மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
யோபு 38:1,8-11 | 2கொரிந்தியர் 5:14-17 | மாற்கு 4:35-41

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
விசுவாசம்

இறையேசுவில் அன்புக்குரியவர்களே!
ஆண்டவர் இயேசு மாலைப் பொழுதிலே, கடலிலே பயணம் செய்வதாகப் பார்க்கிறோம். அதுவும் புயலும், காற்றும், சூறாவளியும் சூழ்ந்த கொந்தளிப்பில் தூங்கிக்கொண்டிருக்கிறார். நற்செய்தி ஏட்டிலே இந்த ஓர் இடத்தில் மட்டும்தான் இயேசு தூங்கியதாக வாசிக்கிறோம். அதேநேரத்தில் அமைதியிலே ஆண்டவர் இயேசு நித்திரை கொள்ள, சீடர்கள் படபடத்து, திக்குமுக்காடி, நாங்கள் மடியப் போகின்றோம், எங்களைக் காப்பாற்றும் என்று கதற இயேசு காற்றையும் கடலையும் கடிகிறார். அங்கே பேரமைதி உண்டாகிறது. சீடர்கள், இவர் யார்? என்னே இவரது வலிமை என்று வாயிலே கை வைத்து வியந்து நிற்கிறார்கள். இயேசுவோ ஏன் இந்தப் பயம். உங்கள் விசுவாசம் எங்கே ? என்று கடிந்துகொண்டார்.

ஆண்டவர் இயேசு சொன்னார்: "இரையாதே சும்மா இரு; காற்று நின்றது. பேரமைதி உண்டாயிற்று."

அன்று இறந்த லாசரை நோக்கி வெளியே வா என்றார், வந்தான் அல்லவா!

உலகத்தின் ஆரம்பத்திலே இறைவன் ஒளி உண்டாகுக் என்றார். ஒளி உண்டாயிற்று.

நான்கு நிலைகள்
1. மாலைப் பொழுதில் அக்கரைக்குப் போவோம் என்றார்.

2. இருட்டு. அலைகள் எழுந்ததால் கண்டுகொள்ள முடியாத நிலை. பகல் நேரத்தில் போய் இருக்கலாமே! ஏன் இந்த இரவுப் பயணம்? இதேபோல் நாம் காலத்தைக் கணக்கிடுவ. தில்லையா? ஒருவர் சொன்னார்: சுவாமி இந்த 20-ஆம் நூற்றாண்டு திருச்சபைக் கெட்டுவிட்டது என்று. நான் அவரைப் பார்த்து நீ 18, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தீரா என்று கேட்டேன். பதில் இல்லை.

3. கடலில் சென்ற படகு அங்கே அலைகளால் அலைமோத தண்ணீர் உள்ளே பாய , ஐயோ நாங்கள் மடியப் போகின்றோம் என்று அபயக் குரல் எழுப்புகிறார்கள் சீடர்கள்.

அதேபோல் இன்றைய உலகில் திருச்சபை கெட்டுவிட்டது. குருக்கள் சரியில்லை, கன்னியர் சரியில்லை, இவன் சரியில்லை . அவன் சரியில்லை . ஆம் உண்மைதான். ஆனால் நீ சரியாக இருக்கிறாயா? ஏதோ திருச்சபை கெட்டுவிட்டதாகவும், ஆவியானவர் ஏதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பது போலவும், இயேசு தூங்குவது போலவும் நினைப்பவர் பலர் உண்டு.

உலகம் முடிவுவரை உங்களோடு எந்நாளும் இருக்கிறேன் (மத். 28:20) என்றாரே இயேசு . இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் மேற்கொள்ளா என்றாரே (மத். 16:18).

ஆலமரத்தின் அடியிலே துண்டு விரித்துப் படுத்திருந்த வியாபாரி, ஆலமரமோ பெரிது. அதன் விதையோ சிறிது. இது கூடவா இறைவனுக்குத் தெரியாது. இந்தப் பெரிய மரத்திற்கு ஏற்ற விதையாக உண்டாக்கி இருக்க வேண்டாமா? என்று சொன்னான். அதன்பின் அயர்ந்து தூங்கினான். பழம் அவன் கண்ணில் விழ, விழித்தான். ஆம் கடவுளின் ஞானம் அளவு கடந்தது. பெரிய பழமாக இருந்திருந்தால் என் நிலை என்னவாயிருக்கும். என்றான்.

உங்கள் விசுவாசம் எங்கே? என்று கேட்கிறார் சீடர்களைப் பார்த்து. ஏனெனில் ஐந்து அப்பங்கள் கொண்ட புதுமையைக் கண்டவர்கள், கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைக் கண்டவர்கள், 38 ஆண்டுகளாக ஆட்டுக் குளத்தில் நடக்காத மனிதனை நடக்க வைத்தது, விதவையின் மகனுக்கு உயிர்கொடுத்த நிகழ்ச்சி இவையெல்லாம் கண்ட சீடர்கள், இயேசு இந்தக் கடலில் மூழ்கி சாகமாட்டார் என்பதை உணர முடியவில்லையே!

நமது வாழ்வில் நம் விசுவாசம் எந்த நிலையில் உள்ளது? ஒரு சிறுதுன்பம், நோய்வந்தால் எங்கேயோ ஓடுகிறோம்! நம் விசுவாசம் எங்கே? எப்படியெல்லாம் புலம்புகிறோம்!

உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள். உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு (1 பேதுரு 5:7).

4. ஏனெனில் நம் கண்களுக்கு நீ விலையேறப் பெற்றவன். மதிப்புக்குரியவன். உன்மேல் மிகுந்த அன்பு கொண்டோம் (எசாயா 43:4).

இவர் யார்? என்று வியந்து கேட்டார்கள். நீர் யார் என்று கேட்க துணிவில்லை. சமமானவரைத் தனக்குக் கீழ்ப்பட்டவனை பார்த்துதான் ஒருவன் நீ யார்? என்று கேட்பான். ஆனால் இங்கே துணிவற்ற நிலையில் இவர் யாராக இருக்கலாம் என்று வியந்த காட்சி. உங்களையும் என்னையும் பார்த்து, இவர் யாராக இருக்கலாம், என்னே இவரிடம் உள்ள வல்லமை என்று சொல்வார்களா?

கதை

ஒரு தோட்டத் தொழிலாளி தான் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு செடியின் பூவை விரும்புகிறான். தினமும் அதைப் பார்த்து ரசித்தான். ஆனால் ஒருநாள் அந்தப் பூவைக் காணோம். வந்தது எரிச்சல், கோபம் தோட்டக்காரனுக்கு. ஆனால் தோட்டத்தின் உரிமையாளர் நான்தான் அந்தப் பூவைக் கொய்து கொண்டேன் என்றார். ஆம் இயேசு கிறிஸ்து உலகத்திற்குச் சொந்தமானவர். சில நேரங்களில் நம்மிடத்தில் சிலவற்றைக் கேட்கலாம். எதிர்பார்க்கலாம். துன்பத்தைத் தரலாம். நாம் கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நம்புவோம் நலம் பெறுவோம்

புயலோடு துவங்கி புயலோடு முடிகின்ற வாழ்க்கை நமது வாழ்க்கை ! புயல் என்றால் துன்பம், துயரம், சோதனை, வேதனை, விபத்து, ஆபத்து!

குழந்தை பிறக்கின்றது! மூச்சுத் திணறலால் அழுகின்றது! கடைசி நேரம்! அங்கேயும் மூச்சுவிட முடியாமல் மனிதன் அழுகின்றான்!

வளர்ந்த குழந்தை பள்ளிக்கூடம் செல்லும் முதல் நாள் ! அங்கே ஒரு புயல்! மீண்டும் அழுகைப் புயல்!

வளர்ச்சி அடைந்த இளைஞன் : வெட்ட வெயில்! பட்டப்பகல்! என் வாழ்க்கையோ இருட்டறையில்! என்கின்றான்! இளம்பெண்ணோ : பல்லவி இல்லாமல் பாடுகின்றேன்! பாதை இல்லாமல் ஓடுகின்றேன்! ஊமைக் காற்றாய் வீசுகின்றேன்! உறங்கும்போது பேசுகின்றேன் என்கின்றாள்!

இளமை இல்லறத்தையோ, துறவறத்தையோ, தனியறத்தையோ, தேடுகின்றது! பெரும்பாலானோர் திருமணம் செய்துகொள்கின்றார்கள்!

திருமண வீட்டில் அழுத மணமகளைச் சுட்டிக்காட்டி சிறுவன் ஒருவன் அவனுடைய தாயிடம், ஏம்மா பொண்ணு அழுவுது? என்றான். அதற்குத் தாய், அது ஆனந்தக் கண்ணீர் கண்ணா என்றாள். அதற்குச் சிறுவன், ஏம்மா மாப்பிள்ளை அழலே? என்று கேட்டான். அதற்குத் தாய், அவரு இனிமேதாண்டா அழுவாரு என்றாள்.

கணவன் மனைவியைப் பார்த்து, சொர்க்கத்திலே கணவன், மனைவி சொந்தம் இருக்காதாமே! என்றான். அதற்கு மனைவி, அதனாலேதான் அதை சொர்க்கம்னு அழைக்கிறாங்க என்றாள்.

வீட்டுக்குள் வீசும் புயல் நாட்டுக்குள்ளும் எதிரொலிக்கின்றது.

இல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற எல்லாவிதமான புயல்களிலிருந்தும் விடுபட்டு நாம் அமைதியான வாழ்க்கை வாழ வழியே இல்லையா?

ஏன் இல்லை? இருக்கின்றது வழி! உங்கள் நம்பிக்கை நிறைந்த கண்களை காற்றையும், கடலையும் அடக்கிய இயேசுவின் பக்கம் திருப்புங்கள் என்கின்றது இன்றைய நற்செய்தி.

இந்த உலகம் முழுவதும் இறைவன் கையில் (முதல் வாசகம்) (திபா 107:28-29) உள்ளது. அவரின்றி எதுவும் இந்த உலகத்தில் நடக்காது. இப்படிப்பட்ட இறைவன் தன் மகன் இயேசு வழியாக இந்த உலகத்தின் மீது அவரது பேரன்பைப் பொழிந்துகொண்டிருக்கின்றார். (இரண்டாம் வாசகம்). நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே!

இயேசுவின் ஆற்றல் மீது. வல்லமை மீது, சக்தி மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். பிறவியிலிருந்து பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் வீசிய நோய் என்னும் புயல் (மத் 9:27-31) இயேசுவின் மீது நம்பிக்கை வைத்ததால் ஓய்ந்தது.

இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த பாவியொருத்தியின் வாழ்க்கையில் வீசிய பாவம் என்னும் புயல் ஓய்ந்தது (லூக் 7:36-50).

இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த மார்த்தா, மரியா வாழ்க்கையில் வீசிய மரணம் என்னும் புயல் ஓய்ந்தது (யோவா 11:1-44).

எந்தப் புயலாலும் இயேசுவை எதிர்த்து நிற்க முடியவில்லை !

ஆகவே நாமும் அவரை நம்புவோம் ; நாளும் நலம் பெறுவோம்!

மேலும் அறிவோம் :

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் : 3).

பொருள் : அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

புயல் காற்றையும் பூத்தென்றலாக்கினார்

கணக்குப் பாடத்திற்கும் வரலாற்றுப் பாடத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று ஒரு மாணவனை ஆசிரியர் கேட்டதற்கு அவன் கூறிய பதில்; "கணக்குப் பாட வகுப்பில் விட்டுவிட்டுத் தூங்குவேன்; வரலாற்றுப் பாட வகுப்பில் விடாமல் தூங்குவேன் " ஆம், வாழ்க்கையில் சிலர் விட்டுவிட்டுத் தூங்குகிறார்கள்; வேறு சிலர் விடாமல் தூங்குகின்றனர். மனிதருடைய வாழ்வு தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதியாகக் கழிகிறது.

மனிதர் தூங்கினால் பரவாயில்லை ; ஆனால் கடவுள் தூங்கலாமா? இன்றைய நற்செய்தியில் இயேசுவும் அவர் சீடர்களும் சென்ற படகு கடல் கொந்தளிப்பால் அலைக்கழிக்கப்பட்டு, சீடர்கள் சாவின் பயத்தில் இருக்கும் வேளையிலும் கிறிஸ்து படகில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். சீடர்கள் அவரை எழுப்பி விடுகின்றனர்.

கடவுள் தூங்குவாரா? பேருந்தில் நடத்துனர் தூங்கினால் பயணிகள் எவரும் பயணச் சீட்டு வாங்கமாட்டார்கள்; ஆனால் ஓட்டுனர் தங்கினால் அனைவரும் பயணச்சிட்டு வாங்கிவிடுவார்கள்; எமலோகம் சென்றுவிடுவார்கள், அப்படியானால் கடவுள் தூங்கினால் இவ்வுலகின் கதி என்ன ஆகும். இக்கேள்விக்குத் திருப்பா 121 கூறும் பதில் "இஸ்ரயேலைக் காக்கின்றவர் கனனயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை " (திபா 121:4), கடவுள் தூங்கினால் இவ்வுலகமே இயங்காது.

அடுத்து, கடவுளுக்கு மனிதர்மேல் கவலை உண்டா ? சீடர்கள் இயேசுவிடம், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று கேட்கின்றனர் இதே கேள்வியை பலரும் கேட்கின்றனர். இக்கேள்விக்கு பேதுரு கூறும் பதில்: "உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்" (1 பேது 5:7).

எங்கள் மேல் கவலையில்லையா? என்ற தம்மைக் கேட்ட சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வி: "என் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற் 4:40) என்று கேட்கிறார். கடவுளுக்கு நம்மேல் அக்கறை உனாடு, ஆனால் நமக்குத்தான் கடவுள் மேல் நம்பிக்கையில்லை. கடவுளிடம் தமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும், பிள்ளைக்குரிய நம்பிககை இருக்க வேண்டும்.

'காசாபியான்கா' என்ற சிறுவனைப் பற்றிய ஓர் ஆங்கிலக் கவிதையுண்டு, அதன் சுருக்கம் வருமாறு: பிரஞ்சு கப்பல் ஒன்று கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அக்கப்பல் திடீரென்று தீப்பிடித்துக் கொள்ள, பயணிகள் உயிர்காக்கும் கருவியாகிய "லைப் போட்" மூலம் கரைக்குச் செல்ல. 'காசாபியானகா' கப்பலின் மேல் தட்டில் கவலையின்றி விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் கூறியது "என் அப்பா இக்கப்பலின் மாலுமி; எனக்கு எந்த ஆபத்தும் வராது." இதுதான் பிள்ளைக்குரிய நம்பிக்கை.

அஞ்சி அஞ்சிச் சாகும் நமக்குக் கடவுள் கொடுக்கும் துணிவு: *அஞ்சாதே! நான் உன்னோடு இருக்கிறேன். கடலில் நடந்தாலும் தீ மூழ்கிப் போகமாட்டாய்; தீயும் உன்னைச் சுட்டெரிக்காது" (எசா 43:1-2). எனவே, தமக்கு இருக்க வேண்டிய மனநிலை, "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம், யாருக்கு தான் அஞ்சி நடுங்க வேண்டும்?" (திபா 2711)

அதே நேரம், கடவுள் மனிதர்கள் வழியாகத்தான் நமக்கு உதவி செய்கிறார். அவைகளைப் பெறாமல் நாம் துன்புற்றால், அது கடவுளைச் சோதிப்பதாகும். ஓர் ஊரிலே பேய்மழை பெய்து ஒரு கைம்பெண் வீட்டைச் சூழ்ந்து கொண்டது. அவரை மீட்பதற்காக படகோட்டி இருமுறை முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்று கூறி படகில் ஏற மறுத்துவிட்டார். வெள்ளம் உயர உயா, அவர் வீட்டு மாடியில் நின்றார். சிறிய வானவூர்தி ஒன்று அவரைக் காப்பாற்ற முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறி அதில் ஏற மறுத்துவிட்டார். வெள்ளம் அவர் தலைக்குமேல் செல்ல, அவா இறந்து விண்ணகம் சென்று பேதுருவிடம், "கடவுள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?" என்று கேட்டார். பேதுரு அவரிடம், *கடவுள் உன்னைக் காப்பாற்ற இரு முறை படகையும், ஒருமுறை வானவூர்தியையும் அனுப்பினார். நீதான் அவற்றைப் பயன்படுத்தவில்லை" என்று கூறி அவரைக் கடித்து கொண்டார். அக்கைம்பெண்ணின் தம்பிக்கை மூட நம்பிக்கை, அது உண்மையான நம்பிக்கை இல்லை.

கடவுளே, எங்கள் மேல் அக்கறை இல்லையா? இது போன்று கடவுளைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை உண்டா? இக்கேள்விக்கு முதல் வாசகம் பதில் தருகிறது. யோபு மகான் தனது உடைமை அனைத்தும் இழந்து, சுகத்தை இழந்த நிலையில், தன்னை நிரபராதி என்று வாதிட்டு கடவுளிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் கடவுள் அவரிடம் திருப்பிக் கேட்கிறார். நான் கடலைப் படைத்து அதன் எல்லையை வரையறுத்த போது நீ எங்கிருந்தாய்? நான் இயற்கைக்கு ஒழுங்குமுறைகளைப் படைத்தபோது நீ எங்கிருந்தாய்? என்று கேட்கிறார். யோபு தன் தவற்றை உணர்ந்து கடவுளிடம், "என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்... இனிப் பேசவே மாட்டேன்" (யோபு 40:4-5) என்று கூறிக் கடவுளிடம் சரணடைகிறார்.

திருத்தூதர் பவுல் கூறுகிறார்: களிமண்பாண்டம் தன்னை உருவாக்கிய குயவனை எப்படி கேள்வி கேட்க முடியாதோ, அதுபோல மனிதரும் கடவுளை கேள்விகேட்க முடியாது (உரோ 9:20); ஏனெனில் கடவுளுடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை (உரோ 11:32), இருப்பினும், கடவுளிடம் ஒரு சில விளக்கம் தேடுவது குற்றமில்லை. மரியா கன்னியாக இருந்து கொண்டே மீட்பரின் தாயாக வேண்டும் என்று வானது தர் கபிரியேல் கூறியபோது. இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" (லூக் 1:34) என்று விளக்கம் கேட்டார். வானதுதர் கொடுத்த விளக்கத்தை ஏற்று, கடவுளுடைய திட்டத்திற்குத் தன்னைக் கையளித்தார் மரியா.

புனித அகுஸ்தினார் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் கூறுகிறார்: விளக்கம் பெறவேண்டும் என்பதற்காக நம்புகிறேன்; நம்பிக்கை பெறவேண்டும் என்பதற்காக விளக்கம் தேடுகிறேன். முதலில் நம்புகிறோம். அதன் பிறகு விளக்கம் தேடுகிறோம். தமது நம்பிக்கைக்கு விளக்கம் தருவதே இறையியல், "உங்கள் நம்பிக்கை குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்" (1 பேது 3:15). இக்கால அறிவியல் விடும் சவால்களைச் சமாளிக்கத் தேவையான விவிலிய மறைக்கல்வி காலத்தின் கட்டாயமாகும்.

இன்றையப் பதிலுரைப் பாடல் கூறுகிறது: “புயல் காற்றையும் பூத்தென்றலாக்கினார், கடல் அலைகளும் ஓய்த்துவிட்டன (திபா 107:29), கிறிஸ்து கடலைப் பார்த்துக் கூறினார்: 'இரையாதே. அமைதியாயிரு' (மாற் 4:39). கடவுள் புயல் காற்றையும் பூந்தென்றலாக்க வல்லவர் என்று நம்புவோம். நமது வாழ்வில் அலைகள் ஓய்ந்து அமைதி குடிகொள்ளும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

யாமிருக்கப் பயமேன்?

யூதர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறது ஜெர்மனி நாட்டுப்படை. தங்கள் அடையாளங்களை அழித்துக் கொண்டு அவர்கள் நாடு நாடாக ஓடுகிறார்கள். இடிந்து போன வீட்டுச் சுவரில் யூத இளைஞன் ஒருவன் கரித்துண்டால் கிறுக்கிக் கொண்டிருக்கிறான்:

''எனக்குத் தெரியும். இங்கே இருள் என்றாலும் எங்கோ சூரியன் இருக்கிறான் எனக்குப் பிடிக்கும். இதயத்தில் இருந்தாலும் நீ உதடு திறந்து உச்சரிக்காத உன் காதல் நான் நம்புகிறேன்: கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கடவுள் உண்டு "

கொந்தளிக்கும் வாழ்க்கைக் கடலில், படகு போல் அலைக்கழிக்கப்படுகிறான் மனிதன். புயல் இல்லாத வாழ்க்கை ஏது? அப்பொழுதெல்லாம் “போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?" (மார்க். 4:38) என்று கூக்குரல் இடுகிறான். அந்தக் கடவுளோ உரிமையோடு கடிந்து கொண்டு கேட்பது, ''ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மார்க் 4:40) என்பதுதான்.

மனிதன் மீது அக்கறை இல்லாதவரா கடவுள்? விடுதலைப் பயணம் 3:7இல் ஆண்டவர் கூறியது: "எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலைக் கேட்டேன். ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்"

"அவனைப் போல் மாசற்றவனும் நேர்மையானவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" (யோபு. 1:8) என்று இறைவனே பெருமிதம் கொண்ட யோபுவின் இறை நம்பிக்கையே கொஞ்சம் ஆட்டம் கண்டபோது ஆண்டவர் சூறாவளியினின்று யோபுவுக்கு அருளிய பதிலே முதல் வாசகம். "கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபோது அதனைக் கதவிட்டு அடைந்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாள்ப்பாளையும் பொருத்தி இதுவரை வருவாய் இதற்கு மேல் அல்ல. உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க' என்று நான் இயம்பிய போது எங்கிருந்தாய் நீ?" (யோபு. 38:8-11).

வாழ்வினில் இழப்புகள் , இடர்பாடுகள், விபத்துக்கள், வேதனைகள் போன்றவற்றைச் சந்திக்கும் போது நாம் மனம் உடைந்து போகிறோம். அதிலும் காரணமின்றி இழப்புக்களைச் சந்திக்கும்போது, நேர்மையாக வாழ்ந்தும் இடர்களுக்கு ஆளாகும்போது நம் இறை நம்பிக்கை அசைக்கப்படுகிறது; ஆட்டம் காண்கிறது. இத்தகைய சூழல்களில் இறைவனின் அன்பை, ஆற்றலை, உடனிருப்பை மறந்து விடக்கூடாது என்பதே இன்றைய வழிபாடு சொல்லும் செய்தி! " உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்” (1 பேதுரு 5:7)

செல்வச் செழுமைமிக்க வணிகர் அவர். அதே வேளையில் நேர்மையான இறை நம்பிக்கையாளர். கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தார். யாரோ தன்னைத் தொடர்வது போன்ற உணர்வு. திரும்பிப் பார்க்கிறார். யாருமில்லை. ஆனால் நான்கு காலடித்தடங்கள் காணப்படுகின்றன. கடவுளே தன்னோடு நடந்து வருவதாக எண்ணிக் கடவுளைப் போற்றத் தொடங்கினார். காலங்கள் கடந்தன. வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்புக்கும் இடர்களுக்கும் உள்ளானார். அமைதி இழந்து கடற்கரையில் நடக்கிறார். அப்போது திரும்பிப் பார்க்க வழக்கமான நான்கு காலடிச் சுவடுகளைக் காணோம். இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே காணக்கிடக்கின்றன. கடவுளை நோக்கிப் புலம்பத் தொடங்கி விட்டார். "என் அருமைத் தெய்வமே, என் வாழ்வில் எப்பொழுதும் நீ என்னோடு நடந்து வருகிறாய் என்ற நம்பிக்கையில் நிறைவும் நிம்மதியும் கண்டவன் நான். ஆனால் இந்தத் துன்ப நேரத்தில் மனிதர்கள் தான் கைவிட்டு விட்டனர் என்றால் நீரும் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டீரே. என்னோடு நடந்து வரும் உன் காலடிச் சுவடுகள் எங்கே?" என்று தனது தவிப்பை வெளிப்படுத்தினார். அப்போது கடவுளின் குரல் ஒலித்தது: "மகனே, நீ காணும் காலடித் தடங்கள் உன்னுடையது என்றா நினைக்கிறாய் ? நடக்க இப்போது உனக்கேது சக்தி? நீ காணும் அந்தத் தடங்கள் உன்னுடையவையல்ல. அவை என்னுடையவை. துவண்டு நிற்கும் உன்னை நான் என் தோளில் சுமந்து அல்லவா நடக்கிறேன்!''

''நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை ” (2 கொரி. 4:8-9) என்ற திருத்தூதர் பவுலின் மன உறுதிக்குக் காரணம் இயேசு அவரோடு இருந்து செயலாற்றுகிறார் என்ற உணர்வுதான்.

மனிதன் தூங்கலாம். கடவுள் தூங்கலாமா? கடவுள் தூங்கினால் இவ்வுலகம் இயங்குமா? அதனால் தான் ''உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண் அயர்வதும் இல்லை. உறங்குவதும் இல்லை" (தி.பா. 121 : 3-4). ஆனால் " அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிந்தார்" (மார்க். 4:38) என்கிறது நற்செய்தி. கடலின் கொந்தளிப்பில், அலைகளின் பேரிரைச்சலில், படகின் அலைக்கழிப்பில் ஒருவரால் உறங்க முடியுமா? இறைவனின் புரியாத * இந்தச் செயல்பாட்டைத்தான் தமிழன் திருவிளையாடல்' என்கிறானா?

இங்கிலாந்து நாடு, பனிக்காலம். நடுக்கும் குளிர் ஏழைத்தாய் ஒருத்தி கந்தையில் பொதிந்த மழலையைக் கையில் ஏந்தி காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் அவ்வழியே வந்த ஜட்கா அவளைக் கண்டதும் நின்றது. ஏறிக் கொண்டாள். வண்டி வேகமாக ஓடியது. உறைய வைக்கும் குளிரின் வேகம் வேறு. குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளது பற்கள் வெட வெட என ஆடின. முடிவில் இறுகக் கட்டிக் கொண்டன. வண்டிக்காரன் திரும்பிப்பார்த்தான். "அம்மா" என்றான். அவளால் வாய்திறக்க முடியவில்லை. நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி "கீழே இறங்கு'' என்றான் அதட்டலுடன். பயந்து நடுங்கி அவள் இறங்கிக் கொண்டிருந்தாள். வெடுக்கென பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு குதிரையைத் தட்டிவிட்டான். சிட்டாகப் பறந்தது. அவளோ "என் பிள்ளை , என் பிள்ளை " என்று கதறிக் கொண்டு வண்டிக்குப் பின்னாலேயே ஓடினாள். சிறிது தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திப் பதறிக் கொண்டு வந்த அவளிடம் பிள்ளையைக் கொடுத்தான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிமிர்ந்து "ஏன் பா இப்படிச் செய்தாய் ? " என்று கேட்க, அவன் "இப்ப குளிருதா?" என்றான். ''இல்லை நன்றாக வியர்த்துவிட்டது" என்று அவள் சொல்ல, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான் : "இதற்காகத்தான் ஓடவைத்தேன்"

ஓடு ஓடு என்றால் நாம் ஓட மாட்டோம். அதனால் கடவுள் சிலசமயம் ஓட்டம் காட்டுகிறார்.

தெய்வத்தின் இந்தத் திருவிளையாடலைப் பற்றித்தான் திருப்பாடல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்: "நானோ கலக்கமுற்ற நிலையில் உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன் என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் நான் உம்மிடம் உதவிக்காக வேண்டின் போது நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவி சாய்த்தீர்." (தி.பா. 32:22)

காக்கும் கடவுள் நம்மோடு பயணிப்பதை நம்பிக்கையின் வெளிச்சத்தில் பார்க்காமல் அவநம்பிக்கை கொள்ளும் போது அச்சத்தின் அலைகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். நம் இயேசு வல்லவர் உடனிருப்பவர்.

இயேசுவின் மெளனத்தைப் புரிந்து கொள்ளாதவன் அவரது வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது. கடவுளின் வமளனத்துக்கு எப்போதும் அருத்தம் உண்டு. கடவுளின் மெளனத்துக்கு அருத்தம் தேடும் முயற்சியே மனிதனின் இறை நம்பிக்கை.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“கிறிஸ்துவின் பேரன்பு”

நிகழ்வு

1986 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 26 ஆம் நாம் அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் கீழ் இருந்த உக்ரேனின் செர்னோபிலில் ஏற்பட்ட அணு உலை விபத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டோம். இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஓர் அணு உலையிலிருந்த ‘நீர் குளிர்வுச் சாதனம்’ செயல்படாமல் போனதால், வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருகி வெடிக்கத் தொடங்கியது. இதனால் இருபது வகையான கதிர்வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் கலந்து,, ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தார்கள். இந்த அணு உலை விபத்தின் தாக்கம் அண்டை நாடான ஸ்வீடன் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அணு உடலையின் பாதிப்பு மேலும் தொடராமல் இருக்க, அணு உலையின் நடுவில் டன் கணக்காக மணலைக் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தது அங்கிருந்த வல்லுநர் குழு. இதையடுத்து, ஹெலிகாப்டரில் ஒருவர் டன் கணக்காக மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அவற்றை அணு உலையில் நடுவில் கொட்டினார். இதனால் விபத்தின் தாக்கம் படிப்படியாகக் குறைந்தது. அதே நேரத்தில் மணல் மூட்டைகளை ஹெலிகாப்டரிலிருந்து அணு உலையின் நடுவில் கொட்டிக்கொண்டிருந்தவர், கதிர்வீச்சின் காரணமாக இறந்தார். அணு உலையின் நடுவில் மணலைக் கொட்டுகின்றபொழுது கதிர்வீச்சினால் தான் இறப்போம் என்பது ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றவருக்குக் நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனாலும், அவர் அணு உலை விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தன்னுயிரையே தியாகமாகத் தந்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் மனிதர் அணு உலை விபத்திலிருந்து மக்களைக் காக்கத் தன்னுயிரையே தந்தார். ஆண்டவர் இயேசு நாம் அனைவரும் வாழ்வு பெறுவதற்காக, நமக்காக இறந்து, நம்மீதுகொண்ட பேரன்பை வெளிப்படுத்தினார். பொதுக்காலத்தின் பன்னிரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கிறிஸ்துவின் பேரன்பை நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

அனைவருக்காகவும் இறந்த கிறிஸ்து
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கின்றது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார்” என்கிறார்.

கிறிஸ்துவின் பேரன்பை வார்த்தைகளால் விவரித்துச் சொல்லமுடியாது. காரணம், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல், நேர்மையாளர் ஒருவருக்காக அல்லது நல்லவர் ஒருவருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுப்பதே அரிதாக இருக்கின்றபொழுது, நாம் பாவிகளாக இருக்கும்பொழுதே கிறிஸ்து நமக்காகத் தன் இன்னுயிரைத் தந்தார் (உரோ 5: 6-8) இதன்மூலம் அவர் நம்மீது கொண்டிருக்கும் பேரன்பை உணர்த்தினார்.

முதல் பெற்றோர் செய்த தவற்றினால் பாவம் இவ்வுலகில் நுழைந்தது. அப்பாவத்தைப் போக்க செம்மறியாய் வந்த இயேசு (யோவா 1: 29), சிலுவையில் தன்னையே தந்தார். இவ்வாறு அவர் நம் அனைவருக்காகவும் இறந்து அவர் தம் பேரன்பை வெளிப்படுத்தினார்.

அலைகளை அடக்கிய கிறிஸ்து
கிறிஸ்து நம்மீது பேரன்புகொண்டிருக்கின்றார் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றார் எனில், அதற்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்றைய நற்செய்திவாசகம். அது எப்படி என்று நாம் சிந்திப்போம்.

இயேசு தன் சீடர்களுடன் கலிலேயாக் கடலில் மேற்குப் பக்கமாய் இருந்தார். மக்கள் அவரிடம் வருவதும் போவதுமாய் இருந்ததால், அவர் தன் சீடர்களிடம், “அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்கிறார். கலிலேயாக் கடலானது மலைகள் சூழ இருந்ததாலும், 690 அடி ஆழமானதான இருந்ததாலும் அதில் அடிக்கடி புயல் ஏற்படுவதுண்டு. இன்றைய நற்செய்தியிலும் இயேசு தன் சீடர்களுடன் கடலில் பயணம் செய்கின்றபொழுது புயல் ஏற்பட்டு, அலைகள் படகின்மீது மோதி, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டு, இயேசுவின் சீடர்கள், “போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்கிறார்கள்.

கடலில் புயல் ஏற்பட்டு, அதனால் அலைகள் உண்டாகி, படகு தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தபொழுதும், இயேசு படகின் பிற்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தார் எனில், அவர் தொடர்ந்து இறையாட்சிப் பணிசெய்ததால், எவ்வளவு சோர்வாக இருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். ஆனாலும் இயேசுவை அவரது சீடர்கள் எழுப்பியதும், அவர் காற்றையும் கடலையும் கடிந்துகொண்டு அவற்றை அமைதியாக இருக்கச் செய்கின்றார். இதன்மூலம் நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, இயேசு தன் சீடர்கள்மீது பேரன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் அவர்களை எந்தத் துன்பமும் இல்லாமல் பார்த்துகொண்டார். இரண்டு. இயேசுவுக்குக் காற்றின் மீதும் கடலின் மீதும் இன்னும் எல்லாவற்றின்மீதும் அதிகாரம் இருந்தது.

யோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் கடவுளுக்கு மேகமும் கடலும் கட்டுப்பட்டன என்று வாசிக்கின்றோம். இயேசுவுக்கும் எல்லா அதிகாரமும் இருந்ததால், (மத் 28: 18) அவர் காற்றையும் கடலையும் அடக்கித் தன் சீடர்களைக் காக்கின்றார். இதன்மூலம் இயேசு தன் சீடர்கள்மீது கொண்ட பேரன்பை வெளிப்படுத்துகின்றார்.

நமக்காக இறந்த கிறிஸ்துவுக்காக வாழத் தயாரா?
இயேசு தன் பேரன்பினால் சீடர்களைப் புயலிலிருந்து காப்பாற்றினார் என்று நற்செய்தியில் நாம் வாசித்துத் தியானித்தார். இவ்வாறு இயேசு தம் பேரன்பினால் அன்று தம் சீடர்களையும், இன்று நம்மையும் புயல் போன்ற பலவிதமான ஆபத்துகளிலிருந்து காத்து வருவதால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போல், வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயித்தெழுந்தவருக்காக வாழ வேண்டும்.

நாம் அனைவருக்காகவும் நமக்காக வாழ்ந்து இறந்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்றால், அவரிடம் இருந்த அன்பு நம்மிடமும் இருக்கவேண்டும். அவர் எப்படி மக்களை அன்பு செய்தாரோ, அப்படி நாமும் மக்களை அன்பு செய்யவேண்டும். இன்றைக்குப் பலர் தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று தன்னலத்தோடு வாழ்வதைக் காண முடிகின்றது. “மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம், மனிதனுக்காக மனிதன் இறக்குமிடமே” என்பார் எம். ஜே. பாரி என்ற எழுத்தாளர். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் தன்னலத்தைத் தவிர்த்து, கிறிஸ்துவுககாகவும், அவரது மக்களுக்காகவும் வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை:
‘உண்மையான அன்பின் வடிவம், ஒருவர் தான் மிகவும் அன்புசெய்யும் ஒருவரின் கையில் அணிகின்ற வைரம் அல்ல. மாறாகச் சிலுவை” என்பார் ஆலிசியா என்ற எழுத்தாளர். ஆம், சிலுவையில் தன்னையே தந்ததன் மூலம், இயேசு கிறிஸ்து இவ்வுலகை எவ்வளவு அன்பு செய்கின்றேன் என்பதை நமக்கு உணர்த்தினார். எனவே, நாமும் இயேசு கிறிஸ்துவின் பேரன்பை உணர்ந்தவர்களாய் அவருக்காகவும் அவரது மக்களுக்காகவும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உன் அலைகள் எங்கே?

'நான் என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ இருக்கின்ற நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்பது தாவோ எண்ணம். அதாவது, நானும் பிரபஞ்சமும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றோம். செல்டிக் பண்பாட்டின் புரிதல்படி நாம் வானில் காண்கின்ற விண்மீன்கள் யாவும் இந்த உலகைக் கடந்து சென்றவர்கள் ஏற்படுத்திச் சென்ற பிரபஞ்சத் துவாரங்கள். அவற்றின் வழியே அவ்வுலகின் ஒளி இவ்வுலகை நோக்கிக் கடந்து வருகின்றது. அவர்கள் அவ்வுலகிற்குச் சென்றாலும் அத்துவாரங்கள் வழியே இவ்வுலகைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். நம்முடைய பிரபஞ்சமும் நாமும் ஏதோ ஓர் ஒருங்கமைவு இணைப்பில் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. நாள் விடிகின்றது, நாள் முடிகின்றது. நாம் பிறக்கின்றோம், நாம் இறக்கின்றோம். ஏதோ ஒரு பாடலின் இசை போல, ஓவியத்தின் ஒளி-இருள் போல எல்லாம் அதனதன் நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த ஒருங்கியக்கத்தில் ஏதாவது ஒரு தடை வரும்போது நம் மனம் பதைபதைக்கின்றது. அப்படி வரும் தடைகளை பதற்றமின்றி நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இன்னொருவருடன் இணைந்திருக்கின்றோம். ஒருவர் மறையும்போது அவரைச் சுற்றி பிண்ணப்பட்ட வலை கிழிந்து போவதோடு, அதைத் திரும்பப் புதுப்பிக்க முடியாத நிலையும் உருவாகிவிடுகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களை நோக்கி, 'அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்!' என்றழைத்து, அவர்களோடு இணைந்து படகில் ஏறுகின்றார். அந்த நேரத்தில் புயல் அடிக்கின்றது. கெனசரேத்து ஏரி என அழைக்கப்படும் கலிலேயக் கடல் உண்மையில் ஓர் ஏரி. சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதாலும், கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதாலும் பெருங்காற்று வீசும்போது இந்நீர்த்தேக்கத்தில் ஏறக்குறைய 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதுண்டு. இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழில் செய்தவர்கள், அல்லது இக்கடலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். ஆக, அவர்கள் அலைகளை அடிக்கடி எதிர்கொண்டதுண்டு. இந்த நிகழ்வில், பெரும் புயல் அடித்தது எனச் சொல்கின்ற மாற்கு, அங்கு நிலவிய இரண்டு சூழல்களை நம்முன் கொண்டு வருகின்றார்: ஒன்று, அமைதியான சூழல். அந்தச் சூழலில் இயேசு படகில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அதற்கு எதிர்மாறான சூழல் இரண்டாவது. பரபரப்பான சூழல். அங்கே சீடர்கள் பரபரப்பாக, பயந்து போய் இருக்கின்றனர். 'போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?' எனக் கேட்கின்றனர். இவர்கள் இயேசுவை வெறும் போதகராக (ரபி) பார்க்கின்றனர். மேலும், தங்கள் கவலையில் இயேசுவையும் இணைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

இயேசு எழுந்து கடலைக் கடிந்துகொள்கின்றார். 'இரையாதே! அமைதியாயிரு!' என்பது பேயோட்டுவதற்கான வாய்ப்பாடு. அதே வார்த்தைகளைச் சொல்லி இயேசு கடலை அமைதியாக்குகின்றார். ஏனெனில், யூத மக்களைப் பொருத்தவரையில் கடல் என்பது பேய்கள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. தொடர்ந்து தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு: 'ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' இவ்வார்த்தைகள் வழியாக அவர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. அதாவது, இயேசு தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு இறப்பு இல்லை என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். இதுதான் அவர்களின் நம்பிக்கைக் குறைவான நிலை. இந்தக் கேள்விகள் சீடர்களைப் பார்த்து மட்டும் கேட்கப்படவில்லை. இந்நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கப்படுகின்றன. இவ்விரண்டு வினாக்களுக்கும் நானும் நீங்களும் தனித்தனியாக விடை அளிக்க வேண்டும். நாம் அளிக்கும் விடையைப் பொருத்தே, 'படகில் தூங்குபவரும் காற்றைக் கடிந்துகொள்பவரும் யார்?' என்ற வினாவுக்கான விடை அமையும்.

தங்களுடைய வாழ்க்கை இயல்பாகக் கடந்து போன போது இரண்டு துன்பங்களை எதிர்கொள்கின்றனர் சீடர்கள்: ஒன்று, 'அக்கரைக்குச் செல்கின்றனர்.' இக்கரையில் இருந்த தங்களுடைய பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், தொழில், மக்கள் ஆகிய அனைத்தையும், அனைவரையும் விடுத்து, முன்பின் தெரியாத அக்கரை நோக்கிச் செல்கின்றனர். இரண்டு, இயல்பான அமைதியில் இருக்கின்ற கடல் இயல்பு நிலையை இழந்து கொந்தளிக்கிறது. இவ்விரண்டு துன்பங்களும் அவர்களுக்கு அச்சமும் கவலையும் அளிக்கின்றன. ஆகையால்தான், 'போதகரே, சாகப்போகிறோமே!' என்கின்றனர்.

முதல் வாசகத்தில், யோபுவுக்கு ஆண்டவராகிய கடவுள் சூறாவளியினின்று அருளிய பதிலின் ஒரு பகுதியை வாசிக்கின்றோம். 'நேர்மையாளர் துன்புறுவது ஏன்?' என்ற கேள்வியைக் கேட்டு விடையைத் தேடுகிறது யோபு நூல். நேர்மையாளர் துன்புறுதலுக்கான விடையை யோபுவின் மூன்று நண்பர்கள் பாரம்பரிய இறையியலைக் கொண்டு தர முயற்சி செய்கின்றனர். அவர்களின் விடை யோபுவுக்கு ஏற்புடையதாக இல்லை. சூறாவளியில் தோன்றுகின்ற ஆண்டவர் யோபுவின் கேள்விக்கு விடையளிக்காமல் சுற்றி வளைத்து நிறையக் கேள்விகளைத் தொடுக்கின்றார். தானே அனைத்துக்கும் ஆண்டவர் என்றும், வாழ்வின் மறைபொருள் அனைத்தவர் தான் மட்டுமே என்றும் யோபுவை உணரச் செய்கின்றார். விளைவு, யோபு சரணடைகின்றார். கடல்மேல் ஆண்டவராகிய கடவுள் கொண்டிருக்கின்ற ஆற்றலை இவ்வாசகப் பகுதியில் காண்கின்றோம்.

யோபுவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. அவர் தனக்குரியது அனைத்தையும் அனைவரையும் இழந்து இறந்தவர் போல, அல்லது இறப்புக்குத் துயரப்படுவது போல சாம்பலில் அமர்ந்திருக்கின்றார். பிரபஞ்சத்திற்கும் தனக்குமான நெருக்கம் உடைக்கப்பட்டது போல உணர்ந்த அந்த நேரத்திலும் இறைவனின் உடனிருப்பைக் காண்கின்றார் யோபு.

இரண்டாம் வாசகத்தில், தன்னுடைய நற்செய்தியின் மேன்மை குறித்து கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல் தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் முன்வைக்கின்றார். தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் இயேசுவின் உயிர்ப்பின் ஒளி கொண்டு காண்கின்றார் பவுல். கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக பழையது மறைந்து புதியது பிறக்கின்றது என அறிக்கையிடுகின்றார்.

பெருந்தொற்றின் இரண்டாம் அலை மெதுவாக ஓய்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம் அன்புக்குரிய பலரை நாம் அன்றாடம் இழந்துகொண்டிருக்கும் வேளையில், இரண்டாம் அலையைப் பார்த்து, ஆண்டவராகிய கடவுள், 'உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!' என்று கட்டளையிடுகின்றார்.

நாம் இன்று கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், 'போதகரே, நாங்கள் சாகப்போகிறோமே!' என்பதல்ல, மாறாக, 'ஆண்டவரே, நாங்கள் வாழப்போகிறோமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்பதுதான்.

நமக்கும் கடவுளுக்கும், நமக்கும் ஒருவர் மற்றவருக்கும், நமக்கும் பிரபஞ்சத்திற்குமான ஒருங்கியக்கம் தடைபடும்போதெல்லாம் இறைவன் அங்கே இருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். சில நேரங்களில் அவர் யோபுவிடம் பேசியது போல இறங்கிவந்து பேசுகின்றார். சில நேரங்களில் தலையணை வைத்துத் தூங்குகின்றார்.

திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு ... புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார். கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன' (திபா 107) என்று பாடுவோம்.

அக்கரைக்கு நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அவருடைய உடனிருப்பு நம் இருத்தலையும் இயக்கத்தையும் உறுதி செய்கிறது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இறைவன் உறங்குகின்றாரா?

இந்தக் தொற்று நோய் காலத்தில் நிறைய மக்கள் கேட்ட கேள்வி:

 • இறைவன் எங்கே?
 • எங்கள் அழுகுரல் கேட்கவில்லையா?
 • இறைவன் இறந்துவிட்டாரா? (தத்துவ இயல் அறிஞர் நீட்சே)
 • உறங்கிக் கொண்டு இருக்கிறாரா?

தனிப்பட்ட வாழ்வில் துன்பங்கள் வருகின்ற பொழுது எல்லா மனிதர்களும் கேட்பது இறைவன் உறங்குகின்றாரா? (புனித அன்னை தெரசா) தீமைகள் தலைவிரித்தாடுகிற பொழுது மானிடம் கேட்பது இறைவன் எங்கே?


முதல் வாசகத்தில் யோபு இதே கேள்வியை முன்வைக்கிறார். பல நேரங்களில் எல்லா மனிதர்களுமே துன்பங்கள் வருகின்ற பொழுது இறை பிரசன்னத்தை உணராமலே இந்தக் கேள்விகளை முன் வைக்கின்றார்கள். இந்தக் கேள்விக்கான பதில் அமைதியாய் இரு இரையாதே! என்று இறைமகன் இயேசு கிறிஸ்து இறைவனுடைய இருப்பை உணர செய்கின்றார்.


முதல் வாசகத்தில் யோபுக்கு சொன்னது

 • உடைப்பு எடுத்தபோது அடைத்திட்டவர் யார்?
 • மேகத்தை மேலுடையாக்கியது யார்?
 • காரிருளை பொதியென மாற்றியவர் யார்?

துன்ப நேரத்தில் இவை அனைத்தையும் செய்தவர் இறைவன்.

இரண்டாம் வாசகத்தில் இறைவனோடு இணைக்கப்படுகின்ற போது புதிய மனிதர்கள் ஆகின்றோம். ஆற்றலோடும், ஆதரவோடும் வாழ்வை எதிர்கொள்ள தேவையான அருளையும் ஆற்றலையும் தருவது இறைவனின் பிரசன்னம். துன்பங்கள் வருகின்ற பொழுது இறைவனின் இருப்பை உணர்கின்றோமா? இல்லையென்றால் உலகப் போக்கில் இறைவன் உறங்குகிறார் என்று சொல்லுகின்றோமா?

அருட்தந்தை. ஆ.அமலன் இயக்குநர், வியான்னி அருட்பணி மையம், சிவகங்கை மறைமாவட்டம்
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"மனமே இரையாதே! அமைதியாயிரு!"

தாய் வீட்டிலே பரபரப்பாக வேலைசெய்து கொண்டிருந்தாள். குழந்தையோ தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது. அத்தாய் தீடீரென சமையலுக்குத் தேவையான மசாலாவை அரைக்க மிக்ஸியை இயக்கினார். அந்த சப்தத்தைக் கேட்ட குழந்தையோ அவ்விரைச்சலைக் கேட்டு அலறி அழுதது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் தாயானவள் வேகமாக ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கி தன் தோள்மீது சாய்த்து சாந்தப்படுத்திவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார். இப்பொழுதும் அதே மிக்ஸி இயக்கப்பட்டது. அதே இரைச்சல் சப்தம் கேட்டது. ஆயினும் அக்குழந்தை அழவில்லை. காரணம் குழந்தை தன் தன் தாயின் அரவணைப்பை உணர்ந்த நிலையில் அவ்வளவு இரைச்சலுக்கு மத்தியிலும் அமைதியாகத் தன் உறக்கத்தைத் தொடர்ந்தது.

இரைச்சல் மிகுந்த உலகம் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகம். போராட்டம் நிறைந்தது தான் நாம் வாழும் வாழ்க்கை. ஒரே சமயத்தில் பல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. எந்தப்பிரச்சினையை முதலில் தீர்ப்பது எதனை முதன்மைப்படுத்துவது என்ற சிக்கல் நடுக்கடலில் புயலில் சிக்கிய படகைப் போன்ற உணர்வை நம் வாழ்வில் ஏற்படுத்துகின்றன. இப்பிரச்சினைகளின் அழுத்தம் நம் மனஅமைதியைக் கெடுத்து பல நேரங்களில் நிம்மதியாக நம்மை உறங்கக் கூட விடுவதில்லை. நம்மில் பலருக்கு இது எதார்த்தமான அல்லது வாழ்க்கை வழக்கமாகவே மாறிவிட்டது.

இன்றைய நற்செய்தியில் கடலில் வீசிய பெருங்காற்றின் இரைச்சலால் அமைதியை இழந்து வாழ்வைத் தொலைத்துவிடுவோமோ எனப் பதறியச் சீடர்களை நாம் காண்கிறோம். அந்தச் சூழ்நிலையில் யாராயிருந்தாலும் பயமும் அச்சமும் ஆட்கொள்ளத்தான் செய்யும். அப்படி என்றால் சீடர்களின் பயமும் பதைபதைப்பும் நியமானதே. ஆனால் இயேசுவோ சீடர்களின் பயத்தை, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் நம்பிக்கையின்மையைச் சுட்டிக்காட்டி கடிந்து கொள்கிறார். அதற்கான காரணத்தை நாம் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

சீடர்கள் கடலில் தத்தளித்த போது இயேசுவும் அவர்களோடு இருந்தார். இயேசு தீய ஆவி பிடித்தவரை குணமாக்கியதையும், காய்ச்சலால் அவதியுற்ற பேதுருவின் மாமியாரை குணப்படுத்தியதையும் சீடர்கள் நேரில் கண்டார்கள். ஊரார் ஒதுக்கிவைத்த தொழுநோயாளரைக் குணமாக்கியதையும்,இன்னும் முடக்குவாதமுற்றவர், கை சூம்பியவர் என பலரை இயேசு குணமாக்கிய போது இயேசுவோடு சீடர்கள் உடனிருந்தார்கள். ஏன் அவருடைய வல்ல செயல்கள் கூட சீடர்கள் இயேசுவைப் பின்தொடர உந்துதலாக இருந்திருக்கும் அல்லவா? இப்படிப்பட்ட இயேசு தங்களோடு இருந்த போதிலும் அவர்கள் நம்பிக்கை இழந்து தவித்தனர். எனவே தான் இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார்.

சோதனைகளும், வேதனைகளும், இடறல்களும், சறுக்கல்களும், நம்முடைய சொந்த பலவீனங்களும் நம்வாழ்வில் பேரிரைச்சலைத் தரும்போது, சீடர்களைப் போலவே நாமும் கடந்து வந்த இறைநம்பிக்கை அனுபவங்களை மறந்து மனஅமைதியை இழந்து விடுகிறோம் என்பது தான் உண்மை. அச்சமயங்களில் இயேசுவின் பெயரால் நம் மனதை "இரையாதே, அமைதியாயிரு" என அடக்கி அமைதியுடனும் இயேசுவின் மேல் நம்பிக்கையுடனும் சிந்தித்து செயல்பட்டால் நமது வாழ்க்கைப் பயணம் இனிமையாகவே தொடரும். பிரச்சினைகள் என்னும் புயல் நம்மை அடக்காது. மாறாக நாம் அதை அடக்கி ஆள்வோம். தேவையற்ற மன இரைச்சல்களை இயேசுவின் பெயரால் அமைதிப்படுத்துவோமா?

இறைவேண்டல்
இயேசுவே! உம் உடனிருப்பை நம்பி எவ்வித இக்கட்டான சூழலையும் மனஅமைதியுடன் வென்றிட வரம் தாரும். ஆமென்.

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு