advent

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
டிசம்பர் 7, 2025 ஞாயிறு

இறைவார்த்தை:

“ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்”. (எசாயா 30:26)

சிந்தனை

திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்கு பெற வந்த பரிசேயர் சதுசேயர்களைச் சாடுகிறார். நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கு ஏற்றச் செயல்களால் காட்டுங்கள் என்கிறார். நாமும் அத்தனை அருட்சாதனங்களைப் பெற்றுக் கொள்கிறோம். நம் வாழ்வில் மாற்றங்கள் உண்டா? மாற வேண்டுமானால் தூய ஆவியார் நெருப்பாக வந்து நம்மில் இருக்கும் எதிர்மறையான உணர்வுகளைச் சுட்டெரிக்க வேண்டும். அப்போது மனம் மாறியவர்களுக்கு ஏற்றச் செயல்கள் நம்மில் வெளிப்படும். தூய ஆவியாரிடம் செபிப்போம்.

மன்றாட்டு

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது திருமகன் இயேசுவுக்காக உம்மைத் துதிக்கிறோம். எம்மோடு தங்கியிருக்கின்ற இறைவனாகிய இம்மானுவேல் அவரே. மக்கள் அனைவரின் நம்பிக்கையும், ஞானத்தோடு வழிநடத்துபவரும், உலகின் மீட்பரும் அவரே. ஆண்டவரே, திருவருகைக் காலத்தின் இளந்தளிர் வளையத்தில் இரண்டு ஊதா நிற மெழுகுவர்த்திகளை ஒளியேற்றுகின்ற இந்த நாளில், உமது இறைஆசீர் எம்மில் இறங்குவதாக! இந்த இளந்தளிர் வளையமும், அதன் ஒளியும் கிறிஸ்து வாக்களித்த மீட்பின் அடையாளமாக விளங்குவதாக! எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்