31ஆம் வாரம் ஞாயிறு

முதல் வாசகம்

நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 1: 14b-2: 1-2,8-10

``நானே மாவேந்தர்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்க வேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கெனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்'' என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார். ``நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச் செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கி விட்டீர்கள்'' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். ``ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.'' நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?


பதிலுரைப் பாடல்

திபா 131: 1. 2. 3

பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.
1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி
2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி
3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு. பல்லவி



இரண்டாம் வாசகம்

கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 7b-9,13

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் உங்களிடையே இருந்த பொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போல், கனிவுடன் நடந்து கொண்டோம். இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்து கொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம். கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 23: 9b,10b
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.''