புனித தமாசுஸ்

சந்தியாகு

st.damasus

புனித தமாசுஸ் உரோமையில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஸ்பெயின் நாட்டினர். இவருடைய தந்தை தன் மனைவியின் மரணத்திற்குப் பின் அல்லது அவளது சம்மதத்துடன் குருத்துவ நிலையில் சேர்ந்தார். உரோமையிலிருந்த புனித லாரன்ஸ் ஆலயத்தில் திருப்பணி புரிந்து வந்தார். பின்பு மகனான தமாசுசும் குருப்பட்டம் பெற்று அதே கோவிலில் திருப்பணி புரிந்தார். லிபேரியுஸ் என்னும் திருத்தந்தை திருச்சபையை ஆண்டு நடத்த இவர் பேருதவி புரிந்து வந்தார். 366 ஆம் ஆண்டு திருத்தந்தை லிபேரியுஸ் இறந்தார். தமாசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புனித எரோணிமுசுவுக்கு தமாசுஸ்மீது மிகுந்த மதிப்பு உண்டு. இந்தப் பரிசுத்த திருத்தந்தையின் வாழ்வின் கடைசி மூன்று ஆண்டுகளும் எரோணிமுஸ் இவருடைய செயலாளராக இருந்த போது எரோணிமுஸ் வேதாகமத்தை மொழிபெயர்க்க தமாசுஸ் ஊக்குவித்தார். இவர் உரோமையில் அநேக சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். இவர் ஒரு கவிஞர். அழகாக எழுதுவார். இவர் வேத விசுவாசத்தின் தூய்மையை ஆர்வத்துடன் காத்து வந்தார். மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக்க விரும்பினார். இவர் கிறிஸ்துவைப்போல் தாழ்ச்சியுள்ளவர். ஏழைகள்மீது மிகுந்த இரக்கம் உள்ளவர் என்று பழமை வாய்ந்த எழுத்தாளர்கள் கூறுகிறார்கள்.

புனித தமாசுஸ் மறைசாட்சிகளின் கல்லறைகளைச் சிறந்த முறையில் புதுப்பித்தார். புனிதர்களின் திருப்பண்டங்களைப் பேணிக்காப்பதில் அக்கறை செலுத்தினார். பதினெட்டு ஆண்டுகளாக இவர் திருச்சபையை ஆண்டு, 384 ஆம் ஆண்டு இறந்தார். "பிழைபடாத திருச்சபையின், பிழைபடாத போதகர்" என்று புனித எரோணிமுஸ் இவரைப் புகழ்ந்திருக்கிறார். புனிதர்களைப் போற்றுவதில் நாம் புனித தமாசுஸ் அவர்களைப் பின்பற்றுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது