மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 13-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 1:13-12:23-24 |2 கொரிந்தியர் 8:7,9,13-15 | மாற்கு 5:21-43

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்

திருமணம் முடித்த ஒரு வாரம் கடந்து முல்லா என்பவர் தன் மனைவியோடும், உறவினர்களோடும் ஒரு தீவைக் கடக்க படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென புயல் அடித்து படகு திக்கு முக்காடியது. அனைவரும் அஞ்சி நடுங்கினர். ஆனால் முல்லா மட்டும் கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு இருந்தான். உமக்கு பயமில்லையா? என்று அவன் மனைவி கேட்டாள். அதற்கு முல்லா ஒரு கத்தியை உருவி தன் மனைவியின் கழுத்தை நோக்கி ஓங்கினான். மனைவியோ எவ்வித பயமுமின்றி இருந்தாள். உனக்கு பயமில்லையா? என்று முல்லா கேட்டபோது, கத்தி பயமானதுதான். ஆனால் அதைத் தாங்கி இருக்கும் கரம் என் ஆருயிர் கணவரின் கரம் அல்லவா என்று கூறினாள். ஆம்! இந்த அலைகள் ஆபத்தானவை தான். ஆனால் அதை ஆட்டுவிப்பவர் இறைவன் அல்லவா! அவர் அன்புமயமானவர். எனவே எனக்கு பயமில்லை என்றார் முல்லா.

ஆம்! நம்பிக்கைதான் மனித வாழ்வுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தருகிறது. இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதனுக்குப் பயமும், பதற்றமும் தேவை இல்லை என்பதை இன்றைய இறைவார்த்தை நிகழ்ச்சிகள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதோ இன்றைய இறை வார்த்தையில் இயேசு மரணத்தின் மீது வெற்றி கொண்டவராக, தன்னை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகில் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

செபக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயீர் என்பவரின் மகள் இறந்துவிடுகிறாள். இறந்தாள் என்ற செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்படுகிறது. இயேசு சிறுமியின் தகப்பனைப் பார்த்து, அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர் (மாற் . 5:36) என்று கூறிவிட்டு யார் வீட்டுக்குச் சென்று சிறுமி சாகவில்லை உறங்குகிறாள் (மாற் 5:39) என்கிறார். அவர் சொன்னதைக் கேட்ட அனைவரும் அவரை ஏளனம் செய்தனர். ஏனெனில் உலக முறைப்படி அவள் ஏற்கெனவே இறந்துவிட்டாள். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டவர் வருவாரோ இம்மாநிலத்தில் என்று ஒளவையார் பாடிய பாட்டிற்கு ஏற்ப இது நடக்காது என்று நினைத்து ஏளனம் செய்தனர். ஆனால் எது நடக்காது என்று நினைத்தார்களோ அது நடந்தது. இயேசு, "தாலித்தாகூம்” "சிறுமியே எழுந்திரு” என்றதும் எழுந்து அமர்ந்தாள்.

அருமையான சகோதரனே! சகோதரியே! நாம் சாகமாட்டோம். ஆம்! நாம் சாகவே மாட்டோம். காரணம், இன்றைய முதல் வாசகத்திலே சாலமோன் நூலில் வாசித்ததுபோல (சா.ஞா. 1:13-14) நாம் சாக வேண்டும் என்பது கடவுள் விருப்பம் அல்ல. சாவையும் கடவுள் படைக்கவில்லை. அவர் வாழ்வைத்தான் படைத்தார். நாம் வாழ வேண்டுமென்று விரும்புகிறாரேயொழிய, நாம் அழிய வேண்டும் என்று அல்ல. அப்படி நாம் சாக மாட்டோம் என்றால் அன்றாடம் நிகழும் சாவுக்கு விவிலியம், வேதம் தரும் விளக்கம் என்ன?

இயேசு இந்த உலகச் சாவை உறக்கம் என்று அழைக்கின்றார். ஏனெனில் ஆண்டவர் தரும் வாக்குறுதி, புனித பவுல் (1 கொரி. 15:22) கூறுவதுபோல ஒரு நாள் நாம் எல்லோரும் உயிர்ப்பிக்கப் படுவோம். ஏனெனில் ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு வருவது போல கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர் என்கிறார் பவுல் அடிகளார். இதை உணர்ந்துதான் மீட்பின் வரலாற்றில் எத்தனையோ மறைசாட்சியர்கள் துணிந்து சாவை எதிர் கொண்டார்கள்.

ஆண்டவர் இயேசு கூறுகிறார்: “என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்" (யோவா. 6:47). திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார் : (தி.பா. 121:3-4) உம் கால் இடறாதபடி அவர் உன்னைப் பார்த்துக் கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதும் இல்லை.

முடிவுரை
உங்கள் சிந்தனைக்காக இறுதியாக இதைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு துறவியிடம் சீடன் ஒருவன் இறந்த பிறகு வாழ்க்கை தொடருமா? என்று கேட்டான். அதற்குத் துறவி அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் காட்டி, இதில் நெருப்பு வைக்கும் முன் தீ எங்கிருந்தது என்று கேட்க, விடை தெரியாமல் திகைத்தான் சீடன். தீயை அணைத்துவிட்டு, இப்போது தீ எங்கே போனது என்றும் கேட்டார் துறவி சீடனை நோக்கி. தெரியவில்லை என்றான் சீடன். அதேபோல நாம் எங்கிருந்தோம், இறந்த பிற்பாடு எங்கே செல்லுகிறோம் என்றெல்லாம் சிந்தித்து தடுமாறுவதை விட்டு, பயனுள்ள வகையில், மற்றவரின் வளர்ச்சிக்காக உழைப்பால், உணர்வால், உடைமைகளால் என்ன செய்கிறோம் என்று சிந்திப்பதே சிறந்தது என்றார் துறவி. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்திலே புனித பவுல் அடிகளார் (2 கொரி. 8:13,14) இல்லாதவர்களை இருப்பவர்களாக மாற்றும் வாழ்க்கையில் இறங்கி மற்றவர்களையும் சமநிலைக்குக் கொண்டு வர அன்புத் தொண்டு புரிய அழைக்கிறார். எனவே இயேசுவைப்போல நாமும் உறவுக்குக் கரம் கொடுத்து இல்லாதவர்களை இருப்பவர்களாக்கி, சொத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உயிர் கொடுக்கப் புறப்படுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சொர்க்க வாசல் திறக்கும் இது ஒரு கற்பனை. விண்ணகத்திலே எங்கு பார்த்தாலும் தோரணங்கள்! ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்த பெரிய விழா ஒன்றிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த கடவுள் வானதூதர்களைப் பார்த்து, எதற்கு இந்த ஏற்பாடுகள்? என்றார். அதற்கு அவர்கள், இஸ்ரயேலரைத் துரத்தி வந்த எகிப்தியர்கள் அனைவரும் கடலிலே மூழ்கி இறந்துவிட்டார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் இந்த ஏற்பாடுகள் என்றனர். அதற்குச் கடவுள், என் மக்கள் அங்கே இறந்து கிடக்கின்றார்கள். நீங்கள் இங்கே விழாவிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றீர்களா? நிறுத்துங்கள் உங்கள் ஏற்பாடுகளை என்றார்.

இது ஒரு கற்பனையாக இருந்தாலும் ஒரு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுத்தருகின்றது. என்ன பாடம்? மனிதர்கள் அழிந்து போவதை கடவுள் ஒருபோதும் விரும்புவதில்லை. இந்த உண்மையைத்தான் முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகின்றது. சாலமோனின் ஞானம், சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை ; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை (சாஞா 1:13) என்று கூறுகின்றது.

சாலமோனின் ஞானம் கூறுவது முற்றிலும் உண்மை என்பதை ஆண்டவர் இயேசு நிரூபித்துக்காட்டினார். எங்கெல்லாம் அழிவின் அறிகுறி தெரிந்ததோ அங்கெல்லாம் இயேசு தோன்றி அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.

அழிந்து கொண்டிருந்த உடலுக்கு இயேசு சுகமளிப்பதையும், பிரிந்த உயிரை மீண்டும் உடலோடு சேர்த்துவைத்து சிறுமிக்கு உயிர்கொடுப்பதையும் இன்றைய நற்செய்தியிலே வாசிக்கின்றோம்.

நமது கடவுள், இயேசு ஆண்டவர் ஏழைகளுக்கு ஏழையாகி (இரண்டாம் வாசகம்), அழுவாரோடு அழுது பாவம் தவிர (எபி 4:15) மற்ற அனைத்திலும் மனிதரைப் போல வாழ்ந்து, மனிதர்கள் நலமுடன் வாழ வலம் வந்தார்.

எந்த இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்களை எல்லாவிதமான வேதனைகளிலிருந்தும் விடுவித்தாரோ (மாற் 1:32-34) அதே இயேசு நற்கருணை வழியாக இன்றும் நம்மைச் சந்திக்கின்றார். அவர்மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு திருப்பலியிலும் வாழ்வு பெறுவோம்.

நம் இயேசுவை நாம் நம்பிக்கையோடு சந்திக்கும்போது நமது இதயப் பறவைக்கு சிலிர்க்கும் சிறகுகள் முளைக்கும்! நமது மின்னல் மனத்திற்கு இனிய கனவுகள் கிடைக்கும்! நமது வழிதேடும் வாழ்விற்கு சொர்க்க வாசல்கள் திறக்கும்!

மேலும் அறிவோம் :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8).

பொருள் :
அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மறைக்கல்வி ஆசிரியர், "விண்ணகம் செல்ல விரும்புவோர் கையை மேலே உயர்த்துங்கள்" என்றார், மோகன் என்ற ஒரு மாணவனைத் தவிர மற்றளைவரும் கையை மேலே தூக்கினர், ஆசிரியர் மோகனிடம். "விண்ணகம் செல்ல உனக்கு விருப்பமில்லையா?" என்று கேட்டார். மோகன், "விண்ணகம் செல்ல விருப்பம்தான். ஆனால் இன்று நான் பள்ளிக்கு வரும்போது என் அப்பா, பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு நேராக வந்துவிடவேண்டும்; வேறு எங்கும் போகக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்" என்று பதில் சொன்னான், எல்லாரும் விண்ணகம் செல்ல விரும்புகின்றனர். ஆனால் எவருமே சாக விரும்புவதில்லை.

சாவை எவரும் தவிர்க்க முடியாது: வேண்டுமானால் அதைக் கொஞ்சக்காலம் தள்ளிப் போடலாம். "நேற்று உயிரோடு இருந்தவள் இன்று இல்லை" என்று கூறும் நிலையாமைதான் இவ்வுலகின் பெருமை என்கிறார் வள்ளுவர்.

நெருநெல்உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
அது இவ்வுலகு (குறள் 336).
சாவை மனிதர் மட்டுமல்ல, கடவுளும் விரும்புவதில்லை , அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் சாகா மல் வாழ்வதையே கடவுள் விரும்புகிறார், அலசையில் பொறாமையால்தான் சாவு உலகில் நுழைந்தது. எனத் தெளிவுபடக் கூறுகிறது முதல் வாசகம் (சாஞா 2:23-24).

கிறிஸ்து சாவை அளித்து விட்டார், இன்றைய அல்லேலூயா பாடல் கூறுகிறது: "நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்" (2 திமொ 1:10). கிறிஸ்து நாம் அனைவரும் சாகாமல் இருக்க அவர் சாவை ஏற்றார், தமது சாவினால் நமது சாவை அழித்தார்.

இன்றைய நற்செய்தியில் தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் என்பவருடைய பன்னிரண்டு வயது நிரம்பிய மகள் இறந்துவிட்டார், அவளுடைய வீட்டில் அனைவரும் ஓலமிட்டு அழுகின்றனர். ஆனால் கிறிஸ்துவோ, "சிறுமி இறக்கவில்லை ; உறங்குகின்றாள்" என்கிறார். அதைக்கேட்டு மற்றவர்கன் ஏ ளளமாகச் சிரிக்கின்றனர், பெத்தானியாவில் இலாசர் இறந்து அவரைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர். அந்நிலையிலும் இயேசு தம் சீடர்களிடம், 'நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்" (யோவா 11:11) என்கிறார் கிறிஸ்து சாவை ஒரு நெடிய தூக்கமாகவே கருதுகிறார். வள்ளுவரும் இறப்பைத் தாக்கத்திற்கும், பிறபைத் தூக்கத்திலிருந்து விழிப்பதற்கும் ஒப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறக்க. (குறள் 369)

இறந்தவர்கள் கல்லறையில் துயில் கொள்கின்றனர். கடவுள் அவர்களை எழுப்பி வாழ வைக்கிறார் என்கிறார் கிறிஸ்து (யோவா 5:21), 12 வயது சிறுவன் பாம்பு கடித்து இறந்து விட்டான். அவன் அடக்கத்தில் நான் கலந்து கொண்டேன், அவனுடைய அம்மா என் காலைப் பிடித்து. "சாமி! இலாசரைக் கிறிஸ்து உயிர்த்தெழச் செய்ததுபோல் என் மகனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று கதறினார். ஆனால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஆனால் அவளைக் கல்லறையில் வைத்து பின்வரும் செபத்தைத்தான் சொல்ல முடிந்தது : "இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும்படி நிலத்திற்கு கையளிக்கிறோம். இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து தாழ்வுக்குரிய உடலை) மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார் .... இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வார்."

ஒரு சிறுவனிடம் "உனக்கு சாகப் பயமில்லையா?" என்று கேட்டதற்கு அவன் அமைதியாக, "நேரம் வந்தால் போக வேண்டியது தான் என்றான். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு, பிறக்க ஒரு காலம் உண்டு; இறக்க ஒரு காலம் உண்டு, ஆனால் "காலம் வருகிறது அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர், நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்" (யோவா 5:28-29). அல்லவை அகற்றி நல்லவை செய்தால், நாம் வாழ்வு பெற உயிர்த்தெழுவோம். இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர். சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்” (திபா 30:3), சாவு என்ற படகு இம்மை வாழ்வின் இக்கரையிலிருந்து மறுமை வாழ்வு என்ற அக்கரைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.)

தொழுகைக்கூடத் தலைவரிடம் கிறிஸ்து. “அஞ்சாதீர், நம்பிக்கை மட்டும் விடாதீர்" (மாற் 5:36) என்கிறார். கிறிஸ்து தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டுக்கு வரும் வழியில் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண் கிறிஸ்துவின் ஆடையைத் தொட்டு குணமடைகிறார். கிறிஸ்து அவரிடமும், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" (மாற் 5:34) என்கிறார், இதிலிருந்து கிறிஸ்து நமக்குக் கூறுவது என்ன? எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே கடவுள்கூட புதுமை செய்ய முடியாது, கிறிஸ்து நாசரேத் ஊர் மக்களிடம் நம்பிக்கை இல்லாததால் அவரால் அங்க புதுமை செய்ய முடியவில்லை என்கிறது நற்செய்தி. "அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்கு பல வல்லச் செயல்களைச் செய்யவில்லை " (மத் 13:5-8). நமது நம்பிக்கையின்மையால் வல்லமைமிக்கக் கடவுளின் கரங்களைக்கூட நாம் கட்டிப்போடுகிறோம். அவரைச் செயல் இழக்கச் செய்கிறோம். உடற்பிணயிலிருந்து குணம் பெறுவதற்கும் மனநலம் பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. லூர்து நகருக்குச் செல்லும், அனைவருமே உடற் பிணியிலிருந்து குணம் பெறுவதில்லை. ஆனால் அங்கு செல்லும் அனைவருமே மனநலம் பெறுகின்றனர், உடலரீதியான புதுமைகளைவிட மனரீதியான புதுமைகளே பெரியது. மனமாற்றமே மாபெரும் புதுமை.

கிறிஸ்துவை நற்கருணை வழியாக நம்பிக்கையுடன் தொடுவோம்; நலம் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தொட்டாலும் தீட்டு கைபட்டாலும் தீட்டு

2006ஆம் ஆண்டில் வந்த குறுஞ்செய்தி (SMS) இது: "இருபத்தேழு வயது நடிகை தெய்வச் சிலையைத் தொட்டாள். தெய்வமே தீட்டுப்பட்டது. ஆனால் தீட்டான பெண் ஒருத்தி இயேசுவைத் தொட்டாள். அவள் தீட்டு நீங்கியது. What a wonderful Lord we Serve!''

1987இல் சபரிமலையில் நடந்தது அந்த நிகழ்ச்சி . பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2006இல் பெரும் சர்ச்சையானது.

இறந்த சடலத்தைத் தொட்டாலும் தீட்டு இரத்தப் போக்குடைய பெண்ணால் தொடப்பட்டாலும் தீட்டு. இயேசு மக்களுக்கு வாழ்வு தர, சமயத்தின் தூய்மைச் சடங்கை உடைத்தெறியவும் அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கவும் தயாராக இருந்தார். இந்தச் சூழலில் இயேசுவைத் தொட்ட பெண்ணும் இயேசுவால் தொடப்பட்ட சிறுமியும் புதுவாழ்வு பெறுகின்றார்கள். என்று தீண்டாமையை தீயிட்டுக் கொளுத்துகிறோமோ, அன்றுதான் இயேசுவின் புதுவாழ்வைச் சுவைக்க நம்மால் முடியும்.

சாவும் நோயும் வாழ்வின் எதிரிகள், மனிதனின் இரு பாரச் சுமைகள். வாழ்வின் எதிரிகளை எதிர்த்து நின்று வெற்றி பெற வேண்டுமானால் இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஆழப்பட வேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு இரு பெண்களைச் சந்திக்கிறார். ஒருத்தி சாவின் பிடியில் . அவர் 12 வயதுச் சிறுமி. மற்றொருத்தி சாவை விடக் கொடிய நோயின் பிடியில் . அவள் 12 ஆண்டுகள் இரத்தப் போக்குடையவள். இரண்டு நிகழ்வுகளிலுமே இயேசுவில் மனித மனங்கள் குணமளிக்கும் மருத்துவரைத் தேடுகின்றன. சந்தித்ததும் உடல் நலமும் புதுவாழ்வும் பெறுகின்றன. காரணம்? "அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்" (மார்க் 5:36) என்ற இயேசுவின் அருள் வாக்கே ! சிறுமி இறந்த செய்தி கேட்டும், அவளுடைய தந்தை இயேசுவின் மீது வைத்த நம்பிக்கையில் தளரவில்லை. எல்லாச் செல்வத்தையும் மருத்துவத்தில் இழந்த பிறகும் பெரும்பாடுள்ள பெண்ணை இயேசு முன் நம்பிக்கையோடு நிற்க வைத்தது. "நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார்" (யாக். 5:15). அச்சத்திலிருந்து பிறப்பது நோயும் சாவும். நம்பிக்கையிலிருந்து மலர்வது நலமும் வாழ்வும்.

சாவையும் நோயையும் கடவுள் படைக்கவில்லை. அலகையின் பொறாமையால் மனிதன் தனக்குத்தானே வருவித்துக் கொண்டது என்கிறது முதல் வாசகம். ''சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர், இறப்புக்கு உள்ளாவர் (சா.ஞா. 1:13, 2:23, 24).

இயேசு வாழ்வின் ஊற்று. "தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல தம் மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்கும்படி செய்தார்'' (யோ. 5:26) இயேசு வாழ்வு தருபவர். "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்'' (யோ . 10:10)

இறை நம்பிக்கை என்றால் இறைவன் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்பதோடு நின்று போவதல்ல. மாறாக இறைவனின் விருப்பத்தை யூகித்து அறிந்து அதன்படி வாழ்வதே ஆகும். இறைவனின் தூண்டுதலுக்கு நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

"மகளே உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" (மார்க். 5:34) என்றார் இயேசு. அதுவும் தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். இயேசு கேட்டது, தன் வல்லமையை அல்ல, அவளது நம்பிக்கையைக் கூட்டத்தினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே! தொழுகைக்கூடத் தலைவன் யாயிர் சாகும் தறுவாயில் இருந்த தன் மகளைத் தொடும்படி கேட்டார். இரத்தப்போக்குடைய பெண்ணோ தொட்டு நலம் பெற்றார். செயல்திறன் கொண்ட நம்பிக்கை அவளது . "நம்பிக்கையும் செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்” (யாக். 2:17).

செடியைத் தலைகீழாக நட்டுவிட்டு, கடவுள் அதை எப்படியும் காப்பார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. செடியைச் சரியாக நட்டுவிட்டு அதற்கு நீர் பாய்ச்சாமல் கடவுள் காப்பார் என்று எண்ணுவது குருட்டு நம்பிக்கை. செடியைச் சரியாக நட்டு அதைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் போது நல்ல பலன் கடவுள் துணையால் கிடைக்கும் என்று என்ணுவதுதான் நல்ல நம்பிக்கை.

தலைகீழாகச் செடியை நட்டவனின் நம்பிக்கை, செடி வளராததைக் கண்டதும் தளர்ந்து போகிறது. சரியாக நட்டுத் தண்ணீர் விடாதவனின் நம்பிக்கை செடி பட்டுப்போனதும் மடிந்து விடுகிறது. ஆனால் செடியை வைத்துச் சரியாகப் பராமரிப்பவனின் நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் வரை அவன் மனம் தளர்வதே இல்லை.

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இரண்டு நிகழ்வுகளும் உண்மையான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டுக்கள். ''என்னைத் தொட்டது யார்?'' "சிறுமி சாகவில்லை. உறங்குகிறாள்'' இயேசுவின் இந்தக் கூற்றுக்களைக் கேட்டுக் கூடியிருந்தவர்கள் எள்ளி நகைக்கின்றனர். உண்மை நம்பிக்கையுள்ளவர்கள் தாம் எந்தவித ஆழமான கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும். ஆனால் ஆழமான நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கடவுளின் செயல்பாடுகள் கூட நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும்.

நம் வாழ்வில் மேலோங்கி இருப்பது எது? குருட்டு நம்பிக்கையா, மூட நம்பிக்கையா, உண்மையான நல்ல நம்பிக்கையா?

நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடர்ந்தால் சாவு என்பது மனிதனுக்கு இல்லை. சஞ்சலத்தோடு பிடிப்பற்று வாழ்ந்தால் வாழ்வு என்பதே மனிதனுக்கு இல்லை. நம்பிக்கை வாழ்வுக்கு வழி காட்டும் பாதை . உயிரளிக்கும் ஊற்று.

மிகவும் செங்குத்தாக ஓங்கி நிற்கும் மிக உயர்ந்த மலை அது. வீரன் ஒருவன் அதன் சிகரத்தை எட்டிப் பிடித்து வரலாறு படைக்க விரும்பினான். கயிற்றின் ஒரு முனையை தன் இடுப்பிலே கட்டிக் கொண்டு மறுமுனையை மலையில் இருக்கும் பாறை, மரம் போன்றவற்றில் மாட்டிக் கொண்டு மலையிலே ஏறிச் சென்றான். மேலே செல்லச் செல்ல பயத்தால் நடுக்கம். மேலும் பனிபடர்ந்த மலையின் ஈரத்தால் வழுக்கல். பல நாள்கள் முயன்று உயிரையே பணயம் வைத்து ஏறிவந்த இளைஞன் இன்னும் ஒரு சில அடிகள் ஏறிவிட்டால் சிகரத்தை எட்டி விடுவான். மனதிலே மகிழ்ச்சி. அடக்கமுடியாக பரவசம்!

இந்த நிலையில் எதிர்பாராமல் திமரென்று கயிறு அறுந்துவிட அவன் கீழ் நோக்கிச் சறுக்கினான். " என் தெய்வமே என்னைக் காப்பாற்று” என்று கதறிக் கொண்டே கீழ் நோக்கி உருண்டான். அங்கே ஓர் அற்புதம். மலையிலே வளர்ந்திருந்த ஒரு செடி அவன் கைப்பிடியில் சிக்கியது. விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு அதிலே தொங்கினான். ஆனால் பாவம் அந்தச் செடியும் உடைந்து வளைந்தது. "கடவுளே என்னைக் காப்பாற்று, கைவிட்டு விடாதே” என்று மீண்டும் கதறினான்.

ஒரே அமைதி. அமைதியில் தெளிவான குரல் ஒன்று கேட்டது. "மகனே, உன்னைக் காப்பாற்றுவேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ என்னை நம்பினால் நீ பிடித்திருக்கும் கிளையையும் விட்டுவிடு" என்று ஒலித்தது இறைவனின் குரல். "கிளையை விடுவதா? அது எப்படி? என் உயிர் என்னாவது?” என்று தயங்கினான்.

ஆம். உன் முழு வாழ்வையும் நம்பிக்கையோடு இறைவனின் கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டு அஞ்சாமல் வாழ வேண்டும் என இறைவன் கேட்கின்றார்.

இயேசு செய்த அத்தனை புதுமைகளையும் இறை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நின்றவர்களுக்கே செய்தார்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“நம்பிக்கையை மட்டும் விடாதீர்”

நிகழ்வு
எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் கதைகளை எழுதுவதில் வல்லவரான ஓ. ஹென்றியின் பிரபலமான சிறுகதைகளில் ஒன்று “கடைசி இலை” (Last Leaf). 1907 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தச் சிறுகதை மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தச் சிறுகதையில் வரும் கதாநாயகன் உடல் நலம்குன்றி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பான். மருத்துவமனையில் இவனுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படும்; ஆனாலும் இவன் ‘இன்னும் ஒருசில நாள்களில் நான் இறந்துவிடுவேன்!’ என்ற அவ ம்பிக்கையோடு இருப்பான். இதனால் இவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனில்லாமல் போகும்.

இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலிப்பெண் ஒருவர் இவனிடம், நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைச் சொல்லி, “நீ விரைவில் நலமடைவாய்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் இவன் படுத்திருந்த படுக்கைக்கு அருகிலிருந்த சன்னல் வழியாக இவன் வெளியே பார்த்தபொழுது, ஒரு செடி இருக்கக் கண்டான். நன்றாக இருந்த அந்தச்செடி ஏனோ திடீரெனப் பட்டுப்போய், ஓர் இலையைத் தவிர்த்து மற்ற எல்லா இலைகளும் அதிலிருந்து உதிர்ந்தன. இதை இவன் தன்னிடம் அடிக்கடி பேசவரும் செவிலிப்பெண்ணிடம் சுட்டிக்காட்டி, “இந்தச் செடியைப் போன்றவன்தான் நான். இச்செடியில் ஓர் இலையைத் தவிர்த்து, மற்ற எல்லா இலைகளும் உதிர்ந்துவிட்டன. நாளைக்கு, எஞ்சியிருக்கும் இந்த இலையும் உதிர்ந்துவிடும். இந்த இலையைப் போன்று நானும் உதிர்ந்துவிடுவேன்” என்றான்.

இதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த செவிலிப்பெண், “அப்படியெல்லாம் இந்த இலை உதிராது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் இவன் சன்னல்வழியாகச் செடியைப் பார்த்தபொழுது, அந்த செடியில் இருந்த எஞ்சிய இல்லை உதிராமல் அடிப்படியே இருந்தது. இவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ‘இந்த இலையைப் போன்று நானும் உயிரோடு இருப்பேன்’ என்று இவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். இதற்குப் பிறகு இவன் தனக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையை நம்பிக்கையோடு பெற்று, விரையில் நலமடைந்தான். மருத்துவமனையில் இவனுக்குச் சிகிச்சை முடிந்ததும், இவனிடம் அடிக்கடி பேசிவந்த செவிலிப்பெண் இவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோனார். போகும்வழியில் செடியில் உதிராமலிருந்த இலைக்கு அருகில் இவனைக் கொண்டுசென்று, அதை உற்றுப்பார்க்கச் சொன்னார். இவன் அதை உற்றுப்பார்த்தபொழுதுதான் தெரிந்தது, அது உண்மையான இலை அல்ல, துணியால் செய்யப்பட்ட இல்லை என்று. அப்பொழுது செவிலிப்பெண் இவனிடம், “உனக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவே, நான் ஓர் ஓவியரைக் கொண்டு துணியால் இந்த இலையை செய்து பொருத்தினேன்” என்றார்.

ஆம், நமக்கு நம்பிக்கை இருந்தால், உயிரோடு பல ஆண்டுகள் வாழலாம். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவர்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இருவருக்கு நலமளிக்கின்றார் அல்லது ஒருவரை நலமாக்கி இன்னொருவரை உயிர்த்தெழச் செய்கின்றார். ஒருவர் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி; இன்னொருவர் தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகள்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தொடுதலாலேயே வல்ல செயல் நடக்கின்றது. இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, “நான் ஆண்டவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று தொட்டு நலம்பெறுகின்றார். தொழுகைக்கூடத் தலைவரான யாயிர் இயேசுவிடம், “நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்கிறார். இயேசுவும் அவருடைய மகளை கைகளைப் பிடித்துத் தொட்டு உயிர்த்தெழச் செய்கின்றார். இரண்டாவதாக, இரண்டு நிகழ்வுகளிலும் பன்னிரண்டு என்ற எண்ணானது இடம்பெறுகின்றது. இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி பன்னிரண்டு ஆண்டுகளாய்த் துன்புறுகின்றார். யாயிரின் மகளுக்குப் பன்னிரண்டு வயது. மூன்றாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பெறுகின்றவர்களும் நம்பிக்கையாலேயே நலம் பெறுகின்றார்கள். நான் இயேசுவின் ஆடையைத் தொட்டால் போதும், நலம் பெறுவேன் என்று இரத்தப்போக்கினால் பதிக்கப்பட்ட பெண்மணி நம்பிக்கையோடு தொட்டு நலம்பெறுகின்றார். யாயிரோ இயேசுவின்மீது இறுதிவரை நம்பிக்கையோடு இருந்து, இறந்த தன் மகளை உயிரோடு பெறுகின்றார்.

இவ்வாறு நாம் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்பொழுது நலமான வாழ்வினைப் பெறுவோம் என்பதை நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

அழியாமைக்கென்றே கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்பதை நம்புவோம்
ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வுலகில் போர்களும் இயற்கைப் பேரிடர்களும் ஏற்படும்பொழுது, கடவுள் மனிதர்களை அழிப்பதற்காகவே இவற்றையெல்லாம் அனுப்புகின்றார் என்று சொல்வார்கள். நாமும் இக்கூற்றைப் பலமுறை சொல்லியிருக்கலாம். உண்மை அதுவல்ல.

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம் மேலே உள்ள கூற்றிற்குப் பதில் தருவதாக இருக்கின்றது. ஆம், “இருக்கவேண்டும் என்பதற்காகவே கடவுள் அனைத்தையும் படைத்தார்”. மேலும் “கடவுள் மனிதர்களை அழியாமைக்கேன்றே படைத்தார்”. அப்படியானால், இவ்வுலகில் சாவும் அழிவும் நேரிடுகின்றன என்றால், அவை மனிதன் செய்த பாவத்தின் விளைவே ஆகும். எனவே, கடவுளின் ஒரே மகனாம் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அழியாமல் நிலைவாழ்வு பெறுவோம் (யோவா 3: 16).

நம்பிக்கை என்பது சொல்லல்ல, செயல்
ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டால் நலமான வாழ்வு கிடைக்கும்; அழியாமைக்கென்றே கடவுள் மனிதரைப் படைத்திருக்கின்றார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் நிலைவாழ்வைப் பெறுவோம் என்பன குறித்து மேலே நாம் சிந்திப்போம். இப்பொழுது நம்பிக்கையின் அடுத்த பரிமாணத்தைக் குறித்துப் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதைப் பற்றி சிந்திப்போம்.

இன்றைய இரண்டாம்வாசகத்தில் புனித பவுல் கொரிந்து நகர் மக்களிடம் நம்பிக்கை, நாவன்மை ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டிருக்கும் நீங்கள், “அறப்பணியிலும் முழுமையாய் ஈடுபட வேண்டும்” என்கிறார். புனித பவுலின் இவ்வார்த்தைகளை புனித யாக்கோபின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், “நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலேயே அது உயிரற்றது’ (யாக் 2: 17) என்று சொல்லலாம். கொரிந்து நகர் மக்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவையில் உள்ள அல்லது வறியநிலையில் உள்ள மக்களுக்கு அறப்பணிகளைச் செய்து, அவர்களது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கச் சொல்கின்றார் புனித பவுல். இதற்கு அவர், செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான இயேசுவை (பிலி 2: 5-8) எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். ஆகவே, நம்மை அழியாமைக்கென்று படைத்திருக்கும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனை
‘நம்பிக்கையானது புதிய மற்றும் கற்பனை செய்யமுடியாத சாத்தியங்களைத் திறக்கிறது’ என்பார் இராபர்ட் சி. சாலமோன் என்ற அறிஞர். எனவே, நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இருவகை வாழ்க்கை

மனித குலம் தோன்றியது முதல் நாம் விடை தேடுகின்ற கேள்விகளில் ஒன்று, 'தீமை எங்கிருந்து வந்தது?' கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், தீமை எப்படி வந்தது? கடவுள் நல்லவர் என்றால், அவர் தீமையை ஏன் அனுமதிக்கிறார்? தீமை இந்த உலகில் இருக்கிறது என்றால் கடவுள் வலிமை அற்றவரா? - இப்படி நிறைய மெய்யியல் கேள்விகளை மனுக்குலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தீமைகளில் கொடிய தீமையாகக் கருதப்படுவது இறப்பு.

இறப்பை யாருக்கும் பிடிப்பதில்லை. பிறப்பு நமக்குப் பிடிப்பது போல இறப்பு பிடிப்பதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது போல, 'நீ இறந்தவுடன் விண்ணகத்திற்குச் செல்வாய்' என்று ஒருவரிடம் சொன்னாலும்கூட, அவருக்கு இறப்பதற்குப் பிடிப்பதில்லை. இந்த உலகை விட மறுவுலகம் நன்றாக இருக்கும் என்ற உறுதியைத் தந்தால்கூட இறப்பை யாரும் விரும்புவதில்லை. இந்த இறப்பு எப்படி வந்தது? என்ற கேள்விக்கு நிறைய இலக்கியங்களும் சமயங்களும் தத்தம் முறைகளில் விடை காண முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, கில்கமேஷ் என்ற சுமேரிய அக்காடிய இலக்கியத்தில், 'கடவுள் உலகைப் படைத்தபோதே இறவாமையைத் தனக்கென வைத்துக்கொண்டு இறப்பை நமக்குத் தந்துவிட்டார். ஆக, குறுகிய இந்த வாழ்க்கையில், நன்றாகக் குளி, நல்ல ஆடை அணி, நறுமணத் தைலம் பூசு, காதல் மனையாளைத் தழுவிக்கொள், அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளைப் பேணி வளர். அதுவே இறவாமை' என்று இறவாமைக்கு புதிய பொருள் தரப்படுகின்றது.

இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சாலமோனின் ஞானநூல் இறப்பு எப்படி வந்தது என்பதற்கான விடையைச் சொல்லும் பகுதியே இன்றைய முதல் வாசகம். கிறிஸ்து பிறப்பதற்கு மிகவும் சில மாதங்களுக்கு முன்பு வடிவம் பெற்ற நூல் இது. கிரேக்கமயமாக்கலின் பின்புலத்தில் எழுதப்பட்ட நூல் மனித இறப்பு பற்றி பேசுகின்றது. நூலின் ஆசிரியர் இறப்பு எப்படி வந்தது என்பதை மிக எளிமையாகப் பதிவு செய்கின்றார்: 'சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது.' அதாவது, படைப்பின் தொடக்கத்தில் ஆதாம்-ஏவாள் பாம்பால் சோதிக்கப்பட்ட நிகழ்வை, அலகையின் பொறாமை என்று மொழிகின்றார் ஆசிரியர். அலகை இருக்கிறதா? என்ற அடுத்த கேள்விக்கு நாம் சென்றுவிட வேண்டாம். மாறாக, அனைத்தும், அனைவரும் வாழ வேண்டும் என விரும்புகின்றார்.

நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். இருந்தாலும், நாம் வாழும் இந்த உலகில் வாழ்வை அழிக்கக் கூடிய முதல் காரணியாக அன்று இருந்தது நோய். இன்றும், நோய்தான் முதன்மையான காரணி. அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நாம் முன்னேறினாலும் இன்று நோய்தான் வெல்ல முடியாத எதிரியாக நம் முன் உள்ளது.

இரு வகை நோய்களால் துன்பப்பட்டவர்கள் எப்படி இயேசுவால் நலம் பெற்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன் நலம் பெறுகின்றார். தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இயேசு தொட்டவுடன் உயிர் பெறுகின்றார். இரண்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டது பற்றி நிறையக் கருத்துகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. பெண் 12 ஆண்டுகள் நோயினால் வருந்துகிறார். இளவலுக்கு வயது 12. இரத்தம் உயிர் சார்ந்தது. இளவல் உயிர் துறக்கின்றார். இரண்டு இடங்களிலும் கூட்டம் தடையாக இருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் நம்பிக்கை வலியுறுத்தப்படுகின்றது. இளவல் இறப்பதற்கான தளத்தை பெண் நிகழ்வு ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொழுகைக்கூடத் தலைவரின் அவசரத்தைக் குறைப்பதற்காக நிகழ்வு நடக்கிறது. கூட்டம், பெண், இயேசுவின் உரையாடல் என அனைத்தும் இளவல் உயிர் பெறுவாரா? என்ற கேள்வியை வாசகரில் எழுப்புகிறது.

நம் வாழ்க்கையில் துன்பம் உண்டு என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். நோய், முதுமை, இறப்பு போன்ற உடலியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது சோர்வு, தயக்கம், பயம், குற்றவுணர்வு, வெறுமை, தனிமை போன்ற உளவியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது பாவம், உடனடி இன்பம் போன்ற ஆன்மிகத் துன்பங்களாக இருக்கலாம். துன்பங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், துன்பங்களை நாம் இரண்டு முறைகளில் எதிர்கொள்ளலாம். அல்லது துன்பம் நிறைந்த இவ்வாழ்க்கையை நாம் இரண்டு முறைகளில் வாழலாம்.

ஒன்று, இரத்தப் போக்குடைய பெண் வாழ்ந்தது போல.

இரண்டு, தொழுகைக் கூடத் தலைவர் வாழ்ந்தது போல.

முதலில், இரத்தப் போக்குடைய பெண் போல எப்படி வாழ்வது?

நிகழ்வில் வரும் இந்தப் பெண் மூன்று நிலைகளில் துன்பம் அனுபவிக்கின்றார்: உடல்சார் துன்பம். உயிர் குடியிருக்கிறது என்று மக்கள் நம்பிய இரத்தம் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருக்க, இந்தப் பெண் வெளிறிப் போயிருப்பாள். இரண்டாவது, பொருள்சார் துன்பம். மருத்துவரிடம் தன் பணத்தை எல்லாம் செலவிட்டதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆன்மிகம்சார் துன்பம். உடலில் ஒழுக்கு இருப்பது தீட்டு எனக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பெண் கடவுளிடமிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்திருப்பார். உடல் வலி பொறுக்காமல், கையில் காசு இல்லாமல், கடவுளால் கைவிடப்பட்ட உணர்வில், தனக்கிருந்த இறுதி வாய்ப்பாக இயேசுவின் மேலாடையைப் பார்த்தார். தன் இயலாமையில், தன் இல்லாமையில் இயேசுவால் எல்லாம் இயலும் என்றும், அவர் வழியாகவே தன் இருத்தல் சாத்தியம் என்றும் உணர்ந்த அவர் கூட்டத்தை ஊடுருவுகின்றார். கூட்டம் இங்கே ஒரே நேரத்தில் தடையாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. கூட்ட மிகுதியால் இயேசுவை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் கூட்டம் இருந்ததால் தன் முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்துக்கொள்ளவும் இவரால் முடிந்தது. இயேசுவின் மேலாடையைத் தொட்ட அந்த நொடியில் தன் உடலில் மாற்றத்தை உணர்கின்றார் பெண். என்னே ஒரு ஞானம்! தன் உடலின் இயக்கத்தைத் தெளிவாக உணர்ந்தவராக இருக்கிறார். உடல் நலம் பெற்ற மகிழ்ச்சி சற்று நேரத்தில் களைகிறது. 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்வி இவளுடைய காதுகளில் விழுகிறது. இவ்வளவு நேரம் தன் உடல் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்ட அவள், இப்போது, 'மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற உள்ளப் போராட்டம் அனுபவிக்கின்றாள். இருந்தாலும், இயேசுவிடம் சரணடைகின்றார். தனக்கு நடந்தது அனைத்தையும் சொல்கின்றார். 'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என அனுப்புகிறார் இயேசு.

இந்தப் பெண், தன் பார்வையை இயேசுவின்மேல் பதிய வைத்தாள். தனக்கு முன் இருந்த கூட்டம் என்ற தடையை வாய்ப்பு எனப் பயன்படுத்தினார். இயேசுவிடம் சரணாகதி அடைந்தார். இயேசுவின் மேலாடைக்கும் நலமாக்கும் ஆற்றல் உண்டு என உணர்ந்தார். பாதியில் வந்தார். பாதியில் சென்றார். நலமற்று வந்தவர், உடலிலும் உள்ளத்திலும் நலம் பெற்றுச் செல்கின்றார்.

இரண்டாவதாக, தொழுகைக்கூடத் தலைவர் போல எப்படி வாழ்வது?

இயேசுவின் தொடுதல்தான் தன் மகளுக்கு நலம் தரும் என நம்புகிறார் தலைவர். இயேசு உடனடியாக அவருடன் செல்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது. ஆனால், வேகம் உடனடியாகக் குறைகிறது. கூட்டம் ஒரு தடையாக மாறுகிறது. பாதியில் வந்து நலம் பெற்ற பெண் தடையாக இருக்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வைக் கண்டவுடன் தலைவரின் நம்பிக்கை உறுதியாகியிருக்கும். ஆனால், சற்று நேரத்தில் வந்த மகளின் இறப்புச் செய்தி அவருக்குப் பயம் தருகிறது. 'அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!' என அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. வீட்டில் இருந்த கூட்டம் இன்னொரு தடை. அவர்கள் பேசிய கேலிப்பேச்சு மற்றுமொரு தடை. தடைகளைத் தாண்டிச் சென்றவர் தன் மகளை நலமுடன் பெற்றுக்கொள்கின்றார்.

இந்த நிகழ்வில், நம்பிக்கையில் இவர் நிலைத்து நிற்க கடவுளின் துணை தேவைப்படுகிறது. ஆனால், முதல் நிகழ்வில், நம்பிக்கையால் உந்தப்பட்டு அந்தப் பெண் வருகின்றார். அங்கே, நம்பிக்கை பாராட்டப்படுகிறது. தலைவர் நிகழ்வில் நம்பிக்கை அறிவுறுத்தப்படுகின்றது.

ஆக, இரத்தப் போக்குடைய பெண் போல நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது முதல் வகை.

தலைவர் போல கடவுள் நமக்கு நம்பிக்கை தந்தால்தான் அவருடன் பயணிப்பது இரண்டாவது வகை.

இன்னொரு வகையான வாழ்க்கை முறையும் இருக்கிறது. கூட்டத்தின் மனநிலை. இயேசுவின் உடனிருப்பும் நம்பிக்கை நிறைந்த சொற்களும் அவர்களுக்குக் கேலியாக இருக்கின்றன. வாழ்க்கையின் துன்பத்தைக் கண்டே பழகிப் போனவர்கள் விரக்தியாகச் சிரிக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலைக்காரர்கள் பரவாயில்லை. 'உம் மகள் இறந்துவிட்டாள். போதகரைத் தொந்தரவு செய்யாதீர்!' என எதார்த்தமாகச் சொல்கின்றனர். 'பால் கொட்டிவிட்டது! இனி அழுது புலம்பி என்ன செய்ய?' என்பது அவர்களுடைய மனநிலை. பல நேரங்களில் இதுதான் நம் மனநிலையாகவும் இருக்கிறது.

ஆக, பெண், தொழுகைக்கூடத் தலைவர், கூட்டம், வேலைக்காரர்கள் என நாம் நம் வாழ்க்கையை நான்கு நிலைகளில் எதிர்கொண்டாலும், நம்பிக்கையின் பாடங்களைக் கற்பிப்பவர்கள் பெண்ணும் தலைவரும். பெண் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கை இருந்தாலும், அங்கே சில சஞ்சலங்கள் எழவே செய்கின்றனர். இறைவனின் உடனிருப்பால் அதைத் தக்கவைக்கின்றார் தலைவர்.

நம்பிக்கை என்பது கொடை. கடவுள் கொடுத்தாலன்றி அதை எவரும் பெற்றுக்கொள்ள இயலாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளின் உடனிருப்பு மேலோங்கி நிற்கிறது. நாம் நோயுற்றாலும் இருந்தாலும் நாம் தொடும் தூரத்தில் கடவுள் இருக்கிறார், கடவுளின் மேலாடை இருக்கிறது.

இதுவே இயேசு கிறிஸ்துவின் அருள்செயல் என்று கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல்: 'அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்!'

இறுதியாக,
தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலும் நாம் நலம் பெறுவோம்!

இதையே திருப்பாடல் ஆசிரியர் (காண். 30), 'நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்!' என்று பாடுகின்றார்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆடையைத்தொட்டால் நலம் பெறுவேன்:

• கரம் தொடுதல் உணர்வுகளின் வெளிப்பாடு.
• மனிதன் மரம், செடி, கொடிகளை நல்ல எண்ணத்துடன் தொட்டால் அவை நன்றாக வளரும் என உளவியல் சொல்கிறது.
• தமிழக கலாச்சாரத்தில் துக்க சமயத்தில் வருத்தப்படுவோரின் கைகளைத் தொடுதல் தோழமை உணர்வின் வெளிப்பாடு.

நற்செய்தி வாசகத்தில் நூற்றுவத்தலைவரின் மகளை கரம் தொட்டு இறந்தவளுக்கு உயிர் கொடுக்கின்றார் இயேசு. 12 ஆண்டுகள் நோயால் வருந்தியப்பெண் கடவுளுடைய ஆடையைத்தொட்டு நலம் பெறுகிறார்.

முதல் வாசகத்தில் அழிவில்லாக் கடவுள் மனிதர்களை தனது கையால் தொட்டு அழியாமைக்கு படைத்தார், தனது சாயலில் படைத்தார். படைத்தவனின் தொடுதல் ஆழமானது! அழகானது! அற்புதமானது. கடவுள் நம்மை தொட்டாலும், நாம் கடவுளை தொட்டாலும் பயன்பெறுவது மனிதகுலமே. கடவுள் நம்மைத் தொட எதிர்பார்ப்பது நம்பிக்கை மட்டுமே. கடவுளை நம்பிக்கையோடு தொடுவோம்! நலம் பெறுவோம்.

இரண்டாம் வாசகம் சகமனிதனை தொடுவதற்காக அழைக்கின்றது.

 • அறப்பணியில் அடுத்தவரைத் தொட
 • மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக
 • அடுத்தவர் குறைகளை நீக்குவதற்காக.
 • உலகம் சம நிலையை நோக்கி பயணிப்பதற்காக.

கடவுளையும், சகமனிதனையும் நேர்மறை சிந்தனையுடன் தொடுவோம் கடவுளின் சாயலை காண்போம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"பெண்மையைப் போற்றுவோமா?"

படிப்பிலும் விளையாட்டுத் துறையிலும் புலமை பெற்ற மாணவி ஒருவர் இருந்தார். மாவட்ட அளவில் அவர் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பற்பல விருதுகளை மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிக்காகப் பெற்றுள்ளார். மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் அந்த மாணவியின் திறமையைப் பாராட்டினார். இப்படிப்பட்ட திறமையும் அறிவுக்கூர்மை மிகுந்த மாணவிக்கு அவரின் பெற்றோர் பன்னிரண்டாவது வகுப்பு முடித்தபிறகு கல்லூரிக்கு அனுப்பாமல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட மாணவியின் ஆசிரியர் "உங்கள் மகளைப் படிக்க வையுங்கள். மிகச்சிறந்த மனிதராக திகழ்வார் " என்று கூறினார். அவர் பெற்றோர் ஆசிரியரின் பேச்சு கேட்காமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர். இறுதியில் திறமையான அந்த மாணவி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் குடும்பப் பெண்ணாக மாற சூழல் ஏற்பட்டது. தன்னுடைய சுயத்தையும் கனவுகளையும் ஒரு பெண்ணாக பிறந்த காரணத்திற்காக இழக்கு நேரிட்டது.

பெண்கள் மனுக்குலத்தின் கண்கள். ஒரு குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் பெண்ணாகிய தாய். பெண்கள் தான் இந்த உலகத்திலே மிகச் சிறந்த வீராங்கனைகள். இதற்கு முக்கிய காரணம் பத்து மாதம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்து புதிய உயிரை இந்த உலகிற்கு கொடுப்பது நாட்டைப் பாதுகாக்கும் படைவீரர்களின் வீரச் செயலுக்குச் சமம். ஏனெனில் தாயின் பிரசவ வலி ஒரு போரிலிருந்து வெற்றி பெற்ற நபருக்கு சமம். அந்த அளவுக்கு போராட்டங்களும் கடினமான சூழலும் பிரசவத்தின்போது இருக்கும். இருந்தபோதிலும் மனத்துணிவோடும் தியாக உள்ளத்தோடும் ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதேபோல குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் குழந்தையை வளர்த்தெடுக்க பலவற்றைத் தியாகம் செய்கிறார். அதில் வருகின்ற சவால்களையும் இடையூறுகளையும் மனத்துணிவோடு எதிர் கொள்கின்றார்.இவ்வாறாக பெண்ணாகிய தாய்க்கு மனவலிமை அதிகம் இருக்கின்றது.

பெண்கள் உடல் வலிமையில் சற்று ஆண்களை விடச் சற்று குறைவாக இருந்தாலும், மனவலிமையில் ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள். கணவனை இழந்த போதும் மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைக்காகவே வாழக்கூடிய எண்ணற்றத் தியாகம் சிங்கப் பெண்களைக் காண முடியும். ஆனால் மனைவியை இழந்த சில ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்கள் மற்றொரு திருமணம் செய்து கொள்ளும் சூழலை நாம் அதிகம் இச்சமூகத்தில் காண முடிகின்றது. இதற்குக் காரணம் பெண்களுக்கு அதிக மன வலிமை உண்டு. ஆனால் பல நேரங்களில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட எண்ணற்றவர்கள் பெண்களை வலுவிழந்தவர்களாகவும் சமூகத்தில் பேச உரிமை இல்லாதவர்களாகவும் இருக்க அவர்களை ஒடுக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலிலும் எண்ணற்ற சிங்கப்பெண்கள் பல்வேறு தடைகளையும் சவால்களையும் தாண்டித் தங்கள் வாழ்வில் சாதனைகள் பல புரிந்து வருகின்றனர்.

எண்ணற்ற பெண்கள் அறிவியல் துறையிலும் கல்வித்துறையிலும் நிர்வாகத் துறையிலும் அரசியல் துறையிலும் அரசுத் துறையிலும் சாதனைகள் பல புரிந்து வருகின்றனர். ஏன் அரசு பொதுத்தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக தேர்ச்சி விழுக்காட்டைப் பெறுகின்றனர். இவற்றையெல்லாம் மேற்கோள் காட்டுவது ஆண்களை குறைவாக மதிப்பிட்டு கூறுவதற்காக அல்ல. மாறாக, பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே . எனவே பெண்மையை நாம் போற்றி அவர்கள் மென்மேலும் வளர ஒவ்வொரு ஆணும் ஊக்கம் ஊட்டவேண்டும்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட்டனர். சமூகத்தில் அவர்கள் கருத்து சொல்வதையும் சமூகத்தில் அதிகமாக நடமாடுவதையும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட யூத ஆண்கள் பெரிதும் விரும்புவதில்லை. அவர்களுக்கு ஆன்மாவே இல்லை என்ற பார்வை கூட இருந்தது. ஆனால் இயேசுவின் பார்வை அவர்களின் பார்வையை விட சற்று மேலோங்கி இருந்தது. தன்னுடைய இறையாட்சிப் பணியில் ஆண்களைப் போல பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ஆண் சீடர்கள் இருந்ததைப் போல பெண் சீடர்களும் இயேசுவுக்கு இருந்திருக்கின்றார்கள் என விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். நலமளிக்கக்கூடிய பணியில் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பெண்களுக்கு நடந்த இரண்டு வகையான வல்ல செயல்களை நாம் காண்கிறோம். முதலாவதாக தொழுகைக் கூட தலைவர் யாயிர் மகளை இயேசு நலமாக்கினார். இரண்டாவதாக 12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரின் நம்பிக்கையின் பொருட்டு நலமளித்தார். இந்த இரண்டு வல்ல செயல்களிலும் பெண்கள் மீது இயேசு கொண்டிருந்த அன்பையும் மதிப்பையும் மாண்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. இறையாட்சிப் பணியில் இயேசு பரபரப்பாக இருந்த பொழுதும் தொழுகை கூடத் தலைவரின் மகளுக்கு நலமளிக்க அவருடைய வீட்டிற்குச் செல்வதைப் பார்க்கிறோம். அதேபோல 12 ஆண்டுகளாக இரத்த போக்கினால் பாதிக்கப்பட்ட பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எண்ணற்ற பாதிப்புகளை அடைந்திருக்கலாம். ஆனால் மனத் துணிவோடு அந்தப் பெண் ஆணாதிக்க சிந்தனை கொண்ட அந்த ஆண்கள் மத்தியில் சிங்கப் பெண்ணாக இயேசுவிடம் வந்தார். தன்க்கு நலம் கொடுக்குமாறு இயேசுவைத் தொந்தரவு செய்யாமல் அவரின் ஆடையைத் தொட்டாலே நான் நலம் அடைவேன் என்ற ஆழமான நம்பிக்கையில் நலம் பெற்றார். இயேசு அந்தப் பெண்ணின் நம்பிக்கையின் பொருட்டும் இந்த சமூகத்தில் அவரை நலமோடு வாழ வைக்க வேண்டுமென்ற மனிதநேய பார்வையின் பொருட்டும் அவருக்கு நலமளிக்கும் பணியினை செய்தார்.

இன்றைய நற்செய்தி நமக்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வில் பெண்கள். என்றாலே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுகின்றனர். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது. பல நேரங்களில். பெண்கள் படித்து மிகச்சிறந்த திறமையாளர்களாக இருந்த போதிலும் புரிதலற்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட சில ஆண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் வீட்டுப் பெண்களாக மாற்றி அவர்களை விடுகின்றனர். வன்முறை சிந்தனை கொண்ட ஒரு சில ஆண்கள், தான் ஒரு பெண்ணாகிய தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவன் என்பதை மறந்து பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர். இத்தகைய நிலை மாறி நம்மோடு வாழக்கூடிய நம் தாய் வயதுக்கு ஒத்த பெண்களைத் தன் தாயாக கருத வேண்டும். நம்முடைய வயதுக்கு முந்திய பெண்களை அக்காவாகவும் வயதுக்கு குறைவாகவுள்ள பெண்களை தன் தங்கையாகவும் மகளாகவும் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கின்ற பொழுது எந்தப் பெண்ணுக்கும் எத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாது. சிங்கப் பெண்களாக இரவு நேரத்தில் கூட மனத் துணிச்சலோடு வலம் வர முடியும். எனவே நம்மோடு வாழக்கூடிய பெண்களை உற்சாகப்படுத்தி அவர்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற நாம் ஒவ்வொருவரும் ஊன்றுகோலாய் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

ஆணாதிக்க சிந்தனை என்பது ஆண்களிடத்தில் மட்டுமல்ல. பெண்களிடத்திலும் அதிகம் இருக்கின்றது. அவற்றை களைந்து பெண்களும் ஆண்களும் சமம் என்ற மன நிலையைப் பெற வேண்டும். அவர்கள் பற்பல சாதனைகள் செய்ய ஊக்கமும் வழியும் காட்ட வேண்டும். அவ்வாறு பெண்மையைப் போற்றி அவர்கள் வாழ்வு வளம் பெற உதவி செய்யும் பொழுது, இந்தச் சமூகம் உயர்வு பெற்ற சமூகமாக மாறும். இந்த உலகத்தில். யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அதே போல் இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் உயர்ந்தவர்கள் இல்லை. அப்படித் தாங்கள் தான் உயர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டால் , அவர்களைப்போல முட்டாள்கள் இந்த உலகத்தில் இல்லை. எனவே நம்மால் முடிந்தவரை பெண்மையை போற்றுவோம், ஆண்டவர் இயேசு கண்ட இறையாட்சி சமத்துவ சமூகத்தை இந்த மண்ணிலே படைப்போம். வாரீர் ...

இறைவேண்டல் :
அன்புத் தந்தையே இறைவா! எங்களைப் பெற்று வளர்த்த தாய்க்காகவும் எங்கள் மனைவிக்காகவும் எங்கள் சகோதரிகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். அவர்களை நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் பெண்மையை போற்றி அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்ல உம் திருமகன் இயேசுவை போல கருவிகளாகப் பயன்படத் தேவையான ஞானத்தையும் அருளையும் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

10ம், 12ம் கொடுப்பது ஒன்றே…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள பாம்பன் நகரில் வாழும் இளம் பெண்ணின் பெயர்தான் கீர்த்தனா. இவர் ஒரு தனியார் மருத்துவமனையிலே செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த இப்பெண் தன் கடின உழைப்பினால் செவிலியராக உயர்ந்திருக்கின்றார். தாய், தந்தையை இழந்து வாழும் இவர் தன் தாத்தா, பாட்டியின் அரவணைப்பினில்தான் தன் ஆயுளைக் கழித்து கொண்டிருக்கிறார். தான் பிறந்த 10ஆவது நாளில் தன் தாயை இழக்கிறார். பின்பு தன் 10ஆவது வயதில் தந்தையின் இறப்பைச் சந்திக்கின்றார். அனாதையாக நின்ற கீர்த்தனாவுக்கு அடைக்கலம் தந்து, இந்நாள் வரை காத்து வருபவர்கள் அவரின் தாத்தாவும் பாட்டியும்தான். சிறு வயது முதலே ஏக்கத்தின் பிடியில் தன் வாழ்வைப் பேணியவள் எவ்விதத்திலும் ஏமாற்றத்தைச் சந்திக்க கூடாதென்பதில் தெளிவாக இருந்தார். பலரின் உதவியோடு பள்ளிப்படிப்பை முடித்து, தன் அத்தையின் உதவியுடன் செவிலியப் படிப்பில் இணைந்து தேர்ச்சி பெற்றார். செவிலியராய் மக்கள் பணியாற்ற வேண்டுமென்ற இவரின் எண்ணத்தில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் இவரின் உடலில்தான் குறை ஏற்பட்டுவிட்டது. தன்னுடைய கல்லூரி படிப்பின் இறுதியாண்டிலே இவரின் காலில் ஏற்பட்ட சிறு காயம், நாளடைவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி, புற்றுநோயாக மாறிற்று. கடைசியில் இடது காலை எடுக்கும் நிலையே வந்துவிட்டது. வேறு வழியின்றி கால் துடிக்கப்பட்;டது. இருந்தபோதிலும் அவரின் உள்ளார்ந்த தேடலும், தேடலுக்குள் உந்தித்தள்ளும் நம்பிக்கையும் அவரிடத்தில் இல்லாமல் இல்லை. தொடர்ந்து பயணிக்கிறார். ஒற்றை காலுடன் உலா வருகிறார்.

குறிப்பாக கொரானா பெருந்தொற்று காலத்தில் தான் வேலை செய்யும் தனியார் மருத்துவமனையில் கொரானா பிரிவில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பிறப்பு முதல் எத்தகைய சங்கடங்கள் தன்னைச் சூழ்ந்தபோதிலும், சகிப்புத்தன்மையோடு பணியாற்றும் கீர்த்தனாவின் வாழ்வு உண்மையிலேயே நமக்கெல்லாம் பாடமாகவே இருக்கிறது. இவரைச் சந்தித்த பத்திரிக்கையாளர்கள், "உங்கள் வாழ்வைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்ட போது, அவர் சொன்னார்: ஒற்றை கால் எனக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கடவுள் மீது நான் கொள்ளும் நம்பிக்கை ஒருபோதும் என்னை கைவிடாது. அந்த நம்பிக்கை நடக்க முடியாத என்னையும், நடக்க இயலா காரியங்களையும் நிகழ்த்தி காட்டும்" என்றார் நெகிழ்ச்சியுடன். இன்று வரை தன் படிப்பிற்கேற்ற வேலை அரசு மருத்துவமனையில் கிடைக்காத சூழலிலும், என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறார் இந்த இளம்பெண் கீர்த்தனா.

இறைஇயேசுவில் இனியவர்களே,
மனித வாழ்வை பொதுவாக நான் மூன்று நிலைகளில் அணுகுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். 1. இருக்கும் போது, 2. இல்லாத போது, 3. இருந்தும் பயன்படுத்த முடியாத போது அல்லது இல்லாத போது இருப்பது போன்ற தோற்றம். எப்படி புரிந்துகொள்ளலாம்: முதலாவது, எல்லாம் இருக்கிறது என்றால் - நம் வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும். பணம், பதவி, பட்டம், செல்வாக்கு, உணவு, உடை, உறைவிடம் என நீளும் இப்பட்டியல் நமக்கென ஒரு வாழ்வை உருவாக்கும்.

இரண்டாவது, எதுவும் இல்லாத போது – நாம் கையேந்தும் மனிதர்களாக இருக்கிறோம். திருட்டு, புரட்டு, போலி, ஏமாற்றுத்தனம், களவாடல், கண்ணியமற்ற பேச்சு இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. மூன்றாவதாக, இருந்தும் பயன்படுத்த முடியா போது அல்லது இல்லாத போது இருப்பது போன்று வாழ்வது. இது பலருக்கும் பொருந்தும். என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால் அதை எடுக்க மனமில்லை. என்னிடம் திறமை இருக்கிறது. அதைப் பகிர்ந்துகொள்ள மனமில்லை. என்னிடம் இருசக்கர வாகனம் கிடையாது. ஆனால் அக்கம்பக்கத்தினரிடத்தில் வாங்கி வந்து சீன் போடுவது. சாப்பிடுவதற்குகூட வழியில்லாமல் இருக்கும். ஆனால் பெரிய உணவுவிடுதியில் உட்கார்ந்து எல்லாம் எனக்கு இருப்பது போன்று காட்டிக்கொள்வது. இம்மூன்று நிலைகளில்தான் நம்முடைய நம்பிக்கை வாழ்வு புடமிட்டு பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை வாழ்வைப் பின்வரும் நிலைகளில் அலசிப்பார்க்கலாம் அல்லது ஆராய்ச்சிக்குட்படுத்திப் பார்க்கலாம். நம்முடைய நம்பிக்கையை,
1.எல்லாம் இருக்கும் போது
2.எதுவும் இல்லாத போது

ஆகிய இரண்டு வகைகளில் சிந்திக்கலாம். இன்றைய இறைவாக்கு வழிபாடும் இத்தகைய கருத்தைத்தான் மூன்று வாசகங்கள் வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றன. பன்னிரண்டு ஆண்டுகள்; பெரும்பாட்டினால் வருந்திய பெண்மணியும், பன்னிரண்டு வயது சிறுமியின் உயிர்; பெற்று எழுந்த நிகழ்வும் மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் இருக்கின்றன. யாயீர் என்ற தொழுகைக்கூட தலைவர் தன் மகளின் குணமளிப்பளிக்கவும், இயேசு தன் மகளைத் தொட வேண்டும், தொட்டால் நலம் பெறுவாள் என்ற நம்பிக்கையுடன் வருகிறார். இவரிடத்தில் எல்லாம் இருந்தது. பணம், சொத்து, மதிப்பு, மரியாதை, அடுத்தவரின் பார்வை, தொழுகைக்கூடத்தின் பொறுப்பு. 'எல்லாம் இருப்பவரின்' அடையாளமாக தொழுகைக்கூட தலைவர் யாயீர் அடையாளப்படுத்தப்படுகிறார்.

நற்செய்தியில் வரும் பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்மணி இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டாலே போதும், நான் நலமடைவேன் என்ற நம்பிக்கையோடு, கூட்டத்தினருக்கு நடுவே தெரியாமல் சென்று அவரின் மேலுடையைத் தொட்டுவிடலாம் என செல்கிறார். அவரின் எதிர்பார்ப்பது நிறைவேறுகிறது. தொடுகிறார் நலம் அடைகிறார். இவர் 'எதுவும் இல்லாதவரின்' அடையாளமாகக் காட்டப்படுகிறார். காரணம் வைத்திருந்த எல்லாவற்றையும் செலவழித்தும் ஒரு பயனும் இல்லை என வேதனையுறுவது ஒன்றுமில்லாமையின் வெளிப்பாடு. இவ்விருவரின் வாழ்வும் நமக்குக் கொடுக்கின்ற சிறந்த படிப்பினை எதுவெனில், உன்னிடம் எல்லாம் இருந்தாலும், எதுவும் இல்லாவிட்டாலும் நீ செய்ய வேண்டியது இரண்டு: 1. கடவுளைத் தேடுவது, 2. அவரிடத்திலே நம்பிக்கை வைப்பது. இவற்றைத்தான் மிகத் தெளிவாக முதல் வாசகமும், இரண்டாம் வாசகமும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

முதல் வாசகத்தில் சாலமோன் ஞான நூலில் கொடுக்கப்பட்ட பகுதியானது கடவுள் மனிதர்களை அழிப்பதற்கல்ல, அவர்களுக்கு வாழ்வு கொடுக்கவே விரும்புகின்றார். மனிதரின் அழிவில் கடவுள் மகிழவில்லை. கடவுள் சாவை உண்டாக்கவில்லை. அலகையின் பொறாமையால் அது உருப்பெற்றது என்றெல்லாம் வரும் வார்த்தையின் பின்புலத்தை இவ்வாறாகப் புரிந்துகொள்ளலாம்: "மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது" (தொநூ 1:2) – ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுள் இவ்வுலகைப் படைத்து, சிறந்த படைப்பாய் மனிதனைப் படைத்து, அவனுக்கென துணையை ஏற்படுத்தி ஆனந்தத்தை அன்று ஏதேன் தோட்டத்தில் விதையாக விதைத்தார். வாழ்வைக் கொடுத்தார். வாழ்வதற்கான வழியைக் கொடுத்தார். முழுமையான நம்பிக்கை வாழ்வை அவர்களுக்கு வழங்கினார். ஆனால் என்னச் செய்வது பாம்பின் சூழ்ச்சியால் பண்பட வேண்டியவர்கள், பண்பற்று போயினர். பக்குவமடைய வேண்டியவர்கள் பண்பில்லாமல் போயினர். எனவே பாவம் அவர்களைப் பிடித்துகொண்டது. சாபமும், சாவும் அவர்களிடத்திலே குடிக்கொண்டது. "ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்" (தொநூ 2:7) என்ற வார்த்தை மனிதனுக்கு வாழ்வு கொடுத்தது என்று விவிலியம் சொல்கிறது. தன் உருவிலும் தன் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதன் சாவதை அல்ல வாழ்வதையே விரும்பினார். வாழ்வுக் கடவுள் மனிதன் வாழ வேண்டுமென்று விரும்பினார். இதைத்தான் எசேக்கியேல் இறைவாக்கினர் இவ்வாறாக சொல்கிறார்: "நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம்மாறி வாழ்வு பெறுங்கள்" (எசே 18:32). அதே போன்று, எசே 33:11 இல்: "தீயோர் சாக வேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளின்று திரும்புங்கள்" என்று எசேக்கியேல் புத்தகத்தில் வாசிப்பது எதை மையப்படுத்துகிறது என்றால், இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பபைத் தருவதாக அமைந்திருக்கின்றது. நம்பிக்கையை அழிக்கும் சாவாக பாவம், ஊனியல்பின் தன்மைகள், செல்வம், செருக்கு (உரோ 5:12, 1யோவான் 2:16) ஆகியவை இன்றைய காலக்கட்டத்தில் பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் வாசகமானது, கொடுப்பதிலும், பகிர்ந்து வழங்குதிலும், படைத்தவனை நம்புவதிலும், பண்பற்ற வாழ்விலிருந்து திருந்தி பண்புள்ள மனிதர்களாய் வளர்வதிலும், பிறரின் துன்பத்தைக் களைய துன்பம் ஏற்றலையும், சேகரித்து வைத்து, சோர்வுற்று நிற்கும் மனிதருக்கு பகிர்ந்து அளித்தலையும் சுட்டிக்காட்டுகிறது. இவையாவும் நிகழ்வது நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஏழைகளான நமக்காய் செல்வராயிருந்தும் ஏழையான இயேசு எத்தகைய இக்கட்டான சூழலிலும் அவரை நம்புவோரைக் கைவிடுவதில்லை. நம்பி வருவோரை தட்டிவிடுவதுமில்லை என்பதுதான் கொரிந்து நகர மக்களுக்கும் நமக்கும் புனித பவுல் வழங்கும் போதனை.

இவ்வாறாக, இன்றைய ஞாயிறு வாசகங்கள் மூன்றுமே நம்பினால் வாழ்வு, தொட்டாலும், தொடப்பட்டாலும் வாழ்வு நமக்குண்டு என்பதைத் தெளிவுபட உரைக்கின்றன. ஆனால் இந்த நம்பிக்கையை நாம் பெற்று வாழ்ந்திட நற்செய்தியில் வரும் இரு பெண்மணிகளின் வாழ்விலிருந்து சில பாடங்களைக் கற்க வேண்டி இருக்கின்றது. எந்தவொரு நற்செயலும் தடை இல்லாமல் நிகழாது. தடுப்பவரின்றி தரணியில் மலராது. பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணுக்கு மூன்று வித தடைகள் இருந்தன. இறந்ததாய் எண்ணிய பன்னிரண்டு வயது சிறுமிக்கும் மூன்று தடைகள் இருந்தன.

பன்னிரண்டு ஆண்டுகள் வேதனையுற்ற அப்பெண்ணுக்கு:
உடல் ஒரு தடை: தன் பெரும்பாட்டினால் எங்கும் செல்ல முடியாத சூழல். சற்றும் இளைப்பாற இயலா நிலை. கொஞ்ச நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில் நிலையாக நிற்க வழியில்லா வாழ்வு.

உள்ளம் ஒரு தடை: நிராகரிப்பு, ஏற்றுக்கொள்ளாமை, வெறுப்பு, அருவருப்பு, அவதி, வேதனை, துன்பம், தேவையற்ற பேச்சுகள், பதில் சொல்ல முடியாத கேள்விகள், இருப்பவர்களால் வரும் இடர்பாடுகள். இது உள்ளத்தை இன்னும் அதிகமாய் காயப்படுத்தியது.

ஆன்மிகத்தில் ஒரு தடை: ஆலயத்திற்கு வரக்கூடாது. தீட்டு (லேவி 15:25-30). அழுக்கு நிறைந்த நிலை. பெரும்பாட்டினால் வருந்துவோர் கடவுளைக் காண வாய்ப்பில்லா சூழல். முத்திரைக் குத்தி முடங்கிப்போன தன்மை.

பன்னிரண்டு வயது சிறுமிக்கு:
முதல் தடை: அங்கு குழுமியிருந்தவர்கள். அழுகை, கூச்சல், புலம்பல், அமளி. இவையெல்லாம் இருக்கும்போதே இல்லாத ஒன்றை உருவாக்கும் வழிமுறைகள். பயம், பதற்றம், கையறுநிலை இவை அனைத்தும் அழுகையிலும், கூட்டமாய் நிற்பவரின் கூச்சலிலும் இன்னும் அதிகமாகும்.

இரண்டாவது தடை: அங்கு ஏளனமாய் பேசிய மனிதர்கள். இயேசு சிறுமி உறங்குகிறாள் என்று சொன்னவுடன் நகைத்தவர்கள் இவர்கள். இவர்கள் அச்சிறுமியின் குணமளிப்புக்கு தடையாக இருந்தனர்.

மூன்றாவது தடை: தொந்தரவு செய்ய வேண்டாமென்ற பணியாளர்கள். உம் மகள் இறந்துவிட்டார் போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற கூற்று, அவர்களிடத்திலே இருக்கும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு. இதுவும் ஒரு தடையே. இத்தனை தடைகளையும் தாண்டி வென்றது அவ்விருவரின் நம்பிக்கையே. இரத்தப்போக்குடைய பெண்ணின் நம்பிக்கையும், தொழுகைக்கூட தலைவரின் நம்பிக்கையும் நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுத்தருகின்றன. தானாக எழுந்த நம்பிக்கை – உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று – நடுக்கத்துடன் சென்றவர் நலமடைகிறார் - அது அவரிடத்திலே உதித்த நம்பிக்கை.

இறைவனால் சுட்டிக்காட்டப்பட்ட நம்பிக்கை – அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர். இது தொழுகைக்கூட தலைவரின் நம்பிக்கை இழப்பை நோக்கிச் செல்கையில், இடையே தடுத்து, நம்பிக்கையை விதைக்கிறார் இயேசு. பிரியமானவர்களே, இன்றைய நாளில் இயேசு நமக்கு பன்னிரண்டு என்ற முழுமையைக் குறித்து காட்டி முழுமையான வாழ்வை நாம் பெற வேண்டுமென்று விரும்புகின்றார். "ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" (யோவான் 10:10) என்ற வார்த்தை நமக்கு முழுமையான வாழ்வைக் கொடுக்கிறது. யாருக்கு இது முழுமையாய் கிடைக்கும்: யார் ஒருவர் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அவருக்குத்தான் கிடைக்கும். வாழ்வு இழந்து நின்ற பெரும்பாட்டினால் அவதியுற்ற பெண்மணி இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டாலே நான் சுகம் பெறுவேன் என்று நம்பினார். அவரின் நம்பிக்கை, இழந்த வாழ்வைப் பெற்றுத்தந்தன. யாயீரின் நம்பிக்கை, வாழ்விழந்த தன் மகளின் வாழ்வை மீண்டும் பெற்றுக்கொள்ள வழிவகைச் செய்தது. நீங்களும் நானும் இவ்விரு மனிதர்களைப் போலவும், ஒற்றை காலுடன் பணிபுரியும் செவிலியர் கீர்த்தனாவைப் போலவும் வாழ முயற்சித்தால், நம்பிக்கை சற்றும் நழுவாமல் நம் கையில் பிடித்து வாழ்ந்தால், என்றுமே கைவிடாத தெய்வம் இயேசு கண்ணின் மணிபோல் என்றென்றும் நம்மைக் காத்திடுவார். நாம் எதிர்பார்ப்பதைவிட நலமான வாழ்வை வழங்குவார். இத்தகைய நம்பிக்கையைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறாய் வெளிப்படுத்தி நமக்கும் நம்பிக்கையூட்டுகிறார்:

  "உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக!" (திபா 33:22)

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு