முடிவு நூல் : இறுதி அதிகாரம்

எம். இரன்சோம்- சென்னை-94
அழகிய பூமி

மனிதனின் பேராசை என்னும் தீய ஆவி உலகெங்கும் பரவி உள்ளங்களை அரித்து, அனைத்தையும் அழித்திடும் வரையில், கடவுள் படைத்து நல்லதெனக் கண்ட இந்த பூமி,அழகான ஒன்றாக இருந்தது!

அன்பை மறந்து, அறவழி இழந்த மனிதனின் நெறிபிறழ்ந்த செயல்களால் விண்ணரசைப் போன்று திகழ்ந்த பூமி மெல்ல மெல்ல சிதைந்து அழியத் தொடங்கியது..!

மனிதன் கூறினான்:
"நமது சாயலாக ஒரு கடவுளைப் படைப்போம். நமக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற வேறொருக் கடவுள் வரட்டும். நாம் நினைப்பது போல நினைப்பவராக, நாம் வெறுப்பதை போல வெறுப்பவராக, நாம் அழிப்பதை போல அழிப்பவராக, நாம் படைக்கின்ற கடவுள் இருக்கட்டும்"
முடிவுக்கு முந்திய ஏழாம் நாளில் காலையும் மாலையும் இல்லாமற் போயிற்று!

மனிதன் கூறினான்:
"ஆடம்பரமே கௌரவமாகட்டும் அதனை அடைந்திட பண ஆசை பெருகட்டும் ஏற்றத் தாழ்வுகள் எங்கணும் பரவட்டும் அன்பு, இரக்கம், மனிதநேயம் இத்தகைய சொற்களும் செயல்களும் தேவையற்றவை என திரித்துக் கூறுவோம்! நல்லன பேசி நமது செயல்களை நசித்திட முயற்சிக்கும் நமது பொது எதிரியை நாம் கண்டுகொள்வதற்காக பிரிவினையும் பிளவுகளும் நாடெங்கும் உண்டாகட்டும்"
முடிவுக்கு முந்திய ஆறாம் நாளில் காலையும் மாலையும் இல்லாமற் போயிற்று!

போர்படை

மனிதன் கூறினான்:
" உலகமயமாக்கல் என்ற முகமூடி உடற்கேடுகளை உல்லாசமாக்கட்டும்! உல்லாசங்களைத் தகர்த்துவிடுகின்ற நற்போதனை, உண்மைநெறி என்னும் தொடர்தொல்லைகளிலிருந்து தப்பிச் செல்லுகின்ற வழிகளாக மயக்கம் தரும் போதை மருந்துகளும், உடல் இச்சையை உள்ளங்களில் ஊற்றி சிந்தனையை சீரழிக்கின்ற இணையதள வலைப்பதிவுகளும் இன்னபிற தீமைகளும் உண்டாகட்டும்"
முடிவுக்கு முந்திய ஐந்தாம் நாளில் காலையும் மாலையும் இல்லாமற் போயிற்று!

மனிதன் கூறினான்:
“வேகமாகவும், சுலபமாகவும் பேரழிவைத் தரவல்ல வெடிகுண்டுகளும் அணுஆயுதங்களும், ஏவுகணைகளும் இரகசியமாகத் தயாராகட்டும்! தீவிரவாத வன்முறைக் குழுக்களுக்கு உதவிட வஞ்சக உலைக்களங்களும் வதைக்கின்ற நச்சுவாயு அறைகளும் திறம்பட நன்கு இயங்கட்டும்!”
முடிவுக்கு முந்திய நான்காம் நாளில் காலையும் மாலையும் இல்லாமற் போயிற்று!

மனிதன் கூறினான்:
"வன்முறையும் வல்லுறவும் வளர்ச்சியின் மேற்படி என்போம் நம்மிடையே ஒற்றுமை இருந்தால் அழிவுக்கான முயற்சி வெற்றி பெறாது. எனவே, இனம், மதம், ஜாதி, நாடுகள் இவற்றின் அடிப்படையில் நம்மை பற்பலக் கூறுகளாகப் பிரித்து தனிமைப் படுத்திக்கொள்வோம்”
முடிவுக்கு முந்திய மூன்றாம் நாளில் காலையும் மாலையும் இல்லாமற் போயிற்று!

அணுகுண்டு

மனிதன் கூறினான்:
“இருளிலே நம்மை அடக்கி ஆள்வதற்காக வலுவான அரசு அமையட்டும்! எளிதாக நாம் ஒருவரையொருவர் கொன்றொழிப்பதைக் கற்றுணர்ந்திட நமது மூளையைக் கட்டுப்படுத்துகின்ற இயந்திரப் படைகள் உண்டாகட்டும்! இந்தச் செயல்களுக்கு வெளிச்சம் இருத்தல்கூடாது.. இருள்தான் வேண்டும்.. இருள்தான் பாதுகாப்பு.”
இவ்வாறு முடிவு செய்த மனிதன் கூறினான்:
"ஒளியை அகற்றுவோம்.. இருள் உண்டாகட்டும்" ஒளி மறைந்து போக எங்கும் இருள் சூழ்ந்தது…
மனிதன் இருளில் விருப்பம் கொண்டான்!
முடிவுக்கு முந்திய இரண்டாம் நாளில் காலையும் மாலையும் இல்லாமற் போயிற்று!

மக்களிடையே விதைக்கப்பட்ட வேற்றுமையுணர்வு வெந்தணலாய் வெளிப்பட பூமியின் நாடுகளில் ஆங்காங்கே கலவரங்களும், கிளர்ச்சிகளும் உண்டாயின! மறைத்து வைக்கப்பட்டிருந்த அபாயகரமான போராயுதங்கள் வெடித்துச் சிதறியதன் விளைவாக எல்லா இடங்களிலும் விவரிக்க இயலாத பொருள்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டன..பூமியின் முகப்பில் எங்கு நோக்கினும் பயங்கர கூச்சலும், மரணஓலமும் எழுந்தது.
அழகின் வடிவமாக கடவுள் படைத்த பூமியை முழுமையாக சுட்டெரித்தது நெருப்பு! எல்லாம் எரிந்து தணிந்தபோது, அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது!
உண்மையான ஒரே கடவுளை வணங்கிட எரிந்து கறுத்து உருக்குலைந்துபோன பூமிக்கோளம் மட்டுமே எஞ்சி நின்றது!
கலங்கிநின்ற கடவுளின் ஆவியும் பின்வாங்கி வெளியேறி நீர்த்திரளின்மேல் அசைந்தாடச் சென்றது!

மனிதன் செய்த அனைத்தையும் கண்டு கடவுள் வருத்தமுற்றார்!
பூமியின் இடிபாடுகளிடையே அமைதியாக நின்று கண்ணீர்விட்டார், கடவுள்!