
அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். (எசாயா 35:5-6)
ஒரு மனிதன் இறைவன் அருளால் கட்டளைகளை அனுசரித்து நற்பண்புகளுடன் நல்லவராக வாழலாம். ஆனால் ஒரு பலவீனமான மனிதன் தன் வாழ்வில் செய்த தவறுகளை, குற்றங்களைப் பலவீனங்களை உணர்ந்து பாவ அறிக்கை செய்து மனம் மாறி நல்லவனாக வாழ்ந்தால், பலருக்கு எடுத்துக்காட்டாகவும் சாட்சியமாகவும் இருக்கும். ஆண்டவரும் மகிழ்ச்சி அடைவார். எனவே, தவறிவிட்டேனேயென மனம் உடைந்து போகாமல் திருந்தி வாழ முயற்சிப்போம்.
ஆண்டவரே, எல்லாம் வல்ல இறைவா, உமது இரக்கத்தையும், அன்பையும் எங்கள் உள்லத்தில் நிறைவாகப் பொழிந்தருளும். அதன் பயனாக எங்கள் வாழ்வில் அயலாரை அன்பு செய்யவும், மன்னித்து வாழவும் எங்களுக்கு வரம் தாரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்