
“இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்றார். அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்". (லூக்கா 1:18, 19)
ஆண்டவரின் திட்டத்தை அறிபவன் யார்? அவருக்கு ஆலோசனை கூறத் தகுதியுள்ளவன் யார்? வயதான முதியோருக்கு குழந்தை பிறப்பது சாத்தியமில்லை என்பது இயற்கையான ஒன்று. ஆனால் இங்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் வானதூதர் வழியாகச் செக்கரியாவுக்கு செய்தி அறிவிக்கப்படுகிறது. அவர்தன் இயலாமையை உணர்ந்து கேள்வி கேட்கிறார். நியாயமானதாக இருந்தாலும் அவரின் வாய் அடைக்கப்படுகிறது. இதுதான் இறைவனின் திருவிளையாடல். எதை எப்படி யார் வழியாய் கொடுக்க வேண்டும் என்று அவர் முன்குறித்துள்ளபடியே செயல்படுவார். நாம் அவரது திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது நமது கடமையாகும்.
ஆண்டவரே, உம் மக்களுக்கு தேவையானவற்றை உரிய காலத்தில் நிறைவேற்றி நன்மை செய்கின்றீர். உமது வல்லமையின் துணையோடு எந்நாளும் எங்களை வழிநடத்திக் காத்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்