மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தலக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
யோசுவா 5:9அ, 10-12 |2 கொரிந்தியர் 5:17-21 |லூக்கா 15:1-3, 11-32

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஜெர்மன் நாட்டு ஓவியர் ஒருவர் இயேசுவைப்போல சிறுவன் ஒரு படத்தை வரைவதற்கு மாதிரிக்காக ஒரு சிறுவனைப் பல இடங்களில் தேடினார். இறுதியில் ஒரு சிறுவனைக் கண்டுபிடித்து அவனை வரைந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசைப் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு மனிதனை ஓவியமாக வரைய வேண்டும் என்று தேடி ஒருவனைக் கண்டுபிடித்தார். வரைந்து முடிக்கும்போது அவனைப் பார்த்து சில ஆண்டுகளுக்கு முன் இயேசுவைப் போன்று வரைந்த சிறுவனின் முகச்சாயல் உன்னிடம் சிறிது தெரிகிறது என்றார் அந்த ஓவியர். அதற்கு அந்த மனிதன், நான் சிறுவனாக இருக்கும்போது, அன்பும், இரக்கமும் உள்ள தந்தையும், சகோதர பாசம் கொண்ட சகோதரனும் எனக்கு இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் வளர்ந்தபின் மனம் போன போக்கில் வாழ்ந்து இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்றான் அந்த மனிதன்.

பெற்றோர்களின் அன்புக்கு நன்றியுடன் நடந்து கொள்ளாத பிள்ளைகளே இன்று அதிகம். ஊதாரி மகன் அன்புள்ள தந்தையிடமிருந்து பிரிந்து சென்றான். இவனது அன்பு உறவுகளிலிருந்து பிரிந்து செல்கிறான். இப்படி தந்தையின் இல்லத்தை விட்டுப் பிரிந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை விடுப்பதே இன்றைய வழிபாட்டின் மையக் கருத்தாகும்.

பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு குற்றம் புரிந்தாலும் கடவுள் தனது மாறாத அன்பினால் மன்னித்து தேனும், பாலும் பொழியும் புதிய நாட்டையே பரிசாக வழங்கினார்.

ஊதாரி மகன் தந்தையிடமிருந்து பிரிந்து சென்று பன்றியோடு சேர்ந்து பன்றியாக, இழிவான நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த நிலையில் சிந்திக்கிறான். அறிவுத் தெளிவு பெற்று தந்தையின் அன்பைத் திரும்பப் பெற விரும்புகிறான். இதற்கு மூன்று செயல்பாடுகள் உதவியாக அமைந்தன:

1) சுய ஆய்வு செய்தல் 2) எழுதல் 3) ஒப்புரவாகுதல்

புதிய வாழ்வு பெற முடியும் என்ற நம்பிக்கையோடு, பாவத்தையும், தீய எண்ணங்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தந்தையோடு ஒப்புரவாக திரும்புகிறான். தந்தையும் வாஞ்சையோடு வரவேற்கிறார். மூத்த மகனைத் தவிர குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.

மூத்த மகன் தான் நல்லவன் என்பதை பல சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகிறான். உம் கட்டளையை மீறியது இல்லை. அடிமை போன்று உமக்கு ஊழியம் செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டிகூட கொடுத்ததில்லையே என்று குற்றம் சாட்டுகிறான். தந்தையின் இரக்கத்தையும், பெருந்தன்மையையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியடைய முடியவில்லை. தம்பியை மன்னிக்கும் இல்லை.

ஏற்றுக்கொள்ளும் இதயம் இல்லை. இறைவன் பாவிகளை வெறுப்பதில்லை. மாறாக மனம் மாறி வரும் பாவிகளை குணமாக்கும் மருத்துவர்தான் இறைவன் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஊதாரி மகனின் தந்தையிடம் இருந்த அன்பையும், பாசத்தையும், மன்னிப்பையும் நம் இதய வரிகளாக்குவோம்.

இந்த தவக்காலம் நம்மில் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த மயான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மில் மாற்றம் காணவும், பிறரை மன்னிக்கவும் முன் வருவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பாவத்தை விட்டுவிடுவோம்

எப்போதும் நாம் மனத்தூய்மையுடையவர்களாய் வாழ என்ன செய்யவேண்டும்? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!

அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒரு நாள் தான் ஒரு புனிதனாக வேண்டும், அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாற ஆசை வந்தது.

எல்லாருக்கும் நல்வழி காட்டும் புனிதர் ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தப் புனிதரைத் தேடி காட்டுக்குள் சென்றான்.

அவரிடம் போய் அந்தப் பாவி, சுவாமி, நான் ஒரு பெரிய பாவி ! மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான்.

அந்தப் பாவியைப் பார்த்து அந்த முனிவர், நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா என்றார். அவனும் கொண்டு வந்தான். அந்த முனிவர், இந்தச் செடியைக் கொண்டு போய் கடலில் எறிந்து விட்டு வா என்றார். அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனை முறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தன அந்தக் கடலலைகள்.

பாவி திரும்பி வந்தான். நடந்ததை முனிவரிடம் சொன்னான். அதற்கு அந்த முனிவர், மகனே! அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும். ஒரு செடி கடலுக்குள் புகுந்தால் போதும் ! அது வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடலலைகள் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றன.

உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறு பாவம் போதும் ! ஆகவே ஒரு சிறு பாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக்கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத் தூக்கி எறிந்துவிடு என்றார்.

அவனும் அவ்வாறே செய்தான், புனிதனானான்; கடவுளுக்கு ஏற்புடையவனானான்.

மேலும் அறிவோம்:

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் : 39).

பொருள் : அறச்செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் ஆகும்; புகழையும் தரும். அதற்கு மாறான வழியில் வருபவை இன்பம் போலத் தோன்றினாலும் துன்பம் ஆகும் ; புகழையும் கெடுக்கும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நவீன், பிரவீன் என்ற இரு மாணவர்கள் வகுப்பில் சண்டை போட்டனர். அவர்கள் ஏன் சண்டையிடுகின்றனர்? என்று ஆசிரியர் கேட்டபோது, நவீன் என்ற மாணவன், "சார், பிரவீன் என்னை முட்டாள் என்று திட்டுகிறான்" என்றான். ஆனால், பிரவீன் அவன் சொன்னதை மறுத்து, "இல்லை சார்! நவீன் தான் முதலில் என்னை முட்டாள் என்று திட்டினான்” என்று கூறினான். அதற்கு ஆசிரியர், "ஏண்டா நான் இங்கே ஒருத்தன் இருக்கின்றேன் என்பதை மறந்து விட்டீர்களா?" என்று கேட்டார். ஆசிரியரும் ஒரு முட்டாள்?

ஒரு வகையில் நாமனைவருமே முட்டாள்கள். நாம் செய்யும் எத்தனையோ காரியங்கள் முட்டாள் தனமானவை. ஆனால், ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் அறிவாளியாகின்றான். ஒரு பாவி, தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் ஒரு நீதிமானாகின்றான். இந்த உண்மையை இன்றைய நற்செய்தி கூறும் “காணமற்போன மகன்" உவமை நன்கு உணர்த்தி, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது. கடவுளுடைய நிபந்தனையற்ற அன்புக்கும் மனிதருடைய முழுமையான மனமாற்றத்திற்கும் இவ்வுவமை சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

பாவம் என்பது கடவுளையே வெறுக்கும் அளவுக்கு ஒருவர் தம்மீது அன்பு செலுத்துவதாகும். இளைய மகன் தன்னுடைய தந்தையை வெறுத்தான்; தந்தை இறந்து போனால் நன்று என்று எண்ணினான். ஏனெனில் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவனுக்குத் தந்தையின் சொத்தில் பங்கு கிடைக்காது. அவன் சுதந்திரப் பறவையாகப் பறக்க முடியாது. அவ்வாறே பாவியும் ஒரு வகையில் 'கடவுள் செத்துவிட்டால் நல்லது; கடவுள் இருப்பது எனக்கு ஓர் இடையூறு. எனது கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு அவர் ஒரு வேகத்தடை. எனது முன்னேற்றத்துக்கு அவர் ஒரு முட்டு கட்டை' என்று எண்ணி மனக் கசப்படைகின்றான்.

பாவம் என்பது தந்தையாகிய கடவுளிடமிருந்து வெகு தொலைவில் செல்வது. சிற்றின்பப் பன்றிகள் கூட்டத்தில் வாழ்வது; பாவத் தவிட்டால் வயிற்றை நிரப்புவது, சுருக்கமாக, மகன் என்ற நிலையிலிருந்து அடிமை என்ற இழிநிலைக்குத் தள்ளப்படுவது "பாவம் செய்கிற எவரும் பாவத்துக்கு அடிமை... வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை" (யோவா 8:34-35).

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மல்லாக்கப்படுத்து ஒரு பாட்டைப் பாடினார். திடீரென்ற குப்புறப்படுத்து மற்றோர் பாடலைப் பாடினார். ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டபோது அவர், “இசைத் தட்டைத் திருப்பிப் போட்டேன்" என்றார்.

காணாமற்போன இளைய மகன் மனமாற்றம் அடைந்தான். தனது வாழ்வு என்னும் இசைத் தட்டைத் திருப்பிப் போட்டான். மனமாற்றம் என்பது பாவத்தின் மறுநிலை. பாவம் என்பது கடவுளை வெறுக்கும் அளவுக்குத் தன்னை அன்பு செய்வது என்றால், மனமாற்றம் என்பது தன்னையே வெறுக்கும் அளவுக்குக் கடவுளை அன்பு செய்வதாகும்.

ஒரு காலத்தில் தன் தந்தையை வெறுத்த இளைய மகன் தன் இழிவுநிலையை உணர்ந்து தன்னை வெறுக்கத் தொடங்கினான். தன் தந்தையின் அன்பு அவனை உந்தித் தள்ளியது; அறிவு தெளிந்தான்; எழுந்தான்; தந்தையின் இல்லத்தை நோக்கித் திரும்பி நடந்தான். தன் பாவத்தை அறிக்கையிட்டான். தந்தையின் அரவணைப்பில் மூழ்கி அகமகிழ்ந்தான். தன் சுயவினையால் தனக்குத் தானே அவன் தேடிக்கொண்ட திண்டாட்டம், தந்தையின் அன்பு வரவேற்பால் மாபெரும் கொண்டாட்டமாக மாறியது. அவன் புதிய படைப்பாக மாறிவிட்டான். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவையாவும் கடவுளின் செயலே" (2 கொரி 5:17-18),

மனமாற்றம் அடைய நமது அறிவு தெளிந்து, நாம் பாவி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். மன்னன் தாவீது, கொலை, விபசாரம் ஆகிய இரு பெரும் பாதகச் செயல்களைச் செய்தார். அவரது கொடிய பாவச் செயல்களை உணர்த்த வந்த இறைவாக்கினர் நாத்தான் கூறிய கதையைக் கேட்டுச் சமூக நீதியை நிலைநாட்டக் கொதித்தெழுந்தார். தன் சுய அநீதியைப் பற்றி அணுவளவும் அலட்டிக் கொள்ளவில்லை. இறைவாக்கினர். “நீயே அம்மனிதன்" (2 சாமு 12:7) என்று அவரது பாவநிலையைச் சுட்டிக்காட்டிய போது, "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" (2 சாமு 12:13) என்றார். "கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும், உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்" (திபா 51:10) என்று கண்ணீர் சிந்தி மன்றாடினார்.

சமூகப் பாவங்களையும் நிறுவனங்களின் ஊழல்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி, நமது சொந்தப் பாவநிலையை உணராது மறந்துப்போகும் ஓர் ஆபத்தான நிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இத்தவக்காலத்தில் முயலுவோம்.

மனமாற்றமடைய நாம் கடவுளின் மாபெரும் இரக்கத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். 'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவம்... அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை" (திபா 103:8-10). 'உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2ஆம் வாசகம், 2 கொரி 5:19),

இளைய மகன் எதிர் பார்த்தது வேலைக்காரனுக்குரிய இடம், அடிமையின் உணவு. ஆனால், அவன் தந்தை அவனுக்களித்ததோ மகனுக்குரிய நிலை (கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி, முதல் தரமான ஆடை, அன்பின் முத்தம். மாபெரும் விருந்து). கடவுள் பாவியை மன்னித்து ஏற்று. அவரது இல்லமாகிய திருச்சபையில் இடமளித்து, சமாதான முத்தம் அளித்து, நற்கருணைத் திருவிருந்தில் பங்களிக்கிறார். “இனி நீங்கள் அடிமைகள் அல்ல; பிள்ளைகள் தாம்" (கலா 4:7).

ஒப்புரவு அருளடையாளம் நாம் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை உணர்த்துவதில்லை. மாறாகக் கடவுள் எவ்வளவு இரக்கம் உள்ளவர் என்பதை உணர்த்துகிறது. "ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது" (திபா 42:7). ஆம், நமது பாவம் என்னும் ஆழ்கடல், கடவுளின் இரக்கம் என்னும் ஆழ்கடலை அழைக்கிறது.

இறுதியாக, தந்தை ஏற்றுக்கொள்ளும்போது, அண்ணன் தம்பியை ஏற்க மறுக்கின்றார். பாவியாகிய தம்பி வீட்டுக்குள்ளே இருக்க, நீதிமானாகிய அண்ணன் வீட்டுக்கு வெளியே நிற்கிறார். பிறரின் மனம் மாற்றத்தைக் கண்டு நாம் மகிழவேண்டும்; பழிவாங்கும் எண்ணம் கூடாது. ஏனெனில், "மனமாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" (லூக் 15:7).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இதோ இன்னொரு பரிசேயன்

வானகத்தில் ஒருநாள் கடவுள் உலா வந்தார். தன்னையே அவரால் நம்ப முடியவில்லை. அவருக்கே ஒரே ஆச்சரியம். இறந்தவர் அனைவரும் மோட்சத்தில்! எவருமே இல்லை நரகத்தில்!! இது எப்படி? இறைவன் சிந்தனையில் சிறிது குழப்பம். “அப்படி என்ன, உலகில் அத்தனை பேருமா யோக்கியர்களாகி விட்டனர்? இல்லை, ஒருவேளை நாம்தாம் நீதியின் தேவனாகச் செயல்பட வில்லையா? எது எப்படி இருந்தாலும் எவருமே செல்லவில்லை யென்றால் நரகம் தான் எதற்கு? நமது தீர்ப்பை மறுசிந்தனை செய்ய வேண்டும்"

வான தூதர் கபிரியேலை அழைத்தார். "அனைவரையும் மீண்டும் நம் நீதி அரியணைக்கு முன் வரச்சொல், பத்துக் கட்டளைகளை எடுத்து ஒவ்வொன்றாகப் படி”.

கபிரியேல் வாசித்தார். முதல் கட்டளை - “நாமே உன் கடவுள். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் கூடாது”. இந்தக் கட்டளைக்கு எதிராக என்று இறைவன் தொடங்கியதும் எங்கோ மூலையில் ஒருவன் முணுமுணுத்தான்: “ஞாயிறுக்கு ஞாயிறு ஒரே சருவேசுரனை விசுவசிக்கிறேன் என்று சொல்வது உம் காதில் விழவில்லையா?” "என்ன சொன்னாய்?” அதட்டலோடு கேட்டார் ஆண்டவர் “ஆலயத்தில் தான் ஒரே சருவேசுரன். அன்றாட வாழ்வில் மணமுடிக்க முகூர்த்த நேரம், நோய் வந்தால் தாயத்து, பயணம் செய்தால் சகுணம்.... இப்படி ஓராயிரம் சருவேசுரன்கள் என்பதை மறைத்து யாரிடம் கதை விடுகிறாய்?” எங்கும் ஒரே அமைதி. இந்த முதல் கட்டளையை மீறியவர்கள் நரகத்துக்குச் செல்லுங்கள் என்றதும் சிலர் எழுந்து சென்றனர்.

இப்படியே கட்டளை-2, கட்டளை-3, கட்டளை-4, கட்டளை-5 என்று இடையிடையே சிறிது விளக்கிச் சொன்னதும் உள்ளம் உறுத்தப் பவர் சென்றனர் நரகம் நோக்கி.

கட்டளை-6 என்று கபிரியேல் சொல்லத் தொடங்குமுன்னேயே அங்கிருந்த அத்தனைபேரும் தலைகுனிந்தபடி புறப்பட்டு விட்டனர் - ஒருவரை, கட்டையாய் கருப்பாய் வழுக்கையாய் மொழுக்கையாய் ஒரு சந்நியாசியைத் தவிர,

கடவுள் பார்த்தார். மோட்சமே காலியாகிவிட்டது தரும் சங்கடமாய் இருந்தது. அதனால் கபிரியேலிடம் சொன்னார் "மீண்டும் அனைவரையும் மோட்சத்திற்குள் வரச்சொல்”. கேட்டதும் அந்த சந்நியாசி சத்தமாகக் கத்தினாராம் “என்ன நீதி இது? இப்படி நடக்கும் பான்று முன்கூட்டியே சொல்லியிருக்கக் கூடாதா?" முன்னதாகத் தெரிந்திருந்தால் தானும் கொஞ்சம் இந்த ஆறாம் கட்டளையை அசைபோட்டிருக்கலாமே என்ற ஏக்கமோ என்னவோ!

இதோ இங்கே இன்னொரு பரிசேயன், இன்னொரு மூத்த மகன். இதுதான் தங்களையே நீதிமான்களாக நினைத்துக் கொள்ளும் புண்ணியவான்களின் புனிதம்.

பாவிகளுக்காக அல்ல பரிசேயர்களுக்காகவே இயேசு சொன்ன கதை தானே ஊதாரி மைந்தன் உவமை (லூக்.15:2,3). பாவி மனந்திரும்பிய கதை மட்டுமல்ல, தன்னையே நேர்மையாளன் என்று நினைப்பவன் மனம் திரும்ப வேண்டிய கதை.

தந்தையின் அன்புத் தழுவுதலுக்காக அறிவு தெளிந்து வீடு திரும்பும் தம்பியாக மட்டுமல்ல மனந்திரும்பி வரும் பாவியை மகனாக அணைத்து ஆட்கொள்ளும் தந்தையாக, தம்பியாக ஏற்று மகிழும் அண்ணனாக மாற, வாழ மனமாற்றத்துக்கு நம்மை அழைக்கும் காலமே தவக்காலம்,

நம் கடவுள் மன்னிக்கும் தந்தை. “அவர் உன் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கிறார். உன் நோய்களையெல்லாம் குணமாக்கு- கிறார்” (தி.பா.103:3) என்று தெம்போடு பாடும் திருப்பாடல் ஆசிரியர் தொடர்கிறார் “அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை” (தி.பா.103:10) ஆறுதலும் புதுவாழ்வும் தரும் வார்த்தைகள்.

ஆனால் அடுத்து வரும் தி.பா.103:12 தான் நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. “மேற்கினின்று கிழக்கு எத்துணை தொலைவில் உள்ளதோ அத்துனை தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்".

மேற்கு எங்கே இருக்கிறது, கிழக்கு எங்கே இருக்கிறது? இதுதான் மேற்கு இதுதான் கிழக்கு என்று நிருணயிப்பது எது? ஒருவன் தான் நிற்கும் நிலையை வைத்தே, மேற்கு, கிழக்கு, மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தொலைவு எல்லாமே தீர்மானிக்கப்படுகின்றன. நிலைப்பாட்டில் கொஞ்சம் அசைந்து நகர்ந்தால் மேற்கு கிழக்காகலாம். கிழக்கு மேற்காகலாம். ஆக, நாம் எடுக்கும் நிலைப்பாடே இறைவனின் இரக்கத்துக்கும் மன்னிப்புக்கும் நம்மை உரித்தாக்குகிறது.

“என் தந்தையிடம் செல்வேன்” - இளையமகன் எடுத்த நிலைப்பாடு தந்தையிடம் கொண்டு போய்ச் சேர்த்தது - அடிமையாக அல்ல, மகனாக. மூத்த மகன் எடுத்த நிலைப்பாடோ, தந்தை வருந்தி அழைத்தும் அடிமை போன்று வீட்டுக்கு வெளியே நிற்க வைத்தது.

“அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்”- இளையமகனின் இந்த நிலைப்பாடு, அவனது உள்ளத்தில் பாவ உணர்வை கிளர்ந்தெழச் செய்தது. அந்தக் குற்ற உணர்வு வளர்ச்சிக்கானது (பேதுருவுடையது போன்றது) அழிவுக்கானது அன்று (யூதாசுடையது போன்றது) தன்னை நீதிமானாக நினைத்த மூத்த மகனுடைய வாழ்வோ மந்த வாழ்வு, கடமைக்காக வாழும் பரிசேய வாழ்வு, பாதுகாப்போடு வாழும் போலியான வாழ்வு.

பசியே ஊதாரி மகனைத் தன்னிலை உணர வைத்தது. ஆன்மீகப் பசியோடு தாகத்தோடு இத்தவக்காலத்தில் தந்தையை நாடுவோம். அந்த ஒப்புரவு அருட்சாதனம் பெறத் தேவையானவை மூன்று என்பார். ஒப்புரவுப் பணியையே குருத்துவப் பணியாகக் கொண்ட தூய வியான்னி: 1. குருவானவரில் பிரசன்னமாக இருக்கும் கடவுளைக் காண விசுவாசம். 2. கடவுள் மன்னிப்புக்கான அருளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை. 3. பாவத்தால் கடவுளைப் புண்படுத்தியதற்காக வருந்தவும் அவரை நேசிக்கவும் அன்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“கிறிஸ்துவின் தூதுவர்கள் ஆவோம்”

கிறிஸ்துவின் தூதுவரான பெரியவர்: கடவுள்மீது மிகுந்த நம்பிக்கைகொண்ட அந்தக் கிறிஸ்தவப் பெரியவர், ஒவ்வொரு நாள் காலையிலும் இயேசுவிடம் வேண்டுகின்றபோது, “இயேசுவே! உமக்குச் சான்று பகர்வதற்கு எனக்கு அருள்தாரும்” என்று மன்றாடி வந்தார். ஒருநாள் காலையில் அவர் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அதனால் அவர் பேருந்து நிலையத்தில் போய் நின்றார். சிறிது நேரத்தில் அவர் போகவேண்டிய இடத்திற்கான பேருந்து வந்தது. அதில் ஏறிக்கொண்ட அவர் பக்கத்து ஊருக்குப் பயணமானார். பேருந்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. அதனால் அவர் வசதியாக அமர்ந்துகொண்டார்.

அடுத்த நிறுத்தத்தில் இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறி, பெரியவர் அருகில் வந்து அமர்ந்தான். சிறிது நேரம் இருவருக்கு நடுவில் எந்தவோர் உடையாடலும் நடக்கவில்லை. சற்றுநேரம் கழித்து, பெரியவர் அருகில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். “ஏன் இப்படி அழுகிறாய்?” என்று பெரியவர் அவனிடம் காரணத்தைக் கேட்டபோது, இளைஞன் அவரிடம், “ஐயா! நான் மிகப்பெரிய பாவி, நான் என்னுடைய பாவத்தை விட்டுவிட்டு, மீட்புப் பெறுவதற்கான வழி சொல்ல முடியுமா?” என்று கெஞ்சிக் கேட்டான்.

இளைஞனிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைக் கேட்ட பெரியவர், ‘இயேசுவைப் பற்றிச் சான்று பகர, அவர் எனக்கொரு வாய்ப்புக் கொடுத்திருக்கின்றார்’ என்று மனத்திற்குள் மகிழ்ந்தவராய், இளைஞனிடம் இயேசுவைப் பற்றி அறிவித்து, அவன் மீட்புப் பெறுவதற்கு வழிவகுத்தார்.

ஆம், பாவியான இளைஞனிடம் பெரியவர் இயேசுவைப் பற்றி அறிவித்து, அவன் மீட்புப் பெறுவதற்கு வழிவகுத்தார். இவ்வாறு அவர் கிறிஸ்துவின் தூதுவர் ஆனார். தவக் காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை பாவ மன்னிப்பினை வழங்கும் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்க வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கிறிஸ்துவின் தூதுவரான பவுல்:
ஒரு காலத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றி வந்தவர்களைப் பிடித்துத் துன்புறுத்தியவர்தான் பவுல். அப்படிப்பட்டவரை ஆண்டவர் இயேசு தமஸ்கு நகர் நோக்கிச் செல்கையில், தடுத்தாட்கொண்டு, தனக்காகத் துன்புறவும், தன்னுடைய ஒப்புரவுச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கச் செய்து, அவரைத் தனது தூதுவராக இருக்குமாறு செய்கின்றார். பவுல் எப்படிக் கிறிஸ்துவின் தூதுவராக இருந்தார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவுபடுத்துகின்றது.

மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையால், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து, அவரோடு உள்ள உறவைத் துண்டித்தான் (தொநூ 3:1-13). இவ்வாறு மனிதன் தான் செய்த பாவத்தினால் கடவுளோடு உள்ள உறவைத் துண்டித்தாலும், கடவுள் அவனை அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, அவர் அவனைத் தன்னுடைய மகன் வழியாக, அதுவும் பாவம் அறியாத அவரை பாவநிலையை ஏற்கச் செய்து, தன்னோடு ஒப்புரவாக்குகின்றார். இத்தகைய ஒப்புரவுச் செய்தியைக் கிறிஸ்து பவுலிடம் ஒப்படைத்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இச்செய்தியை மக்களிடம் அறிவித்து, பவுல் கிறிஸ்துவின் தூதுவர் ஆனார். ஆதலால், பவுலைப் போன்று நாம் ஒவ்வொருவரும் கடவுள் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்து வழியாக மனிதரோடு ஒப்புரவான இந்த ஒப்புரவுச் செய்தியை மக்களுக்கு அறிவித்து, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் தூதுவர்களாக மாறவேண்டும். அது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமை.

ஒப்புரவிற்குத் தயாராகும் கடவுள்:
கிறிஸ்து வழியாகக் கடவுளோடு ஒப்புரவாகின்ற ஒருவர் புதிதாகப் படைக்கப்பட்டவராக இருக்கின்றார் என்று பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழகாகக் கூறுவார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளோடு ஒப்புரவாகும் ஒருவர் எப்படிப் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கின்றார் என்பதை விளக்கும் வகையில் இயேசு ‘காணாமற்போன மகன் உவமை’யைக் கூறுகின்றார்.

இயேசு சொன்ன உவமைகளில் மிகவும் அற்புதமானதும் எளிமையானதுமான ‘காணாமற்போன மகன்’ உவமையில் வரும் இளைய மகன், தந்தை உயிரோடு இருக்கும்போதே, சொத்தில் தனக்குரியதைக் கொடுக்குமாறு அவரிடம் கேட்கின்றான். தந்தை இறந்தபிறகுதான் சொத்தைப் பங்கிடுவார்கள். இவனோ தந்தை உயிரோடு இருக்கும்போதே சொத்தில் தனக்குரியதைத் தருமாறு கேட்கின்றான். இது, அவன் தன் தந்தை இறந்துவிட்டார் என்று கருதுவதைக் காட்டுகின்றது. தன்னை இப்படி நினைத்த மகனுக்குச் சொத்தைப் பங்கிட்டுக் கொடுக்கின்றார். வழக்கமாக யூதச் சமூகத்தில், மூத்த மகனுக்குச் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், இளைய மகனுக்கு ஒரு பங்கும் கொடுப்பர் (இச 21:17). உவமையில் வரும் தந்தையோ, இளைய மகனுக்குச் சொத்தைப் பகிர்ந்து அளிக்கின்றார்.

இதைவிடவும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து, பின் தவற்றை உணர்ந்து திரும்பி வரும் அவனுக்கு மரியாதையை அளிக்கும் வகையில் முதல்தரமான ஆடையை அணிவித்து, அதிகாரத்தை அளிக்கும் மோதிரத்தை அளித்து, அடிமை அல்ல, மகன் என்ற உரிமையை அளிக்கும் மிதியடியை அணிவித்து, அவனுடைய பாவங்களை மன்னித்து, அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொள்கின்றார். இதுதான் தவற்றை உணர்ந்து திரும்பி வரும் பாவியைக் கடவுள் மன்னிக்கும் முறை.

இளைய மகன் இழிவானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், தந்தை அவனுடைய இழிநிலையைப் போக்கி, அவனுக்கு உயிரிய நிலையைக் கொடுத்தார். இப்படித்தான் கடவுளும் மனிதர்கள் செய்யும் பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிந்துவிட்டு (மீக் 7:19) புதுப்படைப்பாக மாற்றுகின்றார். இன்றைய முதல்வாசகத்தில், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்று கடவுள் யோசுவாவிடம் கூறுகின்றார். ஆம், கடவுள் தன்னோடு ஒப்புரவாகும் ஒருவருடைய பாவத்தை மட்டுமல்ல, அவரைப் பழிச்சொல்லையும் அவரிடமிருந்து அகற்றி, அவரைப் புதுப்படைப்பாக்குகின்றார்.

மற்றவரின் குற்றங்களை மன்னிப்போம்:
தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, தன்னோடு ஒப்புரவாகும் ஒருவரைக் கடவுள் தன் மகனாக ஏற்றுக்கொண்டு, அவரைப் புதுப்படைப்படைப்பாக மாற்றுகின்றார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்ற அதே வேளையில், குற்றத்தை உணர்ந்து திருந்தி வருகின்றவர்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது மன்னிக்காத மூத்த மகனைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.

‘காணாமற்போன மகன்’ உவமையில் வரும் மூத்த மகன் தங்களை நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொண்ட பரிசேயர்களை நினைவுபடுத்துகின்றார்கள் (லூக் 18:11). இவர்கள் வெளிப்பார்வைக்குக் கடவுளோடு நெருங்கிய உறவில் இருப்பவர்கள் போன்று தோன்றினாலும், தவற்றை உணர்ந்து திருந்தி வருகின்றவர்களை மன்னிக்காததால், கடவுளை விட்டு வெகு தொலைவில் இருக்கின்றார்கள். இயேசு தவற்றை உணர்ந்து திருந்தி வந்தவர்களை ஏற்றுக்கொண்டார். இன்னும் சொல்லப்போனால், அவர் அவர்களது நண்பர்களாகவே அறியப்பட்டார்.

ஆதலால், தவற்றை உணர்ந்து திருந்தி வருகின்றவர்களை இயேசுவைப் போன்று கடவுளைப் போன்று மன்னிப்போம். இவ்வாறு கிறிஸ்துவின் ஒப்புரவுச் செய்தியை நமது வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் அறிவித்து, அவரது தூதுவர்கள் ஆவோம். சிந்தனைக்கு:
‘ஆண்டவர் உங்களை மன்னித்தது போல, நீங்களும் மன்னிக்க வேண்டும்’ (கொலோ 3:13) என்பார் புனித பவுல். எனவே, நாம் ஆண்டவர் நம்மை மன்னித்தது போல, ஒருவர் மற்றவரை மன்னித்து, கிறிஸ்துவின் தூதுவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அவர் இனியவர்

தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றை 'தொமேனிக்கா லெயத்தாரே' ('மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு') என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: 'எருசலேமின்மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காக புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் ... நீங்கள் நிறைவடைவீர்கள் ... நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்' (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல. மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. ஆக, இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையம் இன்றைய பதிலுரைப்பாடலில் இருக்கின்றது: 'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' (திபா 34:8). தாவீது அபிமெலக்கின்முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். இந்த நேரத்தில், தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15).

'இனிமை' - இது ஒரு வித்தியாசமான சுவை. சுவை என்பது ஒருவகை நேரடி வேதியல் உணர்வு என வரையறுக்கிறது விக்கிபீடியா. மேற்கத்தியர் சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு. தமிழர் முறைப்படி சுவை ஆறு: இனிப்பு ('கனி'), கார்ப்பு ('மிளகாய்'), கசப்பு ('பாகற்காய்'), புளிப்பு ('புளியங்காய்'), உவர்ப்பு ('உப்பு'), துவர்ப்பு ('பாக்கு'). இந்த அறுசுவைகளும் மனித உடலுக்குத் தேவை என்கிறது சித்த மருத்துவம். இந்த அறுசுவைகளில் இனிப்புக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், 'இனிப்பு' மட்டும்தான் நாம் ஒருமுறை சுவைத்தாலும், மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவை. மற்ற ஐந்து சுவைகளும் பொதுவாக ஒருமுறை மட்டுமே சுவைக்கக்கூடியவை. மேலும், 'இனிப்பு' சுவைதான் நம் உள்ளத்திற்கு நேர்முகமான உணர்வுகளையும், நம் உடலின் புன்னகைத் தசைநார்களையும் உயிர்க்கவல்லது. ஆகையால்தான், வெற்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி, சோர்வு போன்ற நேரங்களில் இனிப்பு சுவை தரப்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் - அதாவது, அடிக்கடி நாம் தேடுவதாலும், அது நமக்குப் புத்துயிர் அளிப்பதாலும் - தாவீது ஆண்டவரை, 'இனியவர்' ('இனிப்பானவர்') என்று அழைக்கின்றார். ஆக, ஆண்டவரின் இனிமையை ஒருமுறை சுவைத்தால் போதும். அவரிடமே நாம் திரும்பத் திரும்பச் செல்வோம். ஆண்டவர் தாவீதை அச்சத்தினின்று விடுவிக்கிறார், அவமானத்திலிருந்து விடுவிக்கிறார், மற்றும் நெருக்கடியினின்று விடுவிக்கிறார்.

இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9,10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின் நடந்த முதல் நிகழ்வுகளைச் சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததுதும், ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், 'இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய். அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்' எனப் பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று, யோர்தானைக் கடந்து கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி தன்னை உண்மையான கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ணத் தொடங்குகின்றனர். உண்ட மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக் 'குழந்தைகள்' நிலையிலிருந்து 'பெரியவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கே இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, அவர் பழிச்சொல் நீக்குகின்றார். இரண்டு, அவர்களுக்கு புதிய தொடக்கத்தைத் தருகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே நம்மைக் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும் நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாக கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, 'கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே' என்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், 'நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.' அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால் நம்மையும் அவரோடு இணைத்துப் புதுப்படைப்பாக்குகிறார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 15:1-3,11-32) நமக்கு மிகவும் அறிமுகமான ஓர் உவமை. 'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எனப்படும் இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். இங்கே, கவனமையம் அல்லது கவனக்குவிப்பு இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல. மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு இடறல்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தூரத்திற்குச் செல்கின்ற இளைய மகன் இல்லம் திரும்புகிறான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் இல்லம் திரும்ப மறுக்கிறான். இவ்விரண்டு கதைமாந்தர்களுக்காகவும் வீதிக்கு வருகின்றார் தந்தை: முதல் மகனை அரவணைத்துக் கொள்ளவும், இரண்டாம் மகனை அழைத்துச் செல்லவும். ஆனால், என்ன வருத்தம்! மூத்த மகன் தன்னையே அடிமை என நினைத்தான், இளைய மகன் தன்னைப் பணியாளனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். இக்கதையில் அப்பாதான் கதாநாயகன். ஏனெனில், இரண்டு மகன்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் தந்தை அங்கு இருந்தார். இளையமகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து தந்தை இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். எல்லாவற்றையும் இழந்து அவன் வரும்போது ஊரார் கேலிபேசிவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கேயே நிற்கிறார் தந்தை. இளையமகனைத் தந்தை எதிர்கொண்டது ஏதோ ஒரு விபத்தால் - சான்ஸ் - அல்ல. மாறாக, விருப்பத்தால் - சாய்ஸ். தானே, தெரிந்து, நின்று, தழுவி, அரவணைத்து, அள்ளிக்கொள்கின்றார் தந்தை. இதுதான் இந்தப் பெயரில்லாத் தந்தையின் இனிமை. இந்த இனிமை இரக்கத்தோடு காத்திருக்கிறது. தன் மகன் ஏற்படுத்திய பொருள்செலவைப் பெரிதாகப் பார்க்கவில்லை. தன் மகனைத் தீர்ப்பிடவில்லை. தன் பெயரைக் கெடுத்தாலும் அதைப் பொருட்படுத்தவில்லை. சேறு, சகதி, அழுக்கு என வந்த மகனிடம், 'நீ போய் முதலில் குளித்து வா!' என்று சொல்லவில்லை. அவன் தனக்குரியது என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனாலும், அவனுக்குரிய முதல்தர ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடியைத் தயாராக வைத்திருக்கிறது இந்த இனிமை. தன் மூத்த மகன் இல்லம் நுழைய மறுத்தாலும் அவனைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்கு விளக்கம் தந்து அவனுடைய பார்வையை அகலப்படுத்துகிறது இந்த இனிமை.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: இளைய மகனுக்கு இரக்கமாக, கனிவாக, தழுவலாக, கரிசனையாக வெளிப்படுகிறது. மூத்த மகனுக்கு, விளக்கம் சொல்லிப் புரிய வைத்து, அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறது.

இவ்வாறாக, இன்றைய முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் வாசகங்கள், திருப்பாடலோடு இணைந்து 'இறைவனின் இனிமையை' அல்லது 'அவர் இனியவர்' என்பதை நமக்குக் காட்டுகின்றன. 'அவர் இனியவர்' என்றால் 'அந்த இனிமையை' நாம் அனுபவிக்கிறோம் என்றால், அவரைப் போல, 'நாம் இனியவர்' ஆவது எப்படி?

1. பழிச்சொல் நீக்கும் இனிமை

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது அவர்கள் வெளிப்புறத்தில் அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு, உடைகள், வீடு  என எல்லாம் இருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் ஒரு நெருடல் இருக்கிறது. அதுதான் எகிப்தியரின் பழிச்சொல். அந்தப் பழிச்சொல் அவர்கள் எந்த நன்மையையும் சுவைத்து அனுபவிக்க, அவர்களின் மகிழ்ச்சியை எதிர்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவன் இந்தப் பழிச்சொல்லைத் துடைக்கின்றார். 'நீங்கள் முட்டாள்கள், ஏமாளிகள், உங்கள் கடவுள் பொய்யர், நீங்கள் அழிந்துபோவீர்கள்!' என்ற பழிச்சொல்லைத் துடைக்கின்றார். இன்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் இதுதான். இறைவன் நம்மேல் உள்ள பழிச்சொல் அனைத்தையம் துடைக்க வல்லவர். 'இதோ என் அன்பார்ந்த மகன்-மகள்' என்று அவர் உங்களையும் என்னையும் அழைக்கும் அந்த நொடியே அனைத்துப் பழிச்சொல்லையும் துடைத்துவிடுகிறார். ஊரார் நம்மை 'விலைமாதருடன் உறவு கொண்டவன்,' 'பன்றி மேய்த்தவன்,' 'பன்றியின் உணவை உண்டவன்,' 'தந்தை சொல் கேளாதவன்' என்று சொன்னாலும், சொந்த அண்ணனே, 'உம் மகன்' என்று மூன்றாம் நபராகப் பார்த்தாலும் இறைவன் பழிச்சொல்லை நீக்குகிறார். 'நான் உன் வீட்டு வேலைக்காரன்' என்று சொன்ன வாயெடுத்தவனை அதற்கு மேல் பேசவிடாமல் மகனுக்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறார். ஆக, இறைவன் என் பழிச்சொல்லை நீக்குகிறார் என்றால், நான் அவருடைய இனிமையை உணர்கிறேன் என்றால் என் நாவில் இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரக்கூடாது. இன்னா சொற்கள் விடுத்து இனிய சொற்கள் பேசும்போது நாமும் இனியவரே.

2. பழையன கழிக்கும் இனிமை

கிறிஸ்துவோடு உலகை ஒப்புரவாக்கும் இறைவன் பழையன அழித்தையும் அழிக்கின்றார். முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மன்னாவை நிறுத்துவதன் வழியாக மக்களின் பழைய சார்புநிலையை அழிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், தந்தை இரண்டு மகன்களின் பழைய இயல்பையும் அழிக்கின்றார். இளைய மகன் கடந்த நாள்களில் என்ன செய்தான் என்றோ, எவ்வளவு கையிருப்பு கொண்டுவந்துள்ளான் என்றோ, அடுத்த என்ன திட்டம் என்றோ கேட்கவில்லை. மூத்த மகன் வைத்திருந்த முற்சார்பு எண்ணத்தையும் அழிக்கிறார். ஆக, பழையது நமக்கு உற்சாகம் தந்தால் நலம். ஆனால், நம்மைக் கட்டிவைத்து நகர முடியாமல் செய்தால் அது கழிக்கப்பட வேண்டும். பழையதை மறந்து இன்றில் இப்பொழுதில் வாழும்போது இறைவனின் இனிமையை அனுபவிக்கவும் அதை மற்றவருக்கு வழங்கவும் முடியும். ஏனெனில், இறைவனுக்கு இன்று மட்டுமே உண்மை.

3. தழுவிக்கொள்ளும் இனிமை

இன்றைய நற்செய்தியில் வரும் தந்தையின் கணிதமும் லாஜிக்கும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தப்படாமல், நிகழ்வின் மொத்தத்தைப் பார்க்கிறார். 'நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்' - இதுதான் இவருடைய மிஷன் ஸ்டேட்மண்டாக இருக்கிறது. அவன் போனான், அழித்தான், திரும்பினான். அதனால் என்ன? நடந்ததைப் பற்றி என்ன செய்ய முடியும்? அடுத்து என்ன செய்வது? 'மகிழ்நது கொண்டாடு' என்று இளைய மற்றும் மூத்த மகனை ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். இது யாரால் முடியும் என்றால், இறுதியை மனத்தில் வைத்துச் சிந்திப்பவரால் மட்டும்தான். 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). இறுதியில் எல்லாம் இனிமையாகும். ஆக, நிகழ்வுகளை இந்த இறுதியோடு இணைத்துப் பார்த்தால் இறைவனின் இனிமை நமக்குச் சொந்தமாகும்.

இறுதியாக, மகிழ்ச்சியின் ஞாயிற்றைக் கொண்டாடும் நாம், இறைவனின் இனிமையை அனுபவித்து மகிழ்வுறும் நாம், அதே இனிமையை மற்றவருக்கும் வழங்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காலையில் கூட்டைவிட்டுப் புறப்படும் பறவை மாலை கூட்டிற்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையால்தான் சுற்றித் திரிகிறது. சுற்றித் திரிதல் தவறல்ல. கூடு திரும்பாமல் இருப்பதுதான் தவறு. இஸ்ரயேல் மக்கள் கானான் நாடு என்னும் கூடு திரும்பினர். கொரிந்து நகர மக்கள் ஒப்புரவு என்னும் கூடு திரும்பினர். இரு மகன்களும் தந்தையின் இல்லம் என்னும் கூடு திரும்பினர். இவர்கள் கூடு திரும்பக் காரணம் இவர்கள் அங்கே இனிமையைக் கண்டனர். இனிமையைக் காணும் இடம் நோக்கி நம் இதயம் சாயும் என்பது நம் மரபியல் ஊட்டம். அந்த இனிமை இறைவனிடம் என்றால் பயணம் இனிதாகும். ஏனெனில், அவர் இனியவர் - உங்களையும் என்னையும் போல!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உறவுகள் பலவிதம். அதில் அப்பா - பிள்ளை உறவு தனிவிதம்.
இதில் நீ எவ்விதம் ?...

உறவுகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று ஒரு பழைய தமிழ் சினிமா பாடல் உண்டு ஆனால் "கடவுள் -மனிதன் - கடவுள்" என்ற நிலைப்பாட்டில் என்றும் நிலைத்திருப்பது ஒரே ஒரு உறவுதான் அது அப்பா – பிள்ளை என்ற அன்பின் உறவு மட்டும் தான்.

ஐசியு(ICU)வில்- உள்ளே போன பின்பு " ஐ….சீ….யு…." ( I See you) என்று தேடி வரும் உறவுகள் – மலிந்து போனகாலம் இது. இந்தக்காலத்தில் - இன்று நற்செய்தியில் குறிப்பிடப்படும் மகன்களின் – அதிலும் இளையமகனின் செயல்கள் உலகில் இயேசுவைப் பற்றி அறிந்தவர்கள் அனைவரும் அறிந்துகொண்ட ஒரு செய்தியாகும்.

அறியாத உண்மை இந்த அப்பா பிள்ளை என்ற உறவு ஆகும். இயேசு மக்களுக்கு கற்பித்தன மாபெரும் சத்தியம் இறைவனை அப்பா என்று அழைத்து அவரோடு அவரில் அவரது மக்களாய் வாழ வழி காட்டியதும் , அது மட்டுமின்றி இறைவனின் பிள்ளைகள் என்ற உரிமை கொண்ட மனிதர்களாய் புதியஏற்பாட்டின் புதுமையான சிலுவைமர உறவில் இறைவனோடு இணைத்தது தான். குறிப்பாக இன்றைய வாழ்க்கை சூழலில் தந்தை மகன் உறவு கேள்விக்குறி ஆகிவிட்டநிலையில், … தான், தன்சுகம், தன்மனைவி, தன் பிள்ளை என்ற நான்கு சுவற்றின் நடுவில் அப்பா- பிள்ளை என்ற உறவின் ஆழம், வலிமை, விலை, மேன்மை என்பது என்ன என்று அடையாளம் அற்றுப்போகிறதை சான்று கூறும் சாட்சியாக வாழும் இயேசுவின் (அன்பின்) சீடர்கள்நாம் . இந்தஉறவின் வலிமை, உடைக்க முடியாதது. இந்த உறவின் விலை, மூச்சு உள்ளவரை விலையற்றது. இந்த உறவின் மேன்மை, கடவுள் தன்னையே வெறுமையாக்கி அடிமைக்கோலத்தில் மனிதனாக கடவுளையே உருவெடுக்க வைத்த மேன்மைக்கு உரியது ஆகும் .இதுவே அப்பா – பிள்ளை என்ற உறவின் உயிராகி நின்ற அன்பையும் மன்னிப்பையும் பீரிடச் செய்யும் சிலுவைமரமாகும்….

காத்திருந்து காத்திருந்து காணாமல் போனமகன் ,மீண்டும் கண்முன்னால் வந்தது எப்படி?. செக்கில் ஆட்டிய தானியத்தைப்போல் செல்வத்தில் நிலைகுலைந்த " இளையமகன் "நீங்கா நிலையான உறவை நினைத்தது எப்படி? அது இந்த அப்பா-மகன் "இரத்த உறவினால்" தான்.( தொ:நூ : 2-7) ஒரு வேளை இந்தமகனின் தந்தையும் செல்வத்தில்,... நாடு தழுவிய பஞ்சத்தால் ஏழையாக மாறியிருந்தால் ,அறியாது வரும் மகனை ஏற்று இருப்பாரா ? என்ன கேள்வி இது ஏற்றே ஆகவேண்டும் இல்லையெனில் அவர் தந்தையாக இருக்கமுடியாது –இது தான் அந்த "இரத்தஉறவு" கல்வாரியில் கண்ட இயேசுவின் இரத்த உறவு

கல்வாரிமலை உச்சியில் சிலுவையின் மீது மூன்றுஆணிகள் என்ற அம்பாரத்தில் முள்மூடியைக் கிரீடமாக கொண்டு துன்பத்தின் உச்சத்தை செங்கோலாககையில் ஏந்தியவராய் "தந்தையே இவர்கள் செய்வது இன்னது என்று அறியாது செய்கிறார்கள் இவர்களை மன்னியும்" என்று அறைகூவல் விடுப்பாரா?. ….. தேவைக்காக சொந்தம் கொண்டாடும் உறவல்ல கடவுள் மனிதனிடம் கொண்டஉறவு .தேவைகளை கடந்த உறவு கடவுளின் உறவு. எனவே தேடி வந்தவன் தன்னை விலக்கிவைத்தன் என்று பாராமல் கருணையோடு கட்டி அணைதக்கும் கடவுளின்உறவு. இந்தஉறவை தனதாக்கிக் கொள்ள இளையமகன் மனமாற்றம் கொண்டு தந்தையின் உறவை தேடியதும், உறவின் நம்பிக்கையோடு தந்தையை நோக்கி எழுந்து ஓடி வந்ததும் தான் இந்தநிகழ்வின் மூலைக்கல்.. தந்தை முன் தன்னைத் தாழ்த்தி மன்னிப்பின் வேண்டலோடு நின்றது. இளையமகனான மனிதன் கொண்ட சிலுவைவழி இணைப்பின் புதுஉறவு… பின் நிகழ்ந்தவை மூலைக்கல் மீது உற்றார், உறவோடு எழுப்ப்பட்ட அன்பின்ஆலயம்.. அதில் மகிழ்ச்சி நிலைப்பது நிச்சயம்.

காத்திருந்தது தந்தையின் உறவு, … காணவந்தது மகனின்உறவு. அரவணைத்தது இருவருள்ளும் ஓடும் ஒரே ஆவியின் அன்பின் உறவு. முடிவு; தந்தைக்கு இளையவன் இளவரசன் ஆனான். உனக்கும் எனக்கும் அன்பின் அரசின் உரிமைக் குடிகளாகிடும் வாழ்வைத் தந்திடும் வழி சொன்ன வித்தகன் ஆனான்.. ….

மேற்கூறியவை அனைத்தும் கடவுள் - மனிதன் – கடவுள் என்ற நிலைப்பாட்டின் வெளிப்பாடுகள் . இனி தொடர்பவை நவநாகரீக உலகில் தந்தை- மகன் – தந்தை என்ற இன்றைய வாழ்வியலின் வெளிப்பாடுகள்…. கவனிப்போம்…

இறைகுலமே….
கடைசியாக இந்த இரண்டு நற்செய்தி வசனங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்…..

1ம்இறைவார்த்தை…
சில நாள்களுக்குள் இளையமகன் எல்லாவற்றையும் திரட்டிக் கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும்பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். .அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; (லூக்காநற்செய்தி 15:13-14)

நன்கு கல்வி கற்று உயர்ந்த வருமானத்தில் பணி செய்யும் இனிய உறவுகளே இன்று நீங்கள் கடந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் அநேகம் பேர் தன்னைப் பற்றி பிறர் பெருமைப்பட – தொடரும் ஆடம்பர வாழ்க்கையில் நாளைய கவலையின்றி தேவையற்ற இ.எம்.ஐ உலகத்தில் திண்டாடிக் கொண்டு வாழ்கின்றனர். கை நிறைய சம்பாரித்தும் கடன் ,வறுமை. வேலை இல்லை என்றால் அடுத்த வேளை கேள்விக்குறி… தேவையா இந்த ஊதாரி வாழ்கை. ஊதாரி மைந்தனாகத் தான் வாழவேண்டுமா? உதவும் மைந்தனின் தேவை இன்று தந்தைகளுக்கு அதிகம்.. செல்வம் கடவுளின் கொடை அதை வீணடிக்காதீர்கள். உங்கள் உழைப்பின் பயன் முதலில் உங்களுக்கு, அடுத்து உங்கள் குடும்பத்திற்கு (இதில் பெற்றோர் மற்றும் உறவுகள் அடக்கம் ) , அதற்கு அடுத்து தான் மற்றவர்களின் பார்வைக்கு…. உங்கள் மரியாதை உங்கள் செயல்திறனில் இருக்கட்டும் ஆடம்பரத்தால் ஊதாரிமைந்தன் ஆவதில் உங்கள் மரியாதை இருப்பதில்லை.

2ம்..இறைவார்த்தை.
அதற்குத் தந்தை, "மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே (லூக்காநற்செய்தி 15:31) பாசத்தால் உருகி தன்னையும் தன் உழைப்பையும் அதன் பயனையும் முழுமையாக தன் பிள்ளைகளுக்கு ,உறவுகளுக்கு… கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்க நினைக்கும் பெரியவர்களே ! பாருங்கள் இயேசுவின் காலத்திலேயே ஏன் அதற்கு முன்பே தந்தைக்கு உரியது தந்தையிடமே இருக்கின்றது என்பதை மேற்கூறிய வசனம் தெளிவுபடுத்துகின்றது. இந்த உவமையில் வரும் தந்தை தெளிவாக தன்னோடு இருக்கின்ற மகனிடம் கூறுகின்றார் …"என்னுடையது எல்லாம் உன்னுடையது " என்று. ஆக, தனக்கென்று இருப்பதை "தன்னுடனேய.. வைப்பது நல்லது" என்று இந்தஉவமையில் வரும் தந்தை நினைவுபடுத்துகிறார். இந்தவசனத்தின்படி இனியாவது மனமாற்றம் கொண்ட முன்மதி கொண்ட பெரியோராக வாழ முயற்சிப்போம். முடிவு – முதியோர் இல்லங்களில் எண்ணிக்கை குறையும், அல்லது – முதியோர் இல்லங்களுக்கு சென்ற பின் வருத்தப்படுவது குறையும். எதுநல்லது?.. என்பதை நான் கூறவில்லை இயேசுவின் உவமை கூறுகின்றது முன்னின்று செயல்படுவோம்…

இவை அனைத்தும் மீறி, தந்தை மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இந்த அசரீரி ஒரு எடுத்துக்காட்டு

யார் இவ இப்ப எங்க போறவ ?...
ம்…எங்கவீட்டுக்கு….
இப்ப அங்க என்னவாழுது….?
ஏ..இன்னு எங்க அப்பா உசிரோடுதான் இருக்கு…..

நம்பிக்கையின் வெளிப்பாடு..
தந்தை மீதுள்ள நம்பிக்கை….
நமக்கு மண்ணகம், விண்ணகம் என உரிமையுள்ள இருஉறவுகள் உண்டு…..தந்தைகளும் உண்டு.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு