மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

மூவொரு கடவுள் பெருவிழா
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9 | 2கொரிந்தியர் 13: 11-13 | யோவான் 3: 16-18

ser

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது எந்த ஒரு பகுத்தறிவுள்ள மனிதரும் மறுக்க முடியாத உண்மை என்பதை நாம் அறிவோம். ஏனெனில் காரியம் என்று ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் ஒன்று இருக்க வேண்டுமே. இந்த மேசை, இந்தக் கோயில் இருக்கிறது என்றால் இதைக் கட்டிய ஒருவர் இருக்க வேண்டுமல்லவா? குழந்தை இருந்தால் அதைப் பெற்றெடுத்த தாய் வேண்டுமே! மரமிருந்தால் அதற்கு விதை வேண்டுமே! இதேபோல்தான் இந்த அகில உலகமே! இந்த மாட்சிமிகு ஒழுங்குபட்ட வானகமும், வையகமும் கடவுள் ஒருவர் உண்டு என்று எடுத்துரைக்கிறது!

ஆனால் கடவுள் தந்தையாக, மகனாக, தூய ஆவியாக இருந்தார் என்பதை பகுத்தறிவின் ஒளியைக் கொண்டு மட்டும் அறிய முடியாது. அதற்கு இறை வெளிப்பாடு (Revelation) தேவை. நம் அன்றாட வாழ்வில் நாம் செய்வதென்ன? தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே திருப்பலியைத் தொடங்குகிறோம். ஆலயத்தில் நுழையும்போதும் சிலுவை அடையாளமிட்டு செபிக்கும் போதும் நாம் இந்த மூவொரு தெய்வத்தை அழைக்கிறோம். இந்த மூவொரு தெய்வம் மூன்று ஆட்களாக இருந்தாலும் வேறு வேறு அல்ல. ஒரு கடவுள் என்பது நமது விசுவாசம்.

ஆனால் இந்த மறை பொருளை மனிதராகப் பிறந்த நம் ஆண்டவர் இயேசுதான் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

நான் தந்தையிடமிருந்து வந்தேன். தந்தையிடம் மீண்டும் போகிறேன். துணையாளராகிய தூய ஆவியானவரை உங்களுக்கு அனுப்புவேன் (யோவா. 14:16-17) என்று இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

அதே இயேசு தம் சீடர்களை நோக்கி நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் (மத். 28:19) என்று தெளிவுபட கூறி மூவொரு கடவுளின் மறைபொருளை வெளிப்படுத்தியுள்ளார்.

மூவொரு கடவுள் நம்மோடு எத்தகைய தொடர்பு கொண்டுள்ளார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளார் கூறுகிறார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியானவரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக (2 கொரி. 13:13) என்று வாழ்த்துவதில் தந்தையின் அன்பும், மகனின் அருளும், ஆவியானவரின் நட்புறவும் நம்மில் செயலாற்றுவது தெளிவாக்கப்படுகிறது.

தந்தை: பழைய ஏற்பாட்டில் யாவே: “இருக்கின்றவர் நாமே” என்று வெளிப்படுத்திய ஆண்டவர் பேரன்பும், இரக்கமும், பரிவும் கொண்டவர். சினம் கொள்ள  தாமதிப்பவர். நம்பிக்கைக்குரியவர் என்றெல்லாம் வெளிப்படுத்தப்படுகிறார். நம்மீது தன் அன்பையே பொழிகின்றார். நம் மீட்புக்காக தம் மகனையே நமக்காகக் கையளித்தார் (யோவா. 3:16). பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன் (எசாயா 49:15) என்று கூறியவரின் அன்பு நம் தேவை அறிந்து நமக்கு உதவி செய்யும் அன்பு.

மகன்: மகனாகப் பிறந்த நம் ஆண்டவர் இயேசு நம்மீது தன் அருளைப் பொழிகின்றார். “உலகம் முடியும் மட்டும் உங்களோடு இருப்பேன்” (மத். 28:20) என்று கூறிய ஆண்டவர் நமது மீட்பராக நமக்காக மன்னிப்பு வேண்டி, பரிந்து பேசுபவராக, தந்தையிடம் நம்மை அழைத்துச் செல்பவராகத் தன் அருளையே நம்மீது பொழிந்து கொண்டிருக்கிறார். எப்படி? நீங்கள் வாழ்வு பெறும் பொருட்டு அதுவும் மிகுதியாகப் பெறும் பொருட்டு வந்தேன் (யோவா. 10:10) என்று கூறியவர் ஆண்டவர் இயேசு. தன் வாழ்வையே நமக்காகத் தந்து வாழ்வு தரும் உணவு நானே (யோவா.6:48) என்றும் கூறியுள்ளார்.

தூய ஆவி: தந்தையுடையதும், மகனுடையதுமானவர்தான் தூய ஆவி. இவர் தனித்து செயல்படுபவர் அல்ல. இணைந்து செயல்படுபவர். மகன் இவ்வுலகில் விட்டுச் சென்ற பணியைச் சீடர் தொடர்ந்து செயல்படத் துணையாக நட்புறவாக இருப்பவர்தான் தூய ஆவியானவர். இவர் நம் உள்ளத்தில் குடிபுகுந்து நம்மைப் புனிதப்படுத்தி இறைவனின் தூய ஆலயமாக்கி நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்து கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து இருந்து இயேசுவின் சாட்சிகளாக விளங்கச் செய்கிறார்.

இந்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் செய்வது என்ன? தந்தையின் அன்பைச் சுவைக்கும் நாம் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டாமா?

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி தன் படைப்பு அனைத்தும் வாழ வேண்டும் என்று தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பிய இறைவனின்  பேரன்பைச் சுவைக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.

ser ser

மூவொரு கடவுளைப் போல வாழ்வோம்

மூவொரு கடவுளின் திருநாளைத் திருச்சபைத் தாய் இன்று கொண்டாடி மகிழ்கின்றாள். மூன்று எப்பழ ஒன்றாக முழயும் ? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இதோ மூன்று உதாரணங்கள்.

முதல் உதராணம் : ஒரு குடும்பத் தலைவரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்தக் குடும்பத் தலைவர் அவர் பிள்ளைகளுக்குத் தந்த ; அவருடைய அப்பாவிற்கு மகன் ; அவருடைய நண்பர்களுக்கு நண்பர். ஒரே குடும்பத் தலைவர் தந்தை, மகன், நண்பர் என்ற மூன்று உறவு நிலைகளில் வாழ்வதுபோல, ஒரே இறைவன் உலகைப் படைத்த தந்தையாகவும், உலகை மீட்ட மகனாகவும், உலகை வழிநடத்தும் தூய ஆவியாராகவும் வாழ்கின்றார்.

இரண்டாவது உதாரணம் : மரம் ஒன்று! அதற்கு வேர் உண்டு. அது மண்ணுள் புதைந்து கிடப்பதால், மறைந்திருப்பதால் அதை நம்மால், நம் புறக்கண்களால் பார்க்க முழவதில்லை. அந்த மரத்திற்கு வெளியில் தெரியும் அடிப்பாகம் உண்டு; அந்த மரத்திற்குள் உயிர்ச்சத்து உண்டு.

மூவொரு இறைவனைப் புரிந்து கொள்ள வேரை தந்தைக்கும், அடிமரத்தை மகனுக்கும், உயிர்ச்சத்தை தூய ஆவியாருக்கும் ஒப்பிடலாம்.

மூன்றாவது உதாரணம்: விளக்கு ஒன்று! அங்கே எண்ணெயையும், திரியையும், சுவாலையையும் பார்க்கின்றோம். எண்ணெயைத் தந்தைக்கும், திரியை மகனுக்கும், சுவாலையைத் தூய ஆவியாருக்கும் ஒப்பிடலாம்.

மூன்று உதாரணங்களும், ஒப்புமைகளும் ஓரளவு மூவொரு இறைவனின் இயல்பை நாம் அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.

தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரையும் ஒன்றாக வாழவைப்பது எது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் பதில் கூறுகின்றது. இறைவன் இரக்கமுள்ளவர், பரிவுள்ளவர், சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர். இப்படிப்பட்ட அற்புதக் குணங்கள் இருக்கும் இடத்தில் எப்பழ பகைமையோ, சண்டை சச்சரவோ, பொறாமையோ, சீற்றமோ, கட்சி மனப்பான்மையோ, பிரிவினையோ, பிளவோ, அழுக்காறோ [கலா 5:20-21) இருக்கமுழியும்?

இன்று நம் நடுவே எத்தனைப் பிரிவினைகள்! ஒன்றாக இருப்பதையெல்லாம் உடைத்தெறியுங்கள் என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது! நான் வாழ வேண்டும்; நான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் எங்கும் புரையோழக் கிடக்கின்றது.

ஒன்றுமட்டும் உண்மை! இப்படிப்பட்ட வாழ்க்கை முறை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வரை, அன்பும், அமைதியும் அளிக்கும் கடவுள் நம்மோடு தங்கமாட்டார் ; ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் நம்மோடு தங்காது [2 கொரி 13:11-13].

இன்றைய உலகுக்குத் தேவையான ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை, அமைதியை எந்த மாநாட்டினாலும், உச்சக்கட்டப் பேச்சுவார்த்தையாலும், பத்திரிகையாலும், படத்தாலும், விளம்பரத்தாலும், அறிவுரையாலும், அறவுரையாலும் நாம் முழுவதும் அடையமுழயாது. நாம் விரும்பும் புதிய வானத்தையும், புதிய பூமியையும் நாம் முழுவதும் அடைய சிறந்த வழி நாம் தொழுகின்ற மூவொரு இறைவனைப் போல நாம் வாழ முன்வருவதாகும்.

மேலும் அறிவோம் :

உலகம் தழீஇய(கு) ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு ( குறள் : 425).

பொருள்: உலகச் சான்றோருடன் தழுவிச் செல்வதே ஒருவருக்குரிய இயல்பான அறிவாகும். அவ்வாறு பொருத்தி வாழும்போது, இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் வருந்துவதும் இல்லாததே சிறந்த அறிவாகும்.

ser ser

வாழ்நாள் முழுவதும் கடவுளை மறுத்த நாத்திகர் ஒருவர் சாகும் தறுவாயில் இருந்தார். அவருடைய நண்பர்கள் அவரிடம், “கடவுளே! என் ஆன்மாவை மீட்டருளும் ” என்று சொல்லும்படி வற்புறுத்தினார். அவரோ சிரித்துக் கொண்டு, “கடவுளே! நீ இருப்பது உண்மை என்றால், என் ஆன்மாவை, அப்படி ஒன்று எனக்கு இருந்தால், அதை மீட்டருளும்” என்று சொல்லி உயிர்விட்டார்!

பகுத்தறிவுள்ள எவரும் கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும், பகுத்தறிவு என்பது காரணம் - காரியம் அடிப்படையில் செயல்படுகிறது. காரியம் என்று ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும்; விதையின்றி மரம் இல்லை; தாயின்றி சேயில்லை; இதை உலகில் சான்றோர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சான்றோர்கள் ஏற்பதை மறுப்பவன் அலகைக்கு, அதாவது, பேய்க்குச் சமமானவன் என்கிறார் வள்ளுவர்.

“உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா லைக்கப் படும்”

திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்: “பேய்களுங்கூட கடவுளை நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன” (யாக் 2:19). எனவே கடவுளை நம்ப மறுப்பவர் பேயைவிடக் கேடுகெட்டவர் என்பது தெளிவு. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவு நமக்கு உணர்த்துகிறது. ஆனால் ஒரே கடவுள் தந்தையாகவும் மகனாகவும் ஆவியாராகவும் இருக்கிறார் என்பதை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது. அதற்கு இறைவெளிப்பாடு தேவை. உண்மையில், மூவொரு கடவுள் பற்றிய உண்மையைக் கிறிஸ்துவே நமக்கு வெளிப்படுத்தி யுள்ளார். அவரே தெளிவாகக் கூறினார்: “நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்” (யோவா 16:28). “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” (யோவா 16:13). “எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், துய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19). எனவே ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கிறார் என்பது கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட உண்மை. அது கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவைப் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக” (2 கொரி 13:18). இதே
வாழ்த்துரையைத்தான் திருப்பலியில் திருச்சபை நமக்கு வழங்குகிறது. இவ்வாழ்த்துரையின்படி தந்தையின் தனிப்பண்பு அன்பு; மகனின் தனிப்பண்பு அருள்; ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு. இப்பண்புகளைப்பற்றிச் சிந்திப்பது நமக்கு நலம் பயக்கும்.

தந்தையின் தனிப்பண்பு அன்பு: கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவா 4:16). அவருடைய அன்பு எத்தகையது என்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. “ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர்” (விப 34:6-7). தந்தையாகிய கடவுள் தமது ஒரே மகனையே கையளிக்கும் அளவுக்கு நம்மேல் அன்பு கூர்ந்தார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது (யோவா 3:16). தமது சொந்த மகனையே நமக்காகக் கையளித்த தந்ைத மற்ற அனைத்தையும் நமக்குக் கொடுப்பார் என்பது உறுதி என்கிறார் புனித பவுல் (உரோ8:82). துன்ப வேளையில் கடவுளின் அன்பைப் பற்றி ஐயப்பாடு கொள்கிறோம்; கவலைப்பட்டுக் கண்கலங்குகிறோம். அவ்வேளையில் புனித பேதுரு நமக்குத் தரும் அறிவுரை: “உங்கள் கவலைகளை யெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்” (1 பேது 5:7).

மகனின் தனிப் பண்பு அருள்: அருள் என்பது கடவுளின் இலவசக் கொடை; மனித முயற்சி அல்ல. நாம் மீட்படைந்துள்ளது  நமது கிரிகையால் அல்ல, கடவுளின் கிருபையால் என்பது முழுக்க முழுக்க உண்மை. கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தால் நம்மை மீட்டார்; நம்க்கு எதிராக இருந்த பாவக் கடன் பத்திரத்தை அவர் சிலுவையில் அறைந்து அழித்துவிட்டார் (கொலோ 2:14). கிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது (1 யோவா 1:7). நாம் மீட்படையத் தேவைப்படுவதெல்லாம் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொள்வதேயாகும். “மன்பதை பாவம் தீர்க்க மரித்தவா போற்றி” என்று கிறிஸ்துவை நன்றியுடன் போற்றுவோம்.

தூய ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு, தோழமை: சென்ற வாரம் நாம் கேட்டதுபோல, தூய ஆவியார் வழியாகவே கடவுளின் அன்பு நம்மீது பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5); அவர் வழியாகவே நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை அடைந்து, கடவுளை அப்பா தந்தாய் எனக் கூப்பிடுகிறோம் (கலா 4:6); அவர் நமது பெருமூச்சு வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (உரோ 8:26). தூய ஆவியார் காட்டும் நெறியில் நடப்போம் (கலா 5:25). தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றை நமது வாழ்வில் வெளிப்படுத்துவோம் (கலா 5:22).

கடவுள் ஆள்தன்மையில் மூவராக இருந்தாலும் இறைத் - தன்மையில் ஒருவரே. அவர்களிடையே தனித்தன்மையும் உண்டு, ஒற்றுமையும் உண்டு. மூவொரு கடவுள் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல; வாழ்க்கையில், சிறப்பாக, குடும்ப வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மறைபொருள். தந்தை, மகன், தூய ஆவியார் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு கணவன் - மனைவி - குழந்தைகள் உறவில் பிரதிபலிக்கப்பட வேண்டும்.

ஒரு மனைவி தன் கணவரிடம், “இந்த  வீட்டில் ஒன்று நான் இருக்க வேண்டும்; இல்லையென்றால் உங்கள் அம்மா இருக்க வேண்டும். இரண்டுபேரும் இந்த வீட்டில் இருக்க முடியாது. உங்கள் முடிவு என்ன?” என்று கேட்டார். அதற்குக் கணவன், “நீயும் வேண்டாம்; என் அம்மாவும் வேண்டாம்; வேலைக்காரி இருந்தால் போதும்” என்றார். குடும்பத்தில் மூவொரு கடவுள் பிரசன்னமாய் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை அன்பு செய்வதிலும் மகிமைப் படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

துறவறக் கூட்டு வாழ்விலும் மூவொரு கடவுளின் அன்பு வெளிப்பட வேண்டும். துறவறக் கூட்டு வாழ்வு ஒரு சிறப்புக் குடும்பம். அதில் ஒரு சிலர் அர்ச்சனாவாகவும், நிறைஞ்சனாவாகவும் இருக்கலாம்; ஒரு சிலர் எரிஞ்சனாவாகவும், காஞ்சனாவாகவும் இருக்கலாம். ஒருவர் மற்றவரை அவருடைய நிறைகுறைகளுடன் ஏற்று, “வேற்றுமையிலும் ஒற்றுமை, பன்மையிலும் ஒருமை” என்னும் மூவொரு கடவுளின் இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும்.

இவ்வாறு இல்லறத்திலும் துறவறத்திலும் மூவொரு கடவுளின் அன்பும், அருளும், தோழமையும் நின்று நிலவுவதாக!

ser ser

உறவிலே சாயல்

மனிதன் இல்லாமல், மனித சமுதாயத் தொடர்பு இல்லாமல்கடவுளுக்கு ஏது வரலாறு? காலத்தைக் கடந்தவர் கடவுள். கால வரையரைக்கு உட்பட்டது சரித்திரம். காலத்தைக் கடந்தவராகவே கடவுளைக் கருதும் போது கால வரையரைக்கு உட்பட்ட வரலாறு இருக்கமுடியாது.

அப்படிச் சரித்திரமில்லாத கடவுள் எப்படி இருப்பார்? இரு பிற இனத்து மனிதர்கள் கடவுளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனராம். கிறிஸ்தவக் கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று ஒருவர் கேட்டார். “கிறிஸ்தவக் கடவுளைப் பற்றியா கேட்கிறாய்?” பற்றவர் பதில் சொன்னாராம் “பிதா என்று ஒருவர் இருந்தார் - தாத்தாவாக அப்போதே தலைதாடியெல்லாம் நரைத்துப் போய், இந்நேரம் அவர் மண்டையைப் போட்டிருப்பார், சுதன் என்று ஒருவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள. ஆவி என்று ஒருவர் புறாவாகக் காடுமலையெல்லாம் சுற்றிப் பறந்து கொண்டிருந்தார். இந்நோம் அவரைச் சுட்டுப் பிரியாணி ஆக்கி  இருப்பார்கள்

இப்படித்தான் இருந்திருப்பார் கிண்டலுக்கும் கேலிக்கும் உரியவராக!

ஆனால் நாம் வழிபடும் மூவொரு கடவுள் அப்படி நகைப்புக்கு உரியவரல்ல.

தந்தை இவ்வுலகை எவ்வளவு அன்பு செய்தார் என்றால் தன் ஒரே மகனையே மனித இன மீட்புக்காகக் கையளிக்கத் திருவுளம் கொண்டார் (யோ.3:16)

மகன் எப்படியெல்லாம் நம்மை அன்பு செய்தார்? சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். (பிலிப்.2:8)

ஆவியார் இன்றும் ஆற்றலோடு அர்ச்சிக்கும் பணியில் (கவனிக்கவும், வெறும் அற்புதங்கள் புரியும் பணியில் அல்ல) ஈடுபட்டு நம்மில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆம் சமுதாய ஈடுபாடு உடையவராக, புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பிக் காக்கத் துடிப்பவராகவே விவிலியக் கடவுள் வெளிப்படுகிறார்.

பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருநது வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிய, பபிலோனியாவிலிருந்து புனிதநகர் எருசலேம் நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலைப் பயணங்களாகட்டும், புதிய ஏற்பாட்டில் கல்வாரி நோக்கிய இயேசுவின் மீட்புப் பயணமாகட்டும், எல்லாமே வளமான மனித சமுதாய நோக்குடையவை.

புதிய சமூதாயம் - அதுவே இயேசுவின் இலட்சியம்.
புதிய சமுதாயம் - அதற்கே இயேசுவின் அர்ப்பணம்.

நமக்கும் கதியும் இலட்சியமும் கடவுளுக்கு அப்பால் - அது இறையாட்சியே. நம்மை அர்ப்பணிப்பதும் இறைவனுக்கல்ல. இறைவனுக்கு நாம் தேவையுமில்லை. ஆனால் இறைவனின் கனவான இறையாட்சிக்கு நாம் தேவை.

நமது மூவொரு கடவுள் சமுதாய நோக்கு, சமுதாய ஈடுபாடு கொண்டவர் மட்டுமல்ல. தானே ஒரு சமுதாயமாக - ஒரு குடும்பமாக வாழ்பவர்.

“கடவுள் தம் உருவில் (தமது சாயலாக) மானிடரைப் படைத்தார். கடவுளின் உருவிலேயே (தெய்வச் சாயலாகவே) அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் ” (தொ.நூ.1:27) அந்த உரு, அந்தத் தெய்வச் சாயல் எதில் எப்படி வெளிப்படுகிறது? மனித உடலிலா? இருக்க முடியாது. காரணம்? கடவுளுக்கு உடலில்லை. அரூபியான மனித ஆன்மாவிலா? மனித ஆன்மா கடவுளின் சாயல் என்ற சிந்தனை ஒரளவு மரபுச் சிந்தனையாக இருந்தாலும் அவ்வளவு பொருத்தமானமாகத் தோன்றவில்லை. வானதூதர்கள் அரூபிகளே. அதற்காக அவர்கள் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டார்கள் என்ற குறிப்புக்கு இடமில்லை. மனிதன் மட்டுமே கடவுளின் சாயல் - அதுவும் உறவிலே. கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார். மனிதனையும் ஒரு குடும்பமாகத் தன் சாயல் விளங்கப் படைத்தார். குடும்பமாக வாமும் மனிதனே மூவொரு கடவுளுக்கு சாட்சியாக இருக்கிறான்.

“மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று” (தொ.நூ.2:18) என்ற கடவுளின் சிந்தனைக்கே காரணம் அவரது உள்வாழ்க்கைதான். தன் சாயலாகப் படைக்கப்பட்டவன் எப்படித் தனியாக இருக்க முடியும்? திரித்துவம் ஒரு கணிதப் புதிர் அன்று (1+1+1-1?) மாறாக அது உறவின் பிறப்பிடம். உறவுகளின் சங்கமம்.

“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்”. (மத்.28:19) திருமுழுக்கு என்ற அருள்சாதனம் தண்ணீருக்குள் மட்டுமல்ல, தமதிரித்துவத்திற்குள் நம்மை மூழ்கடிக்கிறது. நாம் மூவொரு கடவுளுக்குள்ளும், மூவொரு கடவுள் நமக்குள்ளும் உறைகிறோம். எனவே கிறிஸ்தவ வாழ்வு என்பது மூவொரு கடவுளின் வாழ்வில் பங்கேற்பதாகும். மூவொரு கடவுளின் வாழ்வு தந்தை மகன் தூய ஆவியில் விளங்கும் அன்பு உறவாகும். :

கடவுளை ஒரு சக்தியாகவோ வல்லமையாகவோ மட்டும் பார்க்காமல் தந்தை மகன் தூய ஆவி என்ற அன்புறவிலே பங்கு கொள்வதற்கு அழைப்பதுதான் கிறிஸ்தவ நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு சாட்சியம் பகர, தந்தையின் அன்பில் ஊன்றி நின்று ஆவியாரின் அருள்பொழிவால் வழிநடத்த இயேசுவே கற்றுக் கொடுத்திருக்கிறார். இவ்விதம் தந்தையோடும் ஆவியோடும் அவர் வாழ்ந்த வாழ்வே இம்மறையுண்மையை விளக்கிக் காட்டுகின்றது. நாமும் இத்தகைய உறவு வாழ்வை வாழ்வதற்கே நமது கிறிஸ்தவ நம்பிக்கை அழைக்கிறது.

 

ser ser ser ser

நீர் என்னோடு இருப்பதால்!

மூவொரு இறைவன் ஒரு மறைபொருள். இந்த மறைபொருளை நாம் புரிந்து கொள்ளவும், விளக்கிச் சொல்லவும் இயலாது.

இப்படிச் சொல்லி மறையுரையை முடித்துவிடலாம் என நினைத்தேன்.

மூவொரு இறைவன் - ஒரு அனுபவம்.

கடவுள் அனுபவம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு சமூகத்தவர் அல்லது ஒரே நம்பிக்கையைப் பகிர்கின்ற மக்கள், தங்கள் கடவுள் இப்படித்தான் என்று அனுபவித்து அதைச் சொற்களால் வடிக்க முயற்சி செய்கின்றனர். யூதர்களின் யாவே, இசுலாமியர்களின் அல்லா, இந்துக்களின் விஷ்ணு-பிரம்மன்-சிவன், புத்தர்களின் புத்தர், சைனர்களின் மகாவீரர் இப்படியாக, மனிதர்கள் கடவுளர்களையும், கடவுள்-மனிதர்களையும் கொண்டாடி வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட கடவுள் என்பவர் ஒரு அனுபவமே.

'அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை' என்று நடுவரைப் பற்றி லூக்கா எழுதும் பதிவில் அந்த மனிதர் பெற்றிருப்பதும் கடவுள் அனுபவமே.

ஆக, மூவொரு இறைவன் என்பது வெறும் நம்பிக்கைக் கோட்பாடு அல்ல. மாறாக, முதலில் அது ஓர் அனுபவம்.

இந்த அனுபவத்தை விவிலியம் பல இடங்களில் பதிவு செய்துள்ளது: ஆபிரகாமுக்கு மெம்ரே என்ற இடத்தில், மோசேக்கு இன்றைய முதல் வாசகத்தில், யோசுவாவுக்கு எரிக்கோவில், திருத்தூதர்களுக்கு இயேசுவில் (நற்செய்தி வாசகம்), முதல் கிறிஸ்தவர்களுக்கு தூய ஆவியாரில் (இரண்டாம் வாசகம்).

என் வாழ்வில் மூவொரு இறைவன் அனுபவம் என்ற ஓர் அனுபவத்தைப் பெற எனக்கு உதவியது திருப்பாடல் 23. இத்திருப்பாடலின் பின்புலத்தில் நான் மூவொரு இறைவனைப் பற்றிய என் புரிதலை முன்வைக்கிறேன்.

முதலில், அனுபவம் என்றால் என்ன?

அனுபவம் என்பது ஒரு நிகழ்வில் பங்கேற்கும் ஒருவர், அந்த நிகழ்வை தன்னுடைய பின்புலத்திலிருந்து கண்டு, அந்த நிகழ்வு தன்மேல் தாக்கத்தை ஏற்படுத்த அனுமதித்து, அந்தத் தாக்கத்தை அறிவால் உணர்வது.

திருச்சியிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்து செல்கிறது. பேருந்தில் நடத்துனர், ஓட்டுநர் உட்பட 30 பேர் இருக்கிறோம். இந்த 30 பேரும் பேருந்து நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஆனால், இவர்களின் பின்புலம் வேறு. நடத்துனர், ஓட்டுநர், புதிதாய் மணமுடித்த தம்பதியினர், வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டவர் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தைக் கொண்டிருக்கிறார். மதுரையில் இறங்கியவுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை உணர்வர்: 'பஸ் ஒரு பக்கம் இழுக்குதுய்யா. கியர் சரியா விழல. ஆனா, ரோடு ஃப்ரீயா இருந்துச்சு' என்பார் ஓட்டுநர். 'இந்த பஸ்ல ஏறுன எல்லாரும் 500 ரூபாய்த் தாளை நீட்டினாங்க. சில்லறை வாங்கப் போகணும்' என சலித்துக்கொள்வார் நடத்துனர். 'இரண்டு நாளா தூக்கமில்லை. பஸ்ல நல்லா தூங்கியாச்சு' என்பார் வெளியூரில் வேலைக்குச் சென்ற ஒருவர். 'இருக்கை சாய்வா இருந்துச்சு. நான் கால அதுல தூக்கி வச்சுகிட்டேன்' என்று சொல்லும் குழந்தை. 'வாவ்! வாட் எ லவ்லி ட்ரைவ்!' என வியப்பார் வெளிநாட்டவர். 'என்னங்க! அதுக்குல்லயும் மதுரை வந்துடுச்சு!' என்று தன் கணவனின் காதில் சிணுங்குவாள் புதிதாய் மணமுடித்த காதலி-மனைவி. இதுதான் இவர்கள் பெற்ற அனுபவம்.

இரண்டாவதாக, எதற்காக நாம் கடவுளைத் தேடுகிறோம்?

நம் வாழ்வில் நாம் உணரும் பத்து எதிர்மறை உணர்வுகளில் அல்லது உணர்வுகளால் நாம் இறைவனைத் தேடுகிறோம் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்:

1. பயம் - எதிர்காலம், நிகழ்காலம், மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய பயம்.
2. கோபம் - எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததால் எழும் கோபம்.
3. குற்றவுணர்வு - நாம் செய்த தவறு அல்லது பாவத்திற்காக எழும் வருத்தம்.
4. தாழ்வு மனப்பான்மை - தன்மதிப்பு குறைந்த நிலை.
5. பொறாமை - குறைவு மனப்பான்மை கொண்டிருத்தல்.
6. பலிகடா ஆக்கப்படுவது - எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று உணர்வது.
7. ஒதுக்கப்படுதல் - பிறப்பிலிருந்து அல்லது சூழ்நிலைகளால்.
8. நிராகரிக்கப்படுதல் - தகுதி பெற்றிருந்தும் தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற உணர்வு.
9. விலகிக்கொள்தல் - ஒரு நபர் தானே விலகிக் கொள்தல்.
10. இறுமாப்பு - தன்னிடம் இருப்பதை விட அதிகமாகக் காட்டிக்கொள்வது. லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போல.

இந்த உணர்வுகளில் சில உணர்வுகளை, அல்லது எல்லா உணர்வுகளையும் உணருகின்ற ஒருவர், அவற்றுக்கு மாற்றாக அல்லது மருந்தாக நேர்முக உணர்வுகளைத் தேடுகின்றார். பயத்திற்கு மருந்தாக நம்பிக்கை, கோபத்திற்கு மருந்தாக ஏற்றுக்கொள்தல், குற்றவுணர்வுக்கு மருந்தாக மன்னிப்பு, தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாக தன்மதிப்பு, பொறாமைக்கு மருந்தாக நிறைவுமனம், பலிகடா மனநிலைக்கு மருந்தாக தலைவன் மனநிலை, ஒதுக்கப்படுதலுக்கு மருந்தாக உள்வாங்கப்படுதல், நிராகரிக்கப்படுதலுக்கு மருந்தாக அங்கீகரிக்கப்படுதல், விலகிக்கொள்தலுக்கு மருந்தாக பங்கேற்றல், இறுமாப்புக்கு மருந்தாக தன்னறிவு.

மேற்காணும் மருந்து உணர்வுகளை அடையும் பயணமே இறையனுபவம்.

மூன்றாவதாக, திருப்பாடல் 23ல் மூவொரு இறைவன்.

'மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால்
எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்.
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்' (திபா 23:4)

இந்த உலகில் எதிர்மறை உணர்வுகள் இருக்காது என்பது எதார்த்தம் அல்ல. ஆனால், எதிர்மறை உணர்வுகளிலும் 'நீர் என்னோடு இருக்கிறீர்' என்று தாவீது தன்னுடைய ஆண்டவரின் உடனிருப்பை உணர்கிறார். தாவீது கொண்டிருந்த பயம், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை, இறுமாப்பு, பொறாமை போன்ற அனைத்திலும், அனைத்தின் நடுவிலும் கடவுளின் உடனிருப்பை உணர்கின்றார். அந்த உடனிருப்பு தீங்குகளை அகற்றுவதில்லை. ஆனால், தீங்கு பற்றிய அச்சத்தை அகற்றுகின்றது.

கிறிஸ்தவ மரபில், இங்கே, 'நீர்' என்று தாவீது விளிப்பவரை, 'தந்தை' என எடுத்துக்கொண்டால், 'கோல்' என்பதை 'மகன்' என்றும், 'நெடுங்கழி' என்பதை 'தூய ஆவியார்' என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

எப்படி?

ஆடுகளை மேய்க்கும் ஒவ்வொரு ஆயனும் தன் கையில் கோல் ஒன்றையும், நெடுங்கழி ஒன்றையும் வைத்திருப்பான். இவை ஆயனின் கைகளில் இருப்பவை என்று சொல்வதை விட, இவை அவனுடைய கைகளின் நீட்சிகள் என்றே சொல்ல வேண்டும். 'ஆடுகளை வழிநடத்தவும், வரிசையை ஒழுங்கமைக்கவும், எதிரி விலங்குகளை விரட்டவும், திருடர்களை எதிர்க்கவும், சில நேரங்களில் அதை ஊன்றி அதில் சாய்ந்துகொண்டே தூங்கவும்' ஆயன் கோலைப் பயன்படுத்துகின்றான். 'நெடுங்கழி' என்பது ஆடுகளுக்கு இலை, தழைகளை மரத்திலிருந்து இழுத்துப் போடுவதற்காக, நுனியில் சிறு கத்தி கட்டப்பட்ட ஒரு நீண்ட குச்சி. ஆக, 'கோல்' ஆடுகளுக்கு 'பாதுகாப்பையும்', 'நெடுங்கழி' ஆடுகளுக்கு 'உணவையும்' தருகிறது. அல்லது, 'கோல்' என்பது 'பாதுகாப்பின்,' 'நெடுங்கழி' என்பது 'பசியாற்றுதலின்' அடையாளங்கள்.

யூதாவின் செங்கோலாகப் பிறந்த இயேசு தன்னுடைய இறப்பால் நமக்கு பாவத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்தார். தன்னுடைய அருள்வரங்களால் தூய ஆவியார் நம் பசியாற்றுகிறார்.

ஆக, ஆயன் மற்றும் ஆயனின் நீட்சிகளாக இருக்கின்ற கோலும், நெடுங்கழியும், மூவொரு இறைவன் அனுபவத்தைத் தருகின்றன. 'ஆடு மேய்ப்பவன் - கோல் - நெடுங்கழி' என மூன்றும் வௌ;வேறாக இருந்தாலும், 'உடனிருப்பு - பாதுகாப்பு - பசியாற்றுதல்' என்னும் மூன்று செயல்களில் ஒருவரோடு ஒருவர் இணைந்தே இருக்கின்றனர்.

மேலும்,

திபா 23:6இல் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது:

'உம் அருள்நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்.
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்'

இயேசு தருவது அருள்நலம். ஆவியார் உறுதிசெய்வது பேரன்பு. இந்த இரண்டும் புடைசூழ்ந்து வர ஒருவர் ஆண்டவரின் (தந்தையின்) இல்லத்திற்குள் நுழைகின்றார். அங்கே நெடுநாள் வாழ்கின்றார்.

இப்படித்தான்,

நான் மூவொரு இறைவன் மறைபொருளை,

'உடனிருப்பு - பாதுகாப்பு - பசியாற்றுதல்'

'ஆண்டவரின் இல்லம் - அருள்நலம் - பேரன்பு'

எனப் புரிந்துகொள்கிறேன்.

நிற்க.

வாழ்வின் ஒவ்வொரு நன்மையான, தீமையான, ஒன்றும் புரியாத சூழலிலும், ஏதோ ஒன்றைப் பார்த்து, அல்லது ஏதோ ஒருவரைப் பார்த்து,

'நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்'

என்று நம்மால் சொல்ல முடிந்தால்,

அதுவே, அவரே மூவொரு இறைவன்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com