
“ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”என்றார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார்". (லூக்கா 1:37, 38)
மனிதர்களின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நிகழும்போது, இது எப்படி, ஏன், எங்கு, யார் என்ற பல கேள்விகள் எழும்பி நம்மைச் சிந்திக்க வைக்கும். அப்போது ஒரு எடுத்துக்காட்டான சம்பவத்தை நமக்கு அறிவிக்கும்போது, நமக்கு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள சாத்தியமாகும். இயலாத நிலையில் கருவுற்றிருந்த உறவினளான எலிசபெத்தை எடுத்துக்காட்டாக அன்னை மரியாவுக்கு அறிவிக்கப்படுகிறது. ஆண்டவரால் எல்லாம் ஆகும் என்ற மனத்துடன் 'இதோ ஆண்டவருடைய அடிமை, உமது சித்தப்படியே ஆகட்டும்' என்கிறார். ஒன்றுமில்லாமையிலிருந்து அனைத்தையும் படைத்த அவரது வல்லமைமிக்க கரங்களில் நம்மை அர்ப்பணிப்போம்.
ஆண்டவரே, அளவற்ற உமது அன்பிற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் எங்களிடம் எதிர்பார்க்கின்றவற்றைக் கண்ட் நாங்களும் பல நேரங்களில் அச்சமும், கவலையும் கொள்கிறோம். உம்மால் இயலாதது ஒன்றுமில்லை என்பதையும், நீரே எங்களை வழிநடத்துகிறீர் என்பதையும் உணர்ந்து, உம்மிடம் சரணடைய எங்கள் நம்பிக்கையை உறுதிபடுத்திட வேண்டுகிறோம். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.