புனித லூசியா

சந்தியாகு

St.Lucy இப்புனிதை இத்தாலி நாட்டிலுள்ள சிராக்யுஸ் எனும் நகரில் 283 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் கிரேக்க நாட்டினர். சிறு வயதிலேயே தந்தை இறந்து போனார்.

லூசியா சிறு வயதிலேயே தன் கன்னிமையை இரகசியமாகக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். இவரது தாய் ஒரு பொல்லாத நோயால் பீடிக்கப்பட்டு நெடுநாள் வேதனைப்பட்டு வந்தார். லூசியாவின் தூண்டுதலின் பேரில் இருவரும் 50 மைல் தொலைவில் உள்ள புனித ஆகத்தம்மாளின் கல்லறைக்குத் திருப்பயணம் சென்றனர். லூசியாவின் தாய் அவ்விடத்திலேயே அந்நேரமே பூரண சுகமடைந்தார்.

அப்பொழுது லூசியா தான் கன்னியாய் இருக்க கடவுளுக்கு வாக்களித்திருப்பதை தாயிடம் தெரிவித்தார். புதுமையாக சுகம் பெற்ற தாய் கடவுள்மீது மிகுந்த நன்றி உடையவராய், நன்றியைக் காட்ட தன் மகள் கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி நடக்க அனுமதித்தார். மேலும் தன் உடைமைகளை ஏழைகளுக்குத் தானமளிக்க, அத்தலத்திலேயே தாயிடம் உரிமை பெற்றார். சிராக்யுசுக்குத் திரும்பியதும் வாக்களித்ததுபோல் உடைமைகளைப் பகிர்ந்தளித்தார்.

முன்பு ஒரு வாலிபப் பிரபுவுக்கு லூசியாவை மணம் முடித்துக் கொடுப்பதாக தாய் கூறியிருந்தாள். இப்பொழுதோ லூசியாவின் எண்ணத்தை அறிந்த அந்த வாலிபன் கடுங்கோபம் கொண்டு "இவள் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவள்" என்று அதிகாரியிடம் குற்றம் சாட்டினான்.

"உன்னை அடித்து நொறுக்கும்போது உனக்குப் பேசுவதற்குக்கூட நா எழாது" என்றான். அதற்கு லூசியா "இறையடியாள் நான். சரியான வார்த்தைகளை சரியான நேரத்தில் சொல்லத் தூய ஆவியார் எனக்கு துணை நிற்பார். ஏனெனில் தூய வாழ்வு வாழ்வோர் எவரும் தூய ஆவியின் ஆலயங்கள்" என்றார்.

"வேசிகளின் மத்தியில் உன்னைத் தள்ளுவார்கள். அப்போது தூய ஆவி பறந்து விடுவார்" என்றான் அவன்.

"எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி உண்டு. புரிந்துகொள்" என்றார் புனித லூசியா.

ஆவேசமடைந்தான் அதிகாரி. ஆனால், இவரை அசைக்க முடியவில்லை. இவரைச் சுற்றிலும் நெருப்பு வார்த்தார்கள். நெருப்பு லூசியாவைத் தொடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்தவர் களாய் இவரது தொண்டையில் ஒரு வாளை பாய்ச்சிக் கொன்றார்கள்.

இவ்வாறு 304 ஆம் ஆண்டு 21வது வயதில் லூசியா மறைசாட்சியாக உயிர் நீத்தார்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு பொது