advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 25, 2025 ஞாயிறு

இறைவார்த்தை:

" வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.". (யோவான் 1:14)

சிந்தனை

இறைமகன் இயேசு இவ்வுலகில் அரண்மனையில் பிறந்திருந்தால் அரசர்கள் மட்டுமே தரிசித்திருப்பர். மாடமாளிகையில் பிறந்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே பார்த்திருப்பர். மாட்டுத் தொழுவத்தில் மனிதனாகப் பிறந்தவரை முதலில் கள்ளம் கபடற்ற வெள்ளை உள்ளம் கொண்ட இடையர்களே கண்டு மகிழ்ந்தனர். இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நற்கருணை வழியாய் நம் இதயக் குடிலில் பிறக்கிறார். கள்ளம் கபடற்றவர்களாய் இருப்போமானால் நாமும் அவரைச் சந்திக்கலாம்.

மன்றாட்டு

வானகத் தந்தையே, எங்கள் மீட்பராம் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற இந்நாளில், அருளின் நிறைவும், உண்மையின் வடிவுமாகிய உம் ஒரே திருமகன் இயேசுவை எங்களிடையே ஒரு மனிதனாகப் பிறந்திட நீர் திருவுளம் கொண்டதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.. இயேசுவின் உடனிருப்பு எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் எந்நாளும் தங்குவதாக! வலுவற்ற எங்களை அவருடைய அருள் வலுப்படுத்துவதாக! நேர்மையற்ற நிலையை அவரது உண்மை நெறிபடுத்துவதாக! தேவையில் இருப்போருக்கு உறுதியோடும், நம்பிக்கையோடும் உதவி செய்ய, அவரது அன்பு எங்களைக் கூட்டிச் செல்வதாக! எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.