புனித திருத்தொண்டர் லாரன்ஸ்

திரு. சந்தியாகு

திருத்தொண்டர் லாரன்ஸ் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டசிடம் திருத்தொண்டராகப் பணிபுரிந்தார். திருச்சபையின் சொத்துக்களைப் பாதுகாத்து, வரும் பணத்திலிருந்து ஏழைகளுக்கு வழங்குவது இவரது பணிகளில் ஒன்றாகும்.

வேத கலகம் தோன்றியது. திருத்தந்தையைப் பிடித்துக் கொலைக்களத்திற்கு கொண்டு போனார்கள். லாரன்ஸ் அழுது கொண்டு பின் சென்றார். திருத்தந்தை திருச்சபையின் செல்வங்களை ஏழைகளுக்கு வழங்கும்படி அவருக்கு உத்தரவிட்டார். ஏராளமாக வழங்கும்படி லாரன்ஸ் திருப்பாத்திரங்களையும் விற்றுக்கொடுத்தார்.

புனித லாரன்ஸ் இம்மாதப் புனிதர் உரோமை அதிகாரி ஒருவன் லாரன்சை நோக்கி, "திருச்சபையின் திரவியங்களை எல்லாம் எனக்குக் காட்டு" என்றான். மூன்று நாள்களுக்குள் அவ்விதம் செய்வதாக லாரன்ஸ் வாக்களித்தார். ஆனால் குருடர், செவிடர், சப்பாணி ஆகிய ஏழைகளுக்குக் கோவில் உடைமைகளைப் பகிர்ந்து அளித்து விட்டு, அவர்களையே கூட்டமாக சேர்த்துக்கொண்டு அரசனை அணுகி, "இதோ, இவர்கள்தான் திருச்சபையின் திரவியங்கள்" என்றார். மன்னன் சினங்கொண்டான். புனிதரைப் பிடித்து இரும்புக் கட்டிலில் கிடத்தி அதன் அடியில் நெருப்பு மூட்டும்படி கட்டளையிட்டான். இவரோ சுடர்விட்டு எழுந்த நெருப்பின் கொடுமையைப் பொறுத்துக்கொண்டே மகிழ்வாய் இறைவனைப் புகழ்ந்தார். உரோமை மக்கள் மனந்திரும்பவும், கிறித்தவ விசுவாசம் உலகமெங்கும் பரவவும் கடைசி மூச்சு விடும்வரை செபித்து உயிர் துறந்தார். இவரது சாவைக்கண்ட பல அவிசுவாசிகளான அதிகாரிகள் கிறித்தவர்களானார்கள். 258 ஆம் ஆண்டில் இவர் இறந்தார்.

கி.பி. 400வது ஆண்டில் புருடென்சியஸ் என்ற வரலாற்று ஆசிரியர் லாரன்சின் மன்றாட்டினால் தான் உரோமை நகரம் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றது என்று குறிப்பிடுகிறார். இவர் பெயரால் எழுப்பப்பட்ட ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் பெருங்கூட்டத்தையும், அவர்களின் பலதரப்பட்ட வேண்டுதல்கள் புதுமையாகக் கேட்கப்பட்டதையும் அவர் விவரிக்கின்றார்.

உரோமையில் உள்ள மிகச் சிறந்த ஆலயங்களில் புனித லாரன்ஸ் பெயரால் எழுப்பப்பட்ட ஆலயமும் அடங்கும். தொடக்கத்தில் மன்னன் கான்ஸ்டான்டைன் எழுப்பிய சிற்றாலயம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பேராலயமாகக் கட்டப்பட்டு இன்றும் எழிலுடன் காட்சியளிக்கிறது. புனித லாரன்சின் வாழ்வு கீழ்க்கண்ட இறைவார்த்தைகளை நம் சிந்தனைக்குக் கொண்டு வரட்டும். "சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய், ஆதலால்உன்னைப் பெரியவற்றிற்கு அதிகாரியாக்குவேன்" (மத 25:21).

புனிதரின் திருநாள்: ஆகஸ்டு 10

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது