பொதுக்காலம் 6ஆம் வாரம் - ஞாயிறு-ஆண்டு 3

முதல் வாசகம்: எரே 17: 5-8

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.
1. நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி
2. அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி
3. ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

இரண்டாம் வாசகம்: 1கொரி15: 12,16-20.

சகோதரர் சகோதரிகளே,
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்? ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

நற்செய்தி லூக் 6: 17, 20-26

அக்காலத்தில்
இயேசு திருத்தூதர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந் திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”