அந்நாள்களில் சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ` உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, ``விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!'' என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, ``இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ``இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'' என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
அக்காலத்தில் இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ``இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'' என்றனர். இயேசு அவர்களிடம், ``நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்றார். அவர்கள், ``எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்'' என்றார்கள். ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ``இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்'' என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.