என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

மன்னிப்பு

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால்
உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.
மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில்
உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

மத்தேயு 6:14-15

" ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர்
எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்
நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?
ஏழு முறை மட்டுமா?
"ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை
என நான் உனக்குச் சொல்கிறேன்.

மத்தேயு 18:21-22

மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்.

1யோவான் 1:9

உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும். ஆண்டவர் மோசேயிடம் கூறியது; உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்.

எண்ணிக்கை 14:19-20

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

மத்தேயு 5:23-24

ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார்.

யோவான் 8:7

அவர்கள் ஸ்தேவான் மீது கல்லெறிந்தபோது அவர், "ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக் கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்.

திருத்தூதர்பணி 7:59-60

மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது (இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.

லூக்கா 23:33-34

எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, "நான் மனம் மாறிவிட்டேன்" என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.

லூக்கா 17:3-4

நீயோ, "உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்."

உரோமர் 12:20

anbinmadal.org