மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 11-ஆம் ஞாயிறு - இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசேக்கியேல் 4:22-24 | 2 கொரிந்தியர் 5:6-10 | மாற்கு 4:26-34

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
விதையோ சிறிது, மரமோ பெரிது.

பெருஞ்செல்வந்தன் ஒருவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. நிம்மதியும் இல்லை. தனக்கு எல்லாம் இருந்தும் ஏன் நிம்மதி இல்லை என்று யோசித்துக் கொண்டு தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று. அதனை ஒரு துறவியின் காலடியில் வைத்து, அவரிடம் இதயத்தில் மகிழ்ச்சி காண வழியைக் கேட்டான். துறவியோ அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினார். போலி துறவியிடம் ஏமாந்துவிட்டதாக நினைத்த அச் செல்வந்தன் அவரை துரத்திக்கொண்டே ஓடினான். திடீரென ஓட்டத்தை நிறுத்திய துறவி, என்ன! பயந்துவிட்டாயா...? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் என்று கூறி அவனிடம் கொடுக்க, அவனோ இழந்த செல்வத்தைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். அப்போது துறவி அவனிடம் இங்கு வருவதற்கு முன்னால் கூட இந்தச் செல்வம் உன்னிடம்தான் இருந்தது. இருந்தும் அப்போது உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே செல்வம்தான். ஆனால் இப்போது உனக்குள் மகிழ்ச்சி இருக்கிறது. எனவே மகிழ்ச்சி என்பது, நிம்மதி என்பது, வெளியே இல்லை. அது எங்கு கிடைக்கும் என்று தேட வேண்டியதும் இல்லை. அது உனது இதயத்துக்குள்ளே தான் இருக்கிறது. அதை நீயே கண்டுபிடித்தால் உனக்குள் நிம்மதி நிரந்தரமாக இருக்கும் என்றார் துறவி.

இறையரசு என்பது மனித இதயம் என்னும் நிலத்தில் நீர் பாய்ச்சி, அதில் அன்பு, அமைதி, நீதி போன்ற விதைகளைப் பயிரிட்டு, இறுதியில் மகிழ்வை அறுவடை செய்வதாகும். மனிதன் தேடும் அமைதியும், மகிழ்வும் அவன் இதயத்துக்குள்ளேதான் இருக்கிறது. மனித இதயத்தில் தான் விதைக்கப்படுகிறது (கலா. 5:22). எந்த மனிதன் நான், எனது, எனது குடும்பம், நமது சமூகம் என்பதை இதயத்தில் பதியம் போடுகிறானோ, அங்கே, தானாக முளைத்து வளர்ந்து, பலருக்கும் பயன்தரும் மரம் போல இறையரசு உதயமாகிறது. இறைவனையும், இறைச்சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கும்போதே, இறையரசு இதயத்தில் குடிகொள்ள தொடங்குகிறது என்றே கூறலாம்.

மகிழ்ச்சி. நம்பிக்கை என்ற விதைகளை விதைக்கிறார் இயேசு. கடுகு விதையின் தோற்றத்தை வைத்து, தீர்க்கமாக தீர்மானிக்க முடியாது. இறையரசு தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், அதன் வளர்ச்சி நம்மை வியக்கச் செய்கிறது. காரணம், அது கடவுளின் செயல்திட்டமாகும். இறையரசு என்பது இறைச் சிந்தனைகளை செயலாக்கம் பெற வைப்பதேயாகும். இறையரசின் பண்புகள் இதயத்தில், மனித உறவுகளில் நிலைத்திருக்க வேண்டுமானால், நாம் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும். நன்மைகளை, உண்மைகளை, நேர்மை யானவைகளை தன்னிலே கொண்டவர்கள் இறையரசுக்கு உரியவர்கள் ஆவார்கள். இதற்கு எதிராகச் செயல்படக்கூடியவர்கள் இறையரசை இதயத்தில் காணாது இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன் தரும் மரமாக வேண்டும் (முதல் வாசகம்). நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல். இயேசுவின் உவமையில் வரும் விவசாயி, விதைகளை விதைத்துவிட்டு, நிம்மதியாக இரவில் தூங்குகிறான். நாட்கள் நகர விதைகள் தானாக முளைத்து வளர்கிறது (மாற். 4:27). விதையானது தன்னகத்தே கொண்ட ஆற்றலால் தானாக வளர்ந்து பலன் தருகிறது. இயற்கையாக நிகழும் விதையின் வளர்ச்சியை இறையரசின் வளர்ச்சிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இறை வார்த்தைகளை இதயத்தில் விதைத்துவிட்டு, பலனுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று இயேசு உணர்த்துகிறார்.

விதையோ சிறிது, மரமோ பெரிது.

இயேசு தொடங்கிய இறையரசு கடுகுமணிபோல் சிறிதாக இருந்தும், அவரது போதனைகள், புதுமைகள், வழியாக நன்கு வளரத் தொடங்கியது. கடுகுமணி போல் இருந்த இறையரசு அவரின் உயிர்ப்புக்குப் பிறகு பெரிதும் வளரத் தொடங்கியது. கடுகு விதை சிறிதாக இருந்தாலும், அது விதைக்கப்பட்ட பின், வளர்ந்து, பெரிதாகி பலருக்கும் பயன் தருகிறது. வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் கொண்டது (மாற். 4:32). தொடக்க கால திருச்சபை கடுகுமணி போல் உதயமானாலும், காலப்போக்கில் பல நாட்டவருக்கும், இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் வகையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் இருள் முழுவதையும் உடனே ஒளியாக்க வேண்டும் என்று நினைக்காமல், சிறிய விளக்கில் முதலில் ஒளியேற்றுவோம். அது சுடர்விட்டுப் பிரகாசித்து இறுதியில் இருள் முழுவதையும் வெல்லும் என்பதை உணர்வோம்.

நமது இதயத்தில் வேற்றுமை, சுயநலம் போன்ற கிளைகளைக் களைந்துவிட்டு, அதை நீதி, அன்பு, மகிழ்ச்சி போன்ற இறையரசின் கூறுகனை உள் வாங்கி, பூத்துக் குலுங்கும் பூக்காடாக்குவோம். அவ்வாறு செயல்பட்டால், நமது இதயம் இறையரசுக்கு உரிய , பக்குவப்பட்ட, பண்பட்ட, பயனுள்ள, தோட்டமாக மலர்ந்து மணம் வீசும். அப்போது நாம் தேடும் இறையரசு நமது இதயத்துக்குள் வசப்படும்.

சிந்தனைக்கு
இறையரசு இங்குள்ளது, அங்குள்ளது என்று தேடிக் கொண்டிருக்காமல், நமது இதயத்துக்குள் உள்ளது என்பதை உணர வேண்டும். அதை உள்வாங்கி, எப்படி வெளிப்படுத்துவது என்பதை பற்றிச் சிந்திக்க வேண்டும். சூழ்நிலை அமைந்தால் குயில் பாடுகிறது, முள் மரத்தில் இருந்தாலும் குயில் குயில் தான். அது போலதான் இறையரசு சூழ்நிலைக்கு ஏற்ப வளர்கிறது. உன்னால் முடியும் தம்பி எல்லாம் உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்ற திரைப்படப் பாடலுக்கு ஏற்ப நமக்குள் இருக்கும் இறையரசைக் கண்டுபிடித்து அதில் நிறைவான மகிழ்ச்சி காண முயல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாம் தேடும் இறையரசு எங்கேயிருக்கின்றது?

இறைவனுடைய ஆட்சி என்பதுதான் இறையாட்சி! இறையாட்சியை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். இந்த மரம் தரும் கனிகள்தான் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை , கனிவு, தன்னடக்கம் (கலா 5:22-23) ஆகியவையாகும்.

கடவுள் நமது மீட்பை நாமே சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றவர் ! ஆகவே கடவுள் நமது உள்ளங்களில் மரங்களை நடாமல், விதைகளை விதைத்திருக்கின்றார்!

நமது உள்ளத்திற்குள்ளே திருமுழுக்கு நாளன்று கடவுள் அவரது தூய ஆவியாரை பொழிந்திருக்கின்றார் ! அவரது கனிகளை நாம் துய்க்க வேண்டுமானால், ஆவியார் நமக்குள் விதைத்திருக்கும் விதைகள் முதலில் முளைக்க வேண்டும்!

ஒரு விதை எப்போது முளைக்கின்றது? என்பது நமக்குத் தெரியும்! அமைதியில்தான் எப்போதும் விதைகள் முளைக்கின்றன என்பதை நாம் நன்கு அறிவோம்! அமைதி தேவை, மண் தேவை, தண்ணீர் தேவை, ஒளி தேவை; இவை அனைத்தும் ஒன்றுபட்டு செயல்படும்போது நமக்குள் விதைகள் முளைத்து, விருட்சங்கள் வளரும், கனிகள் பிறக்கும்!

ஓர் ஊரில் நீண்டகாலமாக மழை பெய்யவில்லை! நிலங்கள் வரண்டுவிட்டன! மரங்கள் பட்டுப்போகத் துவங்கின! விதைக்கப்பட்ட விதைகள் முளைக்கவில்லை! ஆகவே அந்த ஊர் மக்கள் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவரிடம் சென்று முறையிட்டார்கள்!

அந்த முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார்! “திறந்தவெளியில் ஒரு குடிசை கட்டித்தர வேண்டும்! பின் மூன்று நாள்கள் நான் தனியாயிருக்க உதவ வேண்டும்! உணவும் தண்ணீரும் தேவையில்லை! அப்போதுதான் என்னால் மழையை வரவழைக்க முடியும்" என்றார். மக்கள் அந்த முனிவர் சொன்னபடியே செய்தனர். மூன்றாவது நாள் மழை பெய்தது!

நன்றி சொல்ல அவர் குடிசை முன்னால் பெருங்கூட்டம் கூடியது! அவர்கள் அந்த முனிவரைப் பார்த்து, "மழையை எப்படி வரவழைத்தீர்கள்?” என்று கேட்டனர்!

அதற்கு முனிவர் சொன்னார், "மழையை வரவழைப்பது மிகவும் எளிது! மழை வேண்டும் என்ற எண்ணத்திற்கு மட்டும் மனத்தில் இடம் கொடுத்து, மற்ற எண்ணங்களையெல்லாம் மறந்துவிட வேண்டும்! நான் மூன்று நாள்களும் மழையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். என் எண்ணங்கள் வானத்தில் மிதந்து சென்ற வெள்ளை மேகங்களைப் பாதித்தன ! என் மனத்திலிருந்து, இதயத்திலிருந்து பிறந்த அதிர்வுகள் மேகங்களை அதிர வைத்தன; மழை பெய்தது " என்றார். நமது இதயத்திலிருந்து, மனத்திலிருந்து பிறக்கும் அதிர்வுகளால் வானத்தைக்கூட புரட்டிப்போட முடியும்!

நமக்குள்ளே தூய ஆவி என்னும் ஆற்றல்மிகு சக்தி உண்டு! அந்த சக்தியால் விதைகளை முளைக்க வைக்க முடியும்! தூய ஆவியால் எல்லாம் ஆகும் என்று நாம் எண்ணத்துவங்கினால் அந்த எண்ணம் மிக எளிதில் செயல்வடிவம் பெறும்! நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாக நாம் மாறிவிடுவோம்! நாம் அடைய விரும்பும் இறையரசை நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தால் நாம் தேடும் இறையரசு நமக்குள் மலரும்!

நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வரவேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும் (2 கொரி 5:10).

நாம் விதைக்கப்படாத நிலமல்ல; விதைக்கப்பட்ட நிலம்! கடவுளின் உதவியோடு இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் கூறுவது போல கனிதரும் மரங்களாக நம்மால் வாழமுடியும், பறவைகளின் சரணாலயங்களாக நம்மால் திகழமுடியும். விதைக்கு உயிர்தரும் கடவுளுக்கு நாம் ஆழ்ந்த அமைதியையும், நல்ல ஆன்மிக அதிர்வுகளையும் தந்தால் போதும்.

நாம் கடுகு விதைபோல இருக்கலாம் (நற்செய்தி). ஆனால் கடவுள் காட்டும் அமைதி வழியில், ஆன்மிக வழியில் நடந்தால் நாம் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு வளர்வோம்; நமது உறவுகள் என்னும் கிளைகள் சிறகுகளாக விரியும்!

மேலும் அறிவோம் :

வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து) அனையது உயர்வு (குறள் : 595).

பொருள் : நீரின் மிகுதிக்கு ஏற்றவாறு நீர்ப்பூவாகிய தாமரைத் தண்டின் நீளம் அமையும்; அதுபோன்று மக்கள் ஊக்கத்திற்குத் தக்கவாறு வாழ்வின் உயர்வு விளங்கும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பிரஞ்சு புரட்சி பற்றி ஒரு நூல் வெளியிடும் எண்ணத்துடன் 'ஸ்டுவர்ட் மில்' என்பவர் அதற்கான கைப் பிரதிகளைத் தயாரித்தார். அவற்றை தன் அறையில் ஒரு மூலையில் வைத்திருந்தார். அவருடைய வீட்டு வேலைக்காரி அப்பிரதிகளைப் பழைய காகிதம் என்று நினைத்து அடுப்பில் போட்டு எரித்து விட்டார், பல ஆண்டுகளின் உழைப்பு சாம்பலாகிவிட்டது. இருப்பினும் அவர் மனம் உடைந்து போகாமல், மீண்டும் கைப் பிரதிகளைத் தயாரித்து, அவற்றை நூலாக வெளியிட்டு உலகப் புகழ்மிக்க வரலாற்று ஆசிரியர் என்ற பெருமையை அடைந்தார்.

வாழ்க்கையில் நாம் தோல்வியைத் தழுவும்போது. துவண்டு விடாமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை இழந்து போன இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது, அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக அல்லற்பட்டனர், அம்மக்கள் மீண்டும் தங்கள் தாயகம் திரும்புவர் என்ற நம்பிக்கையை முதல் வாசகம் அளிக்கிறது. ஒரு மரத்தை வெட்டி விட்டாலும் , அதன் அடிமரம் துளிர்விட்டு மீண்டும் மரமாகும். அவ்வாறே இஸ்ரயேல் மக்கள் பல்வேறு நாடுகளில் சிதறுண்டு போனாலும் அவர்களில் 'எஞ்சி இருப்பவர்கள் கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றுவர் என்பது இறைவாக்கினர் எசாயாவின் இறையியல் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "ஆண்டவர் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவது" (திபா 92:13). நம்புவோர் செழித்தோங்குவர், அவர்கள் பட்டமரம் தளிர்ப்பதுபோல் புத்துயிர் பெறுவர். இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.

இன்றைய நற்செய்தியில், இறை ஆட்சியின் வளர்ச்சியைக் கிறிஸ்து விதை உவமை மூலம் விளக்குகிறார். இந்த குறிப்பிட்ட உவமை மாற்கு நற்செய்தியில் மட்டும் காணக்கிடக்கிறது. நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளைத்து, வளர்ந்து, பலன் தருவது அவ்விதையை விதைத்தவரைப் பொறுத்ததன்று. அது தன் இயல்பிலேயே வளர்ந்து பலன் தருவது உறுதி. அவ்வாறே இறையரசின் வளாச்சியை எவரும் தடைசெய்ய முடியாது.

சிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "கடவுளின் வார்த்தையைர் சிறைப்படுத்த முடியாது." (2 திமொ 2:9). திருப்பலியாளர்களை, நற்செய்தியாளர்களைச் சிறைப்படுத்த முடியும்: ஆனால் நற்செய்தியை எவரும் சிறையிட முடியாது. காற்று அது விரும்பும் திசையில் வீசுவதுபோல, ஆவியாரும் அவர் விரும்பும் திசையில் வீசுவார், ஆவியாசின் செயல்பாட்டை எவரும் தடைசெய்ய முடியாது (காண், யோவா 3:8), எனவே, எத்தகைய எதிர்ப்பையும் கண்டு அஞ்சாமல், நற்செய்தியை நாம் அறிவிக்கவேண்டும்.

"நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். கடவுளே விளையச் செய்தார்" (1 கொரி 3:8). எனவே நடுவதும், நீர் பாய்ச்சுவதும் நமது கடமை; விளையச் செய்வது கடவுளின் செயல், மருந்து கொடுப்பது மருத்துவர் பணி, குணப்படுத்துவது கடவுளின் செயல். அவ்வாறே நற்செய்தியை அறிவிப்பது நமது பணி: இறை ஆட்சியின் வளர்ச்சி கடவுளின் செயல்.

இன்றைய நற்செய்தியில் இறை ஆட்சியின் வளர்ச்சியை கடுகு விதை உவமை மூலம் கிறிஸ்து விளக்குகிறார். அது சிறிய விதையானாலும், பெரியதாக வளர்த்து வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளை விடுகிறது. கிறிஸ்து பன்னிரண்டு சீடர்களுடன் இறை ஆட்சியைத் தொடங்கினார். அவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. அவர் விண்ணகம் சென்றபின். தூய ஆவியின் வருகைக்காக மன்றாடிய சீடர்களின் எண்ணிக்கை 120. தூய ஆவியாரின் பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000. பின் அது 5030 ஆனது. இன்று எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும், எல்லாப் பண்பாட்டிலும் நற்செய்தி வேருன்றியுள்ளது. இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.

விண்ணகத்தில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இஸ்ரயேல் மக்களிடமிருந்து மட்டும் 1,44,000 பேர். இந்த எண்ணிக்கை எப்படி வந்தது? 12 123 1000 1,44,000, பன்னிரண்டு முழுமையைக் காட்டும்; அது இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களையும் குறிக்கும். அவர்களுடன் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் சார்ந்த எண்ண இயலாத பெருந்திரளான மக்கள் இருந்தனர் என்று திகுவெளிப்பாடு நூல் கூறுகிறது (திவெ 4:9), எனவே பலர் மீட்கப்படுவர். இது கடவுளின் செயல், நமக்கு வியப்பூட்டும் செயல்.

நற்செய்தி நம்பிக்கையில் நற்செய்தி, நாம் மற்றவர்களுக்கு, குறிப்பாக நமது பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும், அவர்களை மட்டம் தட்டி மனம் உடைந்துபோகச் செய்யக்கூடாது. பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆசிரியர் கேட்டார், அசோக் என்ற மாணவன் எழுந்து கூறியது: நான்தான் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில் நான் சிறுவனாக இருந்தபோது என்னை "வாடா, கண்ணுக்குட்டி" என்று அழைத்த என் அப்பா, இப்போது 'வாடா எருமைமாடு" என்று அழைக்கிறார், பிள்ளைகளை நாயே, பேயே. எருமைமாடு என்று கூப்பிடுவது பெரிய அநீதியாகும். இக்காலத்துப் பிள்ளைகள் நம்மைவிட பல துறைகளில் அறிவுமிக்கவர்களாய் உள்ளனர். அதைக்கண்டு நாம் பெருமிதம் அடைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

உணவு உட்கொள்வதில்லையா? திரும்பத் திரும்பக் குளிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து, திரும்பத் திரும்பப் பேசிப் பேசிக் காதலிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பாவம் செய்வது மனிதப் பலவீனம்; திரும்பத் திரும்ப மன்னிப்பது இறைவனின் இரக்கம்.

ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகும் ஒவ்வொரு முறையும் நாம் நாம் எவ்வளவு தீயவர்கள் என்பதை உணர்வதைவிட, கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை உணர வேண்டும். 'ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில் அவர் நல்லவர்'.

"தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவன் வருந்தி ஆகனும், தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடுகு விதையாகத் 11 தொடங்கி ...

அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் மார்ட்டின் லூத்தர் கிங். அவரது கல்லறையில் ஓர் அற்புதமான வடிவமைப்பைச் செய்துள்ளனர். ஒரு நீரூற்றினை அமைத்து ஒரு துளித் தண்ணீர் மட்டும் சொட்டுச் சொட்டாக விழுந்து ஒரு தடாகம் போல் தண்ணிர் தொட்டியை உருவாக்கியுள்ளனர். அதன் அருகில் ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு நீர்த்துளியும் மிகப் பெரிய கடலையே உருவாக்கும்” என்பதுதான் அது. அதாவது சிறிய சிறிய செயல்கள்தாம் பெரிய சமூக மாற்றத்தையே உருவாக்கும் என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளது.

“நாம் செய்யும் பணி கடலிலே ஒரு சிறிய துளி என்றாலும் அந்தச் சிறு துளி இல்லையென்றால் அந்தக் கடல் ஒரு துளி குறைவு பட்டுத்தானே இருக்கும். பல பல சிறு துளிகள் சேராவிட்டால் பெரிய கடல் ஏது?'' என்ற அன்னை தெரசாவின் பொன்னான கூற்று சிந்திக்கத்தக்கது.

மிகப் பெரிய செயல்பாடுகள் மிகச் சிறிய தொடக்கத்திலிருந்து அரும்பி மலர்கின்றன. இறையாட்சியும் அப்படியே!

அணு சிறியதுதான். அதற்குள்தான் மாபெரும் சக்தி மறைந்து கிடக்கிறது. அது பிளக்கப்படும்போது அடங்கிக் கிடந்த மாபெரும் சக்தி வெளிப்படுகிறது. அதன் வேகமோ சொல்லில் அடங்குவதில்லை. ஆல மர விதை சிறியதுதான். அது பிளந்து உயிர்ச்செடியாக முளைக்கத் தொடங்கிவிட்டால் அதன் வளர்ச்சிக்குத் தடையே இல்லை. மண்ணை என்ன, மலைப்பாறையைக் கூடப் பிளந்து விடுகிறது.

குழந்தை இயேசுவின் புனித தெரசா தன்னையே `சிறுமலர்' என்று அழைத்துக் கொண்டதற்கு அவளது குழந்தைப் பருவத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சியே காரணமாம். கார்மெல் சபைத்துறவியாகத் தன் ஆசையை வெளிப்படுத்தியபோது அவளுடைய தந்தை லில்லி போன்ற ஒரு சிறிய வெண்ணிற மலரை எடுத்து அவளிடம் கொடுத்து விளக்கினாராம். இதை எவ்வளவு கவனமாக உருக்கொடுத்து மலரச் செய்து கடவுள் இந்நேரம் வரை காத்து வந்திருக்கிறார் என்றாராம். அந்தச் சிறுமலரையும் இந்தக் குட்டித் தெரசாவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனது வாழ்க்கையின் கதையைக் கேட்பது போலவே உணர்ந்தாளாம். தான் இயேசுவின் சிறிய மலர் என்று பெருமிதப்பட்டுக் கொள்வாளாம். நாமெல்லாம் கடவுள் வித்திட்டு வளர்த்த மரங்களே என்கிறது முதல் வாசகம். "தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன் ..... அது கிளைத்துக் கனி தந்து சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப்பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும் " (ஏசேக . 17:22-23).

இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசுவின் இறையாட்சி மாபெரும் மரமாக வளர்ந்துள்ளது. உலகின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் இறையாட்சியின் உண்மைக் கரு ஊடுருவி இருக்கிறது. கடுகு விதையாகத் தொடங்கி பெரிய மரமாகி வானத்துப் பறவைகளுக்குப் புகலிடமாக இருக்கிறது.

"இறைவனின் அரசு உங்களுக்குள்ளே" என்றுரைத்து மனித உள்ளங்களிலேயே அதன் தடம் காண முயன்றார் இயேசு. மிகச் சிறியதாய்த் தொடங்கி மிகப் பெரியதாய் வளர்ந்து விரிந்து உலக இனங்கள் அனைத்திற்கும் அடைக்கலம் தரும் ஓர் அரசாக அதை அவர் சித்தரிக்கிறார்.

கிறிஸ்தவம் என்னும் இயேசு இயக்கம் இன்று வேர் விடாத இடங்களே இல்லை. அந்த அளவு பரவக் காரணம் நம் முன்னோர்களின் நம்பிக்கை வாழ்வும் அருப்பணமும்தான். தடைகள், இடர்கள் அனைத்தையும் தகர்த்து இறையாட்சியின் சாட்சிகளாக நின்றார்கள்.

மனித வாழ்வில் தன்னல வேர்கள் அறுந்து, தான்' எனும் ஆணவம் அழிந்து இறைவனின் விருப்பங்கள் நிறைவேறும் நிலைதானே இறையாட்சி! உழவன் விதையை நடுகிறாரே தவிர அதனை முளைக்கச் செய்வதில்லை. விதை எப்படி முளைக்கிறது, எப்படி வளர்கிறது என்பவை கூட அவரது அறிவைக் கடந்தவை.

வாழ்வு வளம் பெற இறையருளும் தேவை. மனித முயற்சியும் தேவை. அவற்றில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்வு சிறக்காது. செடி வளர நாம் மண்ணை வளப்படுத்தலாம், உழலாம், உரமிடலாம், தண்ணீ ர் பாய்ச்சலாம். இவையெல்லாம் தேவை. ஆனால் இவை மட்டும் போதுமா? விதையை முளைக்கவைக்கும் சக்தி ஒன்று இருக்க வேண்டும். ''நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை” (1 கொரி. 3:6-7). புதியதொரு இறைச் சமூகத்தைக் கட்டி எழுப்பும் நமது முயற்சிகளின் முடிவில் இறைவன் அருள் பொழிந்தால் தான் இறைச் சமூகம் செழித்து வளரும். நமது முயற்சிகளில் பெருமை கொள்ளாது இறையாற்றலில் நம்பிக்கை கொள்வோம்.

விதைகளுக்குள் உசும்பிக் கிடக்கும் உயிர் ஆற்றல் இயேசுவின் இலட்சியக் கனவாம் இறையாட்சிக்குச் சரியான, பொருத்தமான உவமை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. அதனை உணர்த்தும் வகையில் தான் இயேசு சொல்வார்: ''உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால், நீங்கள் இம்மலையைப் பார்த்து இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ' என்று கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றுமிராது'' (மத். 17:20). எரிக்கோ நகரின் மதில் சுவர் இடிந்ததும் தகர்ந்ததும் அத்தகைய நம்பிக்கையால்தானே! (யோசுவா 6:20). ஆடு மேய்த்த பணியில் இருந்த மோசேயால் இஸ்ரயேல் குலமே விடுதலை பெறவில்லையா?

விதைகள் அளவில் சிறியதாயினும் ஆற்றலில் அணுகுண்டு போன்றவைதான். இயேசுவின் இறையாட்சி வித்து நம் ஒவ்வொருவரிலும் புதைக்கப்பட்டுள்ளது. இறையாட்சிக்குரிய ஆற்றல் திருமுழுக்குப் பெற்ற நம் அனைவரிடத்திலும் உள்ளது. இந்த ஆற்றலை தாம் அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும். பலவகைகளில் இறையாட்சியின் உயிர்த்துடிப்பு நம்மில் இருப்பதில்லை. வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு இயேசுவின் இலட்சியக் கனவில் பங்கு கொள்ளத் தவறி விடுகிறோம். நமக்குள் இருக்கும் இறையாட்சி வித்துக்கள் முளைத் தெழுந்து செயல்பட அனுமதிப்போம்.

கிறிஸ்தவம் என்னும் இயேசு இயக்கம் எண்ணில்லா உறுப்பினர்களின் ஆதரவோடு தொடங்கப்பட்டதல்ல. இயேசு நிறுவிய இறையாட்சியின் தொடக்கம் அவரையும் அவருடைய பாமர பன்னிரண்டு சீடர்களையும் மட்டுமே உள்ளடக்கி உதயமான ஒன்று. கடந்த 2000 ஆண்டுகளாக இந்த இறையாட்சி ஒரு மாபெரும் மரமாக கிளை பரப்பி வளர்ந்தோங்கியுள்ளது. உலகின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் இறையாட்சியின் உண்மைக் கரு பெரும் பாதிப்புக்கே உள்ளாக்கி இருக்கிறது. இந்த வளர்ச்சியின் வேகம் எந்நிலையிலும் தடைப்படப் போவதில்லை. வளர்ந்து கொண்டேதான் இருக்கும். நம்முடைய சொந்த வாழ்விலும் இந்த இறையாட்சியின் தாக்கம் செயல்படக் கருவிகளாக இருப்போம். திரு அவையின் எளிமையைக் காப்போம்.

எல்லாவற்றிற்கும் ஒரு நிறைவு உண்டு. இறுதியில் அறுவடைவரும். கதிர்கள் கனிகள் சேகரிக்கப்படும். பதர்கள் களைகள் ஒதுக்கப்படும். அந்த நிறைவாழ்வுக்காக நாம் நம்பிக்கையோடு தயார்நிலையில் காத்திருப்போம்..

இயற்கையில் காணும் விந்தைகளில் ஒன்று ஒரு விதை முளைத்து வளர்வது. கண்ணுக்குப் புலப்படாத வளர்ச்சி. மனித அறிவையும் முயற்சியையும் கடந்த வியப்புக்குரிய மகத்தான வளர்ச்சி அவ்வாறே இறையரசும் இருக்கும்.

இறைவார்த்தையைத் தூவ வேண்டியது நற்செய்தி அறிவிப்பவர்களின் கடமை. வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் நற்பலனையும் தருவது கடவுளின் செயல்.

நற்செய்தியாளர்களைச் சிறைப்படுத்த முடியும். ''ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது” (2 திமோ. 2:9).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வோம்

நிகழ்வு

அன்பு என்றொரு பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் இருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்த இவன், மரியன்னையிடம் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தான். இப்படிப்பட்டவன் அரசுப் பொதுத்தேர்வை எழுதச் செல்வதற்கு முன்பாகத் தன் ஊரில் இருந்த மரியன்னையின் திருவுருத்திற்கு முன்பாக நான்கு மெழுகுதிரிகளை ஏற்றி வைத்துக் கண்களை மூடி உருக்கமாக வேண்டினான். இவன் மரியன்னையிடம் வேண்டிவிட்டுக் கண்களைத் திறந்தபொழுது, நான்கு திரிகளில் மூன்று மெழுகுதிரிகள் அணைந்துபோயிருந்தன.

இவனுக்கு அழுகையாய் வந்தது. ‘நான் ஏற்றி வைத்த நான்கு மெழுகுதிரிகளில் மூன்று அணைந்துபோய்விட்டனவே... நான் எழுதப்போகின்ற தேர்வு எப்படி இருக்குமோ?’ என்று இவன் அழுதுகொண்டே மெழுகுதிரிகளின் அருகில் சென்றான். அப்பொழுது அணையாமல் எரிந்துகொண்டிருந்த மெழுகுதிரி இவனிடம், “மூன்று மெழுகுதிரிகள் அணைந்துவிட்டன என்று கவலைப்பாடதே! நான் எரிந்துகொண்டிருக்கின்றேனே என்று மகிழ்ச்சி கொள்” என்றது. இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அன்பு, “ஆமாம். என்னிடம் இவ்வளவு நம்பிக்கையோடு பேசுகின்றாயே! நீ யார்?” என்றான். உடனே அணையாமல் எரிந்துகொண்டிருந்த அந்த மெழுகுதிரி, “என் பெயர் நம்பிக்கை! இந்த மூன்று மெழுகுதிரிகளின் பெயர்கள் முறையே அன்பு, அறிவு, அமைதி ஆகும்” என்றது. தொடர்ந்து அது அவனிடம், “என்னை எடுத்து, இந்த மூன்று மெழுகுதிரிகளையும் பற்றவை. அவையும் என்னைப் போன்று ஒளிமயமாய் எரியும்” என்றது. எனவே அவன், நம்பிக்கை என்ற மெழுகுதிரியை எடுத்து, மூன்று மெழுகுதிரிகளையும் பற்ற வைத்தான். இதனால் அவையும் ஒளிமயமாக எரிந்தன.

நம்மிடம் நம்பிக்கை இருந்தால் போதும், அது நமது வாழ்வையே ஒளிமயமாக்கிவிடும் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வோம்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த புனித பவுல்

ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாய் விளங்கியவர் புனித பவுல். அதற்குச் சான்றாய் இருப்பதுதான் இன்றைய இரண்டாம் வாசகம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கின்றோம்” என்கின்றார்.

புனித பவுல் இத்தகைய வார்த்தைகளை எத்தகைய பின்னணியில் கூறினார் என்ற பின்னணியைத் தெரிந்துகொண்டால், அவர் கூறிய வார்த்தைகளின் பொருள் இன்னும் நன்றாய் விளங்கும். விண்ணகத்தில் ஆண்டவரோடு இருப்பதைப் பற்றிப் பேசும் புனித பவுல், “இவ்வுடலில் குடியிருக்கும்வரை நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கின்றோம்” என்கின்றார். அப்படியானால், ஒருவர் ஆண்டவரோடு ஒன்றித்திருக்க வேண்டும் என்றால், அவர் தன் உடலிலிருந்து பிரிந்து செல்லவேண்டும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் இவ்வுலக வாழ்க்கையை அல்ல, மேலுலகு சார்ந்த வாழ்க்கையினை வாழவேண்டும் (கொலோ 3:1). எ[[எப்பொழுது நாம் மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழ்கின்றோமோ, அப்பொழுது ஆண்டவரை விட்டு அகன்றிருக்கும் நாம், அவரோடு ஒன்றிருக்கமுடியும். இதற்கு நம்பிக்கை என்பது அடிப்படையாக இருக்கின்றது.

புனித பவுல் இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்ந்தார். புனித பவுல் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து, நம்மையும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழச் சொல்வதன்மூலம், “நம்பிக்கை என்பது எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை” (எபி 11: 1) என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தருகின்றார்.

நம்பிக்கையோடு இருக்கையில் விதை விருட்சமாகும்

நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் அடிப்படையில் வாழவேண்டும் என்று புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் சொன்னதைக் குறித்து சிந்தித்தோம். இப்பொழுது நம்பிக்கையோடு இருந்தால், விதை விருச்சமாகும் அல்லது நமது வாழ்வு வசந்தமாகும் என்ற செய்தியைக் கூறும் நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்திப்போம்.

நற்செய்தியில் இயேசு, ‘முளைத்துத் தானாக வளரும் விதை உவமை’, ‘கடுகு விதை உவமை’ ஆகிய இரண்டு உவமைகளைக் குறித்துப் பேசுகின்றார். இந்த இரண்டு உவமைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்று தோன்றினாலும், அவை நெருங்கிய தொடர்புடையை என்று சொல்லலாம். முளைத்துத் தானாக வளரும் விதை உவமையில், மனிதன் பங்கேற்பு எதுவுமே இல்லை; ஆனால் அந்த விதை தானாக முளைத்து விளைச்சலைத் தருகின்றது. கடுகு விதை உவமையில், விதைப்பவர் மிகச் சிறிய விதையை மட்டுமே விதைக்கின்றார்; ஆனால், அது எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடுகின்றன. இயேசு இந்த இரண்டு உவமைகளின் வழியாகச் சொல்ல வருகின்ற செய்தி, “கடவுளே விளையச் செய்தார்” (1 கொரி 3: 6) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஆம், கடவுளே விதைகளை விளையச் செய்கின்றார் என்பதால், நாம் கடுகு விதைகளைப் போன்று வயதில் சிறியவர்களாக, வறியவர்களாக இருந்தாலும், புனித பவுலைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அதனடிப்படையில் வாழ்ந்தோமெனில் நம் வழியாகக் கடவுள் வல்ல செயல்களைச் செய்வார் என்பது உறுதி.

நம்பிக்கையோடு இருப்பவருக்குத் தக்க கைம்மாறு உண்டு

நாம் வயதில் சிறியவர்களாக, பொருளாதாரத்தில் எளியவர்களாக.... இருந்தாலும், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தோமெனில், கடவுள் நம் வழியாய் வல்ல செயல்களைச் செய்வார் என்று சிந்தித்தோம். நாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும்... அவ்வாறு நாம் வாழும்போது கடவுள் நமக்கு எத்தகைய கைம்மாறு தருவார் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஆண்டவர் உரைப்பதாக, “உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்பிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன்” என்று கூறுகின்றது. இங்குக் குறிப்பிடப்படும் கிளையை மெசியாவாம் இயேசுவோடு ஒப்பிடலாம் (எசா 4: 2); இளங்கொழுந்தை நம்மோடு ஒப்பிடலாம். ஆம், இளங்கொழுந்து போன்ற நம்மை ஆண்டவராகிய கடவுள் உயர்ந்ததொரு மலைமேல் நடுகின்றார் எனில், நாம் அதற்கேற்றாற்போல் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, மிகுந்த கனி தரவேண்டும்; வானத்துப் பறவைகளைப் போன்ற மக்களை, நமது சாட்சிய வாழ்வால் கடவுளின் மக்கள் ஈர்க்கவேண்டும். இவ்வாறு நாம் கடவுளின்மீது நம்பிக்கை வைத்துக் கனிகொடுக்கும்பொழுது, கடவுள் நமக்கு அதற்கேற்ப கைம்மாறு தருவார். அதை இன்றைய இரண்டாம் வாகத்தின் இறுதியில் புனித பவுல் மிக அழகாகச் சொல்கின்றார்.

ஆதலால், நாம் புனித பவுலைப் போன்று நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை:

‘ஆயுதங்கள் இல்லாமல் போர்க்களம் போகலாம்; அவநம்பிக்கையோடு அடுப்படியும் தாண்டாதே!’ என்பார் கவிஞர் பா. விஜய். எனவே, நாம் நம்முடைய வாழ்வை அவ நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எதுவும் செய்யாமலே!

'கொரோனா' என்பது ஒரு புனைகதை என்று பேசப்பட்டது. ஆனால், நம் அன்புக்குரியவர்களை அது அள்ளிக்கொண்டு போவதைப் பார்க்கும்போது, அதை ஓர் எதார்த்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானோம்.

'தடுப்பூசி' என்பது ஒரு புனைகதை என்று பேசப்பட்டது. ஆனால், இப்போது தடுப்பூசி தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் வேகமாக நாம் அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நாம் போட்ட தடுப்பூசி நாம் அறியாமலேயே தன் வேலையைச் செய்கின்றது. நிலத்தில் விதைக்கப்பட்ட விதை போல.

இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் ஒரு மரத்தின் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றன.

கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இந்த ஊசியின் மருந்தின் வழியாக நம் உடலில் செலுத்தப்படுவது சிம்பன்சி குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ். இந்த வைரஸூக்கும் கோவித்-19 வைரஸூக்கும் உள்ள புரதக் கோடு ஒன்று போல இருக்கும். உடலுக்குள் செலுத்தப்படும் இந்த வைரஸ் தன்னைத் தானே பெருக்கிக்கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாக இருக்கும் வெள்ளை அணுக்களுடன் இணைந்து கோவித்-19க்கு எதிரான புரதக் கோட்டை உருவாக்கும். கோவித்-19 வகை வைரஸ் உள்ளே நுழையும்போது உள்ளே இருக்கும் எதிர் உடல்கள் (anti-bodies) அதைத் தடுக்கின்றன.

இந்த அறிவியல் முழுமையாகப் புரியாவிட்டாலும், 'நமக்கு உள்ளே செலுத்தப்படுகின்ற வைரஸ் நம்மை அறியாமலேயே வளர்கிறது' என்பது மட்டும் தெளிவாக இருக்கட்டும்.

இயற்பியலில் 'என்ட்ராபி' (entropy) (thermodynamics) என்று ஒரு விதி உண்டு. அதன்படி ஒரு பொருளை நாம் அப்படியே அதன் இருப்பிலேயே (வெப்பநிலையிலேயே) விட்டால் அது தன் இயல்பை இழந்து, மறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, சுடுதண்ணீரைப் பிடித்து நாம் ஒரு வாளியில் வைக்கிறோம். அந்த நீரின் மேல் மேலும் வெப்பம் செலுத்தப்படாவிட்டால் அது தன் சூட்டை இழந்து விரைவில் குளிர்ந்துவிடும். என் அறையில் ஒரு புத்தகம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்தப் புத்தகம் வருடக்கணக்கில் அப்படியே அதே இடத்தில் இருந்தால் அது அப்படியே அழிந்துவிடும். ஆக, ஒன்றை நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டால் அது காலப்போக்கில் மறைந்துவிடும். இது பெரும்பாலும் பொருள்களுக்குப் பொருந்தும். இதே விதி சில நேரங்களில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்தப் பிரச்சினையை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் அது காலப்போக்கில் அப்படியே மறைந்துவிடும். இதைத்தான், 'காலம் காயங்களை ஆற்றும்' என்ற பழமொழியும் சொல்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 4:26-34) இரண்டு உருவகங்களைச் சொல்கின்றார். இரண்டும் இறையாட்சிக்கான உருவகங்கள். ஒன்று, தானாக முளைத்து வளரும் விதை. இரண்டு, கடுகு விதை. மாற்கு நற்செய்தியில் இந்தப் பகுதியில் மட்டுமே உவமைகளைக் கையாளுகின்றார் இயேசு.

இந்த இரண்டும் சொல்லக்கூடிய செய்தி என்னவோ ஒன்றுதான்:

(அ) விதைக்கு ஆற்றல் உண்டு.

(ஆ) விதையின் இயக்கத்தை யாரும் தடுக்கவோ, திருப்பவோ இயலாது.

(இ) விதையைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளரும்.

இம்மூன்றுமே மேற்காணும் 'என்ட்ரோபி' விதிக்கு எதிர்மாறாக இருக்கிறது.

விதைகளுக்கு உள்ளே ஒளித்துவைக்கப்படும் ஆற்றல் நமக்கு மிகுந்த ஆச்சர்யம் தருகிறது. நம் வீட்டில் பப்பாளி வாங்குகிறோம் என வைத்துக்கொள்வோம். பப்பாளியை அறுத்துப் பார்த்தால் உள்ளே ஒரு விதையும் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்டு, விதைகள் நீக்கப்படுகின்றன. விதைகள் இல்லையேல் அது மலட்டுத்தன்மை உடையதாக இருக்கிறது. பழங்கள், முட்டை என அனைத்தும் மலட்டுத்தன்மை உடையனவாக இருப்பதால், இவற்றை உண்ணும் நாமும் நம் ஆற்றலை இழந்துகொண்டே இருக்கின்றோம். இன்று நம்மைச் சுற்றிப் பார்க்கும் 'செயற்கை கருத்தரிப்பு மையங்களே' இவற்றுக்குச் சான்று. ஒரு காலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு மையத்திற்குச் செல்வதே குற்றம் என்று கருதப்பட்டது. ஆனால், இன்று அதுவே நாகரீகம் மற்றும் பெருமிதம் என்றாகிவிட்டது. நம் பெண்களின் குழந்தை ஆசையை வியாபாரமாக்கிவிடுகின்ற இந்த மருத்துவமனைகள். இன்றைய நற்செய்தியில் வரும் விதைகள் ஆற்றல் மிக்கவை. இறையாட்சியும் அப்படிப்பட்டதே. இறையாட்சி தன்னிலே மிகுந்த ஆற்றல் கொண்டது.

இரண்டாவதாக, விதை வளரத் தொடங்கிவிட்டால் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அதன் வளர்ச்சியை நான் நிறுத்தவோ, தடுக்கவோ இயலாது. வளர்ந்துவிட்ட விதையை மீண்டும் சுருக்கி விதையாக்க முடியாது. இறையாட்சியின் நிலையும் அப்படித்தான். வளரத் தொடங்கிவிட்டால் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.

மூன்றாவதாக, விதைகளை யாரும் கண்டுகொள்ளாவிட்டாலும் அவை வளர்கின்றன. காடுகளிலும் மலைகளிலும் உள்ள மரங்களே இவற்றுக்குச் சாட்சிகள். தோட்டக்காரர் இல்லாமலேயே, உரம் எதுவும் இடாமNலுயே தண்ணீர் எதுவும் பாய்ச்சாமலேயே மரங்கள் வளர்கின்றன. இறையாட்சியும் அப்படியே!

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 17:22-24), இஸ்ரயேல் மக்களை கேதுரு மரத்திற்கு ஒப்பிட்டு இறைவாக்குரைக்கின்றார் எசேக்கியேல். இஸ்ரயேல் என்னும் இனம் அக்கால மக்களின் நடுவில் ஒரு சிறிய நுனிக் கிளை போல இருக்கின்றது. வலுவற்றதாகவும், காற்றால் ஆட்டுவிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆனால், கடவுளின் கரம் பட்டவுடன், கடவுள் அதை எடுத்து நட்டவுடன் அது வளரத் தொடங்குகிறது. அனைத்து வகைப் பறவைகளும் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாக வளர்கின்றது.

இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 5:6-10), புனித பவுல், 'நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. மாறாக, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்' என எழுதுகின்றார். விதைக்குள் நடக்கும் வளர்ச்சி காணக்கூடியது அல்ல. மாறாக, காண இயலாத தளத்திலேயே அதன் வளர்ச்சியும் இயக்கமும் இருக்கிறது.

ஆக,

தடுப்பூசி, விதை, கடுகு விதை, கேதுரு மரம் ஒரு பக்கம்.

சுடுதண்ணீர், பிரச்சினைகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்.

முந்தையவற்றில் வளர்ச்சி உண்டு. பிந்தையதில் வளர்ச்சி இல்லை.

இறையாட்சி முந்தையது சார்ந்தது.

இன்றைய பதிலுரைப்பாடலின் (காண். திபா 92) ஆசிரியர், நம் ஒவ்வொருவரையும் மரம் என உருவகப்படுத்துகின்றார்: 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்.'

நம்மைச் சுற்றி நிற்கும் மரங்கள் நமக்கு இறையாட்சியின் வளர்ச்சியையும், நாம் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சியையும் நினைவூட்டுவனவாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"இயேசுவின் இதயத்தைப் போல் மாறத் தயாரா! "

இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையானது இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. ஜூன் மாதம் என்றாலே இயேசுவின் திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மாதம். எனவேதான் பெரும்பாலும் இயேசுவின் திரு இருதயம் தாங்கியுள்ள திருவுருவப் படத்தை புனிதப்படுத்தும் வழக்கம் நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் ஒரு பக்தி முயற்சியாக இருந்து வருகின்றது. ஏனெனில் இயேசுவின் திரு இருதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் இரக்கமும் அருளும் அன்பும் தான் நமக்கு நிறைவான வாழ்வை வழங்கும் என்பது ஆழமான நம்பிக்கை.

இதயம் என்பது உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாகும். இதயத்துடிப்பு நமக்கு இல்லையென்றால் நாம் உயிர் வாழ முடியாது. இதயத்துடிப்பு சீராக இருக்கும் பொழுதுதான் நாம் உயிர் வாழ முடியும். அதேபோல நம்முடைய ஆன்மீக வாழ்வு சீராக இருந்தால்தான், நம் வாழ்வு நிறைவுள்ள வாழ்வாக இருக்கும். நம்முடைய வாழ்வில் இயேசுவை நம் இதயத் துடிப்பாக ஏற்று, அதற்கேற்றவாறு நம் வாழ்வை அமைக்கும் பொழுது நம் வாழ்விலே அருளையும் ஆசீரையும் வெற்றியையும் பெற முடியும்.

இயேசுவின் இதயம் ஆழமான அன்பைக் கொண்ட இதயம். எல்லோருக்கும் பொதுவான இதயம். தீயோரையும் அரவணைத்து நல்வழிப்படுத்தும் இதயம். மன்னிப்பையும் இரக்கத்தையும் கனிவையும் பொழியும் இதயம். நோயால் துன்பப்படுபவர்களைக் கண்டு அவர்களுக்கு உதவும் நல்ல இதயம். ஏழைக்கைம்பெண்ணை போல கடவுளுக்கு தன்னிடம் இருப்பதைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க நினைப்பவர்களைப் பாராட்டும் நல்ல இதயம். தீட்டு என்ற பெயரால் இந்த சமூகத்தை ஒடுக்குப்பவர்களை எச்சரிக்கும் இதயம். ஒடுக்கப்படுவர்களை அரவணைக்கும் இதயம். ஏழை எளிய மக்கள் மீது அன்பும் கருணையும் கொண்ட இதயம். இந்த உலக மக்களின் மீட்புக்காக சிலுவைச் சாவை ஏற்ற தியாகம் நிறைந்த இதயம். தன்னைத் துன்புறுத்துவோரையும் மன்னிக்கும் அன்பு இதயம். இப்படிப்பட்ட இதயம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிதானது. ஆனால் அதை வாழ்ந்து காட்டியவர் தான் கடவுளின் மகனாய் இருந்தும் நம்முடைய மீட்பிற்காக மனிதவுருவெடுத்த இயேசு. இயேசுவின் இதயம் எல்லோரையும் ஆழமாக அன்பு செய்யும் இதயம். இப்படிப்பட்ட இதயமாக நாமும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் விலாவைப் படைவீரர் குத்திய பொழுது இரத்தமும் தண்ணீரும் சேர்ந்து வழிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை நேரில் கண்ட அந்த படை வீரர்கள் தான் சாட்சி. தொடக்கத்தில் ஆதாமின் விலா கடவுளால் திறக்கப்பட்டது. அதன் வழியாகக் கடவுள் பெண்ணை உருவாக்கினார். புதிய ஆதாமாகிய இயேசுவின் விலாவானது மனிதனால் திறக்கப்பட்டது. இதன் வழியாக புதிய வாழ்வியல் கிறிஸ்தவம் தொடங்கப்பட்டது. இயேசுவின் விலாவிலிருந்து வழிந்தோடிய தண்ணீரும் இரத்தமும் இரக்கத்தையும் அருளையும் ஒவ்வொரு மனிதருக்கும் பொழிகின்றது. அந்த இரக்கத்தையும் அருளையும் நாமும் அனுபவித்து பிறரும் அனுபவிக்க நாம் ஒரு கருவியாக மாற வேண்டும்.

கொரோனா தீநுண்மியினால் எத்தனையோ மக்கள் துன்பப்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு இயேசுவின் மனநிலையில் இதயத்தின் ஆழத்திலிருந்து இரக்கத்தை உதவி செய்வதன் வழியாக காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும். "இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம் " என்று மனித சேவையில் புனிதம் கண்ட புனித அன்னைதெரசா கூறியுள்ளார். எனவே வாழ்கின்ற வாழ்வில் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றவர்களாய் இரக்கத்தோடு இயேசுவின் இதயங்களாகச் செயல்படுவோம். ஏழை எளிய நோயுற்ற ஒடுக்கப்பட்ட கைவிடப்பட்ட எல்லா மக்களுக்கும் மனிதநேயப் பணிகளைச் செய்ய முயற்சி செய்வோம். இதன் வழியாக இன்று நாம் கொண்டாடுகின்ற இயேசுவின் திரு இருதய பெருவிழாவுக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுப்போம்.

இறைவேண்டல் :
இரக்கத்தின் இதய ஆண்டவரே! உம் திருமகனைப் போல நாங்களும் இரக்கம் உள்ளவர்களாய் வாழ நல்ல இதயத்தை தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு