இறை ஊழியர் அன்னை ஞானம்மா!

அருட்சகோதரி ஜெனி SAT

gnanammalவிஞ்ஞானமும், அறிவியல் தொழில்நுட்பங்களும் வளர்ந்து, ஆண்களுக்கு இணையாக பெண்கள் எல்லா நிலைகளிலும் உயர்ந்து வரும் இந்த நூற்றாண்டில் கூட பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன. சற்று பின்னோக்கி 19-ஆம் நூற்றாண்டைப் பார்ப்போமானால் பெண்களின் நிலை கேள்விக்குள்ளான தருணம் அது. அந்த நூற்றாண்டில் பெண்களுக்கான கல்வியைத் தொடங்கி, பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய ஒரு விதவைப் பெண்ணே அன்னை ஞானம்மா.

ஆந்திரமாநிலத்தில் உள்ள பீரங்கிபுரம் என்ற கிராமத்தில் திரு.காலி ராயண்ணா,திருமதி மரியம்மா என்ற அருமைப் பெற்றோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தவர்தான் அன்னை ஞானம்மா. தந்தை பங்கில் வேதியராகப் பணியாற்றினார். அந்தக் காலங்களில் உள்நாட்டுக்குருக்கள் அதிகம் இல்லாததால் பங்கின் நற்செய்திப் பணியையும், மக்களின் ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் முழுநேரப் பணியாளராக இருந்தவர் இவர். இதனால் குடும்பத்திலுள்ள அனைவரும் கடவுள்மீது பக்தியும், கோயில் காரியங்களில் அக்கறையும் கொண்டு செயல்பட்டனர்.

ஞானம்மா சிறு வயது முதலே தினமும் திருப்பலியில் பங்கெடுப்பது வழிபாடுகளில் கலந்து கொள்வது போன்ற ஞானக்கரியங்களில் தன்னை வளர்த்துக் கொண்டார். தான் மட்டும் ஆன்மிகக் காரியங்களில் வளர்ந்தால் போதாது, தன் சகோதரனும் தன்னைப் போன்று இறைவனுக்கு உகந்தபிள்ளையாக வாழவேண்டுமென்று எண்ணி தன்னுடைய செபத்தால் மனம் மாற்றினார். ஞானம்மாவுக்கு 15 வயது ஆனபோது தந்தை ராயண்ணா அவருக்கு எற்ற ஒரு துணையைத் தேடினார். ஞானம்மாவைப் போன்று இறைபக்தியும், விசுவாசமும் நிறைந்த இன்னையா என்பவரோடு திருமணம் நடந்தது. இனிய இல்லறத்தின் சான்றாக ஐந்து ஆண்மகவுகளைப் பெற்றார். காலரா என்னும் கொடிய நோய் தன் கணவரைச் சூறையாட 37வதுவயதில் ஞானம்மா கைம்பெண்ணானார். தனது பிள்ளைகளை இறைநம்பிக்கையிலும், விசுவாசத்திலும் வளர்த்து குருத்துவத்தில் ஈடுபடுத்தினார். ஆந்திராவிலிருந்து தனது பிள்ளைகளைக் காண சென்னைக்கே வந்து குடியேறினார். பின்பு உறவுகளைத் தேடி எறையூருக்கும், இறைவன் தரிசனத்தோடு வாழ அங்கிருந்து கீழச்சேரிக்கும் சென்று குடியேறினார்.

kezhachriஇறைவனின் கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞானம்மா தனது பணியைத் தெரிவு செய்ததும் இந்தக் கீழச்சேரியில் தான். மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக விளங்கியது கீழச்சேரி இங்கு பெண்கள் எல்லாச் சூழலிலும் ஓரங்கட்டப்பட்டனர். குறிப்பாகக் கல்வியறிவின்மை, ஆண் பிள்ளைகள் படிக்கச் சென்றால் அதற்கொத்த பெண்பிள்ளைகள் காட்டுவேலைகளுக்குச் சென்று வரக்கூடியநிலை. இதனைக் கண்ட ஞானம்மா கலங்கினார். கலங்கியதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்காக கல்விக் கூடம் ஒன்று தொடங்கவேண்டும், அவர்களும் கல்வியறிவு பெற வேண்டுமென்று எண்ணி தொடர்ந்து செபித்தார்.அதோடு தனது சொந்தஊருக்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை விற்றும், பல பங்குகளுக்குச் சென்று நிதிதிரட்டியும் 1863 ஆம் ஆண்டு பெண்களுக்கென்று புனித கிளாரம்மா பள்ளிக்கூடத்தை நிறுவினார். அதோடு விடுதி ஒன்றையும் தொடங்கி தங்கி பயில வகை செய்தார். ஞானம்மாவோடு இணைந்துஅருட்தந்தை இரத்தின நாதர்,அவரது தாய்மணியம்மா மற்றும் சாந்தம்மா, மரியம்மா, பாப்புலம்மா போன்ற பெண்களும் இதற்கு உதவி செய்து பிள்ளைகளை கல்வியோடு ஞானக்காரியங்களிலும் வளர்த்தெடுத்தனர். இவற்றை உருவாக்குவதில் மிகுந்த துன்பங்களோடு, பல ஏளனப் பேச்சுக்களையும் அனுபவித்தார். இருப்பினும் இறைவன்மீது கொண்ட நம்பிக்கையால் இன்னும் சிறப்பாக வழிநடத்தினார். ஞானம்மாவின் பணிகளைக் கண்டு ஆகத்தம்மா, அருளம்மா என்ற பெண்களும் அவரைப்பின்தொடர்ந்தனர்.

தன் வாழ்நாள்களுக்குப் பின் தன் பணிகள் தொடரவேண்டும் என்று விரும்பிய ஞானம்மா, தன் ஆன்மகுருவிடம் தெரிவிக்க, அவர் புதிய துறவற சபை ஒன்றைத் தொடங்க ஆலோசனை வழங்கினார். அருளம்மா, ஆகத்தம்மா இருவரையும் துறவறப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். இவர்கள் துறவறப் பயிற்சிகள் பெற்று 1874, அக்டோபர் 4ஆம் தேதி தன் முதல்வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்கு அர்ப்பணித்தார்கள். இதுவே சென்னை புனித அன்னாள் சபையின் உருவாக்கமாகவும், அடித்தளமுமாகவும் அமைந்தது.

gnanammal"இளம்பெண்களுக்கு மறைக்கல்வி, பிறகல்வியுடன் அடைக்கலமும், பாதுகாப்பும் கொடுங்கள். உங்கள் ஆன்ம வழிகாட்டிகளுக்குச் செவிகொடுங்கள். பிறரை நம்பியிராமல் கடின உழைப்பைக் கொண்டு செயல்படுங்கள்" என்ற அறிவுரையையும் வழங்கி 1874, டிசம்பர் 21ஆம் நாள் இறைவனடிசேர்ந்தார். அன்று அன்னை ஞானம்மா போன்ற சிறு விதையானது இன்று பலகிளைகளாகப் பரவி, உலகளவில் பல்வேறு இடங்களில் கல்விப்பணி நலவாழ்வுப் பணி, நற்செய்திப்பணி, சமூகப்பணி என பலபணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு பெண் குலத்திற்கே பெருமை சேர்த்த அன்னை ஞானம்மாவுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அவர் எதிர்காலப் புனிதை என்பதையும் தெரிவுபடுத்த மார்ச் 21,2014 அன்று திருத்தந்தையால் இறைஊழியர் (ServentofGod) நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அன்னை ஞானம்மா சென்னை புனித அன்னாள் சபைக்கு மட்டும் ஒருவரமல்ல, மாறாக நம் திருச்சபைக்கும், பெண்சமூகத்திற்குமே வரம் என்றால் அதில் வியப்பில்லை.

நன்றி - நம்வாழ்வு 09-10-2016