தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் " என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? " என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல: ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் " என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் " என்றனர்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல: வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
அக்காலத்தில் இயேசு அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும் "பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் " என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் " என்றார். பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.