புனித அந்தோணி மரிய சக்கரியா (1502-1539)
சந்தியாகு
(St. Anthony Mary Zaccaria)இவர் இத்தாலி நாட்டில் கிரிமோனா என்ற ஊரில் 1502ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலிருந்தே தாய் இவரை இறை பக்தியில் வளர்த்தாள். ஏழை எளிய மக்களின்மீது அன்பு காட்டி பல இரக்கச் செயல்களில் இவரை ஈடுப்படுத்தினாள்.
நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோரைக் குணப்படுத்தும் நோக்குடன் சக்கரியா பதுவை பல்கலைக் கழகத்தில் மருத்துவக்கலை பயின்று பட்டம் பெற்றார். மக்களின் உடல்நிலையை மட்டுமில்லாது. உள்ளத்து நோய்களையும் குணமாக்க வேண்டும் என எண்ணி வேதக்கலையும் பயின்றார். கிறிஸ்தவக் கோட்பாடுகளை மக்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்டார்.
தனது 26 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். 1530ஆம் ஆண்டு ஒரு துறவற சபையை நிறுவினார். அச்சபையினருக்கு புனித பவுலே மேல்வரிச்சட்டம். மிலான் நகரில் புனித பர்னபாஸ் ஆலயத்தில் இவர் தமது அலுவலகத்தை அமைத்துக் கொண்டதால் அப்பெயரையே தமது சபைக்குக் கொடுத்தார். 'பர்னபைட்ஸ்' என்று அந்தக் குருக்கள் அழைக்கப்பட்டார்கள்.
திவ்விய நற்கருணை மீது இவருக்கு அதிக பக்தியுண்டு. திவ்விய நற்கருணையை சூழ்ந்து நின்று இயேசுவை ஆராதிக்கும் வானதூதர்களான அரூபிகளுடன் சேர்ந்து இவரும் ஆராதிப்பார். உள்ளத்தையும், உடலையும் தூய்மையாய் வைத்திருப்பதற்கான வலிமையை திவ்விய நற்கருணையிலிருந்து பெற்றார். திருச்சபையின் எதிரிகளையும் தனது ஆன்மாவின் எதிரிகளையும் தோற்கடிப்பதற்கான ஆற்றலை திவ்விய நன்மை இவருக்குக் கொடுத்து வந்தது.
புனித அந்தோணி மரிய சக்கரியா மிலானின் அப்போஸ்தலர் என்று அழைக்கப் பெறுகிறார். ஏனெனில் தமது மறையுரைகளால் அநேகரை மனந்திருப்பினார். மக்கள் அருட்சாதனங்களில் ஆர்வம் காட்டி திருச்சபைக்குத் திரும்புவதில் வெற்றி கண்டார்.
தனது கையில் திருச்சிலுவையை எடுத்துக் கொண்டு நகரங்களின் தெருக்களில் போதித்து வந்தார். ஆண்டவரின் பாடுகளையும், மீட்பையும் எடுத்துரைத்தார். மக்கள் பாவத்தை விட்டு விலகி மனந்திரும்ப வேண்டுமென போதித்தார்.
மக்கள் மனந்திரும்பியது எனது வாய்ச் சாதகத்தினால் அல்ல. இறைவனின் அருளும், பரிசுத்த ஆவியின் வல்லமையுமே காரணம் என்பார்.
இவரது தூண்டுதலின் பேரில் லூயிசா ரொரெல்லா என்ற ஒரு செல்வ மகள் ஏஞ்சலிக்கல்ஸ் என்ற மகளிர்க்கான துறவற சபையை நிறுவினார். இச்சபையின் சட்ட திட்டங்களும், ஒழுங்குமுறைகளும் மற்ற சில கன்னியர் சபைகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது.
இத்தகைய அரும்பெரும் பணிகளிடையே சக்கரியா தமது 37 ஆம் வயதில் விண்ணகம் சென்றார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது உடல் அழியா நிலையில் இருப்பது தெரிய வந்தது.
புனிதரின் திருநாள் : ஜூலை 5


