அருள்வாக்கு இன்று

டிசம்பர் 15-வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 7:24-30

இன்றைய புனிதர்

புனித மரியா கிராசிபிசா டி ரோசா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ” லூக்கா 7:28

வார்த்தை வாழ்வாக:

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆனால் இறைஅரசில் பங்குபெறும் சிறியவர் யோவானை விடப் பெரியவர்". திருமுழுக்கு யோவானை உயர்த்திபேசும் ஆண்டவர் அதே வேளையில் கடவுளின் அரசில் செல்லத் தகுதிபெறுபவர் அவரினும் பெரியவர் என்று குறிப்பிடுகிறார். இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்தவர். கடவுள் அவருக்குக் கொடுத்த பணியைத் திறம்படச் செய்தவர். இறைவாக்கினருக்கு சிறந்த மாதிரியாய் செயல்பட்டவர். ஏரோது அரசனால் சிரசேதம் செய்யப்பட்டு உண்மைக்குச் சாட்சியாக வாழ்ந்து மரித்த இறைவாக்கினர். உலகில் கிறிஸ்துவின் மதிப்பிடுக அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் பெரும் இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் உள்ளாக்கப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் பற்றுடனும், உறுதியுடனும் வாழ, இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றி நடக்க ஆண்டவரிடம் அருளவேண்டி பயணத்தைத் தொடர்வோம். துன்பங்களின் மத்தியில் வெற்றிவாகை நமதே!

சுயஆய்வு

  1. இயேசுவின் மதிப்பீடுகளை பின்பற்றி வாழ என் முயற்சி யாது?
  2. யோவானின் பணிகளை புரிந்துள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா! கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் பற்றுடனும், உறுதியுடனும் வாழ, இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றி நடக்க வேண்டிய அருளைத்தாரும்.

அன்பின்மடல் முகப்பு