"பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்: பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்." அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்: லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்: கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்: ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். " அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள்" பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்: குள்ளநரி தங்கும் வளைகள்எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்: அது "தூய வழி " என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்: அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது: அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை: மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்: அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்: அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்: துன்பமும் துயரமும் பறந்தோடும்.
சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது. சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.
அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? " என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாக, " நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்: தொழுநோயாளர் நலமடைகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர்: இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்: ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் " என்றார். அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: " நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். "இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் " என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.