ஆண்டின் 16 ஆம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம்: 12:13, 16-19

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின்மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்டவேண்டும். உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின்மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையம் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்: அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்: மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம் செயல்புரிய உமக்கு வலிமை உண்டு.நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவாகளாக இருக்கவேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்: உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்: ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:26-27

சகோதர சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்: ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது: தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.

நற்செய்தி:மத்தேயு 13:24-43

அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: " விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்."அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்" பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, " ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.அதற்கு அவர், " இது பகைவனுடைய வேலை " என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், " நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? "என்று கேட்டார்கள்.அவர், ' வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் " என்று கூறுவேன் " என்றார் . இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும். "இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை." "நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்: உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் " என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, "வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும் " என்றனர்.அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: "நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்: வயல், இவ்வுலகம்: நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்: களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்:அவற்றை விதைக்கும் பகைவன், அலகை: அறுவடை, உலகின்முடிவு: அறுவடை செய்வோர், வானதூதர்.எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்:பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். "