தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

முதலாம் வாசகம் 1 சாமு. 16:1,6-7,10-13

அந்நாட்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறங்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுவருவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்: ஏனெனில் அவர் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் "என்றார். அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் "என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே: ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்: ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் "என்றார். இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, "என் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா? "என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான் "என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம் ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன் "என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றத்துடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்! என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகேதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இரண்டாம் வாசகம் எபிசேயர் 5:8-14

சகோதர சகோதரிகளே! ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மைநிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. ஆதலால், "தூங்குகிறவனே, விழித்தெழு: இறந்தவனே, உயிர்பெற்றெழு: கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார் " என்று கூறப்பட்டுள்ளது.

நற்செய்தி யோவான் 9:1-11

அக்காலத்தில் இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்"காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா? " என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல: இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல: கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது: அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி " என்றார். இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும் " என்றார். சிலோவாம் என்பதற்கு "அனுப்பப்பட்டவர் " என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், "இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா? " என்று பேசிக்கொண்டனர். சிலர், "அவரே " என்றனர்: வேறு சிலர் "அவரல்ல: அவரைப்போல் இவரும் இருக்கிறார் " என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், "நான்தான் அவன் " என்றார். அவர்கள், "உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது? " என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, "சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும் " என்றார். நானும் போய்க் கழுவினேன்: பார்வை கிடைத்தது " என்றார்.