மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாடுகளின் குருத்து ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 50: 4-7 | பிலிப்பியர் 2: 6-11 | மத்தேயு 26: 14-27: 66

ser


வாழ்க்கையை முன் கூட்டியே தீர்மானிப்பது நல்லதுதான். இயேசு தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்தவராக இன்று எருசலேம் நகரில் நுழைகின்றார். தான் சிலுவையில் கையளிக்கப்படப் போவது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும் (மத். 26:2). தன்னை 12 சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுக்கப் போவதும் தெரியும் (மத். 26:21), சீடர்கள் சிதறிப் போவார்கள் என்பதும் தெரியும் (மத். 26:33). தான் பாடுகள் படப்போகும் அனைத்தும் அவருக்குத் தெரியும். எல்லாம் தெரிந்துமா அவர் எருசலேம் நுழைந்தார் ?

ஆம்! எல்லாம் தெரிந்தும், அறிந்தும், புரிந்தும், உணர்ந்தும் தான். ஏனெனில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரது வாழ்க்கையின் குறிக்கோள். இந்தப் பாடுகளின் இறப்பு, உயிர்ப்பு வழியாகத் தனது அன்பு எவ்வளவு பெரிது என்பதை உலக மக்கள் அறிய வேண்டும் என்பது தந்தையின் விருப்பமாகும். பாடுகளை அறிந்த இயேசு மனிதத் தன்மையால் முகம் குப்புற விழுந்து, என் தந்தையே! முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் (மத். 26:39) என்று செபிப்பதாக வாசிக்கிறோம். ஆனால் அச்சம் ஒரு பக்கம் ஆட்கொண்டாலும் தந்தையின் மீது மகன் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாத ஒன்று.

நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் எதிரிகள், வீடு ஒன்றை நெருப்பு வைத்தார்கள். வீடு பற்றி எரிந்து வீட்டில் இருந்த 3 பேர் தந்தை, தாய், மகள் மூவரும் வெளியே ஓடிவந்தார்கள் நெருப்போ பரவியது. மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் எழுந்தான். அம்மா ! அப்பா! என்னைக் காப்பாற்றுங்கள் என்ற கூக்குரல் ஒலித்தது. அப்போதுதான் பெற்றோருக்கு மகன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. சன்னல் எரிந்து விழக் கண்ட பெற்றோர் மகனே! கீழே குதியும். உன்னை நாங்கள் தாங்கிப் பிடித்துக் கொள்வோம் என்றனர். ஐயோ பயமாக இருக்கிறது. நீங்கள் நிற்பது தெரியவில்லையே என்றான். நாங்கள் இங்கே நிற்கிறோம். குதி குதி என்று சொல்ல சப்தம் கேட்கும் திசையை நோக்கிக் குதித்தான். தகப்பன் தாங்கிக் கொண்டார். இதுதான் மகன் தன் தந்தை மீது கொண்டிருந்த நம்பிக்கை.

இத்தகைய மனநிலைதான் இயேசுவைத் துன்பக் கிணற்றுக்குள் துணிந்து குதிக்க வைத்தது. தன் தந்தை தன்னைக் கைவிட மாட்டார் என்பதே இயேசுவைத் துணிந்து போகச் செய்தது. இன்று பவுல் அடிகளார் கூறுவதுபோல இயேசுவை உயிர்த்தெழச் செய்து, அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தி விண்ணகத் தையும், மண்ணகத்தையும் கீழுலகத்தையும் அவருக்கு அடிபணிய வைத்தார் (பிலி. 2:11).

சிலுவை வழியாகத்தான் இயேசு இறைமகன் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. யூதர்களுக்கு இடறலாகவும், கிரேக்கர்களுக்கு (புறவினத்தாருக்கு) மடமையாகவும், ஆனால் விசுவாசம் கொண்டவர்களுக்குச் சிலுவையில் இறைமகனாகவும் இருக்கிறார் (1 கொரி. 1:23). தன்னையே அழித்துத் தன் ஆடுகளுக்காக உயிர் கொடுத்தார் இயேசு (யோவா. 10:18).
ஆம். பாடுகள் நம்மில் எழ வேண்டிய பரிதாப உணர்ச்சியல்ல! அதில் நாம் பங்கு பெற அழைக்கப்படுகிறோம். இயேசு எந்தும் சிலுவை நமக்கு நம்பிக்கை, நமக்கு மீட்பு, நமக்கு வழி, நமக்கு மகிமை.

மதமும், அரசியலும் மனித வரலாற்றில் கைகோர்த்து கொள்ளும் போது நல்லவையும் நடந்துள்ளன. தீயவையும் நிகழ்ந்துள்ளன. நீதியும் உண்மையும் காக்கப்பட்ட நேரங்கள் உண்டு. உண்மையை நீதியை மூடி மறைத்ததும் உண்டு. குருத்தோலை ஏந்தி வெற்றி வீரராகப் பவனியில் அழைத்து வரப்பட்ட இயேசுவுக்கு என்ன நிகழ்ந்தது தெரியுமா? தன்னல் குரு கைப்பாஸ் தலைமைச் சங்கத்தைக் கூட்டி இயேசுவைக் குற்றவாளியாக்கப் பொய்ச் சான்று தேடுகிறான். புரட்சியாளர், வரி கொடுக்கத் தடுத்தவர், தன்னை அரசனாக்கிக் கொண்டார் இயேசு என்றெல்லாம், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு வித்திட்டான். இன்றும் மதம், சிந்திக்க தெரியாத பாமர மக்களைத் தன் கைவசம் வைத்து நீதிக்கும், உண்மைக்கும் முரணாகச் செல்லத் தூண்டுகிறது. இதனால் இயேசுவின் சீடர்களுக்கு இந்த உலகம் தருவதோ சிலுவை. ஆனால் வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது, உணருவோம்.

ser ser

நம்மை மற்றவர்க்குப் பிடிக்குமா?

யார் அழகாக இருக்கின்றார்களோ அவரை எல்லாருக்கும் பிடிக்கும். எது அழகாக இருக்கின்றதோ அது எல்லாருக்கும் பிடிக்கும்.

இந்த உலகத்திலே வாழும் ஆயிரக்கணக்கான. இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்கு இயேசுவைப் பிடிக்கும். காரணம் அவரிடம் காணப்படும் அழகு.

இயேசு - அவரது உணர்வில் அழகு! இயேசு - அவரது எண்ணத்தில் அழகு! இயேசு - அவரது சொல்லில் அழகு! இயேசு - அவரது செயலில் அழகு! எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சுமந்த சுமையில் - சிலுவையில் அழகு! சுமை சுமக்க இயேசு மனமுவந்து முன்வந்த நாள்தான் குருத்து ஞாயிறு.

இயேசுவுக்கு அவரை மக்கள் எப்படி நடத்தப்போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். அவர் மீது பாவத்தைச் சுமத்துவார்கள், பழியைச் சுமத்துவார்கள், கன்னத்தில் அறைந்து, கற்றூணில் கட்டி, அடிமேல் அடி அடித்து, தோள்மீது சிலுவையைச் சுமத்தி, அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். தனக்கு நடக்கப்போவதை அறிந்தே. தெரிந்தே அவர் எருசலேம் நகருக்குள் நுழைந்தார். இயேசு குருத்து ஞாயிறைப் பற்றி முன்பே தனது சீடர்களுக்கு மூன்று முறை அறிவித்திருந்தார். அவரைப்பற்றி இறைவாக்கினர் எழுதி வைத்திருந்த யாவும் நிறைவேறும் (லூக் 18:31) எனச் சொல்லியிருந்தார். எசாயா இறைவாக்கினர் எழுதி வைத்திருந்தது போல (எசா 50 : 4-7) அவர் அடிப்பவர் முன் கிளர்ந்தெழவில்லை : நிந்தனை செய்தோர் முன்னும், காறி உமிழ்ந்தோர் முன்னும் முகத்தை மறைக்கவில்லை ; அத்தனை சுமைகளையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். இதற்குக் காரணம் சுமைக்கும், அழகுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அழகுக்கு அகிலத்தைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு.

எங்கே சுமை இருக்கின்றதோ அங்கே அழகு இருக்கும்.
வானம் சந்திரனைச் சுமக்கும் போது அழகு பெறுகின்றது.
பூமி மனிதனைச் சுமக்கும் போது அழகு பெறுகின்றது.
பூ மணத்தைச் சுமக்கும்போது அழகு பெறுகின்றது.
ஆம், சுமைக்கும், அழகுக்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு .

இன்று இயேசு எத்தனையோ பேருக்கு அழகான ஆண்டவராக, நண்பராக, அன்பராகக் காட்சியளிக்கின்றார். இதற்குக் காரணம் உலக மக்களின் நலனுக்காக அவர் சுமந்த சுமைகள்!

அவர் சுமந்த ஒவ்வொரு சுமையும் சிலுவையும் அவரை அழகுக்கு அழகு செய்யும் அற்புதப் பிறவியாக்கியது. ஒரு தாய் அவளது குழந்தையைச் சுமக்கும்போது தாய்மை என்னும் அழகைப் பெறுவது போல, இயேசு நமது பாவங்களைச் சுமந்தபோது உலக மீட்பர் என்னும் அழகைப் பெற்றார்.

அன்று அவர் கண்ணிலே சுமை! அன்று அவர் கருத்திலே சுமை! அன்று அவர் சொல்லிலே சுமை! அன்று அவர் செயலிலே சுமை | அன்று அவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் சுமை! ஆனால் இன்றோ , அவர் மீது காணப்படும் காயங்கள் கூட அழகாகத் தெரிகின்றன. காரணம் அவர் சுமந்த சுமைகள்.

இன்று இயேசு நமக்குத் தரும் அருள்வாக்கு என்ன?

எனதருமை மகளே, மகனே! அன்று சுமை சுமக்க, சிலுவையைச் சுமக்க நான் பயந்திருந்தால் நான் எருசலேம் நகருக்குள் நுழைந்திருக்க மாட்டேன். அன்று நுழைந்து, சாவு என்னும் மாபெரும் சுமைக்கு (இரண்டாம் வாசகம்) என்னையே நான் கையளித்ததினால்தான் எனக்கு உயிர்ப்பு என்ற அழகும், மீட்டர் என்ற அழகும், ஆண்டவர் என்ற அழகும் கிடைத்தன. நான் அழகாக இருப்பதினால்தான் உலகத்தை என் பக்கம் ஈர்க்கமுடிகின்றது. நீயும் சுமை சுமக்க முன் வா! அழகாக மாறு! உன்னை எல்லாரும் விரும்புவார்கள். நீ அன்பு செய்யப்படும்போது ஆனந்தமடைவாய்! என்கின்றார் இயேசு.

நிலம் தன்னை மனிதன் தோண்டும்போது, மரம் வைக்கத் தோண்டுவான், தண்ணீர் எடுக்கத் தோண்டுவான் எனப் பொறுமையாக இருப்பது போல, நாம் சிலுவையால், துன்பத்தால், சுமையால் தோண்டப்படும்போது பொறுமையாக வாழ முன்வருவோம் : அழகான மனிதர்களாவோம்.
மேலும் அறிவோம் :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள் : 151).

பொருள் : தன்னைத் தோண்டிக் குழிபறிப்போரையும் கூட நிலமகள் சுமந்து நலம் புரிகிறாள். அதுபோன்று தம்மை அவமதித்து இழிவாகப் பேசுவோரையும் பொறுத்துக்கொள்ளுவது தலைசிறந்த பண்பாகும்.

ser ser

ஓம் இளைஞன் ஓர் இளம் பெண்ணை முதல் வாரம் சைக்கிளிலும், இரண்டாம் வாரம் பைக்கிலும், மூன்றாம் வாரம் மாருதிக் காரிலும் ஏற்றிக் கொண்டு, கடற்கரைக்குச் சென்று பல்வேறு பரிசுப் பொருள்களை அவளுக்கு அளித்து அன்பு மழையில் நனைய வைத்தான். அவன் ஒரு பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்பெண் அவனைப் பார்த்து, "நான் உன்னைக் காதலிக்கின்றேன் கண்ணா " என்றான், அவன் அவளிடம், "நான் பயன்படுத்திய சைக்கின், பைக், மாருதிக்கார் அனைத்துமே என்னுடைய நண்பனுடையது" என்றான். உடனே அவள் அவனிடம், " அப்ப, நான் போயிட்டு வர்றேன் அண்ணா ' என்று கூறிவிட்டுக் கிளம்பினாள். காசு இருந்தால் அவன் கண்ணன்", காசு இல்லை என்றால் அவன் அண்ணன், குளத்திலே தண்ணீர் இருந்தால் அதில் கொக்கும் மீனும் இருக்கும்; தண்ணி இல்லை என்றால், அவை வேறொரு குளத்திற்குச் சென்றுவிடும்.

குருத்து ஞாயிறு திருவழிபாடு மக்களின் நிலையற்றத் தன்மையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எந்த மக்கள் குருத்து ஞாயிறு அன்று "ஓசான்னா" பாடிக் கிறிஸ்துவை எருசலேம் திருநகருக்கு அழைத்துச் சென்றார்களோ, அதே மக்கள் கூட்டம் கிறிஸ்து கைது செய்யப்பட்டபோது அவன் ஒழிக" என்று கூச்சலிட்டது.

கிறிஸ்துவின் பாடுகள் விதியின் விளையாட்டோ தலைமைக் குருக்களின் சதியோ அல்ல; மாறாக அது வகுத்தான் வகுத்த வழி: கடவுளின் திட்டம். அத்திட்டத்தைக் கிறிஸ்து மக்கள் மீட்புக்காக மன உவப்புடன் ஏற்று நிறைவேற்றினார். இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் சொயா துன்புறும் ஊழியனைப் பற்றி எழுதியுள்ள நான்கு கவிதைகளில் ஒன்று. துன்புறும் ஊழியனாகிய கிறிஸ்து தமது பாடுகளை நெஞ்சுறுதியுடன் ஏற்கிறார்; தம் முகத்தைக் கற்பாறையாக ஆக்கிக் கொண்டார் (எசா 50:7). இன்றைய பதிலுரைப் பாடல் கிறிஸ்து எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டார் என்பதை எடுத்துரைக்கிறது. 'என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்" (திபா 22). இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கடவுளுக்குக் கீழ்ப்படித்தார் எனக் கூறுகிறது (பிலி 2:6). இன்றைய நற்செய்தி மத்தேயு எழுதியுள்ளபடி கிறிஸ்துவின் பாடுகளை எடுத்துரைக்கிறது (மத் 26:14- 27:16),

கிறிஸ்துவின் பாடுகளைப் பொருத்தமட்டில், அவருடைய உடல் வேதனையைவிட மன வேதனையே அதிகம். பாடுகளின்போது அவர் அனைவராலும் கைவிடப்பட்டார். யூதாசு அவரைக் காட்டிக் கொடுத்தான்; பேதுரு அவரை மறுதலித்தார்; சீடர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தன. தலைமைச் சங்கம் அவருக்கு மரண தண்டனை விதிக்க ஆளுநர் பிலாத்தை வற்புறுத்தியது; மக்கள் கூட்டம் பாபாசை விடுவிக்கக் கோரி கிறிஸ்துவைச் சிலுவையில் அறைய வேண்டுமெனக் கூச்சலிட்டது. ஆளுநர் பிலாத்து தன் கைகளைக் கழுவி நழுவி விட்டான்.

ஒருவருக்குத் துன்பம், கேடுகாலம் வருவதும் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பது தெரியவரும் என்கிறார் வள்ளுவர்.

கேட்டிலும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

கிறிஸ்துவின் பாடுகளின்போது அவரைவிட்டு நீங்காத ஒரே ஒருவர் அவரது வானகத் தந்தை மட்டுமே. இதைக் கிறிஸ்துவே தம் சீடர்களிடம் முன்னறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்து தம் சீடர்களிடம், "நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப் போவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்ளோடு இருக்கிறார்" (யோவா 16:32) என்று கூறினார்.

"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டர் என்று கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது கூறியது நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால் கிறிஸ்து சிலுவையில் சொல்லியது திருப்பா 22 முழுவதையும். இத்திருப்பா நம்பிக்கையின் பா; அவநம்பிக்கையின் பாடல் அல்ல; "நீரோ ஆண்டவரே! என்னைவிட்டுத் தொலைவில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்" (திபா 22:19). எனவே இருள் சூழ்ந்த நிலையிலும் கிறிஸ்து தந்தை யிடம் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை என்பது உறுதி, எத்தகைய துன்பச் சூழ்நிலையிலும் கடவுள் நம்முடன் இருக்கிறார். "அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகமாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார். அஞ்சாதே, திகைக்காதே" (இச் 31:8). "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்" (உரோ 8:31),

கிறிஸ்து புகழப்பட்ட போதும் இகழப்பட்ட போதும் ஒரே மனநிலையுடன் இருந்தார். மக்கள் அவரைப் போற்றிய போது அவர் புகழில் மயங்கவில்லை; தூற்றப்பட்டபோது அவர் மனமுடைந்து போகவில்லை . கிறிஸ்துவிடம் விளங்கிய மனநிலை பவுலிடம் இருந்தது. “போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழ்வார் புகழலும் இகழ்வார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை " (2 கொரி 6:8). கிறிஸ்துவிடமும் பவுலிடமும் விளங்கின மனநிலையுடன் நாம் வாழ்ந்தால், நாம் உண்மையில் முதிர்ச்சி பெற்ற மனிதர்கள்.

தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "உங்களுக்குப் பிடித்த மொழி ஆங்கில மொழியா அல்லது தமிழ் மொழியா?" என்று கேட்டதற்கு ஒரு மாணவன், "சார்! எனக்குப் பிடித்த மொழி உங்கள் மகள் தேன் மொழி" என்றான்! தமக்குப் பல மொழிகள் பிடித்திருக்கலாம். ஆனால் கிறிஸ்து வுக்குப் பிடித்த மொழி மௌன மொழி; பிடித்த இராகம் மௌன இராகம், பாடுகளின்போது அவர் மீது அடுக்கடுக்காய்க் குற்றங்களைச் சுமத்திய போது அவர் மறுத்து ஒரு பதிலும் கூறவில்லை . "இயேசு பேசாதிருந்தார்" (மத் 26:63). அதைக்கண்ட ஆளுநர் பிலாத்து வியப்படைந்தான். புனிதவாரத்தில் நாம் மௌனமாக இருப்போம். மௌனம் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம்,

திருமணமான ஒரு பெண் தன் தோழியிடம், "என் கணவர் மனம் மாறவேண்டுமென்று எனக்குத் தெரிந்த எல்லா விரதங்களையும் கடைப்பிடித்தும் அவர் மனம் மாறவில்லை " என்றார். அதற்குத் தோழி, இன்னும் ஒரு விரதம் பாக்கியிருக்கிறது. அதுதான் மௌன விரதம்" என்றார்.

பசியைப் பொறுத்துக் கொண்டு, சாப்பிடாமல் நோன்பு இருப்பவர்களைவிடப் பிறரின் இன்னாச் சொல்லைப் பொறுத்துக் கொள்பவர்களே மேலானவர் என்கிறார் வள்ளுவர்,

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இள்ளாச் சொல் நோற்பாரின் பின் (குறள் 150)

புனிதவார சிந்தனைக்கு
கடவுளுக்குப் பிடித்த மொழி மௌனமொழி!
கடவுளுக்குப் பிடித்த இராகம் மௌன இராகம்!
கடவுளுக்குப் பிடித்த விரதம் மௌன விரதம்:

ser ser

புகழ்ச்சிப் பவனியா புரட்சிப் பவனியா?

இயேசு ஏன் சோதனைக்கு ஆளானார்? என்ற கேள்வியோடு தவக்காலத்தைத் தொடங்கினோம்.

இயேசு ஏன் துன்பத்துக்கு ஆளானார்? என்ற கேள்வியோடு தவக்காலத்தை நிறைவு செய்கிறோம்.

குருத்து ஞாயிறு இன்று தென்னை மரத்தின் இளம்தளிர்களைக் கொய்து கரங்களில் ஏந்தி ஆலயம் நோக்கிப் பவனியாகச் செல்கின்றோம். கையில் உள்ள இளந்தளிர் பேசினால் நம்மிடம் என்ன சொல்லும்? “தென்னை மரத்தின் எதிர்காலம் நான். இளம் பருவத்திலேயே உங்கள் மகிழ்ச்சிக்காக என்னைக் கையளித்து விட்டேன். வளர வேண்டிய நான் மரணத்தைத் தழுவி விட்டேன். இயேசுவின் வரவேற்புக்கு நான் பயன்பட்டதற்காகப் பெருமைப் படுகிறேன்.

இறைவனுக்காக இறையாட்சிக்காக நாம் வாழ வேண்டும் என்று சுட்டிக் காட்டிய மீட்பர் இயேசுவும் இளம்வயதிலேயே தியாகப் பலியானார்.

இறப்புப் பற்றிய பயம் இயல்பானதுதான். ஆனால் இலக்குத் தெளிவும் இலட்சிய வேட்கையும் கொண்டவர்கள் மரணத்தை நினைத்து அஞ்சுவதில்லை. நெருங்கி வரும் சாவை நோக்கி அணிவகுத்து நிற்பார்கள்.

மார்ட்டின் லூத்தர் கிங் அத்தகையவர்களில் ஒருவர். அமெரிக்காவில் கருப்பின மக்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தவர். எவ்வித அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் போராடியவர்.

1968 ஏப்பிரல் 4ஆம் நாள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முந்திய நாள் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் சொன்னார்: “நமக்கு முன்னே கடினமான நாட்களைச் சந்திக்க இருக்கிறோம். அதைப் பற்றிய அலட்டல் எனக்கில்லை. மலை உச்சிக்கு வந்து விட்டேன். எல்லாரையும் போல எனக்கும் நீண்டகாலம் வாழ ஆசை தான். ஆனால் இப்போது அதைப் பற்றிய சிந்தனையே இல்லை. இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே என் ஒரே ஆசை. அவர்தான் என்னை மலை உச்சிக்கு அழைத்து வாக்களிக்கப்பட்ட பூமியைப் பார்க்கச் சொல்கிறார். அந்தப் பூமியில் நுழையும் வாய்ப்பு எனக்கு இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இரவில் உறுதியாக ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் ஓர் இனமாக ஒருநாள் அந்த வாக்களிக்கப்பட்ட பூமிக்குள் நுழைவோம்".

தன் தலைவன் இயேசுவைப் போல் தனது சாவைக் கண்முன் கண்டார் மார்ட்டின் லூத்தர் கிங். அஞ்சிப் பின்வாங்கவில்லை. தன் இன மக்களின் விடுதலைக்காகத் துணிந்து சாவைச் சந்தித்தார், தழுவினார்.

இன்று திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு. எருசலேம் நோக்கிய இயேசுவின் வெற்றிப் பவனியைக் கொண்டாடுகிறோம். அது சாவதற் கென்றே நடந்த ஊர்வலம். அண்மையில்தான் லாசரை சாவினின்று உயிர்த்தெழச் செய்தார். அதைக் கண்டு பலர் அவர் மீது நம்பிக்கை கொண்டாலும் பரிசேயர்கள் கொலை வெறியோடு அவரது செயல்பாடு களுக்கு முடிவுகட்ட முனைந்தார்கள். “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது (யோ.11:50) அதனால் “அவர் திருவிழாவுக்கு வரமாட்டாரோ?” என்று மக்கள் பேசிக் கொண்டனர். ஆனால் இயேசு சாவைக் கண்டு அஞ்சுபவரா? மனிதர் எல்லாரும் வாழ்வதற்கென்றே பிறந்தவர்கள் இயேசுவோ சாவதற்கென்றே பிறந்தவர் அன்றோ ! “மானிட மகன்... தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்” (மத்.20:28) என்பதை எண்பிக்கும் நிகழ்வின் தொடக்கம்தான் குருத்து ஞாயிறு.

அன்று நடந்தது மக்களைப் பொருத்தவரை குருத்துப் பவனி, புகழ்ச்சிப் பவனி. ஆனால் இயேசுவைப் பொருத்தவரை அது கொள்கைப் பவனி, புரட்சிப் பவனி. மனித வாழ்வுக்கு அர்த்தம் தருவதே அவன் தனக்கென வகுத்துக் கொள்ளும் கொள்கைகளே! அந்த உயர்ந்த குறிக்கோளுக்காக உயிர்மூச்சையும் தியாகம் செய்வதில்தான் வாழ்வு நிறைவு காண்கிறது. அந்த நிறைவைக் கண்டவர் இயேசு.

மக்களின் சிந்தனையும் விருப்பமும் இயேசுவின் நோக்கமும் குறிக்கோளும் முற்றிலும் முரண்பட்டவை. மக்கள் உலக ஆசைகளோடு இயேசுவை அரசனாக்க நினைத்தார்கள். இயேசுவோ இறைவனின் ஆசையை நிலைநிறுத்தத் தன்னையே பலியாக்க நினைத்தார். உள்ளத்தில் முரண்பாடுகளோடு சென்றவர்கள் உண்மை வெட்ட வெளிச்சமாகும்போது இயேசு காட்டிக் கொடுக்கப்படுகிறார். அநீதத் தீர்ப்புக்கு ஆளாகிறார். சிலுவைப் பாடுகளைச் சந்திக்கிறார். கல்வாரி மரணத்தைத் தழுவுகிறார்.

எல்லோருக்கும் அரசர் இயேசுவே
இயேசுவுக்கு அரியணையோ சிலுவையே.
இதுவே குருத்தோலை ஞாயிறு சொல்லும் செய்தி.

நம்மை இயேசு பக்தர்களாக அல்ல, ரசிகர்களாக அல்ல, மாறாகச் சீடர்களாக வாழ அழைக்கிறார். பக்தன் ரசிகனாகத் தொலைவில் நின்று வியப்பவன். சீடனோ தன் தலைவனின் சிந்தைக்குள்ளே புகுந்து வாழ்பவன். பிறருக்காகத் தன்னையே அளித்து, ஏன், தன்னையே அழித்து நமக்கு வாழ்வு தந்த இயேசுவின் உண்மைச் சீடராய் உலகிற்கு அறிவிக்க வேண்டிய பணியும் நமக்குண்டு.

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழக்கும் எவருமே அதைக் காத்துக் கொள்வார் (மார்க்.8:34,35)

ser ser

தந்தையின் திருவுளம் நிறைவேறத் தன்னையே தியாகம்செய்த இயேசு

நிகழ்வு

முன்பொரு காலத்தில் ‘மூங்கில்கள் நாடு’ என அழைக்கப்படும் சீனாவில் விவசாயி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் மூங்கில் மரம் ஒன்றை வளர்த்து வந்தார். தன்னுடைய பிள்ளையைப் போன்று வளர்த்து வந்த அந்த மூங்கில் மரம் அகலமாகவும் உயரமாகவும் வளர்வதைக் கண்டு இவர் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார். அந்த மரத்தின் உயரத்தையும் அகலத்தையும் கண்டு வியந்துபோன பலர், அதைப் பெரிய தொகை கொடுத்து, விலைக்கு வாங்க வந்தபோதும்கூட இவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

இப்படியிருக்கையில் இவர் இருந்த பகுதியில் மழை பெய்யாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டது. விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாததால், நிலங்கள் எல்லாம் வறண்டுபோயின; ஆனால் இவருடைய நிலம் மற்றவர்களுடைய நிலங்களைவிடச் சற்று உயரமான பகுதியில் இருந்ததால், இவருடைய கிணற்றில் தண்ணீர் இருந்தது. அதைக் கொண்டு இவர் விவசாயம் செய்துவந்தார். ஒருநாள் இவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘நம்மிடம் தண்ணீர் இருப்பதால் நல்லமுறையில் விவசாயம் செய்கின்றோம். தண்ணீரில்லாத மற்ற விவசாயிகள் என்ன பாடு படுவார்கள்! அவர்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டும்!’ என்ற எண்ணம் இவருக்கு வந்ததால், தான் பிள்ளைபோன்று வளர்த்துவந்த மூங்கில் மரத்திடம் சென்றார்.

“மூங்கில் மரமே! உன்னால் ஒரு நல்லது நடக்கவேண்டும். அதனால் நான் உன்னை வெட்டிக்கொள்ளட்டுமா...?” என்று சற்று வருத்தத்தோடு கேட்டார். அதற்கு மூங்கில் மரம் அவரிடம், “இதில் என்னிடம் கேட்பதற்கு என்ன இருக்கின்றது...? நான், நீங்கள் வளர்த்த மரம்! அதனால் நீங்கள் என்னை உங்களுடைய விரும்பத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று மகிழ்ச்சியோடு சொன்னது மூங்கில் மரம். உடனே விவசாயி ஒரு பெரிய ரம்பத்தை எடுத்து, மூங்கில் மரத்தின் அடிப்பாகத்தில் வைத்து அறுத்தெடுத்தார். பின்னர் அந்த மூங்கிலை இரண்டாகப் பிளந்து, அதன்வழியாக தண்ணீர் போகிற வண்ணம், அதிலிருந்த தேவையில்லாத பகுதிகளை இவர் வெட்டியெடுத்தார். இவையெல்லாம் மூங்கில் மரத்திற்கு மிகுந்த வேதனையைத் தந்தாலும், ‘தன் தலைவரின் விருப்பம் நிறைவேறினால் போதும்’ என்று மகிழ்ச்சியோடு அது ஏற்றுக்கொண்டது.

இதற்குப் பின்பு விவசாயி இரண்டாக பிளக்கப்பட்ட மூங்கிலை தனது கிணற்றிலிருந்து வறண்டுபோயிருந்த தாழ்வான பகுதிகளை நோக்கி வைத்தார். தண்ணீர் அந்த மூங்கிலின் வழியாகப் பாய்ந்து. தாழ்வான பகுதியை அடைந்ததும், வறண்டு போயிருந்த அந்த நிலங்கள் எல்லாம் ஒருசில மாதங்களில் வளம்கொழிக்கத் தொடங்கின. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். மூங்கில் மரமோ, ‘தலைவர் என் வழியாய் மக்களுடைய துன்பத்தைப் போக்கிவிட்டார்’ என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய வலிகளை மறந்தது.

இந்த நிகழ்வில் வருகின்ற மூங்கில் மரம் எப்படி தன்னுடைய தலைவரின் விருப்பம் நிறைவேறத் தன்னையே தியாகம் செய்ததோ, அப்படி இயேசு கிறிஸ்து உலகை மீட்கவேண்டும் என்ற தந்தையின் திருவுளம் நிறைவேறத் தன்னையே தியாகமாகத் தருகின்றார். இன்றைய நாளில் நாம் பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். புனித வாரத்தின் நுழைவாயிலாக இருக்கும் இந்தப் பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்குச் சொல்லக்கூடிய செய்திகளை என்னவென்று இப்பொழுது நாம் சிந்தித்து பாப்போம்.

இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை

இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து, எருசலேம் திருநகரில் வெற்றிவீராய்ப் பவனி செல்வதை நினைவுகூறுகின்றோம். மக்கள் அனைவரும், ‘தாவீதின் மகனுக்கு ஓசன்னா’ என்று சொல்லி ஆர்ப்பரிகின்றார். ஆனால், இந்த ஆர்ப்பரிப்பெல்லாம் சிறிதுநேரத்திலேயே மாறி, இயேசு மக்களின் கையில் ஒப்புவிக்கப்படுகின்றார். பின்னர் அவர்கள் அவரைக் கொலை செய்யப்படுகின்றனர். இப்படி இன்பமும் துன்பமும் நிறைந்ததாக இயேசுவின் வாழ்க்கை

மனித வாழ்க்கையும்கூட இப்படி இன்பமும் துன்பமும் நிறைந்துதான். இன்பம் வருகின்றபோது கடவுளை நினைக்காத நாம், துன்பம் வந்ததும், கடவுள் நம்மைக் கைவிட்டதாகப் புலம்புகின்றோம். மனிதராகப் பிறந்த யாருக்கும், அதுவும் இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும் துன்பம் வரத்தான் செய்யும். ஆனாலும் நாம் மனவுறுதியோடும் இருக்கவேண்டும். யோவான் நற்செய்தியில் இயேசு இதைத்தான், “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவோடு இருங்கள்” என்று கூறுகின்றார் (யோவா 16:33). ஆகையால், நாம் இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வாழ்க்கையில் இறைவன்மீது பற்றுக்கொண்டு மனவுறுதியோடும் துணிவோடும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

தன்னையே தியாகம் செய்த இயேசு

இன்றைய இறைவார்த்தை, தந்தையின் திருவுளம் நிறைவேறுவதற்கு இயேசு தன்னையே தியாகம் செய்வதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு, கடவுள் தன்மையில் விளங்கியதையும் தம்மையே வெறுமையாக்கியதையும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்குத் தாழ்த்திக் கொண்டதையும் எடுத்துக்கூறுகின்றது. இயேசுவுக்கு, உலகை மீட்கவேண்டும் என்ற தந்தைக் கடவுளின் திருவுளம்தான் கண்முன்னால் இருந்தது. அதனாலேயே இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதும்தான் தன்னுடைய உணவு (யோவா 4: 34) என்றும் வாழ்ந்துவந்தார்.

அப்படியானால் இயேசுத் எப்படி தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் தன்னைத் தியாகம் செய்தாரோ, அப்படி நாம் ஒவ்வொருவரும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் தியாகம் செய்யவேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தின் முந்தைய இறைவார்த்தையில் (பிலி 2:5) புனித பவுல், “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” என்பார். இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்தாரெனில், நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே தியாகம் செய்யவேண்டும். இதுதான் கிறிஸ்துவின் மனநிலையாகும்.

எப்பெயருக்கும் மேலான பெயர் இயேசுவுக்கு அருளப்படல்

இயேசு தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றத் தன்னையே தியாகம் செய்ததால், கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அருளுகின்றார். அந்தப் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் என்கிறார் புனித பவுல். ஆம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவருக்கு அவர் தருகின்ற ஆசி அளப்பெரியது.

நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அது மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24) என்பார். அதுபோன்றுதான் ஒருவர் கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றால், அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றவேண்டும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும்பொழுது நிறையத் துன்பங்களும் சவால்களும் நம்முடைய வாழ்வையே தியாகம் செய்யவேண்டும் நிலையும் வரலாம். அவற்றையெல்லாம் செய்து நாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்பொழுது கடவுளால் நிச்சயம் உயர்த்தப்படுவோம். ஆகவே, நாம் கடவுளால் உயர்த்தப்படவும் கடவுள் தருகின்ற ஆசியைப் பெறவும் இயேசுவைப் போன்று நம்மையே தியாகம் செய்ய முன்வருவோம்.

சிந்தனை

‘தன்னலத்தால் அல்ல; தியாகத்தாலேயே உலகம் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது’ என்பார் நெப்போலியன் ஹில் என்ற அமெரிக்க எழுத்தாளர். ஆகையால், நாம், தந்தையின் திருவுளம் நிறைவேற இயேசு எப்படித் தன்னையே தியாகம் செய்தாரோ, அப்படி இந்த மானுடம் தழைக்க நம்மையே நாம் தியாகம் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

இவை ஆண்டவருக்குத் தேவை!

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் ஏறக்குறைய 10 நாள்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் எனக்கு, இந்த வைரஸ் கற்றுக்கொடுத்த பாடமாக ஒன்றே ஒன்றையே கருதுகிறேன்: 'இதுவரை நான் பிடுங்கிய ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணியே!'

நிற்க.

இந்த வாரம் நாம் புனித வாரத்திற்குள் நுழைகிறோம்.

குருத்தோலைகளைக் கைகளில் ஏந்தி ஆலயத்திற்குள் நுழைய முடியாத நாம் தொலைக்காட்சி வழியேனும் பவனியில் நுழைந்துவிடக் காத்திருக்கின்றோம். ஆனால், ஆலயத்திலும் அல்லாமல், தொலைக்காட்சி வழியும் அல்லாமல் நம்மால் இயேசுவின் பாடுகளுக்குள் நுழைய முடியுமா என்பதுதான் சிந்தனை.

இயேசுவோடு அவருடைய பாடுகளுக்குள் நுழைய தயாராக இருந்தது எருசலேம் நகரத்துக்கு வெளியே கட்டிக்கிடந்த அந்தக் கழுதை ஒன்றுதான். மற்றவர்கள் எல்லாம் பெயரளிவில் நுழைந்ததாகவே எண்ணுகிறேன். மற்ற நற்செய்தியாளர்கள் 'ஒரு கழுதை' என எழுத, மத்தேயு நற்செய்தியாளர் மட்டும், 'ஒரு கழுதையையும் அதன் குட்டியையும்' என எழுதுகின்றார். மத்தேயு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் இயேசு இம்மானுவேலராக வந்தார். 'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு.' கடவுள் நம்மோடு என்பதை இருவர் இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும் என்ற உருவகமாவும், அல்லது இயேசுவோடு எருசலேமுக்குள் அவருடைய வானகத்தந்தையும் (குட்டியும் கழுதையும்) நுழைந்தார் என்ற உருவகமாகவும் நான் இதைப் புரிந்துகொள்கிறேன்.

இன்று நாம் குருத்தோலை மந்திரிப்பு நிகழ்வில் ஒரு நற்செய்தி வாசகமும், வழிபாட்டில் ஆண்டவரின் பாடுகளின் வரலாறு என்று இரண்டு நற்செய்திப் பகுதிகளை வாசிக்கின்றோம்.

இந்த இரண்டு நற்செய்திப் பகுதிகளையும் இணைத்து, இன்றைய நம் 'லாக்டவுன்' பின்புலத்தில் சிந்திப்போம்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று நாம் (நம்முடைய அரசோடு இணைந்து) மூன்று விடயங்களைச் செய்கின்றோம்:

அ. தற்காப்பு அல்லது தற்பாதுகாப்பு (self-protection)

'சீனாக்காரன் கறி தின்றதற்கு நாம் இங்கே கை கழுவ வேண்டியிருக்கிறது' என்று கொரோனா குறித்து ஒருவர்  டுவிட்டரில் கீச்சு இட்டிருந்தார். காலையிலிருந்து நான் என் அறையில் அமர்ந்திருக்கிறேன். என்னுடைய அறை பூட்டியிருக்கிறது. வெளியுலகோடு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் நான் முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளை சோப்பு போட்டு கழுவிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லப்படுகிறது. முப்பது நிமிடங்களுக்குள் அழுக்கும் வைரசும் எங்கிருந்து வருகின்றன. ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் முகமூடி அணிந்துகொள்வது சரி. எங்களுடைய தெருவில் இருக்கும் முதியவர் ஒருவர் - வழக்கமாக சாலையில் தூங்குவார். அவரை மாஸ்க் போடச் சொல்லி வற்புறுத்தியது காவல் துறை. அவர் யாரையும் சந்திப்பதுமில்லை. யாரும் அவரைச் சந்திப்பதுமில்லை. ஆக, கொரோனாவிலிருந்து தற்காப்பு என்று மாறி இன்று ஒருவரை ஒருவர் நோய் சுமக்கும் நபராகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். மேலும், தற்காப்பு என்ற பெயரில் எல்லாமே பயத்தையும் கொடுத்துவிடுகிறது.

ஆ. சமூக விலகல் (social distancing)

ஒருவர் மற்றவரிடமிருந்து விலகி இருக்கும்போது கொரோனா தொற்று என்னும் சங்கிலி உடைந்துவிடும். சரிதான்! ஆனால், சில இடங்களில் விலகல் சிரிப்பாக இருக்கிறது. பிரதமர் தலைமையில் கூட்டம் ஒன்று நடக்கிறது. அங்கே யாருக்கும் தொற்று இல்லை. ஆனால், ஒவ்வொருவரும் இரண்டு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து சமூக விலகல் வலியுறுத்தப்பட்டதாக ஊடகங்கள் கூவின. இடம் இருக்கிறவன் தள்ளி உட்காருவான். இடம் இல்லாதவன் எங்கே உட்காருவான்? ஒரே வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் ஏன் விலகி இருக்க வேண்டும்? இப்போதிருக்கும் சமூக விலகல் 21 நாள்களுக்குப் பின் இன்னும் பெரிய பாதிப்பை நம்முடைய மனத்தில் கொண்டுவந்து நம்முடைய மனப்பாங்கை மாற்றிவிடும். ஒருவரை ஒருவர் எதிரியாக - உள்ளத்து அளவில் - பார்க்கும் நிலைக்குத் தள்ளிவிடும். மேலும், இப்போது திணிக்கப்பட்டுள்ள சமூக விலகல் இனவெறுப்பையும் தூண்டிவிடுகிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சீனர்கள் என்று தென்னவர்கள் முத்திரையிடுவதும், 'இது சீன வைரஸ்' என்று அமெரிக்கா சாடுவதும், 'முஸ்லீம்கள் டெல்லியில் கூடியதால் வந்தது' என்று நம் நாட்டு அரசியல் தலைவர்களும் - மோடி-ட்ரம்ப் சந்திப்பில் வந்த கூட்டத்திற்கு வைரஸ் வராதா? - சொல்லத் தொடங்குவது, இன்னும் ஆபத்தானது. ஏனெனில், கொரோனா சீக்கிரம் போய்விடும். ஆனால், நாம் இந்த உலகில் தொடர்ந்து வாழ வேண்டும். இல்லையா?

இ. பூட்டுதல் (lock-down)

வீட்டிற்குள் மக்கள் இருந்துகொள்ள வேண்டும். வெளியே வரக்கூடாது. ஆனால், அரிசி, மளிகை, பால், இறைச்சி, காய்கறி போன்ற கடைகள் திறந்திருக்கும். கடைகள் திறந்திருக்கும். ஆனால், கடைக்கு வந்தால் சாலையில் அடி கிடைக்கும். இதில் என்ன லாஜிக் இருக்கிறது என்றும் புரியவில்லை. 12 மணிநேரம் அவகாசம் கூடக் கொடுக்காமல் அனைவரையும் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப முயன்றபோது, ஒவ்வொரு பேருந்திலும் எவ்வளவு கூட்டம்! வீடு இருப்பவர் 'லாக்டவுன்' செய்துகொள்வார். வீடில்லாமல் சாலையிலும், தெருவோர குழாய்களிலும், பாலங்களுக்கு அடியிலும் தூங்குபவர் எங்கே தன்னைப் பூட்டிக்கொள்வார்.

நிற்க.

மேற்காணும் மூன்று விடயங்களையும் புரட்டிப்போடுகிறது குருத்து ஞாயிறு நிகழ்வு.

அ. 'தற்காப்பு' அல்லது 'தற்பாதுகாப்பு' (self-protection) என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நடுவே, 'தற்கையளிப்பு,' 'தன்துறப்பு' (self-giving or self-denial or self-annihilation) என்று தன்னையே இறப்பதற்குக் கையளிக்க முன்வருகின்றார் இயேசு.

ஆ. 'சமூக விலகலுக்கு' (social distancing) மாற்றாக, 'சமூக கூடுகையில்' (social gathering) ஈடுபடுகிறார்கள் மக்கள்.

இ. 'பூட்டுதல்' (lock-down) மறைய கற்களும் வாய் 'திறக்கும்' (open-up) என்ற நிலையில் இருக்கிறார்கள் மற்றவர்கள்.

ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்வோம்.

அ. தற்கையளிப்பு அல்லது தன்துறப்பு (self-annihilation or self-denial or self-emptying or self-giving)

கொரோனா வைரஸ் தொற்றான நபர்களுக்கு சிகிச்சையளித்து நோய் தொற்றி இறந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டர்கள் இயேசுவின் இந்தக் கொள்கையில் - தற்கையளிப்பு அல்லது தன்துறப்பு - உயிர்விடுகிறார்கள். மூன்று நாள்களுக்கு முன், ஜெர்மன் நாட்டில் ஒரு மாகாணத்தின் நிதியமைச்சர் தன்னுடைய நாட்டில் கொரோனாவில் நிதி நிலைமை சீர்குலைந்ததை அடுத்து, தன்னால் சரிசெய்ய இயலாத கையறுநிலையில் தற்கொலை செய்கின்றார். ஆக, தற்கையளிப்பு என்பது பணியின் அடிப்படையிலும், கையறுநிலையிலும் நிகழலாம். ஆனால், இயேசுவின் தற்கையளிப்பு இப்படிப்பட்டதன்று. இதையும் தாண்டியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் புனித தமியானின் திருவுருவம் இருக்கும். தொழுநோய் பிடித்தவர்களை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகாணங்களில் பரவுவதைத் தடுக்க, அவர்களை இத்தீவுக்கு அனுப்பிடுவர். ஏனெனில், அப்போது அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை - இப்போது கொரேனாபோல. ஆனால், அவர்களை நாடிச் சென்று அவர்களுக்குப் பணி செய்து தொழுநோய் பிடித்து தானும் இறக்கின்றார் தமியான். தமியான் இயேசுவின் தற்கையளிப்பை உள்வாங்கிக்கொள்கின்றார். தமியான் மருத்துவர் அல்ல. தமியான் நிதியமைச்சர் அல்ல. ஆனால், என்னுடைய உயிர் எனக்கு அன்று, அது இறைவனுக்கு என்று அவரால் எண்ண முடிந்தது. ஜெர்மனியின் ஆஸ்விஸ்ஷ் வதைமுகாமில் தன்னுடைய சகோதர கைதி ஒருவருக்காக தன்னுயிரை இழக்க முன்வந்த மாக்ஸிமிலியன் கோல்பே, நீதிக்காக தன்னுயிர் ஈந்த ஆஸ்கர் ரொமேரா என எண்ணற்ற நபர்கள் இயேசுவின் தற்கையளிப்பை உள்வாங்கிக்கொண்டனர். 'தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர். தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்' (காண். லூக் 17:33) என்னும் இயேசுவின் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டனர். இவர்கள் இயேசுவைவிட உயர்ந்தவர்கள். ஏனெனில், இயேசுவால் தான் விரும்பியபோது தன்னுயிரைக் கொடுக்கவும் முடியும் எடுத்துக் கொள்ளவும் (உயிர்க்கவும்) முடியும் (காண். யோவா 10:18). ஆனால், இவர்கள் உயிர் போனால் அவ்வளவுதான். மூன்றாம் நாளில் உயிர்க்க இவர்களால் முடியாது! இருந்தாலும் இவர்கள் இழக்கத் தயாரானார்கள்.

இன்று நாம் 'தற்பாதுகாப்பு' அல்லது 'தற்காப்பு' என்னும் நிலையிலிருந்து 'தற்கையளிப்பு' அல்லது 'தன்துறப்பு' நிலைக்குக் கடந்துசெல்ல வேண்டும். அப்படி என்றால், நாமே வலிந்து சென்று கொரோனாவைப் பற்றிக்கொள்ள வேண்டுமா? இல்லை. என் பாதுகாப்பைப் போல அடுத்தவரின் பாதுகாப்பையும் சிறிய அளவில் எண்ணிப்பார்ப்பதே தற்கையளிப்பு. உணவைப் பகிர்வது, இருப்பிடத்தைப் பகிர்வது, பொருளைப் பகிர்வது, மருந்துகளைப் பகிர்வது என்னும் நிலைகளிலும் தற்கையளிப்பு நடக்கலாம்.

ஆ. சமூக கூடுகை (social gathering)

இயேசுவைக் கழுதைக் குட்டியின் மேல் கண்டவுடன் மக்கள் கூடினார்களா? அல்லது மக்கள் கூடியவுடன் இயேசு கழுதைக் குட்டியில் ஏறினாரா? பதிவுகள் தெளிவாக இல்லை. ஆனால், இரண்டும் ஒரே நேரத்தில் நடப்பதுபோல இருக்கிறது. மக்கள் திடீரென்று ஏன் அன்று கூட வேண்டும்? ஏன் குருத்துக்களை வெட்டி வர வேண்டும்? ஏன் தங்களுடைய ஆடைகளை எல்லாம் கீழே விரிக்க வேண்டும்? இவ்வளவு நாள்களாக குதிரையில் ஏறி வந்த நபர்களையே (உரோமையர்களையே) பார்த்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டவர்கள் இன்று, கழுதையில் ஏறி வந்தவரைப் பார்த்து ஓடி வந்ததேன்? செக்கரியாவின் இறைவாக்கு நிறைவேறியது என்று அப்பாமர மக்கள் அறிவார்களா? இல்லை! ஆனாலும், ஓடிவந்தார்கள். வாடகைக் கழுதையில் வந்த தங்களுடைய இறுதி நம்பிக்கையாக, தங்களின் மீட்பின் நம்பிக்கையாகப் பார்த்தனர் மக்கள். ஆகையால்தான், ஒரே மனத்துடன் கூடி வருகின்றனர். எந்தவொரு நோய்த்தொற்று பற்றியும் அவர்களுக்குப் பயமில்லை. அன்றாடம் உரோமையர்களால் பட்ட துன்பத்திற்கு நோய்த்தொற்று எவ்வளவோ பரவாயில்லை என நினைத்தார்களோ?

சமூக விலகலில் பாதுகாத்த உயிர் இன்னும் சில நாள்களில் நம் ஊரில் நடக்கும் பொருளாதார வைரஸ் பாதிப்பிற்குத் தாக்குப்பிடிக்குமா என்ற அச்சம் இன்று நமக்கு வந்துவிட்டது. வெள்ளையரிடமிருந்து ஆட்சியை வாங்கி கொள்ளையரிடம் கொடுத்ததுபோல, கொரோனாவிலிருந்து நம் உயிரைக் காத்து அரசியல் மற்றும் பொருளாதார ஊழலுக்கு நம்மைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்று நாம் விலகி இருந்தாலும் நம்பிக்கை என்ற அடிப்படையில் கூடி வருகின்றோம். இதே நம்பிக்கைதான் அன்று இஸ்ரயேல் மக்களை எருசலேம் வாயிலருகே இணைத்தது.

இ. திறப்பு (open-up)

மக்கள் வாய்திறக்கின்றனர், சீடர்கள் திறக்கின்றனர், பிலாத்தின் அரண்மனைக் கதவுகள் திறக்கின்றன, ஏரோதுவின் மாளிகை திறக்கின்றது, தலைமைச் சங்கம் திறக்கின்றது, பாறைகள் திறக்கின்றன, இயேசுவின் உடல் சிலுவையில் திறக்கப்படுகிறது. இறுதியில், கல்லறை திறக்கப்படுகிறது.

நாம் பூட்டிக்கிடக்கின்றோம் இன்று. ஆனால், இன்று இதுவரை இல்லாதவரையில் நம்முடைய உறவுகளுக்கு நம்மையே திறந்திருக்கின்றோம். நம் வீட்டில் என்னென்ன இருக்கிறது, யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற நினைவு நமக்கு வருகிறது. நம்முடைய உடல்நலத்தை பற்றிய அக்கறை திறந்திருக்கிறது. 'போதும்' என்ற வாழ்க்கை வாழும் பக்கவம் திறந்திருக்கிறது. ஆக, ஒருபக்கம் நம்மையே பூட்டினாலும் வாழ்வின் நிறைய பரிமாணங்கள் நமக்குத் திறந்திருக்கின்றன.

ஆக,

ஆண்டவரின் திருப்பாடுகளின் கொண்டாட்டம் கொரோனாவின் மறுபக்கத்தை நமக்குத் திறந்து காட்டுகின்றது. இவை இரண்டும் ஒன்றோடொன்று பொருந்திச் செல்பவை.

தன்னுயிரைக் கையளிக்க முன் வந்த இயேசு நாசரேத்தில் மக்கள் நடுவே ஒளிந்து விலகிச் சென்றார்.

இயேசுவைச் சந்திக்க 'கூடிவந்த' கூட்டம், கெனசெரத்தில் தங்களை விட்டு 'விலகுமாறு' சொன்னது.

'தாவீதின் மகனுக்கு ஓசான்னா!' என்று வாய்திறந்த திருத்தூதர்கள் யூதர்களுக்கு அஞ்சி தங்களுடைய கதவுகளைப் பூட்டிக்கொண்டனர்.

இறுதியாக,

'தற்பாதுகாப்பும்' 'தற்கையளிப்பும்,'
'சமூக விலகலும்' 'சமூக கூடுதலும்,'
'பூட்டுதலும்' 'திறத்தலும்'

குச்சியின் இரு பக்கங்கள்போல. நம் கையை நீட்டி நாம் ஒன்றை எடுத்தால் இன்னொன்று அத்தோடு சேர்ந்தே வரும். அப்படி வரும் வரை,

'என் மக்களே!
நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து,
உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள்.
கடும் சினம் தணியும்வரை
சற்று ஒளிந்துகொள்ளுங்கள்' (எசாயா 26:20)

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com