மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

இறைவனின் தாய் மரியா -புத்தாண்டு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எண்ணிக்கை 6:22-27 | கலாத்தியர் 4:4-7 | லூக்கா 2:16-21

ser

இறைவனின் தாய் மரியா -புத்தாண்டு

பிரிந்த சபையைச் சார்ந்த ஒரு சகோதரி ஒரு கத்தோலிக்கப் பெண்ணிடம் இயேசுவைத் தான் நாம் போற்ற வேண்டும். மரியாவைப் போற்றக் கூடாது. பிள்ளைகளுக்குத்தான் மதிப்பு. தாய்க்கு அல்ல. குஞ்சுக்குத்தான் மதிப்பு. கூட்டுக்கு அல்ல என்று அடிக்கடி கூறிக் கொண்டே வந்தாள். ஒருநாள் கத்தோலிக்கப் பெண் அந்தப் பிரிந்த சபைச் சகோதரி வீட்டிற்குச் சென்று அந்த வீட்டுப் பையனிடம் மட்டும் வணக்கம் செலுத்திவிட்டு அந்த அம்மாவைக் கண்டுகொள்ளாமல் புறப்பட்டாள். இதைக் கண்டு அந்த சகோதரி ஆத்திரமடைந்து என்னங்க! இன்று வித்தியாசமா நடக்கிறீங்க! என் பிள்ளைக்கு மட்டும் வணக்கம் செலுத்திப் பேசிவிட்டு என்னை ஓரங்கட்டிப் போறீங்களே! இது முறையா? என் பிள்ளைதான் என்னை மதிக்குமா? என்றாள். அதற்குக் கத்தோலிக்கப் பெண், நீங்கதான் பிள்ளைக்குத் தான் மதிப்பு. தாய்க்கு அல்ல. குஞ்சுக்குத் தான் மதிப்பு, கூட்டுக்கு அல்ல என்று சொன்னீங்களே என்றாள். பிரிவினை சபைச் சகோதரி என்ன பேசுவது என்று தெரியாது மவுனம் ஆனாள்.

தாயுமானவர் சொல்லுகிறார் : நீயில்லாமல் நானில்லை. தாயில்லாமல் சூல் (கரு) இல்லை, தாய் இல்லாமல் சேய் இல்லை என்று. மேகத்தைப் புகழ்வது அது தரும் மழைக்காகத்தானே! பூந்தோட்டத்தைப் புகழ்வது அது தரும் பூக்களுக்காகத்தானே . பசுவைப் புகழ்வது அது தரும் பாலுக்காகத்தானே. அதேபோல் தாயைப் புகழ்வது அது ஈன்றெடுத்த குழந்தைக்காக. அதேபோல் மரியாளின் பெருமை அவள் இயேசுவை ஈன்றெடுத்த தனிப்பேறு. ஆண் இல்லாமல் கடவுள் இவ்வுலகில் மனிதராக முடிந்தது. ஆனால் ஒரு பெண் இல்லாமல் இயேசு இவ்வுலகில் பிறக்க முடியவில்லை . மரியாவின் சம்மதம் இயேசுவுக்குத் தேவைப்பட்டது. எனவே மீட்பரின் தாயாக, இயேசுவின் தாயாக, இறைவனின் தாயாக விளங்குகின்றாள் மரியா.

விவிலியத்தைப் புரட்டினால் தெளிவான சான்றுகள் காண முடியும்.

எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக். 1:43) என்று கேட்கவில்லையா?

காலம் நிறைவேறிய போது. கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார் (கலா. 4:4-5) என்று வாசிக்கின்றோம்.

தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அது கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாகவும் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார் (யோவா. 1: 1, 14). அந்த இயேசுவே மரியாவின் மகன் என்றும் சொல்லப்பட்டுள்ளது (மாற். 6:3)
.
இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் (லூக். 1:31) என்றும் தெளிவாக வானதூதர் கபிரியேல் கூறுகிறார்.

மரியா உண்மையிலே இறைவனின் தாய் என்று கி.பி. 431ஆம் ஆண்டிலே எபேசில் கூடிய திருச்சங்கம் தெளிவு படுத்தியுள்ளது. அதில் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்குத் தாய் அல்ல. மாறாக உண்மையான கடவுளாக இருந்தவரை மனிதராக ஈன்றெடுத்தவள் என்று பொருள்படும் என்றும் தெளிவு படுத்துகிறது எபேசு சங்கம்.

மரியாள் உண்மையிலே இறைவனும் மீட்பருமான இயேசுவின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறாள் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபைக் கொள்கைத் திரட்டு நமக்கு உறுதி செய்கிறது.

பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்குச் செல்ல மறுத்தான். ஏன் என்று கேட்டால் கணித ஆசிரியர் முட்டாள் தனமாகக் கணக்கு சொல்லித் தருகிறார். நேற்று, மூன்றும் மூன்றும் ஆறு என்றார். இன்று நான்கும் இரண்டும் ஆறு என்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது. இது தப்புக் கணக்கு என்றான் பையன். இதே போலத் தான் நம் பிரிந்த சகோதரர்கள் போடும் தப்புத் தாளம்.

கடவுளுடைய ஞானமும், அறிவும் எத்துணை ஆழமானது. அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை. அவருடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை (உரோ. 11:33) என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மரியாவை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். ஒன்று ஊன் இயல்பில், மற்றொன்று ஆவியில். மரியாவை ஊௗன் இயல்பில் புரிந்து கொண்ட பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்து "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவள்" என்றாள். ஆனால் இயேசுவோ , "தந்தையின் வார்த்தையைக் கடைபிடிப்பவர் இன்னும் அதிகமாகப் பேறுபெற்றவர்" (லூக். 11:27-28) என்றார்.

மரியா பேறுபெற்றவள். காரணம் இயேசுவைக் கருத்தாங்கினாள், ஈன்றெடுத்தாள். பாலூட்டினாள் என்று மட்டுமல்ல. மாறாக மரியா இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுத்தார். அதை உள்ளத்தில் இறுத்தித் (லூக். 2:19) திறந்த உள்ளத்தோடு ஏற்றாள். தன் வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தார். எனவே மரியாவின் உண்மையான தாய்மைப் பேறு என்பது அவள் ஊன் இயல்பைக் கடந்து ஆவியில் செயல்பட்டார் என்பதுதான்.

எனவே இயேசுவின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம், ஊனியல்பின் குடும்பம் அல்ல. ஆவியின் குடும்பம், விசுவசிக்கும் குடும்பம். எனவேதான் என் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே எனக்குச் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் (மத். 12:50) என்று தாயை இரத்த உறவைவிட விசுவாச உறவில் உயர்த்துகிறார். நமது வாழ்வில் இறைவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்றும் போது நாமும் இறைவனின் தாயாகலாம் - தாயாகிறோம். இயேசுவின் சிறப்புக் குடும்பத்தில் நுழைகிறோம். இறைவனின் வார்த்தையை விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்வதின் மூலம் திருச்சபையும் ஓர் அன்னையாகச் செயல்படுகிறது. திருமுழுக்கு வழியாகப் புதிய பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திருச்சபை ஓர் அன்னையாகிறது என்றால் பிறரில் நாம் கிறிஸ்துவை உருவாக்குதலின் வழியாக நாமும் அன்னையாக, தாயாக ஆகலாம் அன்றோ !

நிகழ்ச்சி
நிறைமாத கர்ப்பிணி ஒருவரை, இரு பெண்கள் என்னிடம் கொண்டு வந்து சாமி! இவளுக்கு இடுப்பு வலி வர வேண்டும் எனச் செபியுங்கள் என்றனர். குழந்தை பிறக்க வேண்டுமானால் பேறுகால வேதனை அனுபவிக்க வேண்டும். இடுப்பு வலி வரவேண்டும். இதேபோலத்தான் இயேசுவை ஈன்றெடுக்க நாமும் பேறுகால வேதனை அடைய வேண்டும். எனவேதான் தூய பவுல் அடிகளார், "பிள்ளைகளே! உங்களில் கிறிஸ்து உருவாகும் வரை உங்களுக்காக நான் மீண்டும் பேறுகால வேதனை அடைகிறேன்" (கலா. 4:19) என்றார்.

திருமணமான பெண் ஒருவர் மூன்று வழிகளில் தாய்மைப் பேறு அடையாது போகலாம். ஒன்று, பிள்ளை பெற இயலாதவளாக இருக்கலாம். இரண்டாவது, அவள் பிள்ளை பெறாதபடி கருத்தடை கருவிகளை முன்னமே பயன்படுத்தலாம். மூன்றாவது, தன் வயிற்றில் வளரும் குழந்தையைக் கருச்சிதைவு செய்யலாம்.

நம் கிறிஸ்தவ வாழ்விலும் மூன்று விபத்துக்கள் நிகழ இடமுண்டு. ஒரு சிலர் கிறிஸ்துவைக் கருத்தரிக்க இயலாத நிலையில் உள்ளனர். இவர்கள் விசுவாச மலடுகள், பாதை ஓரத்தில் விதைக்கப்பட்டவர்கள் (மத். 13:19).

வேறுசிலர் திருமுழுக்கால் தாங்கள் பெற்ற விசுவாசம் முளைக்காமல் விசுவாசக் கருத்தடை செய்பவர்கள். இவர்கள் பாறை மீது விதைக்கப்பட்ட விதையைப் போல் ஆவார்கள் (மத். 13:21).

மற்றும் சிலர் கிறிஸ்துவைச் சிறிது காலம் வளர விட்டு பின்பு கருச்சிதைவு செய்பவர்கள். இறைவார்த்தையை உலகப் பற்றுக்களால் நெருக்கிவிடும் முட்புதர்கள் இவர்கள் (மத். 13:22).

விசுவாச வாழ்வில் நாம் எந்த ரகத்தைச் சார்ந்தவர்கள்? விசுவாச மலடுகளா? அல்லது விசுவாசக் கருத்தடைச் செய்பவர்களா? உலகிற்கு கிறிஸ்துவை ஈன்றெடுத்துக் கொடுப்பதே நமது அழைப்பின் தலையாயக் கடமை. நாமும் அவரோடு இணைந்திருந்தால் மிகுந்த கனி தருவோம் (யோவா. 15:5) என்கிறார் இயேசு. எனவே அழைப்பை உணர்ந்து மரியாவைப் போல நாமும் தாய்மை நிலையில் செயல்படப் புறப்படுவோம். அது நம் தாய் மரியாவுக்குப் பெருமை சேர்க்கும்.

தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியுமா?

ser ser

கடவுள் தேடிய பெண் : மரியா

துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.

ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான்.
துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.

ஆம். கடவுளோடு பேசுகின்றேன், கடவுள் என்னோடு பேசுகின்றார் என்றார் துறவி.

அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.

துறவி, சரி என்றார்.

மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன கடவுளைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப் பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள், அந்த இளைஞனுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன். இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை மறந்துவிடும் கடவுள்.

இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.

தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள, மனிதனாகப் பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க, மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய, தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்) தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார். தேடிய பெண் (இரண்டாம் வாசகம்) கிடைத்தார். அவர்தான் மரியா!

மேலும் அறிவோம்:


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

 

ser ser

மரியன்னை இறைவனின் தாய் பெருவிழா

புத்தாண்டு புலர்த்துவிட்டது. மற்றும் ஓர் ஆண்டு மலர்த்துவிட்டது. இப்புத்தாண்டை இயேசுவின் இனிய நாமத்தில் தொடங்குவோம்; இறைவனின் தாய் புனிதமிகு கன்னிமரியின் பாசமிகு பாத கமலத்தில் வைப்போம்.

இன்று இயேசு பிறந்த எட்டாம் நாள். அவருக்கு இயேசு என்ற பெயரைச் சூட்டிய நாள். இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம்; செவிகளுக்கு இனிய நாமம்; பைந்தமிழ் பாவுக்கும் நாவுக்கும் இனிய நாமம். இயேசுவின் பெயருக்கு விண்ண வர், மண்ணவர், கீமுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2-10), நாம் மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை (திப 4:12), புனித பேதுரு கால் மனமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் எழுந்து நடக்கச் செய்தார் (திப 3:6), பழைய ஏற்பாட்டில் சிறுவன் தாவீது கோலியாத் என்ற அரக்கனைக் கடவுளின் பெயரால் கொன்றான் (1 சாமு 17:43-45)

நமது வாழ்வில் கோலியாத் போன்ற பல தீய சக்திகள் நம்மை முடக்கி விடுகின்றன. நாம் செய்வது என்னவென்று கலங்கித் திகைக்கிறோம். ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி அவற்றை எதிர்த்து வெற்றி அடைவோம். இயேசுவின் பெயரால் நாம் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் நமக்குக் கொடுப்பார் (யோவா 15:16), கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்" (திபா 27:1).

இன்று புனிதமிகு கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மரியன்னையின் தனிச்சிறப்பு அவர் இறைவனின்தாய் என்பதாகும். நாம் மேகத்தைப் புகழ்வது அது கொடுக்கும் மழைக்காக; மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் களிக்காக; பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக; தாயைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த சேயுக்காக, அவ்வாறே நாம் மரியன்னையைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த உலக மீட்பருக்காக. கிறிஸ்து கடவுள் என்றால், மரியா கடவுளின் தாய் என்பதில் ஐயமில்லை. இன்றைய திருப்பலியின் வருகைப்பாடல் மரியாவை இறைவனின் தாய் என்று புகழாரம் சூட்டுகிறது. "வாழ்க புனித அன்னையே விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளும் அரசரை ஈன்றவர் நிரே." இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், 'காலம் நிறைவேறிய போது கடவுள் தம் மகனைப் பெண்ணிடமிருந்து பிறக்கச் செய்தார் " (கலா 4:4) என்கிறார்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டு உரத்த குரலில் மரியாவைப் பார்த்து, "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக் 1:43) என்று கேட்கிறார். மரியா ஆண்டவரின் தாய், ஆண்டவர் என்ற சிறப்புப் பெயர் இறைவனுக்கு மட்டுமே உரியது. மரியா ஆண்டவரின் தாய் என்றால், அவர் இறைவனின் தாய் என்பது வெள்ளிடை மலை.

ஒரு பேரன் தன் தாத்தாவைச் சுட்டிக்காட்டி, “நான் என் தாத்தாமேல் உயிரை வைச்சிருக்கிறேன். ஏனெனில் என் தாத்தா என்மேல் உயிலையே எழுதி வைச்சிருக்கிறாரு" என்றான். இயேசு கிறிஸ்து அவர் சாகுமுன் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் என்ன? "இவரே உம் தாய்" (யோவா 19:27), புனித யோவான் வாயிலாக மரியாவை நமது தாயாக அளித்தார். கிறிஸ்துவின் இந்த இறுதி விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதில்லை. மரியன்னையை தமது தாயாக ஏற்றுக்கொண்டு, அவருடைய பாதத்தில் இப்புத்தாண்டை வைப்போம். "உருவிலான் உருவாகி, உலகிலொரு மகனுதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிய கன்னிமரி நம்மைக் கைபிடித்து வழிநடத்துவார்."

மரியா உண்மையிலேயே "இறைவனின் தாய்" என்று கி.பி. 431ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச் சங்கம் அறிக்கையிட்டது. "இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள். எனவே பேறுபெற்ற கன்னி உண்மையிலேயே இறைவனின் தாய்,"

மரியா மீட்பரின் தாய். யாரெல்லாம் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்களோ அவர்களும் மீட்பரின் தாயாக முடியும் (மத் 12:48.50), மரியா மீட்பரை இவ்வுலகிற்கு அளித்தார். நாமும் நமது சாட்சிய வாழ்வினால் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அளிக்க முடியும்.

இன்று திருச்சபை எண்ணிக்கை நூலிலிருந்து (எண் 6:26-27) சிறப்பு ஆசீர் வழங்குகிறது. அதே ஆசீரை புத்தாண்டின் ஆசீராக உலகுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டவர் உங்களுக்கு ஆசீர் வழங்கி உங்களைக் காப்பாராக. ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள் மேல் ஒளிரச் செய்வாராக; உங்கள் மீது அருளைப் பொழிவாராக, இப்புத்தாண்டு முழுவதும் கடவுள் உங்களைக் காப்பார்; நீங்கள் போகும்போதும் காப்பார்; வரும்போதும் காப்பார். உங்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும், உங்களுக்கு மேலும் கீழும் ஆண்டவர் கோட்டையாகவும் அரணாகவும் இருப்பாராக. தீமை உங்களை அணுகாது; துன்பம் உங்கள் உறைவிடத்தை நெருங்காது. அஞ்சாதீர்கள். கலங்காதீர்கள்!! இம்மானுவேலாகிய கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார்.

புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள்!
இயேசுவுக்குப் புகழ் மாயேவாழ்க!

 

ser ser

புத்தாண்டில் புதிய திருப்பம்

புலர்ந்துள்ளது புத்தாண்டு!
  அது - காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்
- மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்
- உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம். புத்தாண்டு என்பது என்ன?

மனிதனைத் தவிர காலத்தைக் கடந்த கடவுளுக்கோ, கடவுளின் மற்ற படைப்புகளுக்கோ - உயிரற்ற சடப்பொருளாகட்டும், உயிருள்ள ஆனால் உணர்வற்ற பயிரினமாகட்டும், உணர்வுள்ள ஆனால் அறிவற்ற மிருக இனமாகட்டும், அல்லது அறிவே நிறைவான இறைவனாகட்டும் அனைத்துக்கும் - புத்தாண்டு என்பது பொருளற்றது!

புத்தாண்டு என்பது ஓர் எல்லைக்குட்பட்ட காலத்தின் தொடக்கம் தானே! அது உண்மை என்றால், காலமற்ற, காலத்தைக் கடந்த கடவுளுக்கு ஒரு காலத்தின் தொடக்கமா? நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நாள், வாரம், மாதம், வருடம் என்று வரையறுக்கப்பட்ட கால எல்லைகளுக்கு மதிப்பேது?

பூமி தன்னையே சுற்றுவதைக் கண்டு, தன்னைச் சுற்றிக் கொண்டே சூரியனைச் சுற்றுவதைக் கண்டு நாள் என்றும் வாரம் என்றும், மாதம் என்றும், ஆண்டு என்றும் வகுத்தும் கணித்தும் அதற்கு ஒரு தொடக்கத்தைக் கற்பித்தவனே மனிதன் தானே!
இம்மை, அதன் தொடர்ச்சியான மறுமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நித்தியம் ஒன்றே உண்மை ! அந்த நித்தியத்தை நம் வசதிக்காக அநித்தியமாக்கிக் கொள்கிறோம் நாம்.

எப்போது பூமி சுற்றத் தொடங்கியது? யாருக்குத் தெரியும்?

தமிழனுக்கு என ஒன்று, தெலுங்கனுக்கு என ஒன்று, ஆங்கிலேயனுக்கு என ஒன்று... இப்படி எத்தனை எத்தனை புத்தாண்டுகள்! அத்தனையும் மனிதக் கற்பனைகள்!

நமக்கென வகுத்துக் கொண்ட புத்தாண்டுக்கு நாம்தாம் பொருள் தரவேண்டும்.

குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தின் தொடக்கமாகப் புத்தாண்டு இருப்பதுபோல, நமது வாழ்க்கையிலும் ஒரு புதிய தொடக்கத்தைக் காண விழையும் போதுதான், ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்க நினைக்கும் போதுதான் புத்தாண்டு பொருள் பெறும்; பொலிவு பெறும்!

தவறுகள் கூட வாழ்வுக்கு வலுவூட்டும். கூட்டித் தள்ளும் குப்பைகள் வயலுக்கு உரமாவது போல கடந்த ஆண்டு நாம் செய்த தவறுகளை உரமாக்கிப் புதிய ஆண்டில் நம் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வோம்.

கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும் மாளிகை தான் புதிய ஆண்டு,

தந்தை ஒருவர் தன் இருமக்களையும் அழைத்துத் தன் சொத்தை ஒப்படைக்கப் பொறுப்பான தகுதியுள்ள வாரிசு யார் என்பதை அறிய ஒரு சோதனைக்கு உட்படுத்தினார். குறிப்பிட்ட பணத்தை இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து இரு அறைகளை ஒதுக்கி தனித்தனியாக அந்த அறைகளைப் பொருட்களால் நிரப்புங்கள் என்றார். மூத்தவன் வண்டி வண்டியாக வைக்கோலை வாங்கிச் சிறிதுகூட இடம் இல்லாமல் அறை முழுவதையும் நிரப்பினான். இளையவனோ ஒரு மெழுகுதிரி ஒரு தீப்பெட்டி, ஒரு ஊதுபத்தி வாங்கித் திரியை ஏற்றி வைத்தான். ஊதுவத்தியைப் புகைய விட்டான். மீதிப்பணத்தை ஏழை எளியவருக்கு அள்ளிக் கொடுத்தான். தந்தை மூத்த மகனுக்குரிய அறைக்குள் நுழைய முயன்றார். நுழைய முடியாதபடி அறைமுழுவதும் இறுக இறுக வைக்கோல் மலை. இளையவன் அறைக்குள் நுழைந்தார். பார்க்கும் இடம் எல்லாம் ஒளி வெள்ளம், மூக்கைத் துளைக்கும் நறுமணம்.

இரண்டு பேர்களுமே அறைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் என்ன வேறுபாடு? ஒருவன் குப்பை கூளம் போல வைக்கோலால் நிறைத்திருந்தான். மற்றவனோ ஒளியாலும் நறுமணப் புகையாலும் நிறைத்திருந்தான். வைக்கோல் நிறைந்த அறைக்குள் அவனாலும் நுழைய முடியவில்லை . அவன் தந்தையாலும் நுழைய முடிய வில்லை. மற்ற அறைக்குள்ளோ நுழைந்த அனைவராலும் ஒளியையும் மணத்தையும் அனுபவிக்க முடிந்தது.

நாமும் இப்படி வீணானவற்றால் நம் மனத்தையும் வாழ்வையும் நிறைக்காது இளையவனைப் போல இறைவார்த்தை என்ற ஒளியை ஏற்றி நற்செயல்களால் வாழ்வை நறுமணம் கமழச் செய்தால் வாழ்க்கை எப்படிப் பொலிவுறும்! புத்தாண்டு எப்படிப் பொருள் பெறும்!

ஞானியாக மக்கள் கருதிப் போற்றிய அந்தப் பெரியவரிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவரைச் சோதிக்க எண்ணி உள்ளங்கைக்குள் ஒரு சிட்டுக் குருவியை மறைத்துக் கொண்டு கேட்டான்: “சிட்டுக்குருவி உயிரோடு இருக்கிறதா? இல்லை இறந்து விட்டதா?” இறந்து விட்டது என்று சொன்னால் குருவியைப் பறக்க விட்டு உயிரோடு இருக்கிறது எனச் சொல்லலாம். உயிருள்ளது என்று சொன்னால் மெதுவாக நசுக்கிக் கொன்றுவிட்டு இறந்து விட்டது என்கலாம் என்பதுதான் இளைஞனின் திட்டம். ஞானி சொன்ன பதில்: "அது உன் கையில் இருக்கிறது” புத்தாண்டு எப்படி இருக்கும்? அது உன்னைப் பொருத்தது.

“இறைவன் தாமே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை . உனைக் கைவிடுவதும் இல்லை . நீ பயப்படவும் கலங்கவும் வேண்டியதில்லை” (இ.ச.38:8) என்ற நம்பிக்கை உணர்வில், “அதோ அங்கே ஒரு தேவை! உன்னால் அதனைத் தீர்த்து வைக்க முடியும். இதோ இங்கே ஒரு புண்! உன்னால் இதனை ஆற்றிவிட முடியும்” என்ற இலட்சிய ஈடுபாட்டில் புதிய வாழ்க்கைப் பாதை பிறக்கட்டும். புதிய ஆண்டின் ஒவ்வொருநாளும் கடந்து செல்லட்டும்.

புலர்ந்துள்ள புதிய ஆண்டில் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் நல்உறவு வளரட்டும். வாழ்க்கையில் வளமை பெருகட்டும்!

ser ser

“இன்னும் அதிகம் பேறுபெற்ற மரியா” 

நிகழ்வு

ஒருநாள் கடவுள் வானதூதர் ஒருவரை அழைத்து அவரிடம், “நீ போய் மண்ணகத்தில் மிகவும் அழகானதும் இனிமையானதுமான ஒன்றைக் கொண்டு வா” என்றார். வானதூதரும் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து மண்ணகத்திற்கு வந்தார். காடு, மலை, ஆறு, கடல் என்று பல இடங்களை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அந்த வானதூதரின் பார்வையில் மலர் ஒன்று தென்பட்டது; அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருந்தது. உடனே வானதூதர் அந்த மலரைப் பறித்து தன்னுடைய கையில் வைத்துக் கொண்டார்.

இன்னும் சிறிதுதூரம் அவர் சென்றபோதும், குழந்தை ஒன்று இங்கும் அங்கும் ஓடி ஆடி  சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் சிரிப்பு வானதூதருக்கு மிகவும் பிடித்துப்போனது. ‘இவ்வுலகில் மழலையின் சிரிப்பைவிட மிகவும் அழகானதும் இனிமையானதுமாக என்ன இருந்துவிடப் போகிறது’ என்ற என்று நினைத்த வானதூதர், அந்தக் குழந்தையின் சிரிப்பை எடுத்துக்கொண்டார். வானதூதர் இன்னும் சிறிதுதூரம் சென்றபொழுது குடிசை ஒன்று இருக்கக்கண்டார். அந்த குடிசைக்கு முன்பாக ஒரு தாய் தன்னுடைய மடியில் தன் குழந்தையை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார். இக்காட்சி வானதூதரை மிகவும் தொட்டது. ‘இவ்வுலகில் தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று இருக்க வாய்ப்பு இல்லை’ என்று நினைத்த வானதூதர் தாயன்பைத் தன்னோடு எடுத்துக்கொண்டு, விண்ணகம் நோக்கிப் பறந்துசென்றார்.

வழியில் அவரிடமிருந்த மலர் வதங்கிபோனது; குழந்தையின் புன்னகையோ அழுகையாக மாறியது; ஆனால் தாயின் அன்பு மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. இதை பார்த்த வானதூதருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அப்பொழுது வானதூதருக்குப் புரிந்தது, தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று பூவுலகில் இல்லை என்று. பின்னர் அவர் தாயின் அன்பை மட்டும் கடவுளிடம் எடுத்துச் சென்று காட்டினார். கடவுளும் தாயின் அன்பை கண்டு வியந்து நின்றார். ஆம். உலகத்தில் இருக்கும் எல்லாம் மாறலாம். தாயின் அன்பைத் தவற. தாயின் அன்பு ஒருபோதும் மாறாது. அதனாலேயே அது மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருக்கின்றது.

இன்று தாயாம் திருஅவை நம்மீது மாறா அன்புகொண்டிருக்கும் கடவுளின் தாய் புனித கன்னிமரியாவின் பெருவிழாவைவைக் கொண்டாடி மகிழ்கிறது. ஆண்டின் முதல்நாளான இந்த  நாளை அன்னையின் பெருவிழாவோடு தொடங்குவது என்பது உண்மையிலேயே நமக்கு கிடைத்த மிகப்பெரிய பேறு. இப்படிப்பட்ட தருணத்தில் நாம் கொண்டாடக்கூடிய இந்தப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய உண்மைகள் என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மரியா இயேசு மட்டுமல்ல இறைவனுக்கும் தாய்

இன்று நாம் கொண்டாடக்கூடிய கடவுளின் தாய் புனித கன்னிமரியா என்ற இந்தப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற முதன்மையான செய்தி, மரியா இயேசுவுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் தாயாக இருக்கிறார் என்பதுதான். கிபி ஐந்தாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற இடத்தில் பேராயராக இருந்த நொஸ்டோரிஸ் என்பவர், “மரியா இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் தாய் அல்ல” என்று சொல்லி வந்தார். இவருடைய இக்கருத்து திருஅவையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிலையில் 431 ஆம் ஆண்டு எபேசு நகரில் கூடிய பொதுச்சங்கம், “இயேசுவில் மனிதத் தன்மையும் இறைத் தன்மையும் முழுமையாக குடிகொண்டிருப்பதால், மரியா இறைவனின் தாய்” என்ற மறையுண்மையைப் பிரகடனம் செய்தது. இதற்கு பின்பு மரியா இறைவனின் தாய் என்ற விழா திருஅவை முழுவதும் கொண்டாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு, அப்பொழுது திருத்தந்தையாக இருந்த ஆறாம் பவுல் என்பவர், மரியா இறைவனின் தாய் என்ற இப்பெருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளில் கொண்டாட பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா இறைவனின் தாய் என்ற இப்பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மரியா இறைவனின் தாய் என்பது மிகப்பெரிய பேறு. இப்படிப்பட்ட பேறு அவர் இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டும் கிடைத்துவிடவில்லை. மாறாக இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடந்த வாழ்க்கை அவருக்கு இப்படிப்பட்ட ஒரு பேற்றினைப் பெற்றுத் தந்தது. மரியா எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்? அவருடைய வாழ்க்கை நமக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறது? ஆகியவற்றைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நிகழ்ந்தவற்றை எல்லாம் தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்த மரியா

கடவுளின் தாய் புனித கன்னி மரியா என்ற பேறு, கடவுள் மரியாவுக்கு கொடுத்த மிகப்பெரிய பேறு. இத்தகைய பேற்றினை அவர் இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டும் அடைந்துவிடவில்லை. மாறாக அவர் நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்ததாலும் அடைந்தார் என்றால் அது மிகையில்லை.

இன்றைய நற்செய்தியில், வானதூதர்கள் தங்களுக்கு அறிவித்த செய்தியைக் கேட்டு இடையர்கள், குழந்தை இயேசுவைக் காண வருகிறார்கள் அங்கு வந்ததும், அவர்கள் வானதூதர்கள் தங்களுக்கு சொன்னதையெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொல்கின்றார்கள். வானதூதர்கள் அவர்களிடம், “ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்ற செய்தியை சொல்லியிருந்தார்கள். இச்செய்தியை அவர்கள் அங்கிருந்தவர்களிடம் சொன்னபோது, அங்கிருந்தவர்கள் வியப்படைகிறார்கள் மரியாவோ இவற்றையெல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்திக்கத் தொடங்குகிறார்.

நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்திச் சிந்திப்பது என்பது அல்லது இறைத் திருவுலத்தைச் சிந்திப்பது என்பது இறைத்திருவுளமே தன்னுடைய வாழ்க்கையாகக் கருதுவதற்கு ஒப்பாக இருக்கிறது. இறை திருவுளமே தன்னுடைய வாழ்க்கையாக கருதியதால்தான் வானதூதர் வானதூதர் கபிரியேலிடம், “நான் ஆண்டவரின் அடிமை; உம்முடைய சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று சொல்லமுடிந்தது. மரியா இறைத்திருவுளத்தை தன்னுடைய திருவுளமாக மாற்றிக் ண்டார் அதனால்தான் கடவுள் அவருக்கு மிகப்பெரிய பேற்றினை அளித்தார். அது எத்தகைய பேறு என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்னும் அதிகம் பேறுபெற்ற மரியா

மரியா இறைத்திருவுளத்தைத் தன்னுடைய நிறைவேற்றி வாழ்ந்து வந்ததால், அவர் மிகப்பெரிய பேற்றினைப் பெற்றுக்கொண்டார். அதுதான் கடவுளின் தாயாகும் பேறு. மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டும் இறைவனுக்குத் தாயாகிவிடவில்லை. மாறாக, இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றி, இன்னும் அதிகம் பேறுபெற்றவர் ஆனார்.

லூக்கா நற்செய்தியில் பன்னிரண்டாவது அதிகாரத்தில் வரக்கூடிய ஒரு நிகழ்வில்,  மக்கள்கூட்டத்திற்குப் போதித்துக்கொண்டிருக்கும் இயேசுவைப் பார்த்து, ஒரு பெண்மணி இயேசுவிடம், உம்மைப் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உன் தாய் பெயர் பெற்றவர் என்பார்.  உடனே இயேசு அவரிடம், இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்பார். இங்கு மரியாவை ஒருபடி உயர்த்திப் பேசுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எப்படியென்றால், கூட்டத்திலிருந்து பேசிய அந்தப் பெண்மணி, மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால்தான் பேறுபெற்றவர் என்று சொன்னார். இயேசுவோ, மரியா தன்னைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்ததனாலும் பேறுபெற்றவராகிறார் என்கின்றார். இவ்வாறு மரியா இயேசுவின் உண்மையான தாயாக மாறுகிறார் (மத் 12:50)

கடவுளின் தாய் புனித கன்னிமரியா என்ற இந்தப் பெருவிழாவை கொண்டாடுகின்ற நாம் இறைவனுடைய திருவுளத்தின்படி நடக்கிறோமோ என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்முடைய விருப்பம் அல்லது நம்முடைய திருவுளம் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோம். இதனால் கடவுளுடைய திருவுளம் இந்த மண்ணுலகில் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கின்றோம். ஆகவே, நாம் கடவுளின் தாய் புனித கன்னி மரியாவினுடைய முன்மாதிரியைப் பின்பற்றி, இறைத்திருவுளத்தின்படி நடக்க முயற்சிசெய்வோம். அதன்மூலம் மரியாவைப் போன்று இறைவனின் திருப்பெயர் விளங்கச் செய்வோம்.

சிந்தனை

இளைஞன் ஒருவன் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று, “இவ்வுலகில் என்னை அன்புசெய்ய யாருமே இல்லையா?” என்று கத்தியபொழுது, பின்னாலிருந்து ஒரு குரல், “மகனே! நான் இருக்கின்றேன்... நான் இறக்கின்றவரைக்கும் உன்னை அன்புசெய்துகொண்டே இருப்பேன்” என்று ஒலித்தது. அக்குரல்தான் வேறு யாருடைய குரலுமல்ல, அவனுடைய தாயின் குரல்தான். தாயே நம்மைத் தள்ளிவிடாதே தெய்வம்.

எனவே, இறைவன் நமக்கெனக் கொடுத்திருக்கும் தாயாம் மரியின் அன்பினை உணர்ந்து, அவரைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

சொல்லப்பட்டவாறே எல்லாம்!

இன்று நாம் நான்கு திருவிழாக்களை ஒருசேரக் கொண்டாடுகிறோம்:

அ. கிரகோரியன் காலண்டர் படி இன்று ஆண்டின் முதல் நாள் - புத்தாண்டுப் பெருநாள்.

ஆ. கன்னி மரியாள் இறைவனின் தாய் - திருஅவைத் திருநாள்.

இ. கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா - கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை நிறையும் நாள்.

ஈ. மரியாளும் யோசேப்பும் தங்களுடைய குழந்தைக்கு 'இயேசு' என்று பெயரிட்ட நாள் - இயேசுவின் பெயர் விழா.

இந்த நான்கு திருவிழாக்களையும் இணைக்கும் ஒரு மையக்கருத்தை எண்ணிப்பார்ப்பது கடினமாகவே இருந்தது. இருப்பினும், இன்றைய நற்செய்தியில் வரும் ஒரு வாக்கியம் இந்த வேலையை எளிதாக்குவதுபோல இருக்கிறது:

'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது' - என்று கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நிறைவு செய்கிறார் லூக்கா.

யார் இந்த 'அவர்கள்'? - இடையர்கள்.

என்ன சொல்லப்பட்டது?

- 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்'

இந்த இடையர்கள் 'தாவீதின் ஊர்' என்றால் 'பெத்லகேம்' என்பதை எப்படி அறிந்தார்கள்?

அந்த இரவில் அவர்கள் எத்தனை பேர் வீடுகளைத் தட்டியிருப்பார்கள்?

எத்தனை பேரிடம் விசாரித்திருப்பார்கள்?

திருடர்கள், பொய்யர்கள், அழுக்கானவர்கள் என்று சொல்லப்பட்ட இடையர்களுக்கு எத்தனை பேர் சரியான வழிகாட்டியிருப்பார்கள்?

அவர்கள் எப்படி தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் கண்டுபிடித்தார்கள்?

இவர்கள் தாங்கள் வானதூதர்களிடம் கேட்டதை யோசேப்புக்கும் மரியாவுக்கும் தெரிவித்தபோது (காண். லூக் 2:17) மற்றவர்கள் அதை எப்படிக் கேட்டார்கள் (காண். லூக் 2:18)? அல்லது இந்த இடையர்கள் தாங்கள் சந்தித்த எல்லாரிடமும் இதைப்பற்றியே சொல்லிக்கொண்டே சென்றார்களா?

மெசியாவைத் தேடி வந்த இவர்களின் மந்தைகளை யார் கவனித்துக்கொண்டார்கள்?

இடையர்களின் இறுதி பதிலிறுப்பு இப்படியாக இருக்கிறது: 'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது?'

தீவனத் தொட்டியில் கிடந்த குழந்தையில் மீட்பரையும், மெசியாவையும், ஆண்டவரையும் காண அவர்களால் எப்படி முடிந்தது?

இதுதான் நம்முடைய சிந்தனையின் தொடக்கம்.

வலுவற்ற குழந்தையில் மீட்பரையும், மெசியாவையும், ஆண்டவரையும் காண வேண்டுமென்றால் பின்வருவனவற்றை அவர்கள் செய்ய வேண்டும்:

1. பயம் களைதல் வேண்டும்

இடையர்களுக்குத் தோன்றுகிற வானதூதரின் முதல் வார்த்தையே, 'அஞ்சாதீர்கள்!' என்பதுதான். தடைகளைவிட தடைகள்வரும் என்ற பயமே நம்மை பலவீனமாக்குகிறது. பயம் களைந்தால் மட்டுமே வானதூதரின் செய்தியைக் கேட்க முடியும். பயம் களைந்தால் மட்டுமே கடவுளின் குரலை நாம் கேட்க முடியும்.

2. இதுவரை செய்யாத செயல் ஒன்றைச் செய்ய வேண்டும்

எழுதல், ஆடுகளை எழுப்புதல், நடத்தல், மேய்த்தல், உண்ணுதல், உணவு தருதல், உறங்குதல் என்று எப்போதும் ஒரே மாதிரி வாழ்ந்த அவர்களுடைய செயலை அவர்கள் மாற்றுகின்றனர்.

3. மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்

மெசியாவைக் காண வேண்டுமென்றால் ஆடுகளை விட வேண்டும். மேலானவற்றைத் தழுவிக்கொள்ள கீழானவற்றை விட வேண்டும். மேல் படிக்கட்டில் ஏற வேண்டுமென்றால் கீழ்ப்படிக்கட்டிலிருந்து காலை எடுக்க வேண்டும்.

4. மகிழ்ச்சியைப் பரப்ப வேண்டும்

'ஆடுகளோடு இருந்தால் ஆடுகளின் வாடைதான் இருக்கும்' என்று அவர்கள் அறிந்ததால், மகிழ்வோடு இருந்த அவர்கள் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியைப் பரப்புகின்றனர். அவர்களின் மகிழ்ச்சியே நற்செய்தி அறிவிப்பாக மாறுகின்றது.

5. இன்று தொடங்க வேண்டும்

தங்களுடைய பயணத்தை அவர்கள் தள்ளிவைக்கவில்லை. 'உடனே' புறப்படுகின்றனர். வாழ்வின் முக்கியமான முடிவுகள் நேற்று எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு அடுத்து இன்று இப்போது எடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்கின்றனர் இடையர்கள்.

6. எப்போதும் செயல்பட வேண்டும்

வாழ்க்கை என்பது செயல்பாட்டில் இருக்கிறதே தவிர ஓய்வில் அல்ல. நாம் நம்முடைய ஓய்வால் அல்ல, மாறாக, நம்முடைய செயல்பாட்டால்தான் வாழ்வை மாற்றவும், மற்றவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும்.

இந்த ஆறு பண்புகளுமே மரியாளின் தாய்மையிலும் அடங்கியிருக்கின்றன.

இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்' 'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும் எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' (லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச் சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய் என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.

மரியாளின் தாய்மைக்கு அடிப்படை நம்பிக்கை. 'தனக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நடக்கும்' என்று நம்பினார். இடையர்களின் வருகையைக் கண்ட, அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மரியாள், 'அனைத்தையும் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கின்றார்.' இங்கே, 'சிந்திக்கின்றார்' என்ற வார்த்தை கிரேக்கத்தில் 'சும்பல்லோ' என்று இருக்கிறது. 'சும்பல்லோ' என்றால் 'அனைத்தையும் கூட்டிச் சேர்ப்பது' அல்லது 'ஒன்றை ஒன்று பொருத்திப்பார்ப்பது' என்பது பொருள். தனக்குச் சொல்லப்பட்டது அனைத்தும் அடுத்தடுத்து நிறைவேறுவதைப் பொருத்திப் பார்க்கிறார்.

இன்று புத்தாண்டிற்கள் நாம் நுழைகின்றோம்.

நமக்குச் சொல்லப்பட்டது என்ன? நமக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் எப்படி நிகழும்?

நமக்குச் சொல்லப்படுவது மூன்று:

அ. ஆசீர் - மக்கட்பேறு, நிலம், உடைமைகள்

ஆ. அருள் - ஆண்டவரின் திருமுக ஒளி

இ. அமைதி - கீறலற்ற மனம்

இவை நம்மில் நடக்கும் என்பதற்கு நம்பிக்கை அவசியம்.

'டோரிஸ் டே' என்ற திரைப்படத்தில், 'கே ஸெரா ஸெரா' என்று ஒரு பாடல் உண்டு.

அதாவது. 'எது நடக்குமோ அது நடக்கும்'

'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்கிறோம்.

இடத்தை நாம் தெரிவு செய்துகொள்ளலாம். காலத்தைத் தெரிவு செய்கிறவர் அவர் ஒருவரே.

அவரின் கரங்களில் நம்முடைய வாழ்க்கை இருக்க நமக்கு கவலை ஏன்?

நம்பிக்கையோடும் எதிர்நோக்கோடும் நகர்வோம்.

ஏனெனில், 'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்தது.'

நமக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com