1வது ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 63:16ஆ-17, 64:1, 3ஆ-8

ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து `எம் மீட்பர்' என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர். இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1:3-9

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

நற்செய்தி: மாற்கு 13:33-37

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.''