அருள்வாக்கு இன்று

ஜூன்7 -திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:1-12

இன்றைய புனிதர்

St. Justin Martyr

புனித ஜஸ்டின்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மகிழ்ந்து பேருவகைக் கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். மத்தேயு 5:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு மலைப்பொழிவின் வாயிலாக மானிடராகிய நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு நீதி நெறிகளை நமக்கு வாரி வழங்குகின்றார். ஏழைகளின் மீதும், துயருறுவோர் மீதும், கனிவுடையவராக இருப்பவர் மீதும், இரக்கமுடையவர் மீதும், தூய்மையான உள்ளத்தினர் மீதும், அமைதி ஏற்படுத்துவோர் மீதும், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் அனைத்து நிலைகளிலும் நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் மேற்கண்ட மனநிலையைக் கொண்டு அடுத்தவருக்காகத் துன்புறும்போதும் நாம் பேறு பெற்றவர்கள் என்கின்றார் ஆண்டவர். இவை யாவும் இறைமகன் மண்ணுலகில் மானிடருக்காக வந்து துயரங்களை அனுபவித்து, மரித்து, உயிர்த்து மாட்சிமை அடைந்தார். அவ்வாறே அவர் பொருட்டு நாம் இகழப்படும்போதும், அவமானப்படும்போதும் நாம் மகிழ்ந்து பேருவகைக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்.

சுய ஆய்வு

  1. என் துன்பத் துயரம் அடுத்தவரின் நலனுக்காக உள்ளதா?
  2. அடுத்தவருக்காய் நான் அவமதிக்கப்படுகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது மனநிலைக் கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு