பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்: பிள்ளைகள்மீது அன்னையருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்: அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்: ஆண்டவருக்குப் பணிந்து நடப்பொர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு: அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி: நீ இளமை மிடுக்கில் இருபபதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும்பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.
நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார். தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக்கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார். எனவே உண்பது, குடிப்பது, மற்றும் திருவிழா, அமாவாசை, ஓய்வு நாள் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறித்து எவரும் உங்களைக் குறைகூற வேண்டியதில்லை. இவை எல்லாம் வர இருந்தவற்றின் வெறும் நிழலே: கிறிஸ்துவே உண்மை. போலித் தாழ்மையையும் வான தூதர்களை வழிபடுவதையும் விரும்புகின்ற மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்க இடம்கொடாதீர்கள். அவர்கள் தாங்கள் கண்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகப் போக்கிலான சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொள்கிறார்கள். அவர்கள் தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்து கொள்ளவில்லை. அவரால் தான் முழு உடலும் தசைநார்களாலும் மூட்டுகளாலும் இறுக்கிப் பிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்றுக் கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளருகிறது. கிறிஸ்துவோடு இறந்து நீங்கள் உலகின் பஞ்சபூதங்களிலிருந்து விடுவிக்கப்பட்டீர்கள் அல்லவா! இன்னும் ஏன் "தொடாதே ", "சுவைக்காதே ", "தீண்டாதே " எனச் சொல்லும் உலகப்போக்கிலான விதிமுறைக்குட்பட்டவர்கள் போல் வாழ்கிறீர்கள்?.
அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, " நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் " என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, " எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் " என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, " நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் " என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்: கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். "அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, " 'நசரேயன் " என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது."