டக்காரர். இறைவாக்கினர் பணி அல்லது இறைவாக்கினர் குடும்பப் பின்புலம் என்ற எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. ஆனால், அவருடைய இறைவாக்கினர் அதிகாரத்தின் ஊற்றாக இருந்தது கடவுளின் அழைப்பு. ஆமோஸ் தன் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசரின் அதிகாரத்தின் பெயரால் ஆணையிடுகின்றார் அமட்சியா. ஆனால், ஆமோஸ் தன் அதிகாரம் தன்னுடையது அல்லது இறைவனுடையது எனத் துணிந்து நிற்கின்றார். மேலும், ஆமோஸ் இறைவாக்கினரின் பணியின் உண்மைத்தன்மையை விளக்குவதாகவும் இப்பகுதி உள்ளது. கடவுளின் குறுக்கீடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை அரசருக்குச் சவால்விடும் இறைவாக்கினராக மாற்றுகிறது. ஆற்றல் இல்லாத ஒருவரை ஆற்றல்படுத்துகின்றது.

ஆக, இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றத்தை ஆமோஸ் வாழ்வில் ஏற்படுத்துகிறது.

இரண்டாம் வாசகம் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடிதங்களைப் போல இக்கடிதம் வாழ்த்து மற்றும் முன்னுரையுடன் தொடங்குவதில்லை. இதன் ஆசிரியர், இறைவனை நோக்கி எழுப்பப்படும் புகழாஞ்சலி போல இக்கடிதத்தைத் தொடங்குகின்றார். நம்பிக்கையாளர்கள்மேல் 'கடவுள் பொழிந்துள்ள விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி' அனைத்தையும் அவர் அறிந்து ஏற்றுக்கொள்கின்றார்.

'தூயாராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' எனச் சொல்கின்றார் ஆசிரியர். ஆக, நம்பிக்கையாளர்கள் தூய்மையாகவும் மாசற்றும் இருந்ததால் கடவுள் அவர்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தூய்மையான மற்றும் மாசற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இந்த நோக்கம் கிறிஸ்து வழியாக நிறைவேறுகிறது. கிறிஸ்துவே தன் இரத்தத்தால் அவர்களை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றார். கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவான அவர்கள் மேன்மையான எதிர்காலத்தைப் பெறுகின்றனர்.

இரண்டாவதாக, கிறிஸ்து வழியாக அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம் என எழுதுகின்றார். ஆக, நம்பிக்கையாளர்கள் வழியாக இறைவனின் திருவுளம் நிறைவேறுகிறது. இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கையாளர்கள் முதன்மையான பங்காற்றுகின்றனர்.

இறுதியாக, இந்த அழைப்பு அல்லது மேன்மையான நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார் ஆசிரியர். வேற்று தெய்வங்களை வணங்கி, தாழ்வான வாழ்க்கை நிலையில் இருந்த மக்கள் இப்போது தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்களாக இருக்கின்றனர். 'முத்திரையிடப்படுதல்' என்பது முதன்மையாக தெரிவுசெய்யப்படுதலைக் குறிக்கிறது. அதாவது, அவர்கள் எல்லாரையும் போன்றவர்கள் அல்லது முகமற்றவர்கள் அல்லர். மாறாக, தங்களுக்கென ஒரு மேன்மையான அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள். இந்த மேன்மை இறைவனின் அழைப்பால் வருகின்றது.

ஆக, கிறிஸ்துவின் ஒப்புரவுச் செயல் வழியாக புறவினத்து மக்களையும் தன்னோடு ஒப்புரவாக்கிக்கொள்கின்ற கடவுள், நம்பிக்கையாளர்களுக்கு முத்திரையிடப்பட்டவர்கள் என்ற மேன்மையை வழங்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம், திருத்தூதர்கள் வாழ்வில் நிகழ்ந்த வியத்தகு மாற்றத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியின் இப்பகுதி வரை இயேசுவே நற்செய்தியைப் போதித்துக்கொண்டும், பிணிகளை நீக்கிக்கொண்டும், பேய்களை ஓட்டிக்கொண்டும் இருந்தார். ஆனால், இதுமுதல் அவருடைய சீடர்கள் அப்பணிகளைச் செய்வர். கலிலேயப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்துகொண்டும், வரி வாங்கிக்கொண்டும், அல்லது தீவிரவாதிகளாகவும் இருந்தவர்களை தான் செய்த அனைத்துப் பணிகளையும் செய்யுமாறு ஆற்றல்படுத்துகின்றார். கடவுளின் ஆற்றல் இவ்வுலகில் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமாக அவர்கள் பேய்களை ஓட்ட வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரங்களாக இருக்கின்ற அனைத்தையும் விலக்கிவைத்துவிட்டு இறைவனின் பராமரிப்பை மட்டும் நம்பி அவர்கள் பயணம் செய்ய வேண்டும். அவரைப் போலவே அவர்கள் நிராகரிக்கப்பட்டாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புறவினத்துப் பகுதிகளுக்குப் பயணம் செய்கின்ற யூதர்கள் புறவினத்து நகரங்களை விட்டு வெளியேறும்போது, தங்கள் கால்களில் ஒட்டியுள்ள தூசியை உதறிவிட்டுத்தான் தங்கள் ஊருக்குள் நுழைவர். இதே செயலைத் தன் சீடர்களும் செய்ய வேண்டும் எனச் சொல்வதன் வழியாக, நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் புறவினத்தார் போலக் கருதப்படுவர் என மறைமுகமாகச் சொல்கின்றார் இயேசு.

இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுச் சென்றவர்கள் போதிக்கின்றனர், பேய்களை ஓட்டுகின்றனர், பிணிகளை நீக்குகின்றனர்.

சாதாரண மனிதர்களாக இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் அதிகாரத்தால் வியத்தகு ஆற்றல் பெற்றவர்களாக மாறுகின்றனர்.

ஆக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, இறைவனின் தொடுதல் அல்லது அதிகாரம் சாதாரண மனிதர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் வியத்தகு மாற்றங்களை நம் கண்முன் கொண்டுவருகின்றது. தெக்கோவா நகரத்தின் ஆடு மேய்ப்பவர் இஸ்ரயேலின் இறைவாக்கினராக மாறுகின்றார். சிலைவழிபாட்டிலும் அறநெறிப் பிறழ்விலும் கிடந்த எபேசு நகர மக்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் மாறுகின்றனர். கலிலேய மீனவர்களும் பாவிகள் எனக் கருதப்பட்டவர்களும் இறைவன் மட்டுமே செய்யக்கூடிய நலம் தரும் பணியையும், தீமை அகற்றும் பணியையும் செய்கின்றனர்.

இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை நாம் விவிலியத்தின் பல இடங்களில் வாசிக்கின்றோம். தன் மாமனாரின் மந்தையைப் பராமரித்து வந்த மோசே மிகப்பெரும் தலைவராக மாறுகின்றார். சக்கேயு அனைத்தையும் இழக்க முன்வருகின்றார். சமாரியப் பெண் முதன்மையான நற்செய்திப் பணியாளர் ஆகின்றார்.

இறைவன் நம் வாழ்வில் எப்படி வியத்தகு மாற்றங்களை நிகழ்த்துகிறார்?

(அ) நம் வாழ்க்கைப் பாதையை மாற்றுவதன் வழியாக
ஆடுமேய்க்கும் பணி செய்துகொண்டிருந்த ஆமோஸின் வாழ்க்கைப் பாதையை மாற்றி வடக்கே இஸ்ரயேலுக்கு இறைவாக்கினராக அனுப்புகின்றார் கடவுள். ஆசிரியப் பணி செய்ய வந்த அன்னை தெரசாவின் பாதையை மாற்றுகின்றார். பேராசிரியப் பணி செய்துகொண்டிருந்த சவேரியாரின் பாதை மாற்றப்படுகிறது. போரில் குண்டடிபட்டுக் கிடந்த இனிகோவின் பாதை மாறுகிறது. ஆக, பாதை தவறுவதில் அல்ல, மாறாக, பாதை மாறுவதில் இறைவனின் அருள்கரம் இருக்கிறது.

(ஆ) புதிய நோக்கு அல்லது இலக்கை நிர்ணயம் செய்வதன் வழியாக
எபேசு நகர மக்களின் வாழ்வியல் நோக்கு அல்லது இலக்கை மாற்றுகின்றார் கடவுள். தங்கள் சிலைகளின்மேல் இருந்த பார்வையை அவர்கள் இனி இயேசுவின் சிலுவை நோக்கித் திருப்ப வேண்டும். நம் வாழ்வின் நோக்கங்களையும் இலக்குகளையும் சில நேரங்களில் இறைவனின் திருப்புகின்றார், அல்லது கூர்மைப்படுத்துகின்றார்.

(இ) நம்மை வெறுமையாக்குவதன் வழியாக
உணவு, பை, செப்புக்காசு, உடை போன்றவற்றால் தங்கள் கைகளை நிரப்பிக்கொண்டனர் திருத்தூதர்கள். வெறுமையான கைகளே இறைவனின் அருளை நிறைவாகக் கொள்ள முடியும் என்பதற்காக, அவர்களின் நிறைந்த கைகளை வெறுமையாக்குமாறு பணிக்கின்றார். 'இது ஏன் இன்று நம்மை விட்டுப் போனது!' என்று நாம் எதையாவது குறித்து ஏங்கி, வெறுமையை உணர்கின்றோம் என்றால், கடவுள் அதைவிட மேன்மையான ஒன்றை நம் கைகளில் கொடுக்கப்போகிறார் என்பது பொருள். ஒரே கையில் செப்புக்காசையும் இறைவனின் அருளையும் பெற்றுக்கொள்ள இயலாது என்பது இயேசுவின் போதனை.

இறுதியாக,

இன்று நாம் பலருடைய வாழ்வில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவருகிறோம். பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டுவருகின்றனர். ஆசிரியருடைய உடனிருப்பு மாணவரின் அறிவைப் பெருக்குகிறது. அருள்பணியாளரின் உடனிருப்பு இறைமக்களின் ஆன்மிக மாற்றத்திற்கு உதவுகிறது. மருத்துவரின் இருத்தல் நோய் நீக்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் நம்மை முழுமையாகப் புரட்டிப்போட்டு, வியத்தகு மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

நாம் பாதை மாறத் தயாராக இருக்கும்போதும், நம் இலக்கு மற்றும் நோக்கைக் கூர்மைப்படுத்தும்போதும், நம் கைகளை வெறுமையாக்கும்போதும் அவரின் தொடுதலை உணர முடியும்.

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்!' என்னும் திருப்பாடல் ஆசிரியரின் (காண். திபா 85) விண்ணப்பமே நம் விண்ணப்பமாகவும் இருப்பதாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

" கடவுளால் அழைக்கப்பட்டவர்களாய் அவர்பணி செய்யத் தயாரா! "

ஒரு அருட்சகோதரி இறையழைத்தல் முகாம் ஒன்றில் தன்னுடைய இறையழைத்தல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். "என் சிறு வயதுமுதலே கன்னியராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது.ஆயினும் என்னுடைய வாழ்வு உலகப்போக்கில் தான் இருந்தது. பல திறமைகள் எனக்கு இருந்ததால் சற்று தற்பெருமை நிறைந்தரவராகவே நான் இருந்தேன்.எனக்குத் தான் முதன்மையான இடம் வேண்டும் என்ற உணர்வு என்னிடம் மேலோங்கி இருந்தது. இவற்றிற்கு மத்தியிலும் அருட்சகோதரி ஆகவேண்டும் என்ற என்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நான் தவறாமல் செபித்தேன்.தகுந்த காலத்தில் அருட்சகோதரியாக மாறினேன். என் விருப்பம் நிறைவேறி விட்டது என்ற மகிழ்வு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது என் விருப்பமோ முயற்சியோ அல்ல.மாறாக கடவுன் முன்னேற்பாடு என்பதைப் புரிந்து கொண்டேன். நான் பார்த்திராத மனிதர்கள், இடங்கள், என் எண்ணத்தில் இருந்திராத பணிகள் இவைகளெல்லாம் என் வாழ்வுப் பாதை நான் ஏற்படுத்தியது அல்ல கடவுள் அமைத்தது என்பதை உணரவைத்தது . இதன் மூலம் கடவுளின் எண்ணற்ற ஆசிகளைப் பெற்றேன். முன்பின் தெரியாத மக்களோடு அவர்களின் மகிழ்விலும் துயரிலும் உடனிருந்து நலமான வார்த்தைகளைப் பேசி, ஆற்றுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் போது எனக்கு கடவுள் அருளிய அழைப்பின் மேன்மையை உணர்ந்து இன்னும் சிறப்பாகப் பணியாற்ற தூண்டப்படுகிறேன் " என்று தன் பகிர்வை நிறைவு செய்தார்.

இறைவனின் அழைப்பு என்பது ஒரு கொடை. அது ஒரு வாழ்வியல் அறநெறி. இறைவன் மனிதரை அழைப்பது தன்னோடு வாழும் சகமனிதருக்கு வாழ்வு கொடுப்பதற்காகவே. ஏனென்று சொன்னால் இறைவனின் அழைப்பு அருளையும் ஆசியையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய வாய்க்காலாக இருக்கின்றது.

இறைவனின் அழைப்பை திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெற்றுள்ளார். அதேபோல திருமுழுக்கு பெறாதவர்களும் கூட இறைவனின் அழைப்பை வேறு வடிவில் பெற்றுள்ளனர். திருமுழுக்குப் பெற்ற புனித அன்னை தெரசாவும் அமைதியின் வழியில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தார். திருமுழுக்கு பெறாத நம் நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியும் கூட இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகிர்ந்துள்ளார். அதேபோல துறவறம் உன்னதமான இறை அழைப்பு என்றால் இல்லற வாழ்வும் உன்னதமான இறை அழைப்பு தான். எனவே கடவுளின் அழைப்பு அனைவருக்கும் பொதுவானது. அந்த அழைப்பு பிறருக்கு வாழ்வு கொடுக்க கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை. எனவே அந்த உன்னதமான கொடையைப் பயன்படுத்தி நம் வாழ்வும் பிறர் வாழ்வும் வளம் பெற நம் வாழ்வையே முழுவதுமாக ஒப்புக் கொடுக்க இன்றைய இறைவார்த்தை மூலமாக நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைப்பணி செய்ய, நம்மை அழைத்தது கடவுள் என்பதை முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொள்வது மிக அவசியம்.

"நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தெரிந்து கொண்டேன் " (யோவான் 15:16) என்று நம் ஆண்டவர் இயேசு கூறியுள்ளார். அதேபோல " தாம் விரும்பியவர்களை அவர் அழைத்தார்" (மாற்கு 3:13) என நாம் வாசிக்கிறோம். ஆம் அழைப்பு என்பது நாம் விரும்பி தேர்ந்தெடுப்பது அல்ல . கடவுள்தான் அவருடைய பணிக்கென நம்மைத் தேர்ந்தெடுத்து அழைத்திருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர் நமக்கு இதை சிறப்பாக உணர்த்துகிறார். தான் இறைவாக்கினரின் மகன் அல்ல, இறைவாக்கினர் கூட்டத்தில் ஒருவனும் அல்ல. சாதாரணமாக ஆடு மேய்ந்துக் கொண்டிருந்த தன்னை மக்களுக்கு இறைவாக்குரைக்க ஆண்டவர் தாமே அழைத்தார் என்று தன் அழைப்பு கடவுளால் அருளப்பட்டதை விளக்குகிறார். அதே போல இண்டாம் வாசகத்திலும் புனித பவுல் கடவுள் கிறிஸ்து வழியாக நம்மை முன்குறித்து, தேர்ந்தெடுத்து அழைத்து அவர் பணிக்கென பயன்படுத்துகிறார் என்ற செய்தியை தெள்ளத் தெளிவாக கூறுகிறார். இவ்வாறாக இறைப்பணி செய்ய நம்மையே நாம் தயார்படுத்தும் போது "என்னுடைய விருப்பம். நான் தேர்ந்தெடுத்த பணி " என்ற எண்ணத்தைக் களைந்து " கடவுள் என்னை அழைத்து இப்பணியைத் தந்திருக்கிறார் " என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு தம் சீடர்களை இருவர் இருவராகப் பணிசெய்ய அனுப்பி ,தீய சக்திகளை விரட்டவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரம் கொடுக்கிறார் எனக் காண்கிறோம். இயேசுவின் பணிவாழ்வில் அவருடைய வல்ல செயல்களில் அதிகமாக இடம்பெற்றவை குணமளிக்கும் செயல்களும், தீய ஆவியை விரட்டியடிக்கும் செயல்களுமே.

அவரால் அழைக்கப்பட்ட நாமும் இவ்விரு பணிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஏனேனில் இப்பணிகளைச் செய்ய நமக்கும் அதிகாரம் அளிக்கப்ட்டுள்ளது.

நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் முதலில் நம்மிலேலே உள்ள எல்லாவகையான தீய தூண்டுதல்களையும் விரட்டியடிக்க வேண்டும். அவை சுயநலமாகவோ, ஆணவமாகவோ, பொறாமையாகவோ, தாழ்ச்சி மனப்பான்மையாவோ, பாவத்தைத் தூண்டும் இச்சைகளாகவோ இருக்கலாம். இவை அனைத்துமே சாத்தானின் சூழ்ச்சிகளே. அவ்வாறே நாம் சமூகத்தில் உலவும் தீமைகளான அநீதி, அடக்குமுறை,ஏற்றத்தாழ்வுகள், சுயநலம், கொலை கொள்ளை கற்பழிப்பு திருட்டு போன்ற உயிர்களுக்கு எதிரான பாவம் செய்யும் மனநிலைகளை விரட்டியடிக்க முற்படுவேண்டும்.

அதேபோல உடலாலும் மனதாலும் நோயுற்ற மனிதர்களைச் சந்தித்து அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம். கனிவுள்ள, திடமூட்டுகின்ற, நம்பிக்கை கொடுக்கின்ற, ஆற்றுப்படுத்துகின்ற உடனிருப்பையும் வார்த்தைகளையும் வழங்கும் போது அவர்கள் விரைவில் தம் நோய்களிலிருந்தும் மன வேதனைகளிலிருந்தும் நிச்சயம் குணமடைவார்கள்.

கடவுளின் அழைப்பை வெவ்வேறு விதங்களில் நாம் பெற்றிருக்கிறோம் என்பது அசைக்க முடியாத உண்மை. அவ்வழைப்பை ஆழமாக உணர்ந்து நம்மால் இயன்ற வழிகளில் அவர் நமக்களித்த பணிகளைச் செய்ய நம்மையே ஒவ்வொரு நாளும் தயார் செய்வது நமது கடமை. ஏனெனில் அழைப்பை உணர்ந்த எவராலும் பணி செய்யாமல் இருக்க முடியாது. எனவே நாமும் பிறரும் வாழ்வு பெறும் பொருட்டு, அழைக்கப்ட்டவர்கள் என்பதை உணர்ந்து தீய சக்திகளை விரட்டியடிக்கவும் நலமருளும் பணிகள் செய்யவும் புறப்படுவோம். அதற்கான அருளைப் பெற அனுதினமும் செபிப்போம். இறைவேண்டல்
எங்களை அழைத்த இறைவா உமது அழைப்பை உணர்ந்தவர்களாய் நீர் விட்டுச்சென்ற பணியைத் தொடர வரமருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்மை தகுதியுடையவராய் மாற்றுபவர் கடவுளே!

திருஅவை வரலாற்றில் நாம் எத்தனையோ புனிதர்களின் வாழ்வை வாசிக்கின்றோம். வாசித்ததை நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்கின்றோம். எப்படி இவர்களால் மட்டும் இப்படியொரு வாழ்க்கை வாழ முடிந்தது என்று புருவம் உயர்த்தி யோசிக்கின்றோம். சில புனிதர்கள் தங்களின் ஆடம்பரத்தை விட்டுவிட்டு அன்பர் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றியவர்கள். சில புனிதர்கள் தங்கள் அறிவின்பால் எழுந்த மேதாவித்தனத்தை விட்டுவிட்டு வந்தவர்கள். சில புனிதர்கள் தங்கள் வீரம், திறன், ஆற்றல், ஆணவம், தன்னால் மட்டுமே முடியுமென்ற எண்ணச்சிதைவோடு வாழ்ந்தவர்கள் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இறைவனே என் ஒப்பற்ற செல்வம் என்றும், அவரைப் பற்றிய அறிவைத்தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லையென சொல்லி வாழ்வை நேசித்தவர்கள். இந்த வரிசையில் சாதாரண எளிய மனிதராய், இறைவனின் உண்மையான ஊழியனாய், இறைவனின் பராமரிப்பையும், அன்னை மரியாவின் உடனிருப்பையும் மட்டுமே நம்பிய ஒரு புனிதர் இருக்கின்றார் என்றால் அவர் பங்குத்தந்தையரின் பாதுகாவலராய் இருக்கும் புனித ஜான் மரிய வியானியாக மட்டும்தான் இருக்க முடியும். குருமடத்தில் படிக்கின்ற போது பலவாறு துன்பங்களை அனுபவித்த அவர், எதற்குமே தகுதியற்றவர் என்று அனைவராலும் பேசப்பட்டவர். ஒருமுறை இந்த கழுதை என்ன செய்ய போகிறதோ என ஏளனம் செய்தவர் மத்தியில், அன்று சிம்சோன் கழுதையின் தாடையை மட்டும் வைத்து (நீதித்தலைவர்கள் 15:15) ஆயிரம் பேரைக் கொன்றார். இந்த முழு கழுதையை வைத்து கடவுள் எவ்வளவோ செய்வார் என்றார். தகுதியற்றவர் என கருதப்பட்டவர் பின்னாளில் கடவுளின் அருளால் நற்செய்திப்பணியாற்ற் தேர்ந்தெடுக்கப்பட்டு, தகுதிப்படுத்தப்பட்டார். அவ்வாறு குருப்பட்டம் பெற்ற பின்னர் ஆர்ஸ் நகரப் பங்கின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அவர், நரகமாய் இருந்த அந்நகரரை மகிமையின் இல்லிடமாய், அருள் பொங்கியெழும் அருளகமாய் மாற்றினார். நீங்கள் அனைவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், எனவே, மனம்மாறி, பாவ அறிக்கையிட்டு ஆண்டவனை அணிந்துகொள்ளுங்கள் என்றுரைத்த அவரின் போதனைகள் அங்குள்ள பலரை ஆண்டவர் பக்கம் அழைத்து வந்தது. தகுதியற்றவர் என அழைக்கப்பட்ட ஜான் மரிய வியானியை ஆண்டவர் அழைத்து, அபிஷேகம் செய்து, தகுதியுடையவராய் மாற்றியிருக்கிறார். நம்மையும் தகுதியற்ற நிலையிலிருந்து, தகுதியுடையவராய் மாற்றும் வியத்தகு ஆற்றல் ஆண்டவரிடமே உள்ளது.

இறைஇயேசுவில் இனியவர்களே!
இன்றைய உலகம் அங்கீகாரத்தின் பின்னால் ஓடுகிறது. பதவியின் மோகத்தில் திரிகிறது. பணத்தாசையில் ஊறிப்போயிருக்கிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசையால் தன்னை மெருகுவுூட்டி கொண்டிருக்கிறது. பேராசையால், அளவுக்கதிகமான சேமிக்கும் பண்பால் தன்னலத்தோடு வாழக் கற்பிக்கின்றது. இவற்றிற்குப் பின்னால்தான் நிறைய பேர் ஓடி, இவற்றால்தான் முழுமையான தகுதி இருக்கின்றது என ஏங்கித் தவிக்கின்றோம். நல்ல வீடு, நல்ல சம்பளம், நல்ல குடும்பம், நல்ல பெயர் இவைகள்தான் நம் தகுதிகள் என்றும் சிலர் நம்மில் நினைக்கின்றோம். ஆனால் இன்றைய நாள் இறைவாக்கு வழிபாடு மிக அழகான ஒரு செய்தியை நமக்குச் சொல்கின்றது. நம் வாழ்வில் பெற வேண்டி தகுதிகள் நம்மால் உருவாக்கப்படுவது கிடையாது. அது ஆண்டவரால் வழங்கப்படுவது என்ற உயர்ந்த சிந்தனையை வழங்குகின்றது. நம்மை நாம் தகுதிப்படுத்த தேவையான முயற்சிகளையெல்லாம் செய்யலாம். அதற்கான பயிற்சிகளையெல்லாம் மேற்கொள்ளலாம். ஆனால் நம்மை முழுமையான தகுதிக்குள் பொருத்தி, வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருபவர் நம் கடவுளே! இதைத்தான் இன்று வாசிக்கும் மூன்று வாசகங்களும் தெளிவுப்படுத்துகின்றன.

முதல் வாசகத்தில், ஆமோஸ் இறைவாக்கினரின் அழைப்பினையும், அவர் ஆற்றும் இறைவாக்கினர் பணியையும் பற்றி வாசிக்கின்றோம். சாதாரண ஆடு மேய்ப்பவனாக இருந்த ஆமோஸ் ஆண்டவரின் இறைவாக்கினை உரைக்கும் இைறாவாக்கினனாக உயர்த்தப்படுகிறார். பாலஸ்தீனா நாட்டின் வடபகுதிக்கு இறைவனால் ஆமோஸ் அனுப்பப்படுகிறார். அங்கு ஆண்டவரின் இறைவார்த்தையைத் துணிவோடு அறிவிக்கிறார். அந்த அறிவிப்பை ஏற்க மறுத்த மக்களின் மனநிலையை அங்கிருந்த பெத்தேலின் குருவாகிய் அமட்சியா பிரதிபலிக்கின்றார். அவர் ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு் பெத்தேலி்ல் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே" என்று சொல்கிறார். ஆனால் ஆமோஸ் நான் ஒன்றும் உன்னைப் போன்று இவ்வுலக அரசனால் தகுதிப்படுத்தபடவி்ல்லை. அரசர்க்கெல்லாம் அரசனாகிய இறைவனால் தகுதிப்படுத்தப்பட்டு இறைவாக்கு உரைக்க அனுப்பப்பட்டவன் என்று சொல்லுமளவிற்கு ஆமோஸ் தன் அழைத்தல் வாழ்வை எடுத்துரைக்கின்றார். ஆமோஸின் இந்த துணிவுமிக்க இறைவாக்கினருக்குரிய பணி நமக்கு கொடுக்கும் ஒரே ஒரு சிந்தனை இதுதான்: கடவுளே நம்மை தகுதியுடையவராக அவரின் பணிக்கென மாற்றுகிறார்.

இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் தன் வாழ்வை அலசிப்பார்த்து, ஆண்டவர் தான் மாசுள்ளவனாகவும், நேர்மையற்றவனாகவும் இருந்த போதும், இயேசுவைப் பற்றி யாரெல்லாம் போதிக்கிறார்களோ அவர்களைக் கொன்றுவிட வேண்டுமென்ற திமிருடன் அலைந்த என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, தகுதியற்ற என்னை தகுதியுள்ளவனாக மாற்றியிருக்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்த பவுல் தான் உரோமை நகர் சிறையில் இருந்த போது எழுதிய சிறைக்கூட மடல்களில் ஒன்றுதான் இந்த எபேசியருக்கு எழுதிய திருமடல். இதில் புனித பவுல் நாம் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டுள்ளோம் என சொல்வதன் அடையாளமே, நாம் ஆண்டவரால் அழைக்கப்பட்டு, தகுதியற்ற நிலையிலும் அவருக்குரிய விதத்தில் நற்செய்திப்பணியாற்ற ஆண்டவர் நம்மைத் தகுதிப்படுத்துகிறார் என பறைசாற்றுகின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் எவ்வகை விதத்தில் ஆண்டவர் நம்மைத் தகுதியுள்ளவராக மாற்றுகிறார் என பாருங்கள்:

சொந்த பிள்ளையாக்குகிறார்
ஒப்புயர்வற்ற அருளைப் பெற்றிட செய்கிறார்
மீட்பு அளிக்கிறார். 
குற்றங்களிலிருந்து மன்னிக்கிறார்
ஞானத்தையும் அறிவுத்திறனையும் தருகிறார்
ஒன்றுசேர்க்கிறார்
தூய ஆவியால் நிரப்புகிறார்
ஆவிக்குள் வாழ முத்திரையிடுகிறார்
உரிமைப்பேற்றினை வழங்குகிறார் 
உறுதிப்படுத்தி கடவுளின் மாட்சியைப் புகழும் வண்ணம் உருவாக்குகிறார் 

இவ்வாறாக கடவுள் எபேசு நகர மக்களை அவருக்குரிய விதத்தில் தகுதிப்படுத்துகிறார். இத்தகு வியத்தகு மாற்றங்களை நிகழ்த்துபவர் கடவுளே!

நற்செய்தியில், இயேசு தன் திருத்தூதர்களை நற்செய்திப் பணியாற்ற அனுப்புகிறார். அனுப்பும் போது இருவர் இருவராக அனுப்பி வைக்கிறார். அவ்வாறு அனுப்புகையில் இறைமகன் இயேசு கொடுக்கும் தகுதிச்சான்றிதழ்தான் இன்றைய நற்செய்திப்பகுதி. இதில் இயேசு தன் சீடர்களுக்கு தீய ஆவிகள் மீது அதிகாரம் அளித்தார். எதை எடுத்துச் செல்ல வேண்டும், எதை எடுத்துச் செல்ல கூடாது, என்னச் செய்ய வேண்டுமென்றும், எதை செய்ய கூடாது என்றும் தெளிவான அறிவுரைகளைக் கொடுக்கிறார். இங்கே இயேசு தாம் முன்குறித்து வைத்தோரைத் தமது பணிக்கென தேர்ந்தெடுக்கிறார் (உரோ 8:30). தேர்ந்தெடுத்தவர்களை முழுமையான பணியாற்ற தகுதிப்படுத்துகிறார். முதலில் திருத்தூதர்கள் யார் என்று தெரிந்தாலே போதும் அவர்கள் எப்படி தகுதிப்படுத்தப்பட்டார்கள் என புரியும். திருத்தூதர்கள், மீன் பிடிப்பவர்களாகவும், வரி வசூலித்தவராகவும்், தீவிரவாதியாகவும், தச்சுத் தொழில் செய்பவராகவும் இருந்தார்கள். இவர்களைத்தான் இயேசு அழைத்து, நற்செய்திப்பணியாற்ற அனுப்புகிறார். இவர்்களின் வழியாகத்தான் திருஅவை இன்று இந்தளவு வளர்ந்திருக்கின்றது. அப்படியென்றால், தகுதியற்ற நிலையிலிருந்து ஒவ்வொருவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனிப்பட்ட விதத்தில் அழைத்து, அவர்களைத் தகுதியுள்ளவராக மாற்றியிருக்கிறார். அவர்களின் வழியாக வியத்தகு மாற்றங்களை இம்மண்ணுலகில் நிகழ்த்தியிருக்கிறார்.

இறைஇயேசுவில் பிரியமானவர்களே,
மேற்சொன்ன மூன்று வாசகங்களின் பின்னணியும் எவ்வாறு இறைவன் தகுதியற்ற மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, தகுதியுள்ளவர்களாக மாற்றி, வியத்தகு மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார் என பார்த்தோம். இப்போது நாம் எந்த விதத்தில் ஆண்டவரின் தகுதியைப் பெற்றுள்ளோம் என்பதையும், தவறான தகுதிகளாக நாம் கொண்டிருப்பவை எவை எவை என்பதையும் பார்ப்போம். நம்மிடம் இருக்கிற தகுதிகள் ஆண்டவரால் வழங்கப்பட்டவையா என்று ஆராய்ந்து பார்ப்பதும் சாலச்சிறந்ததே!

அரசின் அதிகாரமா? ஆண்டவரின் அதிகாரமா?
ஆமோஸ் இறைவாக்கு உரைக்கும்போது, நீ இவ்வுலக அரசின் அதிகாரி என ஆரம்பிக்கும் அவர்களின் பேச்சிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: நம் அன்றாட வாழ்வில் அழிந்துபோக கூடிய இவ்வுலக அதிகாரிகள் எல்லாம் எல்லைக்குட்பட்டவை. உதாரணமாக, பங்குப்பேரவை தலைவர் என்று வைத்துக்கொள்வோம். இது கடவுளால் கொடுக்கப்படும் அதிகாரம் கிடையாது. மக்களை நல்வழிப்படுத்த பங்குத்தந்தையுடன் இணைந்து பணியாற்ற கொடுக்கப்படும் வாய்ப்பு அவ்வளவுதான். இந்த அழிந்துபோகும் அதிகாரத்தைக் கையில் வைத்துகொண்டு ஆடுவது அமட்சியாவின் அடையாளமே எனலாம். ஆகவே இவ்வுலக அதிகாரம் நம் தகுதியில்லை. அது ஆண்டவரால் கொடுக்கப்படவில்லை என உணர்ந்துகொள்வோம்.

என்னால் என்ற நிலையா? கடவுளால் என்ற நிலையா?
பவுல் தன் வாழ்வை யோசித்துப்பார்த்த பின் பலவற்றைக் கற்பிக்கிறார். ஒரு கடிதம் பெற்று, கிறிஸ்தவ நெறியைப் பின்பற்ற விரும்புவோரை அழிக்கத் துடித்தவர், தன் 13 கடிதங்களால் கிறித்துவின் மதிப்பீடுகள் அழியாவண்ணம் காத்தார் என்பதுதான் அவரின் வாழ்வின் சுருக்கம். என்னால்தான் எல்லாம் முடியும் என்ற வீராப்புடன் கிளம்பியவர், எதுவானாலும் அது கிறிஸ்துவால் மட்டுமே என மனமுவந்து ஏற்றலின் அடையாளமாய் பவுல் விளங்குகிறார். எனவேதான் அறிவு, ஞானம், மன்னிப்பு, கருணை, இரக்கம், மீட்பு, அருள்வளம், முத்திரையிடுதல் இவையெல்லாம் ஆண்டவரின் கொடையென எபேசு நகர மக்களுக்கு கொடுக்கிறார். இதை நாம் அன்றாட வாழ்வில் எப்படிப் புரிந்துகொள்வது: அன்பிற்குரியவர்களே, நம்முடைய அறிவு, ஞானமுள்ள பேச்சு, சொத்து, சுகம், பட்டம், பதவி, வருமானம், காடு, வீடு, பங்களா, மாடமாளிகை இவையெல்லாம் ஆண்டவரால் கொடுக்கப்பட்டது என என்றுமே மறந்துவிடாதீர்கள். இவைகளைக் கொடுத்து ஆண்டவர் உங்களைத் தகுதியுடையவராய் மாற்றியுள்ளார் அவ்வளவுதான். இதெல்லாம் இருக்கிறது என்ற மமதையில் ஆடினோம் என்றால், ஆட்டம் காண்பது வெகு விரைவில் நடக்கும் என்பது தெளிவு. கிறிஸ்துவில் பிரியமானவர்களே, நாம் நம் வாழ்வைச் சற்று ஆழமாக சிந்தித்துப்பார்க்கையில், நாம் இருப்பதும், இயங்குவதும் எல்லாமே கடவுளால்தான் என்பது புரியும். நாம் தகுதியற்ற நிலையில், தகுதியுடையவராக மாற்றப்பட்டுள்ளோம் என்றால் அது கடவுள் நமக்கென கொடுத்த மாபெரும் அழைப்பே! ஆமோசைப் போல, பவுலைப் போல, திருத்தூதர்களைப் போல நற்செய்திப்பணியாற்ற ஆண்டவரால் தகுதிப்படுத்தப்பட நம்மைக் கையளிக்க வேண்டும். அதற்கு மூன்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். இறைவனைச் சார்ந்து வாழ வேண்டும்

எதில் சார்ந்து வாழ வேண்டும்? – நம்முடைய மீட்பிற்கு (எபே 2:8-9), ஞானத்திற்கு (யாக் 1:5), உணவிற்கு (திபா 104:27), எல்லாவற்றிலும் (நீமொ 3:5-6) நாம் கடவுளைச் சார்ந்து வாழ வேண்டும். இதைத்தான் பவுல் இவ்வாறு சொல்கிறார்: "கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள்" (கொலோ 2: 10).

தன்னிலை உணர வேண்டும்
நான் யார் என்பதையும், எங்கிருந்து வந்தேன் என்பதையும், எதைச் செய்கிறேன் என்பதையும் தெளிவாக உணர்தல் அவசியம். இதைத்தான் திருத்தூதர்கள், புனிதர்கள் எல்லாம் செய்தனர். "நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள்" (1கொரி 1:26). பணம் வந்துவிட்டால் ஏழ்மையை மறந்துவிடலாமா? சொத்து வந்துவிட்டால் சோறு இல்லாமல் கிடந்ததை மறந்துவிடலாமா? பட்டம் பெற்றுவிட்டால் படிக்க பணமில்லாமல் நம் தாய் தந்தையர் கையேந்தியதை மறந்துவிடலாமா? பகட்டான வாழ்வு வந்தவுடன் பாதி கிழிந்த ஆடையுடன் மறைந்து, ஒளிந்து வளர்ந்ததை மறந்துவிடலாமா? மாடி வீடு கட்டியவுடன் மண்குடிசையில் வாழ்ந்ததை மறந்துவிடலாமா? நிச்சயமாய் மறக்கக்கூடாது. ஏனென்றால், இத்தனை மாண்புக்குரிய தகுதிகள் கடவுள் நமக்கென கொடுத்தவைகள். அவர் தகுதிப்படுத்தவில்லையென்றால் நாம் எப்படி இவ்வளவு பெரிய வியத்தகு மாற்றங்களைப் பெற்றிருக்க முடியும். திருத்தூதர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றினார்கள் என்றால், அது அவர்களின் தன்னிலை உணர்ந்ததன் அடையாளம். தயங்காமல் முன்னேற வேண்டும்:

கடவுள் உங்களைத் தகுதிப்படுத்தியுள்ளார் என்பதை அறிந்த நீங்கள் ஒருபோதும், யாராகவும், எதற்காகவும் பயப்படக்கூடாது. நீதியின் இறைவாக்கினரான ஆமோஸ் யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் இறைவார்த்தைகளைப் போதிக்கிறார். நீங்களும் நானும் ஆண்டவரால் தகுதிப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உள்ளார உணர்ந்தாலேபோதும் நமக்குள் ஒரு ஆற்றல் உதயமாகும். சக்தி சங்கமிக்கும். அப்போது தயங்காமல் அனைத்தையும் செய்வோம். அதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்: "உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல் ஆனால் எனது ஆவியாலே ஆகும்" (செக் 4:6) என்ற சிந்தனை தெளிவு நமக்கு வேண்டும்.

ஆகவே, என் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, நீங்களும் நானும் நம்முடைய தனிப்பட்ட தகுதிகளால் உயர்வதில்லை. உயரவும் முடியாது என்கிற ஆழமான இறைச்செய்தியை இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத்தருகின்றன. இவற்றை ஆழமாகச் சிந்தித்து, தியானித்து, இறைவனின் திருவுளத்தை ஏற்க நம்மையே நாம் ஒப்புக்கொடுப்போம். அப்போது ஆண்டவரின் கைவன்மை நம்மில் செயலாற்றும், நிறைவான வாழ்வு கிட்டும், தகுதியற்ற நிலை மாறி, தகுதியுடையவராய் நாம் வாழ்வோம், அவ்வாறு வாழ்கையில் ஆண்டவரின் வியத்தகு மாற்றங்கள் நம்மில் நிகழும், புதுவாழ்வு மலரும்! இத்தகு சிந்தனை நம்மை ஆட்கொள்ள பின்வரும் இறைவார்த்தை நமக்கு உதவட்டும்!!

"கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று
நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! (எபே 1:18-19)

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு